Sunday, October 19, 2014

மெட்ராஸ்

மெட்ராஸ் அற்புதமான சினிமா இல்லை தான், மதுபான(க்?)கடை கூட குறைகளே இல்லாத சினிமா இல்லைதான். ஆனாலும் இவை இரண்டும் நெஞ்சில் நெருடி என்னை யாரிடமாவது பேசேன் என்று கெஞ்ச வைத்தவை. சமீபத்தில் நான் பார்த்த படங்களில்..in reverse viewing not order..சரபம், சதுரங்க ஆட்டம். ஜீவா, பண்ணையாரும் பத்மினியும், இதற்கு தானே ஆசைப்பட்டாய்.., சூதுகவ்வும், ..என்று நிறைய படங்களைப் பற்றி நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். வேலையில்லா பட்ட்தாரி, சிகரம் தொடு என்பவை கூட பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன, அவை நெருங்கக்கூடிய சிலருக்கு..  ஆனாலும் மெட்ராஸ்…. மெட்ராஸ் தெரியாத சென்னைக்கார்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன். மனிதர்களைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல ஒரு மொழியின் இன்னொரு பரிமாணத்தை அறிந்து கொள்ள.
மெட்ராஸ் என் சொந்த ஊர்! ஒருமுறை ஒரு பத்திரிக்கையில் உங்க ஊர், உங்க சாமி பத்தி சொல்லுங்க என்றதும் சிந்தாதிரிப்பேட்டை அங்காளம்மன் பற்றிச் சொன்னதும் முதலில் அவர்கள் நம்பவில்லை. நான் மெட்ராஸ்காரன்.   மெட்ராஸிலும் மேல்தட்டிலிருந்து குதிக்கவில்லை, கீழ்-நடு-மையத்திலிருந்து சில ஆண்டுகளுக்குமுன் தான் மேல் வருமானத்திற்கு நிகராக செலவு செய்யும் திமிர் வந்தவன். ( செலவு செய்யத்தான், சேமிக்க அல்ல). இது என்னைப்பற்றிய பதிவு அல்ல.. சினிமா பற்றி, சென்னை பற்றி…)
சென்னை:சினிமா  என்றெல்லாம் வேறுபடுத்திப்பார்க்காத தலைமுறையிலிருந்து வந்தவன், அதைத் தவிர்க்கமுடியாது.
மீண்டும் சொல்கிறேன். மெட்ராஸ் சர்வதேச சாகசம் அல்ல.ஆனால் ஒரு கண்ணுக்குப் படாதவாறு வைக்கப்பட்டிருக்கும் சமூகத்தின் யதார்த்தமான சித்தரிப்பு. வியாபார நிர்ப்பந்தம் எனும் தவிர்க்க இயலாத தமிழ்சினிமாத்தனமான கதையில் இதை இழைத்ததே ஒரு சாகசம் தான். அதற்குத் தான் பாராட்டு.
‘ஆமா என்னாங்கடா’ என்று ஒளிந்து கொண்டிருப்பவரும் கூட முணுமுணுப்பாய் கூட தலை சிலுப்ப வைக்கிறது என்பதே இதன் வெற்றி. இது ஒரு சமூக மாற்றம்/புரட்சி என்று எந்த வெங்காயமும் உரிக்கப்போவதில்லை. ஆனால், தம் அடையாளம் மறைப்பவர் கூட புன்னகையுடன் அங்கீகரிக்க வைத்தது இன்னொரு வெற்றி.
எனக்கு இதில் சில பாத்திரங்கள் பேசும் பாஷை புரிந்து கொள்ள உற்று கவனிக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் இவர்கள் என் மக்கள். எப்படி சேட்டுகளின் தமிழ் என்றொரு பிம்பம் தமிழ் சினிமாவில் ஆழ விழுந்துவிட்ட்தோ அப்படித்தான் சேரிவாழ் மெட்ராஸ் பாஷையும் சினிமா பிம்பத்தில் அடைபட்டு பலருக்கு அதன் பரிணாமம் புரியாது போய்விட்டது. இதை உடைக்க வந்ததற்காகவே இப்படத்துக்கு பாராட்டு.

என் அடையாளதை நான் மறுத்ததில்லை, மறந்ததுமில்லை, ஆனால் நினைவிலேயே நிலைநிறுத்திக் கொண்டதுமில்லை. நான் இங்கேயே இருந்திருக்க வேண்டிய ஒருவன், உழைப்பும் முனைப்பும் தன்னம்பிக்கையும் தெய்வநம்பிக்கையும் என்னை இவர்களின் ‘விளிம்பு’ என்று வர்ணிக்கப்படும் நிலை தாண்டி வரவைத்திருக்கிறது.. இப்படத்தில் தெரியும் பாத்திரங்கள், மனிதர்கள், குறிப்பாக இளைஞர்கள் இப்படி மீறி வரக்கூடிய சாத்தியத்தையும் இப்படம் முன்வைக்கிறது..ஆகவே, மனப்பூர்வமாய், best wishes for more Ranjith.

Thursday, October 16, 2014

பிரபாகர், லூஸி, ராக்கி மற்றும் நான்..


நாய்களை எனக்குப் பிடிக்கும். பொதுவாக நாய்கள், பங்களாத்திமிருடன் இருந்தாலும், பொறைபிஸ்கட் காத்திருப்புடன் தெருக்களில் திரிந்தாலும், என்னிடம் எப்போதும் அன்பாகவே இருந்திருக்கின்றன… (மிருகவசியம் வெங்காயம் எல்லாம் கிடையாது, பூனைகள் அப்படி என்னிடம் ஈஷிக்கொண்டதில்லை).  இங்கே ராஜராஜன் காலத்து நாய் பார்த்ததால் இப்பதிவு.


நாய் வளர்க்க வீடும் வேண்டும், வீட்டில் அதற்கு ஒத்துழைக்கும் குடும்பமும் வேண்டும். எப்படியோ எனக்கு இவை இரண்டும் எப்போதுமே வாய்த்தன. என் முதல் நாய்….பிரபாகர்.


பொதுவாக நெருக்கமானவர்களுடன் அரட்டையில் ஈடுபடும்போது, “ அந்த நாய் என்ன எழுதியிருக்கு தெரியுமா?... அந்த நாயையெல்லாம் ஒரு விஷயமா எதுக்குப் பேசுறே?... எனக்கு அந்த நாயை நல்லா தெரியும்” என்றெல்லாம் சகமனிதர்களைக் குறிப்பிடும் பழக்கம்/வழக்கம் எனக்குண்டு. ஆனால் பிரபாகர் வேறு. பிரபாகர் நிஜ நாய், நல்லது.
அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும்…வீட்டுக்கும் ஒரு குட்டி நாய் என் அப்பாவின் நண்பர் கொண்டுவந்து கொடுத்தார்..அதையொட்டிய சில நாட்களில் நான் படித்த பள்ளியில் ஒருவன், என்னை நாய் என்ரு திட்டினான். ஏன் என்று நினைவில்லை, அப்போதெல்லாம் சண்டை போட எனக்குத்தெரியாது. வீட்டுக்கு வந்தபின் திடீரென்று “ப்ப்பிக்கு என்ன பேர் வைக்கலாம்?” என்று என் அத்தை  கேட்டவுடன்..பிரபாகர்ன்னு பேர் வை, என்றேன்.. (அந்த வயதின் வன்மம் இன்று ஆச்சரியமாய் இருக்கிறது).
பிரபாகர் கறுப்பும் ப்ரௌனும் கலந்த நாய். வேகமாக என்னை விட உயரமாக வளர்ந்து விட்டதில் அதன்மீது எனக்கு கொஞ்சம் பொறாமை இருந்ததாக நினைவு. அது அல்சேஷன் என்றார்கள்..நாய்களைப் பற்றி பின்னாளில் படித்து யோசித்தால் அப்படித் தெரியவில்லை. ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பி வந்தால் நாய் இல்லை. எங்கே என்றால் ஓடிப்போச்சு என்றார்கள். யாரும் தேடவில்லை, நானும் கவலைப் படவில்லை. பிரபாகர் மீது அப்படியொன்றும் எனக்கு அன்பு இல்லை..

அப்புறம் வீடு மாறியது, பள்ளி மாறியது, வயது கூடியது…ஐந்தாம் வகுப்பின்  வயதிருக்கும்… Enid Blyton  படித்து முடித்த காலம். வீட்டுக்குள் ஒரு நாய் அடைக்கலம் புகுந்தது.. வெள்ளை நாய், பெண்நாய் என்றார்கள், பேர் வைக்கச் சொன்னார்கள், ‘லூஸி’ என்றேன்,, ப்லைடன் தாக்கத்தில்.
சில ஆண்டுகளில் அது செத்துப்போனது. ஆனால் லூசியிடம் எனக்கு ஒரு ஒட்டுதல் இருந்தது. அதற்கு அவ்வளவு அழகான கண்கள், அந்த கண்களால் என்னைக் கொஞ்சும், கெஞ்சும்.. அதை வீட்டிலேயே புதைத்தார்கள். இன்றும் லூஸி முகம் மனத்துள் தெரிகிறது.
அப்புறம், படிப்பு, சுயவருமானம் என்று பலப்பல முக்கியங்கள் நாய் பற்றி யோசிக்க விடவில்லை. முப்பத்தைந்து வயதில் சுயமாய் ஒரு மருத்துவமனை உருவாக்கும் போது, ஒரு நாய் உள்ளே தஞ்சம் புகுந்த்து. அதற்கும் லூசி என்றே பெயர் வைத்தேன். என்னிடம் கொஞ்சியதை விட என் உடன் இருந்த பணியாளர்கள் தான் அதை வளர்த்தனர்.
வாங்கிய கடன் கட்ட முடியாத சிரமம், உளைச்சல், உள்நோயாளிகளுக்கு அவசியமில்லாத புது மருந்துகள்..ஆகவே வருமானச்சரிவு..….நாடகமேடை விட்டகன்ற வெறுமை வெறுப்பு..எல்லாமும் லூசியை நான் ஏய் என்று கூடச் சொல்ல விடாத வாழ்வுச்சிக்கலில் இருந்தாலும், லூஸி பழைய லூஸி போலவே என்னை எப்போதும் பார்க்கும். என் கண்கள் அவள் கண்களை சந்திக்கும் போது வாலாடும், வாலும் விழியும் புன்னகை பொழியும்.

எங்கள் கடன் தீர்க்க என் உமா அமெரிக்காவுக்கு வேலை செய்யப் போனபின்.. கடன் தீர்ந்தபின்…சொந்தமாய் வீடு வாங்க முடிவு செய்து, புது கடனோடு, புது வீட்டிற்கு ஆயத்தமாகும் போது, எவ்வித நோய் அறிகுறியுமின்றி..இரண்டாம் லூசி செத்துப்போனாள். புது வீட்டுக்குப் போகும் ஒருவாரத்திற்கு முன்.
புதுவீடு+க்ளினிக் என்று வந்து பத்தாண்டுகளுக்குப்பின்..இன்னொரு நாய் வந்த்து. அன்று டிவியில் ஸ்டேலோனின் ராக்கி ஓடிக்கொண்டிருந்ததால் அதன் பெயர் ராக்கி என்றானது.
ராக்கி ரொம்ப அன்பான நாய். தினமும் என்னைப் பார்க்க வரும் ஐம்பது பேர்களுடன் கொஞ்சி விளையாடும்..எல்லார்க்கும் செல்லமாய் இருந்த ராக்கி தன் இரண்டாவது வயதில் (இதுவும் பெண்)..குட்டி போட்ட்து. கூடவே சொறி சிரங்கு எல்லாம் வந்த்து…என்னால் பராமரிக்க முடியாது என்று அதை ஒரு நாய்கள் பராமரிக்கும் இட்த்தில் சேர்த்து விடச் சொன்னேன். ஆட்டோவில் ஏறும் போது ராக்கி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த்து..
அது தமிழில் பேசுவதாயிருந்தால் என்னைப் பார்த்து, நாயே” என்று சொல்லியிருக்கும்.




Wednesday, September 10, 2014

அரைகுறை

1984- முப்பதாண்டுகளுக்கு முன், சென்னை மனநல காப்பகத்தில் மாணவனாய் இருந்த போது,ஃபிலிப் பினெல் அவர்களுக்கு ஒரு சிலை செய்ய முடியுமா என்று என் உதவிப்பேராசிரியர் டாக்டர் ராமநாதன் கேட்டார், கூடவே ஒரு மங்கலான படத்தையும் கொடுத்தார். 
இரண்டு நாட்களுக்குப் பின்,களிமண்ணில் செய்து அவரை வீட்டுக்கு அழைத்துக் காட்டினேன். இதை நம்ம IMHல் செய்ய முடியுமா என்று கேட்டார். 
செய்யலாம் ஆனால் இதற்கு முன் சிமெண்டில் செய்ததில்லை என்றேன். செய்து பாரேன் என்றார். மறுநாள், முதலில் சிலைக்கான பீடம் உருவாக்கினோம். அங்கே உள்நோயாளிகளில் சிலர் கொத்தனார்கள் என்பதால் அவர்களை வைத்தே நான் சொன்ன அளவில் பீடம் உருவானது. பீடத்தின் மீது செங்கற்களால் அடுக்கப்பட்ட மார்பளவுக்கான உள் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. 
மறுநாள் காலை சிமெண்ட் கலவையை அப்பி களிமண்ணில் செய்வது போலவே ஆரம்பித்தேன். இரண்டுமணி நேரத்தில்..முகம் மார்பு வந்து விட்டது.. கொஞ்சம் ஓய்வுக்காகவும் உணவுக்காகவும் கீழிறங்கி, கை அலம்பினால் தண்ணீர் படும்போதே தாங்க முடியாத எரிச்சல். கோணிகளால் சிலையை மூடி வைத்து அதன் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க ஏற்பாடு செய்துவிட்டு வீட்டுக்குப் போனால் கை சிவந்து..மாலைக்குள் கொப்புளித்து விட்டது. கை சரியாக நான்கு நாட்களாகின. மீண்டும் சிலையைப்பார்த்தால் எல்லாமே இறுகி விட்டிருந்தது. முழுதாய்க் கொத்திவிட்டுத்தான் செய்ய முடியும் எனும் நிலை.
கையின் எரிநினைவு தைரியத்துக்குப் பதில் தயக்கமே தந்ததால், எக்ஸாம் முடிஞ்சப்புறம் பண்றேன் சார் என்று சொல்லி விட்டேன். என்ன காரணத்தாலோ அது நடக்கவேயில்லை. அந்தச்சிமெண்டி சிலையும் முதலில் உருவாகிய களிமண் சிலை போல் அமையவில்லை.
அதன்பின் 1989 திடீரென்று தொலைபேசியில் என் சிநேகிதியும் மனநல மருத்துவருமான சந்திரலேகா, “ உன் சிலைக்கு பெய்ண்ட் அடிச்சாச்சு ..திறந்து வைக்கப் போகிறோம், வா” என்றாள். “எதுக்கு இப்ப?” என்றதற்கு சும்மா வா, என்றாள். போனால், அப்போதைய காப்பகத்தின் இயக்குநர், என் முன்னாள் ஆசிரியர் டாக்டர் பீட்டர் ஃபெர்னாண்டஸ் வந்து திறந்து வைத்து, பினெலுக்கு மாலை போட்டார். எல்லாரும் படம் எடுத்துக் கொண்டதாய் ஞாபகம்...இன்று வரை அதன் படம் என்னிடம் இருந்ததில்லை.
அரைகுறையாய் விட்ட அதிருப்தி, சலனம்,கொஞ்சம் அவமானம் எல்லாமே அந்தச் சிலையிலிருந்து என்னை விலக்கி வைத்தபின்.. இப்போது முகநூலில் ஒரு சிநேகிதி (கற்பகம் வள்ளிhttps://www.facebook.com/photo.php?fbid=842906225751799&set=a.522835471092211.1073741825.100000972889964&type=1&relevant_count=1), இதைப் படம் எடுத்துப் பகிர்ந்திருந்தார். அலையலையாய் எண்ணங்கள்.. அன்றைய கைகளின் எரிச்சல் மனத்துள்....
philippe pinel பற்றி- அவர் நெப்போலியன் காலத்து மனநல மருத்துவர். அப்போதெல்லாம் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டே வைத்திருக்கப்படுவார்கள். மன்னருடன் they too need liberty equality and fraternity என்று (allegedly)
வாதித்து, மனநோயாளிகளுக்கு சங்கிலிகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தவர் அவர். பிலிப் பினெல் சிலை, அன்று சிறையிலிருந்து மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த காவல் மிகுந்த வார்டின் முன் தான் உருவாக்கப்பட்டது, உருவகமாய்.
இன்று முடிவுறாத சிலை, முடிவுறாத பல நியாய தேடல்களையும் என்னுள் கிளறி விட்டது.
வாய்ப்பு கிடைத்தால் இதை இப்போதாவது சரி செய்ய விருப்பம்..ஆனால்... முடிந்தகதை தொடர்வதில்லையாமே

Thursday, September 4, 2014

ஆசிரியர் தினத்துக்காக..

ஒரு வயதில், குரு தேடி அலைந்திருக்கிறேன். அவ்வப்போது, “நீ தயாரான நிலைக்கு வந்தவுடன் குரு தானாய் உன்னை வந்து ஆட்கொள்ளுவார்”, என்று எழுதப்பட்டதையெல்லாம் நம்ப விரும்பாத ஆணவத்தில், தொடர்ந்து தேடி வந்திருக்கிறேன். தெருவில் போகும்போதுகூட தாடி வைத்தவனையெல்லாம் ஓரக்கண்ணில் எடைபோட்டவாறே தேடியிருக்கிறேன்
மனத்துள் ஒரு குரு பிம்பம் உருவாக்கி, அதையே தேடி அலைந்திருக்கிறேன். அந்த பிம்பம் உருவாய் ஆனது; குரு உருவாய் மட்டுமல்ல அருவாய், மருவாய், மணியாய், ஒளியாய், கதியாய், விதியாய்..எப்படி வேண்டுமானாலும் வருவார் எனும் அருணகிரி வாக்கை நன்கு மனத்துள் இருத்திக்கொண்டிருந்தாலும், விழிபடும் குருவை வழிபட அலைந்திருக்கிறேன்.
குருவின்றி வித்தை சாத்தியமில்லை என்றே நான் படித்த சாத்திரங்கள் திட்ட வட்டமாய் சொல்லி விட்டதால், ரொம்பவும் தீவிரமாகவே அலைந்திருக்கிறேன். அப்படி அலையும் காலகட்டத்தில், கைவசம் கொஞ்சம் ஓவியம், தேவையான அளவு மருத்துவம், தேரும் அளவு எழுத்து என்னிடம் இருந்தது. பதின்வயதுகளில் அல்ல, முப்பதுகளின் மத்தியில்தான் இந்த குரு தேடல் ஆரம்பம்.
ஆன்மிகச்சந்தையில் விளம்பர வசீகரத்துடன் வழிகாட்டுவதாய் வருமானம் சேர்க்கும் வியாபாரிகளை எளிதில் அடையாளம் காண முடிந்தாலும், உள்ளே நிச்சயம் ஒரு குரு கிடைப்பார் என்றே அலைந்தேன். குரு என்பவர் என் எல்லா கேள்விகளுக்கும் விடை தருபவராக மட்டுமல்ல, அவரது நெறியின் மீது எனக்கு எவ்விதக் கேள்வியும் எழக்கூடாது என்பதே அடிப்படை தகுதியின் தேர்வாக நானே நிர்ணயித்திருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு ஓரிருவர் மீதும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது- நெருங்கிப்பார்க்கும் வரை.
 அப்படியான என் தேடல் காலத்தில், என் மருத்துவமனையில் ஒருவருக்கு மனப்பிறழ்வு என்று என்னிடம் அழைத்து வந்தார்கள். எனக்கென்னவோ உள்ளே நிஜமாக உடல் சார்ந்த நோய் இருப்பதாய்ப் பட்டது. ஓர் அனிச்சைச் செயலாய், சாயந்திரம் வாங்க, என் வாத்தியார் இருக்கார் அவர் கிட்டயும் கேட்டுடலாம் என்றேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். அந்த காலகட்டத்திலேயே என் மனநல மருத்துவத்துறையில் எனக்கென ஒரு சிறப்பிடம் மக்கள் மத்தியில் இருந்தது. மாலை அவரைப் பார்க்க அவர்களோடு நானும் போனேன்.       “என்ன டாக்டர்?” என்றார், சொன்னேன். பத்து நிமிடம் பரிசோத்து விட்டு, “யு ஆர் ரைட்..இவருக்கு…..” என்றார். கூட வந்தவர்களுக்கு ஆச்சரியம் எனக்கு இது சகஜமான விஷயம்.
இப்படித்தான் அவர்.-எப்போதும்.
சிக்கலான கேள்வியோடு நான் போய் நின்றால், எளிமையாக நிதானமாக விடையும் விளக்கமும் சொல்வார். நான் விவரித்த நிகழ்வு, அவரது மாணவனாய் மருத்துவக்கல்லூரியிலிருந்து வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின். படிக்கும் காலத்திலேயே அப்படித்தான்.
என் மீது (நான் ஓவியனாய் எல்லா ஆசிரியர்களுக்கும், அவர் உட்பட, அந்த காலத்தில் அவசியமான ஸ்லைட் வரைந்து தந்து வந்ததால் மட்டுமல்லஅவருக்கு அன்பு இருந்தது. “லஞ்ச் முடிச்சுட்டு வார்டு வாங்க டாக்டர், கேஸ் பார்க்கலாம்என்பார். மதியம் வீட்டுக்குப் போகாமல், இது பாருங்க..இது ஏன்னு நினைக்கிறீங்க, இந்த டெஸ்ட் இப்படிப் பண்ணினா இன்னும் க்ளியரா தெரியும்என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயமாய் எனக்குச் சொல்லித்தந்தார். அது அவரிடம் நான் நேரடி மாணவனாய் இல்லாமல் வேறொரு வார்டில் இருந்தாலும்.
மருத்துவப் படிப்பு முடித்து நான் சின்னதாய் ஒரு க்ளினிக் வைத்தபோது அவரிடம் சென்றேன்..”சாயந்திரம் வாங்கஎன்றார்..பின்மாலையில் தன்னுடன் உட்கார வைத்து, அவர் எப்படி பார்க்கிறார், பரிசோதிக்கிறார், என்ன மருந்து தருகிறார் என்பதை கவனிக்க வைத்தார், அவரது க்ளினிக் நேரம் முடிந்தவுடன்அது என்ன கேஸ்என்று பார்த்தவற்றை எப்படிப் பார்ப்பது என்று ஒரு வாரம் விளக்கினார். அதன் பின், ஒரு நாளைக்கு என் க்ளினிக்கில் அவரை விடவும் கூட்டம்அவரிடம் இதைச் சொன்னவுடன், “வெரி குட், டாக்டர். அப்படியே டெவலப் பண்ணுங்கஎன்றார்.
அதன்பின், மனநல மருத்துவம் தான் என் துறை என்று நான் தீர்மானித்து அதில் மூழ்கியபோதும் அவரை அவ்வப்போது பார்க்காமல் இருந்ததில்லை. ஒவ்வொரு முறையும்இது என்ன சார், எப்படி சார்என்றுதான் போய் நிற்பேன். பதிலில்லாமல், பதிலினால் தெளிவில்லாமல் வந்ததில்லை.
அவரது மருத்துவமனையில் இருக்கும் அத்தனை பேரையும் தினமும், ஞாயிறு உட்பட மூன்று முறை பார்த்து பரிசோதித்து விடுவார். ஒரு முறை மூன்று நாட்கள் அவருக்கு வெளியே அவசர வேலை, என்னை அழைத்து இந்த மூணு நாளும் நீங்க ஹாஸ்பிடலை பார்த்துக்குங்க, என்ற போது நடுங்கினேன். நீங்க பாத்துப்பீங்கன்னு தான் உங்களை கேட்கிறேன் என்றார். எம்.பி.பி.எஸ் பாஸ் செய்ததைவிடவும் உள்ளே சிறகு விரிந்தது.
அவரிடம் தான்..மேற்சொன்ன அந்த நிகழ்வு. அன்று தான் எனக்கு ஒரு தெளிவு வந்தது. நோய் பற்றி அல்ல, என் வெற்று தேடல் பற்றி.
இதோ இவர், எல்லா கேள்விகளுக்கும் விடை தந்து, விளக்கம் தந்து, நான் உள் வாங்கினேனா என்று தெரிவு செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் என் மருத்துவ ஆற்றலைச் செப்பனிட்டு, அதன் தேர்ச்சியை அங்கீகரித்து.. வெளியே எந்த குரு வேறென்ன செய்து விட முடியும்?
தன் ஞானத்தை மெதுவாய் ஊட்டி விட்டு, நான் சாப்பிட்டு விட்டதை சபாஷ் என்பவரை விடவா ஒரு குரு?
அன்றிலிருந்து இவர் தான் குரு. இவரைப் போன்றோர் தான் குரு என்று தீர்மானித்தேன். ஒவ்வொரு துறையிலும் இப்படி இருப்பார்கள், அந்த துறையில் உட்புகும்போது அவர்கள் இருப்பார்கள், வழிகாட்டுவார்கள், விழி திறப்பார்கள் என்பது புரிந்தது

ஆன்மிகம் ஒரு துறையல்ல அது வாழ்வின் ஒரு பரிணாமம் ஆகவே அதற்கொரு குரு தேட அவசியமில்லை, மழை கொட்டும்போது தானாய் ஒன்று குடை விரிக்கும், குருவாய்.


என் வாழ்வின் எல்லா இன்ப துன்பங்களிலும் தன் நேரச் செலவைப் பார்க்காமல் என்னுடன் இருந்த என் குரு-, எப்போதும் என்னை டாக்டர் என்றும் வாங்க பாருங்க என்றும் விளித்து, என்னைச் சின்னவனாய்ப் பார்க்காமலேயே அவரை நான் மிகப் பெரியவராய் வியந்து மதிக்கவைத்த என் குரு- டாக்டர். வீரபத்ரன். Thank you again, sir, till I thank you again the next living moment in my life.