Friday, August 16, 2013

”ரேடியோபொட்டி”



ரேடியோபொட்டி என்று என் வீட்டில் 60களில் அழைக்கப்பட்ட சாதனம் என் வாழ்வின் முக்கியமான அங்கம்.


இந்தப் படத்தில் உள்ளது தானா என்று நிச்சயமாய் இன்னும் சொல்லமுடியாவிட்டாலும் இதே போலொரு ரேடியோ என் சிறுவன் வயதில் எனக்கு நிறைய சொல்லித்தந்தது.  
 அது ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ, முன்னால் பியானோ மாதிரி பட்டன் இருக்கும்..அதையெல்லாம் நான் அமுக்கி எதுவும் செய்ததில்லை, அப்படியொரு விளையாட்டை என் தம்பி நடத்தி, மெக்கானிக் வந்து சரி செய்யும் வரை வீட்டிலும் அதில் உள்ளோரிடமும் இறுக்கம்,

அப்படி ஆரம்பித்த என் ரேடியோ உறவுதான் இன்றெல்லாம் ”கௌஸல்யா சுப்ரஜா” என்று தூக்கத்தில்  தட்டி எழுப்பி, “கமலாகுச சூசுச..” என்று முழுமையாய் விழிக்க வைத்து விடுகிறது. விழித்தெழுந்து வெளிவந்தால் தூரத்து மசூதி அருகே ஒலிக்கிறது..இதெல்லாம் ப்ரொக்ராம்ட்..ஐந்து மணிக்கு நான் அங்கே தூங்கவில்லை என்றாலும் இன்றைய ரேடியோ அந்த அலைவரிசையை இழுத்து வந்து என் படுக்கை அறையில் ஒலிபரப்பும்…அன்றெல்லாம் அப்படியில்லை.

இந்த ரேடியோதான் “ உன்னையறிந்தால்..” பாட்டையும், “எங்களுக்கும் காலம் வரும்” பாட்டையும், ‘தருமம் தலைகாக்கும் (டிஎமெஸ் அப்படித்தான் பாடியிருப்பார்) பாட்டையும் மனத்துள் பதிய வைத்தது- இசையாய்த்தான் அர்த்தம் அறியும் வயதில்லை அப்போது.
அப்புறம்தான் வானொலி அண்ணா, ஜெயஸ்ரீயின் தேன்குரல் எல்லாம். Digression என்றாலும் அந்த ஜெயஸ்ரீ என் 1994 வானொலி தொடர்நிகழ்ச்சியின் தலைப்பிசையை நான் எழுதிய பாடலாகப் பாடியபோது என் கண்ணின் ஈரம் நிஜம். Coming back, இந்த ரேடியோ எனக்கு நிறைய கற்றுத்தந்தது. நேரடியாய் பாடம் எடுக்காமல் மனத்துள் பலவற்றையும் பதித்து வைத்தது.

அந்த ரேடியோ வாங்கித்தந்த என் பணக்கார மாமா கர்நாடக சங்கீதம் கேட்பார். முதலில் bore என்று ஒதுங்கிய என்னை கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இசையும் ஈர்த்த்து. சௌடையா வயலின், மாலி குழல் என்றெல்லாம் பின்னாளில் அடையாளம் கண்டு தேடிச் சேகரித்த இசைத்தட்டுகள், அந்த வயதின் அழுத்தமான பதிவுகளின் விளைவுகள்தான். 

என் Anglo-Indian பள்ளியின் தாக்கத்தால் அந்த ரேடியோ மூலம்தான் JimReeves, Cliff Richards, Michael Holiday, beatles, அறிமுகம். இன்னும் அந்த இனிய பாடல்கள் என் இறுக்கமான தருணங்களை இலகுவாக்குகின்றன.
ரேடியோ மூலம் கற்றுக்கொண்டேன், தெரிந்துகொண்டேன் என்றெல்லாம் நான் சொன்னாலும் அப்படி கற்றவை அனைத்தும் இசை மூலமே. என்னைவிட (வயதில் மட்டுமே இளையவரான) காயத்ரியும் எனக்கு ரேடியோ மூலமே பரிச்சயம், பின்னாளில் பழகுதற்கினிய நட்பாய் மாறியிருந்தாலும். 

ரேடியோ ரொம்பவும் மாறிவிட்டது. அந்தஸ்தின் அடையாளத்திலிருந்து நடக்கும்போதும் பொழுது போக்க உதவும் உபகரணம் ஆகிவிட்ட்து. வடிவம் மட்டுமல்ல அடக்கமும் மாறிவிட்டது. ஆனாலும் இன்னமும் அது எனக்குக் கற்றுத்தந்துகொண்டே இருக்கிறது.

கொசகொச என்று தொடந்து பேசும் இளைஞர்களிடமிருந்து இன்றைய மொழியைக் கற்றுக்கொள்கிறேன், பாடல் வரிகளிலிருந்து இன்றைய ரசனையை அறிந்து கொள்கிறேன், இசைக்கோப்பின் பரிமாணங்களை உணர்ந்து கொள்கிறேன், இவைமூலம் என்னை கேட்கும்போதெல்லாம் புதுப்பித்துக்கொள்கிறேன்.

இப்போதெல்லாம் வரும் சுருக்கிய/சுருக்கமான பேட்டிகளில், கேட்பவர் சொல்பவர் இருவருடையதுமான மேலோட்டமான, அவசரமான, காலமே காசின் கணக்காயான நிலைகளையும் கேட்டு மனத்துள் தேக்கிக்கொள்கிறேன் – என்னிடம் கேட்கும் போது என் பதில்களைச் சுருக்கிக்கொல்கிறேன்..( தட்டச்சிடும்போது கொல்கிறேன் என்று விழுந்ததை மாற்றாமல் விடுகிறேன்…விரிவாக விளக்காமல் புரிகிறதா என்று பார்க்காமல், நிமிடக் கணக்கையே நோக்கிப்பேசுவதால்).
இது “என்னன்னாலும் அந்த காலம் மாதிரியா” எனும் மாதிரி புலம்பல் இல்லை. வந்திருக்கும் மாற்றங்களை உள்வாங்கி, வரப்போகும் மாற்றங்களுக்குத் தயாராயிருந்தாலும்,  

இப்போதெல்லாம் என்னமோ குறைகிறது…அது ஒரு வேளை நேர்மையின் நன்னெறியாகவும் இருக்கலாம்...அல்லது “இன்று வந்ததும் அதே நிலா..” என்பதை ஏற்கமுடியாத வயதின் வறட்டுத்தனமாகவும் இருக்கலாம்.