Thursday, June 25, 2009

மகாதேவி

நான் வணங்கும் தெய்வத்தின் கையில் வில்லிருக்கும், அம்பிருக்கும். அந்த வில்லும் அம்பும் ஆவேசமாகும் ஆசையை அழிப்பதற்கான குறியீடுகளாகவே அமைந்துள்ளன..அது அநியாயமாய் வரும் மோகத்தை முறியடிக்கவே என்று புராணங்கள் கதைக்கின்றன.
பொய்யை புரட்டை எதிர்த்தே அவள் ஆயுதம் ஏந்தி இருக்கிறாள் என்றே எனக்கு நம்பப்பிடித்திருக்கிறது..அந்த மகாசக்தியின் தரிசனத்திற்காகவே காத்துக்கொண்டும் இருந்திருக்கிறேன்.
கவிஞர்கள்,ஓவியர்கள் சிற்பிகள் பலரது கற்பனையில் உருவான பிம்பத்தையே நானும் ஏற்றுக்கொன்டிருந்திருக்கிறேன். அவ்வப்போது பக்தியை மீறும் சலிப்பில் அந்த பிம்பத்தையும் சந்தேகித்திருக்கிறேன்.
இனி அப்படி ஒரு வினா உள்ளே வராது.
சக்தி எப்படியிருப்பாள் என்று ஒரு நிஜத்தின் படம் இப்போது உள்ளது..

இவள் வெறியோடு நிற்கவில்லை, வீரத்தோடு நிற்கிறாள்.


க‌யமையைக் கொல்ல நிமிர்ந்தெழுந்திருக்கிறாள்.
துப்பாக்கிகள், பெரும்படை, திமிர் எல்லாம் மிகுந்த எதிரிகளை எதிர்த்து நிற்கிறாள்.
இவள் இப்போது நான் கற்பனையில் கண்டு வந்த தெய்வத்தின் நிஜ‌ வடிவம்.
இவள் பிம்பம் அல்ல, சத்தியம்.
இவளையே இப்போது நான் வணங்குகிறேன்.
இவள் என் தெய்வம் தான்.

யாரையாவது தெய்வமாக்கிவிட்டால், அதில் ஒரு செளகரியம் உள்ளது.
"சே நானெல்லாம் சாதரண மனுஷன் தானே, இப்படி அநியாயத்தை எதிர்க்கத்தானே சாமி இருக்கு.."என்று கோழைத்தனத்திற்கு ஒப்பனை கூட்டிக்கொள்ளலாம்.
அவள் தெய்வம்- எனக்காகவும் எல்லாருக்காகவும் போரிடுவாள், நான் மனிதன்- அவளை வணங்கி வியந்து, என் வேலையைப் பார்க்கப்போய்விடுவேன். மனிதன் என்பவன் தெய்வமாகலாம், தன் வசதிகளுக்கு எந்த பங்கமும் வராதபோது. தெய்வம் மானுட உருவில் வெளிப்படும், நேர்மையின் வீரம் தேவைப்படும்போது.
இப்படியொரு பெண், அந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக சதி செய்ததாக நாளை கைது செய்யப்படலாம், கொல்லப்படலாம்..
அப்போதும் என் பக்தி பகிரங்கமாக இருக்குமா அல்லது போலியான பகுத்தறிவோடு இந்த தேவதையை நிராகரிக்குமா தெரியவில்லை. உள்ளே மட்டும் தெய்வமாக அவள் ஒளிர்வாள்.

Wednesday, June 24, 2009

கவிஞர் பற்றி இன்னுமொரு நினைவு

1972.. முதலாம் ஆண்டில், MBBS , BDS இரு பிரிவினரும் அப்போது ஒன்றாகப்பயிலும் காலம்.
ஏதோ ஒரு வகுப்பு.. நான் குறிப்பு எடுப்பதைப்போல் பாவனை செய்து கொண்டிருந்து விட்டு, அதிலும் சலிப்பு தோன்ற அந்த டைரியை மூடித் திறந்து ஆடிக்கொண்டிருந்தபோது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாணவன் என்னிடம் பேச்சு கொடுக்க, அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தோம்..
அவனிடம் நான் கேட்ட கேள்விகளும் அவனது பதில்களும்:
"உங்க வீடு?"
"தி.நகர்"
உங்கப்பா என்ன செய்றார்?"
"பாட்டு எழுதுவார்"
ஓ என்று என் டைரியை பிரிக்க, அதில் அந்தக் காலத்தின் என் வழக்கத்தின்படி, கண்ணதாசனின் பாடல் வரிகள்..
ஹூம் இவங்கப்பா பாட்டு எழுதுவார்னு சொல்றானே என்னன்னு சொல்றது என்று நான் யோசிக்கும்போதே அவன் சொன்னான்..
"இது எங்கப்பா எழுதினது தான்.."

அவனிடம் சில ஆண்டுகள் கழித்து,
"உங்கப்பாவை விழாவுக்கு வரச்சொல்றியா" என்றபோது அவன் சொன்னபதில்,
"இதெல்லாம் நீயே பாத்துக்கப்பா, என்னை மாட்டிவிட்டு அப்புறம் தராறு பண்ணாதே"
பல வருடங்கள் கழித்து அவனுடைய அண்ணன் மகனின் கல்யாணத்தில் பார்த்தவுடன் கட்டிக்கொண்டான். இப்படி என்னிடம் நேசம் பாராட்டுபவர்களை எல்லாம் என் மனைவிக்கு அறிமுகம், அதனால் அவள் ஆச்சரியத்தோடு பார்த்தபோது நான் சொன்னது..
"அவன் பெயர் கமால்.
இன்று பல் மருத்துவர், என்றும் நெஞ்சிற்கு இனியவர்!..தன் தந்தையால் அல்ல, தன்னால்.

இன்று கவிஞரின் நாளாம்

ஒரு நாள்
1989 புத்தகச்சந்தையில்.. இவனுகளையெல்லாம் எவன்டா கூப்பிட்டுப்பேசச்சொல்றான்? ... என்று என் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்..அங்கே யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
1997..அதே சந்தையில், நான் பேசிக்கொண்டிருந்தேன்..எவனாவது என்னைப்பற்றியும் அப்படிச்சொல்லியிருப்பான்..
அன்று நான் பேசியதில் ஒரு விஷயம்‍:
" என் புத்தகம் என்றாவது வெளியிடப்படும் என்று நினைத்தேன், அது ஜெயகாந்தனால் அல்லது கண்ணதாசனால் தான் வெளியிடப்படவேண்டும் என்றும் விரும்பியிருந்தேன்.." அந்த நூல் இராம கண்ணப்பனால் (கவிஞரின் கையானவர்) வெளியிடப்பட்டது. அப்போது ஜெகே எனக்கு அறிமுகம் இல்லை.
2009, ஜெகே நான் கேவலமாக உளறியதையும் வெளியிட வருவார்..
நல்ல வேளை கண்ணதாசனோடு நான் நெருங்கவில்லை.

என்ன சொல்ல வருகிறேன்?
செத்து வாழ்வதைவிட வாழ்ந்து சாவதைப்பற்றித்தான்..
ந‌ட்பும் நேசமும் நெறி மீறியா?
நான் அவ்வளவு பரந்த மனத்துடையவன் அல்லவே,
எனக்கு இன்னும் பொய் போர்த்திய மெய்க்ளைவிட
மெய் போர்த்திய பொய்களே விருப்பம்..'
யாருக்காகவும்
அல்ல, எனக்காகவே அழுகிறேன்.

அழுவது சுகமென்பதால் அழுகிறேன்,
அழுவது சோகமென்று கற்றுக்கொண்டதால் வருந்துகிறேன்.
இது யாருக்கான அஞ்சலி?