Tuesday, February 8, 2011

சாய்ந்தாடி சாய்ந்தாடி..


சாய்ந்து ஆடும்நாற்காலியில் ஓய்ந்த தருணங்கள் பற்பல எண்ணங்களைப் ப்ரசவிக்கும், வளர்க்கும், விரட்டி விடும் அல்லது இறுகப் பற்றிக்கொள்ளும். அதில் சில கவிதைகளும் ஆகியிருக்கலாம், சில கவிதைகளாகவே பிறந்திருக்கலாம்...

காணாமல் போன எண்ணங்கள் எல்லாமும் காகிதங்களில் தகனமாயிருந்தால் ஒரு காடு கூட மிஞ்சியிருக்காது. தகனம்? எழுத்தே அக்னிப்ரவேசம் தானே..தன்னைத் தன் கண்ணுக்கே முதலில் நிரூபித்துக்கொள்ள.

என்ன எழுத வந்தேன் எனும் ப்ரக்ஞையில்லாமல் எழுதிக்கொண்டிருப்பது மனவோடையாகாது, அது பிறழ்பதிவாகவும் கூடும். ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனக்காகவே என்று சொல்லிக்கொண்டே பிறருக்காக- ஏமாறவோ ஏமாற்றவோ அல்லாமலேயே இருத்தலை நினைவூட்டும் ஒரு முயற்சியாக.

இது சுயதம்பட்டமாகவும் ஒலிக்கலாம். தம்பட்டமோ ட்ரம்பெட்(trumpet)டோ இருந்தால்தான் ஒலிக்கும். இல்லாத கருவி கற்பனையில் இசைத்தாலும் கைதட்டல் வாங்காது. கைதட்டலை எதிர்பார்த்தே வாழ்க்கை.  
அம்மா கண்ணாலேயே கைதட்டவே குழந்தையின் குறும்பு, கடவுள் கைதட்டவே முனிவரின் தவம். இடையே கைதட்டல்களுக்கெல்லாம் நாகரிக அடையாளங்களை ஒட்டுவது சமூக அவசியம், சுயசௌகரியம்.

இதையெல்லாம் இப்போது ஏன் எழுதுகிறேன்? நினைப்பதால்! ஏன் நினைக்கிறேன்? நேரம் இருப்பதால்! நேரம் நிறைய ஒரு நாளில் மீதமிருந்தால் வருவது சோம்பல் மட்டுமல்ல, திமிர் கூடத்தான். 
நான் திமிருடன் இருக்கலாமா? யாருக்கு வேண்டுமானாலும் திமிர் இருக்கலாம்! காட்டிக்கொண்டால்தான் அது தவறாகத்தெரியும் திமிர், காட்டாமல் உள்பதுக்கி வெளிநடித்தால் அது நயமான கர்வம்! வித்யாகர்வம் கூட தன்வீட்டுக்குள்ளேயே சாதகம் செய்வதில் வராது, ஒரு சபையில்- அரங்கில்- கைதட்டலில்தான் வரும். எனக்கென்ன கர்வம்? எனக்கென்ன திமிர்?

பணபலமோ பின்புலமோ இல்லாமல் சாதித்தேன் என்பது நான் கொண்டுள்ள திமிர். இதை வெளிச்சொன்னால்தான் திமிர்! என்ன சாதித்தேன் என்று சிந்தித்து ஆய்ந்து அளந்து வரும் விடையைக் கூட வெளிச்சொன்னால்தான் திமிர். வெளியிடாத கர்வம் ஒரு சமூக ஒப்பனைதான். 
கர்வமோ திமிரோ வருமளவு என்ன சாதித்தாய் என்று என்னையே நான் கேட்க முயன்றபோது கிடைத்தாற்போல் தோன்றியது இதுதான்..- பயிற்சி இல்லாமல் படம் வரைந்து பணம் சம்பாதித்தேன், பெருமுயற்சி இல்லாமல் எழுதி புத்தகங்கள் விற்கவைத்தேன், 
கேவலம் என்று என் சமூகம் கருதியதை அறிவியல் கொண்டு அணுகினால் வேறு என்று விளக்கினேன், மனநோய் என்பதை மனநலம் என ஆக்கிவைத்தேன், 
விலை போகாதிருந்திருக்கிறேன், யாரையும் விலைக்கு வாங்கவும் நினைக்காமல் இருக்கிறேன்.. இதற்கெல்லாம் எனக்கு ஒரு கர்வம் வரலாம் என்றே என் மனம் அனுமதிக்கிறது. என் மனமே ஒன்றை அனுமதித்தபின் உங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருப்பது ஒரு சமூக நாடகம்தான்!

என்னவெல்லாம் செய்தேன் எனும் இறுமாப்பு மிகுந்த பட்டியலோடு, என்ன செய்ய முடியவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று வலிய எதிலெல்லாம் தோற்றேன் என்றும் ஒரு கணக்கு மனத்துள் போட்டால், முதலிலும் முக்கியமாகவும் வருவது- காசு சம்பாதித்துச் சேர்த்து வைக்காமல் திரிந்திருக்கிறேன், அன்பு நட்பு என்றெல்லாம் எதிர்பார்த்து அடிபடும்வரை ஏமாந்து கிடந்திருக்கிறேன்,  


நன்றி பரஸ்பரம் என்றும், பாசம் நிரந்தரம் என்றும் என்னையே ஏமாற்றிக்கொண்டு வந்திருக்கிறேன்...

ஆனால் இவையெல்லாம் தெரிந்தும் வெட்கப்படாமல் இருக்கிறேன். வெட்கமோ வருத்தமோ இல்லாமல் ஒரு மாறுதலும் செயல்பாட்டில் வராது என்று தெரிந்தும் அவ்விரு உணர்ச்சிகளையும் தவிர்த்து வருகிறேன்.


வென்றேன் ஆயினும் வாகை சூடவில்லை. வாழ்கிறேன் ஆயினும் நிறைநிலை அடையவில்லை. இதன் அடிப்படையாய் அடிநாதமாய் ஓடும் எண்ணம்-காசு சம்பாதிக்கத் துப்பில்லை என்று என்னையே துப்பிக்கொள்ளாமல் நிறைய வார்த்தைகளை விரயம் செய்கிறேன்.

காசு சம்பாதிக்க முடியாததால் கைதட்டல் சம்பாதித்தேன்!
இதைப் பற்றி யோசிக்கும் பொழுதில் தோன்றியது-
குட்டி அறை
தொட்டி மீனுக்கு இடமில்லை
குளத்துக்குப் பொரி.