Monday, January 4, 2010

மனமும் இலக்கியமும் -பகுதி இரண்டு

வாசிப்பு வளர்ச்சி தரும், வளர்ச்சியும் வாசிப்பை நிர்ணயிக்கும். இதில் எது முதல் என்றில்லை, இரண்டும் ஒரு சுழலாகவே அமையும். 


ஒரு கட்டத்தில் நாம் கொண்டிருந்த அல்லது கொண்டிருந்ததாய்ச் சொல்லிக்கொள்ளப் பிடித்திருந்த கொள்கைகளின் வெளிப்பாடுகளை உள்ளடக்கிய நூல்கள் நமக்குப்பிடிக்கும்.
காலமும், கவலைகளும், வாழ்வில் நாம் ஏற்றுக்கொண்ட நிர்ப்பந்தங்களும் கொள்கைகளை மானப்பரணில் போட்டு விடுவதால் அத்தகைய புத்தகங்களை ஒரு கண்காட்சியிலோ கடையிலோ பார்த்தால் கைகள் அவற்றை வாஞ்சையுடன் வருடும். முதல் காதலி போல அந்த முன்னாள் கொள்கைச் சார்புகள் மனத்தின் மூலையில் என்றும் கிடக்கும். இங்கே தான் வாசிப்பும் வாழ்க்கையும் முரணாக பலருக்கு மாறும். 

சம்பாதித்துத் தன்னைப்பேணிக்கொள்வதா இல்லை வருமானம் பற்றிய கவலையில்லாமல் சமூகம் சார்ந்த சிந்தனையுடன் செயல்பட்டுக்கொண்டிருப்பதா எனும் கேள்வி 25ல் வராவிட்டாலும் 30 வயதில் வரும். எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல் என்றும் இருக்கலாம், ஆனால் நாடும் மக்களும் பரிதாபத்தினாலோ பாசத்தினாலோ யாரையும் பார்த்துக்கொள்வதில்லை. இந்தக்கட்டத்தில், மனம் இலக்கியத்தை ஒரு கனவின் மீதியை மீட்டெடுப்பதற்காகவே சிலருக்கு அமைந்துவிடும். 
நான் செய்ய முடியாத, வலிதாங்கிக்கொள்ள முடியாத புரட்சியை யாராவது செய்யும் போது நூறு ரூபாய் நன்கொடை கொடுப்பது போல. 

இப்போதுதான் இலக்கியம் நம் இயலாமையின் வடிகாலாக அமைகிறது. நான் உயர்வாக நினைத்த கொள்கை, நான் வாழ விரும்பிய வகை, நான் கற்பனையில் மட்டுமே புரிந்து கொள்ளும் வாழ்நிலை ஆகிய எல்லாமும் யாரோ எழுதிய புத்தகங்கள் வாயிலாக எனக்கு ஒரு சமாதானம் தரும். இன்னும் இம்மாதிரி சிந்தனைகள் மனித மனங்களிலிருந்து போய்விடவில்லை எனும் ஆறுதலான ஆதங்கத்திற்கு வருடலாகவே இவை அமையும். 

இதுவும் ஒரு விரக்தியை உருவாக்கும். இவ்வகை இலக்கியங்கள் என் இயலாமையை நான் சுயநலத்திற்காகச் செய்துகொண்ட சமாதானங்களை எனக்கு அடிக்கடி படிக்கும்போது சுட்டிக்காட்டுவதால், மனம் தன்னைத் தற்காத்துக்கொள்ள, மெதுவாக இவற்றை தவிர்க்க ஆரம்பிக்கும். இந்தக்கட்டத்தில் தான், மீண்டும் ஒரு தேர்வு நடக்கும். திரும்பத்திரும்ப, இதையெல்லாம் படித்து நாம் ஒன்றுமே பங்களிக்கவில்லையே எனும் வெட்கம், இதையெல்லாம் விட்டு விட்டு வேறெதையாவது படிக்கலாமே என்று ஒரு தூண்டுதலை உருவாக்கும். 

அப்போதுதான், அப்போது, பொழுதுபோக்க எந்தச் சிந்தனையையும் கிளராத கதைகளைப் படிப்பதா இல்லை நமக்கு இருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கும் கொம்பிற்கு புதுவண்ணம் அடிப்பது போல் வேறுவகையான புத்தகங்களைப் படிப்பதா என்று மனம் தேடும். படிப்பது ஒரு பழக்கமாகிவிட்டால் அது விடாது. 

இவ்வகை மனக்கிளர்ச்சியில் உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் கைகொடுப்பவை ஆன்மீக நூல்கள். அதிலும் இரண்டு வகை உண்டு. புரிதலை ஆழமாக உள்ளே கேள்விகளை எழுப்பி விடைகளை உருவாக்கவும் சில நூல்கள் உண்டு என்பதைப்போல், போலியாக வியாபாரத்தின் இந்த விற்பனைச் சாத்தியங்கள் நிறைந்த காலியிடத்தை இட்டு நிரப்பும் குப்பைகளின் குவியலாகவும் சில நூல்கள் உண்டு. 

படித்தவுடன் இதனால் பயன் உண்டு அல்லது நேரம் வீணாயிற்று என்பது மனதுக்குத் தெரியும், ஆனால், பொய்களை வாங்க முடிவுசெய்தபின், அவையே நிஜம் என்று நினைக்கவே மன விரும்பும். வாழ்க்கை வேறு இன்னும் ஆசைகளை அதிகரித்துக்கொண்டு செல்வதால், போலியான்மிக வியாபாரிகளின் பேச்சுகளும் எழுத்துக்களும் அவை தர விரும்பிய மாயசுகத்தைத் தரும். 
அதன் பிறகு ஹ்ம் நீ என்ன ராஜேஷ் குமார் படிக்கிறாயா என்று பிறரை நக்கலாகப்பார்க்கும் மனம், அது போலல்லாமல் பாசாங்குகள் நிறைந்த போலி தத்துவங்களைச் சிலாகிக்கும். ஒரு கட்டத்தில் இதிலிருந்து மீள முடியாது. படிப்பதே நிற்கும், அல்லது படிப்பது இது மட்டுமே என்றாகும். வாசிப்புக்கும் வளர்ச்சிக்கும் அப்போது எவ்விதத்தொடர்பும் இருக்காது. 

இலக்கியமும் மனமும் வளரும் சூழலின் ஒரு கோணத்திய விவரிப்பு இது. மனவியலுக்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அடுத்து எழுதுகிறேன்.

7 comments:

Prabu M said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

இந்தப் பகுதி தெளிவாக சென்று கொண்டிருக்கிறது... தொடருங்கள்.

butterfly Surya said...

நான் உயர்வாக நினைத்த கொள்கை, நான் வாழ விரும்பிய வகை, நான் கற்பனையில் மட்டுமே புரிந்து கொள்ளும் வாழ்நிலை ஆகிய எல்லாமும் யாரோ எழுதிய புத்தகங்கள் வாயிலாக எனக்கு ஒரு சமாதானம் தரும். //////////

அருமை. தொடருங்கள்..

அரங்கப்பெருமாள் said...

தெளிந்த நீரோடை. அருமையான விவரிப்பு.

நொந்தகுமாரன் said...

//படிப்பது ஒரு பழக்கமாகிவிட்டால் அது விடாது//

ஆமாம் டாக்டர். ரெம்ப தொல்லை. புத்தகங்கள் வாங்காமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். முடியவில்லை. கடன் வாங்கியாவது வாங்குகிறேன். வாங்கிய புத்தகங்களை 10% கூட படிக்கமுடியவில்லை. மன உளைச்சலாகிறது. படித்தால்..இன்னும் மன உளைச்சல் கூடுகிறது. படிப்பதா... படிக்காமல் இருப்பதா என போராட்டம் துவங்கி விடுகிறது. தொடர்ச்சியாய் எழுதுங்கள் டாக்டர். உள்ளம் தெளிவு பெற!

Sai Ram said...

ஒரு கட்டத்தில் எனது வாசிப்பு அனுபவத்தை திரும்பி பார்க்கும் போது வாசித்த அனைத்தும் மறந்து போய் விட்டதாக தோன்றும். இன்னொரு வகையில் இந்த வாசிப்புகள் எல்லாம் இன்று அர்த்தமற்று போய் விட்டதாக எண்ணமும் எழும். the road not taken குறித்து இந்த காலகட்டத்தில் பெருமூச்சு எழுவதையும் தவிர்க்க முடியாது. முன்பு ஒரு புத்தகத்தை வாசிக்க நேரமிருக்கும், ஓர் இரவில் வாசித்து விடக்கூடிய அளவு ஆர்வமிருக்கும் ஆனால் காசு தான் இருக்காது. இன்று காசு இருக்கிறது. வாசிக்காமலே தூசியினை போர்த்தி தூங்குகின்றன எப்போதாவது வாங்கும் புத்தகங்களும்.

Deepa said...

இதை நீங்கள் எழுதிய போது எப்படியோ படிக்கத் தவறி இருக்கிறேன்.
அற்புதமான் இடுகை.

//இதையெல்லாம் படித்து நாம் ஒன்றுமே பங்களிக்கவில்லையே எனும் வெட்கம், இதையெல்லாம் விட்டு விட்டு வேறெதையாவது படிக்கலாமே என்று ஒரு தூண்டுதலை உருவாக்கும்.//
இதே போல் உணர்ந்திருக்கிறேன்.

Post a Comment