Sunday, March 15, 2020

காத்திருத்தலில் பதினான்கு நாட்கள்
அந்த இரவில் அவர்கள் வந்து சேர இன்னும் பதினான்கு மணி நேரம் இருந்தும் ஒரு பரபரப்பு ஆரம்பித்திருந்தது. அது பயம் அல்ல, அக்கறை. எல்லாமும் சரியாய் இருக்க வேண்டும் யாருக்கும் எந்த விதமான பாதிப்போ சிக்கலோ இருக்கக் கூடாது எனும் அக்கறை. நேரம் ஆக ஆக அந்த அக்கறை பரபரப்பிலிருந்து பதட்டமாய் மாறிக் கொண்டிருந்தது.
தேவையான சில பொருட்கள் மாலை தான் வரும் என்று தெரிந்தும் அடிக்கடி கடியாரம் பார்ப்பது அனிச்சையாய் ஆகியிருந்தது. ஒருவழியாக தேவையான எல்லாமும் சேகரித்து முடித்தபின், புதிய செய்தி ஏதேனும் வந்ததா என்று பார்த்துப் பார்த்து, ஒருவழியாக அந்தப் பின்னிரவில் அவர்களை அழைத்துவரக் கிளம்பினோம்.

அப்போதும்கூட அவர்கள் வெளியே வரும்வரை  ஒரு பதட்டம் இருக்கத்தான் செய்தது. அவர்கள் வெளியே வந்து, நிற்க, வழக்கமாய்க் கட்டியணைத்து வரவேற்காமல், கிருமிநாசினி எடுத்து அவர்களின் பெட்டிகளில் தெளித்துவிட்டு, வண்டியில் ஏற்றி வழியெங்கும் பேசியதெல்லாமே  ஒரே விஷயம் பற்றித்தான் - ‘கரோனா வைரஸ்’.

ஒரு வேளை அவர்களுக்குத் தொற்று இருந்தால் எனும் கேள்வி அச்சத்தையும் அக்கறையையும் அதிகப் படுத்த, அப்படி வரும்போதோ வந்த உடனேயோ காய்ச்சல் இருமல் வந்தால் தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருந்தன. தொற்று வராமல் தடுக்க முகவுறைகள், கையுறைகள், கிருமிநாசினி தெளிக்கத் தேவையானவைகள் எல்லாமும் என்னிடம் இருந்தன.  நான் ஒரு மருத்துவன் என்பதால் நோயின் ஆரம்பக் கட்டத்தில் அதைச் சமாளிக்குமளவு என்னிடம் தேவையானவை இருந்தன.

அவர்கள் வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. வீட்டின் ஒரு பகுதி அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டு விட்டது. என் க்ளினிக் பணியாளர்கள் அவர்களிடமிருந்து பாதுகாப்பாய் ஒத்தி, ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லாமும் வீட்டின் அப்பகுதியிலேயே இருந்தாலும் நான் அவர்களை அவ்வப்போது பார்த்து எதுவும் ஆகிவிடவில்லை என்று உறுதி செய்து கொள்ளும் போதெல்லாம் தொற்று ஏற்படாமல் தகுந்த பாதுகாப்போடு தான் நடந்து கொண்டோம்.

இணையவழியாக வரும் செய்திகள் அவ்வளவு நிம்மதியூட்டுபவையாக இல்லை என்பதோடு நம் மாநிலத்திலும் சென்னையிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை இருக்கிறதா என்பதும் ஓர் உறுத்தலான கேள்வியாகவே இருந்து வருகிறது.

இவர்கள் ஜெர்மனியிலிருந்து விமான நிலையத்தில் வந்திறங்கியபின் காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்து விட்டு இவர்கள் தரும் தகவல்களைத் திரட்டிக்கொண்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். இவர்கள் வந்து சேர்ந்த 24 மணி நேரத்தில் அந்த ஊரிலிருந்து வருபவர்களுக்கு பதினான்கு நாட்கள் தனிமைப் பாதுகாப்பு என்று அரசு அறிவித்திருந்தது- அப்படி எதுவும் அடுத்து வந்தவர்களுக்கு நடக்கவில்லை.

தவிரவும் முகநூலில் காய்ச்சல் என்று போனால் கூட என்னைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை எனும் குமுறல்கள் தென்பட்டன. எல்லா காய்ச்சல்- இருமலையும் சோதிக்கும் கட்டமைப்பும், காலமும் இப்போது கிடையாது. அதிகப்படியான அறிகுறிகள் வரும்போது தான் இப்போதைக்குப் பரிசோதனை செய்து என்ன தொற்று என்பதை உறுதி செய்ய முடியும். ஆகவே அவரவர் தொற்று தவிர்க்கவும்  வெளித்தெரியாத தொற்று இருந்தால் மற்றவர்க்குப் பரவாமல் எச்சரிக்கையாக இருக்கவும் மட்டுமே இப்போதைக்கு முடியும்.

நான் மருத்துவன் என்பதால் என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள முடியும், நோய் என்ன என்று பார்த்து மருந்து தர முடியும், எப்போது பரிசோதனை அவசியம் என்று பார்த்து அதற்கு ஆவன செய்ய முடியும்-  மற்றவர்களுக்கு?

விழிப்புணர்வு மெல்ல வந்து கொண்டிருக்கிறது என்றாலும், அரசு இன்னும் தீவிரமாய் திரையரங்குகள், பள்ளிகள் (10ம் வகுப்பு வரையிலாவது), ‘ஷாப்பிங் மால்கள்’ ஆகியவற்றையாவது மூட வேண்டும். ரயிலில், பஸ்ஸில் வந்து இறங்குவோரையெல்லாம் சோதிப்பது சாத்தியமில்லை என்பதால் மக்கள் அதிகமாய்க் கூடுமிடங்களையாவது மூட வேண்டும். இட்டலி போல், இப்போது அமெரிக்கா போல் வீம்புக்கு ஒன்றும் ஆகாது என்று மெத்தனம் கூடாது. இதையெல்லாம் ஒருவனோ, சிலரோ சொன்னால் போதாது- எல்லாரும் இதனை அமல்படுத்த அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
தொற்று பரவாமல் தடுக்க அரசு அத்தனையும் செய்ய வேண்டும் என்பதோடு, நம் எல்லாருக்கும் அதே பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
என் வீட்டில் முழுதாய் நிம்மதிப் பெருமூச்சு விட இன்னும் பத்து நாட்கள்தான். தமிழ்நாடுக்கு? இந்தியாவுக்கு?


Thursday, November 28, 2019

பாலா


பாலாசிங் என்னில் ஒரு பகுதியாகவே இருந்தான்.

ஞாநி வீட்டில்தான் அவனை முதலில் பார்த்தேன். 1983க்குப் பின், என் வீட்டில்தான் பல நாட்கள் இருப்பான். இரவுகள் பேச்சில் கழியும். பேச்சுகள் பலவற்றைப் பற்றியும் இருக்கும். வேறு நண்பர்கள் வந்து போவார்கள் ஆனால் இவன் தான் அந்த நாட்களில் நிரந்தரமானவன். வருபவர்கள் என் சக மருத்துவ நண்பர்கள், நாடக/திரைப்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், தோழர்கள், அப்போது ஈழ விடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த EROS தோழர்கள், என்னிடம் படம் வேண்டுமென்று கேட்டு வருபவர்கள்.. என்று பல்வேறு வகைப்பட்டவர்கள் கூடுமிடமாக என் வீடு இருந்ததால், பேச எப்போதும் ஏதாவது புதிது புதிதாக இருந்து வந்தது. 
1984 பவித்ரா நாடகம் ஆரம்பித்தோம்.அதன் பிறகு ஔரங்கஸீப். நாசர் வந்தது அப்போது தான். 
அந்த நாடகம் முடிந்த இரவு, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நடந்து வந்த போது, நாசர் தான், ’ நம்மில் யார் சினிமாவில் நுழைந்தாலும் மற்றவர்களையும் அழைத்துக் கொள்ள வேண்டும்’ என்ற ஒரு தீர்மானத்தை முன்வைத்தான்.இது நடந்தது 1984 அக்டோபர். தன் வாக்கைக் காப்பாற்றி நாசர் பாலாவை தன் படத்திற்கு அழைத்து வந்தது 1994.

நான் மனநல மருத்துவம் பயிலும் போதும், பின் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியில் இருந்த போதும், பாலா தான் என்னை குறும்படம் எடுக்கத் தூண்டினான். நாங்கள் இருவரும் சேர்ந்து மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த குறும்படங்கள்/ ஆவணப்படங்கள் மொத்தம் ஏழு. என் எல்லா முயற்சிகளிலும் அவன் தான் நடிகன். நடிப்பதோடு நிற்காமல் தயாரிப்பையும் நிர்வகித்தவன். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆரம்பித்த காலம் அது. யார் பார்ப்பார்கள், என்ன பெயர் வரும், ஏதாவது காசு கிடைக்குமா என்று எவ்வித யோசனையும் இன்றி தொடர்ந்து செயல்பட்ட காலம் அது.
அதன் பின் நான் மருத்துவமனை ஆரம்பித்தேன், அவன் திருமணம் செய்து கொண்டு ஊருக்கே போய்விட்டான்.. நாசர் அவனை மீண்டும் ஊரிலிருந்து கூட்டி வந்து திரைத்துறையில் நுழைக்கும் வரை சில ஆண்டுகள் நாங்கள் சந்திக்கவில்லை. அவதாரம் வந்தபின் முன் போல் அடிக்கடி சந்திப்பு இருந்தது. ஆனால் நாங்கள் இருவரும் அவ்வப்போது முன்போல் இரவுகளில் செய்யலாமா என்று யோசித்தோமே தவிர எதுவும் செய்யவில்லை. சென்னை தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் ஒன்று 96ல் செய்தோம் அதன்பின் பேசிய எல்லாமும் பேச்சாகவே நின்று விட்டன.

அவன் திருமண நிச்சயதார்த்தம், திருமணம், கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழா, ஒரு மாதத்திற்கு முன் அவன் மகளின் மணவிழா என்று அவன் ஊருக்கும் வீட்டுக்கும் நான்கு முறை போன நான், இன்று 5வது முறை கலியக்காவிளை செல்லவில்லை. அந்த மண்ணில் அவனை இறக்குவதைப் பார்க்குமளவு எனக்கு மனத்தில் தெம்பு இல்லை.
என் எல்லா சிக்கல்களும் , பிரச்சினைகளும், கோபங்களும் அவன் தலையீட்டால் தான் தீர்ந்திருந்தன. என் சின்னச்சின்ன வெற்றிகளும் கொண்டாட்டங்களும் அவன் பங்கேற்பில்லாமல் நடந்ததில்லை. இனி என் எதிலும் அவன் இருக்கப்போவதில்லை. நினைவை விட்டும் போகப்போவதில்லை. என்னில் ஒரு பகுதி இன்றோடு தொலைந்து விட்டது.

Thursday, August 22, 2019

சகுந்தலை

சகுந்தலை என்று தமிழிலும் நன்கு அறியப்பட்ட அழகிக்கு ஒரே கதை என்பதே நம்மிடம் பரவியுள்ள கதை. 
அவளுக்கு குறைந்தபட்சம் இரண்டு கதைகள் உண்டு. ஒன்று மகாபாரதத்தில் வியாசர் எழுதியது, 
இரண்டாவது பிரபலமாகி உண்மை என்றே அங்கீகாரம் பெற்ற காளிதாசன் எழுதியது.

அடிப்படை கதை ஒன்றுதான். அவள் காதலிக்கப்பட்டாள், கர்ப்பமுற்றாள், அவன் ஓடிவிட்டான், குழந்தையுடன் அவள் அவனை எதிர்கொள்ள அவன் மறுக்கிறான், இவளது நியாயம் வெல்கிறது. இவ்வளவுதான் சகுந்தலையின் கதை. 

இது மகாபாரத காலமான பொ.யு.மு 400லிருந்து காளிதாசன் காலமான பொ.யு 400ல் வேறு வடிவாய், வேறு விதமாய் மாறியது, காலநீட்சியில் ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களால் என்பது Romila Thappar எழுதிய நூலின் சாரம்.

மகாபாரத சகுந்தலை, துஷ்யந்தனிடம் ஏமாறவில்லை. தெளிவாகவே தன்னைப் பற்றி விவரித்து, தன் காதலை நிச்சயம் தன் வளர்ப்பு தந்தை ஏற்பார் என்று சொல்லி, மணமுறைகளில் ஒன்றான கந்தர்வ விவாகத்துக்கு மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்கிறாள்- ஒரு நிபந்தனையுடன். தனக்கு மகன் பிறந்தால் அவன் அரசனாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவளது ஒரே நிபந்தனை. துஷ்யந்தன் வருகிறேன் என்று சொல்லி காணாது போனபின், குழந்தை பெற்று வளர்த்து, மக்கள் முன் காட்டலாம் எனும் காலகட்டம் வந்தபின் தான் அரசவை செல்கிறாள். அவன் அவளைத் தெரியாது என்று ஏய்த்ததும் நிதானமாய் தன் சினத்தை வெளிப்படுத்தி விவாதிக்கிறாள். அசரீரி அவளுக்கு சாட்சி சொல்லி துஷ்யந்தன் தன் மகனை ஏற்றபின் வெளியேறுகிறாள். கண்ணீரை விடவும் தெளிவான தார்மிகச் சினம், வஞ்சிக்கப்பட்ட வருத்தத்தைவிட தனக்களிக்கப்பட்ட வாக்கு நிறைவேற்றப்பட வேண்டும் எனும் தீர்மான தைரியம்- இதுவே மகாபாரத சகுந்தலை.

காளிதாசன் சகுந்தலை அழகிய பேதை, வஞ்சிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய பெண், கண்ணீரும் கவலையுமாய் கணவனை நாடும் அபலை. மகாகவியின் துஷ்யந்தனும் நாடகக்காவியத்தில் கெட்டவன் அல்ல, அவளை ஏமாற்ற நினைக்கவும் இல்லை. விதியின் சாபத்தால் மறதி பீடிக்க அவளுடன் இருந்ததை மறந்திருக்கிறான். மோதிரம், மீன் வயிறு எல்லாம் காளிதாசனின் கவிதா அத்துமீறல் நியாயம். கவியின் காலத்தில் பெண் அவ்வளவு வீரமாய் தன் நியாயத்தைப் பேச முடியாது. ராஜாவையும் வில்லனாகக் காட்ட முடியாது எனும் நிலை.

ஆரம்பகாலத்தில் இருந்த பெண்ணின் வீர்யம், சுயமதிப்பீடு கலப்போக்கில் ஆணாதிக்கப் பாதிப்பினால் கற்பு, அச்சம், மடம், நாணம், அவையடக்கம், பெண்மைக்க்கேயுரிய பொறுமை, சகிப்புத்தன்மை என்றெல்லாம் மாறியது/ மாற்றிக் காட்டப்பட்டது. டாகூர் கூட இதை முன்னிறுத்தி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ரொமிலா தாப்பர் இன்னும் ஆழ ஆய்ந்து இதை எழுதிய நூல்-  Sakuntala:Texts,Readings,Histories

இரண்டாம் சகுந்தலை கதை காலத்திற்கேற்ப பெண் நிலையை வடிவமைத்ததால் மட்டுமே பிரபலமாகிவிடவில்லை. காளிதாசனின் கவிநேர்த்தி, கதைக்கோப்பு, நாடகமாக்கலின் நுட்பம் தான் அவனது நாடகத்தை உலகெங்கும் கொண்டாட வைத்தது.

Thursday, August 9, 2018

கலைஞர்


அற்பர்களின் அரசு தன் இயல்பான கீழ்மையை வெளிக்காட்டாதிருந்தால், எத்தனையோ கட்டங்களில் முகம் சுளித்து  கவனித்த அந்த மனிதனின் மேல் இத்தனை கரிசனமும் அன்பும் பொங்கியிருக்காது.

மூப்பின் தவிர்க்க முடியாத இறுதி கட்ட நோயின் வழி தான் ஏற்பட்டது அந்த மரணம். சதி செய்து யாரும் கொலை செய்து விடவில்லை.  பரிதாபப்படும் நிலையிலும் இருக்கவில்லை அவர் வாழ்க்கை. அரசியல் சாதுர்யம் என்று போற்றப்படும் சமரசங்களில்லாமல் இல்லை அவரது பொதுவாழ்வு. சிலரை அவசியமில்லாமல் ஏற்றிவைத்தும், சிலரை காழ்ப்புடன் ஒதுக்கி வைத்தும் தான் நடந்து கொண்டது அவரது மனம். எத்தனையோ திட்டங்கள் சிறப்பாகத் தீட்டினார்; அதில் பயனடைந்தது மக்கள் மட்டுமல்ல அவரைச் சார்ந்தவர்களும் எனும் கறையும் படிந்தது தான் அவரது ஆட்சி.  நாவன்மையால் எதிர்கேள்விகளை திசைதிருப்பி மௌனிக்க வைக்கும் ஆற்றலால் பல கேள்விகளை மறக்கடிக்கும் சிறப்பு உண்டென்றாலும், கேள்விகளெழுப்ப அவசியமில்லாத பொது வாழ்வு அவர் வாழவில்லை. இவ்வளவு நெடிய வாழ்பயணத்தில் அவர் எளிதாய் அடைந்த சிகரங்கள் அதிகம், ஆனால் சறுக்கல்களும் நினைவை விட்டுப் போய் விடவில்லை. ஆனாலும், மரணச்செய்தி கேட்டவுடன் மனத்துள் ஓர் அசாதாரண திகைப்பும் தவிப்பு ஏற்படத்தான் செய்தது.
மரணித்தவரின் மாண்புகளை மட்டுமே பேசும் மரபினால் வரவில்லை அவர் மீது மரியாதை. உழைப்பு, அறிவுத்திறன் ஆகியவற்றின் முன்னணி உதாரணம் அவர். 
காழ்ப்புணர்ச்சியில் அவர் செய்ததையெல்லம் விட்டு விட்டு தவறிய தருணங்களைப் பட்டியலிடும் வன்மம் நிறை மனிதர்களால் வரவில்லை ஒரு திடீர் பாசம்.
மத-இன வெறியுடன் அவரை விமர்சிக்கும் கீழ் குணம் படைத்தோரால் உருவாகவில்லை மனத்துள் அவர் குறித்த அன்பு.
குறைகளையும் குற்றங்களையும் அறிந்தே அவர் மீது மரியாதை வந்து நின்றது. நெடிய வாழ்வின் அரிய சாதனைகளுக்காக வரவில்லை இந்த மரியாதை. ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் தன் பால் கவனம் கொள்ளச்செய்த அவரது மரணத்தினால் வந்தது இந்த மாசற்ற மரியாதை.

எல்லாரையும் போலத்தான் மதியம் ஸ்டாலின் முதலமைச்சரை சந்தித்தவுடனேயே மறுநாள் குறித்த கவலையுடன் அவசியமான பொருட்களை வாங்கிக்கொண்டேன். மாலை வந்த மரணச் செய்தியும் எதிர்பார்த்த ஒன்றென்பதால் அதிர்ச்சியோ அழுகையோ வரவழைக்கவில்லை. ஊடகங்களில் பெருமைகள் ஒளிபரப்பானபோதும் பெரிதாய் மனத்துள் பாதிப்பு வரவில்லை. எல்லாருமே பிடித்தோ பிடிக்காமலோ தீர்மானித்து வைத்திருந்த அந்த மனிதரின் இறுதி இடம் குறித்த சர்ச்சை எழுந்த போது தான் உள்ளே எரிச்சல் ஆரம்பித்தது. சமூகவலைத்தளங்களில் கேவலமானவர்களில் கொக்கரிப்பும் எரிச்சலை கோபமாக்கியது. அந்தக் கோபம் அவரைப் பற்றி இன்னும் சிந்திக்க வைத்தது, அதனால் கோபம் அதிகமாகியது.

மறுநாள் புதையிடம் வேண்டி தொடுக்கப்பட்ட வழக்கு குறித்த செய்திகளைப் பார்க்கையில் கோபம் ஆத்திரமாகவே மாறியது. அந்த ஆத்திரம் அவர்மீது அன்பு கூட்டவே வைத்தது. சட்டச்சிக்கல் என்ற காரணத்தால் மறுக்கப்பட்ட இடம் எனும் சாக்கு உடைபட்டதும், வெவ்வேறு காரணங்களை உற்பத்தி செய்து வாதிட்ட அரசின் அற்பத்தனம் அவர்மீது மரியாதையும் அன்பும் அதிகரிக்க வைத்தது.

எத்தனை பெரிய கூட்டம் முகத்தைக் கூட பார்க்க முடியாது என்று தெரிந்து அவர் உடல் இருந்த இடம் தேடி வந்தது என்பதைப் பார்க்கப் பார்க்க மரியாதையோடு உள்ளுக்குள் ஏற்பட்ட பற்றினால் பெருமிதமும் உருவாகியது.
நண்பர்கள், தொண்டர்கள், அவரால் பயனடைந்தவர்கள்- அடையப்போகிறவர்கள் மட்டுமல்லாமல் எந்த லாபமும் எதிர்பாராமல் திரண்ட கூட்டம் அவரது இறுதி வெற்றி.

இவ்வளவு வன்மத்துடன் வஞ்சக எதிரிகளை உருவாக்கியதும் அவரது வெற்றிதான். வீரனுக்கும் அறிவாளிக்கும்தான் எதிரிகள் அதிகம். அப்படி ஒரு கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் அந்த அற்பர்களை வெளிப்படுத்தியதும் அவரது வெற்றிதான்.

ஒரு சாதனையாளனை கடந்த கசப்புகளை மீறி கரிசனத்தோடு வழியனுப்பி வைக்கும் மனநிலை தான் அவர் ஒரு வசனத்தில் கேட்ட கேள்விக்கு பதில்- அந்த இறுதி நேரங்களில், அம்பாள் பேசினாள், அவரை மனத்தில் உயர்த்தி.


Sunday, July 22, 2018

அவள் கோவில் பற்றி…

முன்பொருமுறை நான் எழுதியது-
‘கூத்தனூர் கோயிலில் மாத்திரம் இருப்பளோ
 வாக்திறம் நல்கும் என் தாய்”

இதில் சில கேள்விகள் எனக்கு இப்போது, சமீபமாய் வெடித்திருக்கும் ஒரு சர்ச்சையை நோக்கும் போது ( இதை முகநூலில்தான் நோக்க முடிகிறது, பல சர்ச்சைகளைப்போல். தெருவில் நடக்கையில், பல்விதங்களில் பயணிக்கையில் எந்த சர்ச்சையும் தெரிவதுமில்லை, செவிபடுவதுமில்லை. மக்களுக்கு இதற்கெல்லாம் அவகாசம் இல்லை).

எனக்குத் தோன்றிய கேள்விகள்- வாக்திறம் அவள் தருகிறாளா? அவள் தாயா? அவள் கோவில் என்பது அவள் உறைவிடமா?... இன்னும் கூட கேள்விகள் எழுகின்றன. முதலில் அவள் வாக்திறம் தருகிறாளா என்றால் தெரியவில்லை. எனக்குத் தந்தது போல் இன்னொருவர்க்கும், ஒரு மேதைக்குத் தந்தது போல் எனக்கும் வாக்திறம் வாய்ப்பதில்லை. அவள் தருகிறாள் என்றால் எல்லார்க்கும் ஒரே விதமாய் அல்லவா தந்திருக்க வேண்டும்?  அவள் தாயெனில் எல்லா பிள்ளைகளையும் ஒன்றாயல்லவா பாவிக்க வேண்டும்? அழுத பிள்ளைக்கே அமுது என்பது போல் பூஜிப்பவனுக்கே வரமெனில் அவள் எப்படி தாய்?  அவள் கடவுள் எனில் கோவிலில் மாத்திரம் இருப்பது எப்படி சாத்தியம்?
அவளை ஒரு கற்சிலையாய் கண்டிருந்தால்தான் எனக்கு இப்படி கேள்விகள் தோன்றலாம். என்னைப் பொருத்தவரை அவள் அழகுச்சிலை மீறிய அகண்டம். என் சௌகரியத்துக்காகவே அந்த எழிற்சிலை. என் கண்பார்த்த கண்ணிரண்டும் கண்ணிமைக்க மறுப்பதனால் நான் கண்ணுறங்கும் வேளையிலும் அவள் கண் கனவில் வருகிறது. அது அவள் கண் தானா? அவளுக்கு இருப்பது கண் எனும் உறுப்பா? பார்வையில் படுவதை கண்ணில் படுவதாய் சொல்லிப் பழகிவிட்டது போல், அவள் பார்வை எனும் ப்ரக்ஞையை கண் எனும் உறுப்பாய் மனோவசதி மாற்றி நினைத்துக்கொள்கிறது.
கோவிலில் அவள் இருப்பதாய் உருவாக்கிவைத்துள்ள பிரமை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதால் அதை மனம் சந்தேகங்களைப் புறந்தள்ளி ஏற்றுக்கொள்ளவே விரும்புகிறது. 
கோவில் ஒரு பயனுள்ள இடம். வேலையில்லா மத்யானத்தில் ஓய்வாய் அரட்டை அடிக்க, பழகியவர்களை சந்திக்க, புதியவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ள, அமைதியாய் உட்கார்ந்து யோசிக்க, இல்லத்து இறுக்கத்திலிருந்து தற்காலிகமாய் தப்பிக்க, நடை பயில, இளைப்பாற, சிற்ப நுணுக்கங்கள் ரசிக்க, கல்வெட்டுகளில் சரித்திரம் தேட, நாணமின்றி வேதனையை கண்ணீராய் வெளிப்படுத்த, பயத்துடன் வேண்டிக்கொள்ள, ப்ராத்தனை செய்து கொண்டதால் தெம்பு பெற என்று கோவில் பலவிதங்களில் பலருக்குப் பயன்படுகிறது, இதில் பக்தி என்பது உபரி மட்டுமே. 
இதே பயன்களை வெவ்வேறு இடங்களிலும் பெற முடியுமெனில் அவையும் கோவில்களா? கோவில் என்பது தெய்வநம்பிக்கை சார்ந்தது.

தெய்வம் என்பதன் புரிதலைப் பொருத்தே கோவில் என்பதன் புரிதல் அமையும். கடவுளை ஒரு கற்சிலைக்குள் அடைத்து, குறுக்கிப் பார்த்தால் கோவில் கடவுளின் வீடு மட்டுமே. அந்த வீடு கடவுளுக்குச் சொந்தம் என்பதால் நாம் அங்கே அந்நியர்கள் தான். ஆகவே இன்னொருவர் வீட்டுக்குத் தர வேண்டிய நாகரிகம் சார்ந்த மரியாதையை நாம் அங்கே தரத்தான் வேண்டும். பிடிக்காதவர் வீட்டுக்குப் போகாமல் இருப்பது போல கோவிலையும் கடவுள் வீடென்று நினைத்தால் தவிர்க்கலாம்.

கடவுளுக்கு எதற்கு வீடு என்று கோவிலை நகைப்புடன் வினவுவது நாத்திகம் என்பதைவிடவும் ஆழமான ஆன்மிகமாகும். கடவுள் எனும் யாதுமாகியதற்கு  ஒரு நிலம் ஒரு கட்டிடம் மட்டுமே சொந்தம் என்பது நிச்சயம் சரியில்லைதான். ஆனால், அந்த இடம் ஒரு சாராரின் சொந்தம். அதில் அவர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு கட்டிடம் எழுப்பி, தங்களுக்கு விருப்பமான ஒரு பொம்மையை வைத்து மகிழ்வதை சரியில்லை என்று சொல்ல முடியாது. உடனே சிலருக்கு மட்டும் சில சலுகைகள், சிலருக்கு மட்டும் சில தடைகள் ஏன் எனும் கேள்வி வருகிறது. அது அவர்கள் வீடு, ஆகவே அங்கே அவர்கள் தங்கள் சட்டங்களை அமல்படுத்தலாம். அவர்களது செயல்பாடுகள் சமூகத்தின் நியாயங்களை மீறும்போது யாரும் எதிர்க்கலாம். எந்த வீட்டில் ஒரு கொலை/ அடிதடி நடந்தாலும் யாரும் உள்ளே சென்று எதிர்க்கலாம் எனும் நியாயம் இதில் பொருந்தும். 
நீ நாத்திகன் என் கோவில் விஷயத்தில் நீ நுழையாதே என்று ஒரு சமூக அநீதி ஒரு கோவிலில் நடக்கும் போது யாரும் தடுக்க முடியாது.
எது சமூக நீதி? அனைவரும் சமம் என்பதே என்னைப்பொருத்த சமூக நீதி. சில கட்டங்களில் இதில் விலக்குகள் இருக்கலாம்- கற்கும் போது மாணவனும் ஆசிரியரும் சமமில்லதான்; ஆனால் பாடம் முடிந்த பின் சமம் தான். 
என்றோ எவரோ எவர் வசதிக்காகவோ சுயலாபத்திற்காகவோ எழுதி வைத்தவற்றை இன்னும் மாற்றம் அடைய முடியாத அடிப்படை அறிவியல் சூத்திரம் போல் பயன்படுத்தி, சிலரை பாகுபடுத்தி, பிற்படுத்தி, சில நேரங்களில் அவமானப்படுத்தி நடப்பது தவறு. அது கோவிலுக்குள்ளானாலும் சுடுகாட்டில் என்றாலு தவறுதான்.


எழுத எழுத என்னென்னவோ வந்து கொண்டிருக்கிறது. இதை எழுத ஆரம்பித்தது, கோவிலுக்குள் மாதவிலக்குடன் பெண்கள் வரலாமா எனும் சமீபத்திய சர்ச்சையும் அது தொடர்பாய் நடக்கும் வாதங்களையும் விதண்டாவாதங்களையும் படித்ததால் தான்.

சில விஷயங்களை பலர் புரிந்து கொள்ளாமல் பின்பற்றுவதன் கோளாறு இதில் அப்பட்டமாய்த் தெரிகிறது. மாதவிலக்கு என்பது பெண்களுக்கு ஒரு பருவத்தில் ஏற்படும் இயற்கையான உடலியக்கம். இதில் ‘தோஷம்’, ‘தீட்டு’ என்றெல்லாம் சொல்வதும் அந்நேரம் அவர்களை ஒதுக்குவதும் புரிதலில்லாத பழமை சார்ந்த மூட நம்பிக்கைதான்.
மலம் கழித்த பின் பின்னங்கால கழுவிவிட்டு வரவேண்டும் என்பது நம் பழங்கலாச்சார விதி. அப்போது உட்கார்ந்து மலம் கழித்தல் மலச்சிதறல் காலில் படுமே என்று உருவாக்கப்பட்ட விதி. இப்போதும் ‘வெஸ்டர்ன்’ கழிப்பறையில் அதைப் பின்பற்றுவது வேடிக்கையான வழக்கம். அதிலும் ஈரமான/ஈரமில்லாத இடங்களாக கழிப்பறையும் குளியலறையும் இருக்கும் இடங்களிலும் இதைப் பின்பற்றுவது மடத்தனம் தான். மாதவிலக்கின் போது கோவில் வரக்கூடாது என்பதும் இப்படித்தான்.
அக்ரகாரத்திலிருந்து அனைத்தையும் கடைபிடித்தவன் அமெரிக்கா போனதும் ( அப்படி போவதே அனாச்சாரம்) கழிப்பறையில் காகிதம் பயன்படுத்துவதில் காட்டாத ஆச்சாரத்தை மனைவி மாதவிலக்கின் போது சமையலறைக்குள் போகக்கூடாது என்று சொல்வது போலத்தான் மாதவிலக்கின் போது பெண்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பதும்.  கோவிலில் மின்விளக்குகள், மைக், எக்ஸ்ஹாஸ்ட்,குளிர்சாதனம் எல்லாம் நுழைந்தால் வராத தீட்டு, மாதவிலக்கினால் பெண்ணுக்கு எப்படி வந்து விடும்?

இங்கே சர்ச்சை இன்னொரு கோணத்தில் விதண்டாவாதமாகி விட்டது. ஒரு ‘கவிதை’ கோவிலில் பெண் தெய்வங்களுக்கு  மாதவிலக்கு இல்லையா, தீட்டு இல்லையா எனும் பொருளில் எழுதப்பட, அதை ஒரு தொலைகாட்சியில் ‘நெறியாளர்’ சொல்லிவிட,  ஆஹா என எழுந்தது முகநூலில் கோஷ- பூசல்! கவிதை என்பதைப் பற்றி இப்பொதைக்கு விட்டு விட்டு இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்போம். சிந்திப்போம் என்றல்லாமல் யோசிப்போம் என்றேதான் எழுதுகிறேன், அறிந்தவர் அறிவாராக.
கோவில் புனிதம் என்பதை மறுத்து, கோவிலிலினுள்ள கடவுள் சிலைகளை சிற்பமாகவோ பொம்மையாகவோ பாவித்து, இறை நம்பிக்கை இல்லாத போது, இப்படி எழுதுவதென்பது ஒரு நகைச்சுவைக்கு உதவுமே தவிர துல்லியமான வாதத்திற்கோ விவாதத்திற்கோ பயன்படாது. இப்படி எழுதுவதை அப்படியே வாதமாக எழுத்துக்கொண்டால் எழுதியவருக்கு கடவுள் உண்டு, அது பெண் வடிவில் உண்டு, அது கோவிலில் இருக்கிறது எனும் கருத்தில் உடன்பாடு இருப்பதாகவே படும்.

ஒரு விஷயத்தை எதிர்க்க  கேலியும் கிண்டலும் ஒருவித ஆயுதம் என்றாலும், அதிலும் உள்ளார்ந்த சமரசம் செய்துகொள்ளும் தொனி வந்து விடும். ஜெயிக்க வேண்டுமென்றால், சண்டையில் கோபமும் வேண்டும், அதைவிட நேர்மையும் வேண்டும்.

அவள் கோவிலுறை தெய்வம், அதுவும் அந்த கற்சிலை உறையும் கடவுள் என்று ஏற்றால் தான் இந்த விதண்டாவாதம். 
பேச வேண்டியதும் மாற்ற வேண்டியதும் மூட நம்பிக்கைகளைத்தான். அது சீரிய சமூக அறிவியல் அடிப்படையிலான வாதங்களினால் தான் சாத்தியம்.
நான் முதலில் எழுத ஆரம்பித்ததைப் போல்- கூத்தனூர் கோவிலில் மாத்திரம் இருப்பளோ வாக்திறம் நல்கும் என் தாய். அந்த என்றல்லாமல் எந்த ஒரு தேவி சிலை பார்த்தாலும், என் அறிவில் சிலை தான் அது. உணர்வில் என் தேவியாய் அவள். உள்ளதிர் ப்ரக்ஞையில் காதலுடன்  வெடிக்கும் பெருஞ்சக்தி.


Saturday, July 14, 2018

ஜூலை 14, 2018உளமார நேசிக்கும் என் மருத்துவப்பணி இன்றுடன் நாற்பதாவது ஆண்டில் அடியெடுக்கிறது.
ஆரம்பத்தில், பொது மருத்துவம் பார்த்திருந்த அந்த காலகட்டத்தில் நிறைய நிறைவான மகிழ்ச்சி மிகுந்த தருணங்கள்.  சின்ன க்ளினிக்கில்  என்னைப் பார்க்க மழையில் குடை பிடித்து வெளியே காத்திருந்த மக்களைப் பார்த்த போது, காசு இல்லை என்று கவலைப்படாமல் நான் பார்த்துக்கொள்வேன் என்று தைரியமாக ஏழைகள் என்னை அணுகியபோது, , என் சின்ன க்ளினிக்கில் பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை கையிலெடுத்து அதன் முதல் குரல் கேட்ட போது, சிக்கலான மருத்துவ சிகிச்சைக்குப் பின் நோயுற்றவர் நலம் பெற்று புன்னகைத்த போது, ஏழை எளிய மக்கள் வாழும் அப்பகுதியில் கல்யாணம், காது குத்தல், குழந்தைகளின் பிறந்த நாள் என்று அவர்கள் கொண்டாட்டங்களில் என்னை அழைத்து மகிழ்ந்த போது, தினமும் நாடி வருவோர் எண்ணிக்கை கூடி வந்த போது,  என்று பல மகிழ் தருணங்கள். காசு நிறைய சம்பாதிக்காத போதும் சந்தோஷம் நிறைய இருந்தது.
மனநலம் படித்து, இனி மனநல மருத்துவப் பணி மட்டுமே என்று நான் முடிவெடுத்த பின்னும் அவ்வப்போது தங்கள் மருத்துவப் பிரச்சினைகளுக்காக மக்கள் என்னை இன்னமும் ஆலோசனை கேட்டு வந்தாலும், மனநல மருத்துவப் பணியே என் வாழ்வின் ஆதார சுருதியாக மட்டுமல்ல, வாழ்வில் தினமும் விளக்கமுடியாத சுகநிலையாக அமைந்து விட்டது.
ஒரு மருத்துவமனை உருவாக்கி, அதிலும் ஏழைகள் அதிகமாக வந்ததால், சம்பாதிக்க இயலாமல் அந்த மருத்துவமனையை மூட வேண்டி வந்தபோதும், பெருமளவில் வருத்தம் கொள்ளவில்லை. காசு சம்பாதிப்பதென்றால் மருத்துவப் பணியில் சுலபம், அதுவும் நிறைய பேர் நம்பிக்கையோடு நாடி வந்தால் இன்னும் சீக்கிரமாகவே சம்பாதிக்கலாம். எக்காரணம் கொண்டும் ஏழைகளிடம் இரக்கமில்லாமல் பணம் கறக்கப்போவதில்லை எனும் தீர்மானமும், சுயநெறி பிறழ்ந்து தேவையில்லாமல் சலுகைகளுக்காக மருத்துகள் எழுதுவதும், அவசியமின்றி பரிசோதனைகளுக்காக ( அதில் வரும் தரகுத்தொகைக்காக) மக்களை அலைக்கழித்து செலவு செய்ய வைப்பதில்லை எனும் என் மாற்றம் காணாத உறுதியும்,  பொருளாதார தோல்வியை புறம்தள்ளி தினமும் மகிழ்ச்சியோடு காணவரும் மக்களை அன்புடனும் ஆர்வத்துடனும் சந்திக்க வைக்கிறது.
என் மனநல மருத்துவப் பணியிலும் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரிடமும் “ எல்லாம் சரியாயிடுச்சு, இனி வர வேண்டாம்” என்று சொல்லும் போது வரும் நிறைவுக்கு நிகர் எதுவுமே இல்லை., ஐம்பது பேர் தினம் வந்தாலும் சோர்வும் தளர்வும் இல்லாமல் பார்க்க முடிவது என் பணியின் மேல் எனக்கிருக்கும் காதலினால்தான், அது எனக்குள் ஏற்படுத்தும் பெருமிதத்தினால்தான்.
சென்ற மாதம் தொடர் இருமலுக்குப் பின் குரல் கம்மி பேசுவதே முடியாமல் போனது. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்த விஷயம் ஒரு வாரம் ஆனபின்னும் தொடர்ந்தது. என் உதவியாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டு வந்தவர்களை பார்த்து மருந்து எழுதித் தந்தேன். ஆனால் அது எனக்கு திருப்தியாக இல்லை. அப்போது ஒரு மைக்+ஸ்பீக்கர் வாங்கி அதன் மூலம் கிசுகிசுத்த குரலில் வந்தவர்களுடன் பேச ஆரம்பித்தேன். நான் கஷ்டப்படுவதைப் பார்த்து கஷ்டத்துடன் வந்தவர்கள் எல்லாரும், ரொம்ப பேசாதீங்க சார், நாங்களே சொல்லிடறோம் என்று என்னை கேள்வி கேட்கவிடாமல்  காட்டிய அன்பு என் மனநல மருத்துவப் பணி எனக்குத் தந்த விலையில்லா வெகுமதி.
இப்பணி எனக்கொரு தியானம். க்ளினிக்கில் இருக்கும் நேரம் கவனம் சிதறுவதில்லை, தனிப்பட்ட வருத்தங்கள் நினவுக்கு வருவதில்லை, எந்த சிக்கலின் தாக்கமும் அந்நேரம் ஏற்படுவதில்லை. முழுமையாய் கவனக்குவிப்புடன், சொல்லப்படும் விஷயங்களினாலும் பாதிப்பு வரவிடுவதில்லை. எந்தவித பிரச்சினையை எதிர் இருப்பவர் சொன்னாலும் அது அவிழ்க்க வேண்டிய புதிர் மட்டுமே வருந்தவோ கோபப்படவோ அதில் எனக்கு ஏதுமில்லை எனும் மனநிலையே மனநல மருத்துவப் பணியின் வெற்றி.

இதிலும் எல்லாமே வெற்றிகரமாகவே செய்து வருகிறேன் என்று இல்லை. நோய் நாடி, நோய்முதல் நாடி அது தணிக்கு செயல்பாட்டில் பிசிறோ பிழையோ ஏற்பட்டதில்லை, என் தோல்விகள் எல்லாமே என் நப்பாசைகளாலும் பேராசைகளாலும் தான்.
யாரிடமும் ஒரு பைசா கூட வாங்காமல் மருத்துவம் பார்க்கவேண்டும் எனும் தீராத தாகத்தின் தாக்கத்தில், என்னை நாடி வரும் வசதி படைத்தவர்களைப் பார்க்க தனியாய் ஓரிடத்தில் என் இன்னொரு க்ளினிக் ஆரம்பித்தேன். அதில் வரும் காசினை வைத்துக்கொண்டு இங்கே என் க்ளிக்கில் காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து பெயர் பதிவு செய்து எனக்காகக் காத்திருக்கும் எளிய மக்களுக்கு பணம் வாங்காமல் பணி செய்யலாம் என்பதே திட்டம்.  எல்லா திட்டங்களும் வெற்றி பெற சரியான வியூகங்கள் தேவை. புதிதாய் ஆரம்பித்த இடத்தை விளம்பரப்படுத்தாமல் நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு அல்லது திமிரோடு இருந்தேன். அது நடக்கவில்லை.

நடக்கவில்லை என்று தெரிகிறது, நடக்காது என்று இன்னமும் தோன்றவில்லை. இது ஒரு தோல்வி என்று சொல்லும் மனம், தனக்கே சமாதானப் படுத்த ‘இப்போதைக்கு’ எனும் வார்த்தையையும் சேர்த்துக்கொள்கிறது.
எந்தவித பணபலமோ பின்புலமோ இல்லாமல், ஏழ்மையின் அதிதீவிரத்தையும்  பார்த்து கடந்து வந்த என்னை, இன்று இந்நிலையில் வைத்திருப்பது என் தேவிதான்.

நாளை நாற்பதாவது ஆண்டு. 
இன்னும் இருக்கும் ஆண்டுகளும் இப்பணியிலேயே இன்புற்றிருக்க  மயர்வற மதிநலம் அருளி, அவள் உடன் இருக்கிறாள்.

Tuesday, September 6, 2016

விளம்பரத்தால் உயர்ந்த பிம்பம்

ஜக்கி பற்றி.. ம்ருத்திகா எனும் தோழி சுட்டியும் தந்த போதும் பார்க்கவில்லை. பின் பலரும் சொன்னார்கள்..
ஆகவே அந்த தொலைகாட்சி ஒளிபரப்பைப்பார்த்தேன்.
ஹா..
முதலில் ஒரு தன்னிலை விளக்கம்.- பாண்டே சொன்னது  போல் நான் ரஜ்னீஷ்/ஓஷோவை இந்த போலி imitate செய்வதாய்ச் சொல்லவில்லை, இது அவரிடமிருந்து திருடி பேசுவதாய்த் தான் சொன்னேன்.
IMITATION CAN BE PARDONED AS A POOR ART, BUT PLAGIARISM IS DEFINITE THEFT- CONDEMNABLE AND PUNISHABLE.
அப்புறம், இதை நான் சந்தித்த கதை!
1990களின் மையத்தில்  நான் ஓரளவு தொலைகாட்சி வழியாய் பிரபலம். அப்போதெல்லாம் என் தினசரி மதிய உணவு சென்னை பாண்டி பஜார் பாலாஜி பவனில் தான். தொடர்வாடிக்கையாளர் எனும் முறையில் உரிமையாளரிடம் புன்னகைப் பழக்கம். ஒரு சாப்பிடும் நேரம் அவர் வந்து ஒரு மகான், யோகி..என்றெல்லாம் ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசினார்.
அப்போதெல்லாம் என்னிடமும் ஒரு குரு தேடல் இருந்ததும் கடன் தொல்லையும் இருந்தது. எதனால் என்று இன்று நிச்சயமாய் சொல்ல முடியவில்லை, போய்த்தான் பார்ப்போமே என முடிவெடுத்தேன். முதல்லெ நாரத கான சபா வாங்க.. ஸ்பெஷல் ப்ரோக்ராம், ஸீட் புக் பண்ணி வெக்கறேன்என்றவர் பேச்சுக்கிணங்கி போனேன். well designed opening..packing was glittering more than the content..உமாவிடம் இது ரொம்ப உடான்ஸா இருக்கே என்றதற்கு..dont be a cynic என்றாள்.
நாகரிகம் கருதி  (சமயங்களில் நாகரிகம் என்பது பரிதாபத்தின் இன்னொரு பெயர்). கடைசிவரை இருந்து வெளிவந்து கார் தேடும் போது அந்த உணவகத்தின் இளைஞன்  ‘ சார் வாங்க இண்ட்ரொட்யூஸ் பண்றேன்’ எனவும், அந்த மனிதனை பார்த்தேன் கை குலுக்கினேன். பேசாமல் வந்து விட்டேன்.
அடுத்த சில நாட்களின் ஒன்றில், அந்த இளைஞன்  அவரை நீங்க பாக்கணும் பேசனும் என்ற போதும் என் இயல்பான MAN WATCHING CURIOSITY யுடன் தான் போனேன், உமாவுடன்.
சென்னை லாய்ட்ஸ் சாலையில் ஒரு ஸ்பெஷல் எஃபெட்ஸ் ஸ்டுடியோ, மாடியில் உமாவும் நானும் அந்த இளைஞனும் இருக்க ஒரு dramatic delayed entry.
அறிமுகம் செய்யப்பட்டும் நான் சும்மா இருக்க தானே பேசிய அந்த alleged மகான்.. தான் பிறந்து வளர்ந்து ஒரு கட்டிடம் கட்டுமிடம் வேலை செய்த்து..பிடிக்காமல் பைக்கில் ஊரெல்லாம் சுற்றி ஒரு மலையிடம் படுத்து யோசித்தது  எல்லாமும் சொல்லும் வரை எனக்குப் பிடித்திருந்த்து..தேடல் வலி எனக்கும் தெரியுமென்பதால்.
அப்புறம் தான்..... திடேரென தன் கழுத்திலிருந்த் ருத்ராட்ச மாலை கழற்றி என் கையில் கொடுத்து கண் மூடச்சொன்னபோது.. ‘சரி பார்ப்போமே’ என்றே ஒத்துழைத்தேன்.
சில நிமிடங்களில் what happened எனும் கேள்விக்கு என் சத்தியமான விடையான nothing என்றவுடன் ..You are not peaceful meditate more என அந்த “திரு” வாய் சொன்னபோதும்.. சும்மாயிருந்தேன். அதெல்லாம் வயதுக்கெல்லாம் நான் மரியாதை தந்திருந்த காலம்.
Why don’t you come for the seven day program..எனும் அழைப்பிற்கு மையமாய் சிரித்து விட்டு வெளிவந்தால், கூடவே அந்த இளைஞன்..”ட்ரை பண்ணிப் பாருங்க” என, ‘ உனக்கேம்ப்பா என் ஆத்மா உயரணும்னு ஆசை. என்றதும் அவன் சொன்ன பதில்== சார் நீங்க இதை experience பண்ணிட்டு உங்க ஷோவுல சொன்னா நிறைய பேருக்கு பலன் இருக்குமில்லே..
பாண்டே நிகழ்ச்சியில் என்னைத் தெரியாது என்று சொன்னது ஒருவேளை மறதியாகவும் இருக்கலாம்.. நான் கூட நிறைய போலிகளைப் பார்த்திருக்கிறேன் அதில் பலர் பெயர் நினைவில் இல்லை. இவன் போல் பெரிய அளவில் பொய்மை பரப்புவோர்தான் நினைவில் உள்ளது- கோபத்துடன்,

திருடியே பேசுபவன் மட்டுமல்ல, தீமையானவன் என்பதாலேயே இவன் மீது என் கோபம்.
https://www.youtube.com/watch?v=V3SHyl8piQc&feature=share