Thursday, December 31, 2009

உடல்மொழி, உரைமொழிஇது நான் எழுத ஆரம்பித்த நூலின் அறிமுகப்பகுதியின் ஒரு பகுதி. இன்றைய பதிவு இனிதான் எழுதவேண்டும் என்பதால் இதைப் பதிவேற்றம் செய்கிறேன்.
  
எனக்கு தார்மீகக்கோபம் என்று தோன்றுவது சிலருக்குத் திமிர் என்றும் தோன்றலாம். நான் அமைதி காப்பது சிலருக்கு அடிபணிந்துவிட்டதுபோல் தோன்றலாம். இப்படித்தான் உள்ளத்தின் மொழி உடல்வழி பலநேரங்களில் வேறாக அர்த்தம் காட்டுகிறது. 

சிலநேரங்களில் சாமர்த்தியமான நடிப்பின் மூலம் நான் கோபத்தை மறைத்துக்கொண்டு புன்னகைத்திருக்கிறேன். சில நேரங்களில் நடிக்கமுயன்றும் என் உணர்ச்சிகள் வெளித்தெரிந்திருக்கின்றன.
உலகில் இசைவோடு வாழ்வது உத்தமம். ஆனால் உள் ஒன்று இருக்கும்போது புறத்தே அதைக்காட்டாமல் வாழ்வது ஒரு கயமை இல்லையா? சத்தியமும் சாமர்த்தியமும் இயல்பு வாழ்வில் ஒன்றாக வெளிப்படுவது எவ்வளவு தூரம் சாத்தியம்? 
இங்கேதான் மனவியலின் ஒரு பகுதியான உடல்மொழி குறித்தும் உரையிடை மொழி குறித்தும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

உடல் மொழி ஒன்றும் புதிய மனவியல் கண்டுபிடிப்போ கோட்பாடோ அல்ல. அது பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே இந்தியாவின் இரு பெரும் நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவ்விரு இந்திய நூல்களும் மனவியல் கற்பிக்க எழுதப்படவில்லை!
நடன முறைப்பாட்டிற்காக பரதமுனிவர் எழுதிய நாட்டியஸாஸ்திரமும் தொல்காப்பியர் எழுதிய  இலக்கண நூலான தொல்காப்பியமும்தான் அவ்விரு நூல்கள். தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமல்ல, அதன் மூலம் அந்த காலகட்டத்தின் வாழ்க்கைமுறை, அன்று நிலவிய வாழ்வு மற்றும் நீதிநெறி குறித்தும் நாம் தெரிந்துகொள்ளலாம்.


உணர்ச்சிகள் இயல்பானவைதான். ஆனால் அவற்றின் வெளிப்பாடுகள் சூழல் சார்ந்தவை. இந்த அடிப்படையைக்கொண்டே பரதமுனிவரின் நாட்டியஸாஸ்திரம் அங்கங்களின் மூலம், அசைவுகள்மூலம்,முகபாவங்களின்மூலம் எப்படி உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது. தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் எனும் அதிகாரத்தில் இதையே வேறு கோணத்தில் விளக்குகிறது. இலக்கியநுணுக்கத்திலோ நாட்டியச்செறிவிலோ நாட்டம் இல்லாவிட்டாலும் இவற்றைப் பரிச்சயம் செய்துகொள்வதன் மூலம், வாழ்வில் தினசரி சந்திக்கநேரும் சூழ்நிலைகளில், அவரவர் உடல்மொழிமூலம் அவர்களின் உள்ளத்தில் ஒலிக்கவிரும்பும் மொழி குறித்து புரிந்துகொள்ளலாம். 

இதன்மூலம் ஒரு சுயபரிசீலனையும் மேற்கொள்ளலாம். நாம் நினைத்ததைத்தான் பேசுகிறோமா என்று பார்த்துக்கொள்ளலாம், அதைவிட, எதிர் உள்ளவர் பேச நினைப்பதைத்தான் பேசுகிறாரா என்றும் ஒரளவிற்குக் கணிக்கலாம். அதைக்கொண்டு நாம் எதிர்வினை குறித்தும் தெளிவாக இருக்கலாம்.


நம் தொல்காப்பியரையும் பரதமுனிவரையும் படிக்காமலேயே டார்வின் இதை எழுதியிருக்கிறார். அவரைப் பொருத்தவரை அடிப்படை உணர்ச்சிகள் ஆறு தான். தொல்காப்பியத்திலும், நாட்டியஸாஸ்திரத்திலும் அவை எட்டு. நவரசம் என்பது, பரதமுனியின் நூலுக்கு விளக்கம் எழுதிய அபிநவகுப்தரின் தீர்மானம். அவரது கூற்றுப்படி, எட்டு அடிப்படை உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடிந்தால் ஒன்பதாவது நிலையான சாந்தி தோன்றும்.
உணர்ச்சிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டும். உணர்ச்சிகளின் தன்மை குறித்து ஓர் அறிவார்ந்த தெரிதல் இருப்பது கூட உதவும். தினசரி வாழ்வில் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டினை உணர்ந்து தெளிவாக இருப்பது, நம் செயல்திறனையும் மேம்படுத்தும்.
பல நேரங்களில் என் உரைமொழியின் கனிவு என் உடல் மொழியின் வேறுபாட்டைத்தாங்கி வெளிவரும். அப்போது இருவேறு செய்திகள் எதிர் இருப்பவருக்குச் சொல்லப்படும். எது அவரது மனநிலைக்கும், நம்மைப்பற்றிய அவரது முன்கணிப்பிற்கும் ஒத்து உள்ளதோ அதையே அவர் எடுத்துக்கொள்வார்.

வெறும் உடல்மொழியின் வெளிப்பாடுகளை அறிவது மட்டும் உதவாது, ஏனெனில் நாம் எல்லாருமே எதைப்பார்த்தாலும் நாம் மனத்தில் ஏற்கனவே வைத்துக்கொண்டிருக்கும் கோணங்களின் ஊடாகத்தான் பார்க்கிறோம். முதலில் நம் மனதில் என்னென்ன முன்கணிப்புகள் உள்ளன என்பதை ஆராய்ந்தறிய வேண்டும்.
உடல்மொழி குறித்து தொடர்ந்து எழுதலாம் என்று ஓர் எண்ணம்; அதற்கு முன் நாம் செய்துகொள்ளும் முன்மதிப்பீடுகளின் பின்னணி பற்றியும் சிந்திக்கவேண்டும்.

பொதுவாகவே ஒருவரது முகத்தைப்பார்த்தவுடன் அவரது உணர்ச்சி என்ன, மனநிலை என்று நாம் அனிச்சையாகக் கணிக்கிறோம். இது எவ்வளவு தூரம் சரியாக அமைகிறது? ஒரு பரிசோதனை செய்ய நடிகர் பாலாசிங் சில உணர்ச்சிகளைக் காட்டுவதைப்படம் பிடித்தோம். அதைப் பார்த்தவர்களில் எத்தனை பேர் உணர்ச்சிகளை முகபாவங்களின் மூலம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே எங்கள் சோதனையின் குறிக்கோள். சில நேரங்களில் இம்மாதிரி பரிசோதனைகளில், நான் ஒரு முகபாவம் சரியாக இருப்பதாய் ஓகே சொன்னால், பார்ப்பவர்களில் சிலர் நான் ஓகே செய்யாத படத்தில்தான் உணர்ச்சி சரியாக அமைந்ததாய்க் கூறுவார்கள். மேலைநாடுகளில் இம்மாதிரி ஆய்வுகள் நிறைய உண்டு, இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இம்மாதிரி சோதனைகள் குறைவு. எடுத்த எல்லா படங்களையும் பரிசோதனைக்குப் பயன்படுத்த விரும்பும் மனவியல் மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கிறேன்.  இது ஒரு பரிசோதனையின் ஆரம்பக்கட்டம்தான். நாடக உத்திகளைக்கொண்டு மனவியல் பயிற்சி தர முடியுமா எனும் வேறொரு சோதனையின் நீட்சி.
உங்கள் எதிர் இருப்பவர் அல்லது பத்திரிகைகளில் இருப்பவரின் படத்தை வைத்துக்கொண்டு அவரது மனநிலை குறித்துச் சிந்தித்துப் பார்த்தால் இது இன்னும் விளங்கும்.


இங்கே உதாரணத்திற்காக படங்கள்:

படங்களை எடுத்தவர் அண்ணாதுரை, ஆண்டு 2005                       


5 comments:

Jerry Eshananda said...

ஐயா, நான் உங்களின் அதி தீவிர வாசகன், உங்களின் பல புத்தகங்களின் முதல் பதிப்புகள் இன்னும் என் வீட்டு நூலகத்தில் இருக்கிறது, நண்பர்களுக்கு வாங்கியும் கொடுத்துள்ளேன்.,நீங்கள் இந்த பதிவுலகில் எழுத வந்திருப்பது தமிழ் சமூகத்திற்கு நன்மை, சக பதிவர்கள் எங்களுக்கு பெருமை.,தொடருங்கள் ஐயா,பயணிக்கிறோம்..

butterfly Surya said...

அருமை. பகிர்விற்கு நன்றி.

venkatesh gomathinayagam said...

அருமை..!நன்றி

குப்பன்.யாஹூ said...

thanks doctor for writing on this subject. when you get time could you please write about Thoughts control, Thoughts managements, positive attitude development etc.

கண்ணகி said...

சார் உங்கள் எழ்த்துக்களை தொடர்ந்து படித்துவர்கிறேன்.அருமையான பகிர்வு.பல சம்யங்களில் நாம் சொல்ல நினைப்பது ஒன்று. மற்றவர்களால் புரிந்துகொள்ளப்படுவது வேறொன்று.உண்ர்ந்திருக்கிறென் சார்.

Post a Comment