Monday, August 8, 2011

இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்?


இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்? என்பதில் தொக்கியிருப்பது என்னவெல்லாம் செய்ய முயன்றாய் என்பதே.

சும்மா ஒரு பட்டியலிட்டுப் பார்க்கிறேன், சிலவற்றை விட்டிருக்கலாமே தவிர எவற்றையும் சும்மா சேர்த்துக் கொள்ளாத ஒரு பட்டியல், 1986ல் ஆரம்பம். 25 வருடங்கள். அதில் கடந்த பத்தாண்டுகள் எதுவும் செய்யாமல்! 

ஆனாலும் மீண்டும் ஏதாவது செய்யத்தான் வேண்டும் என்று ஓர் உந்துதல் இரண்டு நாட்களுக்கு முன் வந்த்து – காரணம் ஆகஸ்ட் ஆறு என்பது எனக்கு ஒரு சாதாரண நாளாகாது. 2000த்தாண்டில், ஏர்வாடி தர்காவில் உயிரோடு தீக்குச் சிலர் இரையாகிய நாள். அரசியல் நாடகமாகவோ, அடுத்தவர் கவனம் ஈர்க்கவோ அவர்கள் தீக்கு இரையாகவில்லை. சட்ட்த்தின் நோக்கில் அது கொலையாகாதிருக்கலாம் என்றாலும் அலட்சியம், அறியாமை, அக்கறையின்மை உயிர்களைக்கொல்லும் என்று எனக்கு (பிறர்க்கும்?) உணர்த்திய நாள். அன்று இறந்தவர்கள் மனநோயாளிகள். தங்கள் சுயநினைவின்றி, சுயவிருப்பின்றி, ‘சொந்தக்காரர்களால்அந்த தர்காவில் அடைக்கப்பட்டு, ஓட முடியாமல் கால்களில் சங்கிலிகள் பிணைக்கப்பட்டு பரிதாபமாக ஒரு தீ விபத்தில் செத்தவர்கள். அவர்களில் ஒருவரையாவது நான் பார்த்திருக்கக்கூடும் 1986ல்.1986, மனநல மருத்துவனாக வாழ்க்கை ஆரம்பித்த ஆண்டில், மனநோய்களில் மிகவும் தீவிரமான ஸ்கிஸோஃப்ரீனியா (மனச்சிதைவு), குறித்து நண்பர்கள், பாலாசிங்குடனும், ரவூஃபுடனும் ஒரு சுருள் ஃபில்ம் வாங்கி, 35 ஸ்லைட்கள் எடுத்து, அவற்றை ஒருங்கிணைத்து, திரையில் காட்டும்போது ஒலிக்க உரை ஒலிப்பதிவு செய்ததுதான் முதல் முயற்சி. அடுத்த ஆண்டு ‘இனிஎன்று ஒரு நாடகம். அப்புறம் தொடர்ந்து ஆவணப்படங்கள்,ஓவிய கண்காட்சிகள், ஒலி/ஒளி உரைகள் என்று முத்தாய்ப்பாக 1988 ஈடிபஸ் தமிழில் நாடகம்! அந்நேரம் என்னுடன் வைத்தியநாதன், மீனாட்சிசுந்தரம், சாமி-செல்வராஜ் என்று நாடக்க்குழுவிலும் நிஜவாழ்விலும் பங்கேற்ற நண்பர்கள்...இடையில் வேலூர்-வட ஆற்காடு மாவட்ட கிராமங்களில் மாதந்தோறும் விழிப்புணர்வு முகாமகள்...பின்னர் 1990 ஆண்டு GUSH –ப்ரவாகம் என்று பெயரிட்ட அமைப்பின் மூலம் நாடகங்கள், சிகிச்சைப்பட்டறைகள், உரைகள்...பிறகு சொந்தமாய் ஒரு மருத்துவமனை! (இலவசமாய்ப் பலருக்கு அங்கே சிகிச்சை அளித்ததால் கடன், அதை மறக்க ஓவியங்கள் மூல பணம் சம்பாதித்தல்,  அதற்காகவே பழைய நினைவுகளால் பழைய படம் -1993). 1995- 1997 வாரந்தோறும் மனநல விழிப்புணர்வுக்கான தொலைகாட்சி நிகழ்ச்சி, இரண்டு ஆவணப்படங்கள்...பிறகு ஓய்வெனும் பெயரில் ஒரு தொய்வு.

2000ம் ஆண்டு ஏர்வாடி கொடுமை. சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனநோயாளிகள் தப்பிக்க முடியாமல் தீக்கிரையானார்கள் – அதே ஏர்வாடிக்கு 1986 போயிருந்தேன், சங்கிலியால் பிணைக்கப்படும் மூட நம்பிக்கை குறித்து ஆவணப்படம் எடுத்து பதிவு செய்ய. அந்நேரம் உலக அளவில் உன்னதமான புகைப்படக்கலைஞர் ரகுராய் என்னுடன் வந்தார். இருவரும் படம் எடுக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் சிலர் தடுத்தார்கள், எதிர்த்தார்கள், வெளியேற்றினார்கள். அதுவரை மூடநம்பிக்கை குறித்த எதிர்ப்பாக மட்டுமே சென்ற எனக்கு அதிலுள்ள வியாபாரக் கேவலமும் புரிந்தது. எடுத்த படங்களை எனக்குத் தெரிந்த மட்டுமல்ல, அறிமுகமாகாத ஊடகவியலாளர்களிடமும் கொடுத்தேன் ஒருவரும் சீண்டவில்லை.

பதினான்காண்டுகளுக்குப் பின், தீவிபத்து நடந்தவுடன் முன்னம் நான் அண்டிய ஊடகக்காரர்களில் இருவர் அதே படங்களைக் கேட்டபோது நான் தரவில்லை. எந்த வியாபாரத்துக்கும் நான் உடந்தையாக்க்கூடாது என்ற தீர்மானத்தால்.
ஆனால் இந்த ஆண்டு (2011), ஒரு சமூகத்தொண்டுநிறுவனத்தின் சார்பாக தோழி பொற்கொடி கேட்டுக்கொண்டவுடன் ஏர்வாடி 11ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்  ஓவியம் தீட்ட. கலந்து கொண்டதன் முக்கிய காரணம் நண்பர் மருது வரைவதைப் பார்க்கத்தான் என்றாலும் ஏர்வாடி தாக்கமும் முக்கியம். பல ஆண்டுகள் கழித்து பலர் முன்னிலையில் படம் வரைந்தேன். இது படம் வரைந்த பெருமை பற்றிய பதிவு அல்ல.

இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் என்று உரைத்தது; அது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை செய்யட்டுமே எனும் சாய்வு நாற்காலி மனப்பான்மையும் தவறென்று புரிந்தது. அடுத்தவர்களால் முடியாதென்பதால் அல்ல, என்னால் இன்னும் முடியும் என்பதால்.

என்னால் என்ன முடியும்? பேச, எழுத, படம் வரைய, நாடகம் நடத்த, ஆவணப்படம் உருவாக்க இன்னும் முடியும். ஆனால் ஒரு மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்த முடியாது.

ஒழுகும் மெழுகு விரல் தொடுமுன்பே அடுத்து எங்கே போகலாம் எனும் நினைப்புள்ளோருடன் இணைய முடியாது. இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம், பொய்யில்லாமல் பொய் எதிர்த்து.


Monday, August 1, 2011

சும்மா யோசித்த கதை!

கதைசொல்லி சொன்ன முதல் கதையின் மூலம் எது? ஆதிக்கும் மூலம் என்று பரம்பொருளைப் புரியா பொருளாக்கிய கலாச்சாரத்தில், கேள்விகளுக்கு விடை தேடிய காலத்துக்குப் பின் கேட்பது அநாகரிகமாகவும் அபச்சாரமாகவும் ஆக்கிக் கொண்டவர்கள் சொன்னதும் கேட்டுக்கொண்டதும் வெறும் கதைகள்தானா?

கதாகலாச்சாரத்தின் காலப்பின்னோட்டத்தில், யேசுவும், பின்னாளில் ராமக்ருஷ்ணரும் கதை சொல்லி அதன்வழி கருத்தும் சொன்னதன் முன்னமேயே பஞ்சதந்திர கதைகளும் இருந்தன..யீஸாப் கதைகளும் இருந்தன…ஆனால் இவை எப்படி வந்தன?  யேசு ஒரு தச்சுவேலை செய்தவர், ராமக்ருஷ்ணர் படிப்பறிவில்லாதவர், இருவரும் கதை சொல்லி அதன் மூலம் கருத்தும் சொல்லிக்கொடுக்க முயன்றவர்கள். இவர்களிருவருக்கும் முன்னமேயே இந்த யுத்தியைப் பயன்படுத்தி கதை சொல்லி தன் கருத்தைப் பரப்பியவர் புத்தர். அவர் கல்வியறிவும் இருந்தவர், அதைவிடவும், ‘ராஜா வீட்டுப் பிள்ளை’, அவருக்கு கதைகள் சொல்லவே சிலர் நியமிக்கப்பட்டிருக்கக்கூடும். குழந்தை தூங்கும்வரை கதை சொல்லிக்கிடந்தவர் கதைகளை எங்கிருந்து கற்றார்? அந்த காலத்தில் பஞ்சதந்திரக்கதைகள் கேட்டுச் சொன்னதாக வைத்துக்கொண்டாலும், அவற்றை உருவாக்கியவர் எங்கிருந்து எடுத்தாண்டார்? இதிகாசத்தின் இடைச்செருகல்களாக உருவாக்கப்பட்டவற்றுக்கெல்லாம் ஆதி எது? அதற்கான அவசியம் ஏன்? அதன் இன்றைய பரிணாமம் என்ன?

கதை என்பதற்கு கற்பனையோடு நிஜத்தின் களமும் வேண்டும், அதனாலேயே ஆதிகாலத்துக் கதைகள் காடுகளில், மிருகங்களிடையே நிகழ்ந்தன. இயற்கை பார்த்து வியப்பும் அச்சமும் கொண்டவரின் சுயசமாதானமாகவே உருவகிக்கப்பட்ட கடவுள்களைப் போலவே, ஆசைகளின் வெளிப்பாடுகளாக விலங்குகள் மனிதர்களைப் போல நடந்து கொண்டதாகவும், அவை ஒரு நெறிக்குட்பட்டு இயங்கியதாகவும் கதைகள் சொல்லப்பட்டிருக்கலாம். இது அன்றைய அனுமானம் குறித்த இன்றைய அனுமானம்தான்! அனுமான்ங்கள் அனைத்துமே ஆசையின் விஸ்தீரணங்கள்தான். இப்படி இருக்குமோ என்பதைவிடவும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று ஆரம்பித்து, பின்னர் தன் தவறினைத் தானே திருத்திக்கொண்ட காலத்தில், தேவையும்பட்டிருக்காது; ஆனால் இன்று திறந்தமனத்துடன் அணுகுவதாகச் சொல்லிக் கொண்டாலும், மனம் முழுக்கத் திறக்காமல் சில வசதியான ஜன்னல்கள் மட்டுமே திறந்து வைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

Dr.Rudhran, dramatherapy 1992
மீண்டும் கதை பற்றி கதை பேசுவோம்! கதையின் பயன் என்னவாக இருக்கிறது என்பது இப்போது எல்லார்க்கும் தெரியும் என்பதால்தான் செய்திகள் கூட நம்பகத்தன்மை இழந்து கொண்டிருக்கின்றன. கதையும் செய்தியும் இழைத்து ஒரு சுவையான நுகர்பொருளாகியது எனும் கதை சொல்வதும் இன்று ராமன் பாலமும் அணிலுமாக நீதிமன்றத்திலெல்லாம் ஆதாரமாக வைக்கப்படுகிறது.
கதைக்கு முதல் பயன் கவனம் ஈர்த்து, அந்நேரம் கவலை, குறுகுறுப்பு ஆகியவற்றைக் குறைத்தல். ஆனால் ஆதிகாலத்தில் கதைகள் நெறி புகட்டுவதாய் உருவான அரசியல் அவசியமாகவும் ஆரம்பமாகியிருக்கலாம்.

இன்று உருவான, உருவாக்க சிலர் முயலும் கதைகள் குறித்துப் பின்னர் பரிசீலிப்போம். இப்போதைக்கு, கதை என்பதைப் பற்றி எனக்கு சொல்லிக்கொடுங்கள், கதை சொல்லிப்பாருங்கள் அதன் சுவாரஸ்யம், சிரம்ம் இரண்டுமே புரிபடும்போது, கதைசொல்லிகள் அந்தக் கதைகளின் ஆதிகர்த்தாக்கள் பற்றியும் யோசித்துப் பாருங்கள்.