Thursday, August 9, 2018

கலைஞர்


அற்பர்களின் அரசு தன் இயல்பான கீழ்மையை வெளிக்காட்டாதிருந்தால், எத்தனையோ கட்டங்களில் முகம் சுளித்து  கவனித்த அந்த மனிதனின் மேல் இத்தனை கரிசனமும் அன்பும் பொங்கியிருக்காது.

மூப்பின் தவிர்க்க முடியாத இறுதி கட்ட நோயின் வழி தான் ஏற்பட்டது அந்த மரணம். சதி செய்து யாரும் கொலை செய்து விடவில்லை.  பரிதாபப்படும் நிலையிலும் இருக்கவில்லை அவர் வாழ்க்கை. அரசியல் சாதுர்யம் என்று போற்றப்படும் சமரசங்களில்லாமல் இல்லை அவரது பொதுவாழ்வு. சிலரை அவசியமில்லாமல் ஏற்றிவைத்தும், சிலரை காழ்ப்புடன் ஒதுக்கி வைத்தும் தான் நடந்து கொண்டது அவரது மனம். எத்தனையோ திட்டங்கள் சிறப்பாகத் தீட்டினார்; அதில் பயனடைந்தது மக்கள் மட்டுமல்ல அவரைச் சார்ந்தவர்களும் எனும் கறையும் படிந்தது தான் அவரது ஆட்சி.  நாவன்மையால் எதிர்கேள்விகளை திசைதிருப்பி மௌனிக்க வைக்கும் ஆற்றலால் பல கேள்விகளை மறக்கடிக்கும் சிறப்பு உண்டென்றாலும், கேள்விகளெழுப்ப அவசியமில்லாத பொது வாழ்வு அவர் வாழவில்லை. இவ்வளவு நெடிய வாழ்பயணத்தில் அவர் எளிதாய் அடைந்த சிகரங்கள் அதிகம், ஆனால் சறுக்கல்களும் நினைவை விட்டுப் போய் விடவில்லை. ஆனாலும், மரணச்செய்தி கேட்டவுடன் மனத்துள் ஓர் அசாதாரண திகைப்பும் தவிப்பு ஏற்படத்தான் செய்தது.
மரணித்தவரின் மாண்புகளை மட்டுமே பேசும் மரபினால் வரவில்லை அவர் மீது மரியாதை. உழைப்பு, அறிவுத்திறன் ஆகியவற்றின் முன்னணி உதாரணம் அவர். 
காழ்ப்புணர்ச்சியில் அவர் செய்ததையெல்லம் விட்டு விட்டு தவறிய தருணங்களைப் பட்டியலிடும் வன்மம் நிறை மனிதர்களால் வரவில்லை ஒரு திடீர் பாசம்.
மத-இன வெறியுடன் அவரை விமர்சிக்கும் கீழ் குணம் படைத்தோரால் உருவாகவில்லை மனத்துள் அவர் குறித்த அன்பு.
குறைகளையும் குற்றங்களையும் அறிந்தே அவர் மீது மரியாதை வந்து நின்றது. நெடிய வாழ்வின் அரிய சாதனைகளுக்காக வரவில்லை இந்த மரியாதை. ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் தன் பால் கவனம் கொள்ளச்செய்த அவரது மரணத்தினால் வந்தது இந்த மாசற்ற மரியாதை.

எல்லாரையும் போலத்தான் மதியம் ஸ்டாலின் முதலமைச்சரை சந்தித்தவுடனேயே மறுநாள் குறித்த கவலையுடன் அவசியமான பொருட்களை வாங்கிக்கொண்டேன். மாலை வந்த மரணச் செய்தியும் எதிர்பார்த்த ஒன்றென்பதால் அதிர்ச்சியோ அழுகையோ வரவழைக்கவில்லை. ஊடகங்களில் பெருமைகள் ஒளிபரப்பானபோதும் பெரிதாய் மனத்துள் பாதிப்பு வரவில்லை. எல்லாருமே பிடித்தோ பிடிக்காமலோ தீர்மானித்து வைத்திருந்த அந்த மனிதரின் இறுதி இடம் குறித்த சர்ச்சை எழுந்த போது தான் உள்ளே எரிச்சல் ஆரம்பித்தது. சமூகவலைத்தளங்களில் கேவலமானவர்களில் கொக்கரிப்பும் எரிச்சலை கோபமாக்கியது. அந்தக் கோபம் அவரைப் பற்றி இன்னும் சிந்திக்க வைத்தது, அதனால் கோபம் அதிகமாகியது.

மறுநாள் புதையிடம் வேண்டி தொடுக்கப்பட்ட வழக்கு குறித்த செய்திகளைப் பார்க்கையில் கோபம் ஆத்திரமாகவே மாறியது. அந்த ஆத்திரம் அவர்மீது அன்பு கூட்டவே வைத்தது. சட்டச்சிக்கல் என்ற காரணத்தால் மறுக்கப்பட்ட இடம் எனும் சாக்கு உடைபட்டதும், வெவ்வேறு காரணங்களை உற்பத்தி செய்து வாதிட்ட அரசின் அற்பத்தனம் அவர்மீது மரியாதையும் அன்பும் அதிகரிக்க வைத்தது.

எத்தனை பெரிய கூட்டம் முகத்தைக் கூட பார்க்க முடியாது என்று தெரிந்து அவர் உடல் இருந்த இடம் தேடி வந்தது என்பதைப் பார்க்கப் பார்க்க மரியாதையோடு உள்ளுக்குள் ஏற்பட்ட பற்றினால் பெருமிதமும் உருவாகியது.
நண்பர்கள், தொண்டர்கள், அவரால் பயனடைந்தவர்கள்- அடையப்போகிறவர்கள் மட்டுமல்லாமல் எந்த லாபமும் எதிர்பாராமல் திரண்ட கூட்டம் அவரது இறுதி வெற்றி.

இவ்வளவு வன்மத்துடன் வஞ்சக எதிரிகளை உருவாக்கியதும் அவரது வெற்றிதான். வீரனுக்கும் அறிவாளிக்கும்தான் எதிரிகள் அதிகம். அப்படி ஒரு கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் அந்த அற்பர்களை வெளிப்படுத்தியதும் அவரது வெற்றிதான்.

ஒரு சாதனையாளனை கடந்த கசப்புகளை மீறி கரிசனத்தோடு வழியனுப்பி வைக்கும் மனநிலை தான் அவர் ஒரு வசனத்தில் கேட்ட கேள்விக்கு பதில்- அந்த இறுதி நேரங்களில், அம்பாள் பேசினாள், அவரை மனத்தில் உயர்த்தி.