Saturday, January 2, 2010

பிரமிப்பும் பிரமையும்.

பக்தியும் ஒரு ரசிப்பு தான். பிரமை என்று தெரியாமல் ஒரு பிரமிப்புதான். 

பக்தன் என்பவனும் ரசிகன் என்பவனும் எப்படி மாறுபடுகிறான்? பக்தனுக்குக் கடவுளின் குறைபாடு தெரியாது, ரசிகன் தன் நாயகனின் குறைபாடு தெரிந்தாலும் அதை ஆவேசமாக மறுப்பான். நாயகனை ஆராதிப்பது இயல்பு. அப்படி ஆராதிக்கப்படுவதால்தான் அவன் நாயகன். ஒரு நாயகனின் தன்மை என்ன என்று யோசித்துப்பாருங்கள். அவனிடம் நமக்குக் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய பல கூறுகள் இருக்கும். நம்மால் அடைய முடியாத விஷயங்களை அவன் வெகுசாதாரணமாகச் செய்து விடுவான். ஸ்பைடர்மேனாக இருந்தாலும், (அன்று எம்ஜியார் இன்று) ரஜினியாக இருந்தாலும்! அவனைப்போல் ஆகமுடியாததாலேயே அவன் நாயகன், அவனுக்கு ரசிகர். 


பக்தன்,சிஷ்யன் என்பது வேறு வகை. இரண்டும் பக்தி! முன்னவன் கல்லில் ஒரு தெய்வத்தைக்கண்டு மெய்மறப்பான், அடுத்தவன் ஒரு மனிதனில் அந்த தெய்வத்தை தரிசித்து மதியிழப்பான். இருவரிடமும் கேள்விகள் எழுவதில்லை. இரண்டிலும் ஓர் அடிப்படை உண்டு, ஓர் அவசியம் உண்டு. அது தான் சரணாகதி! கதி என்பதிலேயே விதி என்பதன் உள்ளீடும் உள்ளது. இனி இதுதான் என்றும் இதைவிட வேறெதுவும் இல்லை என்பதும் இவர்களின் மனநிலை. இது சில வேளைகளில் தற்காலிகமாக ஆரோக்கியமாகவும் அமையலாம். தற்காலிகமாகத்தான். அந்தத் தற்காலத்தின் விகிதமே மாறும், 

அந்தச் சுழலுள் சிக்கியிருக்கும் வரை அதுவே விமோசனம், அதுவே பரமபதம். இத்தகைய பக்தி காதலாக இருந்தால் வாழ்க்கை இனிதாகவும் ஆகும், இதுவே வெறியாக மாறினால் அறிவு செயல்படுவதை நிறுத்தும். பிறகு, குழப்பங்களுக்கான விடையாக மேலும் குழப்பும் பொய்களே தோன்றும். இதுவும் ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்வோரின் ஒரு பதில்தான். மாயை விலகும், மீண்டு வேறு வடிவில் வரும். பிறப்பறுக்கும்வரை! சாகும்வரை சிந்திக்காவிட்டால் இந்நிலை தொடரும். பக்தி காதலா வெறியா என்பதை அதன் விளைவுகளே வெளிப்படுத்தும். காதல் வளர்க்கும், வெறி அழிக்கும். 

கல்வடிவில் இருக்கும் தெய்வத்தை வணங்கி பக்தி காட்டும் ஒருவனுக்கு பூஜை செய்யும் செலவு மட்டும்தான், ஆனால் மனித தெய்வங்கள் இன்னும் விலை அதிகம். ஸத்ஸங்கம், காணிக்கை, பயிற்சிக் கட்டணம், சிறப்பு நேர்முகத்துக்கான கட்டணம் என்று நிறைய செலவு இருக்கிறது. இதில் கொடுமை இவர்கள் ஏற்கனவே கற்கோவில்களுக்கும் செலவு செய்துகொண்டிருப்பார்கள். மனித தெய்வம், மகான், ரிஷி, சத்குரு, சாதாகுரு, ஜகத்குரு என்றெல்லாம் இவர்கள் “ஸ்ரீ”ச்சிடும் உன்மத்தநிலை ஒரு கட்டத்தில் மருத்துவச் செலவை வேறு கொண்டுவந்து சேர்க்கும்! 

இப்படிப்பட்டவர்களின் மனம் ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது. எல்லாம் பார்த்துக்கொள்ளும் அந்த மனிததெய்வம் வாழ்வின் எந்தப்பிரச்சினைக்கும் வீட்டில் உள்ள ஒரு வயதான கிழவியைவிட வழி சொல்வதில்லை. அவர் பார்த்துக்கொள்வார் என்று சும்மா இருந்தால் எந்தப்பிரச்சினையும் குறைவதில்லை. இதை வெளியே சொல்லவும் முடியாத ஓர் இக்கட்டான நிலை வேறு. பக்கத்து வீட்டில் இருப்பவனிலிருந்து, அலுவலகத்தில் கொஞ்சம் பேசுபவன் வரை அனைவரையும் இந்த மகானின் வாழும் வழி காட்டுதலைப் பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்துவிட்டபின், இதிலெல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்லும் நேர்மையும் தைரியமும் இவர்களுக்கு வராது. ஏமாந்து விட்டேன் என்று சொல்ல நேர்மை வேண்டும். சாமி கண்ணையெல்லாம் குத்திவிடாது என்று உரக்கச் சொல்ல தைரியம் வேண்டும். நேர்மையும், தைரியமும், சுயமரியாதையோடு சேர்ந்து தான் சரணாகதியில் முடங்கும்.


நவீன சாமியார்களிடம் சேருபவர்கள் தங்களை பக்தர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை, சீடர்கள் என்றே சொல்லிக்கொள்கிறார்கள். சீடன் குருவிடம் கற்றுக்கொள்ளவேண்டும். இவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள்? இன்றிருக்கும் எந்த சாமியாரிடம் புதுச் சரக்கு இருக்கிறது? ரஜ்னீஷ், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் தான் ஆன்மீக விஷயங்களை வேறு விதமாகப் பேச ஆரம்பித்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் ஒரு மதம் சார்ந்த மார்க்கமாகவே வாழ்வின் தத்துவர்த்தங்களை விளக்கி வந்தவர்கள். இப்போது பிரபலமாக இருக்கும் சாமியார்கள் எல்லாரும் ஒரு காலத்தில் வேறு ஒரு சாமியாரின் சீடராக ஆரம்பித்தவர்கள். இல்லை நான் சுயம்பு என்று கூறிக்கொள்பவர்களும் ஏற்கனவே ஜேகே, ஓஷோ பேசியதின் மறுபதிப்பாகவே பேசிக்கொண்டிருப்பவர்கள். 

பேச்சில்தான் புது விஷயம் இல்லை, இவர்கள் கற்றுத்தரும் பயிற்சிகளாவது புதிதா என்றால் இல்லை. எல்லா சூத்திரங்களும், மூச்சுக்கும், உடலுக்கும் மனத்துக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே நாம் நாட்டில் இருந்து வந்தவைதான். 

பிறகு இவர்களிடம் என் இத்தனை பக்தசீடர்கள்? இம்மாதிரி சாமியார்களின் வசீகரம் மற்றும் விளம்பரவியாபார வித்தை பற்றிப் பேச ஆரம்பித்தால் முடிவே இருக்காது. இந்த பக்தசீடர்களின் மனநிலை தான் முக்கியம். நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருவர் கூட இப்பாதை மனம்பிறழ்ந்து பேதலித்துவிடலாம் என்பதால் இந்த பக்தர்களின் மனவியக்கம் குறித்துச் சிந்திப்போம். 

முதலாவதாக ஒருவன் ஆசானையோ குருவையோ தேடுகிறான் என்றால் ஏன்? ஒரு விஷயம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவனுள் ஒரு ஆவல், உந்துதல்,வேட்கை இருக்கும் அப்போதுதான் அதைக் கற்றுத்தர ஒருவரைத் தேடுவான். சாமியார்களிடம் என்ன கற்றுக்கொள்ள ஒருவன் போகிறான்? வாழ்வையா? வளத்தையா?

நிம்மதியாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொள்ளச் செல்வதாகப் பலர் கூறுவார்கள்.இதைப் பரிசீலிப்போம். நிம்மதி என்பது போதும் என்ற மனநிலை வரும்போதுதான் வரும். அது எப்போது வரும்? தேவைகளையும் ஆசைகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டு, தன் திறன் குறித்தும் ஒரு தெளிவான மதிப்பீடு வைத்து வாழ்வை அணுகினால் மட்டுமே நிம்மதி சாத்தியம். நம்மால் முடியாத ஒன்றுக்கு, அது எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அதற்காக ஏங்கிக்கிடந்தால் அந்த நிராசையே நிம்மதி குலைக்கும். இதைத்தான் இந்த சாமியார்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று பக்தசீடர்கள் கூறுவார்கள். இதுவும் பிழையான ஒன்று. 

எனக்கு ஒருவர் ஓவியம் கற்றுக்கொடுப்பதானால் அவருக்கு ஓவியம் தெரிந்திருக்க வேண்டும். சாமியார்கள் நிதர்சன வாழ்வுக்குதவும் சாந்தி போதிப்பதாய் இருந்தால் அவர்கள் அந்த நிர்ச்சலன நிலயில் இருக்க வேண்டும். அவர்கள் பார்ப்பதற்கு நிம்மதியுடன் தான் இருக்கிறார்கள். என்னைக்கூட பராமரரிக்கவும் புகழ்பாடவும் ஒரு கூட்டம் மண்டியிட்டுக் கிடந்தால் நிம்மதியாகத்தான் காட்சி தருவேன். தினசரி வாழ்க்கையின் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல், பந்தங்களும் இல்லாதிருப்பதாய் திகழும் இவர்களது சாந்தி நம்மைப்போன்ற சாதாரண வாழ்க்கையின் சாதாரண ஆசைகளோடும் இலக்குகளோடும் இருப்பவர்களுக்கு எப்படி அவர்கள் சொல்லிக் கொடுத்து வரும்? எப்படி அவர்களிடம் அவர்களைப்போல் ஆவதைக் கற்றுக்கொள்ள முடியும்? நாமும் அவர்களும்தான் வேறுவேறாயிற்றே! 

நம்மைப்போன்ற இன்னொரு சராசரி மனிதனைப்பார்த்து அவனது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் என்ன என்று சிந்தித்தாலே வாழ்வின் சூட்சுமம் புரிந்துவிடும். இதை அவர்கள் கற்றுத்தருவதாகச் சொல்வது அவர்களது வியாபாரம். பணம் கொடுத்துக் கற்றுக்கொள்ளலாம் என்று முயல்வது நம்முடைய நுகர்வு கலாச்சாரம். 

இதைக் கற்றுக்கொடுக்கத்தான் ஆசிரமம், அதை நிர்வகிக்கத்தான் ஆட்கள், அவர்களுக்கும், செய்யப்படும் விளம்பரங்களுக்கும் தான் பணம், அதைத்தானே அவர்கள் கேட்கிறார்கள், கொடுக்கவேண்டியதுதானே என்றால் பிச்சை போடுவதாய்ச் செய்யலாம், வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதாய்ச் செலவழிக்கக்கூடாது. 

நீளம் கருதி இக்கட்டத்தில் நிறுத்துகிறேன். இதைத் தொடரவும் விவாதிக்கவும் விரும்புகிறேன்.

23 comments:

Anandi said...

sindhikkavaikkum karuththukkal dr., regards

மணிகண்டன் said...

ருத்ரன், எனது நெருங்கிய நண்பன் ஒருவன் ஈஷா ஆஸ்ரமத்தில் சேர்ந்து 10 வருடங்கள் ஆகிறது. பிரமச்சரியம் வேறு. முதல் சில வருடங்களில் நாங்களும் பலமுறை சென்று அவனை திரும்பி அழைத்து வர முயன்றுள்ளோம். அவனது பெற்றோர்களும். ஆனாலும் ஒன்றும் உதவவில்லை. நானும் ஓரிருமுறை உங்களது ஆசிரம நிறுவுனர் இறந்துவிட்டால் உனது நிலைமை என்ன போன்ற கேள்விகளையும் கேட்டுள்ளேன். எதற்கும் அவன் மசியவில்லை :)-

கடந்த ஓரிரு வருடங்களாக மறுபடியும் அவனுடன் அடிக்கடி பேசும் தொடர்பு. இன்றுவரையில் அவன் நிம்மதியாகவே வாழ்ந்து வருகிறான் என்றே தோன்றுகிறது (எரிச்சலாக இருந்தாலும்). அவனுடன் பேசும்போது அவன் கூறும் சில பாயிண்ட்ஸ்.

1) கமர்ஷியளைஸ் என்று கூறுபவர்கள் ஓரிரு முறையாவது எங்கள் பயிற்சிவகுப்பில் பங்குபெற்றுவிட்டு சொல்லவேண்டும்.
2) நாங்கள் செய்யவிரும்பும் மாற்றங்களை கொண்டுவர அரசியல்வாதிகளிடமும் / கட்சிகளிடமும் இணக்கமாக தான் போகமுடியும்.
3) எங்களிடம் பயிற்சிவகுப்புக்கு வருபவர்கள் யாரும் பணத்தை தொலைப்பதில்லை. (afford செய்ய முடிந்தவர்கள் தான் வருகின்றனர்). நாங்கள் கிராமங்களில் சென்று சோற்றுக்கு வழி இல்லாத உழைக்கும் மக்களிடம் பயிற்சி வகுப்புக்கு பணம் வசூலிப்பதில்லை. உண்மையில் பயிற்சி வகுப்புக்கள் கூட நடத்துவதில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற ஏதாவது செய்யமுடிந்தால் செய்கிறோம்.
4) எங்களுடைய பயிற்சியில் சேர்ந்த பலரும் பலன் அடைகின்றனர். யாரும் வாழ்வை தொலைப்பதில்லை.
5) ஆன்மிகம் என்று கூறி பலரும் ஏமாற்றிவருகின்றனர். ஆதலால் தான் உண்மையாக மக்களுக்கு புரியவைக்க நாங்கள் முயல்கிறோம்.
6) மார்கெட்டிங் செய்வதில் ஒரு தவறும் இல்லை. சாமியார் என்றால் இமயமலையில் உட்கார்ந்து கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. மக்களை சென்றடைய unorthodox technique உபயோகம் செய்வதில் ஒரு தவறும் இல்லை.

rams said...

சிந்திக்கனும் சார். மனிகன்டன் சொன்னமாதிரி ஈசா குருஜி ஜீன்சு போட்டுக்கிட்டு அத்தனைக்கும் ஆசைப்படு என்கிரார். அந்த மையத்திர்கு சென்ட்ரால் சீடர்கல் அனைவரும் மொட்டை அடித்துக்கொன்டு வாய் திரக்கக்கூட மருக்கிரார்கல்.

uthamanarayanan said...

நன்றாக போகிறது சிந்தனை நதி.தொடரவும்.இதற்க்கு நடுவே சிலர் சில சாமியார்கள் என்றோ குரு என்றோ சொல்லிக்கொள்பவர்களை பற்றி comments இல் பேசியிருக்கிறார்கள்.அதை விடுவோம்.எழுதுங்கள் .சுயமாக சிந்திப்பவர்களுக்கு ஏதாவது வழி பிறக்கிறதா என்று பார்ப்போம் .தன்னை நம்புவோர்களுக்கு இது உதவுமா என்று பார்ப்போம்.நன்றி ருத்ரன்

குப்பன்.யாஹூ said...

எல்லா சாமியார்களும் குருமார்களும் அப்படி என்று சொல்லி விட முடியாது.

காலடி ஆதிசங்கரா வாழ்க்கை படித்தல் நமக்கு புரியும்.

அவர் இல்வாழ்க்கையும் வாழ்ந்து பார்த்து அதில் உள்ள சுக துக்கங்களும் அறிந்த பின்பே, சீடர்களுக்கு வாழ்வு பற்றி சொலிக் கொடுத்தார்.

அந்த ஒரு மனக் கட்டுப்பாடும் பலமும் கருணையும் இருந்ததால் தான் அவர் அழைத்த உடன் அவர் தோழியான பூர்ணா நதியும் அவர் வீட்டு கொள்ளை புறத்திற்கு ஓடி வந்தது

குப்பன்.யாஹூ said...

same with Rajnish or Baalakumaraan,ilayaraaja . They have succeeded in materialistic (lowkeeka) life and so they are able to teach & preach to their disciples.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

Thekkikattan|தெகா said...

இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் எழுதிய "புத்தகத் திருவிழாவும் சில நினைவுகளும்" என்ற கட்டுரையைத் தொடர்ந்து சில கேள்விகளை முன் வைத்திருந்தேன். அதற்கு பதில் போல அமைந்துள்ளது இந்தக் கட்டுரை.

தேடிக் கொண்டே இருப்பதில் ஒரு உயிர்ப்பு இருக்கிறது. ஆனால், எதிலும் முடங்கிவிடுவதாலோ அல்லது இந்தக் கட்டுரை அலசியுள்ள சில காரணிகளின் படி, ரசிகன்/பக்தன் உறைந்து விட்டால் அங்கேதான் தனிமத இழப்பு சாத்தியப் பட்டுவிடுகிறது.

மணிகண்டன் said...

&&&
இதற்க்கு நடுவே சிலர் சில சாமியார்கள் என்றோ குரு என்றோ சொல்லிக்கொள்பவர்களை பற்றி comments இல் பேசியிருக்கிறார்கள்.அதை விடுவோம்.
&&&

உத்தமநாராயணன் சார், திசை திருப்பறதுக்காக நான் அதை எழுதலை. அடுத்தது எனக்கு ஜக்கி வாசுதேவ் மீது பற்று எல்லாம் கிடையாது :)- எனது நண்பனை இழுத்துக்கொண்டு விட்டார் என்ற கடுப்பு வேறு :)- அதே சமயம் டாக்டரின் பதிவில் "டாக்டர், பிரமாதமா எழுதறீங்க", "டாக்டர், உங்க எழுத்துநடை சூப்பர்", "டாக்டர் ருத்ரன், உங்களின் பதிவுகள் சிந்திக்க வைக்கின்றன", "டாக்டர், உங்கள் அனுபவம் பேசுகிறது" (இவை அனைத்தும் உண்மையாக இருப்பினும்) போன்ற பின்னூட்டங்கள் மட்டும் தான் போடவேண்டுமா என்ன ?

baskar said...

மணி வந்தமா படிச்சமா நோகம ஒரு கமெண்ட் போட்டமமன்னு இல்லாம இந்த எழுத்து மக்களுக்கு எப்படி பயன்ப்படும்ன்னு உங்கள மாதிரி கேட்டா கேட்டா மட்டும் போதாது செயனும்னு சொல்லுவீங்க இதெல்லாம் எங்கலுக்கு தேவையா இதை பற்றி டாக்டர் கொஞ்சும் கேப்பாரா ..............

Deepa said...

//இதை அவர்கள் கற்றுத்தருவதாகச் சொல்வது அவர்களது வியாபாரம். பணம் கொடுத்துக் கற்றுக்கொள்ளலாம் என்று முயல்வது நம்முடைய நுகர்வு கலாச்சாரம். //
Well said!

//என்னைக்கூட பராமரரிக்கவும் புகழ்பாடவும் ஒரு கூட்டம் மண்டியிட்டுக் கிடந்தால் நிம்மதியாகத்தான் காட்சி தருவேன். //
:-))LOL!!
please, தொடர்ந்து இது போல் எழுதுங்கள் டாக்டர்.

ஊர்சுற்றி said...

//இதை அவர்கள் கற்றுத்தருவதாகச் சொல்வது அவர்களது வியாபாரம். //
இந்த வியாபாரத்தை நேரிலேயே பார்த்திருக்கிறேன். நானே சுயமாகத் தேடிக் கண்ட விடை,
'ஒண்ணுமில்ல' என்பதுதான். உங்கள் கட்டுரை எனது எண்ணத்திற்கு மேலும் வலுவூட்டுகிறது.

Dr.JP.Rajendran said...

கோவில் பூசாரி, பல வசதிகளோடு ஆசிரமத்தில் இருக்கும் குரு, மரத்தடி கிளிஜோசியக்காரன், எங்கெங்கோ அலைந்து திரியும் துறவி , காவி துணி போட்டு ரோட்டில்/ வீடுவீடாய் பிச்சை பெறுபவர்கள், கோவில் / விழாக்களில் மட்டுமே பிச்சைஎடுப்பவர்கள், பேயோட்டி / தாயத்து விற்றும் காசு சம்பாதிப்பவர்கள், குடுகுடுப்புகாரர்கள், வெற்றிலையில் மை போட்டு பார்ப்பவர்கள், மை எடுப்பவர்கள் , கொஞ்சம் நீட்ஷே , ஓஷோ , சார்த்ரே (மற்றும் .. நிறைய பிசினஸ் ) தெரிந்த modern சாமிஜிஸ் , .....
எல்லோரும் அவரவர் பங்குக்கு , தெரிந்த விஷயங்களை வைத்து , தெரிந்த அளவுக்கு தொழில் செய்கிறார்கள்.. 'மனசு' இவர்கள் தரும் மசாஜையும் , சலவையையும் , அலுப்பு / பேதி மருந்துகளையும் , பீதிகளையும், பொய்களையும், போதனைகளையும் தாங்கி கொண்டு செல்லும் லாவகத்திற்கு .. ஒரு சபாஷ் போடலாம்தான் ...

குட்டிபிசாசு said...

இந்த விடயத்தில் முதலில் ரசிகன் என்ற நிலை (கேள்வி இருந்தும் கேட்க விரும்பாத நிலை), பிறகுதான் பக்தன் என்ற நிலை (கேள்வியே இல்லாத அல்லது விமர்சனமே தோன்றாத நிலை) வருவதாக நினைக்கிறேன்.

பக்தர்கள் இந்த சாமிஜிகளிடம் பெரிதும் சிலாகிப்பது இவர்களது எளிமை. காந்தி கூட ஒரு அரசியல் சாமியார் தான், தனக்கென ஒரு ரசிக, பக்த பட்டாளத்தை வைத்திருந்தவர்.

Ashok D said...

மனிகண்டன் உங்கள் முந்தைய பின்னூட்டம் அருமையாக இருந்ததது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கட்டுரை ஒரு பக்கமாக இருப்பது போன்று உணர்வு! சாரி ருத்ரன் சார்!

உங்களைப் போன்ற இண்டெலெக்சுவல்ஸ் க்கு இதெல்லாம் தேவைப்படாமல் இருக்கலாம். சிலருக்கு பயன் தருவதைக் கண்டிருக்கிறேன். நான் சொல்வது வாழ்வின் அன்றாட போராட்டங்களில் திணறுபவர்களைப் பற்றி.. நம்பிக்கை குறைந்தவனுக்கு சற்று நம்பிக்கை பூஸ்ட் ஏற்றுவது போன்று. மனநோய்களுக்கு இவர்கள் உதவ மாட்டார்கள் என்று தெரியும்.

Thenammai Lakshmanan said...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முட்டாள்தனத்தில் ஈடுபட்டு அதுதான் சரி என்றும் நாம் என்னவோ இறைவனை அடைய முடியாதுபோலவும் அவர்கள்தான் அவருக்குப் பக்கத்து சீட்டில் அமர்ந்து இருப்பது போலவும் பேசுகிறார்கள் ருத்ரன் ..
ரொம்ப வியாபாரம ஆகிபோன விஷயம் இது..
அவர்களுக்கு குடும்பம் இருக்கு..
மனைவி குழந்தைகள் ...

ஏதோ ஒரு குடும்பத்தொழில் போல ஆச்ரமம் நடத்துகிறார்கள்
இன்னும் ஒருவர் இருக்கிறர் பார்ப்பதற்கே 50,000 ரூபாய்
இந்த மூடத்தனத்தை நாமும் பின்பற்றவில்லை என்ற எக்காளம் வேறு அவர்களுக்கு ..

உருப்படியாய் செய்ய எவ்வளவோ இருக்க இது ஒரு passion ஆகிவிட்டது நல்லா உறைக்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க ருத்ரன்

Thenammai Lakshmanan said...

டாக்டர் ருத்ரன் பதிவு என்பதுஒரு ரகசியடைரியல்ல என்பதை நானும் உணர்கிறேன் ஆனால் கிணற்றுத்தவளையிடம் கடலைப் பற்றிச் சொன்னால் எப்படி விழிக்குமோ அப்படி இருகிறது என் நிலை
உலகை இத்தனை வருடம் குடும்பதுக்குள் இருந்தே செய்திகள் வாயிலாகவே அறிந்து இருக்கிறோம் ...ஒரு சில வெளி நாடுகள் சென்று இருந்தும் நான் உணர்ந்ததை பதிவு செய்வது எனக்கு இயல்பாக வருகிறது ...

ஆனால் தெரியவே தெரியாத ஒன்றைப் பற்றி எழுத தயக்கமாக இருக்கு.. கோபம் வந்தாலும்..

உண்மை எவ்வளவு என்பது குறித்த தயக்கம் ஏற்படுகிறது...

நான் எனக்கு இயல்பாய் வருவதைப் பகிர நினக்கிறேன் டாக்டர்...

அது குறித்து தாங்கள் எனக்கு கூற விரும்புகிறேன்

Muruganandan M.K. said...

"அந்தச் சூழலுக்குள் சிக்கியிருக்கும் வரை அதுவே விமோசனம்...." மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் நன்றி

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒருவனுடைய தேவைகள் அவன் "உள்"
இருக்கையில், அவன் ஏன் வெளியே ஓடுகிறான்? இங்கு யாவருக்கும் "உள்"
காலியாக இருப்பதால் தான் ஆஸ்ரமங்களும்,
சாமியார்களும் இத்தனைப் பெருகி உள்ளன,
என்பது அடியேனின் கருத்து.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்னைப் பொறுத்தவரையில் கடவுள் என்பது
ஒரு FEELING. நம் ஆழ்மனத்துக்கு நம்மை விட
ஒரு பெரிய ஆள் நமக்கு மேல் இருந்தால் ஒரு
சௌகரியம்! அட, அட்லீஸ்ட் நம்முடைய
குப்பைகளைப் போட ஒரு குப்பைத்தொட்டியாக
கூட அதனை நாம் பயன்படுத்திக் கொள்வோம்!
அதனால் தான்,'மேலே ஒருவன் இருக்கிறான்'
என்கிற தைர்யத்தில் அயோக்யத்தனம் பண்ணும்
ஆஸ்திகர்களும்..'ஒருவரும் இல்லை நமக்கு
நாம் தான்' என்ற பயத்தில் யோக்யமாய் வாழும்
நாஸ்திகர்களும் நம்மில் இருக்கிறார்கள்
அல்லவா?

அரங்கப்பெருமாள் said...

சாமியார்களின் எண்ணிக்கைச் சற்று அதிகமாகி விட்டது என்பது உண்மையே.

ஆக,அவர்கள் கற்றுக் கொடுக்கும் மூச்சுப் பயிற்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”வளியினை வாங்கி வயற்றில் அட்க்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும்
பிஞ்சாம்”

”காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர் இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளருக்கு கூற்றை உதைக்கும் குறி அதுஆமே”

என்றார் திருமூலர். இவர் சொன்னதைதான் இவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். இதைக் க்ற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சனை என்ன என்று கூறமுடியுமா?
இவர்கள் படங்களை வைத்துகொள்வதோ,அவர்களுக்காக பிரச்சாரம் செய்வதோ தவறு என்று கொள்வோம். அதை விடுத்து, இக் கலையைக் கற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சனை என்ன என்பதையும் கூறமுடியுமா?

Santhini said...

டியர் Dr . ருத்ரன் சார்,

உங்களின் எழுத்து மற்றும் பின்னூட்டங்கள் படித்தபின்.....என் கருத்துகள்.
ஒருவகையில் உங்கள் எழுத்துகள் ஒற்றை பக்கமாக இருக்கிறது. நீங்கள் சொல்வது சரியே எனினும், வேறு சில கோணங்களும் உண்டு.
சில பின்னூட்ட கருத்துகளை கோர்வை செய்கிறேன்.
1 ) மூச்சு பயிற்சி, யோகா போன்றவற்றை கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு (நுகர்வோராக ) இத்தகைய வகுப்புகள் உதவியே செய்கின்றது. இதன் மூலம் எடை குறைந்தவர்கள் அநேகம்.
2 ) கற்கோயில்கள் செய்ய முடியாத பல விஷயங்களை இந்த வகுப்புகள் செய்ய முயல்கின்றன என்பதும் உண்மை. ஹிந்து மதத்தின் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கங்கள் இத்தகைய சாமியார்களிடம் கிடைக்கின்ற உண்மையை யாரும் மறுப்பதற்கில்லை.
இதை தாண்டிய பிறகு, மேலும் பயன் பெற விளைவதும், விரும்பாததும் அவரவர் விருப்பமாகி போகிறது.
இது ஒரு சோதனைக்களம். விரும்பினால் இறங்கலாம். இல்லாவிட்டால் இல்லறம் சுகிக்கலாம். இல்லறவாசிகளுக்காகவே ஆரம்ப நிலை வகுப்புகள். அவை யாரையும் இல்லறம் துறக்க தூண்டுவதில்லை.
எனினும் ஏற்கனவே மலிந்து கிடக்கும் ஹிந்து தர்மம் பற்றிய புத்தகங்கள் சொல்வதையே, எல்லா சாமியார்களும் சொல்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. உலகில் இருக்கும் நான்கைந்து மதங்களும் ஒருசேர ஒன்றையே சொல்கிறது என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
அத்தனைக்கும் ஆசைப்படு ! என்று ஒருவர் சொன்னதை புதிதாய் சொன்னதாக பாவித்துக்கொள்ள வேண்டியது இல்லை. கடமை செய்ய கிருஷ்ணன் உபதேசித்த கீதை எல்லா காலத்திற்கும் பழையது, மற்றும் புதியது.
நீங்கள் சொன்னது போல சீடர்கள் என்ற பெயரில் இந்த பக்தர்கள் கண்மூடி ஆராதனை செய்யும் பாவம் தேவையில்லை. ஆயினும் அத்தகைய சீடர்களின் உள்மன நிலை ( மனோவியல் நிலை அல்ல, விருப்பம் பற்றியது) அறியாமல் மதிப்பிடுவது அறியாமையாகலாம்.
கற்பதன் ஒருநிலையாக இத்தகைய சாமியார்கள் எனும் படிவங்களை, ஒரு சோதனைக்களமாக கருதி, பயன் பெறலாம்.

எங்கோ யாரோ எழுதியதைப்போல எல்லாமும், எப்போதும், எங்கேயும் தேவையாகத்தான் இருக்கிறது.

இறுதி உண்மையின் நிலை பற்றி யாருக்குத் தெரியும் ? எல்லோரும் எதையேனும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏதோ ஒருவித சௌகர்யமான நிலை எல்லோருக்கும் தேவைப்படுகிறது. சௌகர்யம் இல்லாவிட்டால் விளக்கம் வருகிறது. அது கடவுளாகவோ, அறிவியலாகவோ கொள்கை வடிவம் பெறுகிறது. இதில் எந்த கொள்கை தவறென்று நாம் மறுத்துரைக்க முடியும்?
சாகும் வரை மீதம் இருக்கும் காலத்தை ஓட்ட வேண்டுமானால், அதையும் இதையும் மறுத்து பேசி வண்டி ஓட்டலாம். மற்றபடி இயற்கையின் இயல்பு புரிந்துவிட்டால் கோபத்திற்கு எங்கே இடம்? இயற்கை அதன் இஷ்டப்படிதான் இருக்கும். நீங்களோ நானோ சொல்லி மாறாது.
அதை ஏற்று மகிழ்வுடன் இருப்பதும் மறுத்து துயரப்படுவதும் நமதிஷ்டம்.

பர்சனல்: நான் உங்களை உங்களின் எழுத்துகள் மூலமும் மற்றும் என் தோழியின் மூலமும் அறிய நேர்ந்தேன். என் தோழி என்னை பல முறை அழைத்ததுண்டு உங்களை சந்திக்க. சில காரணங்களால் முடியாமல் போனது. ருத்ரன் சார், மருத்துவம் ஏனோ மனிதனை இரு நிலைகளில் மட்டுமே பார்க்கிறது. ஒன்று நோயுற்றவன், மற்றொன்று ஆரோக்கியமானவன். இரண்டிற்கும் நடுவில் யாரும் இல்லையா?
இயற்கை மனிதனை அவ்வாறாக படைக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். எல்லா நிறங்களின் கலவைகளும், மனம், உடல் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறது. கருப்பு, வெள்ளை தவிரவும் இருக்கிற மற்ற எல்லா நிறங்களையும் ஒப்புக்கொள்ளும் மனோபாவமே, இயற்கையின் எல்லா படிவங்களையும் ஒப்புக்கொள்ளும். தங்களின் கட்டுரைகள் எனக்கு நிறைய பயனளித்துள்ளன. மிக்க நன்றி.

Post a Comment