Sunday, March 15, 2020

காத்திருத்தலில் பதினான்கு நாட்கள்
அந்த இரவில் அவர்கள் வந்து சேர இன்னும் பதினான்கு மணி நேரம் இருந்தும் ஒரு பரபரப்பு ஆரம்பித்திருந்தது. அது பயம் அல்ல, அக்கறை. எல்லாமும் சரியாய் இருக்க வேண்டும் யாருக்கும் எந்த விதமான பாதிப்போ சிக்கலோ இருக்கக் கூடாது எனும் அக்கறை. நேரம் ஆக ஆக அந்த அக்கறை பரபரப்பிலிருந்து பதட்டமாய் மாறிக் கொண்டிருந்தது.
தேவையான சில பொருட்கள் மாலை தான் வரும் என்று தெரிந்தும் அடிக்கடி கடியாரம் பார்ப்பது அனிச்சையாய் ஆகியிருந்தது. ஒருவழியாக தேவையான எல்லாமும் சேகரித்து முடித்தபின், புதிய செய்தி ஏதேனும் வந்ததா என்று பார்த்துப் பார்த்து, ஒருவழியாக அந்தப் பின்னிரவில் அவர்களை அழைத்துவரக் கிளம்பினோம்.

அப்போதும்கூட அவர்கள் வெளியே வரும்வரை  ஒரு பதட்டம் இருக்கத்தான் செய்தது. அவர்கள் வெளியே வந்து, நிற்க, வழக்கமாய்க் கட்டியணைத்து வரவேற்காமல், கிருமிநாசினி எடுத்து அவர்களின் பெட்டிகளில் தெளித்துவிட்டு, வண்டியில் ஏற்றி வழியெங்கும் பேசியதெல்லாமே  ஒரே விஷயம் பற்றித்தான் - ‘கரோனா வைரஸ்’.

ஒரு வேளை அவர்களுக்குத் தொற்று இருந்தால் எனும் கேள்வி அச்சத்தையும் அக்கறையையும் அதிகப் படுத்த, அப்படி வரும்போதோ வந்த உடனேயோ காய்ச்சல் இருமல் வந்தால் தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருந்தன. தொற்று வராமல் தடுக்க முகவுறைகள், கையுறைகள், கிருமிநாசினி தெளிக்கத் தேவையானவைகள் எல்லாமும் என்னிடம் இருந்தன.  நான் ஒரு மருத்துவன் என்பதால் நோயின் ஆரம்பக் கட்டத்தில் அதைச் சமாளிக்குமளவு என்னிடம் தேவையானவை இருந்தன.

அவர்கள் வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. வீட்டின் ஒரு பகுதி அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டு விட்டது. என் க்ளினிக் பணியாளர்கள் அவர்களிடமிருந்து பாதுகாப்பாய் ஒத்தி, ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லாமும் வீட்டின் அப்பகுதியிலேயே இருந்தாலும் நான் அவர்களை அவ்வப்போது பார்த்து எதுவும் ஆகிவிடவில்லை என்று உறுதி செய்து கொள்ளும் போதெல்லாம் தொற்று ஏற்படாமல் தகுந்த பாதுகாப்போடு தான் நடந்து கொண்டோம்.

இணையவழியாக வரும் செய்திகள் அவ்வளவு நிம்மதியூட்டுபவையாக இல்லை என்பதோடு நம் மாநிலத்திலும் சென்னையிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை இருக்கிறதா என்பதும் ஓர் உறுத்தலான கேள்வியாகவே இருந்து வருகிறது.

இவர்கள் ஜெர்மனியிலிருந்து விமான நிலையத்தில் வந்திறங்கியபின் காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்து விட்டு இவர்கள் தரும் தகவல்களைத் திரட்டிக்கொண்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். இவர்கள் வந்து சேர்ந்த 24 மணி நேரத்தில் அந்த ஊரிலிருந்து வருபவர்களுக்கு பதினான்கு நாட்கள் தனிமைப் பாதுகாப்பு என்று அரசு அறிவித்திருந்தது- அப்படி எதுவும் அடுத்து வந்தவர்களுக்கு நடக்கவில்லை.

தவிரவும் முகநூலில் காய்ச்சல் என்று போனால் கூட என்னைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை எனும் குமுறல்கள் தென்பட்டன. எல்லா காய்ச்சல்- இருமலையும் சோதிக்கும் கட்டமைப்பும், காலமும் இப்போது கிடையாது. அதிகப்படியான அறிகுறிகள் வரும்போது தான் இப்போதைக்குப் பரிசோதனை செய்து என்ன தொற்று என்பதை உறுதி செய்ய முடியும். ஆகவே அவரவர் தொற்று தவிர்க்கவும்  வெளித்தெரியாத தொற்று இருந்தால் மற்றவர்க்குப் பரவாமல் எச்சரிக்கையாக இருக்கவும் மட்டுமே இப்போதைக்கு முடியும்.

நான் மருத்துவன் என்பதால் என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள முடியும், நோய் என்ன என்று பார்த்து மருந்து தர முடியும், எப்போது பரிசோதனை அவசியம் என்று பார்த்து அதற்கு ஆவன செய்ய முடியும்-  மற்றவர்களுக்கு?

விழிப்புணர்வு மெல்ல வந்து கொண்டிருக்கிறது என்றாலும், அரசு இன்னும் தீவிரமாய் திரையரங்குகள், பள்ளிகள் (10ம் வகுப்பு வரையிலாவது), ‘ஷாப்பிங் மால்கள்’ ஆகியவற்றையாவது மூட வேண்டும். ரயிலில், பஸ்ஸில் வந்து இறங்குவோரையெல்லாம் சோதிப்பது சாத்தியமில்லை என்பதால் மக்கள் அதிகமாய்க் கூடுமிடங்களையாவது மூட வேண்டும். இட்டலி போல், இப்போது அமெரிக்கா போல் வீம்புக்கு ஒன்றும் ஆகாது என்று மெத்தனம் கூடாது. இதையெல்லாம் ஒருவனோ, சிலரோ சொன்னால் போதாது- எல்லாரும் இதனை அமல்படுத்த அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
தொற்று பரவாமல் தடுக்க அரசு அத்தனையும் செய்ய வேண்டும் என்பதோடு, நம் எல்லாருக்கும் அதே பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
என் வீட்டில் முழுதாய் நிம்மதிப் பெருமூச்சு விட இன்னும் பத்து நாட்கள்தான். தமிழ்நாடுக்கு? இந்தியாவுக்கு?