Wednesday, June 30, 2010

அன்பு, நம்பிக்கை...


இரண்டுமே நல்ல வார்த்தைகள். இரண்டுமே நல்லன. ஆனால் இவ்விரண்டுமே ஏமாற்றக்கூடியவையும் ஆகும்.
அன்பு ஏமாற்றுமா? ஏற்பவர் முட்டாளாக இருந்தால்.
அன்பையும் நம்பிக்கையையும் ஏற்பவர் முட்டாளாக இருந்தால் இரண்டுமே ஏமாற்றும். இதில் தருபவர் ஒரு பொருட்டே அல்ல, பெறுபவர் குறித்தே இப்பதிவு.
இதோ, கீழே ஒரு படம். நான் வரைந்தது. இதை வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு நல்லது நடக்கிறது. இப்படி நான் சொல்லவில்லை, வைத்திருப்பவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதை நான் இலவசமாகத்தான் தருகிறேன். பிரதியை திரையிலோ காகிதத்திலோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், நல்லது நடக்கும் என்கிறார்களே, நடக்கட்டுமே!


தரவிறக்கம் செய்துவிட்டீர்களா? இனி சில கேள்விகள்!
முதலில் நான் சொன்னதை நம்புகிறீர்களா? அடுத்து நான் சொன்னது போல நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை இது பொய் என்று நிரூபிக்க நாசம் தேடுவீர்களா?
எல்லாருக்குமே ஆசை உண்டு, தேவை உண்டு, இவற்றால் எதிர்பார்ப்பும் உண்டு. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு நப்பாசை குறைவு அவ்வளவுதான், இல்லை என்று ஆகி விடுவதில்லை. இலவச இணைப்பாக ஒரு விஷயம் கிடைத்தால் அதை ஏற்பதே பொதுபுத்தி.
இப்போது இந்தப் படம் நீங்கள் வைத்துக்கொள்ளும்போது உங்களுக்கு நல்லது என்று ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் இந்தப் படம்தான் என்று சொல்வீர்களா? இதை உங்களுக்குத் தெரிந்த எல்லாருக்கும் கொடுப்பீர்களா? பகிர்வதே உயர்நிலை என்று வாய் ஓதினாலும் மனம் அதனைச் செயல்படுத்த முயலுமா?
உங்களிடமே இதே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள், நிறைய விடைகள் கிடைக்கும்.

இப்போது இன்னொரு படம். 

இது ஒரு நூலுக்கு முகப்பு வரைந்து தருமாறு கேட்டதற்காக வரைந்தது. இன்னும் எனக்கு என் படம் அச்சிட்ட பிரதி கிடைக்கவில்லை. இதை ஏன் இங்கே எழுதுகிறேன்? இப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் தானே எல்லாம் நடக்கின்றன, தமிழ் வளர்க்க நடந்த செம்மொழி மாநாடு போல!

இது ஒரு மயில் என்று நான் நினைத்து வரைந்தேன்,
பார்ப்பவருக்கேற்ப என்னவாக வேண்டுமானாலும் தெரியலாம்.

Monday, June 7, 2010

சிரி, சிரி, சுடப்பட்டது ஒரு நாய் தான்!


கேலியாகவும் கோபமாகவும் பிறரை நாய் என்று சொல்வது வழக்கில் உண்டு. ‘நான் நாய் மாதிரி நடந்துக்கிட்டேன்’ என்றும் சிலநேரங்களில் சிலர் தம்மையே நொந்து விமர்சித்துக் கொள்வதும் உண்டு. இங்கே ஒரு ஜன்மம் நாயைச் சுட்டால் தன்னைச் சுட்டதாகப் புலம்பியிருக்கிறது. இது ஒன்றும் வள்ளலார் போல வாடிய பயிருக்கெல்லாம் வாடும் ஜன்மம் இல்லை, இது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளம்பரம் தேடும் ஒரு ஜந்து.

பொதுவாகவே சாமியார்களென்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஆட்களின் மீது எனக்கு மரியாதை கிடையாது. இதில் இந்து முஸ்லிம் என்று மத பேதம் எல்லாம் கிடையாது. அது என்ன இந்து பொறுக்கிகளின் மீதே அதிக காட்டம் என்றால், இவை தான் இங்கே அதிகம் ஆடுகின்றன. இவற்றுக்குத்தான் நடுநிலை/ நடுத்தர/ ‘அறிவுஜீவி’- ஆதரவும் அதிகம். சமீபத்தில் நாறிய நித்யானந்தனையே இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கல்கி மீது அதன் பக்தர்களுக்கே இப்போதெல்லாம் உள்ளூர ஒரு கிலேசம் வந்திருக்க வேண்டும். ஆனால் ஜக்கியும் சிரிசிரியும் இன்னும் ரொம்பவே அமர்க்களமாகத்தான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ‘ஏன் அமிர்தாம்மாவை விட்டு விட்டாய் பெண் என்பதாலா?’ என்று ஏதாவது ஒரு புறம்போக்கு கேள்வி வரும். அமிர்தாவும் சாயியும் பேசித் தொலைப்பதில்லை அதனால் அங்கே மூட பக்தி மட்டுமே. ஜ-சிரி கூட்டம்தான் இன்னும் ‘அறிவார்த்தமாக, ஆன்மார்த்தமாக’ என்றெல்லாம் கதை சொல்லி, கதை கேட்டுத் திரிகின்றன.

சாயிவும் அமிர்தம்மாவும் அறிவாளிகள் என்று அவற்றின் பக்தர்கள் கூடச் சொல்வதில்லை. அவர்களது மௌனத்தில் ஞானப்புண்ணாக்கு எல்லாம் கிடையாது, அவற்றுக்குப் பேசத் தெரியாது, பேசவும் வராது. ஜக்கி, சிரிசிரி, நித்தி மூவரும் பேசக் கூடியவர்கள். “ வல்லார்கள் யாவருக்கும் வாக்கிறந்த பூரணமாய், சொல்லாமல் சொல்லி” அவர்கள் ஆடுவதில்லை. ஒன்றுக்கு கொஞ்சம் வித்தை காட்டத் தெரியும், மற்றதுக்கு அது கூடத் தெரியாது. பேசத்தெரிந்தவற்றுக்குத்தான் படிக்கத் தெரிந்தவர்கள் படைபலமும் உண்டு. இவைதான் ஆபத்தானவை. இதில் இப்போது சிரிசிரியைப் பார்ப்போம்.

இந்த ஜன்மங்களுக்கெல்லாம் வாழ்க்கை வரலாறு என்று நிறைய புனைவுகள் இணையமெங்கும் வீரவிக்கிடக்கின்றன. இப்போதெல்லாம் எது நிஜம் என்று அவற்றையே கேட்டால் அவற்றுக்கே கூடத் தெரியாத அளவு கற்பனையாகக் கதைகள் மக்களிடம் சேர்ப்பிக்கப் பட்டுவிட்டன.

ஒருமுறை ஏதோ ஒரு ஆங்கிலத் தொலைகக்காட்சியில் சிரிசிரி பேட்டியைப் பார்த்தேன். அது பிறக்கும்போதே வேதவித்தாகவும் தவழும்போதே கீதாச்சாரியனாகவும் இருந்ததாய்ப் பீற்றிக் கொண்டதைக் கேட்டிருக்கிறேன். ஆன்மீகத்தில் இதெல்லாம் சகஜம் என்று அப்போது விட்டுவிட்டேன். பிறகுதான் அவ்வப்போது அதன் விஷமும் விஷமமும் வெளித்தெரிய ஆரம்பித்தன.தமிழர்களுக்கு மே பதினெட்டு நினைவிருக்கும். அந்த நாள் திடீரென்று வந்த சுனாமியல்ல, அழிவின் ஆரம்பம் அதற்கு குறைந்த பட்சம் சில மாதங்களுக்கு முன்னமேயே துவங்கிவிட்டதன் சாட்சிதான் முத்துக்குமார் மரணம். இந்த நிலையில்,  மே 5, இந்தச் செய்தி நக்கீரனில்-

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் சமீபத்தில் இலங்கை சென்று ஈழத் தமிழர்களை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவருடன் விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் தலைவர் பா.நடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உணவும், மருந்தும் இன்றி தவிக்கிறார்கள். எனவே இலங்கையில் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய தேவையான ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள்என்று பா.நடேசன் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தற்கெல்லாம் விளக்கம் வியாக்கியானம் வேண்டுமா? இதன் தொடர்ச்சியாக அன்பும்-கருணையும் கொப்புளிக்க குரு தமிழக முதல்வரைப் பார்க்காமல் எதிர்க்கட்சிதலைவியிடம் போய் படம் காட்டுகிறாராம். சிஷ்யர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள், முட்டாள்கள் மெய்சிலிர்த்தார்கள், நடுநிலையாளர்கள் நம்பிக்கை வளர்த்துக் கொண்டார்கள்.

இது ஒன்றும் உணர்ச்சிவசப்பட்டு, ஓர் இனம் அழிகிறதே என்ற அக்கறை மிகுந்த செயல்பாடு இல்லை. திட்டமிட்டுச் செய்யப்பட்ட விளம்பரம். ஆன்மீக வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்ப்பா, விளம்பரம்கூட இல்லாமல் வியாபாரம் செய்ய முடியுமா என்று கேட்பவர்களும் இருக்கக்கூடும். 

எது வியாபாரம் எதற்கு விளம்பரம் என்பதில்தான் சமூக-அரசியல். இவர்கள் டாட்டாவுக்கு பாரத்ரத்னா கொடுத்தால் பரவாயில்லை அந்த ஆள் நமக்கு ஒரு குட்டி கார் செஞ்சு கொடுத்தானே என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறவர்கள். 

அரசுக்குச் சாதகமானவர்களுக்குத்தான் தேசிய விருது என்பது நம் நாட்டின் எழுதப்படாத விதி. ஓட்டுப்போட்டு அரசியல் மாற்றம் கொண்டுவர நினைக்கும் நாம் இதை காலை செய்தித்தாள் மடிக்குமுன்னரே மறப்பதும் வாடிக்கை. இங்கேதான் இந்த ஜன்மம் இன்னும் கொஞ்சம் யோசித்தது.

இந்தியாவில் பிறந்தார்கள் என்பதற்காகவே இன்று விண்வெளி சென்ற, நோபெல் பரிசு வாங்கியவர்களைக் கொண்டாடும் நாட்டில், இங்கேயே வாழ்ந்து வியாபாரம் செய்யும் ஒருவனை எவ்வளவு கொண்டாடுவார்கள் என்று கணக்கு போட்டு, நோபெல் பரிசு பெறவும் இது திட்டம் போட்டது. டாகூர் வாங்கியதாலேயே நோபெல் மீது எனக்கு இருக்கும் கொஞ்ச அபிமானம், இர்விங் வாலஸ் படித்த பின்னரும் போய்விடவில்லை. இதற்கு கொடுத்திருந்தால்?!

நோபெல் பரிசின் இலக்கை நோக்கி நகர்த்தப்பட்ட காய்கள் தான் ஜம்முவில் தீவிரவாதிகளிடமும் , நக்சல் போராட்டக்காரர்களிடமும், அமைதிக்காகப் பேசுகிறேன் என்ற சவடால்கள். இவற்றின் அடுத்த கட்டம்தான் செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றும் நாடகம்.  மேடை ஏறியவன் சுலபத்தில் விலக முடியாது என்பது என் அனுபவம்.

ஒரு நல்ல நடிகன் வசனத்தை மட்டும் கவனமாகப் பேசிவிட்டுப் போய்விட மாட்டான். அரங்கின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வரும் சமிக்ஞைகளைப் பயன்படுத்திக் கொள்வான். அது போலத்தான் இப்போதைய சிரிசிரி நாடகம்.

சென்ற 2009 ஆண்டு நடந்த ஈழநாடகம் வெற்றி பெறவில்லை. அதே மே மாதம் 2010 இன்னொரு நாடகம்! ஸத்ஸங்கத்தில் எவனோ சுட்டானாம்.இந்த ஸத்ஸங்கம் என்பதே பக்த-சிஷ்யர்களுக்கு குருமார்கள் தரும் பல்லிமிட்டாய் பிரசாதம். தங்கள் மூஞ்சியையும் முகரையையும் அவ்வப்போது காட்டி பக்தியை ஊக்குவிப்பது ஒரு சராசரி ஆன்மீக-வியாபார நடவடிக்கை. இந்தக் கூட்டத்தில் எல்லாரும் போய்விட முடியாது. பக்தர்களுக்குத்தான் முதலிடம், பணக்கார பக்தர்களுக்குத்தான் சிறப்பிடம். இப்படியோர் சிரிசிரி கூட்டத்தில்தான் துப்பாக்கிச் சூடு.


“குருவைச் சுடப் பார்த்தார்கள், தப்பித்து விட்டார்” என்று முட்டாள் பக்தன் சொல்லலாம். குருவே அப்படிச் சொன்னால்? பொங்கிவிட்டார்கள். பாஜக தலைவர் மாநில முதல்வரை உடனடி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார்! குருவும் தன் கருணாவிலாசத்தோடு, சுட்டவனை மன்னித்து விட்டேன், அவனுக்கு மனம் அமைதிப்பட பயிற்சி தருகிறேன் என்கிறார். நாட்டின் உள்துறை அமைச்சரோ இது ஒன்றும் கொலைச் சதி இல்லை என்கிறார். குருவுக்கு கோபம் கொப்பளிக்கிறது, “சாரிசாரி, சிரிசிரி" என்று சும்மா இருக்கக்கூடாதே என்று இந்திய அரசுக்கு எங்கே குத்துமோ அங்கே குத்தப்பார்க்கிறார்- நக்சல்கள் இவனைக் கொல்லச் சதி செய்தார்களாம்! அடடா என்ன ஒரு ஞான திருஷ்டி!

இரண்டு நாட்களில் தெரிய வருகிறது, சுட்டவன் ஆசிரமத்தின் எதிர்பக்கம் இருந்த வீட்டின் சொந்தக்காரன்! அவன் நாய்கள் தொந்தரவு செய்தால் சுடும் ஒரு கேவலமான மனிதன், அவன் நக்சல் கிடையாது!!

சிலநேரங்களில் சிலநாடகங்கள் தானாய் முடிந்து விடும், சிலவற்றை மக்கள் முகம் சுளித்து முடித்து விடுவார்கள். நாடகக்காரன் சும்மாயிருக்க மாட்டான். அடுத்த ஸ்க்ரிப்ட் தயாராகும், அடுத்த நாடகம் அரங்கேறும். இதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம். காத்திருங்கள். அதுவரை சுடப்பட்டது ஒரு நாய்தானே என்று பெருமூச்சு விடுவோம்.

சுட்டிகள்-


Tuesday, June 1, 2010

நடுநிலை நாடகம்

நடக்கும் போது நாராசமாக ஒன்று எதிர்பட்டால் காறித்துப்பும்போது முகம் வலமோ இடமோ திரும்பித்தான் ஆக வேண்டும். நடுநிலையே என் பார்வை என்று நேராகப்பார்த்துக்கொண்டு நடக்கும்போதே துப்பினால் நம் மீதே தான் விழும்.

நடுநிலை சாத்தியமா? அப்படி இருப்பதாய் சொல்லிக்கொள்வது சௌகரியம். பிறரிடம் சொல்வதை விடவும் நம்மிடமே சொல்லிக்கொள்வது நிறைய நிஜங்களின் வீச்சுக்களிடமிருந்து ஒரு தற்காப்பு.
 
பெண்டுலம் வினாடிக்கொருமுறை மாறி ஆடுவதுபோல் மனம் நிமிடத்துக்கொருமுறை கூட மாறுவதில்லை, மனம் தன் நிலையின் மாறுபாட்டை ஏற்க வாரங்களும் ஆண்டுகளும் கூட ஆகலாம். ஆனால் நடுநிலை என்று நிற்கவிரும்பும் மனது நின்று போன பெண்டுலத்தின் குறியீடு போல உணர்வுமறுத்த சடலம் இல்லையா? நடுவில் தான் நிற்பேன் என்று அடம் பிடிக்கும் தராசு முள்ளை வைத்து எடை போட முடியாது இல்லையா? நடுவில் நிற்க முடியும், எவ்வளவு காலம்? நேர்குத்தி-நிற்கும் பார்வையால் எவ்வளவு பயன்?

பார்வை நடுநிலையாகாது,ஒன்றின் மீது மட்டுமே நுணுக்கமாக இருந்தாலும் முழுமையாகாது. எதிர்வரும் பன்றியை மட்டும் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தால் அதைத் துரத்தி வரும் புலி கண்ணுக்குப் படுமா?

எப்போதும் எல்லா பக்கமும், எதிர்படுவதின் பின்புலமும் பார்ப்பதே நியாயநிலை. நான் எப்போதுமே எல்லாவற்றையும் சமமாகவே பார்ப்பேன் என்று ஏமாற்றுவதும் ஏமாற்றிக்கொள்வதும் நடுநிலை எனும் நாடகக்கலை.

என்ன எழுத வந்து என்ன எழுதுகிறேன்? எனக்கே வெட்கமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது!

என்னை opinionated என்று எனக்கு நெருக்கமானவர்களே சலித்துக் கொள்ளுமளவு அவர்கள் மீது விமர்சனவிவாதம் செய்யும் நான் இப்போது இங்கே ஏன் தயங்கித்தயங்கிச் சுற்றிச்சுற்றி வந்து சொல்ல வந்ததை விட்டுவிட்டு என்னென்னவோ சொல்கிறேன்? பயமா? அப்படியென்றால் என்ன பயம்? என் பிராபல்யம் பறிபோய் விடுமா? ஏன் பின்தொடர்வோர் என்னைப் புறக்கணிப்பார்களா? இல்லை எந்தக் கண்களின் கவனிப்பும் இல்லாமல் நான் சூம்பிப்போய் விடுவேனா? இதற்கெல்லாம் இதுவரை அக்கறை காட்டாமல் இருந்துவிட்ட நான் இப்போது மாறிவிட்டேனா?

இரண்டு நாட்களுக்கு முன் இதை நான் எழுத உட்கார்ந்திருந்தால் துப்பியிருப்பேன், ஆனால் என் எச்சில் கேவலத்தைத் தாக்காமல் வேறு எங்காவது விழுந்திருக்கும். இப்போது குறி பார்த்துச் சரியாகத் துப்பவேண்டும் என்பதால் நிதானமாகவே குறி வைக்கிறேன்.

என்ன நடக்கிறது இங்கே?

வெளியே நிஜ உலகில் நம் அவசரத்திலும் அலைச்சலிலும் கவனிக்க முடியாமல் கலைந்து போகும் தருணங்களின் பதிவுகள் தான் இங்கே நிதான பரிசீலனைக்குக் கிடக்கின்றன. வலையின் மெய்நிகர், நிஜம் போல நொடியில் காணாது போய், நினைவுகளாக பேதங்களை உள்ளடக்கி மனக்கண் முன் வருவதில்லை. இங்கே நிஜங்கள் பதிவுகளாக, நாம் மறைக்க நினைத்தாலும் முடியாதவைகளாகக் கிடக்கின்றன. ஆசுவாசத்திற்கப்புறமான மீள்பார்வைக்குக் காத்திருக்கின்றன.

இன்னும் ஒரு மாதம் கழித்து பலருக்கு இது ஞாபகத்தில்கூட இருக்காது. சம்பந்தப்படாத சூழல் மறதியில் புதையுண்டுதான் போகும். நாம் சம்பந்தப்படாத சூழல் என்று ஏதாவது எப்போதாவது எங்காவது இருக்கிறதா?


அவள் கத்தியை எடுத்தாள்- அவன் தன் கத்தியை எடுத்தான்- அவளை ஆழமாகக் குத்தினான்- அவளது குடல் வெளிவந்தது- அதை உள்ளே வைத்துத் தைத்துவிட்டால் அவள் சாக மாட்டாள்- அதனாலேயே அவர்கள் இருவரையும் கைக்குலுக்கச் சொல்வோம்! இதுதான் இன்றைய வலையுலகில் நான் பார்க்கும் நடுநிலைவாதம்!


ஒரு காட்சியா முழு நாடகம்?

நேரடியாகவே சொல்கிறேன். முல்லை-நரசிம் விஷயத்தில், எனக்கு முல்லையின் பாலினமோ பிறப்பினமோ முக்கியம் இல்லை. வன்மம் தான் முக்கியம். வக்கிரத்தின் வெளிப்பாடுதான் முக்கியம். எல்லார்க்குள்ளும் வக்ரம் இருக்கிறது என்று வெங்காயத்தை உரித்துக் கொண்டிருக்காமல் எனக்கு ஆத்திரம் வருவதன் காரணம்- இங்கே உள்ளிருக்கும் ‘மிருகம்’ வெளிவராமல் இருப்பதே மானுடப்பண்பு, அது இங்கே மீறப் பட்டிருக்கிறது. பண்பு மீறும்போதும் பழக்கதோஷம் நடுநிலை இருப்பதாய்ச் சொல்லச் சொன்னால்? பழகியதின் சந்தர்ப்பவாதம் அல்லவா வெளிப்படுகிறது? இதை இன்னும் சுருக்கமாகவும் சுருக்கென்றும் சொன்னதால்தானே அவள் மீது வன்மம் வெறி கொண்டு வெளிப்படுகிறது?

நடுநிலை நாடகம்தான். சில நடிகர்களுக்கு அது ஆன்மதிருப்தி, சிலருக்கு அது நேரடி பயன்!வால்பிடித்துக் கொண்டு போவது சுலப சுகம்தான், முன்னே செல்வது பாதையில் ஒழுங்காய்ப் போகும்வரை. நண்பர்களுக்காக வக்காலத்து வாங்கலாம் அவர்களுக்கு நட்பின் தகுதி இருக்கும்வரை. தகுதியற்றவர்களின் நட்புக்காக நடுநிலை நாடகம் நடித்தால், நாளை திரை விழும் போது, பார்த்துக்கொண்டிருக்கும் போலிநிஜங்களும் காறி உமிழும்.

நிஜம் நடுவில் நிற்காது. நியாயம் ஒரு பக்கம்தான் சாயும் தராசு.