Showing posts with label விசாரணை. Show all posts
Showing posts with label விசாரணை. Show all posts

Wednesday, January 6, 2010

நிறமும் சாயமும்


பலர் இந்தப்பதிவின் பின்னணி நிறம் கருப்பாய் இருப்பதால் படிக்கச் சிரமமாக இருப்பதாய் எழுதியதால் இப்போது வண்ணத்தை மாற்றியிருக்கிறேன். ஒரு பதிவர் குறிப்பிட்டது போல் இது ஒன்றும் கொள்கை சார்ந்த நிறம் அல்ல. அம்மாதிரி நிறங்கள் மாறுமா என்ன?
சாயங்கள் பொலிவிழக்கும், நிறங்கள் மாறாது.
எது நிறம் எது சாயம் என்று ஒரு கேள்வி என்னுள் இப்போது எழுகிறது.

என் வாழ்க்கையில் பல வண்ணங்கள் சாயம் என்று தெரியாமல் நிறம் என்று நம்பி ஏமாந்திருக்கிறேன். கருப்பும் சிவப்பும் தான் முதலில். இரண்டுமே பார்வையை உடனே சுண்டியிழுக்கத்தான், அவற்றின் உள்ளர்த்தமாய் மறுப்பும் கிடையாது, எதிர்ப்பும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளவே பல வருடங்கள் போயின. பிறகு கருப்பும் ஒரு நாடகத்திற்கான பூச்சாய் புரிய ஆரம்பித்தபின், சிவப்பு மட்டுமே மீதமிருந்தது. சமீபகாலமாய் அந்தச் சிவப்பும் வெளுத்து மாறிக்கொண்டிருக்கிறது.
மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்றாலும், இளமையின் ஆரம்ப ஈர்ப்புகள் அவ்வளவு சீக்கிரமாக மாறுவதும் மறைவதுமில்லை. அதனால்தான் சாயம் போன சிவப்பைக்கூட பார்வையைக் குறுக்கிப் பளிச்சென்று தெரியப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறேன். எவ்வளவு நேரம் கண்களை இடுக்கி வைத்திருக்க முடியும். கொஞ்சம் விழி விரிந்தால் பின்னணியும் ஆழமும் புரிபட ஆரம்பிக்கும். அப்புறம் எவ்வளவு முயன்றாலும் சாயம் நிறமாக மாறாது.
எல்லாவற்றிற்கும் ஒரு நிறம் உண்டு. அது தேவையும் கூட. பார்வையில் பழுது வரும்வரை, நிறமே ஒரு நினைவை மீட்கும். அதுவே பல அர்த்தங்களை உருவாக்கும். அது ஒரு ரகசியக் குறியீடாக மனத்தின் அடிநாதமாய் புரிதலை அமைத்துக்கொடுக்கும். நிறம் மாறாது.
உள்ளே மாறாத நிறம் இருக்கும்போது வெளியே ஒப்பனையாகப் பூசிக்கொள்ளும் வண்ணங்களை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். கறுப்பு என்ன பகுத்தறிவாளர்களின் வண்ணமா அல்லது ஐயப்ப”பக்தர்”களின் அடையாளமா? சிவப்பு மட்டுமென்ன? நக்ஸல்பாரியின் நிறமா நந்திக்ராமத்தில் நயவஞ்சகம் புரிந்தவர்களின் சாயமா?
எந்த நிறமும் உள்ளே தான். வெளியே ஒப்பனைகள் கொஞ்ச நேரம்தான். ஒப்பனையோடு தூங்கிப்போகலாம், ஆனால் விழிக்கும்போது அது முகத்தை விகாரமாகக் காட்டும். நடிப்பதாய் இருந்தால் முடித்தபின் நாடகத்திற்கான ஒப்பனைகளைக் களைய வேண்டும். ரசிக்கும் நாமும் நாடகம் முடியப்போவது தான் என்பதையும் உணர வேண்டும். எந்த நாடகமும் நிரந்தரமாகத் தொடராது, எந்த வண்ணமும் நிரந்தர ஒப்பனையாக மாறாது.
நிஜமான நிறம் நம் உள்ளத்தின் நிறம் தான். அதை வெளியே தேடி அதே போலொரு சாயமுள்ளவர்களிடம் ஈர்க்கப்படுவதும் இயல்புதான்.  ஈர்ப்பு எப்போதுமே எதிர்பார்ப்பினால்தான். பார்வை கூர்மையானால், நாம் ஏமாற மாட்டோம். ஏமாற்றம் இல்லாவிட்டால் சோர்வும் கிடையாது, சலிப்பும் வராது.

Thursday, December 17, 2009

குரு பெயர்ச்சி

குருபெயர்ச்சி எனும் ஜோஸ்ய ஜாலம் பற்றி எனக்குத்தெரியாது.



எனக்கு குரு எனும் தேடலில் கிடைத்த ஒவ்வொரு பிம்பமும் பெயர்ந்தது பற்றித்தான் தெரியும். என் முதல் குரு என்று பார்த்தால், ஆசிரியர்களையும், பூஜையறையில் மாட்டியிருந்த படங்களிலிருந்த தெய்வங்களையும் தவிர்த்தால், நானே மயங்கி விரும்பி ஏற்றுக்கொண்டது முதலில் விவேகானந்தரைத்தான்.


அவரது ஆன்மஞானம் பற்றியோ அறிவியல் சார்பு பற்றியோ ஏதும் தெரியாத வயதில், வீட்டிற்கு வரும் கல்கி பத்திரிகையில், ரா.கணபதி எழுதிய அறிவுக்கனலே அருட்புனலே படித்தும், அதற்கு ஓவியர் வினு வரைந்த படங்கள் பார்த்தும் தான் பிரமிப்பு, ஈர்ப்பு, பக்தி எல்லாம்.அவர் முகம் பிடித்ததால் தான் அவர் என் குரு என்று நினைத்துக்கொண்டேன். "சகோதர சகோதரிகளே", "எல்லா நதிகளும் கடலில் கலப்பதுபோல் எல்லா மதங்களும்" எனும் இரு வாசகங்கள் தவிர அவரது படத்தின் கீழ் வழக்கமாக எழுதப்படும், "எழுமின்'விழுமின்" மட்டுமே நான் அவரைப் பற்றி அப்போது அறிந்தது, படித்தது.

அந்த ஆரம்ப மோகம், பத்து வயதில் ஆரம்பித்து பல பத்தாண்டுகள் நீடித்தது. இன்று அவர் என் குருவாக மனதுக்குத் தோன்றவில்லை.மரியாதை குறையவில்லை, பக்தி குறைந்து விட்டது.

பதின்வயதுகளின் ஆரம்பத்தில் ஒரு பெரியவர் உபதேசம் செய்கிறேன் என்று வள்ளலாரின் வாக்கியத்தைச் சொன்னார்.நாடி, மூச்சு ஆகியவைபற்றியும் சொல்லிக்கொடுத்தார்.அந்த பாதிப்பில், பயிற்சியில் கொஞ்சகாலம் வள்ளலார் என் குரு என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.


பள்ளி முடிந்ததும் டாகூர் என்னை வசியம் செய்தார். அவரை குருதேவ் என்று அழைப்பார்கள் என்பதால் அவர் என் குரு என்று கொஞ்சகாலம் ஓடியது.
பிறகு, படிப்பதனாலும் பிறர் புகழக்கேட்டதனாலும் Henry Miller, Sartre, Marx என்று ஒரு குரு பிம்பம் தேடியது நிகழ்ந்தது.

என்றுமே நாத்திகனாக இருந்ததில்லை என்றாலும் உருவவழிபாடு குறித்தும், கோவில் செல்வதன் அவசியம் குறித்தும் கேள்விகள் என்னை கிட்டத்தட்ட ஒரு agnostic நிலைக்குக்கொண்டு போனபின்.. வறட்டுத்தனமும் பிடிவாதமும் குறைந்தபின், எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அறிமுகப்படுத்திக் கொள்ளவாவது வேண்டும் என்ற நிலையில் தான் மதம் சார்ந்த நூல்களையும் மத‌வழி வெளிப்படுத்தப்பட்ட சித்தாந்தங்களையும் படித்துப் பரிச்சயம் செய்து கொள்ள நேர்ந்தது.

அந்த இடத்தில்தான் ஞானம் அடைய ஒரு குரு தேவை என்ற கருத்து, மனத்துள் ஊட்டப்பட்டு வள‌ர்ந்தது. அந்த குருவாக ரமணர் இருப்பாரா, சாய்பாபா (original) இருப்பாரா என்றெல்லாம் மனம் விசாரித்துக் கொண்டிருந்தது. அதே நேரம் புட்டபர்த்தி சாய்பாபாவும் கண்ணுக்கு கேலியாக தென்பட்டதால், உண்மையான குரு கிடைக்கும் வரை தேடலாம் என்றே தொடர்ந்து மனம் அலைந்து கொண்டிருந்தது.

குரு என்று சொல்லிக்கொண்ட எவர்மீதும் நம்பிக்கை வரவில்லை. குரு என்று சிலர் குறிப்பிட்டச் சிலர்மீதும் ஈர்ப்பு ஏற்படவில்லை. அந்த காலகட்டத்தில் இரு பெரும் மேதைகள் வாழ்ந்திருந்தார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ ரஜ்னீஷ் இருவருமே பார்க்க மிகவும் வசீகரமாகத் தோன்றினார்கள், அறிவுபூர்வமாகவும் அவர்களை குரு என்று சொல்வது நாகரிகமாகத்தான் தெரிந்தது. அவர்களது எழுத்துக்களும் மனதுக்கு இதமாகவே இருந்தது. ஆனாலும் குரு என்று சொல்லிவிட முடியவில்லை.


குரு யார்? எனும் கேள்விக்கு அவ்வப்போது மனம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவரைச் சொல்லிக்கொண்டது. ஓவியத்தில் நீர்க்கலவைச் சித்திரம் வரையக்கற்றுக்கொடுத்த ஜோசஃப், தமிழின் இலக்கணத்தை எனக்குக் கற்றுகொடுக்க ஆரம்பித்த பண்டித நடேசனார் மட்டுமல்லாமல், அச்சகத்தில் எழுத்துக்கோக்கவும் ட்ரெடில்மெஷின் ஓட்டவும் கற்றுத்தந்த ஆறுமுகம்,மருத்துவக்கல்லூரியில் ஆசிரியராக இருந்த எல்லாரும், அதில் குறிப்பாக டாக்டர் வீரபத்ரன், மனநல மருத்துவத்தின் ஆரம்பப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்த டாக்டர் தேவர், டாக்டர் மாத்ருபூதம்.. என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது.

இவர்களையெல்லாம்கூட நான் குரு என்று குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால் குரு என்பது இன்னும் வேறு எதோ என்பது மட்டும் நெஞ்சில் நெருடிக்கொண்டே இருந்தது. இவர்கள் வடிவிலெல்லாம் குரு வந்திருக்கக்கூடும் என்று ஒரு திருப்புகழை மனம் சமாதானத்திற்காக அவ்வப்போது கூறிக்கொள்ளும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,மருவாய் மலராய் மணியாய் ஒளியாய், கருவாய் உயிராய் கதியாய் விதியாய், குரு வருவாராம். வரட்டும் என்று காத்திருந்தேன். எங்கோ படித்த 'உனக்கு தகுதி வரும்போது குரு உன்முன் தோன்றுவார்' என்பதை மட்டும் என் சுயாபிமானம் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்குத் தகுதி இருப்பதாய் நினைத்துக்கொண்டுதானே தேடல்!

மனம் நேர்நிலையில் இருக்கும்போது கவனமாகத் தேடிய குருவை மயக்கநிலையில் இருட்டிலெல்லாம் பார்த்ததாக நினைத்துக்கொள்ளும் என்பதையும் அனுபவித்திருக்கிறேன்.
அப்படியொரு மாலை நேரத்தில், மயங்கியநிலையில் ஜெயகாந்தனிடம் நீங்கள்தான் என் குரு என்று கூறிவிட்டேன். "உயிரோடிருப்பவனை எல்லாம் குரு என்று சொல்லிவிடாதே, அவன் சாகுமுன் என்னவெல்லாம் அசிங்கம் செய்து உன்னை அவமானப்படுத்துவான் என்று தெரியாது..செத்துப்போன யாரையாவது குரு என்று சொல்லிக்கொள் அது தான் நல்லது" என்றார். மயக்கம் தெளிந்தது, ஆசை தெளியவில்லை.


குருவுக்குக் கூட ஒரு குரு இருக்கவேண்டுமே அந்த ஆதி குரு யார் என்று யோசித்தால், அது கடவுள் என்ற விடையைத் தருகிறது.கடவுள் என்பது மனிதன் தன் கற்பனையில் உருவாக்கிய அதிசக்திவாய்ந்த பிம்பமாக அல்ல, அறிவின் உச்சமாக, உணர்தலின் முழுமையாக இருக்கும் ஒரு தத்துவத்திற்கு வசதியான ஒரு பெயராக.

அந்தக்கடவுளை எங்கே தேடினால் கிடைக்கும் என்று வெளியே தேடும் வீணான முயற்சியின் முடிவில்,
தானே தன்னை தரிசிப்பதே ஞானம்; தன்னைய‌றிய முற்படுதலே தவம், அதற்கு வழிகாட்டும் குருவும் அந்த‌ உள்ளிருக்கும் மனோசக்திதான் என்பதெல்லாம் வார்த்தைகளாகப் புரிகிறது, இன்னும் அனுபவமாக மாறவில்லை.
அதுவரை, குரு என்ற மாயப்பிம்பம் தன்னைத்தானே பெயர்த்துக்கொண்டே இருக்கும்.

Monday, December 14, 2009

யோகாவும் தியானமும் உதவும்


மனநோய்களுக்கு யோகாவும் தியானமும் உதவும் என்பது இப்போது பரவலாக விளம்பரப்படுத்தி விற்கப்படும் ஒரு பொய்.
நோய் என்றாலே அதற்கு மருந்து அவசியம். மருந்தே வேண்டாம், யோகா செய், 'மெடிடேஷன் பண்ணு" என்று கூறுவது இப்போதெல்லாம் மிகவும் பிரபலம்.

அப்படியே செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், என்ன/எதைச் செய்யப் போகிறார்கள்? நான் என் சக்திக்குப் படித்ததில், 100க்குமேற்பட்ட யோகமுறைகள் உள்ளன. ஆர்வமுள்ளவர்களுக்காக மூன்று நூல்கள்- 1 Vignyana bhairava tantra,  2.Sivasutras, 3.SpandaKarika. என்னைப்போல் ஸம்ஸ்க்ருதம் தெரியாமல் ஆங்கிலம் தெரிந்தவர்கள்  Jayadev Singh எழுதிய உரைகளைப் படிக்கலாம். "பார் நான் இதையெல்லாம் படித்திருக்கிறேன்" என்று காட்ட அல்ல இந்தப் பட்டியல்,  இதையெல்லாம் படித்துவிட்டுத் தான் இவை குறித்துப்பேசுகிறேன் என்பதற்காகத்தான்.
ஒரு நோய்க்கு ஒரு மருத்துவன் ஒரு மருந்து தருமுன் அதேபோல் உள்ள பல மருந்துகள் அந்தக்கணநேரத்தில் மனச்சல்லடையில் விழுந்து ஒன்று மட்டும் தேர்வாகிறது. யோகா "டீச்சர்ஸ்" இப்படி யோசித்து இத்தனை சாத்தியங்களை எண்ணிப்பார்த்துவிட்டுத்தான் சொல்லித்தருகிறார்களா? ஆம் என்றால் மிக்க மகிழ்ச்சி!

தெருவுக்குதெரு மலிந்து விரைந்து பரவி வரும் "டீச்சிங்" மையங்களில் உள்ள "மாஸ்டர்"  பதஞ்சலி பெயரைத் தெரிந்து வைத்திருப்பார், (என்னிடம் கூட பதஞ்ச‌லியின் சிலை ஒன்று இருக்கிறது). படமோ சிலையோ வைத்திருக்கவும் கூடும். வியாக்ரபாதர் பதஞ்ச‌லி உறவு பற்றியும் தெரிந்துவைத்துப் பேசக்கூடும்...பதஞ்ச‌லியின் யோக சூத்திரங்களைப் படித்திருப்பாரா? (புரிந்து கொண்டிருப்பாரா என்பது உபகேள்வி). எனக்கு அந்த ஞானம் கிடையாது, இருப்பதாய் சொல்லிக்கொள்வதும் கிடையாது.இப்போது மூன்று நூல்களைப்பற்றிச்சொன்னேனே அவற்றைப் படித்திருக்கிறேன் புரிந்து கொண்டதில்லை. எனக்குத் தொடர்பில்லாத தொழில்குறித்து மூன்று பெயர்களை நானே சொல்ல முடியும் போது, "மாஸ்டர்" இன்னும் கூடச் சொல்லலாம். பெயர்களை உதிர்க்க படிக்கவேண்டும் என்றில்லை.
 "மாஸ்டர்", "டீச்சர்" ஆகியோர்தான் schizophrenia என்பதற்கும் depression என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுவது அதிகம். இரண்டுமே ஒன்று என்று உளறுவதும் அதிகம், இவற்றுக்கு மருந்துகள் வேண்டாம், சில ஆசனங்கள், சில மூச்சுப்பயிற்சிகள் போதும் என்றும் தங்கள் "சென்டர்"களைப் பற்றிச்சொல்லிக்கொள்வதும் அதிகம். "மாஸ்டர்", "டீச்சர்" என்று நான் சொல்வது, இவர்களது "ஃபேஷன்" என்பதால் மட்டுமல்ல, "ஃபேஷன்"னுக்காக இவர்களிடம் செல்பவர்களுக்கு எளிதாக இருக்குமே என்பதற்காக.
மருந்துகள் தேவையில்லை என்பதும் இப்போது பரவி வரும் ஒரு "ஃபேஷன்"தான்.
ஆனால், மருந்துகள் இன்றைய இவர்களுக்கு ஒவ்வாத 'அலோபதி' மருந்துகள் மட்டுமா? சரகரும் ஸுஷ்ருதரும் ரிஷிகள்தானே, யோகத்யான முறைகளை முற்றும் தெரிந்தவர்கள் தானே அவர்கள் ஏன் மருந்துகளைத் தந்தார்கள்?
அகத்தியர் முனிவர் தானே? பரமசிவனோடு நேரடியாய் தொடர்பு வைத்திருந்தவராமே, அவர் எதற்கு யோகா செய், தியானம் செய் போதும் என்று விட்டுவிடவில்லை? பல மருத்துவக்குறிப்புகளுக்கு ஆதியாசானாக அவரை இன்னும் சிலர் சொல்வதில்லையா? நம் சித்தர்கள்மருந்துகள் பற்றி எழுதவில்லையா?

அவர்கள் மேதைகள், எதற்கு எது அவசியம் என்று தெரிந்தவர்கள், இன்றைய அரைவேக்காட்டு வியாபாரிகளைப்போல், சகலரோகநிவாரணி விற்காதவர்கள்.
இன்னும் பேசலாம், பின்னால்.

Saturday, December 12, 2009

கணக்குகளைச் சரிபார்க்கத்தான்.

வழக்கமாய் என்னைப்படிப்பவர்களுக்காக அல்ல இது.இதையும் படிப்ப‌வர் கணக்குகளைச் சரிபார்க்கத்தான்...மீண்டும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
புத்தகம் எழுது என்று மூன்று பதிப்பகங்கள் காத்திருந்தும், எழுது என்று ஒரு வலைத்தளம் சொல்லியும் எழுதாமல் சாக்குகள் சொல்லிக்கொண்டிருக்கும் நான் எதற்கு வலைப்பதிவில் எழுதுகிறேன். இங்கே இது எனக்குச் சுவையாக இருக்கிறது, சௌகரியமாக இருக்கிறது. அநாமதேயங்கள் கூட என்னை இங்கே தூண்டிவிடுகின்றன, அன்பு காட்டவும் இத்தனை பேரா என்ற பிரமிப்பும் தூண்டுகின்றது. என்ன தோன்றுகிறதோ அதையே எழுதுகிறேன். எத்தனை பேர் பார்த்தார்கள் என்று இந்தப் பதிவில் தெரிவது உண்மையல்ல..நானே நிறைய முறை உள்நுழைந்து அச்சுப்பிழைகளைச் சரிசெய்ய முயல்வதாலேயே இத்தனை பேர்.
இப்பதிவு படிக்க அல்ல ஒரு விஷயத்தைப் பரிசோதிக்க. டமிலிஷ் தளம், தமிழ்மணம் தளம் ஆகிய இரண்டில் தான் என் இடுகைகளைச்சேர்க்கிறேன். இம்முறை அதிலொன்று இதிலொன்று என்றும் சேர்க்கப்போகிறேன்.
எதற்கு? எல்லாம் நான் மனத்துள் போட்டிருக்கும் கணக்குகளைச் சரிபார்க்கத்தான்.
என்னமோ எழுதியிருக்கிறானே என்று இதையும் படித்தவர் கணக்குகளைச் சரிபார்க்கத்தான்...மீண்டும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். 15 டிசம்பர் முதல் வழக்கம் போல் எழுதப்பார்க்கிறேன்.

கொஞ்ச‌ம் நிதானமாக யோசித்தால்..


அடையாள‌ங்களும் அங்கீகாரங்களும் தான் என்னை எனக்குக் காட்டுகின்றன.அவற்றிலும் எனக்கு விருப்பமானவைகளே நான் தேர்வு செய்பவைகளாகவும் ஆகிவிடுகின்றன.
தோல்விகள் இல்லாத வாழ்க்கை கிடையாது,அதே போல் தோல்வியிலிருந்து மீளாதவர் என்றும் யாரும் கிடையாது. இங்கே நான் சந்தித்த தோல்விகள் சிலவற்றைப் பரிசீலிக்க முயல்கிறேன்.முதலில் தோல்வி என்பது என்ன?
விரும்பியதை அடையாவிட்டால் அந்த முயற்சி தோல்வியா? விருப்பம் ய‌தார்த்தத்தை மீறிய கனவின் வெளிப்பாடாக இருந்தால்,தோல்வி எது, எங்கே?
பல இளைஞர்கள் இப்போதெல்லாம் என்னிடம் பேசும்போது, கலாம் போல் முன்னேறி வாழ்வில் இந்தியாவின் தலைமைப் பதவியைக்கூட அடைவோம் என்று ஆர்வத்துடன், நம்பிக்கையுடன் உறுதியாகக் கூறுகிறார்கள். உழைக்கும் திடத்தையும் நம்பிக்கையையும் கலாம் உயர்பதவி அடைந்ததால் இளைய தலைமுறை அடைகிறது என்பது நன்றாகத்தான் இருக்கிறது. உற்றுப்பார்க்கும் வரை.
கலாமும் எழுத்தாளர் சுஜாதாவும் ஒன்றாகப் படித்தவர்களாம். கலாமுக்குப் பதிலாக சுஜாதா அந்த அரசுத்துறையில் பணிசேர்ந்திருந்தால், அவரும் ஓய்வு பெறுமுன் அதே தலைமை விஞ்ஞானியாகத்தான் இருந்திருப்பார்.ஆனால், அப்போது சுஜாதாவை யாராவது ஜனாதிபதி ஆக்கியிருப்பார்களா? அந்த நேரத்தில் இந்துமதவெறி என்பதைக் குறைத்து, மாற்றிக்காட்ட பிஜேபி அரசுக்கு ஒரு முஸ்லிம் தேவைப்பட்டார். அணுவிஞ்ஞானி என்ற கூடுதல் பெயர் கலாமிற்கு இருந்ததால், அவரால் ஜனாதிபதியாக முடிந்தது. அவ்வள‌வு தான்.
இதை உழைப்பின் வெற்றி என்று எல்லாரும் நினைக்கலாம், உழைக்க ஒரு தூண்டுகோலாக மட்டுமே இது பயன்பட்டால் நிச்சயமாக இது பாராட்டி, ஊக்கி வளர்க்கப்பட வேண்டியதுதான்.. 
அரசுத்துறை ஒன்றில் படிப்படியாகப் பதவி உயர்வு பெறுவதற்கு வெறும் கல்வித்தகுதியோ வயதோ வேலைசெய்த அனுபவமோ போதாது, சாமர்த்தியமும் வேண்டும். அது இல்லாவிட்டால், கலாம் என்ன, புத்தரே வேலையில் இருந்தாலும் பதவி உயர்வு கிடைத்துவிடாது! இந்த சாமர்த்தியம் தான் சமத்து என்று பாராட்டப்படும் குணம். இது இருந்தால் ஜாதி,மதம் என்னும் பிற 'தகுதிகள்'  கூடுதலாகப்பயன்படும். இது தான் நிஜம்.
இது சாமர்த்தியமாக அரசுப்பணியில் படிப்படியாக உயர்ந்த கலாமுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் அவர் பேசும்போது எல்லா இளைஞர்களையும் கனவு காணச்சொல்கிறார்; அவர்களும் கண்டுகொண்டே இருக்கிறார்கள்.
கனவுகள் உதவும், அவை கனவுகள் தான் என்று நினைவில் வைத்துக்கொள்ளும் வரை. கனவு என்பது ஒரு பகல்நேரப் பொழுதுபோக்கா, மூளையின் இயல்பான இயக்கத்தின் வெளிப்பாடா, முட்டாள்தனமான கற்பனையா என்பதைப் பொருத்தே அது பயன் தரும்.
கனவு காண்பது சுகம், அதுகவிதை எழுத உதவும், காரியமாற்ற உதவுமா? கனவு என்பது ஒரு வருங்காலத்தின் வரைபடமாக இருந்தாலும் அதை உயிர்பெற்றெழ வைக்க உழைப்பு தேவை. அது இல்லாமல் ஒரு தலைமுறை வெறும் வீம்பிற்கு வராத கனவுகளையெல்லாம் தலையணைகளில் தேடுவது தான் வருத்தமான விஷயம்.
'நாயே பேயே நீயெல்லாம் கலாம் பற்றி எழுதுவதா? ' என்று அநாதரவான அநாமதேயங்கள் என்னைக் குதற முய‌ல‌ப்போகின்றன என்று தெரிந்துதான் இதை எழுதுகிறேன்.  கலாம் பற்றியென்ன கடவுள் பற்றி கூட யார் வேண்டுமானாலும் எழுதத்தான் இணையம்!
கலாம் எனக்குக்கிடைத்த ஒரு சௌகரியமான உதாரணம், அவ்வளவு தான்; மற்றபடி அவர் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. பதவி விரும்பாத பண்பிருந்தும் இன்னொரு பதவிநீடிப்புக்கு அவர் ஆசைப்பட்டதோ,கையெழுத்து போடமுடியாது என்று முறைத்துக்கொண்டு பிறகு கையெழுத்திட்டதோ,'கவிதை' எழுதியதோ, வீணை மீட்டியதோ எதுவும் எனக்கு வெறுப்பேற்றும் அளவுக்கு முக்கியமாகப் படவில்லை. அவரால் சில இளைஞர்கள் வெட்டிக் கனவில் வீணாகிறார்கள் என்பதே என் வருத்தம். 
நல்லெண்ணத்துடன் தான் சொல்லியிருப்பார், விரைவில் நாம் உலகின் முதலிடத்தை அடைவோம் என்று. 
ஆனால் அவரது நல்லெண்ணத்தை  நம்பித்தான் வெடித்ததா வெடிக்கவில்லையா என்று தெரியாத ஓர் அணுகுண்டு நாம் வைத்திருக்கிறோம். எனக்கு அணுகுண்டு பற்றியும் அக்கறையில்லை என்றே வைத்துக்கொள்வோம். என் அக்கறை எல்லாமே இளைஞர்களின் ஆதர்சங்கள் பற்றியும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும் ஊடக விளம்பரங்களைப் பற்றியும் தான்.
ரொம்பநாளாயிற்று கண்ணதாசன் வரிகளைச் சொல்லி
'விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு
நிரந்தரமாகாது,
விளக்கிருந்தாலும் எண்ணையில்லாமல்
வெளிச்சம் கிடைக்காது"
எது விளக்கு எது வெளிச்சம், என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என்று விட்டுவிடமுடியாது. தேடவேண்டும். அப்படித்தேடித்தேடி அலைந்து உண்மையின் ஒருபக்கத்தையாவது கண்டவர்கள் அதை மட்டுமாவது சொல்லிக்கொண்டிருக்கவேண்டும், இல்லாவிட்டால், மாயைகளே வாழ்வின் இலக்குகளாகி விடும்.
ஆதர்சங்கள் காலம் கடந்தபின் மட்டுமே கானலென்று தெரியும். நான் பல ஆதர்சங்களின் பின்தடத்தில் சென்று காலவிரயம் செய்தவன்..

Tuesday, December 8, 2009

கடவுளின் நான்கு கைகள்



அல்லாவுக்கு எந்தப்படமும் கிடையாது, கூடாது. யேசுவிற்கும்,மேரிக்கும் இரண்டுதான், ஆனால், ராமன், க்ருஷ்ணன் தவிர ஏனைய இந்துக்கடவுள் பிம்பங்களெல்லாம் நான்கு அல்லது அதற்குமேற்பட்ட கைகள் கொண்டிருக்கின்றன..நான் எழுத முனைவது கடவுளின் கைகளைப்பற்றியல்ல, அந்தக்கைகளைக் கொண்டுவந்த தன் பெயரைப்பொறித்துக்கொள்ள நினைக்காத கலைஞர்களைப்பற்றி..  அது பற்றி மட்டுமல்ல, அப்படியொரு கலாசாத்தியத்தின் நுண்ணறிவு பற்றியும்.



உலகின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவர் Frank Netter. அவரது ஓவியங்கள் இன்றைக்கும் உடற்கூறு கற்கும் மருத்துவ மாணவர்களுக்கு உதவுகின்றன. அவரை Michelangelo of Medicine  என்று சிலர் அழைப்பதுண்டு! அவர் வரைந்த தோளின் ஓவியம் இது. இதில் இனி எதுவும் கூடாது, குறையாது. இந்த சித்திரத்தில் உள்ளது போல் தான் நம் எல்லார் தோள்களும் இருக்கின்றன, ஒவ்வொரு தோளிலும் ஒரு கையுடன்.





 இந்திய கலைஞர்கள் ஒரு தோளில் இரண்டு கைகளைப் புகுத்தியதைப் பாருங்கள். உடற்கூறு மருத்துவ மாண‌வர்களுக்கு மட்டுமல்ல, ஓவிய-சிற்பக்கலைஞர்களுக்கும் அடிப்படை பாடம். இருக்கும் ஒரு துளையில் இரண்டு கைகளைப்பொருத்தியது தான் இந்திய சாகசம்.

கடவுள் உருவத்திற்கு எதற்கு பல கைகள்? முதலாவதாக கடவுள் என்னும் ஓர் அரூபப்பிரக்ஞைக்கு எத‌ற்கு உருவம்? ஒரு கட்டத்தின் அவசியம் என்பது தான் கடவுள் என்னும் மர்மமாயை. புரியாதவற்றின் ஒரு collective noun பெயராக!
பயமுறுத்த, பண்படுத்த, புத்திசொல்ல.. என்று பலவிதங்களில் கடவுள் எனும் விஷயம் மனிதனுக்குப் பயன்பட்டு வந்தது. அந்நாளில் இதுவே நன்கு விற்பனையாகக்கூடிய சரக்காக ஆதிக்கம் செலுத்திய வர்க்கத்தினரால், ப்ரத்யேக உரிமையும் கொண்டாடப்பட்டது. இதுவே வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு பேதங்களையும் மக்களிடையே உருவாக்க, நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டது. இப்போது நான் எழுதிக்கொண்டிருப்பது, கலாபேதம் பற்றி. கலைகளில் பேதம் உயர்வுகூட்டும், சமுதாய அரசியல் பேதங்களைப்போலல்லாமல்.

Multiple exposure எனும் முறையில் இப்படி ஒரே உருவத்திற்கு ஆயிரம் கைகள் உள்ள‌து போல் காட்டமுடியும், நன்கு அமைக்கப்பட்ட நாட்டியத்தில் ஒரே பெண்ணுக்கு ஆயிரம் கைகள் விரிவதைப்போலவும் காட்டவும் முடியும்.
ஆனால் இவை ஒரு கோணத்தில் மட்டுமே நிஜமென்று நம்பவைக்கும், நம் இந்திய சிற்பிகளின் கைவண்ணத்தில் எந்த  கோணத்தில் பார்த்தாலும் நான்கு கைகள் சாத்தியம் என்றே நம்பத்தோன்றும்.

சிலசமயங்களில் ஒரே தோளின் இரண்டுகைகளை சாமர்த்தியமாக ஒரு சின்னத்துணியின் உதவியுடன் இவர்கள் சாத்தியமாக்கியிருப்பார்கள். 
அப்படியொருசாகசம் கூடச்செய்யாமல் சிலர் இதைச் சாத்தியமாக்கி இருப்பார்கள்.
இதைப்பற்றி என்னை நினைக்கத்தூண்டியது நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும் ஒரு புத்தகம். Deepanjana Pal எழுதிய The Painter . இது ரவிவர்மாவைப்பற்றிய நூல். Agony and Ecstasy என்று Michelangelo பற்றி இருப்பது போல், Lust for Life என்று Van Gogh பற்றி இருப்பது போல் நம் கலைஞர்களைப்பற்றிய நூல்கள் இல்லை. அந்த விதத்தில் நான் இதுவரை படித்த நூறு பக்கங்களில் இந்நூல் ஒரு நிறைவையே அளிக்கிறது.  

படித்துக்கொண்டிருக்கும்போதுதான், ரவிவர்மாவின் ஸரஸ்வதி படமும் நினைவுக்கு வந்தது. அதில் அவளுக்கு நான்கு கைகள். நான்கு கைகள் என்பதையே உணராதவண்ணம் அது வரையப்பட்டிருக்கும். அவளுக்கு நான்கு என்ன அறுபத்திநான்கு கைகள் கூட இருக்கலாம், இருக்கட்டும். கடவுள் என்பது ஏன் இப்படி ஒரு அதீத பிம்பமாகவே நமக்குக் காட்டப்படுகிறது?
மனித முகமும் உடலும் கடவுளுக்குக்கொடுத்த கலைஞன் ஏன் சில அதிகூறுகளையும் இணைத்தான்? முதலில் மனிதக்குறுகள் ஒரு பரிச்சயத்தின் விளைவாக வரும் அந்நியோன்யத்தை உருவாக்க‌, இரண்டாவது அப்படி வரும் நெருக்கத்தின் இடையிலும் நீ வேறு அது வேறு என்பதை நிழலாகவாவது நினைவுறுத்த.
ரவிவர்மாவுக்கு மு பலநூறு ஆண்டுகளாக தேவியர் சிற்பங்களாக உருவாக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்திருந்தபோதும் ரவிவர்மா தான் அன்றாடம் சந்திக்கும் முகங்களை தெய்வங்களுக்குப் பொருத்திய முதல் கலைஞன். ஆனால், அவன் கூட அவளை ஒரு தெய்வமாக வரையும்போது, இன்னும் இரண்டு கைகள் கூடுதலாக வரைய வேண்டியிருந்தது. இரண்டு கைகளோடு அதே படம் வரையப்பட்டிருந்தால், ரசிக்கப்பட்டிருக்கும், ஆனால் வணங்கப்பட்டிருக்குமா தெரியவில்லை.
நிஜங்களைவிட மிகைகளை ரசிப்பதும் வியப்பதும் கண்டுகேட்டு அதிசயிப்பதும் தானே மனித குணம். இதுதானே அன்று தெய்வங்களையும் பின்பு தலைவர்களையும் உருவாக்கியது! ஒரு கூர்மையான கலைஞன் மனித மனத்தின் இந்த கோணத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டு உயர்படைப்பைத் த்ருவான், ஒரு கோணல் புத்தியுள்ளவன் அந்தப் படைப்பை வைத்துக்கொண்டு பிறரை அடக்கி மயக்கி மிரட்டி வைப்பான். கடவுள் இருவருக்குமே உதவுவதைப்போல், சாமான்யனுக்கு உதவுகிறதா?
கடவுள் நம்பிக்கை என்பது அச்சத்தின் வெளிப்பாடாக அமையாமல், அன்பின் இன்பத்தின் ஒரு இளைப்பாறலாக அமைந்தால்..  அப்போது ஒவ்வொரு மனமும் தன் அகக்கண்ணாடியில் தன்முகத்தை கடவுள் முகமாகப் பார்த்துக்கொள்ளும்.. கடவுள் என்று பேச ஆரம்பித்தாலேயே கற்பனைகளும் இயல்பாகவே வந்துவிடுகின்றன.

Sunday, December 6, 2009

காமெரா கவலைகள் 6/12




26/11 முடிந்தது, முகப்பூச்சுக்கள் குறைத்துக்கொண்ட பெண்கள், சோகமுகத்துடன் மெழுகுவத்தியேந்தி அஞ்சலி செலுத்தினார்கள், தொலைகாட்சி காமிராக்கள் முன்!
இன்று, 6/12, மெழுகுவத்திகளோ, காமிராவுக்கான கண்ணீரோ இருக்காது.. 

எப்போது எது நடந்தாலும் பதிவெழுத ஒரு வாய்ப்பாகச் சிலர் பயன்படுத்திக்கொள்வார்கள் (என்னையும் சேர்த்துத்தான்).
துக்கத்தில் அடிபட்டவர்கள் அடுத்த வேலை பார்க்கப் போய்விடுவார்கள். செத்தவர்கள் வீடுகளில் சிலரது படங்கள் போன வருடம் போட்டுக் காய்ந்த பூக்களோடு இருக்கும்...

நாசமானது ஒரு வரலாற்றுச் சின்னமானால் என்ன, வசதியானவர்களுக்கான வாசஸ்தலமாக இருந்தால் என்ன? நாசம் வெறும் கட்டிடங்கள் மட்டுமா? எத்தனை மனங்கள் உடைந்தன? ஒவ்வொன்றும் எத்தனை விதமான விளைவுகளை ஏற்படுத்தின?
மெழுகுவத்திகள் கரைந்துவிடும் போதே, கவலைகளும் கரைந்துவிட்டால் எவ்வள‌வு நன்றாய் இருக்கும்
இறந்தவர்களுக்கு நினைவு நாள் என்று ஒன்றை நினைவில் வைத்துக்கொண்டு அன்றைக்கு பழைய நினைவுகளில் மூழ்குவது எல்லா ஊர்களிலும் உள்ள ஒரு பழக்கம்.அந்த பழைய நினைவுகள் நாம் அனுபவித்த உணர்வுகளை மீட்டி, நாளை முதல் வாழ்வின் பரிமானங்களைப் புதுப்பார்வையோடு பார்க்கவே உதவ வேண்டும்.
கற்றுக்கொள்வது என்றால் சிந்திப்பதும் ஆகும், அது சில நேரங்களில் கசப்பானதாகவும் அமையும்.
மனிதனின் தன்மையென்று நாம் கொண்டாடும் சகமனிதர்களிடம் இருக்கும் இசைவும் இணக்கமும் ஒரு கலாச்சாரத்தின் உயிர். அது கொல்லப்பட்டால்,அதுவும் வன்முறை தான், அந்த நாள் துக்கமான நாள் தான்.
ஒரே தேசத்து மக்களிடையே நல்லிணக்கம் செத்த நாள், பாடங்களைக் கற்றுக்கொடுக்கத்தான் இருக்கவேண்டும். கற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இது இன்னொரு வாய்ப்பந்தல் போட்டு வெட்டியாய்த் திரிய இன்னொரு சந்தர்ப்பம்.
புரிந்து கொள்வதும்,புரிதலின் விளைவாக விழிப்புடன் இருப்பதும், விழிப்புடன் இருப்பது வெறியுடன் இருப்பதல்ல என்று தெளிவடைவதும் தான் ஒரு துயரமான சம்பவத்தின் தேதியை நினைவில் வைத்துக்கொள்வதற்கான அவசியம்.
இதையும் ஒரு நாடகமாக, சமுதாயக் கேளிக்கையாக, தனக்கு மனத்தில் ஏற்படாத பாதிப்பென்றாலும் காட்டிக்கொள்ள வேண்டிய ஒரு நாகரிக  நிர்ப்பந்தமாக இவ்வகை நாட்கள் அமைந்து கொண்டிருக்கும் வரை, உண்மையிலேயே வருந்தியவர்களது உணர்வுகள் மரியாதை இழந்துகொண்டே போகும்.
இப்படி நடக்கும் ஒவ்வொரு நாள் பற்றிய நினைவும், யார் என்ன செய்தார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்வதை விடவும், ஏன் அப்படி செய்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவும் தூண்ட வேண்டும்.
இது ஒரு விசாரணை தான். ஓய்வு பெற்ற ஒருவருக்கு தரப்படும் வேலை வாய்ப்பு அல்லஒரு குற்றத்தின் பின்னனியில் இருக்கும் துரோகத்தை, நயவஞ்சகத்தை, குறுகிய நோக்கத்தை ஆராயும் ஒரு விசாரணையாக‌ மட்டும் அல்ல,  தன்னைமீறி- தன் சூழலை, சமுதாயத்தை, சகமனித மனங்களை எவ்வளவு தூரம் நாம் அலட்சியப்படுத்தி வருகிறோம் என்னும் சுயபரிசீலனையாக இருக்கவேண்டும். நம்முள் கனன்றுகொண்டிருக்கும் பேதவெறியை அடையாள‌ம் காணவேண்டும், அப்போதுதான் அது எரிந்து எரித்து எதையும் அழிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்‌.
இன்னும் எவ்வளவோ வருடங்கள் உலகில் இருக்கின்றன, ஏன் நடந்தது யார் காரணம் என்றெல்லாம் கண்டுபிடித்து அறிக்கை சம்ர்ப்பிக்க அவசரம் இல்லை. குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களும் மட்டுமல்ல அவர்களது அடுத்த வாரிசுகளும் வேறு வேலை பார்க்கப் போய்விடுவார்கள்...
எல்லாருக்கும் வயதாகிவிடும்.
கோரத்தின் தன்மை காலத்தில் கொஞ்சம் மழுங்கிவிடும். புத்துப்புது நியாயங்கள் உருவாக்கிக்கொள்ளப்படும்.
மெத்தனமும் வன்முறை தான்.
நமக்கு நேரமும் ஞாபகமும் இருந்தால், இன்னும் பல ஆண்டுகள் கழித்து, காமெராக்கள் தயாராகிவிட்டபின், மெழுகுவத்திகளைக் கொளுத்தலாம்..

Tuesday, November 17, 2009

ஏதோ ஒரு காரணத்திற்காக‌

சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க‌.....
உங்கள் அன்பிற்கும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி என்னும் சாதாரண வார்த்தையைமட்டுமே கற்றுவைத்திருக்கிறேன்.

மீண்டும் எழுத மட்டுமல்ல மீண்டுமீண்டும் எழுதவே ஆவல்;
எழுதுகோல் இருந்தாலென்ன, எழுத்தல்லவா வேண்டும்!
எழுத என்ன தடை? படிக்க, படைத்த கண்களையுமீறி இன்னும் அன்புடன் சிலகண்கள் இருந்தும், எழுத என்ன தடை?

கர்வத்தை கூட தக்கவைத்துக்கொள்ள காரியங்கள் தேவை. பின்னால் எழுதலாம், அப்போதும் படிக்க எல்லாரும் காத்திருப்பார்கள் என்ற நிலை அன்று கம்பனுக்கோ இன்று ஜெயகாந்தனுக்கோ கூட இல்லை எனும்போது நிச்சயம் எழுதாமல் இருந்தது திமிரினால் இல்லை. எழுதவேண்டிய எல்லாவற்றையும் எழுதிமுடித்துவிட்டதாக ஓர் இறுமாப்பும் இல்லை.

மொழியற்ற மெளனம் சாத்தியமா என்று தெரியவில்லை; அதன் அருகே வரக்கூடியது மனச்சோர்வின் வெறுமை.
கடவுள் என்னும் கம்பீரக்குரல் செவிடர்களுக்கு மட்டுமே கேட்கட்டும்,(Anne Sexton எழுதியது போல‌) எனக்கு என்னவோ மானுட மொழியின் சப்தம் தேவைப்படுகிறது- எந்தமொழியாக இருந்தாலும்...சப்தமாக மட்டுமே இருந்தாலும்.

இருத்தலின் இயலாமை ஒரு தத்துவ விசாரணையாக இருந்தாலும், அது எல்லோர்க்கும் அவ்வப்போது அனுபவமாகவும் இருந்துவந்திருக்கிறது. அது மெளனத்தின் இடைவெளிகளை உற்றுப்பார்க்க வைக்கும் ஒரு மனநிலை. அதில் மெளனம், ஒரு பிரத்யேக பிரக்ஞை.
ஒரு அசாத்தியமான அசதி மெதுவாக மேலே படரும்போது, வலியும் சுகமாவதுபோல் மெத்தனமும் இயக்கமாகிவிடுகிறது.

சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க‌