Showing posts with label சமூகவியல். Show all posts
Showing posts with label சமூகவியல். Show all posts

Thursday, May 19, 2016

2016 மே மாத எரிச்சல்

டிசம்பர் 2015, சென்னை தத்தளித்தது. வயது,வசதி பேதமில்லாமல் எல்லார்க்கும் அவதி. அரசு ஏரி திறந்துவிட்டது அதனால் பலர் வாழ்நாள் சேமிப்புகளும் பொக்கிஷங்களும் நீரோடொழிந்தன. இணைய இணைப்பிருந்தோர் பொங்கினர்.  ஆட்சியை ஆள்பவரை வசை பாடினர்.. அவர்களை ஒழிப்போம் என சூளுரைத்தனர்.

வெள்ளம் வடிந்த ஒரு மாதம் கழித்து நான் பேசிய பலதரப்பட்டவர் சொன்னது, ஏரி திறந்தது தப்பு தான் ... முதல் நாள் தான் அரசு செயல்படவில்லை ..அப்புறம் சிறப்பாக எல்லாவற்றையும் சமாளித்தார்கள்>. எனும் தொனியிலேயே இருந்தது.
ஆட்சியின் மீது கோபம் யாருக்கும் - நான் பார்த்த வெகுஜனங்கள் யாருக்கும் பெரிதாய் இல்லை.

மே 2016, ஆட்சி மாறும் என்றார்கள், மாறவில்லை. ஏன்?
முதல்வர் சிறையிலிருந்தால் எதுவும் நடக்காது எனும் ஸ்தம்பித்த ஆட்சி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல்வர் மீண்டும் பதவியேற்பு,  மதுவிலக்கு கோரியவர் சிறையடைப்பு, எதிலும் ஒரு மெத்தனம் என பலவகையிலும் மக்கள் வெறுப்படைய வைக்கக்கூடிய செயல்பாடுகள். இவை யாவும் மீறி தேர்தலில் அதே கட்சி அதே முதல்வர். இது எப்படி நடந்தது?
மக்களுக்கு ஆட்சியின் மீது மிகப்பெரிய அதிருப்தி இல்லை எனும் போது, ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி விழிப்புணர்வேற்றி மாற்றம் உருவாக்க உந்துவதே எதிர்கட்சியினர் கடமை. ஆனால்,
 எவ்வித கணக்கில் எவ்வித லாபம் எனும் ஒரே நோக்கில் கூட்டணி அமைக்கவே எதிர்கட்சிகள் முனைந்தன. சதவிகித வாக்கு எனும் மாய தோற்றத்தின் பின்னேயே அலைந்தன. ஊடக பிம்பங்களையே நம்பின.
திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது ஒரு தெருவோர டீக்கடையில் நின்றாலேயே புரிந்திருக்கும். அவர்கள் தம் மீது படர்ந்திருக்கும் அதிருப்தியை அறிந்து களையாமல், அடுத்த கட்சியில் யார் வந்தால் லாபம், யார் போனால் லாபம் என்றே இருந்தார்கள். பழம் கனியும் நழுவும் என்றெல்லாம் பேசி இன்னமும் தம்மையே கேவலப்படுத்தி ஏற்கனவே மக்கள் மத்தியில் தம் மீதிருந்த நம்பிக்கையின்மையை வலுவூட்டினார்கள். காங்கிரஸ் எப்போதோ செல்லா காசாகியிருந்தும் அதனுடன் கூட்டு வைத்து சில வெல்லக்கூடிய தொகுதிகளையும் தாரை வார்த்தார்கள். ஸ்டாலின் முதல்வர் என அறிவித்திருந்தாலும் ஏதோ சில கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும்.  எம்ஜியார் மறைந்தபின் கலைஞருக்காக யாரும் திமுகவை வெற்றி பெற வைக்கவில்லை, முந்தைய ஆட்சி வேண்டாம் என்றே அவர் ஜெயித்தார். தவிர அவரது குடும்பம் தான் திமுக எனும் எண்ணம் சாமான்யனுக்கு ஆழப்பதிந்துவிட்ட்து.  இந்நிலையில் தேறாத திமுக, உருப்படாத அதிமுக எனும் நிலையில் சலிப்படைந்த மக்களிடம் மாற்றம் குறித்து நிச்சயமாய் ஒரு விருப்பம் இருந்த்து.

அந்த மாற்றம் நான் என அன்புமணி வந்தது வரவேற்பை விடவும் வேடிக்கை நிகழ்வாகவே ஆனது. ஜாதி மீதான அவர்களது தீவிரம் எவ்வித தீவிர ஒப்பனையாலும் மறைக்கமுடியாத ஒன்று. ஜாதி பற்றி பார்க்க வேண்டாம் அன்புமணியை மட்டும் பார்ப்போம் என்றால், மருத்துவக்கல்லூரி ஊழல் முதல் மாமல்லபுரம் கோவில் மீதாடிய அநாகரிகம் யாவும் மக்கள் மறந்து விடவில்லை.
பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் இங்கே அர்த்தமே இல்லை. ஆகவே விஜயகாந்த்! இதுதான் ஜெ ஜெயிக்க முக்கிய காரணம்.
மநகூ எனும் சாத்தியம் விஜயகாந்த் வாசன் எனும் காரணங்களாலேயே வீணாய்ப்போனது. இவ்விரு கட்சியுமே பேரங்கள் சரியாய் படியாததாலேயே இக்கூட்டணிக்கு வந்தன. திருமதி விஜயகாந்த் பேசியதெல்லாம், கைதட்டல் பெற்றிருக்கும், வடிவேலுவுக்கு வரும் கைதட்டல் போல. ஆனால் அறிவு பூர்வமாய் மக்களை அணுகுவார்கள் என மக்களே நினைத்த கம்யுனிஸ்ட்களும் இந்த கட் அவுட் நிஜமான ஆசாமி என நம்பி பின் சென்று வாய் பொத்தி நின்ற நேரமே நிராகரிக்கப்பட்டார்கள், சில தோழர்களாலேயே. வைகோ எனும் பொய்யின் வாய்ஜாலம் தானே நிற்க முடியாது கழன்றவுடன், ப்ரேமலதா சதீஷ் என்போரெல்லாம் ஆடிய உடன் மநகூ வெறும் ஒரு ஹீரோவோடு நின்று அடிவாங்கும் காமெடியனானது.
திருமாவுக்கென ஒரு வாக்கு வங்கி நிஜம், அதேபோல்தான் கம்யுனிஸ்ட்களுக்கும். இவர்களின் கூட்டுத்தொகை வெல்லுமளவு இல்லை என்றாலும் இம்முறை வாக்கு கூடியிருக்கும். அவசரம் ஆத்திரம் பேராசையோடு விஜய்காந்த் முதல்வர் என அறிவித்தபோதே இவ்விருவரும் இருப்பதையும் இழப்பர் என எனக்குத் தோன்றியது. வாசுகி நின்றிருந்தால் கூட நான் வாக்களித்திருக்க மாட்டேன் எனும் அளவு இவர்கள் தம் மரியாதை இழந்த நிலை உருவாகியது.
இந்நிலையில் அதிமுக அல்லது திமுக எனும் போது, ஏன் திமுக எனும் கேள்வி தான் முன்னின்றது, அதுவே ஏன் அதிமுக வேண்டாம் என்பதை உள்ளடக்கியது. தாங்கள் மேல் என சொல்லும் திராணி யாருக்கும் இல்லாத்தால், இப்படியே இருக்கட்டுமே என மக்கள் நினைத்துவிட்டனர்.
வெள்ளம்  வந்து அதிமுகவை அழிக்கவில்லை. மக்கள் மனநிலை புரியா எதிர்கட்சிகள்  தான் அதிமுகவை ஜெயிக்க விட்டார்கள்.
காசு கொடுக்கப்பட்ட்து என என்னிடமே பலர் சொன்னாலும், காசு அந்த 90+ தொகுதிகளுக்கும் தானே போயிருக்கும்.
என் நோக்கில் இத்தேர்தல் முடிவு அதிமுகவை சகித்துக்கொள்வது திமுகவை நம்புவதை விட மேல் என மக்கள் எடுத்த முடிவாய்த் தெரிகிறது



Sunday, October 19, 2014

மெட்ராஸ்

மெட்ராஸ் அற்புதமான சினிமா இல்லை தான், மதுபான(க்?)கடை கூட குறைகளே இல்லாத சினிமா இல்லைதான். ஆனாலும் இவை இரண்டும் நெஞ்சில் நெருடி என்னை யாரிடமாவது பேசேன் என்று கெஞ்ச வைத்தவை. சமீபத்தில் நான் பார்த்த படங்களில்..in reverse viewing not order..சரபம், சதுரங்க ஆட்டம். ஜீவா, பண்ணையாரும் பத்மினியும், இதற்கு தானே ஆசைப்பட்டாய்.., சூதுகவ்வும், ..என்று நிறைய படங்களைப் பற்றி நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். வேலையில்லா பட்ட்தாரி, சிகரம் தொடு என்பவை கூட பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன, அவை நெருங்கக்கூடிய சிலருக்கு..  ஆனாலும் மெட்ராஸ்…. மெட்ராஸ் தெரியாத சென்னைக்கார்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன். மனிதர்களைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல ஒரு மொழியின் இன்னொரு பரிமாணத்தை அறிந்து கொள்ள.
மெட்ராஸ் என் சொந்த ஊர்! ஒருமுறை ஒரு பத்திரிக்கையில் உங்க ஊர், உங்க சாமி பத்தி சொல்லுங்க என்றதும் சிந்தாதிரிப்பேட்டை அங்காளம்மன் பற்றிச் சொன்னதும் முதலில் அவர்கள் நம்பவில்லை. நான் மெட்ராஸ்காரன்.   மெட்ராஸிலும் மேல்தட்டிலிருந்து குதிக்கவில்லை, கீழ்-நடு-மையத்திலிருந்து சில ஆண்டுகளுக்குமுன் தான் மேல் வருமானத்திற்கு நிகராக செலவு செய்யும் திமிர் வந்தவன். ( செலவு செய்யத்தான், சேமிக்க அல்ல). இது என்னைப்பற்றிய பதிவு அல்ல.. சினிமா பற்றி, சென்னை பற்றி…)
சென்னை:சினிமா  என்றெல்லாம் வேறுபடுத்திப்பார்க்காத தலைமுறையிலிருந்து வந்தவன், அதைத் தவிர்க்கமுடியாது.
மீண்டும் சொல்கிறேன். மெட்ராஸ் சர்வதேச சாகசம் அல்ல.ஆனால் ஒரு கண்ணுக்குப் படாதவாறு வைக்கப்பட்டிருக்கும் சமூகத்தின் யதார்த்தமான சித்தரிப்பு. வியாபார நிர்ப்பந்தம் எனும் தவிர்க்க இயலாத தமிழ்சினிமாத்தனமான கதையில் இதை இழைத்ததே ஒரு சாகசம் தான். அதற்குத் தான் பாராட்டு.
‘ஆமா என்னாங்கடா’ என்று ஒளிந்து கொண்டிருப்பவரும் கூட முணுமுணுப்பாய் கூட தலை சிலுப்ப வைக்கிறது என்பதே இதன் வெற்றி. இது ஒரு சமூக மாற்றம்/புரட்சி என்று எந்த வெங்காயமும் உரிக்கப்போவதில்லை. ஆனால், தம் அடையாளம் மறைப்பவர் கூட புன்னகையுடன் அங்கீகரிக்க வைத்தது இன்னொரு வெற்றி.
எனக்கு இதில் சில பாத்திரங்கள் பேசும் பாஷை புரிந்து கொள்ள உற்று கவனிக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் இவர்கள் என் மக்கள். எப்படி சேட்டுகளின் தமிழ் என்றொரு பிம்பம் தமிழ் சினிமாவில் ஆழ விழுந்துவிட்ட்தோ அப்படித்தான் சேரிவாழ் மெட்ராஸ் பாஷையும் சினிமா பிம்பத்தில் அடைபட்டு பலருக்கு அதன் பரிணாமம் புரியாது போய்விட்டது. இதை உடைக்க வந்ததற்காகவே இப்படத்துக்கு பாராட்டு.

என் அடையாளதை நான் மறுத்ததில்லை, மறந்ததுமில்லை, ஆனால் நினைவிலேயே நிலைநிறுத்திக் கொண்டதுமில்லை. நான் இங்கேயே இருந்திருக்க வேண்டிய ஒருவன், உழைப்பும் முனைப்பும் தன்னம்பிக்கையும் தெய்வநம்பிக்கையும் என்னை இவர்களின் ‘விளிம்பு’ என்று வர்ணிக்கப்படும் நிலை தாண்டி வரவைத்திருக்கிறது.. இப்படத்தில் தெரியும் பாத்திரங்கள், மனிதர்கள், குறிப்பாக இளைஞர்கள் இப்படி மீறி வரக்கூடிய சாத்தியத்தையும் இப்படம் முன்வைக்கிறது..ஆகவே, மனப்பூர்வமாய், best wishes for more Ranjith.

Saturday, January 2, 2010

பிரமிப்பும் பிரமையும்.

பக்தியும் ஒரு ரசிப்பு தான். பிரமை என்று தெரியாமல் ஒரு பிரமிப்புதான். 

பக்தன் என்பவனும் ரசிகன் என்பவனும் எப்படி மாறுபடுகிறான்? பக்தனுக்குக் கடவுளின் குறைபாடு தெரியாது, ரசிகன் தன் நாயகனின் குறைபாடு தெரிந்தாலும் அதை ஆவேசமாக மறுப்பான். நாயகனை ஆராதிப்பது இயல்பு. அப்படி ஆராதிக்கப்படுவதால்தான் அவன் நாயகன். ஒரு நாயகனின் தன்மை என்ன என்று யோசித்துப்பாருங்கள். அவனிடம் நமக்குக் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய பல கூறுகள் இருக்கும். நம்மால் அடைய முடியாத விஷயங்களை அவன் வெகுசாதாரணமாகச் செய்து விடுவான். ஸ்பைடர்மேனாக இருந்தாலும், (அன்று எம்ஜியார் இன்று) ரஜினியாக இருந்தாலும்! அவனைப்போல் ஆகமுடியாததாலேயே அவன் நாயகன், அவனுக்கு ரசிகர். 


பக்தன்,சிஷ்யன் என்பது வேறு வகை. இரண்டும் பக்தி! முன்னவன் கல்லில் ஒரு தெய்வத்தைக்கண்டு மெய்மறப்பான், அடுத்தவன் ஒரு மனிதனில் அந்த தெய்வத்தை தரிசித்து மதியிழப்பான். இருவரிடமும் கேள்விகள் எழுவதில்லை. இரண்டிலும் ஓர் அடிப்படை உண்டு, ஓர் அவசியம் உண்டு. அது தான் சரணாகதி! கதி என்பதிலேயே விதி என்பதன் உள்ளீடும் உள்ளது. இனி இதுதான் என்றும் இதைவிட வேறெதுவும் இல்லை என்பதும் இவர்களின் மனநிலை. இது சில வேளைகளில் தற்காலிகமாக ஆரோக்கியமாகவும் அமையலாம். தற்காலிகமாகத்தான். அந்தத் தற்காலத்தின் விகிதமே மாறும், 

அந்தச் சுழலுள் சிக்கியிருக்கும் வரை அதுவே விமோசனம், அதுவே பரமபதம். இத்தகைய பக்தி காதலாக இருந்தால் வாழ்க்கை இனிதாகவும் ஆகும், இதுவே வெறியாக மாறினால் அறிவு செயல்படுவதை நிறுத்தும். பிறகு, குழப்பங்களுக்கான விடையாக மேலும் குழப்பும் பொய்களே தோன்றும். இதுவும் ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்வோரின் ஒரு பதில்தான். மாயை விலகும், மீண்டு வேறு வடிவில் வரும். பிறப்பறுக்கும்வரை! சாகும்வரை சிந்திக்காவிட்டால் இந்நிலை தொடரும். பக்தி காதலா வெறியா என்பதை அதன் விளைவுகளே வெளிப்படுத்தும். காதல் வளர்க்கும், வெறி அழிக்கும். 

கல்வடிவில் இருக்கும் தெய்வத்தை வணங்கி பக்தி காட்டும் ஒருவனுக்கு பூஜை செய்யும் செலவு மட்டும்தான், ஆனால் மனித தெய்வங்கள் இன்னும் விலை அதிகம். ஸத்ஸங்கம், காணிக்கை, பயிற்சிக் கட்டணம், சிறப்பு நேர்முகத்துக்கான கட்டணம் என்று நிறைய செலவு இருக்கிறது. இதில் கொடுமை இவர்கள் ஏற்கனவே கற்கோவில்களுக்கும் செலவு செய்துகொண்டிருப்பார்கள். மனித தெய்வம், மகான், ரிஷி, சத்குரு, சாதாகுரு, ஜகத்குரு என்றெல்லாம் இவர்கள் “ஸ்ரீ”ச்சிடும் உன்மத்தநிலை ஒரு கட்டத்தில் மருத்துவச் செலவை வேறு கொண்டுவந்து சேர்க்கும்! 

இப்படிப்பட்டவர்களின் மனம் ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது. எல்லாம் பார்த்துக்கொள்ளும் அந்த மனிததெய்வம் வாழ்வின் எந்தப்பிரச்சினைக்கும் வீட்டில் உள்ள ஒரு வயதான கிழவியைவிட வழி சொல்வதில்லை. அவர் பார்த்துக்கொள்வார் என்று சும்மா இருந்தால் எந்தப்பிரச்சினையும் குறைவதில்லை. இதை வெளியே சொல்லவும் முடியாத ஓர் இக்கட்டான நிலை வேறு. பக்கத்து வீட்டில் இருப்பவனிலிருந்து, அலுவலகத்தில் கொஞ்சம் பேசுபவன் வரை அனைவரையும் இந்த மகானின் வாழும் வழி காட்டுதலைப் பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்துவிட்டபின், இதிலெல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்லும் நேர்மையும் தைரியமும் இவர்களுக்கு வராது. ஏமாந்து விட்டேன் என்று சொல்ல நேர்மை வேண்டும். சாமி கண்ணையெல்லாம் குத்திவிடாது என்று உரக்கச் சொல்ல தைரியம் வேண்டும். நேர்மையும், தைரியமும், சுயமரியாதையோடு சேர்ந்து தான் சரணாகதியில் முடங்கும்.


நவீன சாமியார்களிடம் சேருபவர்கள் தங்களை பக்தர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை, சீடர்கள் என்றே சொல்லிக்கொள்கிறார்கள். சீடன் குருவிடம் கற்றுக்கொள்ளவேண்டும். இவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள்? இன்றிருக்கும் எந்த சாமியாரிடம் புதுச் சரக்கு இருக்கிறது? ரஜ்னீஷ், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் தான் ஆன்மீக விஷயங்களை வேறு விதமாகப் பேச ஆரம்பித்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் ஒரு மதம் சார்ந்த மார்க்கமாகவே வாழ்வின் தத்துவர்த்தங்களை விளக்கி வந்தவர்கள். இப்போது பிரபலமாக இருக்கும் சாமியார்கள் எல்லாரும் ஒரு காலத்தில் வேறு ஒரு சாமியாரின் சீடராக ஆரம்பித்தவர்கள். இல்லை நான் சுயம்பு என்று கூறிக்கொள்பவர்களும் ஏற்கனவே ஜேகே, ஓஷோ பேசியதின் மறுபதிப்பாகவே பேசிக்கொண்டிருப்பவர்கள். 

பேச்சில்தான் புது விஷயம் இல்லை, இவர்கள் கற்றுத்தரும் பயிற்சிகளாவது புதிதா என்றால் இல்லை. எல்லா சூத்திரங்களும், மூச்சுக்கும், உடலுக்கும் மனத்துக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே நாம் நாட்டில் இருந்து வந்தவைதான். 

பிறகு இவர்களிடம் என் இத்தனை பக்தசீடர்கள்? இம்மாதிரி சாமியார்களின் வசீகரம் மற்றும் விளம்பரவியாபார வித்தை பற்றிப் பேச ஆரம்பித்தால் முடிவே இருக்காது. இந்த பக்தசீடர்களின் மனநிலை தான் முக்கியம். நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருவர் கூட இப்பாதை மனம்பிறழ்ந்து பேதலித்துவிடலாம் என்பதால் இந்த பக்தர்களின் மனவியக்கம் குறித்துச் சிந்திப்போம். 

முதலாவதாக ஒருவன் ஆசானையோ குருவையோ தேடுகிறான் என்றால் ஏன்? ஒரு விஷயம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவனுள் ஒரு ஆவல், உந்துதல்,வேட்கை இருக்கும் அப்போதுதான் அதைக் கற்றுத்தர ஒருவரைத் தேடுவான். சாமியார்களிடம் என்ன கற்றுக்கொள்ள ஒருவன் போகிறான்? வாழ்வையா? வளத்தையா?

நிம்மதியாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொள்ளச் செல்வதாகப் பலர் கூறுவார்கள்.இதைப் பரிசீலிப்போம். நிம்மதி என்பது போதும் என்ற மனநிலை வரும்போதுதான் வரும். அது எப்போது வரும்? தேவைகளையும் ஆசைகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டு, தன் திறன் குறித்தும் ஒரு தெளிவான மதிப்பீடு வைத்து வாழ்வை அணுகினால் மட்டுமே நிம்மதி சாத்தியம். நம்மால் முடியாத ஒன்றுக்கு, அது எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அதற்காக ஏங்கிக்கிடந்தால் அந்த நிராசையே நிம்மதி குலைக்கும். இதைத்தான் இந்த சாமியார்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று பக்தசீடர்கள் கூறுவார்கள். இதுவும் பிழையான ஒன்று. 

எனக்கு ஒருவர் ஓவியம் கற்றுக்கொடுப்பதானால் அவருக்கு ஓவியம் தெரிந்திருக்க வேண்டும். சாமியார்கள் நிதர்சன வாழ்வுக்குதவும் சாந்தி போதிப்பதாய் இருந்தால் அவர்கள் அந்த நிர்ச்சலன நிலயில் இருக்க வேண்டும். அவர்கள் பார்ப்பதற்கு நிம்மதியுடன் தான் இருக்கிறார்கள். என்னைக்கூட பராமரரிக்கவும் புகழ்பாடவும் ஒரு கூட்டம் மண்டியிட்டுக் கிடந்தால் நிம்மதியாகத்தான் காட்சி தருவேன். தினசரி வாழ்க்கையின் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல், பந்தங்களும் இல்லாதிருப்பதாய் திகழும் இவர்களது சாந்தி நம்மைப்போன்ற சாதாரண வாழ்க்கையின் சாதாரண ஆசைகளோடும் இலக்குகளோடும் இருப்பவர்களுக்கு எப்படி அவர்கள் சொல்லிக் கொடுத்து வரும்? எப்படி அவர்களிடம் அவர்களைப்போல் ஆவதைக் கற்றுக்கொள்ள முடியும்? நாமும் அவர்களும்தான் வேறுவேறாயிற்றே! 

நம்மைப்போன்ற இன்னொரு சராசரி மனிதனைப்பார்த்து அவனது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் என்ன என்று சிந்தித்தாலே வாழ்வின் சூட்சுமம் புரிந்துவிடும். இதை அவர்கள் கற்றுத்தருவதாகச் சொல்வது அவர்களது வியாபாரம். பணம் கொடுத்துக் கற்றுக்கொள்ளலாம் என்று முயல்வது நம்முடைய நுகர்வு கலாச்சாரம். 

இதைக் கற்றுக்கொடுக்கத்தான் ஆசிரமம், அதை நிர்வகிக்கத்தான் ஆட்கள், அவர்களுக்கும், செய்யப்படும் விளம்பரங்களுக்கும் தான் பணம், அதைத்தானே அவர்கள் கேட்கிறார்கள், கொடுக்கவேண்டியதுதானே என்றால் பிச்சை போடுவதாய்ச் செய்யலாம், வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதாய்ச் செலவழிக்கக்கூடாது. 

நீளம் கருதி இக்கட்டத்தில் நிறுத்துகிறேன். இதைத் தொடரவும் விவாதிக்கவும் விரும்புகிறேன்.

Wednesday, December 30, 2009

வன்புணர்ச்சி எனும் வக்கிரம்


வன்புணர்ச்சி எனும் வக்கிரம் சிலரது மனவிகாரத்தின் வெளிப்பாடுதான். சக மனித உயிரை மதிக்காமல், உணர்வை மதிக்காமல் தன் பொருந்தா அடங்கா இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ளும் வெறியர்களின் விகாரம் தான் இச்செயல். அந்த நேரம் அவர்களது மனத்தில் காமவெறி மட்டுமே மேலோங்கி இருக்கும். அவ்வாறு ஒரு வெறித்தனம் சிலருக்கு போதையின் உச்சத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுவதிலும் நியாயம் இல்லை. போதை அதிகரிக்கும்போது சமூக நாணம் குறையுமே தவிர சுயநெறியாக உள்வார்த்துள்ள சமூக மதிப்பீடுகள் காணாது போய்விடுவதில்லை. உள்ளே அப்படியொரு கேவலமான எண்ணம் ஒளிந்திருந்தால்தான் போதை அதைக் கட்டவிழ்த்துவிடும்.

எப்படி ஒருவனுக்குள் இத்தகைய எண்ணம் உருவாகிறது. தனக்குத் தகுதியில்லை எனும் கணிப்போடு, தகுதியைமீறி ஒரு பென்மீது மோகம் அவனுள் மேலோங்கினால் நேர்மையாக அடையமுடியாத அவளை வன்மத்துடன் வன்முறையாலாவது அடையும் வெறி சிலருக்கு வரும். இப்படிப்பட்டவனும், அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தாலும், அவள்மீது உண்மையான அன்பு கலந்த ஈர்ப்பு இருந்தால் இம்மாதிரி வன்செயலில் ஈடுபடமாட்டான். காதலி என்னை நிராகரித்ததால்தான் அவளைப் பலாத்காரம் செய்தேன் என்று கூறுபவன் அவளைக் காதலிக்கவேயில்லை என்றுதான் அர்த்தம். ‘குடிபோதையில், காதல் வெறியில்’ என்று அவன் பின்னர் விளக்கம் கொடுப்பதெல்லாம் குற்றத்திலிருந்து தப்பிக்க மட்டுமல்ல, உள்ளே ஒரு குற்ற உணர்வு குறுகுறுப்பதாலும்தான்.
குற்ற உணர்வு எப்போது வரும்? சமூகம் தவறு என்று சொல்லும் பல விஷயங்களை நாம் சாதாரணமாகச் செய்துவிட்டு குற்ற உணர்வுடன் இருக்கிறோம். உதாரணமாக தவறாக வண்டியோட்டி, காவலரிடம் பிடிபட்டால் லஞ்சம் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போவது. இது சாதாரண விஷயம் என்றே பலருக்கும் தோன்றும். பொது மன்றத்தில் எழுதும்போதோ பேசும்போதோ இதைத் தவறு என்று முழங்குவோர் கூட நண்பர்களிடம் இதை ஒரு நகைச்சுவை நிகழ்வாகப் பேசுவதும் மிகவும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். செய்த காரியம் குறித்து நாம் குற்றவுணர்வுடன் வெட்குவது ஒரு சில விஷயங்களுக்காக மட்டுமே. அவை நம்மையே நம் மனம் கேவலமாக நடந்து கொண்டாயே என்று கேட்கும் நிலைகளில் மட்டுமே.
எது கேவலம்? பொய் சொல்வது கேவலம், என்று நமக்குத்தெரியும், ஆனாலும் சின்னச்சின்ன பொய்கள் பரவாயில்லை என்று சமாதானப்படுத்திக்கொள்வோம். அதை புரை தீர்க்கும் என்றும் அதனால் நன்மை பயக்கும் என்றும் ஏமாற்ற முயல்வோம்- பிறரை மட்டுமல்ல நம்மையுமே. கேவலம் என்றால் மாட்டிக்கொள்ளாவிட்டாலும் அந்தச்செயல் நம் மதிப்பீட்டில் இழிவானதாக இருக்க வேண்டும். அப்படி இழிசெயல் என்று நாம் கருதுவது நம்மைப் பற்றி நமக்கே இருக்கும் சுயமதிப்பீட்டின் உயர் பண்புகள் உடையும் போதுதான். எது கேவலம் என்பது அவரவர் வைத்துக்கொள்ளும் தனிப்பட்ட கணக்கு. ஆனால் இக்கணக்கு உள்ளே கொஞ்சம் கொஞ்சமாய் நாம் கற்றுக்கொள்ளும் நெறிகுறித்த கருத்துக்களின் கூட்டாகவே அமையும். இக்கருத்துகள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொள்ளப்படுபவை. இவற்றுள் சில சொல்லிக்கொடுக்கப்படும், சில நம் ஆளுமையின் வீச்சிற்கேற்ப உள்ளமையும்.


இப்படிக்கற்றுக்கொள்வது தான் பிற உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது என்பது. குழந்தைப்பருவத்தில் இது உள்பதியவில்லை என்றால் அடிப்பதும் கொல்வதும் எந்த குறுகுறுப்பையும் உருவாக்காது. இப்போது குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. ஊடகங்களின் வளர்ச்சியால் அவர்களுள் படியும் செய்திகளும் அதிகமாக இருக்கிறது. ஒரு சமுதாய அக்கறையின்மையும் இவர்களிடையே உருவாவதும் சாத்தியம்.  நுகர்வுபோதையின் வீச்சான சுயாராதனை இவர்களிடையே சுலபமாக ஒரு குணாதிசயமாக அமையும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் இதைவிட ஆபத்தானது இவர்களிடம் பாலுணர்வு என்பது இயல்பாக உருவாகி வெளிப்படுவதற்குப் பதிலாக ஒரு வெறியாக சமூக நிர்ப்பந்தமாக ஆகிவருவதுதான். இதன் இன்றைய நிலையில் மிகவும்
மோசமான வெளிப்பாடுதான் வன்புணர்ச்சியை ஒரு விளையாட்டாகப் பார்ப்பது.

ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து  தனியான இடம் தேர்ந்தெடுத்து, அவளைப் பல்விதங்களிலும் பலாத்காரம் செய்து வன்புணர்வில் ஈடுபடுவது ஒரு விளையாட்டாய் இப்போது சிறுவர்களிடையே பிரபலமாகி வருகிறதாம். ஒரு பள்ளியில் ஒரு சிறுவன் இதை விளையாடி மற்றவர்களிடம் கூறினால் எல்லாரும் ஒருமுறையாவது இதை ஆடிப்பார்க்கலாமே என்றுதான் நினைப்பார்கள். எந்த விளையாட்டும் சுலபமாக வெறியாக மாறும். இந்த விளையாட்டில் இன்னும் விபரீதம் உண்டு. ஒரு பெண் போகப் பொருளாகவே, வேட்டையாடப்படவேண்டிய ஒரு விலங்காகவே அவர்கள் மனதில் ஒரு கருத்து படியும். பெண்கள் மீது மதிப்பு இருக்காது, அவர்கள் ஒரு விளையாடும் பொருளாகவே தோன்றுவார்கள். ஏற்கனவே விளம்பரங்களின் மூலம் பெண் என்பவள் அழகைப் பயன்படுத்தி ஆண்களைக் கவரவே இருக்கிறாள் எனும் தவறான கருத்தோடு இதுவும் சேர்ந்து ஒரு விகாரமான மனநிலை உருவாகும். வன்புணர்ச்சி என்பது விளையாட்டு என்று மனம் கற்றுக்கொண்டுவிட்டால், பிறகு, அது குறித்து குற்ற உணர்ச்சியும் போய்விடும்.
வியாபார நோக்கு மட்டுமே உடையவர்களும், குரூரத்தை ரசிப்பவர்களும் இத்தகைய விளையாட்டுகளை உருவாகி விற்பதை நம்மால் தடுத்துவிட முடியாது. நம்மால் முடிந்தது எல்லாம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம் குழந்தைகளிடம் சகமனிதநேயம் குறித்தும், வக்கிரம் ஒரு விகாரம் என்பது குறித்தும் கொஞ்சம்கொஞ்சமாய்ப் பேசுவதுதான்; நம் வீட்டின் குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள் என்பது கூடத் தெரிந்துகொள்ளமுடியாத அவசரங்களிலிருந்து நேரத்தை உருவாக்கிக்கொள்வதுதான்.
பேசிக்கொள்வது பல குடும்பங்களில் வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய கலாச்சாரத்தில் இது குறித்துச் சிந்தித்து முதலில் குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் தயக்கமில்லாமல், நடிப்பு இல்லாமல் பேசிக்கொள்வதைப் பழகிக்கொள்வது தான் வரும் தலைமுறையினருக்கு நாம் செய்யக்கூடிய கடமை.