Thursday, November 28, 2019

பாலா


பாலாசிங் என்னில் ஒரு பகுதியாகவே இருந்தான்.

ஞாநி வீட்டில்தான் அவனை முதலில் பார்த்தேன். 1983க்குப் பின், என் வீட்டில்தான் பல நாட்கள் இருப்பான். இரவுகள் பேச்சில் கழியும். பேச்சுகள் பலவற்றைப் பற்றியும் இருக்கும். வேறு நண்பர்கள் வந்து போவார்கள் ஆனால் இவன் தான் அந்த நாட்களில் நிரந்தரமானவன். வருபவர்கள் என் சக மருத்துவ நண்பர்கள், நாடக/திரைப்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், தோழர்கள், அப்போது ஈழ விடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த EROS தோழர்கள், என்னிடம் படம் வேண்டுமென்று கேட்டு வருபவர்கள்.. என்று பல்வேறு வகைப்பட்டவர்கள் கூடுமிடமாக என் வீடு இருந்ததால், பேச எப்போதும் ஏதாவது புதிது புதிதாக இருந்து வந்தது. 
1984 பவித்ரா நாடகம் ஆரம்பித்தோம்.அதன் பிறகு ஔரங்கஸீப். நாசர் வந்தது அப்போது தான். 
அந்த நாடகம் முடிந்த இரவு, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நடந்து வந்த போது, நாசர் தான், ’ நம்மில் யார் சினிமாவில் நுழைந்தாலும் மற்றவர்களையும் அழைத்துக் கொள்ள வேண்டும்’ என்ற ஒரு தீர்மானத்தை முன்வைத்தான்.இது நடந்தது 1984 அக்டோபர். தன் வாக்கைக் காப்பாற்றி நாசர் பாலாவை தன் படத்திற்கு அழைத்து வந்தது 1994.

நான் மனநல மருத்துவம் பயிலும் போதும், பின் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியில் இருந்த போதும், பாலா தான் என்னை குறும்படம் எடுக்கத் தூண்டினான். நாங்கள் இருவரும் சேர்ந்து மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த குறும்படங்கள்/ ஆவணப்படங்கள் மொத்தம் ஏழு. என் எல்லா முயற்சிகளிலும் அவன் தான் நடிகன். நடிப்பதோடு நிற்காமல் தயாரிப்பையும் நிர்வகித்தவன். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆரம்பித்த காலம் அது. யார் பார்ப்பார்கள், என்ன பெயர் வரும், ஏதாவது காசு கிடைக்குமா என்று எவ்வித யோசனையும் இன்றி தொடர்ந்து செயல்பட்ட காலம் அது.
அதன் பின் நான் மருத்துவமனை ஆரம்பித்தேன், அவன் திருமணம் செய்து கொண்டு ஊருக்கே போய்விட்டான்.. நாசர் அவனை மீண்டும் ஊரிலிருந்து கூட்டி வந்து திரைத்துறையில் நுழைக்கும் வரை சில ஆண்டுகள் நாங்கள் சந்திக்கவில்லை. அவதாரம் வந்தபின் முன் போல் அடிக்கடி சந்திப்பு இருந்தது. ஆனால் நாங்கள் இருவரும் அவ்வப்போது முன்போல் இரவுகளில் செய்யலாமா என்று யோசித்தோமே தவிர எதுவும் செய்யவில்லை. சென்னை தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் ஒன்று 96ல் செய்தோம் அதன்பின் பேசிய எல்லாமும் பேச்சாகவே நின்று விட்டன.

அவன் திருமண நிச்சயதார்த்தம், திருமணம், கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழா, ஒரு மாதத்திற்கு முன் அவன் மகளின் மணவிழா என்று அவன் ஊருக்கும் வீட்டுக்கும் நான்கு முறை போன நான், இன்று 5வது முறை கலியக்காவிளை செல்லவில்லை. அந்த மண்ணில் அவனை இறக்குவதைப் பார்க்குமளவு எனக்கு மனத்தில் தெம்பு இல்லை.
என் எல்லா சிக்கல்களும் , பிரச்சினைகளும், கோபங்களும் அவன் தலையீட்டால் தான் தீர்ந்திருந்தன. என் சின்னச்சின்ன வெற்றிகளும் கொண்டாட்டங்களும் அவன் பங்கேற்பில்லாமல் நடந்ததில்லை. இனி என் எதிலும் அவன் இருக்கப்போவதில்லை. நினைவை விட்டும் போகப்போவதில்லை. என்னில் ஒரு பகுதி இன்றோடு தொலைந்து விட்டது.