Monday, April 13, 2015

கடைசியாய்...

கடைசியாய்...

அவரிடமிருந்து ஓர் அழைப்பு , இரவில் ஓய்வாகிவிட்டு உறக்கத்தை எதிர்நோக்கி, வெட்டியாய் உட்கார்ந்திருந்த நேரம், மாடியிலிருந்து என் மனைவி உமா அவசரமாகக் கீழிறங்கி, “ ட்ரெஸ் போட்டுக்கோ..”, என்று சொல்லிவிட்டு கார் சாவியைக் கையிலெடுத்தாள். லுங்கியிலிருந்து பேண்ட் மாற்றியவாறே ‘எங்கே” என்றேன், “ஜேகே” என்றாள். அவரிடமிருந்து முன்பெல்லாம் அழைப்பு வரும்போது அவள் எங்கே என்றால் நான் “ஜேகே” என்பேன்.... இம்முறையும் அவரிடமிருந்து தான் அழைப்பு, அவர் குரல் மூலம் அல்ல.
அந்த வீட்டுள் நுழையும்போது பதட்டமுமில்லை, பயமும் இல்லை, சோகமும் இல்லை.. ஒரு மயானமௌனமே மனத்துள் கனத்தது. அப்போதுதான் ஐஸ் பெட்டியில் உடல் கிடத்தப்பட்டது..யாரோ ஒரு மாலை வைத்திருந்தார்கள்...மாமியிடம் கொடுத்து போடச்சொன்னார்கள்...அவர்களால் சரியாகப் போடமுடியவில்லை..நான் அந்த மாலையைச் சரிசெய்து அந்த உடலில் அமைத்தேன்..அப்புறம் அந்தப்பெட்டி மூடப்பட்டது.
திகைப்பும் தவிப்புமாய் சில நிமிடங்கள் கழித்து,, என்னென்ன செய்ய வேண்டும் என்று அவர் மகளிடமும் மருமகனிடமும்  பேசிவிட்டு வெளியே சென்றேன்..வாசலில் எஸ்.ராமகிருஷ்ணன்..
கொஞ்ச நேரத்திலேயே ஊடகக்காரர்கள். துக்கம் தாக்கி அதன் ஆரம்பம் தணியும் முன்னமேயே அவர்கள் அவசரமாய் படமெடுக்க ஆசைப்பட்டார்கள்.. “வெய்ட் பண்ணுங்க கொஞ்ச நேரம் ஆகட்டும் அப்புறம் படமெடுங்க” என்று நான் சொன்னதால் பல ஊடக்காரர்களுக்கு என் மேல் கோபம் வந்திருக்கும், அவர்கள் அதைக் காட்டவில்லை, எனக்கு அவர்களது அநாகரிக அவசரத்தின் மீதிருந்த கோபத்தை நானும் காட்டாதது போலவே.
அன்றிரவு பெசண்ட் நகர் மின்னிடுகாட்டைத் தேர்வு செய்ததில் என் பங்கும் உண்டு. பெரிய கூட்டம் வரும்..அங்கே தான் வண்டிகளை நிறுத்திவிட்டு வர வசதியாயிருக்கும் என்பதே என் எண்ணம்....
காலை முதல் மரணச்சான்றிதழ், மயானத்துக்கான ஏற்பாடுகள் முடித்துவிட்டு அங்கே போனால் நிறைய பேர் இருந்தார்கள்...கூட்டம் இல்லை.
சம்பிரதாயமாய் காமெராமுன் வருத்தம் பதிவு செய்யவும், பிரபலங்கள் பதிவு செய்யும்போது பக்கத்தில் நின்று தம்முகம் காட்டிக்கொள்ளவும் தான் பலரிடம் முனைப்பு இருந்தது...இன்றைய யதார்த்தம் என்று இதையும் ஒதுங்கி சலித்து நின்றபோது, ஒரு பிரபலம் படை சூழ வந்தார்..காலணி கழற்றாமல் அவர் அவசரமாய் உடலிருந்த அறையுள் புக பின்வந்த பரிவாரங்களும் அப்ப்டியே உள் புக,..”செருப்பையாவது கழட்டிட்டு போங்கடா” என்று கத்திவிட்டேன்.
கொஞ்ச நேரம் கழித்து உடல மயானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது...
பெசண்ட் நகர் மின்னிடுகாட்டைத் தேர்வு செய்ததில் என் பங்கும் உண்டு. பெரிய கூட்டம் வரும்..அங்கே தான் வண்டிகளை நிறுத்திவிட்டு வர வசதியாயிருக்கும் என்பதே என் எண்ணம்.
அது பக்கத்தில் போரூரில் உள்ள சிறிய மின்தகன மேடைக்குச் சென்றிருந்தாலே போதும், அந்தக் குடும்பத்துக்காவது சௌகரியமாயிருந்திருக்கும்.

பாரதியைவிடவும், லாசராவை விடவுமாவது இவருக்குக் கூட்டம் இடுகாட்டில் இருந்தது...

Monday, January 5, 2015

ஏ.எல்.முதலியார், குமாரதேவன், நான்

A.L.Mudaliyar- இவரை லட்சுமணசாமி முதலியார் என்று தெரிந்ததை
விடவும் ஏ.எல்.முதலியார் என்றே பலரும் அறிவர். அவரைப்பற்றி எழுத நிறைய இருந்தாலும்..இது அவரைப்பற்றி அல்ல. இது அவரது படத்தைப் பற்றி, எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு பற்றி.
1972, நான் முதன்முதலில் சென்னை மருத்துவக் கல்லூரியில் கால் வைத்த ஆண்டு. எங்கள் ‘சீனியர்கள்”  எங்களுக்கு வரவேற்பு கொடுத்த இடம் தான் கல்லூரியின் பரீட்சை அரங்கு, 
அத்துடன் கல்லூரியின் பல விழாக்களும் அங்கே தான் அப்போது நிகழும்.அந்த மேடையில் நான் நிறைய பேசியிருக்கிறேன், கண்ணதாசனுக்குக் கூட அந்த மேடையில்தான் மாலை சூட்டியிருக்கிறேண்..அந்த மேடைக்குப் பின்னணி ஓவியம் வரைந்திருக்கிறேன்... 

அங்கே தேர்வுகளில் வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்திருக்கிறேன்...கடைசியாக 2010ல் புதிதாய்ச் சேர்ந்த மாணவர்களுக்கு உரையாற்றியிருக்கிறேன்.
கல்லூரியின் முதலாண்டு பரீட்சையின் முடிவில், அதிசயமாய் என் அப்பா, ”எக்ஸாம் எப்படி பண்ணினே?” என்று கேட்டார், “ஓகே” என்று சொன்னபின், “ஏன் கேக்கிறே?” என்றேண்..”அங்கே ஒரு படம் இருக்குமே பார்த்தியா?” என்றார். பார்த்ததாய் நினைவில்லை.
அப்புறம் மெதுவாய்ச் சொன்னார், “ அது நான் வரைஞ்ச பெய்ண்டிங்..”
என் அப்பா ஒவியர் என்று தெரியும்..அவர் சென்னை கவின்கலைக் கல்லூரியின் ராய்சௌத்ரியின் காலத்து மாணவர். நான் விவரம் புரிந்து அவர் வரைவதை கவனிக்க ஆரம்பிக்கும் காலத்தில், அவர் சில பாடநூல்களுக்குப் படம் வரைந்து கொண்டிருந்தார். தவிரவும் அரசு மகப்பேறு மற்றும் அரசு கண் மருத்துவமனைகளில் ஓவியராகப் பணி புரிந்து வந்தார்.
கண் மருத்துவமனையில் அவரது காலத்தில், கண்ணுக்குள் அவரே ஸ்லிட்லாம்ப் வழியாகவும், ஆஃப்தல்மாஸ்கோப் வழியாகவும் பார்த்து வரைய வேண்டியிருந்தது..அப்படி ஒரு கண் பழுதான பெண்ணைக் கண்வழி பார்த்து, காதலித்து, கலப்பு மணமும் செய்துதான் என்னையும் ஈன்றார்.
அவர் வரைந்த ஓவியம் இது. அவர் சொன்ன பின் பலமுறை அதைச் சென்று பார்த்து, அதிலுள்ள குறை நிறை பற்றி அவரிடம் பேசியிருக்கிறேன். பலமுறை அங்கே காமெராவுடன் நானும் என் நண்பர்களும் இருந்திருந்தாலும், அந்தப் படத்தைப் படமெடுத்ததில்லை.
நேற்று என்னை உருவாக்கிய சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், பழைய மாணவர் சந்திப்பு நடந்தது. இதுதான் அந்த இடத்தில் நடக்கும் எங்களது கடைசி சந்திப்பு. இனி அந்த இடம் கல்லூரியாய் இல்லாமல், கட்டிட மாற்றங்களுக்குள்ளாகப் போகிறது.  அதனால் அங்கே அந்த  exam hall சென்று கடைசியாய் அந்தப் படத்தைப் பார்த்தேன்..அதைப் படம் பிடித்தேன்.


அங்கிருந்த attendar இடம் என்னையும் படத்துடன் படம் எடுத்துத்தரச்சொன்னேன்.. நான் படத்துடன் எடுத்துக்கொண்ட படம் சரியாக வரவில்லை. Perhaps i did not deserve to be recorded alongside. காலம் தாழ்ந்து செய்யப்படும் எந்த அங்கீகாரமும் சரியாக இருக்காது என்று மனத்துள் கனக்கிறது.