Monday, July 12, 2010

சென்ற பதிவின் மீதி. (சுசப1.2)


முந்தைய பதிவின் தொடர்ச்சி.
 அப்போதும், அதாவது இப்போதும், எனக்கு பேனாக்கள் மீது ஒரு மோகம் உண்டு. மையூற்றிய பேனாக்களில் மட்டுமே எழுத முடியும் அந்தக்காலத்தில், அவளது கல்யாணத்துக்கு எனக்கு என்ன சட்டை வாங்கினார்கள் என்று நினைவில் இல்லை ஆனால் தங்கநிற மூடியுடன் ஒரு பைலட் பேனாவும் ஒரு ஹீரோ பேனாவும் கிடைத்தது நினைவிருக்கிறது. இவை இரண்டிலும் நிறைய மை நிரப்பினால் கூட பரீட்சைக்கு தாங்குமா என்ற பயத்தில் அப்போது பிரபலமாக இருந்த ரைட்டர் பேனாதான் கடைசியில் பள்ளி முடியும்வரை.
பேனாக்களைப் போலவே புத்தகங்கள் மீதும் எனக்கு இன்றும் தீராக்காதல் உண்டு. எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம் என்பதை அப்போது நான் படித்திருக்கவில்லை. அன்று எனக்கு பாரதி தெரியாது, கண்ணதாசன்தான் கவிஞர். அருட்பா, திருப்புகழ், கம்பராமாயணம் என்று சில செய்யுட்கள் மனப்பாடமாக இருந்தும் அர்த்தம் புரியாததால் கவிதைக்கான ஒரு குளிர்ச்சாரலை மனத்துள் தெளிக்கவில்லை.
எழுத்தின் மீதும் எழுதுகோலின் மீதும் ஆசை அதிகரிக்க முக்கியமான காரணம் எனக்கு எந்த விளையாட்டிலும் ஈடுபாடு இல்லை என்பதுதான். அம்மா எனக்கு கிரிக்கெட் மற்றும் சதுரங்கம் ஆகியவற்றின் விதிமுறைகளைக் கற்றுத் தந்ததும் இந்தக் கட்டத்தில்தான் என்றாலும் எங்கள் பள்ளியில் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. பள்ளியில் வருடந்தோறும் மேடை அமைத்து குத்துச்சண்டை போட்டி நடக்கும். வலிக்கும் என்பதைப் பார்த்தாலேயே தெரியும்!, அதில் நான் பார்வையாளனாகக் கூட முன்வரிசையில் இருந்த்ததில்லை. இந்தக் குறையை மறைக்கவோ என்னவோ படிப்பிலேயே கவனம் செலுத்தினேன். உணவு இடைவேளையில்கூட கையில் கதை புத்தகத்தோடு திரிய ஆரம்பித்தது அப்போதுதான்.
புத்தகங்கள் படிக்க மட்டுமல்ல பெருமையுடன் சேர்த்து வைக்கவும் என்பது இந்த வயதில் ஆரம்பித்த ஆசைதான். மூன்றாம் வகுப்பின் முடிவில் முதல் மாணவனாகத் தேர்வு பெற்றதும் என் அம்மா என்ன வேண்டும் என்று கேட்க, புத்தகம் என்று சொல்லி, பள்ளியருக்கே இருந்த கடையில் நான் பெருமையோடும் ஆசையோடும் வாங்கிய முதல் புத்தகம், Wizard of Oz. அந்த வயதுக்கும் வகுப்புக்கும் அப்பாற்பட்ட பல சொற்கள் அதில் இருக்க அப்போதுதான்அகராதியின் மீதும் ஆர்வம் வந்தது. வார்த்தைகளைச் சேகரிக்க மட்டும் செய்யாமல் முடிந்தவரை பயன்படுத்தியும் பார்க்க ஆரம்பித்தது இந்த கட்டம்தான். தவிர்க்க முடியாத Enid Blyton தவிர சிறுவர்களுக்கென்றே சுருக்கமாகவும் எளிமையாகவும் எழுதப்பட்ட பல நூல்களுடன் இந்த வயதில்தான் பரிச்சயம். தமிழ் படிக்க மட்டுமல்ல, அந்தக் கதைகளை அறிமுகம் செய்து கொள்ளவும் ராஜாஜியின் சக்ரவர்த்தி திருமகனும், வியாசர் விருந்தும் மிகவும் உதவின. பள்ளிச்சூழல் காரணமாக தமிழ்ச் செய்யுள் கூட ஆங்கிலத்தில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் பழக்கம் அப்போது ஆரம்பித்தது. கல்கி, விகடன் தயவால் தமிழும் எழுத வந்தாலும் அப்போதெல்லாம் சிந்திப்பதும் சொல்லாடுவதும் ஆங்கிலத்தில்தான். சாமி கும்பிடும்போது கூட ப்ளீஸ் என்றுதான் வரம் கேட்டிருக்கிறேன்.
அந்த வயதுகளில் இருந்தது ஒரு பயம் கலக்காத பக்தி. பயம் இல்லை என்பது போலவே தீவிர ஈர்ப்பும் இல்லாத பக்தி. அந்த பக்தி ஒரு நியமம். காலையில் பள்ளிக்குச் செல்லுமுன் கற்பூரம் காட்டிவிட்டு நெற்றியில் ஒரு திருநீற்றுக் கீற்று இடப்படும். பள்ளி பாரிமுனையில் அரண்மனைக்காரர் தெரு என்று மருவிய ஆர்மேனியன் தெரு. எங்கள் பள்ளியோடு இணைந்ததுதான் புனித அந்தோனியார் ஆலயம். அதனாலேயே பள்ளியில் நுழைந்தவுடன் சர்ச்சுக்குப் போவேன். அங்கே எனக்குப் பிடித்த சகாயமேரி படத்திடமும் பாத்திமா சிலையுடனும் தான் அந்த வயதுக்கான பக்தி-பேரம் ஆரம்பம். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஆலயமணி முழங்கும், அப்படிக் கற்றுக் கொண்டதுதான் சில பிரார்த்தனைகள். பரீட்சைக்கு முன்னாள் கண்டிப்பாகக் கண்டுகொள்ளப்பட வேண்டியவர்களாக பூக்கடை வாசலின் பிள்ளையாரும், சட்டக் கல்லூரி வாசலில் இருந்த பிள்ளையாரும் இருந்தார்கள். எல்லாமே ஒரே பிள்ளையார் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
பக்தி என்பதும் ஒரு கொண்டாட்டமாகவே கண்டு வளர்ந்திருக்கிறேன். பிள்ளையாருக்கும் ஜீஸசுக்கும் பர்த்டே அதனால் விசேஷம், எனக்கு பர்த்டே கொண்டாடுவது போல என்று வளர்ந்த சூழல் அது. கிருஷ்ணன் பர்த்டேவுக்கு வீட்டில் அழகான குட்டிக்குட்டி பாதங்கள் வரையப்பட்டிருக்கும். இது தவிர நவராத்திரி, சிவராத்திரியில் எங்கள் குலதெய்வம் என்று கூறப்பட்ட அங்காளம்மன் கோவிலுக்குப் போவதும் ஒரு கொண்டாட்டம். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அந்த அங்காளம்மன் கோவில் இருக்கும் தெருவின் அகலம் இன்னும் அதேதான் என்றாலும், அந்த வயதில் அது இன்னும் அகலமாக கண்ணுக்குப் பட்டிருந்தது. எல்லாமே அந்த வயதில் வேறு மாதிரிதான் தெரிந்திருக்கின்றன. என் அப்பா உட்பட!

இதுவரை அம்மா அத்தை என்று தான் சொல்லி வந்திருக்கிறேன், அப்பா பற்றி எழுதவில்லை என்று இப்போது தெரிகிறது. அப்பாவுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை என்று அவரைத் தவிர்க்க ஆரம்பித்தது பதினேழு வயதுக்கப்புறம்தான். நெருடலானவற்றை ஒதுக்குவது மனம் தன்வசம் வைத்திருக்கும் தந்திரங்களில் ஒன்று. பத்துவயதாகும் வரை அப்பாவின் அன்பும் தனியாகவே இருந்தது. மாதமொருமுறை மவுண்ட்ரோடில் சினிமா பார்க்கக் கூட்டிப் போவார். நிறைய முறை ஓடியன் தியேட்டரில் ஆங்கிலப் படங்கள்தான். படம் முடிந்து வரும் வழியில் புகாரியில் டீ குடிப்பதும் ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது.  அப்பாவின் மூலம் தான் ஓவியம் பரிச்சயம்.
அப்பா ஒரு சிறந்த ஓவியர். சிறந்த என்பதை சும்மா பெருமைக்காகச் சொல்லவில்லை. சென்னை கவின்கலைக் கல்லூரியில் முதல் மாணவனாகத் தேர்வானவர். ராய்சௌத்ரி என் அப்பாவுக்கு எழுதிய கடிதம் ரொம்ப காலம் என்னிடம் பத்திரமாக இருந்தது. வீட்டில் அப்பா வரைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தச் சிறுவயதில்தான் தூரிகை எப்படிப் பிடிப்பது, கோடுகளை எப்படி வரைவது என்று பார்த்துப் பார்த்துக் கற்றிருக்கிறேன். நானும் ஓர் ஓவியனாக வேண்டும் என்று என்னுள் ஓர் ஆசையும் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் படம் வரைவது பிடிக்காது. இந்த வேலையில் காசு பெரிதாக வராது என்பது அவரது கருத்து. அவர் சொல்லிக் கொடுக்காததாலேயே இன்னும் கூர்மையாகப் படம் வரையப்படுவதை கவனித்து வந்திருக்கிறேன். அவர் நினைத்த மாதிரியில்லாமல் எனக்கு ஓவியம் சோறும் போட்டு சுகமும் தந்தது!
எஃப் வார்த்தை கற்றுக்கொண்டதும் இந்த வயதில்தான். அர்த்தம் புரியாமல் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளவே அது பயன்பட்டது.அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இரண்டு மாணவர்கள் சண்டையிடும் போது கவனிக்காத மாதிரி ஆசிரியர்கள் போய்விடுவதைப் பார்த்திருக்கிறேன். அந்த தைரியத்தில் ஒருவனை பிளடிஃபூல் என்று திட்டியபோது மாட்டிக் கொண்டிருக்கிறேன். என்னை தனியே அழைத்து என் ஆசிரியை லாசரஸ், இந்த வார்த்தை தவறு என்று சொல்லிக் கொடுத்தார். ஜீசஸ் சிலுவையில் குருதி வழிய இருந்தபோது அவரை இப்படிச் சொல்லித்தான் கேலி செய்தார்கள் என்றும் இதைச் சொல்லும்போதெல்லாம் கடவுளைக் கேலி செய்வதாகும் என்று சொல்லிக் கொடுத்தார். அன்றிலிருந்து அந்தப் பதப் பிரயோகம் என்னிடம், சகல வசவுகளையும் சரளமாகப் பேசும் என்னிடமிருந்து வருவதில்லை. எந்த வயதில் எப்படி எதைச் சொல்லிக்கொடுப்பது என்பதெல்லாம் ஆசிரியர்கள் அனைவருக்கும் இயல்பு என்று என்னை நம்ப வைத்தவர்கள் என் பள்ளி ஆசிரியர்கள். கல்லூரிக் காலத்தில்தான் எல்லா ஆசிரியர்களும் அப்படி இல்லை என்பது தெரிந்தது.
பத்து வயதுக்குள் நடந்தவற்றைப் பட்டியலிடத்தான் முடிகிறது. அந்த வாழ்காலத்தை விமர்சனப் பார்வையோடு பார்க்க முடியவில்லை. என் சூழல் எனக்குச் சில சலுகைகளைத் தந்திருந்தது இப்போது புரிகிறது. வீட்டில் பக்தியோடு சாமி கும்பிடுவதும் படம் வரைவதும் இயல்பான வாழ்க்கையின் அங்கங்களாகவே இருந்திருக்கின்றன. மத்தியான வேளைகளில் அத்தையும் அம்மாவும் படுத்துக் கொண்டே புத்தகங்கள் படித்ததைப் பார்த்து, சும்மா இருக்கும்போது படிப்பது தான் யதார்த்தம் என்ற நினைப்பும் வளர்ந்திருக்கிறது.பொதுவாகவே பத்து வயதுக்குள் ஓரளவு வாழ்க்கை மனதுக்குப் பிடிபடும். சுற்றி இருப்பவையே உலகமாகவும் தோன்றும். குளிர்சாதனப் பெட்டி இல்லாத வீடு, அதனால்தான் பானையிலிருந்து குளிர்ந்த நீர் குடிக்கிறோம் என்று தெரியாது, எல்லா வீட்டிலும் பானையில் வைத்துத் தான் தண்ணீர் குடிப்பார்கள் என்பது அனுமானமாக இருந்தது. இப்படியே பல அனுமானங்கள்.வீடு, பள்ளி, பாடம் படிப்பு தவிரவும் வெளியே உலகம் இருக்கிறது, அங்கே வேறு மாதிரி வீடுகள் இருக்கும், வேறு மாதிரி மனிதர்கள் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் மனதில் நெருடாத வாழ்காலம் அது. போய்வர உறவினர்கள் வீடு எதுவுமே இல்லை என்பது அப்போது ஒரு புதிராகக் கூட எனக்குப் பட்டதில்லை. கலப்பு மம் செய்துகொண்ட என் பெற்றோரால் உறவினர்கள் ஒதுங்கிவிட்டார்கள் என்பதையெல்லாம் எனக்கு யாருமே சொல்லவில்லை, அந்தச் சின்னக் குடும்பம் தனக்குத்தானே ஒரு சின்ன உறவு வட்டமாக வாழ்ந்ததும் எனக்கு ஒரு புதிராக இருக்க விடாமல் ஒரு பாதுகாப்பான போதுமென்றான சூழலை உருவாக்கி வைத்திருந்தார்கள். பத்து வயதுக்கப்புறம்தான் பல விஷயங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.அப்புறம்தான் வருத்தம் என்றால் என்ன, என்பதெல்லாம் மனம் உணர ஆரம்பித்தது.

நேற்று மதராசப்பட்டினம் படம் பார்த்தவுடன் இன்று இந்தப் பகுதியயையும் போட்டு விடலாம் என்று தோன்றியது. படம் பார்ப்பது ஒரு தனி விஷயம். அதைப்பற்றி 3000 வார்த்தைகள் எழுதலாம். அந்த வயதில் பாசமாலர் படம் பார்த்து என் அத்தை ஏன் அழுதார் என்று புரியவில்லை, நேற்று படம் பார்க்கும் போது அவ்வப்போது நான் ஏன் புன்னகைத்தேன் என்று புரிகிறது!
இதுவரை எழுதி கைவசம் இருந்தவை தீர்ந்து விட , 
இனி எழுதுவது இன்ஷா அல்லாஹ்

Tuesday, July 6, 2010

சுயசரிதையெனும் பரிசோதனை.1.1

 
வெற்றி பெற்றவனது வாழ்க்கை மட்டுமல்ல, வெற்றியை நோக்கிப் பயணித்தவனது வாழ்க்கை கூட எழுதப்படக்கூடிய கதைதான்.

அவசரமாக இதை எழுதும் கட்டாயத்தில் நான் இல்லை என்பது போலவே அவசியம் இதைப் படிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நீங்களும் இல்லை. இருந்தும் இது எழுதப்படுகிறது, படிக்கப்படும் என்பதும் தெரிகிறது. கதை சொல்வதிலும் கதை கேட்பதிலும் நமக்கெல்லாம் உள்ள இயல்பான ஆர்வம்தான் காரணம். சுயசரிதைகளிலும் கதை உண்டு. பொய் என்ற அர்த்தத்தில் அல்ல, கற்பனையும் கலந்திருக்கும் என்ற அர்த்தத்தில். அன்று நடந்தவற்றை மனம் அப்படியே பதித்து விடுவதில்லை. உணர்ச்சிகளை மிகைப்படுத்தியும் குறைத்தும் பதிவு செய்யும். நிகழ்வுகளுக்கான காரணங்களை மாறிய கண்ணோட்டத்தில் பார்க்கும்.

அப்படி இல்லாமல் ஒருவன் ன் வாழ்க்கையின் கடந்த காலங்களை நினைவுக்குக் கொண்டுவந்து அதை எழுத்தாக்கும் போது, அவனே ஒரு பார்வையாளனாகவும் விமர்சகனாகவும் அந்த நாடகத்தில் பங்கேற்கிறான். அதுபோல ஒரு விலகி நின்று பார்க்கவும், புரிந்து கொள்ளவுமான முயற்சியாகவே இந்த நேர எழுத்து. இன்னும் சில பக்கங்களுக்கப்புறம் இந்நிலை மாறலாம். சுயச்செயல்பாட்டிற்கு புது நியாயங்கள் கண்டுபிடிக்கவும் படலாம். வேறெதுவுமாக அமையாவிட்டாலும் இது சுவையான பொழுதுபோக்கிற்கும், அதே நேரம் சுய பரிசீலனைக்குமாவது உதவும். படிப்பவர் என்னோடு சேர்ந்து காலயந்திரத்தில் பின்னோக்கிப் பயணிக்கவும், சில நிகழ்வுகளையும் சில மனிதர்களையும் தத்தம் வாழ்வின் அனுபவக் கண்ணோட்டத்தில் பார்க்கவும், ரசிக்கவும், சிரிக்கவும், புரிந்து கொள்ளவும் உதவலாம்.

இதை எழுதியதும் இப்போது பதிவிடுவதும் ஒரு பரிசோதனைதான். இதன் நீளம் அதிகம் போலத் தோன்றினாலும் பதிவிடுகிறேன், நானே பத்திரப்படுத்திக்கொள்ளவும்.

முடிவிலிருந்து ஒரு கதையைப் பின்னோக்கி நகர்த்துவது ஒரு நல்ல இலக்கிய உத்தி என்றாலும், ஒருவன் தன் கதையை முடிவிலிருந்து பின்னோக்கிச் சொல்லிக்கொண்டுவர முடியாது. வாழ்வின் மையத்திலிருந்துதான் பின்னோக்கிப் போக முடியும். எனக்கு நான் இன்னும் மீதியிருக்கிறேன் என்பதால், முதலிலிருந்து ஆரம்பிப்பது சௌகரியம்.

ஒரு சித்திரை மாதம், பௌர்ணமி நேரத்தில் அந்த ஆரம்பம். தந்தை நிழற்பட நிபுணராகவும் இருந்ததால், அந்தக்காலகட்டத்தின் பல படங்கள் கைவசம் இருக்கின்றன. நாம் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட இடங்களையும், நபர்களையும் படங்களாகப் பார்க்கும் போது, பொதுவாகப் பழைய நினைவுகள் மனத்துள் மீண்டும் நிழலாடலாம். ஆனால் என் பழையப் படங்களைப் பார்க்கும் போது, நினைவுகள் அனுபவங்களின் மீட்சியாக வரவில்லை. சுமார் நான்கு வயதிலிருந்துதான் ஓரளவு பிசுபிசுப்பாக நினைவில் வருகிறது.

“நான் பிறந்தவுடனே என் வாயிலிருந்து வேதம் ஒலித்தது; என்னை எல்லாரும் வணங்கினார்கள், தொட்டிலிலிருந்தே நான் அனைவரையும் ஆசீர்வதிக்க ஆரம்பித்தேன்” என்றெல்லாம் புளுகி ஒரு சாமியாராகத் தொழில்விருத்தி செய்து கொள்ளும் நிலையில் நான் இல்லாததால், நினைவில் இல்லாததைப் பொய்யாக்கி புனைவாக்கிச் சொல் வேண்டிய அவசியம் இல்லை. நான்கு வயதிலிருந்துதான் ஞாபகங்கள்.

நான்கு வயதானதும் தாத்தா செத்துப் போனார். அவரைப் படுக்க வைத்து எல்லாரும் அழுது கொண்டிருந்தது ஞாபகமாய்த் தோன்றுகிறது. அவரைப் பற்றி மிகுந்த பிரயத்தனத்தோடு யோசித்தால், ஒல்லியாக ஒரு கிழவன் புத்தகம் படித்துக் கொண்டிருப்பது போல ஒரு பிம்பம் வருகிறது. தாத்தாவுடன் கொஞ்சிய விளையாடிய எதுவும் நினைவில் இல்லை. அந்த தாத்தா என் வாழ்வில் முக்கியம். இன்று என் அடையாளமாக நான் சொல்லிக்கொள்வதும் பிறர் அழைப்பதுமான பெயர் அவர் வைத்ததுதானாம். நட்சத்திரப்படி ரு என்ற எழுத்தில் பெயர் வரவேண்டும் என்று எனக்கு இந்தப் பெயர் வைத்தார் என்று கூறுவார்கள். தாகூர் ரசிகையான என் அத்தை ரவீந்த்ரநாத் என்று முன்வைத்த பெயரை தாத்தாதான் நிராகரித்தார் என்றும் என் அத்தை சொல்லியிருக்கிறார்கள். 

அந்த அத்தையும் என் வாழ்வில் மிக முக்கியம். என்னை வளர்ப்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளாதவர், என் அம்மாவை விடவும் என்னிடம் நெருக்கமும் அக்கறையும் கொண்டவர். குழந்தையாகவும் சிறுவனாகவும் இன்னும் இருக்கும் பல நினைவுகளெல்லாம் அத்தையுடன் சேர்ந்தே தோன்றுகின்றன.
அத்தை எனக்கு விகடனை, கல்கியை வாசித்துக் காட்டுவார். அப்போது விகடனில் வெளியான கென்னடியின் கதை (மயன் என்ற பெயரில் மணியன் எழுதிய தொடர்) கேட்டுக் கேட்டு கென்னடியின் ரசிகனாகவே மாறியிருக்கிறேன். அதன் பாதிப்பு எவ்வளவு என்றால் நாற்பத்துநான்காம் வயதில் வாஷிங்டன் போனபோது நான் முதலில் பார்க்க விரும்பிய இடம் ஆர்லிங்டன் கல்லறைதான்!


அம்மாவுக்கும் என் கல்விக்கும் இன்னும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஐந்து வயதில்,  “ம், சொல்லு” என்று என்னை, “சரஸ்வதி நமஸ்துப்யம்” என்று சொல்ல வைத்தவள். வித்யாராம்பம் முன்னாடியே நடந்திருக்கும், ஆனால் ஐந்து வயது சரஸ்வதி பூஜைதான் நினைவுள் நிற்கிறது. அந்த வயதில் பார்த்த ரவிவர்மாவின் சரஸ்வதி படம் –வரும் வருடங்களில் வாயில் வழுக்-நசக் என்று திணிக்கப்பட்ட, பிரசாதம் என்று சொல்லப்பட்ட பாலில் ஊறிய வாழைப்பழத்தின் விரும்பமுடியாத சுவையுடனேதான்  மனத்துள் தங்கியிருந்தது. அந்த பிம்பத்திலிருந்து விடுபட பலப்பல வருடங்கள் தேவைப்பட்டன.

நினைவுகள் வார்த்தைகளாக மட்டுமின்றி நுகர்வுகளாகவும் பிம்பங்களாகவும் சேர்ந்தே ஞாபகங்களாக சேமித்து வைக்கப்படுகின்றன.. தாத்தா என்றால் ஒல்லியான புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஒரு கிழ உருவும், அம்மா என்றால் பாலில் ஊறிய பழத்தை வாயில் திணித்து அதை அப்படியே விழுங்கினால்தான் படிப்பு வரும் என்று ஏமாற்றிய ஒருத்தியாகவும், அத்தை என்றால் மடியில் கிடத்தி கதை சொல்லி தலை கோதிவிட்டுக் கொண்டிருந்த அன்பானவளாகவுமே நினைவுள் எனக்குத் தோன்றுகின்றன.

நினைவுகளில் மேலோங்கி நிற்வை மனிதர்களும், அவர்களின் உருவங்களும் செயல்களும்தான். உற்றுத் தேடி மீட்கப் பார்த்தாலும் தெரிய வருபவை பெயர்களும் பழக்கங்களும்தான். ஆனால், நினைவுமீட்டலில் ஒருவரை இன்றைய தராசில் எடைபோட அந்த காலகட்டத்தின் பொருளாதாரச் சமூகச் சூழலோடும் பொருத்திப் பார்ப்பது அவசியம்.

நான் விவரிக்க விரும்பும் காலகட்டம்- 1955 முதல் 1965 வரை. வீட்டில் பேசியவர்களின் வார்த்தைகள் அப்படியே இல்லை என்றாலும் சில நிகழ்வுகள் என் வீட்டிலும் விமர்சிக்கப்பட்டவை. பின்னாளில் படித்துத் தெரிந்து கொண்டவையும் அன்று காதில் விழுந்தவையும் பல விதங்களில் வேறானவை. ராஜாஜி அற்பமாய் இங்கே பதவி வகித்தது, பெரியார் சாமி சிலையைச் செருப்பால் அடித்தது, அண்ணா அழகாகத் தமிழ் பேசுவது, சைனாக்காரன் நம்முடன் சண்டை போட்டது என்று பல கருத்துக்கள் என் வீட்டார் பேச்சின் மூலமாகவே படிந்தன. சமகால அரசியல் பற்றி மட்டுமல்லாமல், சினிமா, பாட்டு என்று பல விஷயங்களை ஒரு சின்னப் பையனை வைத்துக்கொண்டே விவாதித்த குடும்பம் அது. நடிப்புன்னா சிவாஜி,ல்ல மனுஷன்னா எம்ஜியார், புல்லாங்குழல் என்றால் மாலி, நாதசுரம் என்றால் ராஜரத்தினம் பிள்ளை, வயலின் என்றால் சௌடையா... என்று எனக்குப் புரியாத ரசனைகளும் என் சிந்தையில் பதிவிடப்பட்டன. இன்று, அன்றைய என் வயதையொத்த சிறுவர்களுக்கு இப்படி ஒன்று மிகமிகக் குறைந்து விட்டது. சமகாலச் சமுதாய அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனங்கள்  நிறைய குடும்பங்களில் இன்றைக்கு பேசப்படும் பொருளாக இருப்பதில்லை. இன்றைய காலத்தில் பேசப்படும் பொருள் மட்டுமல்ல பேசுவதே குறைந்து விட்டது.

இவர்களது பேச்சுக்களைத் தவிரவும் வீட்டில் (அன்றைய என் கண்ணுக்கு) பெரிதாய் ஒரு பிலிப்ஸ் ரேடியோ சில விஷயங்களைச் சொல்லியது. “உன்னையறிந்தால்..   எனும் பாட்டு அவ்வப்போது காதில் விழுந்ததாலோ என்னவோ இன்று வரை என் மௌனத்திலும் ரீங்கரிக்கிறது. அதேபோல் எம்ஜியார் ஆணையிட்டபடி நடந்து விட்டால் ஏழைகள் கண்ணீர் விட மாட்டார் என்பது ஒரு நம்பிக்கையாகியது. வளர வளர கருத்து ரீதியாக மட்டுமில்லாமல் ரசனைரீதியாகவும் முரண்கள் புரிபட ஆரம்பித்தது. டிஎம்எஸ் எனக்குப் பிடிக்க ஆரம்பித்து, பீபியெஸ் மற்றும் ஏஎம்ராஜா அத்தைக்கும் அம்மாவுக்கும் பிடித்தது ஏன் என்று புரியாமலேயே ஏன் ரசனைகளை ரகசியமாக்கவும் கற்றுக் கொண்டது அந்த பத்து வருடங்களில்தான். இத்தனைக்கும் வீட்டில் இருந்த கிராமஃபோன் பீபிஸ்ரீநிவாஸ் பாட்டு ரெகார்ட் எதையும் பாடியதில்லை. அவ்வப்போது ஏதோ ஒரு ஸ்னோ விளம்பரத்தில் வரும் ராஜா முகத்தைக் காட்டி இதுதான் நல்ல குரல் என்று என்னை மாற்ற முயன்றதும் நினைவில் லேசாக நிழலாடுகிறது. ரசனைகளிலிருந்து பத்து வயது எட்டுவதற்குள் ரகசியங்களின் அவசியம் எனக்குப் புரிபட ஆரம்பித்தது. பிறர் ரசனைகளை எதிர்க்காமலேயே என் ரசனைகளைச் சேமித்து வைத்துக்கொள்ளவும் என் மனது கற்றுக் கொள்ள ஆரம்பித்தது. ஏமாறுவது குறைந்து ஏமாற்றுவது  பழகுவது எல்லாருக்கும் பத்துவயதிற்குள்தான். திட்டமிட்டுச் சொன்ன முதல் பொய்யும் அந்த வயதிற்குள்தான் நிகழ்ந்திருக்கும்.

அந்த முதல் பத்தாண்டுகளில்தான் பள்ளி மாற்றமும். என் அம்மா தான் படிக்க முடியாததால் என்னை மூன்று வயதிலேயே பள்ளியில் சேர்த்திருக்க வேண்டும். அப்போது அதன் பெயர் பேபி க்ளாஸ்’. குட்ஷெபேர்ட் கான்வென்டில்தான் என் பள்ளி வாழ்க்கை ஆரம்பம். அந்தப் பள்ளியை விட்டு வெளியேறி முப்பதாண்டுகளுக்குப் பின் அங்கேயே சிறப்பு விருந்தினராக ஒரு நிகழ்ச்சிக்குப் போனபோது, பள்ளி மிகவும் மாறி விட்டதைப் பார்த்து மகிழ்வதா வருந்துவதா என்று புரியாத நிலையில் சுற்றிப் பார்த்ததும் நினைவில் இருக்கிறது.

அங்கேதான் முதன்முதலாய் ஒரு சேப்பல் (ஆலயம்) எனக்குப் பரிச்சயம். அங்கே இருந்த மாதா படம் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த மேரியைப்போல் எங்கள் வீட்டு மேரியின் படம் இல்லை. எங்கள் வீட்டுப் பூஜையறையில் வேளாங்கண்ணி மாதா படம் இருக்கும். கற்பூரம் அதற்கும் காட்டப்படும். மதச்சார்பின்மை என்னும் வார்த்தை அறிமுகமாவதற்கு முன்பேயே சென்னை மவுண்ட்ரோடிலுள்ள தர்காவும் அதன் பாத்தியா ஓதிய பூந்தியும், ஜூன் மாதம் எங்கள் வீட்டு வழியே தேர் மாதிரி ஒரு அலங்காரத்தோடு மேரிமாதா ஊர்வலமும் எனக்குப் பரிச்சயம். எல்லாமும் சாமிதான் என்று போதிக்கப்பட்ட காலத்தில் பழநியாண்டி கோலத்தில் இருந்தவனும் ஆறுமுகத்தோடு மயில் மேல் இருந்தவனும் முருகன்தான் என்றாலும் வேறுவேறு என்று நினைத்துக் கொண்டிருந்தவன் நான்.

பள்ளியில் யேசு சிலைதான் பிரதானம் என்றாலும் எனக்கு மேரி படத்துடன்தான் நெருக்கம். அதேபோல் வள்ளலாரின் படமும் பூஜையறையிலிருக்கும், அதன் மீதும் இனம்புரியாத ஒரு நெருக்கம். சாமிகளில் சரஸ்வதியுடன்தான் எனக்கு அன்பு-வெறுப்பு-சுழலுணர்வு. படிக்க அவள் தேவை, ஆனால் அவளைக் கும்பிட்டால் பாலிலூறிய பழத்தை விழுங்கவேண்டிய அசூயையும்  இணைந்தே மனத்துள் போராட்டமாகும். மதம், தெய்வ நம்பிக்கை எல்லாமும் எல்லாருக்கும் அந்த முதல் பத்து வயதுக்குள் ஊட்டப்படும், எனக்கும் அப்படித்தான். “நாமெல்லாம் ஹிண்டூ, அவாளெல்லாம் கிறிஸ்டீன்” என்று தான் எனக்குப் பிரிவினை சொல்லிக் கொடுக்கப்பட்டது, நல்லவேளை அந்த வயதில் ஜாதி போதிக்கப்படவில்லை. என் வீட்டுச் சூழலிலும் அதற்கு எந்தவித சாத்தியமும் இல்லை, நாங்கள் பரம்பரையாகவே கலப்புமணம் செய்துவந்த குடும்பம்!

சாதி-மறுப்பு, கலப்புமணம், மதச்சார்பின்மையைவிடவும் எம்மதமும் சம்மதம் எனும் கோட்பாடு- இவையே நான் வளர்ந்த சூழல். சரஸ்வதீ நமஸ்துப்யம் சொல்லிவிட்டு ஹெய்ல் மேரி சொல்லவும் கற்றுக்கொண்டது இந்தக் காலகட்டத்திற்குப் பின்னர்தான்.

முதல் பள்ளியில்தான் என்னைப்போல பலரும் அவரவர் வீட்டுக்குச் செல்லம் என்று தெரிந்தது. நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், புரியாவிட்டாலும், சைக்கிள் ரிக்ஷா காரை விடக் குறைவு என்று ஒருமாதிரி புலப்பட ஆரம்பித்தது. சில அப்பாக்கள் ஸ்கூட்டரில் வருவார்கள் என் அப்பா சைக்கிளில் வருவார்- வர்க்கபேதம் என்றெல்லாம் அப்போது தெரியாது. எல்லாரும் ஒன்றில்லை என்பது ஒருமாதிரியாகப் புரிந்தது. இந்தப் புரிதலின் கட்டத்தில் ஒரு பொறாமை வந்திருக்க வேண்டும், வரவில்லை. அப்படிப் பொத்திப்பொத்தி வளர்த்தார்கள். நான் பள்ளிக்குக் கொண்டு போகும் பொம்மைகளை ஹெரால்டு காரில் வந்திறங்கும் பிள்ளைகள் கூட என்னிடம் கேட்பார்கள். பணக்காரனுக்குத்தான் பணத்தின் மதிப்பு தெரியும், ஏழைக்கு தேவைக்குமேல் கிடைக்கும் எதையும் செலவிட முடியும் என்பது அப்போது புரியவில்லை. பிற மாணவர்கள் மத்தியில் இருந்த பொம்மைப் பெருமையே போதுமானதாக இருந்தது. இதன் வீச்சு இன்று வேறு விதம். உபரிவருமானத்தில் வெட்டியாய் பொம்மைகள் போல சிலைகள் வாங்குகிறேன், நானே மெச்சிக்கொள்ள.

அந்த குட்ஷெபர்ட் பள்ளியில் சில அனுபவங்கள் அதே வியர்வையோடு, பொறாமையோடு, வருத்தத்தோடு, பெருமையோடு நினைவில் உள்ளன. காமராஜர் வருகிறார் என்று வெயிலில் எங்களை நிற்கவைத்து வாட்டியபோது, என் சோர்வுக்கும் சோகத்துக்கும் ஆறுதல் போலத் தோன்றிய செடியை பார்த்துக் கொண்டிருந்ததால் திட்டு வாங்கி பின், “மிஸ், இது என்ன செடி?” என்று கேட்க, அவளும் அந்தச் செடியின் பெயர் கென்னா என்று சொல்லிக் கொடுத்ததன் விளைவு, இன்றும் யாராவது என்னிடம் செடி வேண்டுமா என்று கேட்டால் முதலில் அந்த மஞ்சள் பூக்கும் கற்றாழையே விருப்பமாக வெளிவருகிறது.

விடுமுறையில் எல்லாரும் அவர்களது நண்பர்கள் வீட்டுக்குப்போய் வரவேண்டும் என்று சொல்லப்பட்டது. எனக்கு இருவரோடு ஒட்டுதல் அதிகம். ஒரு பையன் திமுகவின் முக்கிய புள்ளியின் மகன், இன்னொருவன் அதே கிராமச்சாலையில், (இப்போது அதன் பெயர் வள்ளுவர்கோட்டம் சாலை) ஒரு பேக்கரி வைத்திருந்தவரின் பையன். பேக்கரிக்கு நான் அத்தையுடன் ரிக்ஷாவில் போனதும், அங்கிருந்து இன்னொரு பையன் வீட்டுக்குப் போக அடம் பிடித்ததும், அங்கே எங்களை உள்ளே விடாமல் கதவருகே ஒரு கூர்க்கா டுத்ததும் நினைவுக்கு வருகிறது. உள்ளே போக முடியாவிட்டால் சரி, அங்கே இருந்த நாய் வேண்டும் என்று கேட்டேன். பங்களா வேண்டுமென்று கேட்காமல் நாய் வேண்டுமென்று கேட்டதால் இரண்டு நாளில் எங்கள் வீட்டுக்கு ஒரு அல்சேஷன் குட்டி வந்தது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட போது நான் வைத்த பெயர் பிரபாகர்’- என்னிடம் சண்டைபோட்ட இன்னொரு பையன் பெயர். நாய் ன்ற சொல்லை வசவாகவும் பிரயோகிக்கலாம்  என்று கூடத் தெரியாத வயதில் இது எப்படி என்று இன்னும் யோசித்தாலும் விடையில்லை.

ஒரு வருடத்திற்குப்பின் அந்த நாயைக் காணவில்லை. ஓடிவிட்டது என்று சொன்னார்கள். செத்துக்கூடப் போயிருக்கலாம். நெருக்கமானவர்கள் சாவார்கள் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கலாம். நாய் வேண்டுமென்று அடம் பிடித்த நான் அதைக் காணவில்லை என்று வருத்தப்படவுமில்லை- எனக்கு விளையாட இன்னொரு பொம்மை இருந்தது- என் தம்பி!  அவன் பெயர் அம்பி! அம்பிகைநாதன் எனும் பெயரின் சுருக்கம்! அவனைப் பற்றியும் அவன் வாழ்வையும் சாவையும் பின்னால் பார்க்கலாம். இந்த பாலகாண்டத்தில் லக்ஷ்மணன் முக்கியமில்லை!

அந்தப் பள்ளியின் நினைவாக இரண்டு பெயர்கள் நினைவுக்கு வருகின்றன- ஹனி மிஸ், அப்புறம் ஜெயஸ்ரீ! ஆண் பெயராக மயில்வாகனன் நினைவுக்கு வருகிறது.

ஹனி மிஸ், மூன்றாம் வகுப்பின் ஆசிரியை. அந்த வகுப்பறையின் கூரை ஆஸ்பெஸ்டாஸ், கொதிக்கும். சன்னலுக்கு அப்பால் விளையாடும் இடம். வெய்யில், ஓரத்தில் ஒரு புளியமரம். ஹனி மிஸ் நினைவாக இருப்பது அவளது கைகள்தான். அவள் பேசும்போது என்ன செய்திருப்பேன் தெரியாது, ஒரு வேளை அந்த வெய்யில் எல்லையில் இருந்த புளியமரத்தின் கிளைகள் ஆடுவதைக் கூடப் பார்த்திருக்கலாம். அவள் கரும்பலகையில் எழுதுவது போல ஒரு பிம்பம்தான் தெரிகிறது. கருப்பில் சில வெள்ளைக் கோடுகள், அவளது பழுப்பு கைகள் என்று தான் நினைவு கூறுகிறது.

வண்ணச்சேர்க்கை, வடிவ ஆதாரம் தெரியாத வயதிலும் அப்படி ஒரு பிம்பம் உள்ளே படிந்திருக்கிறது.

ஜெயஸ்ரீ வேறு கதைகளின் ஆரம்பம். பொதுவாகவே பாடம் நடத்தும் மனநிலையில் இல்லாத போது படம் வரையச் சொல்லி ட்ராயிங் க்ளாஸ் நடத்துவது இன்றும் உண்டு என்று நினைக்கிறேன். அப்படி ஒரு ட்ராயிங் க்ளாஸ் நடக்கும் போது எனக்கு வரைய வந்ததால்  ஒரு சிங்கம் வரைந்து விட்டுத் திமிருடன் பார்த்தபோது, பக்கத்து இருக்கையில் ஜெயஸ்ரீ எனக்கு யானை வேண்டும் என்று கேட்க அவள் புத்தகத்தில் வரைந்து கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. இத்தனைக்கும் அப்படி ஒன்றும் அவள் என் நட்புக்குரியவள் அல்ல. பீற்றிக் கொண்டதன் முதல் ஞாபகமாகவே இது இருக்கிறது. இந்தப் பள்ளிப்பழக்கம் கல்லூரியிலும் இருந்தது, அது வேறொரு காண்டம்!

மயில் அப்போது என் உடன்படித்த மாணவன். அவனைப்பற்றிய நினைவில் முக்கியமாக இருப்பது, பரீட்சை எழுத சில உபகரணங்களோடு வருவான். அதில் ஒன்று அந்தக் காலத்தில் பிரபலமான பிளைவுட் வெட்டிய சாமி படம். அதை மேஜையில் வைத்துவிட்டு, கும்பிட்டு விட்டு எழுத ஆரம்பிப்பான். அந்த குட்டி கட் வுட்  முருகனே அவனுக்கு நிறைய மதிப்பெண் வாங்கிக் கொடுப்பதாய் நினைத்துக் கொள்வேன், ஆனாலும் அதேபோல் ஒரு சரஸ்வதி கட் வுட் நான் வைத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, சின்ன சரஸ்வதி பொம்மை ஒன்று பரீட்சையின் போது என் பையில் இருக்கும்- பக்தியை வெளியே காட்டாமல் நடிக்கும் போலி பகுத்தறிவு பற்றி அறியாத வயதில்! அந்தப் பொம்மை (விக்ரகமாகி, மீண்டும் பொம்மையாகி, அவ்வப்போது பூஜிக்கப்படும் பொருளாகி)  இன்றும் என்னிடம் இருக்கிறது!

இவன் பற்றி இன்னொரு வருத்தம் உண்டு, தகுந்த வயதுக்கு முன்னமேயே என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்ட என் அம்மாவால்! குட்ஷெபர்ட் முக்கியமாகப் பெண்கள் பள்ளி. ஐந்தாம் வகுப்பு வரை போனால் போகிறது என்று ஆண் குழந்தைகளையும் அனுமதிப்பார்கள். அது மெட்ரிக்! நான் அடுத்துச் சேர்ந்த பள்ளி ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் பள்ளி- செயிண்ட் மேரீஸ். இங்கே பள்ளியாண்டு ஜனவரியில் ஆரம்பம், குட்ஷெபர்ட் ஜூலையில் ஆரம்பம். ஆறுமாதம் அங்கே நான்காம் வகுப்பு படித்து விட்டு இங்கே ஜனவரியில் மீண்டும் நான்காம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்! மயில் மெட்ரிக் பள்ளி ஒன்றில் தொடர்ந்ததால் பின்னால் மருத்துவக் கல்லூரியில் என்னை விட சீனியராக இருந்தான்.

பள்ளி மாற்றம் என்னைப் பெரிதாய் பாதித்ததாய் எதுவும் நினைவிலில்லை. ஆனால் அதே நேரம் எங்கள் வீட்டில் என் நினைவு தெரிந்து முதல் கல்யாணம்!  என் (இன்னொரு) அத்தையின் மகள் அப்போதெல்லாம் எங்கள் வீட்டிலேயே இருப்பாள். அவள் பெயர் ஜான்சிராணி விஜயலக்ஷ்மி! சுருக்கி ராணி என்றே அழைக்கப்பட்டாள், இளவரசியாகவே நடத்தப்பட்டாள். அவளது திருமணத்தின் போது நகை முதல் புடைவை வரை என் அபிப்ராயம் கேட்கப்பட்டது நினைவிருக்கிறது, ஏற்கப்பட்டதா என்று நினைவில்லை! அபிப்ராயம் கேட்கப்பட்டாலே போதும், அதன்படி நடக்கிறார்களா இல்லையா என்ற கண்காணிப்பு முக்கியமில்லை என்று இருக்கும் இப்போதைய பழக்கம் அப்போதே என்னுள் பதிந்திருக்கலாம்.

அவளது திருமண காலத்தில்தான் கல்கியில் ரா.கணபதி எழுதிய அறிவுக்கனலே அருட்புனலே படித்த ஞாபகம். அவளது திருமணத்திற்கு முன்னர் ஆவலோடு அவளுடன்  சேர்ந்து பார்த்த படம்- காதலிக்க நேரமில்லை. வரலாற்றின் காலநிர்ணயம் அல்ல இது, கேள்விகளை உள்தொக்கியது. அன்று நாங்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, என்ன பார்வை பாடல் வரும்போது, இது ஜோதி வெங்கடாசலம் கார்’, என்று என் அத்தை சொன்னது ஞாபகம் இருக்கிறது! அதில் நிறைய சமூக-அரசியல் பின்னணி இருப்பதை உணர எனக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆயின. 

அந்த ராணியின் கணவரை மட்டும்தான் நான் மாமா என்று அழைத்திருக்கிறேன், அவர்தான் வீட்டுக்குள் குமுதம் கொண்டு வந்தார். கல்கி விகடன் குமுதம் தவிர வீட்டில் எப்படியோ முரசொலியும் கிடக்கும்! அத்தையின் உதவி இல்லாமல் நானே பத்திரிகை படிக்க, மிகமிக மெதுவாக என்றாலும் நானாகக் கற்றுக்கொண்டது இந்தக் கட்டத்தில்தான்.

முதல் பத்து வருடங்கள் எந்தவிதத் தயக்கமுமில்லாமல் சொல்ல முடிகிறது, இதன் பிறகிருக்கும் நினைவுகளைத்தான் சல்லடை போட்டுப் பகிர வேண்டியிருக்கிறது.

அடுத்த பதிவும் இந்த முதல் பத்து வயதுகள் பற்றியதுதான்.

Sunday, July 4, 2010

விவேகம்.“யாரும் யார் மாதிரியும் ஆகி விட முடியாது, ஒருவர் முன்மாதிரி என்றால் அதற்குமுன் அவர்மாதிரி யாருமே இல்லை என்பதால்தான்.”- இது விசாரணை நாடகத்தில் ஒரு வசனம். இந்த வசனத்தை எழுதிய நான் நிறைய பேர் மாதிரி ஆக வேண்டும் என்று சிறு வயதில் நினைத்திருக்கிறேன். எங்கள் வீட்டிற்கு வழக்கமாய் வரும் ரிக்க்ஷாகாரர் போல ஆக வேண்டும் என்பதில் ஆரம்பித்து எம்ஜியார் வரை அந்தக் கற்பனை ஆசை விரிந்து கிடந்தது, அந்த விவரம் புரியா வயதில்தான் மனத்துள் நாயக பிம்பங்கள் விரைவாகவும் பெரிதாகவும் அமையும். அப்படித்தான் பத்து வயதுக்குள் எனக்கு இன்னொரு நாயகன். அவர்மாதிரி ஆகவேண்டும் என்று பத்து வயதில் நான் நினைத்தது புரியாத வயதின் அறியாத நிலை. முப்பது வயதிலும் இதே மாதிரி பல இளைஞர்கள் உளறுவது தான் பரிதாபம். பக்கத்து வீட்டுச் சாதனையாளரைப் போலக்கூட ஆக முடியாதவர்கள் இவரைப் போல் ஆக வேண்டும் என்று இன்னும் ஆசைப்படுகிறார்கள்.

இவரது முகமும் இவரது படங்களில் தொனிக்கும் உடல் மொழியும் வசீகரமானவை. இவர் மீது எனக்கு ஒருவித ஆர்வம் மிகுந்த நேசம் ஏற்பட இவரது புகைப்படங்களே காரணம். 
அவர் எவ்வளவு பெரிய ஞானி என்பது தெரியாமல் “பார்க்க சூப்பரா இருக்கார்” என்றே நான் சிறுவயதிலோல் அவரிடம் மயங்கினேன்.


அவர் சாமியார்தான், எனக்கு இப்போதெல்லாம் சாமியார் என்று சொன்னாலேயே மனத்தைப் பிராண்டுவது போல உள்ளது. அவர் இந்து மதத்தைப் பரப்பவே அமெரிக்கா சென்றார். எனக்கு மாத போதகர்கள் மீது வெறுப்பு உண்டு. ஆனாலும் இந்து சாமியாரான இவர் மீது என் மதிப்பும் மரியாதையும் நெருக்கமாய் உணரும் மனநிலையும் மாறியதே இல்லை. பத்து வயதில் அவர் மீது அவரது இயல்பான பொலிவினால் வந்த ரசிப்பு மெல்ல காலப்போக்கில் அவரைப் படிக்கும் போது வியப்பாகவும் மதிப்பாகவும் மாறியது. இன்றும் இந்த நிலையேதான் நீடிக்கிறது. இன்றும் அவர் என் ஆதர்சங்களில் ஒன்று என்றாலும் அவரைப் போல ஆக நான் முயல்வதுமில்லை விரும்புவதுமில்லை. அவர் மட்டுமே அவரைப்போல் இருக்க முடியும் நகல்கள் சீக்கிரம் சாயம் வெளுத்துச் சீரழிந்து கிடக்கும்.
அவரைப்பற்றி பல்வேறு தவறான கருத்துகள் நிலவுகின்றன. போலி ஆன்மீகமும் அரைகுறை அனுபவமும் கொண்டவர்கள் இவர், ஒருவன் சுயஇன்பம் அனுபவித்தால் தன் சக்தியை இழந்து விடுவான் என்று சொல்லிருப்பதாகச் சொல்வார்கள். அவரது எழுத்துக்கள் பேச்சுகள் எல்லாமும் இன்று கிடைக்கின்றன, எங்கேயும் அவர் இப்படிச் சொன்னதில்லை. இதைக் கூட விடலைகளின் கற்னையாகவும் வியாபாரிகள் பயன்படுத்தும் விற்பனை உத்தி என்றும் சற்று ஒதுக்கலாம். ஆனால் இவர் இந்துமத எழுச்சிக்கு அடையாளமாகக் காட்டப்படுவது தான் கொடுமை.
அவரது காலத்தில் இந்தியா அடிமை நாடு. மக்களிடம் விழிப்புணர்வு உருவாக்க மதத்தையும் பயன்படுத்தினார்- பிறகு வந்த காந்தியைப்போல. ஆனால் இன்று இந்து மதவெறியர்கள் இவரைச் சொந்தம் கொண்டாடி இவர்மூலம் இளைஞர்களை இழுக்கலாம் என்று பார்க்கிறார்கள். இது கொடுமை, ஆபத்தானது. இவரது மார்க்கம் அத்வைதம். கடவுளும் நீயும் வேறல்ல எனும்போது கடவுள் எப்படி வேறுவேறாகக் கிடக்கும்?
இவரைப் பற்றிப் பேசும்போது, பொதுவாக ஒரு விஷயம் முன்வைக்கப்படுவதில்லை. அதுதான் இவரது பொதுவுடைமை சார்ந்த புரட்சி தூண்டும் பார்வை.
இது அவரது எழுத்துகளிலிருந்து தொகுக்கப்பட்ட நூல். இதை வெளியிட்டவர்கள் அவரது ஆசிரமத்தைச் சார்ந்தவர்கள்தான். இன்னூலிலிருந்து சில வரிகள்-

"காலங்காலமாய் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடக்கும் மக்கள்தான் அடுத்து ஒரு புரட்சி செய்யப் போகிறார்கள், அப்போது ஒரு புதிய சமுதாய மார்க்கம் உருவாகும்.
“உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டித்தான் முதலாளித்துவம் மேலோங்குகிறது, அதன் வியாபாரமயமாக்கப்பட்ட மயக்கத்தில்தான் சமூகம் கிடக்கிறது. ஜாதி இருக்கிறது, அதை வைத்து மக்களில் சிலர் ஒடுக்கப்படுகிறார்கள்; அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள்தான் உழைக்கும் வர்க்கம். அவர்களது உழைப்பு இயல்பாக எவ்வித கவனயீர்ப்புக்க்காகவுமன்றி தினசரி நியமம் போல் நடக்கிறது., இந்த உழைப்பின் சுரண்டல் வெகு நாள் நீடிக்காது.
“அடுத்த சமுதாய மாற்றம் ருஷ்யாவிலோ சீனாவிலோ தான் நடக்கும்.
“அதைத்தொடர்ந்து இங்கேயும் நடக்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவும் போராடவும் பழக வேண்டும். ...”
இதை இவர் பேசியது 1900 ஆண்டில். அப்போதே மார்க்ஸ் எழுதிவிட்டாலும், லெனின் முயன்று கொண்டிருந்தாலும் இந்தியாவில் ஒரு சாமியார் இதைக் கணித்தது தான் முக்கியம். இவர் பிறப்பாலும் சூழலாலும் இந்துவாக இருந்தாலும் இவரது கொள்கைகளும் கோட்பாடுகளும் இன்றைய இந்துதுவா அரசியல் போல கோணலானவை அல்ல. வள்ளலாரின் சமரச சன்மார்க்கமும் விவேகானந்தர் தன் குருவிடம் பயின்ற அத்வைத சாரமும் ஒரே மார்க்கத்தின் வேறு கோணங்கள், இவற்றையும் அரசியலாக்கி மதவெறி ஊட்ட முயல்பவர்களிடம் எச்சரிக்கை வேண்டும்.
இன்று அவர் இறந்த நாள். என் ஆன்மீக நாயகனுக்கு ஒரு நமஸ்காரம்.