Thursday, January 21, 2010

சாதுர்யங்கள்


சாதுர்யங்கள் நமக்குத் தேவைப்பட்டால்தான்.
ஆனால் எப்போதுமே அவை நம் கைவசம்.


பிறந்து சில நாட்களிலேயே எப்போது அழலாம் என்று கற்றுக்கொண்டபின், எப்போது வேண்டுமானாலும் அழுகை நம் வசம். கோபமும். ஆனால் சிரிப்பு அப்படி இல்லை.


யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் , சிந்திப்பது போல் நடிக்கலாம், ஒப்புக்காகக் கூட அழலாம். சிரிக்க முடியாது. இதை முயன்று தோற்றவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்... சிரிப்பது தான் மிகக் கடினம்.


: என்பதையும் ) என்பதையும் சேர்த்துப் போட்டு, சிரிப்பதாய் ஏமாற்றுவது எளிது. ஆனால் சிரிப்பு, உதடுகளின் விரிதலிலோ விரல்களின் தட்டுதலிலோ இல்லை. கண்கள் சிரித்தால் தான் அது சிரிப்பு.

கண்கள் பொய்சொல்வது கடினம், முடியாதது என்பதல்ல.
என் கண்கள் பொய் சொல்லக் கற்றுக்கொள்ளவில்லை, ஆனால்  பொய்யான கண்களைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொண்டுள்ளன. .

பொய்களை நான் அருகே விடுவதில்லை.
ஆனாலும்,

மெய்நிகர் மெய்யாகிவிடாது. 

இங்கே உறவுகள் சுலபமாக ஆரம்பமாகின்றன. எல்லா உறவுகளையும்போல் எதிர்பார்ப்புடன், அந்த எதிர்பார்ப்புக்கேற்ற பொய்களுடன்.
ஒரு நாள், 
மெய்நிகர்  மெய்யாகும்போது, 
மெய் பொய் மீறி 
அந்தந்தக் கணத்தின் மெய்யோடு உறவாடலாம்.சலிப்பும் பயமும் வாராது


தோழி எழுது என்றதும்,
தோழர் நிதானமாய் எழுது என்றதும்

நண்பனும் மனைவியும் –
“உனக்கு தமிழில் எழுதினா வரலே
இங்கிலீஷ்லே எழுது” என்று சொன்னதும்எழுதியது புரிந்து  அல்லது புரியாத சௌகரியத்தில்
அன்பும் வெறுப்புமாய்
வெவ்வேறு வார்த்தைகளைச் சந்தித்ததும்

எழுதும் விரல்களின்
பின் நிற்கும் கண்களானபின்

சலிப்பும் பயமும் வாராது

இன்னும் எழுதவே பார்க்கிறேன்

நான் நாடகக்காரன்.
காட்சிகளைச் சமாளிக்க எனக்குத் தெரியும்.


Monday, January 18, 2010

இணையமும் நானும்

 ஏதோ ஒரு ஜால்ரா சத்தத்துக்காகவே நான் சிலரை ஆதரிப்பதாய் ஒரு கருத்து பின்னூட்டமாய் இப்பதிவில் சொல்லப்பட்டது. அப்படித்தானா என்று ஒரு சுயபரிசீலனையில் என்னுள் பார்க்கும்போதும் இல்லை என்றே எனக்கு பதில் வருகிறது.

எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சொல்வதெல்லாம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்றே நான் இயங்குகிறேன்.


இணையம் ஒரு பொதுவெளி. அங்கே எழுத்தைக்காட்டுவது என்று வந்து விட்டால் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது தெரியாமல் இங்கே நான் எழுத வரவில்லை. இணையம் ஒரு சௌகரியம். வழக்கமாக காகிதங்களில் எழுதி சலிப்பு தோன்றியவுடன் நிறுத்தி விட்ட ஏராளமான பக்கங்களைப் போலல்லாமல் இணையத்தில் எழுதியவுடன் பதிப்பிட்டு விடுகிறேன். அதனால் எழுத்துப்பிழை இருக்குமே தவிர கருத்துப்பிழை எதுவும் என்னிடம் இருக்காது. என் கருத்தைப் பிழை என்று சிலர் கருதலாம், ஆனால் என்னைப்பொருத்தவரை பிழையான ஒன்றை சரியென்று நான் எப்போதுமே முன்வைத்ததில்லை.

இணையத்தின் பதிவுலகம் ஒரு சுற்றம். அன்பும் எதிர்ப்பும் சுற்றத்தாரிடையே இயல்பு. வானொலி தொலைக்காட்சி உரைகளிலோ புத்தகங்களிலோ என் பேச்சுக்கும் எழுத்துக்கும் பாராட்டுக்களை மட்டுமே கண்ட எனக்கு, இங்கே தான் எதிர்ப்பும் குற்றச்சாட்டும் நிறைந்த விமர்சனங்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்னியமாகவும் அநாமதேயமாகவும் எழுதினாலும், தங்களுக்கு என்மேலுள்ள கோபத்தை, கசப்பை, வெறுப்பை எளிதாகப் பலர் கருத்தாகவும் பின்னூட்டமாகவும் இடுவதே இதன் சிறப்பு. இதை நான் மதிக்கிறேன்.

நான் அமைதி காப்பது ஆமோதிப்பதாகிவிடாது. ஆனால் நான் ஆமோதிப்பது ரகசியமாகவும் இருக்காது. எனக்குப் பிடித்தால் பாராட்டுவது என் பழக்கம்; கண்டிப்பதும் அவ்வாறே.

என் வீட்டிற்கு வரும் நண்பர்களோடு நான் நேரத்தைச் செலவிடுவது எங்களது மனநிலையைப்பொறுத்தே இருக்கும். சண்டை வரும், சிரிப்பு வரும், அர்த்தமில்லாத அரட்டையும் இருக்கும் அக்கறையுள்ள பகிர்தலும் இருக்கும். இணையத்திலும் அப்படித்தான் செயல்படுகிறேன். நான் தீர்மானித்து ஏற்றுள்ள வாழ்முறையில் நான் எனக்குப் பிடித்த மாதிரிதான் வாழ்கிறேன். மற்றவருக்குப் பிடிக்குமே என்பதற்காக எதுவும் செய்ததில்லை, செய்வதாகவும் இல்லை. இதன் நீட்சியே பதிவுலகில் என் பங்கேற்பு.

ஜெயகாந்தன் முன்போல் இல்லையே நீ என் அவரை இன்னும் சிலாகிக்கிறாய் என்று சிலர் கேட்கிறார்கள். வினவு தளத்துடன் ஏன் அப்படியொரு ஒட்டுறவு என்று சிலர் வினவுகிறார்கள். பொதுவில் வந்து இப்படி நான் பேசும்போது, “என் இஷ்டம்” என்ற உண்மையான சுருக்கமான (நண்பர்களிடம் வழக்கமான) பதில் இங்கே போதாது என்றே நினைக்கிறேன்.ஜேகே என் ஆசான் என்றாலும் என்னை ஒரு நண்பனாக நடத்துபவர், வினவு எழுத்தாளர்களில் பலர் என் நண்பர்கள். என் நண்பர்களை நான் சந்திக்க இயலும் என்பதால் அவர்களை பொதுவில் நான் விமர்சிப்பதில்லை. அதற்காக அவர்கள் என் விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை என்பதல்ல, விமர்சித்து விட்டு விடாமல் அவர்களின் பக்கம் இருக்கும் நியாயத்தையும் நேரடி உரையாடலில் தெரிந்து கொள்வது சாத்தியமாகிறது. நட்பினால்தான் இது சாத்தியம். அதேபோல் நான் குறிப்பிட்ட இருவருக்கும் என்னையும் நன்றாகத்தெரியும், என்னை விமர்சிக்கவும், என் கருத்துக்களைத் திருத்துவதற்கும் அவர்களுக்கு நெருக்கமும் தகுதியும் உண்டு.அதனால்தான் அவர்களைப்பற்றி ஒரு பின்னூட்டத்திலோ ஒரு கட்டுரையிலோ நான் கருத்து தெரிவிப்பதில்லை.

இதை எழுதத்தூண்டியதே ஒரு முந்தைய பதிவின் பின் வந்த சில கருத்துகள்தான். தற்கொலை பற்றி எழுதியதை முத்துக்குமார் பற்றியே எழுதியதாக நினைத்து ஒரு விவாதமும் விமர்சனமும் தொடங்கியது. அதிலும் தற்கொலை என்பது எது என்று நான் விளக்கப்பார்த்தால், திடீரென்று நீ என் வினவுக்கு ஜால்ராவாக இருக்கிறாய் என்று ஒரு கேள்வி வருகிறது. எங்கே ஆரம்பித்த விஷயம் எங்கே போய் முடிகிறது?ஏன் இது நிகழ்கிறது? என்னைப்பற்றி ஒரு கணிப்பு இருப்பதால்! அதை நானேகூட ஒருவேளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அந்தக்கணிப்பின் அடைப்பிற்குள் என்னால் இருக்க முடியாது.

இது எவ்வளவு தூரம் பொதுவான மேடையோ அதே அளவு ஓர் அந்தரங்கமான உரத்த சிந்தனையும் கூட. பாராட்டுக்கள் எவ்வளவு சுகமானவை என்றாலும் அவை இன்னும் போதையாகிவிடவில்லை, அதே மாதிரி விமர்சனங்கள் எவ்வளவு துணுக்குற வைத்தாலும் அவை இன்னும் தவிர்க்கப்படும் அளவு வெறுப்பை உண்டாக்கவில்லை. இரண்டுமே என் எழுத்து மெருகேற உதவும் என்பதாலேயே பின்னூட்டங்களை நான் மட்டறுப்பதில்லை.

என் பதிவின் தலைப்பிலேயே உணர்த்தியிருப்பதைப்போல இது என் பார்வை. என் பார்வையில் பதிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. நான் எப்படிப் பார்க்க வேண்டும் என்று யார் சொல்லிக்கொடுக்க முயன்றாலும் என் பார்வை தானாய்த்தான் திசைதிரும்பும்.

ஓர் இசைக்கோர்ப்பில் ஜால்ரா அவசியமாகாது, ஆனால் சில நேரங்களில் அழகு சேர்க்கும். ஜால்ரா அடிப்பவன் தன்னால்தான் கச்சேரியே நடக்கிறது என்று நினைப்பதும், பிரதான வாத்தியக்காரன் ஜால்ரா இல்லாமல் தான் இசைக்கமுடியாது என்று முடங்குவதும் முட்டாள்தனம். நானும் என் நண்பர்களும் அந்த மயக்கத்திலோ மாயையிலோ இல்லை.

எத்தனையோ பேர்களின் பதிவுகளில் எனக்குப்பிடித்திருந்தால் பாராட்டு தெரிவிக்கிறேன், ஆனால் வினவு தளத்தில் ஆதரவாக ஒன்று சொல்லிவிட்டால் சிலருக்கு முகம் சுணங்குகிறது. அவர்களை நான் ஆதரிக்கக் காரணம் அங்கே நேர்மையும் உழைப்பும் பொதுநலனும் இருப்பதால் மட்டுமே. முன்னம் பல கட்சிகளையும் குழுமங்களையும் ஆதரித்து அவர்களது சாயம் வெளுத்ததால்தான் இவர்களது நிறத்தில் இப்போது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

என்னால் முடியாததை வேறொருவர் செய்யும்போது கைதட்டுவேன்.
 கைதட்டல் ஜால்ராவாகிவிடாது!

இன்னும் எழுதி சலிப்பில் அழித்துவிடாமல், இப்போதைக்கு இங்கே நிறுத்துகிறேன்.

Friday, January 15, 2010

ஜெயகாந்தனின் விழா
முந்தைய பதிவில் போவதா வேண்டாமா என்று பகிரங்கமாக யோசித்துவிட்டு, போ என்பவர்களும் போகாதே என்பவர்களும் என்ன சொன்னார்கள் என்பதை நினைவில் கொண்டு, பகல் முழுக்க யோசித்து, மாலை கார் ஒட்டிப்போனேன்!
அவர் இருக்க மாட்டார் என்று நினைத்தேன். போனது அவர் மீதுள்ள மரியாதையினால்தான். போய், நான் பேசப்போவதில்லை என்றும் சொல்லிவிடலாம் என்றுதான் போனேன். போனால் அவர் அமர்ந்திருந்தார்.
பழைய வாஞ்சையுடன் வா என்று அருகில் உட்காரச்சொன்னார். மேடையிலும் பக்கத்தில் உட்கார் என்றார். நான் பேசுவதற்குள், 9 மணி ஆகிவிட்டது. மூன்று நிமிடங்களில் முடித்துக்கொண்டு, அவரது ஏற்புரைக்கு வழிவிட்டால், இரண்டு நிமிடங்களில் அவரும் பேசி முடித்து விட்டார்.
திரும்பி வந்து இரவெல்லாம் ஏன் போனேன் என்று யோசித்தால் ஒரே உண்மையான விடை, அவர் மீது எனக்குள்ள அன்பு மட்டுமே! கலைமாமணி பட்டம் கிடைக்கும் என்று அந்தக்கூட்டதில் போய் நிற்கவில்லை, ஒரு கலைஞன் தன் வாழ்நாளில் பாராட்டப்படுவதை மனதார மகிழ்ந்து பார்க்கவே போனேன். அதுவும் எனக்கு நெருக்கமாக உள்ள நான் மிகவும் நேசிக்கும் ஒருவரின் திறமை கொண்டாடப்படுவதைப் பார்க்கவே போனேன். நிறைய புதிய, இளம் எழுத்தாளர்களையும் சந்திக்கலாம் என்றும் போனேன். ந.முத்துக்குமார் தவிர தமிழ் ஆர்வமுள்ள எந்த இளைஞரையும், இளைய எழுத்தாளர்களையும் அங்கே காணவில்லை!
அவர் என்னையும் அங்கீகரிக்க “என்ன தவம் செய்தனை” என்று என் மனம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.Tuesday, January 12, 2010

சமரசம், சாக்கு, சுயநலம்

பரவாயில்லை என்பது எவ்வளவு பழக்கிக்கொண்ட பதம்! 
லாபம் கருதித்தான் எந்த ஒரு விஷயத்திலும் நாம் சமரசம் செய்து கொள்கிறோம். சமரசம் என்பது சமாதானமாகப் போய்விடுவது எனும் ஒரு குணம் அல்லது பழக்கம் மட்டுமல்ல, சண்டையில் நமக்கே நம்பிக்கை இல்லாத போதுதான். சண்டை என்பதும் முஷ்டி மடக்கி முகத்தில் குத்தப்போவது என்று மட்டும் அல்ல, முனகலாகவோ முகச்சுளிப்பாகவோ கூடத்தான்.

பரவாயில்லை adjust செய்துகொள் என்றுதான் சொல்லி வளர்க்கப்படுகிறோம், பின்னர் அப்படியே சொல்லி வளர்க்கிறோம். என்னை அப்படி வளர்த்தார்களா என்று தெரியவில்லை, ஆனால் நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் விட்டுக்கொடுக்கப் பழகியிருந்தேன். பெருந்தன்மையால் அல்ல, வேறு வழி இல்லாததால். பதின்வயதுகளில் வேறு வழியும் உண்டு, அது பட்டினியாய் ஒரு தற்காலிகத் தோல்வியாகவும் இருக்கட்டும் என்று தெரிந்துகொண்டபின், வளைந்துகொடுக்காத மனநிலை முரட்டுத்தனம் என்று வர்ணிக்கப்பட்டதை, முதலில் கோபத்தொடும் பிறகு ஒரு பாராட்டின் புல்லரிப்பாகவும் உணர்ந்திருக்கிறேன். 

அது ஒரு காலம். படித்துப்படித்து, வாழ்வின் படிமங்களைப் புரிந்து பரிசோதித்து விழுந்து எழுந்து நடக்கக் கற்றுக்கொண்ட காலம். நிற்பதிலும் நடப்பதிலும் நிமிந்திருக்கும் மனோவிசை உள் இயங்க ஆரம்பித்தபின், இப்போதெல்லாம் எதற்கு சமாதானம், சாக்கு, சமரசத்திற்கு ஆதரவாய் ஒரு தர்க்கம்? சுயநலம் தவிர இதில் வேறெதுவும் கிடையாது.

எதற்காகவும் நான் எதையும் விட்டுக்கொடுத்ததில்லை என்று யாருமே சொல்ல முடியாது. கௌதமன் கூட மனைவி தூங்கும் வரை காத்திருந்துவிட்டுத்தான் புத்தி தேடி காட்டிற்குப் போனான். இங்கேதான் எதில் எவ்வளவு என்று சமரசம் குறித்து நாம் ஒரு சௌகரியமான விதிமுறையை உள்ளமைத்துக்கொள்கிறோம். 

பெரிய விஷயங்களுக்காக விட்டுக்கொடுப்பதில்லை, சின்னச்சின்ன விஷயங்களுக்கு வீம்பு பிடித்து வறட்டுப் பிடிவாதம் செய்வதில்லை என்று நமக்குள் ஒரு தீர்மானத்தை ஏதோ ஒரு வயதில் உறுதி செய்து கொள்கிறோம். பிறகு, சின்னது எது பெரியது எது என்பது அந்தந்த விஷயங்களின் தன்மைக்கேற்ப அமைவதைவிட நம் சௌகரியத்திற்கேற்பவே அமைய ஆரம்பிக்கிறது. பிறகு கொஞ்சம் வளைந்து கும்பிடு போடுவதற்கும், கீழே விழுந்து வணங்குவதற்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு சமரசம் தோன்றுகிறது. அடுத்த கட்டம் யாரும் பார்க்காவிட்டால் உடனடியாகக் கீழே விழுந்தே கும்பிடு போடலாமே என்று எண்ணம் வரும். “யாரும்” என்பது தன் அகப்பார்வைக்கும் நிலைக்கண்ணாடிக்கும் அப்பாற்பட்டவர்கள்தான் என்றும் ஒரு கணிப்பு வரும். சுயநிர்வாணத்தை தரிசிக்கமுடியாவிட்டால், அழுக்கு போகக் குளிக்கலாம் என்பதை விட, அழுக்கு மறைக்க ஒப்பனை கூட்டலாம் என்பதே செயல் முனைப்பாக ஆகிவிடும். 

Shaespearean clicheவாக இல்லாவிட்டாலும் நாம் எல்லாரும் நடிக்கத்தான் செய்கிறோம். நடிப்பது என்று வந்துவிட்டால் அப்புறம் என்ன இயற்கை, மிகை? ரசிக்கும்படி செய்கிறோமா இல்லையா என்பதே முக்கியமாகிவிடும். 

நடிக்கிறோம் என்பது நிஜம். சில நடிகர்களுக்கு நடிக்கும்போது அந்தப்பாத்திரமாகவே ஒன்றிவிடும் தன்மை உண்டு.நாம் உருவாக்கிக்கொள்ளும் அல்லது உருவாக்குமாறு நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட பாத்திரங்களை நாம் முழுமையாய் நடித்துக்கொண்டிருக்கும் வரை பிரச்சினை கிடையாது. திடீரென்று காட்சி மீறி, நிர்ணயிக்கப்பட்ட வசனம் மீறி ஏதாவது செய்தாலோ சொன்னாலோதான் சிக்கல். அதையும் சமாளிக்கத்தெரிந்தவனே சிறந்த நடிகன். அவனுக்கு அப்போது நாடக மேடை அவனது சொந்த தளமாகிவிடும். அவனுக்கேற்ப பிற நடிகர்களையும் அவனால் அப்போது மாற்ற முடியும். அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்குக் காரணிகளே ஞானியர், தலைவர், தீர்க்கதரிசனமுள்ள தத்துவ மேதைகள். அவர்கள் வளைவதில்லை, சமூகத்தை நிமிர்த்துகிறார்கள். 


******* 
திடீரென்று தத்துவ விசாரணையில் இறங்கவேண்டும் என்று இதை எழுத ஆரம்பிக்கவில்லை. இன்று என்னுள் ஒரு கேள்வி. நான் விட்டுக்கொடுத்து, சமரசமாக சமாதானப்படுத்திக்கொண்டு ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வியின் தொடர்பாய்த்தான் இவையெல்லாம் தோன்றின. 

விஷயம் என்று பார்த்தால் அல்பமாகவும் இருக்கிறது! 
சென்னை சங்கமத்தின் இன்னொரு வீச்சான தமிழ்ச் சங்கமத்தில், நாளை ஒரு நிகழ்ச்சி. கனிமொழியின் சகாவான இளையபாரதி முன்னின்றெடுக்கும் விழா. அதில், ஜெயகாந்தன் எனும் ஆளுமை, குறித்து ஒரு கருத்தரங்கம். அதில் நான் பேச வேண்டும் என்று புத்தக விழாவில் பேசும்போது சொன்னார்கள். 
ஜெயகாந்தன் சம்பந்தப்பட்டதாயிற்றே! சரி என்று தான் சொன்னேன். 
நாள், இடம் எதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தெரியாது. இன்று வரை எந்த ஒரு அறிவிப்பும் அழைப்பும் எனக்கு வரவில்லை. ஆனால் இணையத்தில் நான் பேசுவதாய் அறிவிப்பில் இருக்கிறது. அதிலும் என்னை மருத்துவர் என்று குறிப்பிடாமல் தவறுதலாய் முனைவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதைச் சுட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பி, அதற்கும் ஒரு பதிலும் வரவில்லை. அவர்களுக்கு ஆயிரம் ஆயிரங்களுக்கான வேலைப் பளுவில் மின்னஞ்சல் படிப்பது சாத்தியமில்லாது போகலாம், ஆனால் அப்படி ஒரு மின்முகவரி தந்திருக்கக்கூடாது. 

இவ்வளவு வெட்டியாய் வீறாப்பாய் பேசுவதை விட, வர மாட்டேன் என்று சொல்லித்தொலைக்கலாம் என்றால், எப்படி? அதே மின்னஞ்சலுக்குத்தான் ஒரு படிக்கப்படாத கடிதம் எழுத வேண்டும்! 

இதில்  நான் செய்து கொள்ளும் சமரசங்களும் சொல்லிக்கொள்ளும் சமாதானங்களும் என்னென்ன என்று பார்த்தால் பலவும் புரிகிறது. 
முதலாவதாக ஜெயகாந்தன் என்ற உடன் அவரது நடவடிக்கைகள் அனைத்திலும் உடன்பாடு இல்லாதபோதும் பேச ஒப்புதல் தந்தது. மாமியார்-மருமகள்-மண்-பொன்-குடம் போல்தான் இது. இங்கேயே ஒரு சறுக்கல். 
நான் நெருக்கமாய் நேசிக்கும் அவரை விமர்சிப்பது என்பது நேர்முகமாய் மட்டுமே அன்றி பொதுவில் அல்ல என்ற தீர்மானம் எவ்வளவு நேர்மை? இந்த அடிப்படை நேர்மையின்மையை என் மனமே சமாதானப்படுத்திக்கொள்ள, ‘நான் பேசப்போவது அவரது எழுத்துகளைப்பற்றித்தானே’ என்பதில் எவ்வளவு சுயசௌகரியம்? அடுத்து, அந்த மேடையினால் எனக்குப் புதிதாய் நண்பர்களோ வாசகர்களோ ரசிகர்களோ வரப்போவதில்லை என்றாலும் ஒரு மேடை அழைத்தால் உடனே ஆட ஓடும் கால்களின் பரபரப்புக்கு என்ன பெயர்? அடிப்படை நாகரீகமாக இந்த இடத்தில் இந்த நேரம் நீ பேச வேண்டும் என்று எவ்வித அறிவிப்போ அழைப்போ இல்லாமல் எப்படி நான் போவது? ஒருவேளை நிஜமாகவே வேறு யாராவது முனைவர் பட்டம் பெற்ற ருத்ரன் அங்கே இருந்தால்? 

இதை இவ்வளவு யோசிக்கும்போதுதான் தோன்றுகிறது, அவர்கள் முறையாய் ஒரு கடிதமோ அழைப்பிதழோ அனுப்பியிருந்தால் இவ்வளவு நீட்டி முழக்கி இருப்பேனா? 

என் நாடகம் எனக்குத் தெரிகிறது. 
என் நடிப்பும் எனக்குப் பிடிக்கிறது. 
என் உள்ளேயே இருக்கும் நான் எனும் விமர்சகனைத்தான் என்னால் ஒதுக்கிவிட்டுச் சுலபமான சுகங்களை சுவைக்க முடியவில்லை!

Friday, January 8, 2010

தன்னையழித்தல்ராகுல்ஜியின் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த என்  மனைவி தற்கொலை பற்றி அவர் எழுதியிருப்பதைச் சொன்னாள். சாவது என்று முடிவெடுத்தபின் அதற்கப்புறம் நீ வாழ்வதே உனக்காக இல்லையே பின் ஏன் பிறருக்காக வாழக்கூடாது, என்று சொன்னதாய் நான் புரிந்து கொண்டேன். அரைத்தூக்கத்தில் இப்படிப் புரிந்து கொண்டிருக்கலாம். நான்கு நாட்களுக்கு முன் நான் தூங்க ஆரம்பித்தபோது அவள் படித்துக் கொண்டிருந்ததால் அவள் சொன்னது ஒரு மிதமான லயத்தோடு என் காது வழி மனம் புகுந்திருக்க வேண்டும், அதனால் தான் இப்பதிவு.
நேற்று என்னிடம் சில இளைஞர்கள் வந்து முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம் எடுக்கிறோம் என்று பேட்டி எடுத்தார்கள். (முத்துக்குமார் என்று எல்லாருக்கும் ஞாபகமிருப்பதைப்போல் சொல்கிறேன், ஈழக்கேவலத்திற்காகத் தன்னுயிரை மாய்த்துக் கொண்டவன் அவன்.)  அது தற்கொலையா என்று எனக்கும் அந்த ஆவணப்படம் எடுக்கும் இளைஞனுக்கும் இடையே ஒரு சிறிய தர்க்கம் நேர்ந்தது. என்னைப் பொறுத்தவரை அதுவும் தற்கொலை தான், தற்கொலைக்கு தியாகம் என்றும், கொலைக்கு வீரம் என்றும் ஒப்பனை போடுவதெல்லாம் ஒருவித நாயக வழிபாடுதான்.
தற்கொலை என்றால் என்ன? தன்னுயிர் அழித்துக் கொள்ளுதல் தற்கொலை. உயிர் என்பது எது? சிந்தையா செயலா? இரண்டிலும் இனி எந்தவித சுகத்திற்கும் சாத்தியமில்லை என்ற பின் தானே கொலையும் தற்கொலையும்? கொலை செய்யுமளவு கோபம் வந்தும் இன்று வரை நான் எந்த மனிதனையும் கொன்றதில்லை- என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
ஒருவனது உணர்ச்சிகளை அவனது தன்மானத்தை அவனது ஒப்பனையென்றாலும் காட்டிக்கொள்ளும் உருவத்தைக் காலில் போட்டு மிதித்து கந்தலாக்கி காறி உமிழ்வது ஒரு கொலை என்றால், அதை நிறையவே செய்திருக்கிறேன்.
தன் உணர்ச்சிகளை சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்காக சமாதானம் செய்து, விட்டுக் கொடுப்பதும் வளைந்து கொடுப்பதும் ஒரு விதத் தற்கொலை என்றால் பல முறை அப்படி நான் செத்திருக்கிறேன். இங்கே எழுத நினைப்பது  கொலை பற்றியல்ல, தற்கொலை பற்றி,  என்று எழுதும்போதே தற்கொலையும் ஒரு கொலை தானே என்று தோன்றுகிறது. தனதென்று நினைத்துக்கொள்வதால்தானே தற்கொலை! உயிர் யாருடையது? பெற்றவருடையதா/ வளர்த்த சமூகத்திற்கு உடையதா/ சர்வக்ஞான மாயையில் தன்னுடையதா?
நானும் தற்கொலைக்கு முயன்றவன் தான். அன்றைய சோகம் இன்றைய நகைச்சுவையாக இருப்பதும் இயற்கையின் இயல்புதான்.
முத்துக்குமார் போல ஒரு கொள்கைக்காக நான் சாக முடிவெடுக்கவில்லை. (இவனுக்கு முன் இப்படி இனமொழிப்பற்றுடன் செத்தவன் பெயரில் ஒரு பாலம் சென்னையில் இருக்கிறது. அதில் பயணிக்கும் பெரும்பான்மையோருக்கு அந்தப் பாலத்திற்கு அந்தப் பெயர் வைத்திருக்கிறார்களே அவன் யார் என்று தெரிந்து கொள்ளும் ஒரு சோம்பலான ஆர்வம் கூட இல்லை)! 

எனக்கு அந்தக் காலகட்டம் சிக்கலானது. இன்று யோசித்தால் அதுரொம்பச் சாதாரணமான ஒரு விஷயம். நான் அப்போது மனநலப் படிப்பின் தேர்வில் ஃபெயில் ஆகிவிட்டிருந்தேன்! ( ஃபெயில் என்பது தோற்றது அல்ல) இன்றைவிட அன்று அதிகம் தெரிந்திருக்கவில்லை!!! ச்சீ இது நான் விரும்பி ஏற்றுப் படித்த ஒன்று இதிலேயே நான் தேர்வாகாது போனால் நான் எதற்குத்தான் லாயக்கு? இது தான் அப்போதிருந்த எண்ணம். சாவதிலும் ஒரு ஸ்டைல் வேண்டி மர்லின் மன்ரோ போல தூக்க மாத்திரைகளையும் மதுவையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் என்று முயன்றேன். 

சாகவில்லை!! செத்திருந்தால் இன்று எழுதவும், கிட்டத்தட்ட இருபதாயிரம் பேரையும் குணப்படுத்தியிருக்கவும் மாட்டேன்!! 
அன்று செத்தேனா.இனிதான் சாவேனா? சாவு என்றுமே ஒரு தீர்வாகாது. 

சாவு ஒரு முடிவின் தொடக்கம் என்று கூறும் புராணப் புரட்டுகளின் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் சாவு திரும்பி வந்து யாரும் சொல்லி விளக்காத ஒரு மர்மம் என்றே புரிந்து கொள்கிறேன். ஆவி வியாபாரம் செய்பவர்களைப் பற்றி இப்போது எழுதுவதாயில்லை. 

சாகவில்லை வாழ்ந்தேன்! வாழும் போது சாவை விரும்பியவர்களையும் சிந்திக்க வைத்தேன் என்பது தான் உண்மை.
முத்துக்குமார் சாவு பற்றி ...
எதற்காகச் செத்தான்? யாருக்காக? வாழ்வது யாருக்காக, எதற்காக என்று   எவ்வளவு கற்பனைக்கதை சொன்னாலும் எப்படி ஒருவன் வாழ்வது தனக்காகத்தானோ அப்படித்தான் சாவும். 
தனக்காவே ஒருவன் சாகிறான். அப்படித்தான் வாழ்கிறான் என்பதால்.
இனி எதுவும் முயலக்கூட முடியாது எனும் நேரத்தில், தான் சாவதாவது முடியுமே என்று சாகிறான். அவன் தியாகியுமல்ல, வீரனுமல்ல. கோழையுமல்ல ஒரு கோணலான பார்வையுள்ள புத்திசாலி. இயலாது என்பதை முயலாமலேயே விட்டுவிடலாம் என்று தீர்மானிக்கும் ஒரு நம்பிக்கையிழந்த ஜன்மம்.
மீண்டும் ஆரம்பத்தில் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். சாகலாம் என்று தீர்மானித்தபின், உன் உயிர் உனதில்லையே, அதை ஏன் மூட்டை தூக்கியோ வண்டியோட்டியோ பிறருக்காகச் செலவழிக்கக்கூடாது?
இன்னும் தோன்றும், அப்போது மீதி.

Wednesday, January 6, 2010

நிறமும் சாயமும்


பலர் இந்தப்பதிவின் பின்னணி நிறம் கருப்பாய் இருப்பதால் படிக்கச் சிரமமாக இருப்பதாய் எழுதியதால் இப்போது வண்ணத்தை மாற்றியிருக்கிறேன். ஒரு பதிவர் குறிப்பிட்டது போல் இது ஒன்றும் கொள்கை சார்ந்த நிறம் அல்ல. அம்மாதிரி நிறங்கள் மாறுமா என்ன?
சாயங்கள் பொலிவிழக்கும், நிறங்கள் மாறாது.
எது நிறம் எது சாயம் என்று ஒரு கேள்வி என்னுள் இப்போது எழுகிறது.

என் வாழ்க்கையில் பல வண்ணங்கள் சாயம் என்று தெரியாமல் நிறம் என்று நம்பி ஏமாந்திருக்கிறேன். கருப்பும் சிவப்பும் தான் முதலில். இரண்டுமே பார்வையை உடனே சுண்டியிழுக்கத்தான், அவற்றின் உள்ளர்த்தமாய் மறுப்பும் கிடையாது, எதிர்ப்பும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளவே பல வருடங்கள் போயின. பிறகு கருப்பும் ஒரு நாடகத்திற்கான பூச்சாய் புரிய ஆரம்பித்தபின், சிவப்பு மட்டுமே மீதமிருந்தது. சமீபகாலமாய் அந்தச் சிவப்பும் வெளுத்து மாறிக்கொண்டிருக்கிறது.
மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்றாலும், இளமையின் ஆரம்ப ஈர்ப்புகள் அவ்வளவு சீக்கிரமாக மாறுவதும் மறைவதுமில்லை. அதனால்தான் சாயம் போன சிவப்பைக்கூட பார்வையைக் குறுக்கிப் பளிச்சென்று தெரியப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறேன். எவ்வளவு நேரம் கண்களை இடுக்கி வைத்திருக்க முடியும். கொஞ்சம் விழி விரிந்தால் பின்னணியும் ஆழமும் புரிபட ஆரம்பிக்கும். அப்புறம் எவ்வளவு முயன்றாலும் சாயம் நிறமாக மாறாது.
எல்லாவற்றிற்கும் ஒரு நிறம் உண்டு. அது தேவையும் கூட. பார்வையில் பழுது வரும்வரை, நிறமே ஒரு நினைவை மீட்கும். அதுவே பல அர்த்தங்களை உருவாக்கும். அது ஒரு ரகசியக் குறியீடாக மனத்தின் அடிநாதமாய் புரிதலை அமைத்துக்கொடுக்கும். நிறம் மாறாது.
உள்ளே மாறாத நிறம் இருக்கும்போது வெளியே ஒப்பனையாகப் பூசிக்கொள்ளும் வண்ணங்களை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். கறுப்பு என்ன பகுத்தறிவாளர்களின் வண்ணமா அல்லது ஐயப்ப”பக்தர்”களின் அடையாளமா? சிவப்பு மட்டுமென்ன? நக்ஸல்பாரியின் நிறமா நந்திக்ராமத்தில் நயவஞ்சகம் புரிந்தவர்களின் சாயமா?
எந்த நிறமும் உள்ளே தான். வெளியே ஒப்பனைகள் கொஞ்ச நேரம்தான். ஒப்பனையோடு தூங்கிப்போகலாம், ஆனால் விழிக்கும்போது அது முகத்தை விகாரமாகக் காட்டும். நடிப்பதாய் இருந்தால் முடித்தபின் நாடகத்திற்கான ஒப்பனைகளைக் களைய வேண்டும். ரசிக்கும் நாமும் நாடகம் முடியப்போவது தான் என்பதையும் உணர வேண்டும். எந்த நாடகமும் நிரந்தரமாகத் தொடராது, எந்த வண்ணமும் நிரந்தர ஒப்பனையாக மாறாது.
நிஜமான நிறம் நம் உள்ளத்தின் நிறம் தான். அதை வெளியே தேடி அதே போலொரு சாயமுள்ளவர்களிடம் ஈர்க்கப்படுவதும் இயல்புதான்.  ஈர்ப்பு எப்போதுமே எதிர்பார்ப்பினால்தான். பார்வை கூர்மையானால், நாம் ஏமாற மாட்டோம். ஏமாற்றம் இல்லாவிட்டால் சோர்வும் கிடையாது, சலிப்பும் வராது.

மனவியலும் இலக்கியமும்- கடைசியாக

மனவியலும் இலக்கியமும் பரிமாறிப் பயன்பெறும் துறைகள். இரண்டுமே கதைகேட்கும், கதை சொல்லும். இரண்டுமே மனதை உரித்துப்பார்க்கும். ஒன்றின் நோக்கம் பாதித்து யோசிக்க வைப்பது, இன்னொன்றின் நோக்கம் யோசித்து பாதிப்பிலிருந்து மீள்வது. இரண்டையும் நான் நெருக்கமாய் நேசிப்பதால்தான் அன்று பேசவும் இன்று எழுதவும் துணிகிறேன். 


மனவியல் ஓர் அறிவியல். அறிவு பூர்வமாக எதையாவது தெளிய விரும்பினால் அந்த விஷயத்தை முதலில் வரையறுக்க வேண்டும், பிறகு விவரிக்க வேண்டும், பின் விவாதிக்கவேண்டும், முடிவில் வளங்கியதை வடிகாட்ட வேண்டும், இறுதியில் வடிகட்டியவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஓரிடத்தின் முடிவுகள் அதே பரிசோதனையின் போது வேறிடத்திலும் அதே முடிவுகள் தந்தால் அப்போது தான் அது அறிவியல்ரீதியாக ஏற்கக்கூடிய உண்மை. 

மனவியல் மேதையாகவும், சிலரால் தந்தையாகவும் வர்ணிக்கப்படும் ஃப்ராய்ட் இலக்கியங்களிலிருந்தே தான் கோட்பாடுகளை உருவாக்கினார். அவரது பிரபலமான மனவியல் நூல்களின் பாதிப்பால் பல எழுத்தாளர்கள் இலக்கியங்களை உருவாக்கினார்கள். மிகவும் பிரபலமான ஈடிபஸ் நாடகமும் அதற்கு ஃப்ராய்ட் உருவாக்கிய மனவியல் விளக்கமும் பலருக்கும் அறிமுகம். ஆனால் அவர் அத்துடன் நிற்கவில்லை. அன்றிருந்த இலக்கியங்கள் பலவும் அவரது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு கருத்துக்களாக கோட்பாடுகளாக உருவாயின. 

ஒரு நாடகம் பார்க்கிறோம் (இதை இன்று திரைப்படமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளலாம்) உடனே அங்கிருக்கும் பாத்திரங்களுடன் ஒரு நெருக்கம், ஓர் அன்னியோனியம் தோன்றுகிறது. அப்படித் தோன்றினால்தான் அங்கே நிகழும் அந்தக் கதையில் மனம் ஒன்றுகிறது. பாத்திரங்களின் உணர்ச்சிகள் நம்முடையதாகின்றன. நாம் அழ முடியாதவற்றுக்கெல்லாம் அங்கே அந்தக் கதையின் மூலம் அழுகிறோம். நம்மை நாம் இந்தக் கதாபாத்திரங்களில்(identification )அடையாளம் காண்கிறோம், நாம் பல நிலைகளை அவர்கள் மீது (projection) பரப்பிப்பார்க்கிறோம், நாம் உள்ளே தேக்கி வைத்திருந்த உணர்ச்சிக்குப்பைகளை அந்தக் கதையில் கொட்டுகிறோம் (catharsis) , வெளி வரும்போது மனம் லேசாகிறது. இது கண்முன் பெரிதாய் விரியும் காட்சியாய் நாடகமாய் திரைப்படமாய் எப்படி அமைகிறதோ அதே போல்தான் படிக்கும்போது அமைகிறது. 

களத்தோடும் பாத்திரங்களோடும் நமக்கு அடையாளப் படுத்திக்கொள்ள முடிந்தால்தான் இலக்கியம் ரசிக்கப்படும் என்பது ஒரு கருத்து. இங்கே இரண்டு கதைகளை மிகவும் மலினப்படுத்திச் சொல்கிறேன். 
1.சின்ன வயதில் ஒரு பையன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அதற்காக அடித்து விரட்டப்படுகிறான். வேறூர் ஒன்றில் வளர்ந்து, சம்பாதித்து, வயதானபின் தான் பழைய காதலியைப் பார்க்கப் போகிறான். அவளைப்போலவே உருவ ஒற்றுமை உள்ள அவளது மகளைக் கண்டதும் அவள் மீதும் மையல் கொள்கிறான். 
2. அந்தப் பையன் படிக்க தான் தந்தையின் நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறான். அவர்களும் அவனை ஒரு மகனாகவே நடத்துகின்றனர். ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு தந்தையின் நண்பரின் மனைவியை, தன்னிடம் ஒரு தாயாகப் பழகிய அவளிடம் பாலுணர்வுத்தூண்டுதலால் நெருக்கமாகிறான். 

மேலே சொன்ன இரு கதைகளும் இவ்வளவு கொச்சையானவை அல்ல. அவை அடர்த்தியாக உள் கிளப்பும் அதிர்வுகள் வேறு பல. ஆனால் இவற்றை ரசிப்பவன் இதில் எந்தப் பாத்திரத்தோடு தன்னை அடையாளம் காண்கிறான்? தன்னை, தன் சூழலை அடையாளம் கண்டு கொள்ள முடியாத இவை எப்படி இலக்கியமாகப் போற்றப்படுகின்றன? இவ்விடத்தில் தான் நினைக்கமுடியாததும், பேச முடியாததும், ஆனாலும் நிஜம் என்று தோன்றுவதும் இலக்கியமாக ரசிப்புத்தன்மையைத் தூண்டிவிடும். 

இதன் இன்னொரு நீட்சியாகத்தான் சமுதாய-பகுதிநேரப் பொறுப்புணர்வு! கதை சொல்லப்படுகிறது. அதைக் கேட்க ஆவல் ஏன் வருகிறது?  அதில் ஒரு மர்மம் இருப்பதால். இது கொலை, கொள்ளை துப்பறியும் வகைகளில் மட்டுமல்ல எல்லா கதைகளிலும் உள்ளது. மார்க்ஸீய நூலிலும் விவரிக்கப்பட்ட வேதனைகளுக்கு என்ன விடிவு என்றொரு மர்மக் கேள்வி தொக்கி நிற்பதால்தான் விடை கண்டு அதைப் பரிசீலிக்கவும் பயன்படுத்தவும் மனம் தொடர்ந்து படிக்கிறது. 

வருத்தமான ஒன்று சொல்லப்பட்டால், காட்டப்பட்டால், பரிதாப உணர்வோடு, அப்படி ஒன்றிற்கு யார் அல்லது எது காரணமோ அங்கே ஒரு கோபமும் வரும். நடுத்தர வர்க்கத்தின் கோபம் ஒரு பகுதிநேரக் கோபம். முழுமையாய் அந்த உணர்வுகள் மனத்துள் மீட்டப்பட்டாலும் அவற்றின் விளைவாக வினையாக ஒரு காரியத்தில் இறங்கினால், பல கனவுகள் நிறைவேறாது எனும் நிதர்சனம் தெரியும். சமுதாயத்திற்காக உழைக்க சுய தேவைகளும் சுயநலத்தோடு விழையும் வசதிகளும் கணவாகவே கைவராமலே போய்விடும் என்பதால் தான் நடுத்தர வர்க்கம், உண்டியலில் காசு போட்டுவிட்டு தவணையில் வசீகரங்களை வாங்கப் புறப்படும்.

இதன் நீட்சி நெருடும் எழுத்துக்களைத்தவிர்த்து அந்த நேரம் பொழுது போக்க, அந்த நேரம் கனவுகளை நிகழ்த்திக்காட்ட என்று எழுதப்படும் எழுத்துக்களை இலக்கியமாகப் போற்றித் தொடரத் துவங்கும். 
எழுத்து மட்டுமல்ல, செயலும் இலக்கியம். சமூகம் சார்ந்ததால். 


கீழ்வெண்மணி இந்திரா பார்த்தசாரதிக்கு ஒரு சுவையான நாவலுக்குரிய விஷயம். கிருஷ்ணம்மாளுக்கு அது ஒரு முழு வாழ்க்கைக்கான பணி. படிப்பதும் பார்ப்பதும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்காது. அந்தப்பாதிப்பின் விளைவாக அவர்கள் என்ன வினையாற்றுகிறார்கள் என்பதே இலக்கியம் மனத்துள் ஏற்படுத்தும் தாக்கம், ஊக்கம். 

பேசும்போது தெரியவில்லை;
எழுதும்போது இது இன்னும் மிகவும் விரிவாக எழுதப்பட வேண்டியது என்று தோன்றுகிறது. 
இப்பதிவு இதற்கான தளம் அல்ல என்றும் தெரிகிறது.

Monday, January 4, 2010

கொஞ்சம் இடைவெளி


எழுத்து என் தொழில் அல்ல, விருப்பம். விரும்பியவை கூட ஒரு நிர்ப்பந்தமாக மாறினால், காதல் கல்யாணங்களைப்போல் ஒரு புரிபடாத பரிதாபமாய் மாறிவிடுகின்றன.
யாரோ அழைத்தார்கள், நெருக்கமானவர்கள் தூண்டிவிட்டார்கள், எழுதினேன். இப்போது, எழுத ஆரம்பித்த பதிவை, முடிக்குமுன்னே ஒரு சலிப்பு வருகிறது.
ஏன் எழுதுகிறேன் எனும் கேள்விக்குப் பதில் தெரியும். எழுத எனக்குப் பிடித்திருக்கிறது. ஏன் இப்படி அடிக்கடி நேரத்தைத்திருடி எழுதுகிறேன்? கைதட்டல்களும் கிடைப்பதால்தான். வலிய செய்யப்படும் எதுவும் சுகமாக அமைவதில்லை.
ஓய்வும் அல்ல, ஓயுதலும் அல்ல. இடைவெளி தேவை போல் தோன்றுகிறது.
இன்னும் இதை நீடித்தாஎல் சரியல்ல என்று தோன்றுவதால் ... இடைவெளி விடலாமா என்று யோசிக்கிறேன். இதையும் பதிவிட்டால், சீச்சீ நீ நாளைக்காலையேஎழுத வேண்டும் என்றும் சில பின்னூட்டங்கள் வரும், மீண்டும் மயக்கம் வரும்.


ஆரம்பித்த மனமும் இலக்கியமும் எனும் விஷயத்தை முடித்துவிடுகிறேன்.
நாளைக்காலையேஎழுத வேண்டும் என்றும் தோன்றலாம். அப்போது மனதிலிருந்து நிஜங்கள் மட்டுமே எவ்வித (என்னிடமிருந்தே) எதிர்பார்ப்புகளுமின்றி வரும். எனக்கும் ஆறுதலாய், உங்களுக்கும் பயனுள்ளவையாய். இன்ஷா அல்லாஹ்.

மனமும் இலக்கியமும் -பகுதி இரண்டு

வாசிப்பு வளர்ச்சி தரும், வளர்ச்சியும் வாசிப்பை நிர்ணயிக்கும். இதில் எது முதல் என்றில்லை, இரண்டும் ஒரு சுழலாகவே அமையும். 


ஒரு கட்டத்தில் நாம் கொண்டிருந்த அல்லது கொண்டிருந்ததாய்ச் சொல்லிக்கொள்ளப் பிடித்திருந்த கொள்கைகளின் வெளிப்பாடுகளை உள்ளடக்கிய நூல்கள் நமக்குப்பிடிக்கும்.
காலமும், கவலைகளும், வாழ்வில் நாம் ஏற்றுக்கொண்ட நிர்ப்பந்தங்களும் கொள்கைகளை மானப்பரணில் போட்டு விடுவதால் அத்தகைய புத்தகங்களை ஒரு கண்காட்சியிலோ கடையிலோ பார்த்தால் கைகள் அவற்றை வாஞ்சையுடன் வருடும். முதல் காதலி போல அந்த முன்னாள் கொள்கைச் சார்புகள் மனத்தின் மூலையில் என்றும் கிடக்கும். இங்கே தான் வாசிப்பும் வாழ்க்கையும் முரணாக பலருக்கு மாறும். 

சம்பாதித்துத் தன்னைப்பேணிக்கொள்வதா இல்லை வருமானம் பற்றிய கவலையில்லாமல் சமூகம் சார்ந்த சிந்தனையுடன் செயல்பட்டுக்கொண்டிருப்பதா எனும் கேள்வி 25ல் வராவிட்டாலும் 30 வயதில் வரும். எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல் என்றும் இருக்கலாம், ஆனால் நாடும் மக்களும் பரிதாபத்தினாலோ பாசத்தினாலோ யாரையும் பார்த்துக்கொள்வதில்லை. இந்தக்கட்டத்தில், மனம் இலக்கியத்தை ஒரு கனவின் மீதியை மீட்டெடுப்பதற்காகவே சிலருக்கு அமைந்துவிடும். 
நான் செய்ய முடியாத, வலிதாங்கிக்கொள்ள முடியாத புரட்சியை யாராவது செய்யும் போது நூறு ரூபாய் நன்கொடை கொடுப்பது போல. 

இப்போதுதான் இலக்கியம் நம் இயலாமையின் வடிகாலாக அமைகிறது. நான் உயர்வாக நினைத்த கொள்கை, நான் வாழ விரும்பிய வகை, நான் கற்பனையில் மட்டுமே புரிந்து கொள்ளும் வாழ்நிலை ஆகிய எல்லாமும் யாரோ எழுதிய புத்தகங்கள் வாயிலாக எனக்கு ஒரு சமாதானம் தரும். இன்னும் இம்மாதிரி சிந்தனைகள் மனித மனங்களிலிருந்து போய்விடவில்லை எனும் ஆறுதலான ஆதங்கத்திற்கு வருடலாகவே இவை அமையும். 

இதுவும் ஒரு விரக்தியை உருவாக்கும். இவ்வகை இலக்கியங்கள் என் இயலாமையை நான் சுயநலத்திற்காகச் செய்துகொண்ட சமாதானங்களை எனக்கு அடிக்கடி படிக்கும்போது சுட்டிக்காட்டுவதால், மனம் தன்னைத் தற்காத்துக்கொள்ள, மெதுவாக இவற்றை தவிர்க்க ஆரம்பிக்கும். இந்தக்கட்டத்தில் தான், மீண்டும் ஒரு தேர்வு நடக்கும். திரும்பத்திரும்ப, இதையெல்லாம் படித்து நாம் ஒன்றுமே பங்களிக்கவில்லையே எனும் வெட்கம், இதையெல்லாம் விட்டு விட்டு வேறெதையாவது படிக்கலாமே என்று ஒரு தூண்டுதலை உருவாக்கும். 

அப்போதுதான், அப்போது, பொழுதுபோக்க எந்தச் சிந்தனையையும் கிளராத கதைகளைப் படிப்பதா இல்லை நமக்கு இருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கும் கொம்பிற்கு புதுவண்ணம் அடிப்பது போல் வேறுவகையான புத்தகங்களைப் படிப்பதா என்று மனம் தேடும். படிப்பது ஒரு பழக்கமாகிவிட்டால் அது விடாது. 

இவ்வகை மனக்கிளர்ச்சியில் உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் கைகொடுப்பவை ஆன்மீக நூல்கள். அதிலும் இரண்டு வகை உண்டு. புரிதலை ஆழமாக உள்ளே கேள்விகளை எழுப்பி விடைகளை உருவாக்கவும் சில நூல்கள் உண்டு என்பதைப்போல், போலியாக வியாபாரத்தின் இந்த விற்பனைச் சாத்தியங்கள் நிறைந்த காலியிடத்தை இட்டு நிரப்பும் குப்பைகளின் குவியலாகவும் சில நூல்கள் உண்டு. 

படித்தவுடன் இதனால் பயன் உண்டு அல்லது நேரம் வீணாயிற்று என்பது மனதுக்குத் தெரியும், ஆனால், பொய்களை வாங்க முடிவுசெய்தபின், அவையே நிஜம் என்று நினைக்கவே மன விரும்பும். வாழ்க்கை வேறு இன்னும் ஆசைகளை அதிகரித்துக்கொண்டு செல்வதால், போலியான்மிக வியாபாரிகளின் பேச்சுகளும் எழுத்துக்களும் அவை தர விரும்பிய மாயசுகத்தைத் தரும். 
அதன் பிறகு ஹ்ம் நீ என்ன ராஜேஷ் குமார் படிக்கிறாயா என்று பிறரை நக்கலாகப்பார்க்கும் மனம், அது போலல்லாமல் பாசாங்குகள் நிறைந்த போலி தத்துவங்களைச் சிலாகிக்கும். ஒரு கட்டத்தில் இதிலிருந்து மீள முடியாது. படிப்பதே நிற்கும், அல்லது படிப்பது இது மட்டுமே என்றாகும். வாசிப்புக்கும் வளர்ச்சிக்கும் அப்போது எவ்விதத்தொடர்பும் இருக்காது. 

இலக்கியமும் மனமும் வளரும் சூழலின் ஒரு கோணத்திய விவரிப்பு இது. மனவியலுக்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அடுத்து எழுதுகிறேன்.

Sunday, January 3, 2010

மனமும் இலக்கியமும்- முதல் பகுதி


ஒருவாரம் தினமும் எழுதத்தூண்டி அதற்கான பயிற்சியாக எழுத ஆரம்பித்தது இன்று ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. நன்றிகள் தமிழ்மணத்திற்கு.
நேற்று மாலை புத்தக விழாவில் பேசியபோது பல விஷயங்கள் பேச வேண்டும் என்றுதான் போனேன். என்னவோ பேச இயலவில்லை, காரணங்களும் தேவையில்லை. நேற்று பேச நினைத்ததை இன்று பதிவாக ஆக்குகிறேன்.


 மனமும் இலக்கியமும் 
மனதார வெளிவராத மனத்துள் புகாத எந்த எழுத்தும் இலக்கியமல்ல, எனக்கு.
என்னைப் பொறுத்தவரை உள் புகுவதும் வெளிவருவதிலும் ஏற்படுத்தும் பாதிப்பைப் பதிவு செய்வதே இலக்கியம். இப்படி ஒரு சிக்கலான வரையறையுடன் மனவியலும் இலக்கியமும் எனும் தலைப்பில் பேசலாம் என்றுதான் பேச ஒப்புக்கொண்டேன்.
மனம் இலக்கியத்தின் ரசனையை வளர்த்துக்கொள்வது அதன் வளர்ச்சியைப் பொருத்தே அமைகிறது. குழந்தைகள் அதிசயங்களில் ஈர்க்கப்படுவதில் ஆரம்பிக்கிறது இலக்கியப் பரிச்சயம். Fantasy எனும் அதிசயக் கதைகளில் சிங்கம் ஆடும் யானை சிரிக்கும் குரங்கு பேசும்.. குழந்தை வளரும் போது தேவைப்படும் இந்த அதிசயங்களின் விவரிப்புகள் பின்னாளில் தேவைப்படுவதில்லை. அதே குழந்தை அடுத்து அதிசயத்தின் நீட்சியாக அதிமனிதனின் கதைகளை நாடும். ஸ்பைடர்மென் சூப்பர்மேன்  போன்ற அதிமனிதர்கள் அந்தக் குழந்தையின் பிரமிப்புக்கு ஏற்ப இயல்பிலிருந்து பெரிதாக அமைந்து, அசாத்தியமான காரியங்களை மிகச் சாதாரணமாகச் செய்வார்கள். குழந்தைக்கு இந்த கற்பனை பிடிக்கிறது. நிஜத்தின் கோணங்கள் இன்னும் சரியாக அமையாத வயதில் இந்த ஈர்ப்பு சரிதான், ஆனால் பெரியவர்களும் இத்தகைய விஷயங்களில் ஈடுபாடும் ஆர்வமும் காட்டுவது என்? குழந்தைகள் வளர்ந்த மனிதர்களிடம் அதிசயத்தக்க ஆற்றல் இருப்பதை நம்புகிறார்கள், தாமும் வளர்ந்து அப்படி ஆகிவிடுவோம் என்று. பெரியவர்கள் தாங்கள் தொலைத்த குழந்தை மனத்தை அந்த்க் கொஞ்ச நேரமாவது மீண்டும் அனுபவிக்கும் ஆசையால் இவற்றை நேசிக்கிறார்கள். வளர்ந்த பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் புதிதாய் பெரிதாய் சாதிக்கலாம் எனும் நப்பாசையின் ஒருவித வெளிப்பாடுதான் தான் வளர்ந்து தொலைத்துவிட்ட குழந்தை நிலையை மீட்க முயல்வது. இதற்கு இவ்வகை அதிமனிதர்களின் அதிசயக் கதைகள் உதவுகின்றன.
குழந்தை சற்று வளர்ந்தவுடன் ஆவலோடு படிப்பது தங்களைப்போன்ற குழந்தைகளின் சாதனைக் கதைகளை. எனக்கு அப்படித்தான் enid blyton மீது படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இன்று இளஞ்சிறுவர்கள் என்ன கதைகள் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்து, வீரம், காதல், அறிவு என்று ஏதாவது ஒரு கோணத்தில் நாயகத்தன்மையுள்ள பாத்திரங்களின் கதைகளை மனம் விரும்பும். பதின் வயதுகளின் இயல்பான மனோமாற்றங்களால் காதலும் வீரமும் கொஞ்ச காலத்திக்கு நல்ல கதைக்களன்களாக தெரியும். பதின்வயதுகளின் இறுதியில் இது மாறும். சமூகம் குறித்தும் எழுதப்படும் கதைகளின்பால் கவனம் செல்லும். இங்கேதான் இலக்கியம் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும்.சுஜாதாவா ரமணிசந்திரனா என்பது மெல்ல இன்னும் ஆழமான விஷயங்களை நோக்கி ஈர்க்கப்படும். கதை சொல்லாமல் வாழ்க்கை பற்றி விவாதிக்கும் இலக்கியங்களின் அறிமுகம் இந்த வயதில் ஏற்பட்டால், 25 வயதுக்குள் ரசனையின் தன்மை ஒரு திசைநோக்கிப்பயணிக்கத் துவங்கும். 

இது எல்லாருக்கும் ஏற்படுவதில்லை. இலக்கிய அறிமுகம் யதேச்சையாக நடப்பதில்லை. அதற்குரிய படிக்கும் வழக்கமும், பலரது பழக்கமும் இருந்தால்தான் புத்தகங்கள் பரிந்துரைக்கப்படும், மனதால் தேர்ந்தெடுக்கப்படும்.
25 வயது என்பது ஒரு முக்கிய கட்டம். அதுவரை மாணவனாக இருந்துவிடலாம். படித்து முடித்துவிட்டும் சரியான வேலை கிடைக்கவில்லை என்று சும்மா இருந்துவிடலாம். அதன் பிறகு, சூழல் கேட்கிறதோ இல்லையோ, மனம் தன்னைத்தானே ஏளனம் செய்துகொள்ளும். வலிக்கும்.இந்தக் கட்டத்தில் ஒருவன் (ஒருவளாகவும் இருக்கலாம், வசதிக்காக ஆண்பால்), தன் பாதையைத் தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்தை காலம் உருவாகும். எல்லாரும் சொல்லும் இயல்பு வாழ்க்கை என்று செல்வம் தேடுவதா, அதற்கான சமாதானங்களைச் செய்துகொள்வதா இல்லை தான் மனத்தின் இயல்பான நாட்டத்தின்பால் கவனம் செலுத்தி சுயநேர்மைக்கும் சுயநியாயத்திற்கும் முதலிடம் கொடுத்து வசதிகள் கிடைக்கச் சாத்தியங்கள் குறைந்த வருங்காலத்தைத் தேர்ந்தெடுப்பதா என்று ஒரு முடிவெடுத்தல் அவசியமாகி விடும். மற்றவர் ஆசைபடும்படியல்ல என் ஆசைக்கேற்பவே என் வாழ்க்கை என்றுதான் மனம் இயல்பாகத் தீர்மானிக்கும். 

இதன் அடுத்த கட்டத்தில், தன் முடிவு எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றானால் வாழ்க்கை கேள்விகளின்றி தொடரும். மாறாக தான் தேர்ந்தெடுத்த சுயநியாயத்தின் பாதையில் செல்லும் போது, சமூக ஏளனம், கண்டனம் இவை மீறி தன் வயதொத்தவர்களின் வாழ்வின் வசதிகள் மனத்துள் ஒரு நெருடலை உருவாக்கும்.
சமூகம் அங்கீகரித்த வெற்றியா தன் மனமும் தன்மானமும் நிர்ணயித்துக்கொண்ட வெற்றியா எனும் தேர்வைப் பொறுத்தே இலக்கியத்தேடலும் அமையும். இந்தக் கட்டத்தில் இலக்கியம் ஒரு நிரந்தரத்துணையாக நாளும் கூட இருக்கலாம் அல்லது அவசியம் நேரும்போதோ அரிப்பு எடுக்கும் போதோ எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் விஷயமாகவும் ஆகலாம். இந்தக் கட்டதில் இலக்கியம் எது என்பதையும் மனம் அனிச்சையாகத் தேர்வு செய்யும். யோசிக்க வைக்கும் நூல்களை விட பொழுது போக்க உதவும் நூல்களையே மனம் தன் தற்காப்பிற்காகத்தேடும். இந்த இடத்தில் மேலுக்கு ஆழம் போல் ஒப்பனையிட்டுக்கொண்ட புத்தகங்கள் ஒரு நாகரீக நிர்ப்பந்தமாகவோ, ஒரு நாடகத்திற்கான அவசியமாகவோ கைகளில் கிடக்கும்.
நீளம் கருதி, இதன் மீதி நாளை எழுதுகிறேன்.

Saturday, January 2, 2010

பிரமிப்பும் பிரமையும்.

பக்தியும் ஒரு ரசிப்பு தான். பிரமை என்று தெரியாமல் ஒரு பிரமிப்புதான். 

பக்தன் என்பவனும் ரசிகன் என்பவனும் எப்படி மாறுபடுகிறான்? பக்தனுக்குக் கடவுளின் குறைபாடு தெரியாது, ரசிகன் தன் நாயகனின் குறைபாடு தெரிந்தாலும் அதை ஆவேசமாக மறுப்பான். நாயகனை ஆராதிப்பது இயல்பு. அப்படி ஆராதிக்கப்படுவதால்தான் அவன் நாயகன். ஒரு நாயகனின் தன்மை என்ன என்று யோசித்துப்பாருங்கள். அவனிடம் நமக்குக் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய பல கூறுகள் இருக்கும். நம்மால் அடைய முடியாத விஷயங்களை அவன் வெகுசாதாரணமாகச் செய்து விடுவான். ஸ்பைடர்மேனாக இருந்தாலும், (அன்று எம்ஜியார் இன்று) ரஜினியாக இருந்தாலும்! அவனைப்போல் ஆகமுடியாததாலேயே அவன் நாயகன், அவனுக்கு ரசிகர். 


பக்தன்,சிஷ்யன் என்பது வேறு வகை. இரண்டும் பக்தி! முன்னவன் கல்லில் ஒரு தெய்வத்தைக்கண்டு மெய்மறப்பான், அடுத்தவன் ஒரு மனிதனில் அந்த தெய்வத்தை தரிசித்து மதியிழப்பான். இருவரிடமும் கேள்விகள் எழுவதில்லை. இரண்டிலும் ஓர் அடிப்படை உண்டு, ஓர் அவசியம் உண்டு. அது தான் சரணாகதி! கதி என்பதிலேயே விதி என்பதன் உள்ளீடும் உள்ளது. இனி இதுதான் என்றும் இதைவிட வேறெதுவும் இல்லை என்பதும் இவர்களின் மனநிலை. இது சில வேளைகளில் தற்காலிகமாக ஆரோக்கியமாகவும் அமையலாம். தற்காலிகமாகத்தான். அந்தத் தற்காலத்தின் விகிதமே மாறும், 

அந்தச் சுழலுள் சிக்கியிருக்கும் வரை அதுவே விமோசனம், அதுவே பரமபதம். இத்தகைய பக்தி காதலாக இருந்தால் வாழ்க்கை இனிதாகவும் ஆகும், இதுவே வெறியாக மாறினால் அறிவு செயல்படுவதை நிறுத்தும். பிறகு, குழப்பங்களுக்கான விடையாக மேலும் குழப்பும் பொய்களே தோன்றும். இதுவும் ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்வோரின் ஒரு பதில்தான். மாயை விலகும், மீண்டு வேறு வடிவில் வரும். பிறப்பறுக்கும்வரை! சாகும்வரை சிந்திக்காவிட்டால் இந்நிலை தொடரும். பக்தி காதலா வெறியா என்பதை அதன் விளைவுகளே வெளிப்படுத்தும். காதல் வளர்க்கும், வெறி அழிக்கும். 

கல்வடிவில் இருக்கும் தெய்வத்தை வணங்கி பக்தி காட்டும் ஒருவனுக்கு பூஜை செய்யும் செலவு மட்டும்தான், ஆனால் மனித தெய்வங்கள் இன்னும் விலை அதிகம். ஸத்ஸங்கம், காணிக்கை, பயிற்சிக் கட்டணம், சிறப்பு நேர்முகத்துக்கான கட்டணம் என்று நிறைய செலவு இருக்கிறது. இதில் கொடுமை இவர்கள் ஏற்கனவே கற்கோவில்களுக்கும் செலவு செய்துகொண்டிருப்பார்கள். மனித தெய்வம், மகான், ரிஷி, சத்குரு, சாதாகுரு, ஜகத்குரு என்றெல்லாம் இவர்கள் “ஸ்ரீ”ச்சிடும் உன்மத்தநிலை ஒரு கட்டத்தில் மருத்துவச் செலவை வேறு கொண்டுவந்து சேர்க்கும்! 

இப்படிப்பட்டவர்களின் மனம் ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது. எல்லாம் பார்த்துக்கொள்ளும் அந்த மனிததெய்வம் வாழ்வின் எந்தப்பிரச்சினைக்கும் வீட்டில் உள்ள ஒரு வயதான கிழவியைவிட வழி சொல்வதில்லை. அவர் பார்த்துக்கொள்வார் என்று சும்மா இருந்தால் எந்தப்பிரச்சினையும் குறைவதில்லை. இதை வெளியே சொல்லவும் முடியாத ஓர் இக்கட்டான நிலை வேறு. பக்கத்து வீட்டில் இருப்பவனிலிருந்து, அலுவலகத்தில் கொஞ்சம் பேசுபவன் வரை அனைவரையும் இந்த மகானின் வாழும் வழி காட்டுதலைப் பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்துவிட்டபின், இதிலெல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்லும் நேர்மையும் தைரியமும் இவர்களுக்கு வராது. ஏமாந்து விட்டேன் என்று சொல்ல நேர்மை வேண்டும். சாமி கண்ணையெல்லாம் குத்திவிடாது என்று உரக்கச் சொல்ல தைரியம் வேண்டும். நேர்மையும், தைரியமும், சுயமரியாதையோடு சேர்ந்து தான் சரணாகதியில் முடங்கும்.


நவீன சாமியார்களிடம் சேருபவர்கள் தங்களை பக்தர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை, சீடர்கள் என்றே சொல்லிக்கொள்கிறார்கள். சீடன் குருவிடம் கற்றுக்கொள்ளவேண்டும். இவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள்? இன்றிருக்கும் எந்த சாமியாரிடம் புதுச் சரக்கு இருக்கிறது? ரஜ்னீஷ், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் தான் ஆன்மீக விஷயங்களை வேறு விதமாகப் பேச ஆரம்பித்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் ஒரு மதம் சார்ந்த மார்க்கமாகவே வாழ்வின் தத்துவர்த்தங்களை விளக்கி வந்தவர்கள். இப்போது பிரபலமாக இருக்கும் சாமியார்கள் எல்லாரும் ஒரு காலத்தில் வேறு ஒரு சாமியாரின் சீடராக ஆரம்பித்தவர்கள். இல்லை நான் சுயம்பு என்று கூறிக்கொள்பவர்களும் ஏற்கனவே ஜேகே, ஓஷோ பேசியதின் மறுபதிப்பாகவே பேசிக்கொண்டிருப்பவர்கள். 

பேச்சில்தான் புது விஷயம் இல்லை, இவர்கள் கற்றுத்தரும் பயிற்சிகளாவது புதிதா என்றால் இல்லை. எல்லா சூத்திரங்களும், மூச்சுக்கும், உடலுக்கும் மனத்துக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே நாம் நாட்டில் இருந்து வந்தவைதான். 

பிறகு இவர்களிடம் என் இத்தனை பக்தசீடர்கள்? இம்மாதிரி சாமியார்களின் வசீகரம் மற்றும் விளம்பரவியாபார வித்தை பற்றிப் பேச ஆரம்பித்தால் முடிவே இருக்காது. இந்த பக்தசீடர்களின் மனநிலை தான் முக்கியம். நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருவர் கூட இப்பாதை மனம்பிறழ்ந்து பேதலித்துவிடலாம் என்பதால் இந்த பக்தர்களின் மனவியக்கம் குறித்துச் சிந்திப்போம். 

முதலாவதாக ஒருவன் ஆசானையோ குருவையோ தேடுகிறான் என்றால் ஏன்? ஒரு விஷயம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவனுள் ஒரு ஆவல், உந்துதல்,வேட்கை இருக்கும் அப்போதுதான் அதைக் கற்றுத்தர ஒருவரைத் தேடுவான். சாமியார்களிடம் என்ன கற்றுக்கொள்ள ஒருவன் போகிறான்? வாழ்வையா? வளத்தையா?

நிம்மதியாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொள்ளச் செல்வதாகப் பலர் கூறுவார்கள்.இதைப் பரிசீலிப்போம். நிம்மதி என்பது போதும் என்ற மனநிலை வரும்போதுதான் வரும். அது எப்போது வரும்? தேவைகளையும் ஆசைகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டு, தன் திறன் குறித்தும் ஒரு தெளிவான மதிப்பீடு வைத்து வாழ்வை அணுகினால் மட்டுமே நிம்மதி சாத்தியம். நம்மால் முடியாத ஒன்றுக்கு, அது எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அதற்காக ஏங்கிக்கிடந்தால் அந்த நிராசையே நிம்மதி குலைக்கும். இதைத்தான் இந்த சாமியார்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று பக்தசீடர்கள் கூறுவார்கள். இதுவும் பிழையான ஒன்று. 

எனக்கு ஒருவர் ஓவியம் கற்றுக்கொடுப்பதானால் அவருக்கு ஓவியம் தெரிந்திருக்க வேண்டும். சாமியார்கள் நிதர்சன வாழ்வுக்குதவும் சாந்தி போதிப்பதாய் இருந்தால் அவர்கள் அந்த நிர்ச்சலன நிலயில் இருக்க வேண்டும். அவர்கள் பார்ப்பதற்கு நிம்மதியுடன் தான் இருக்கிறார்கள். என்னைக்கூட பராமரரிக்கவும் புகழ்பாடவும் ஒரு கூட்டம் மண்டியிட்டுக் கிடந்தால் நிம்மதியாகத்தான் காட்சி தருவேன். தினசரி வாழ்க்கையின் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல், பந்தங்களும் இல்லாதிருப்பதாய் திகழும் இவர்களது சாந்தி நம்மைப்போன்ற சாதாரண வாழ்க்கையின் சாதாரண ஆசைகளோடும் இலக்குகளோடும் இருப்பவர்களுக்கு எப்படி அவர்கள் சொல்லிக் கொடுத்து வரும்? எப்படி அவர்களிடம் அவர்களைப்போல் ஆவதைக் கற்றுக்கொள்ள முடியும்? நாமும் அவர்களும்தான் வேறுவேறாயிற்றே! 

நம்மைப்போன்ற இன்னொரு சராசரி மனிதனைப்பார்த்து அவனது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் என்ன என்று சிந்தித்தாலே வாழ்வின் சூட்சுமம் புரிந்துவிடும். இதை அவர்கள் கற்றுத்தருவதாகச் சொல்வது அவர்களது வியாபாரம். பணம் கொடுத்துக் கற்றுக்கொள்ளலாம் என்று முயல்வது நம்முடைய நுகர்வு கலாச்சாரம். 

இதைக் கற்றுக்கொடுக்கத்தான் ஆசிரமம், அதை நிர்வகிக்கத்தான் ஆட்கள், அவர்களுக்கும், செய்யப்படும் விளம்பரங்களுக்கும் தான் பணம், அதைத்தானே அவர்கள் கேட்கிறார்கள், கொடுக்கவேண்டியதுதானே என்றால் பிச்சை போடுவதாய்ச் செய்யலாம், வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதாய்ச் செலவழிக்கக்கூடாது. 

நீளம் கருதி இக்கட்டத்தில் நிறுத்துகிறேன். இதைத் தொடரவும் விவாதிக்கவும் விரும்புகிறேன்.

Friday, January 1, 2010

மெரினாவில் முன்னம் ஒரு மாலை


கொஞ்ச நாட்களுக்கு முன் மெரீனா கடற்கரையைத் திறந்து வைத்தார்களாம்! திறப்பதற்கு முந்தைய மணித்துளி வரை நண்டுகளும் நாய்களும் அங்கு சுதந்திரமாகத் திரிந்ததைப் போல் இனி நாமும் திரியலாம். நிம்மதியாய் இருக்கிறது!


மெரீனா எனக்கு மிகவும் நெருக்கம், அதிலும் அங்கே இருந்த ஒரு மரம் புத்தி தந்ததோ இல்லையோ நிழல் தந்து என்னை நிறைய கனவு காண வைத்தது. அழகு படுத்தப்பட்டபின் அது இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. அங்கே சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. அதனால் தான் திறக்கப்போகிறார்கள் என்றதும் இவ்வளவு நாள் மூடியா வைத்திருந்தார்கள் என்று ஒரு பயம் வந்தது. திறந்தவர்கள் நாளை மீண்டும் மூடிவிட்டால்?


இந்த மெரீனா என் பதின்வயதுகளில் இலக்கியத்தையும், பின்னர் வாழ்க்கையையும் என் நண்பர்களோடு பகிர்ந்து கற்றுக்கொண்ட ஓர் அழகான இடம். அழகுக்கு அழகு கூட்டினார்களாமே, பார்க்கவேண்டும் என்று ஆவல் நிறைய வருகிறது. மெரீனா எனக்கு இன்னொரு இனிய அனுபவத்தையும் தந்துள்ளது.


1993 அக்டோபர் முதல் வாரம் உலகம் முழுவதும் மனநல விழிப்புணர்வு வாரமாகக் கொண்டாடப்படுவதால் சென்னையிலும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய விரும்பினோம். வழக்கமாக நாடகம் போடுவதைப் போலல்லாமல் வித்தியாசமாகச் செய்ய நினைத்து ஓர் ஓவியக்கண்காட்சி நடத்தத் திட்டமிட்டோம்.அதை எங்கோ ஒரு கலைக்கூடத்தில் நடத்தி, அங்கே வழக்கமாக வரும் ஆர்வலர்களை மட்டும் சென்றடையாமல் மக்கள் மத்தியில் நடத்தவும் விரும்பினோம். மெரினாவில் நடத்தலாமே என்று முடிவானபின், அனுமதி கேட்டுச் சென்றால், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து காவல்துறை ஆணையர் அலுவலகம் வரைக் கேட்டுப்பார்த்தோம். அவர்கள் அனுமதி தர மறுக்கவில்லை ஆனால் அனுமதிப்பது அவர்களது அதிகாரத்தில் இல்லை என்றுதான் சொன்னார்கள். சென்னை மாநகராட்சியும் இதைத்தான் சொன்னது. மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கேட்டோம், அவர் அனுமதி தந்தார், “இது என் எல்லையில் உள்ளதா என்று தெரியாது, ஆனால் நல்ல விஷயம், செய்யுங்கள்” என்றார்.


பிறகு ஓவியர்களை அணுகினோம்.எனக்கு நன்கு பழக்கமான மருதுவும், பரிச்சயமான ஆர்.பி.பாஸ்கரனும் படம் தந்தது ஆச்சரியமில்லை. திடீரென்று பெரிய ஓவியர்களிடம் சென்று உங்கள் ஓவியம் கொடுங்கள் கண்காட்சி முடிந்ததும் திருப்பித்தருக்கிறேன் என்று அறிமுகமில்லாத நான் கேட்டவுடன் லட்சக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் விலை மதிப்புள்ள ஓவியங்களை அவர்கள் உடனே என்னிடம் தந்தார்கள். ஆதிமூலம், சன்ரு, சேனாதிபதி, கே.எம்.கோபால், தனபால், தட்சிணாமூர்த்தி, அருளரசன், பகவான் சவான் ஆகியோரின்  ஓவியங்களை மெரீனா மணலில் கண்காட்சியாக நடத்தினோம். ஓவியங்களுக்கிடையே நான் வரைந்த மனநல விளக்கப் படங்களும் வைக்கப்பட்டன. வந்து பார்ப்போரிடம் விளக்கங்கள் கூற சமூகப்பணி மாணவர்கள் உடனிருந்தார்கள். ஒரு ஞாயிறு மாலை என்று ஆரம்பித்த கண்காட்சி ஒவ்வொரு ஞாயிறு மாலையும் என்று அக்டோபர் முழுக்க நடந்தது. இதன் அடுத்த கட்டமாக வானொலியில் வாரமொருமுறை திரைப்பாடல்களின் வரிகளோடு மனநலம் குறித்த விழிப்புணர்வு தொடர் ஒளிபரப்பானது.விழிப்புணர்வு எதைக் குறித்து ஏற்படுத்த விரும்பினாலும், வீதிக்கு வரவேண்டும், மக்களிடையே பேசுவதென்றால் அவர்கள் இருக்குமிடம் சென்று பேச வேண்டும்; நான் பேசுகிறேன் வந்து கேளுங்கள் என்று கூறிக்கொண்டு காத்திருக்கக்கூடாது என்பதே இதிலிருந்து நான் கற்ற பாடம். இப்போது இன்னும் அழகும் வசதியும் நிறைந்த இடமாக மாறியுள்ள மெரீனா, இப்படிக் கலைக்கண்காட்சிகள் நடத்த ஒரு நல்ல தளம்.