Thursday, December 31, 2009

புத்தகத்திருவிழாவும் சில நினைவுகளும்



 வாசித்து முடிக்காத பல புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்தும் புதிதாய்ப் பார்க்கும்போதெல்லாம் வாங்குகிறேன். அவற்றுள் வாசிக்கவே போவதில்லை என்பவையும் அடக்கம். தகவல் களஞ்சியங்கள் அகராதிகள் மட்டுமல்ல, சில நவீனங்களும் சில பக்கங்களிலேயே படிக்க முடியாதவற்றின் அடுக்குள் சேர்க்கின்றன. இப்போது புத்தக விழா ஆரம்பம், இன்னும் பல வாங்கப்படும், சில அன்புடன் கொடுக்கப்படும், வேறு சில பரிந்துரைக்கப்படும். புத்தகவிழா என்னுள் பல நினைவலைகளைக் கிளப்புகிறது.
33வது புத்தகவிழா! இதுவரை இரண்டு ஆண்டுகள்தான் செல்லத்தவறியிருக்கிறேன். ஒருமுறை இன்னும் கொஞ்சம் காசு சேரட்டும் இரண்டு நாள் கழித்துப்போகலாம் என்று இருந்தபோது அங்கே தீபப்பிடித்து விழா நின்றுபோனதால்,அடுத்தது நான் அமெரிக்காவில் இருக்க நேர்ந்ததால்.ஆரம்பத்தில் பார்க்க மட்டுமே செல்வேன், வாங்க முடியாது என்று தெரிந்தும். பிறகு வாங்கும் வசதி வந்ததும் வாங்க ஆரம்பித்தேன். முன்பு பணமில்லாமல் வாங்காது விட்டவற்றை மட்டுமல்ல, பணம் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாதவைகளையும் வாங்கினேன். ஆயிரக்கணக்கில் சேர்ந்து விட்ட புத்தகங்களை வைத்துப் பராமரிப்பது சிரமமாக இருக்கிறது, என்றாலும், இந்த ஆண்டும் வாங்காது இருக்க முடியாது. ஒரு போதைப்பழக்கம் போல் இது ஆகிவிட்டது. பல விஷயங்களில் ஆடம்பரத்தைத் தவிர்க்கும் எனக்கு இதில் ஆடம்பரம் ஓர் ஆணவநிலைக்கே போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆணவம் ஏன் வருகிறது?
கையில் காசு இல்லாதபோது கனவுகளே போதும்; கைச்செலவுக்குக் காசு சேர்ந்துவிட்டால் நிஜங்களும் போதுவதில்லை. இது புத்தகங்களில் மட்டுமல்ல, அனைத்திலும் தொனிக்கிறது. படிக்க ஆட்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கம் இருந்தவரை எழுத்துக்கள் கனவிலும் கவிதை கொட்டின; பதிப்பிக்கவும் ஆட்கள் வந்துவிட்டபின், எழுத்துக்கள் போதுமானதாய்த் தோன்றுவதில்லை. கிடைக்கும் வரைதான் எல்லாமும் சுவை என்றால் எதை வைத்துக்கொள்வது? வசதியிருப்பதால் வாங்குவது என்றால் வாங்குவதை நிறுத்துவது எப்போது?
புத்தகங்களும் இப்போதெல்லாம் பார்க்கவும் அழகாய் இருக்கின்றன. கையில் எடுக்கும்போதே மனத்துள் ஒரு இனிய எதிர்பார்ப்பினைத் தூண்டுகின்றன. அச்சுநேர்த்தியும் அதற்கு ஈடான வடிவமைப்பு நேர்த்தியும் மயங்க வைக்கின்றன. நுகர்வு கலாச்சாரத்தில் இப்படித்தானே விற்கப்பட வேண்டும். அதன் வீச்சாகத்தானே அவசியம் இல்லாதபோதும் வாங்க மனம் அலைகிறது! பயன்படப்போவதையும் பயன்படுத்தப் போவதையும் மட்டுமே வாங்குவதென்றால் வீட்டில் எவ்வளவு இடம் காலியாக இருக்கும்!
மனத்திலும் தான். வாங்கும் சக்தி இருப்பது போலத்தானே நினைக்கும் சக்தியும் (affordable என்ற அர்த்தத்தில்). அதுவும் கனவுகள் இலவசம் எனும்போது குப்பையாகச் சேராமலா இருக்கும்.....
வாங்காத போதும் சரி, வாங்கும் போதும் சரி, எழுத்துக்களைத்தாண்டி எழுத்தாளர்களின் மீதும் ஒரு மோகம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அவர்களில் பலரைச் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம், கனவுகள் மிச்சமிருந்திருக்கும்.
எழுத எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் மனம் இப்போது புத்தகங்கள் பற்றியும் புத்தக விழா பற்றியுமே சுற்றிச்சுற்றி வருகிறது. டாஸ்மாக் கடை திறக்குமுன் காத்திருக்கும் அடிமை போல. இதனால்தான் இந்தப்போதை பயமுறுத்துகிறது. புத்தகங்கள் மீதும் போதை குறைந்துவிட்டால் என்பது மதுப்பழக்கத்தை விட்டுவிட்டால் எப்படி சமாளிப்பது என்று குழம்புவோர் போலத்தான் இது என்று தோன்றுகிறது. ஒரு போதையிலிருந்து மீண்டால் நேரம் கூடுதலாய்க்கிடைக்கும், அப்போது வாழ்க்கை புதிய அறிமுகங்களையும் அனுமதிக்கும். போதையிலிருந்துதான் மீள முடியும், காதலிலிருந்து அல்ல.
எழுத்து ஒரு காதலாய், ஒரு தவமாய், ஒரு யக்ஞமாய் இருந்தது. ஆனாலும் டைரிகள் நிறைந்ததில்லை. மனத்துள்ளேயே பல வார்த்தைகள் வாக்கியங்களாகி அழகான வடிவமைப்பு கூடிய புத்தகங்களாகி மறுநாள் விடிவதற்குள் காணாமல் போயிருக்கின்றன. இதனால்தான் எழுத்தைக் கனவுக்கணினியில் தட்டச்சுச்செய்து அழித்துவிடாமல், காகிதங்களில் காலத்திற்கும் பதிவு செய்வோர் மீது ஒரு மரியாதை வருகிறது.
இதோ இந்த ஆண்டு முடியப்போகிறது. கண்முன்னம் பிரிக்கப்படாத புதுவாசனையுடனும் புதிய சங்கல்பங்களுடனும் டைரி. முந்தைய ஆண்டுகளின் டைரிகளும் இப்படித்தான் ஒரு வரி கூட எழுதப்படாமல், உபயோகப்படுத்துவோர்க்குக் கொடுக்கப்படாமல் அழுக்கு சேர்ந்து அடுக்கிக் கிடக்கின்றன. எண்ணங்கள் டைரிகளின் எழுத்துக்களை நம்பி இல்லை. அவற்றுக்குக் காலக்கணக்கான வரிசைக்கிரமமும் இல்லை.
சனிக்கிழமை மாலை என்னை அங்கே பேச அழைத்திருக்கிறார்கள்! இதற்கு முன் 1996 ல் என்னைப்பேச அழைத்திருந்தார்கள். அன்று நான் பேசும் நேரம் தள்ளிப்போனது, காரணம், மடாதிபதி ஜெயேந்திரன் வருகை! விழா நிர்வாகிகள் அந்த மனிதனின் கால்கள் தரையில் பட்டுவிடுமோ என்று பயந்ததுபோல மண்ணில் புரளாத குறையாகச் சுற்றி வணங்கிக்கொண்டு நடந்தார்கள். சில கடைகளுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆசி வாங்கிக்கொண்டார்கள், வாங்கிக்கொடுத்தார்கள். வயிற்றெரிச்சலா அருவெறுப்பா என்று புரியாத உணர்ச்சியோடு நான் ஒரு இஸ்லாமிய புத்தகக்கடையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளே அந்த “மகான்” வந்தால் ஒரு குர்ஆன் வாங்கிக்கொடுக்கலாம் என்று காத்திருந்தேன். ம்ம்ஹூம், “புனித விழிகள்” கடையையும் பார்த்தன, ஆனால் பக்தசேவகர்களான நிர்வாகிகள் அப்படியே வேறு பக்கமாக அழைத்துக்கொண்டு போய் விட்டார்கள்! நான் வாங்கிய நூல் தகுதியான ஒருவர் கைகளில் கொடுத்துவிட்டு, பிறகு கூட்டத்தில் பேசும் போது இதைக்குறிப்பிட்டுக் கண்டித்தேன். அதன் பின் அப்படி பேச வாய்ப்பு தரப்படவில்லை. 

 சாமியார்கள் இப்போதும் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுக்கு தனி ஸ்டால்களும் உள்ளன. சிஷ்யகூட்டத்தின் அலம்பலும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. இம்முறை பார்ப்போம்! நாம் காசு கொடுத்து உள்ளே போகிறோம், காசு செலவழித்து நூல்கள் வாங்கப்போகிறோம், நமக்கு இடையூறாகச் சிலரின் பக்தி இருப்பதை எவ்வளவு சகித்துக் கொள்கிறோம் என்று பார்ப்போம்.


பதிவுக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, நான் நெருக்கமாகப் பழகிய இரு எழுத்தாளர்களின் வெளியே தெரியாத படம் ஒன்றை இங்கே இணைக்கிறேன். என் அன்பின் இன்னொரு வெளிப்பாடாக! ஜெயகாந்தன் அப்போது தாடி வளர்த்திருந்தார்!!செப்டெம்பர் 2005!


29 comments:

மதி.இண்டியா said...

புரச்சி செய்வோம் டாக்டர் சார்...

பிச்சைப்பாத்திரம் said...

அழகான புகைப்படத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

பிச்சைப்பாத்திரம் said...

சொல்ல விட்டுப்போனது: உங்களின் தளத்தின் பின்னணியை மிதமான நிறத்திற்கு மாற்ற இயலுமா? வாசிக்க சிரமமாக இருக்கிறது. உணர்வை அல்லது கொள்கையை வெளிப்படுத்தும் அடையாளமாக இருந்தால் வேண்டாம். :-)

Anonymous said...

அன்புள்ள டாக்டர் ருத்ரன்,

புத்தகங்கள் வாங்க காசில்லாத நாட்கள், காசு வந்த பிறகு புத்தகங்கள் வாங்குவதில் உள்ள ஆடம்பரம்/ஆணவம் ஆகியவற்றை பற்றி நீங்கள் எழுதி இருப்பது என் மன நிலையையும் அப்படியே பிரதிபலிக்கிறது. இன்றைக்கும் காசிருந்தும் தமிழகத்தில் இல்லாததால் புத்தகம் வாங்க முடியாத நிலை. (அது என்னவோ இணையத்தில் வாங்க முடிவதில்லை, புரட்டிப் பார்த்து வாங்கினால்தான் திருப்தியாக இருக்கிறது.)

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்! என்ன பேசினீர்கள் என்பதையும் தவறாமல் எழுதுங்கள்!

superlinks said...

///////புரச்சி செய்வோம் டாக்டர் சார்...////////


டேய் லூசு,
நீயெல்லாம் டாக்ட்டர்கிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வேண்டிய கேசுடா, ருத்ரன் டாக்டரை பார்த்து பயமா இருந்தால் இன்னும் வேறு நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள் அங்கேயாவது போய் தொலை. உன்னையெல்லாம் வெளிய நடமாட விடுறதே பெரிய தப்பு!

புரட்சி வந்தா உன்னை மாதிரி நிறைய கேசுங்க அப்ப என்னா பன்னுவாங்க சொல்லு பார்ப்போம் ?

Ashok D said...

ஆச்சரியமே நீங்கள் இன்னும் புத்தகத்தை தேடுவது. போட்டோவும் அருமை.

Krubhakaran said...

1995 முதல் தவறாமல் புத்தக கண்காட்சி செல்பவன் நான், 2002/2003 ல் இருந்து தங்களது புத்தகங்களை வாசித்து என்னை பன் படுத்தி கொண்டிருப்பவன். ”அதோ அந்தப் பறவை” மிகவும் பிடித்தது, ”உறவுகள்” வசதியான பொய்கள் என விளங்க வைத்தது, ”உயிரின் உரத்த சிந்தனையை” உனர முயல்கிறேன். வரும் சனிக்கிழமை புத்தக கண்காட்சி செல்ல நன்பர்களுடன் பேசி வத்திருந்தேன், உங்கள் மேடை பேச்சு கேட்க்க கிடைப்பது கூடுதல் மகிழ்ச்சி. கடந்த 2 வருடங்களாக Internet Blogs அதிகம் படிப்பதால் புத்தகங்கள் வாங்கும் வழக்கம் குறைந்து விட்டது. தங்களது மேடை பேச்சு சிறப்பாக அமைய வாழ்துகள்.

புருனோ Bruno said...

//கையில் காசு இல்லாதபோது கனவுகளே போதும்; கைச்செலவுக்குக் காசு சேர்ந்துவிட்டால் நிஜங்களும் போதுவதில்லை. இது புத்தகங்களில் மட்டுமல்ல, அனைத்திலும் தொனிக்கிறது. படிக்க ஆட்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கம் இருந்தவரை எழுத்துக்கள் கனவிலும் கவிதை கொட்டின; பதிப்பிக்கவும் ஆட்கள் வந்துவிட்டபின், எழுத்துக்கள் போதுமானதாய்த் தோன்றுவதில்லை. கிடைக்கும் வரைதான் எல்லாமும் சுவை என்றால் எதை வைத்துக்கொள்வது? வசதியிருப்பதால் வாங்குவது என்றால் வாங்குவதை நிறுத்துவது எப்போது?
//

ரசித்தேன்

அக்னி பார்வை said...

அதென்னமோ சரி தாங்க புத்தகங்கள் போதை போருள் போல் தான்.. எனக்கு புக்ஸ பாத்தா கையெல்லாம் நடுங்கும், ஒரு எட்டு அத கையில புடிச்சு பார்த்தாவது தீரனும்

ஜோதிஜி said...

மனதில் உள்ள வார்த்தைகள் உங்கள் பதிவின் மூலம் உணர்ந்தேன்.

மதி.இண்டியா said...

//டேய் லூசு,
நீயெல்லாம் டாக்ட்டர்கிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வேண்டிய கேசுடா, ருத்ரன் டாக்டரை பார்த்து பயமா இருந்தால் இன்னும் வேறு நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள் அங்கேயாவது போய் தொலை. உன்னையெல்லாம் வெளிய நடமாட விடுறதே பெரிய தப்பு!//

டாக்டர் புதுசா சேந்த ம.க.இ.க கொள்கை வாள்க ...

superlinks said...

எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் மலக்குட்டையில இறங்கி பன்னியோட சரிக்கு சமமா சண்டை போட்டா பன்னிக்கும் பெரியவங்களுக்கும் என்ன வித்தியாசம் ?

டாக்டர் ருத்ரன் பெரியவர்
அப்ப பன்னி ??

Thekkikattan|தெகா said...

// பல விஷயங்களில் ஆடம்பரத்தைத் தவிர்க்கும் எனக்கு இதில் ஆடம்பரம் ஓர் ஆணவநிலைக்கே போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆணவம் ஏன் வருகிறது?//

இந்தப் பத்தி படிக்கும் பொழுது எழுந்த சிரிப்பை உங்ககிட்ட பகிர்ந்துகிட்டு மேலே படிக்கிறேன்... :))) verrrrrrry funny

மதி.இண்டியா said...

பன்னி ??

அப்ப டாக்டர் மிருக வைத்தியரா ?

எனிவே , புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர்

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்... அலசி காயப்போடபட்டது மாதிரி இருக்கு, வாசிப்பாளனுக்கே உரிய மனநிலையிலிருந்து கூறிய வார்த்தைகள். இந்த வாசிப்பாளர்களில்தான் எத்தனை அடுக்கு, டாக். புனைவுக் கதைகளைத் தாண்டி படிக்கவே ஆர்வமற்றவர்கள், அது போன்ற மரங்களின் எச்சங்களை (காகிதம்) குமித்து யாருக்கு என்ன பிரயோசனம், எழுதிய எழுத்தாளனுக்கும், பிரசுரித்த வெளியீட்டாரையும் தாண்டி?

புத்தகம் வாங்குவது, தொட்டுப்பார்த்துவிடவாவது துடிப்பது (என்னயப் போல) கண்டிப்பாக இதுவும் ஒரு அடிக்ஷன் என்றே கருதுகிறேன். ஏதோ ஒரு அடிமைப் பழக்கம், ஆனா இது நிறையவே harmless :)

Thekkikattan|தெகா said...

sorry கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் இந்தப் பதிவில,அதுனாலே மற்றுமொரு பின்னூட்டம். வாசிப்பதனைப் பற்றி பேசுவதால் இங்கே எனக்கு ஒரு கேள்வி...

இந்த வாசிப்பு ஊடான தேடல் எதற்கு தேவைப்படுகிறது? அடிமைத்தனம் பட்டுப் போகவா அல்லது தன் சுய சிந்தனை மீட்டெடுப்பிற்கு ஒரு பயிற்சியாக அமைய பிற சிந்தனைகளை உள்ளெறிந்து, சுயம் மாறாமல் இருக்க, செம்மறிகளில் ஒன்றாக அகிவிடுவதிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கா?

அப்படியெனில், எப்படி நாம் எழுதியவர்களின் மீது மையல் கொள்ள முடியும்?

Venkat said...

கையில் காசு இல்லாதபோது கனவுகளே போதும்; கைச்செலவுக்குக் காசு சேர்ந்துவிட்டால் நிஜங்களும் போதுவதில்லை.

Beautiful usage of words! I like it!
Sorry, yet to learn tamil typing. Will type in tamil soon.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கையில் காசு இல்லாதபோது கனவுகளே போதும்;//


ஹையா.., அப்ப எல்லாரும் என் வலைப்பூவுக்கு வந்து பாருங்க

நன்றி ஐயா..,

eniasang said...

1996ல் உங்கள் பேச்சை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கும் பலருள் நானும் ஒருத்தி .உங்களை கோபப்படுத்தி திசை திருப்ப இம்முறை பலரும் வரலாம் .என்னை அன்றைய உங்கள் பேச்சு பல விதத்தில் உருப்படியாக யோசித்து செயலாற்ற வைத்துள்ளது.அன்றைய உற்சாகம் இன்னமும் ஞாபகத்தில் உள்ளது.

Anandi said...

HAPPY NEW YEAR Dr.

கலகலப்ரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :).. நினைவுப் பகிர்தல் அருமை..

சிவராமன் said...

அருமை..புத்தகங்கள் பள்ளிக்கூட பக்கத்து சீட் நண்பன் மாதிரி.எப்பொதும் இனிக்கும்.

Thenammai Lakshmanan said...

//படிக்க ஆட்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கம் இருந்தவரை எழுத்துக்கள் கனவிலும் கவிதை கொட்டின; பதிப்பிக்கவும் ஆட்கள் வந்துவிட்டபின், எழுத்துக்கள் போதுமானதாய்த் தோன்றுவதில்லை. கிடைக்கும் வரைதான் எல்லாமும் சுவை என்றால் எதை வைத்துக்கொள்வது? வசதியிருப்பதால் வாங்குவது என்றால் வாங்குவதை நிறுத்துவது எப்போது?//


மனோபாவம் இப்படித்தான் இருக்கிறது டாக்டர்

என்ன செய்ய

மாற்றலாகும் தருணங்களில் புத்தகங்கள் சுமையாய்

Thenammai Lakshmanan said...

//பயன்படப்போவதையும் பயன்படுத்தப் போவதையும் மட்டுமே வாங்குவதென்றால் வீட்டில் எவ்வளவு இடம் காலியாக இருக்கும்!//

உண்மை

இப்படி நினைத்துத்தான் பலவற்றைவாங்காமல் விட்டு விடுகிறோம்

Thenammai Lakshmanan said...

//வாங்காத போதும் சரி, வாங்கும் போதும் சரி, எழுத்துக்களைத்தாண்டி எழுத்தாளர்களின் மீதும் ஒரு மோகம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அவர்களில் பலரைச் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம், கனவுகள் மிச்சமிருந்திருக்கும்.//

இதேபோல் மோஹம் எனக்கும் ஏற்பட்டதுண்டு ஒரு சில நாட்கள் அந்த தாக்கம் மனதில் நீடித்துக் கொண்டு கூட இருக்கும் ஆனல் சந்திக்க முற்பட்டதில்லை...
அவர்களை சந்தித்துப் பேசும் வாய்ப்புக்கிடைக்காததாலோ என்னவோ..

ஒருவேளை பேசினால் அந்த பிம்பம் அழியக்கூடும்

Thenammai Lakshmanan said...

//எழுத்து ஒரு காதலாய், ஒரு தவமாய், ஒரு யக்ஞமாய் இருந்தது. ஆனாலும் டைரிகள் நிறைந்ததில்லை. மனத்துள்ளேயே பல வார்த்தைகள் வாக்கியங்களாகி அழகான வடிவமைப்பு கூடிய புத்தகங்களாகி மறுநாள் விடிவதற்குள் காணாமல் போயிருக்கின்றன//


me too doctor :((((

Thenammai Lakshmanan said...

புத்தாண்டுப் பரிசாய் என் மனம் கவர்ந்த லா.ச.ரா.., சிங்கம் போன்ற ஜெயகாந்தன் ... அடடா. மிக அருமை.. நீங்களும்கூட ..

கலக்குறீங்க டாக்டர் ருத்ரன்

சந்தனமுல்லை said...

மிகவும் சுவாரசியமாக இருக்கிறது..இந்த இடுகை! சாமியார்கள் மட்டுமா...அரசியல்வாதிகள் கடந்து சென்றாலே பாதைகள் பொதுமக்களுக்கு அடைக்கப்பட்டுவிடுகின்றன...வண்டிகளுக்கு அனுமதி இல்லை...எரிச்சலும் தொல்லையுமே மிஞ்சுகிறது! ஓவர் அலம்பல்!!

Anonymous said...

Will you comment about the CMs pity disgrace fulll speech on the bookfair Mr. Rudhran..? Oh you have to speak next year as well right..? Wondering what Jeyakanthan has to say about that speech.

Post a Comment