Showing posts with label இனிய பகிர்தல். Show all posts
Showing posts with label இனிய பகிர்தல். Show all posts

Friday, January 1, 2010

மெரினாவில் முன்னம் ஒரு மாலை


கொஞ்ச நாட்களுக்கு முன் மெரீனா கடற்கரையைத் திறந்து வைத்தார்களாம்! திறப்பதற்கு முந்தைய மணித்துளி வரை நண்டுகளும் நாய்களும் அங்கு சுதந்திரமாகத் திரிந்ததைப் போல் இனி நாமும் திரியலாம். நிம்மதியாய் இருக்கிறது!


மெரீனா எனக்கு மிகவும் நெருக்கம், அதிலும் அங்கே இருந்த ஒரு மரம் புத்தி தந்ததோ இல்லையோ நிழல் தந்து என்னை நிறைய கனவு காண வைத்தது. அழகு படுத்தப்பட்டபின் அது இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. அங்கே சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. அதனால் தான் திறக்கப்போகிறார்கள் என்றதும் இவ்வளவு நாள் மூடியா வைத்திருந்தார்கள் என்று ஒரு பயம் வந்தது. திறந்தவர்கள் நாளை மீண்டும் மூடிவிட்டால்?


இந்த மெரீனா என் பதின்வயதுகளில் இலக்கியத்தையும், பின்னர் வாழ்க்கையையும் என் நண்பர்களோடு பகிர்ந்து கற்றுக்கொண்ட ஓர் அழகான இடம். அழகுக்கு அழகு கூட்டினார்களாமே, பார்க்கவேண்டும் என்று ஆவல் நிறைய வருகிறது. மெரீனா எனக்கு இன்னொரு இனிய அனுபவத்தையும் தந்துள்ளது.


1993 அக்டோபர் முதல் வாரம் உலகம் முழுவதும் மனநல விழிப்புணர்வு வாரமாகக் கொண்டாடப்படுவதால் சென்னையிலும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய விரும்பினோம். வழக்கமாக நாடகம் போடுவதைப் போலல்லாமல் வித்தியாசமாகச் செய்ய நினைத்து ஓர் ஓவியக்கண்காட்சி நடத்தத் திட்டமிட்டோம்.அதை எங்கோ ஒரு கலைக்கூடத்தில் நடத்தி, அங்கே வழக்கமாக வரும் ஆர்வலர்களை மட்டும் சென்றடையாமல் மக்கள் மத்தியில் நடத்தவும் விரும்பினோம். மெரினாவில் நடத்தலாமே என்று முடிவானபின், அனுமதி கேட்டுச் சென்றால், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து காவல்துறை ஆணையர் அலுவலகம் வரைக் கேட்டுப்பார்த்தோம். அவர்கள் அனுமதி தர மறுக்கவில்லை ஆனால் அனுமதிப்பது அவர்களது அதிகாரத்தில் இல்லை என்றுதான் சொன்னார்கள். சென்னை மாநகராட்சியும் இதைத்தான் சொன்னது. மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கேட்டோம், அவர் அனுமதி தந்தார், “இது என் எல்லையில் உள்ளதா என்று தெரியாது, ஆனால் நல்ல விஷயம், செய்யுங்கள்” என்றார்.


பிறகு ஓவியர்களை அணுகினோம்.எனக்கு நன்கு பழக்கமான மருதுவும், பரிச்சயமான ஆர்.பி.பாஸ்கரனும் படம் தந்தது ஆச்சரியமில்லை. திடீரென்று பெரிய ஓவியர்களிடம் சென்று உங்கள் ஓவியம் கொடுங்கள் கண்காட்சி முடிந்ததும் திருப்பித்தருக்கிறேன் என்று அறிமுகமில்லாத நான் கேட்டவுடன் லட்சக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் விலை மதிப்புள்ள ஓவியங்களை அவர்கள் உடனே என்னிடம் தந்தார்கள். ஆதிமூலம், சன்ரு, சேனாதிபதி, கே.எம்.கோபால், தனபால், தட்சிணாமூர்த்தி, அருளரசன், பகவான் சவான் ஆகியோரின்  ஓவியங்களை மெரீனா மணலில் கண்காட்சியாக நடத்தினோம். ஓவியங்களுக்கிடையே நான் வரைந்த மனநல விளக்கப் படங்களும் வைக்கப்பட்டன. வந்து பார்ப்போரிடம் விளக்கங்கள் கூற சமூகப்பணி மாணவர்கள் உடனிருந்தார்கள். ஒரு ஞாயிறு மாலை என்று ஆரம்பித்த கண்காட்சி ஒவ்வொரு ஞாயிறு மாலையும் என்று அக்டோபர் முழுக்க நடந்தது. இதன் அடுத்த கட்டமாக வானொலியில் வாரமொருமுறை திரைப்பாடல்களின் வரிகளோடு மனநலம் குறித்த விழிப்புணர்வு தொடர் ஒளிபரப்பானது.







விழிப்புணர்வு எதைக் குறித்து ஏற்படுத்த விரும்பினாலும், வீதிக்கு வரவேண்டும், மக்களிடையே பேசுவதென்றால் அவர்கள் இருக்குமிடம் சென்று பேச வேண்டும்; நான் பேசுகிறேன் வந்து கேளுங்கள் என்று கூறிக்கொண்டு காத்திருக்கக்கூடாது என்பதே இதிலிருந்து நான் கற்ற பாடம். இப்போது இன்னும் அழகும் வசதியும் நிறைந்த இடமாக மாறியுள்ள மெரீனா, இப்படிக் கலைக்கண்காட்சிகள் நடத்த ஒரு நல்ல தளம். 

எல்லாரும் இன்புற்றிருக்க



அவள் பெயர் தெரியாது, முகம் கூடச் சரியாகத் தெரியாது. 

ஆனால் அவளுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். சென்னை மருத்துவக்கல்லூரியில் கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் ஆகியவை தேவைப்படும்போதெல்லாம் எனக்கு அவள்தான் உதவியிருக்கிறாள். இடுப்பில் கூடம் சுமந்து, தலையில் சுள்ளி சுமந்து, குளத்தில் நீர் மொண்டு, மரத்தடியில் நின்று..பலவாறு எனக்கு உதவியிருக்கிறாள். அவசரத்திற்கு அவள் தான். 

அவளைத்தவிர சிவந்தவானம், மாட்டுவண்டி, கோவில்கோபுரம்...இவையும் எனக்கு உதவின, ஆனால் இவை அந்தந்த நேரத்துச் செலவுக்காக மட்டுமே. முக்கியமான ஒன்றிற்காக அவசரமாகப் பணம் தேவைப்பட்டால் அவள் தான். 

அவளது வளைவுகள் எனக்கு அனிச்சையாக வரையுமளவு பரிச்சயம். அவளை முதலில் எங்கு பார்த்திருப்பேன் என்று தெரியவில்லை. முழுக்க முழுக்க நான் சென்னையின் மனிதன். நகைச்சுவை, பாராட்டு, கோபம், சலிப்பு என்று பல உணர்ச்சிகளையும் ‘ஓ..’ என்று வெளிப்படுத்துமளவு சென்னையின் தமிழன். என் நகரத்து வாழ்க்கையில் இப்படிக் குடம் சுமந்து, நீர் மொண்டு, தலையில் சுள்ளி தூக்கிக்கொண்டு போன பெண்களைப் பார்க்காத அளவு ஒரு சுமாரான பூர்ஷ்வா வாழ்வில் வளர்ந்தவன். 

பணம் தேவைப்பட்டது. திருடவும் பிச்சை எடுக்கவும் துணிவோ திறமையோ மனத்தின் ஒப்புதலோ இல்லாததால் படம் வரைந்து சம்பாதிப்பதைத் தவிர அன்று வேறு வழி தெரியவில்லை. அப்போது தான் அவள் தோன்றினாள் ஒருவேளை என் தந்தையின் நண்பரும் சகஓவியருமான ஜோசெப் அவளை வரைந்திருந்தது எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கும். ஆனால் அவரே “ நீ வேற மாதிரி வரையறே” என்று அவளிடமிருந்து என்னை அன்னியப்படுத்தி விட்டார். அதன்பின் அவளை சலிக்காமல், சிந்திக்காமல் வரைந்து கொண்டிருந்தேன். அன்று பிரஷில் இன்று மௌசில்! 

அவளை இந்த 2010 ஆண்டிற்கான படமாக உங்களுக்கு அளிக்கிறேன். இது என் ஓவியத்திறமையின் சான்றாக அல்ல, உங்களுடன் நான் உணரும் நெருக்கத்தின் அடையாளமாக. 

ஒவ்வொரு நாளும் புதிதுதான் என்றாலும், புதிய ஆண்டின் புது ஆரம்பநாள் எனும் கணக்கை நாம் ஏற்றுக்கொண்டதால், (நம் நாட்டின் ரோமாபுரி மன்னர் இதை இன்னும் மாற்றாததால்) புத்தாண்டின் முதல் நாளை நன்னாளாய்க் கருதி என் நல்வாழ்த்துகள்.

Thursday, December 31, 2009

புத்தகத்திருவிழாவும் சில நினைவுகளும்



 வாசித்து முடிக்காத பல புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்தும் புதிதாய்ப் பார்க்கும்போதெல்லாம் வாங்குகிறேன். அவற்றுள் வாசிக்கவே போவதில்லை என்பவையும் அடக்கம். தகவல் களஞ்சியங்கள் அகராதிகள் மட்டுமல்ல, சில நவீனங்களும் சில பக்கங்களிலேயே படிக்க முடியாதவற்றின் அடுக்குள் சேர்க்கின்றன. இப்போது புத்தக விழா ஆரம்பம், இன்னும் பல வாங்கப்படும், சில அன்புடன் கொடுக்கப்படும், வேறு சில பரிந்துரைக்கப்படும். புத்தகவிழா என்னுள் பல நினைவலைகளைக் கிளப்புகிறது.
33வது புத்தகவிழா! இதுவரை இரண்டு ஆண்டுகள்தான் செல்லத்தவறியிருக்கிறேன். ஒருமுறை இன்னும் கொஞ்சம் காசு சேரட்டும் இரண்டு நாள் கழித்துப்போகலாம் என்று இருந்தபோது அங்கே தீபப்பிடித்து விழா நின்றுபோனதால்,அடுத்தது நான் அமெரிக்காவில் இருக்க நேர்ந்ததால்.ஆரம்பத்தில் பார்க்க மட்டுமே செல்வேன், வாங்க முடியாது என்று தெரிந்தும். பிறகு வாங்கும் வசதி வந்ததும் வாங்க ஆரம்பித்தேன். முன்பு பணமில்லாமல் வாங்காது விட்டவற்றை மட்டுமல்ல, பணம் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாதவைகளையும் வாங்கினேன். ஆயிரக்கணக்கில் சேர்ந்து விட்ட புத்தகங்களை வைத்துப் பராமரிப்பது சிரமமாக இருக்கிறது, என்றாலும், இந்த ஆண்டும் வாங்காது இருக்க முடியாது. ஒரு போதைப்பழக்கம் போல் இது ஆகிவிட்டது. பல விஷயங்களில் ஆடம்பரத்தைத் தவிர்க்கும் எனக்கு இதில் ஆடம்பரம் ஓர் ஆணவநிலைக்கே போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆணவம் ஏன் வருகிறது?
கையில் காசு இல்லாதபோது கனவுகளே போதும்; கைச்செலவுக்குக் காசு சேர்ந்துவிட்டால் நிஜங்களும் போதுவதில்லை. இது புத்தகங்களில் மட்டுமல்ல, அனைத்திலும் தொனிக்கிறது. படிக்க ஆட்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கம் இருந்தவரை எழுத்துக்கள் கனவிலும் கவிதை கொட்டின; பதிப்பிக்கவும் ஆட்கள் வந்துவிட்டபின், எழுத்துக்கள் போதுமானதாய்த் தோன்றுவதில்லை. கிடைக்கும் வரைதான் எல்லாமும் சுவை என்றால் எதை வைத்துக்கொள்வது? வசதியிருப்பதால் வாங்குவது என்றால் வாங்குவதை நிறுத்துவது எப்போது?
புத்தகங்களும் இப்போதெல்லாம் பார்க்கவும் அழகாய் இருக்கின்றன. கையில் எடுக்கும்போதே மனத்துள் ஒரு இனிய எதிர்பார்ப்பினைத் தூண்டுகின்றன. அச்சுநேர்த்தியும் அதற்கு ஈடான வடிவமைப்பு நேர்த்தியும் மயங்க வைக்கின்றன. நுகர்வு கலாச்சாரத்தில் இப்படித்தானே விற்கப்பட வேண்டும். அதன் வீச்சாகத்தானே அவசியம் இல்லாதபோதும் வாங்க மனம் அலைகிறது! பயன்படப்போவதையும் பயன்படுத்தப் போவதையும் மட்டுமே வாங்குவதென்றால் வீட்டில் எவ்வளவு இடம் காலியாக இருக்கும்!
மனத்திலும் தான். வாங்கும் சக்தி இருப்பது போலத்தானே நினைக்கும் சக்தியும் (affordable என்ற அர்த்தத்தில்). அதுவும் கனவுகள் இலவசம் எனும்போது குப்பையாகச் சேராமலா இருக்கும்.....
வாங்காத போதும் சரி, வாங்கும் போதும் சரி, எழுத்துக்களைத்தாண்டி எழுத்தாளர்களின் மீதும் ஒரு மோகம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அவர்களில் பலரைச் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம், கனவுகள் மிச்சமிருந்திருக்கும்.
எழுத எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் மனம் இப்போது புத்தகங்கள் பற்றியும் புத்தக விழா பற்றியுமே சுற்றிச்சுற்றி வருகிறது. டாஸ்மாக் கடை திறக்குமுன் காத்திருக்கும் அடிமை போல. இதனால்தான் இந்தப்போதை பயமுறுத்துகிறது. புத்தகங்கள் மீதும் போதை குறைந்துவிட்டால் என்பது மதுப்பழக்கத்தை விட்டுவிட்டால் எப்படி சமாளிப்பது என்று குழம்புவோர் போலத்தான் இது என்று தோன்றுகிறது. ஒரு போதையிலிருந்து மீண்டால் நேரம் கூடுதலாய்க்கிடைக்கும், அப்போது வாழ்க்கை புதிய அறிமுகங்களையும் அனுமதிக்கும். போதையிலிருந்துதான் மீள முடியும், காதலிலிருந்து அல்ல.
எழுத்து ஒரு காதலாய், ஒரு தவமாய், ஒரு யக்ஞமாய் இருந்தது. ஆனாலும் டைரிகள் நிறைந்ததில்லை. மனத்துள்ளேயே பல வார்த்தைகள் வாக்கியங்களாகி அழகான வடிவமைப்பு கூடிய புத்தகங்களாகி மறுநாள் விடிவதற்குள் காணாமல் போயிருக்கின்றன. இதனால்தான் எழுத்தைக் கனவுக்கணினியில் தட்டச்சுச்செய்து அழித்துவிடாமல், காகிதங்களில் காலத்திற்கும் பதிவு செய்வோர் மீது ஒரு மரியாதை வருகிறது.
இதோ இந்த ஆண்டு முடியப்போகிறது. கண்முன்னம் பிரிக்கப்படாத புதுவாசனையுடனும் புதிய சங்கல்பங்களுடனும் டைரி. முந்தைய ஆண்டுகளின் டைரிகளும் இப்படித்தான் ஒரு வரி கூட எழுதப்படாமல், உபயோகப்படுத்துவோர்க்குக் கொடுக்கப்படாமல் அழுக்கு சேர்ந்து அடுக்கிக் கிடக்கின்றன. எண்ணங்கள் டைரிகளின் எழுத்துக்களை நம்பி இல்லை. அவற்றுக்குக் காலக்கணக்கான வரிசைக்கிரமமும் இல்லை.
சனிக்கிழமை மாலை என்னை அங்கே பேச அழைத்திருக்கிறார்கள்! இதற்கு முன் 1996 ல் என்னைப்பேச அழைத்திருந்தார்கள். அன்று நான் பேசும் நேரம் தள்ளிப்போனது, காரணம், மடாதிபதி ஜெயேந்திரன் வருகை! விழா நிர்வாகிகள் அந்த மனிதனின் கால்கள் தரையில் பட்டுவிடுமோ என்று பயந்ததுபோல மண்ணில் புரளாத குறையாகச் சுற்றி வணங்கிக்கொண்டு நடந்தார்கள். சில கடைகளுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆசி வாங்கிக்கொண்டார்கள், வாங்கிக்கொடுத்தார்கள். வயிற்றெரிச்சலா அருவெறுப்பா என்று புரியாத உணர்ச்சியோடு நான் ஒரு இஸ்லாமிய புத்தகக்கடையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளே அந்த “மகான்” வந்தால் ஒரு குர்ஆன் வாங்கிக்கொடுக்கலாம் என்று காத்திருந்தேன். ம்ம்ஹூம், “புனித விழிகள்” கடையையும் பார்த்தன, ஆனால் பக்தசேவகர்களான நிர்வாகிகள் அப்படியே வேறு பக்கமாக அழைத்துக்கொண்டு போய் விட்டார்கள்! நான் வாங்கிய நூல் தகுதியான ஒருவர் கைகளில் கொடுத்துவிட்டு, பிறகு கூட்டத்தில் பேசும் போது இதைக்குறிப்பிட்டுக் கண்டித்தேன். அதன் பின் அப்படி பேச வாய்ப்பு தரப்படவில்லை. 

 சாமியார்கள் இப்போதும் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுக்கு தனி ஸ்டால்களும் உள்ளன. சிஷ்யகூட்டத்தின் அலம்பலும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. இம்முறை பார்ப்போம்! நாம் காசு கொடுத்து உள்ளே போகிறோம், காசு செலவழித்து நூல்கள் வாங்கப்போகிறோம், நமக்கு இடையூறாகச் சிலரின் பக்தி இருப்பதை எவ்வளவு சகித்துக் கொள்கிறோம் என்று பார்ப்போம்.


பதிவுக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, நான் நெருக்கமாகப் பழகிய இரு எழுத்தாளர்களின் வெளியே தெரியாத படம் ஒன்றை இங்கே இணைக்கிறேன். என் அன்பின் இன்னொரு வெளிப்பாடாக! ஜெயகாந்தன் அப்போது தாடி வளர்த்திருந்தார்!!செப்டெம்பர் 2005!


Saturday, December 12, 2009

மணியம்செல்வனின் ஓவியக்கண்காட்சி




மகிழ்ச்சியும் இனிமையும் நிறைந்த ஒரு மாலையைப்பற்றி ஒரு பகிர்வு. 
மணியம்செல்வனின் ஓவியக்கண்காட்சி, நேற்று 11/12/09, சென்னையில் துவங்கியது. 
கண்காட்சியின் முக்கிய அம்சம், அவரது தந்தை மணியனின் ஓவியங்களும் அதில் இடம்பெற்றிருப்பது தான். கண்காட்சி துவக்கவிழாவிற்கு நிறைய ஓவியர்கள் வந்திருந்தார்கள், கோபுலு தன் தள்ளாமையிலும் வந்திருந்தார். அதிகம் வெளியே வராத ம.செ, முகத்தில் மிகுந்த பூரிப்புடன் காணப்பட்டார். அவரது மகள்களின் ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 

விழா வந்திருந்த ஓவியர், கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி,என்னிடம் மணியனின் ஓவியங்களில் பயன்படுத்தப்பட்ட temperaவிற்கும் இப்போது பயன்படுத்தப்படும் temperaவிற்கும் உள்ள வித்தியாசங்களை விளக்கிக் கொண்டிருந்ததைப்போல், பல ஓவியர்கள் ஓவிய நுணுக்கங்களைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தனர். ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 26 வரை நடக்கும் இந்த கண்காட்சியை பாருங்கள். இடம் பார்வதி ஆர்ட் காலரி, எல்டாம்ஸ் சாலை, சென்னை.CP ART CENTRE எதிர்புறம் உள்ளது. பல பதிவர்களுக்குப் புரிகிற வகையில் கிழக்கு பதிப்பகத்தின் எதிர்புறம். இத்தனை காலம் கழிந்தும் அந்த ஓவியங்களில் மிளிரும் வண்ணத்தெளிவு வியக்க வைக்கும். ம.செ. பற்றிய அறிமுகம் எல்லாம் தேவையில்லை. 
ஆனால் அவர் அன்போடும் அக்கறையோடும் தன் தந்தையின் ஓவியங்களைப் பாதுகாத்து நம்மிடம்  பகிர்ந்துகொண்டது மிகவும் பாராட்டிப் போற்றப்படவேண்டிய ஒன்று.