Friday, December 4, 2009

மாக்பெத்

மாக்பெத் ஷேக்ஸ்பியர் எழுதிய சிறந்த நாடகங்களில் ஒன்று , அது குறித்து பல மூட நம்பிக்கைகளும் இருந்தன.
அந்த நாடகம் போட்டால் கிட்டத்தட்ட தரித்திரம் பிடிக்கும், விபத்து ஏற்படும், நடிப்பவர்களுக்கும், தயாரிப்பில் ஈடுபடுபவர்களுக்கும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்.. என்றெல்லாம் மூட நம்பிக்கைகள் மேலைநாடுகளில் இன்றும் உண்டு. நம்நாட்டிலும் இதைப்பற்றி நிறைய பேர் பேசியிருக்கிறார்கள்.
சாபம் என்றால் பரிகாரமும் சொல்வதுதானே வழக்கம், அப்படி யாராவது வசனத்தைத்தவிர நாடகமேடையில் 'மாக்பெத்" என்று சொல்லிவிட்டால், அவன் தன் தோளுக்குப் பின்புறம் மூன்று முறை துப்பிக்கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் நின்றவாறே மூன்றுமுறை சுழன்றுவிட்டு, மேடையை விட்டு வெளியே போய்த் திரும்பி வரவேண்டுமாம். முதன்முதலில் இந்த நாடகம் அரங்கேறியபோது லேடி மாக்பெத்தாக நடிக்க இருந்த நடிகருக்கு உடல்நிலை சரியில்லாமல்போய், ஷேக்ஸ்பியரே அந்த வேடத்தை ஏற்க நேர்ந்ததாம். (அவருக்கு எந்த கேடும் வராமல் அதற்கப்புறமும் பல வெற்றிகரமான நாடகங்களை எழுதினார்!)
இந்த மூட நம்பிக்கைகளில் ஒன்று, ஆப்ரகாம் லிங்கன் தன் நண்பர்களுக்கு இந்த நாடகத்தைப் படித்துக்காட்டினாராம், ஒரு வா‌‌ரத்தில் அவர் கொல்லப்பட்டாராம்! எங்கள் பள்ளியில் பத்தாம், பதினோறாம் வகுப்பில் ஷேக்ஸ்பியர் உண்டு..மாக்பெத் தவிர மீதி எல்லாமும் தான் பாடமாகும்! பென்ஹரில் நடித்த ஹெஸ்டன், இந்த நாடகத்தில் நடித்த பிறகு விபத்தில் சிக்கினாராம்!! இது போல் பல கதைகள் கூறப்பட்டு வருகின்றன.
அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் அரசருக்கு சூன்யம், மந்திரம் போன்ற விஷயங்களில் மிகுந்த நம்பிக்கை இருந்ததால், ஷேக்ஸ்பியரும் ராஜாவை மகிழ்விக்க இதில் சூன்யக்காரிகளையும் அவர்களின் சக்தி பற்றியும் சேர்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எல்லாமே 'கூறப்படுகின்றன' நிரூபிக்கப்படவில்லை!

மாக்பெத் கதை: டன்கன் என்ற ராஜாவுக்குக் கீழிருந்த பலமுக்கியமானவர்களில், மக்பெத் முக்கியமானவன். வீரன். தன் வீரத்திற்காகவே பலரது பாரட்டுக்களையும் பல பரிசுகளையும் வென்றவன்.ராஜாவுக்காக நடத்திய போர் ஒன்றில்தான் கதை ஆரம்பம்.
வெற்றியுடன் மாக்பெத் தன் நண்பன் பாங்கோவுடன் திரும்பிவரும் வழியில் மூன்று சூன்யக்காரிகளைச் சந்திக்கிறான்.அவர்கள் "நீ தான் அடுத்த மன்னன்" என்று சொன்னதும் இரு நண்பர்களும் திகைக்கின்றனர்..மாக்பெத்தாவது மன்னனாவதாவது!! என்று பாங்கோ சிரிக்கிறான்.அரசனுக்கு ஏற்கனவே ஒரு வாரிசு உண்டு!
மறுநாள் ராஜாவைப்பார்த்து வெற்றிச்செய்தியை மாக்பெத் கூற, மகிழ்ந்து, இன்னும் ஓரிரு நாட்களில் உன் வீட்டிற்கு விருந்திற்கு வருகிறேன், என்று ராஜாவும் மாக்பெத்தை கௌரவப்படுத்த முடிவெடுத்தான்!
வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் சூன்யக்காரிகளின் கதையை மாக்பெத் கூறியவுடன் அவள் விருந்துக்கு வரும் ராஜாவைக் கொன்று விட்டு, மாக்பெத்  ராஜாவாகலாமே என்று திட்டமிட்டாள். ஆரம்பத்தில் தயங்கிய மாக்பெத், சதிக்கு ஒப்புக்கொள்கிறான். கொலைக்குப்பின், மாக்பெத் மன்னனாகிறான், ஆனால், சூன்யக்காரிகள் அன்று பாங்கோவிடம், நீ ராஜாவாகாவிட்டாலும் உன் வாரிசுகள் அரசாள்வார்கள் என்று சொன்னது நினைவுக்குவர,பங்கோவையும் ஆள் வைத்து, மாக்பெத் கொன்றுவிடுகிறான்..கடைசியில் மாக்பெத் சண்டையில் இறக்கிறான். பாங்கோவின் மகன் அரசனாகவில்லையே என்று யாரும் கேட்டுவிட முடியாது, அன்று நாட்டை ஆண்டுகொண்டிருந்த ராஜா பாங்கோவின் வம்சத்தில் வந்தததாகக் கூறப்பட்டது!!!
ஒரு கதையாகவே நல்ல திருப்பங்களும் விறுவிறுப்பும் உள்ள இந்நாடகத்தில், மனித மனத்தின் பல்வேறு கூறுகளை ஷேக்ஸ்பியர் அழகாகக் காட்டியிருப்பார். மாக்பெத்திற்கு உள்ளூர இருந்த ஆசை, அவன் மனைவிக்கு இருந்த பேராசை, பதவிக்காக கொலையும் செய்யலாம் என்ற மனமாற்றம், கொலைக்குப்பின் தொடர்ந்து கொலைகள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம், மாக்பெத் நாளுக்குநாள் இறுகி வரும் நிலை, அவன் மனைவி குற்ற உணர்வின் மிகுதியில் படும் அவதி, அரசனானபின் அவர்களிடையே ஏற்படும் போராட்டங்கள், மனக்குழப்பத்தில் மாக்பெத் தொடர்ந்து ஈடுபடும் மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடுகள்.. இப்படி பல மனவியல் கோணங்களை உள்ளடக்கியது மாக்பெத். இதைப்பற்றியெலாம் விரிவாக எழுதப்போகிறேன்.

இப்போது, மாக்பெத் நாடகத்தை நாங்கள் போட்ட கதை! இந்த நாடகம் யார் போட்டாலும் ஏதாவது கெடுதல் நடக்கும் என்ற மூட நம்பிக்கைக்காகவே இதைப்போட முடிவெடுத்தோம்.வழக்கமாக எங்கள் நாடகங்களில் ஆறேழு பேர்தான் நடிப்பார்கள். இதில் பாத்திரங்களும் அதிகம் என்பதால், சென்னை மாநிலக்கல்லூரியில் ஆர்வமுடன் இருந்த இளைஞர்களைக் குழுவில் இணைத்துக்கொண்டோம். இன்னும் கொஞ்சம் மூட நம்பிக்கைகளையும் பார்ப்போமே என்று என்னையும் சேர்த்து 13 பேர் குழுவாக அமைத்துக்கொண்டோம்.ரொம்ப மோசமான நாள் என்று கருதப்படும் வெள்ளிக்கிழமை பதின்மூன்றாம் தேதி நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம்.நடிகர்கள் அனைவர்க்கும் க‌ருப்பு உடை என்றும் ஒரு திட்டம்.


சிக்கல்களில் முதலாவது, தமிழ்வடிவம்! அப்போதிருந்த ஒருசில மொழிபெயர்ப்புக்கள் எங்களுக்குப் பிடிக்கவில்லை. உடனே நீ எழுது என்று நண்பர்கள் கூறிவிட்டார்கள்.இப்போது என்னை மிகவும் திமிர் பிடித்தவன் என்று பிடிக்காத சிலர் கூறுகிறார்கள், ஆனால், ஷேக்ஸ்பியரைத் தமிழில் நாடகமாக எழுதிவிடலாம் என்று நான் அப்போது முடிவெடுத்தது தான் திமிர். Fair is foul, and foul is fair: Hover through the fog and filthy air.. When shall we three meet again? In thunder, lightning, or in rain? When the hurlyburly's done,When the battle's lost and won… ஆரம்பக்காட்சிக்காக மொழிமாற்றவேண்டிய வசனம் இது!அப்படியே எல்லாம் எழுதிவிடவேண்டாம் நமக்கு எவ்வளவு முடிகிறதோ, நம் நடிகர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்குமோ அந்த அளவுக்கு எழுதினால் போதும் என்று சமாதானம் கூறிக்கொண்டு எழுதிய முதல் வசனங்கள்:  
சந்திப்போமா? மழையில் இடியில் மின்னலில் 
தோல்வியின் வெற்றியில் 
குழப்ப முடிவில் தெளிவின் அழிவில் 
அஸ்தமனத்தின் ஆரம்பத்தில் அவலங்கள் அழியும் அநித்ய நேரம் 
நீதியும் பொய், பொய்யும் நீதி நாளை என்பதே என்றின் மீதி!
இப்படித்தான் ஷேக்ஸ்பியர் எழுதியதை ஒருமுறை படித்துவிட்டு, என் வசதிக்கு அதில் கொஞ்ச‌ம் மட்டும் வைத்துக்கொண்டு எழுதினேன்."அரபியத் தைலங்களின் அற்புத நறுமணம் கூட இந்தக் கைகளின் குற்றவாடையைப் போக்க முடியவில்லை" என்று அவ்வப்போது நேர்மையான மொழிபெயர்ப்புகளும் அதில் அடக்கம்.


நாடகத்துக்கான எதிர்பாராத முதல் சிக்கல் அனுமதி வாங்குவதில் ஏற்பட்டது!நாடகம் போடுவதென்றால் முழு கதை வசனத்தையும் காவல்துறைக்குச் சமர்ப்பித்து அவர்களது ஒப்புதலுக்குப்பின் தான் மேடையேற்ற வேண்டும்!' அரசுக்குத்தலைமயேற்றிருப்பவனைக் கொன்று விட்டால் நாமே அரசுப் பொறுப்பை அடையலாம்' என்பது போல் ஒரு வசனம் வரும். அனுமதி கொடுக்கவேண்டிய காவலருக்கு அது பிடிக்கவில்லை, மாற்றச்சொன்னார்!!பிறகு அவரது உயர் அதிகாரியைப் பார்த்துப் பேசினோம். நல்லவேளை அவருக்கு ஷேக்ஸ்பியர் பற்றித் தெரிந்திருந்தது!! உடனே எங்கள் குழுவில் ஒருவன் மாக்பெத் வேலைதான் இது என்று சொல்ல ஆரம்பித்தான். நீக்கிவிடுவதாக மிரட்டி அவன் வாயை மூடினோம்.

அடுத்து வழக்கம்போல் நானும் நடிப்பேன் என்று நாசரின் தொல்லை ஆரம்பித்தது, அப்போதுதான் அவன் திரைப்படங்களில் பெயர் வாங்கிக்கொண்டிருந்தான், முடியாது என்று தீர்மானமாக மறுத்ததால் சரி நான் தான் உடைகளை வடிவமைத்துத் தருவேன் என்று அடம் பிடிக்க, நாங்களும் சம்மதிக்க, நாடகம் ஆரம்பிக்க 5மணி நேரம் இருக்கும் போது தான் உடைகள் வந்தது! நாடகத்தின் காலையில் மாக்பெத் தரித்திரத்தால் தான் நமக்கு உடைகள் வந்துசேரவில்லை என்று ஒருமாதிரியாக குழுவில் ஒரு முனகலும் ஆரம்பித்தது.
நாடகம் ஆரம்பிக்க வேண்டிய 6.30 மணிக்கு அதிசயமாக ம்யுசியம் த்யேட்டரில் மின்தடை ஏற்பட்டது. அவசரமாக இருபது மெழுகுவத்திகளை வாங்கி வந்து, ஒவ்வொரு காட்சிக்கும் லைட் ஆன் ஆஃப் என்பதற்கு பதிலாக பாத்திரங்களே ஒளியோடு உள்ளே வருவார்கள், அதை எடுத்துக்கொண்டும் காட்சி முடிவில் போவார்கள் என்று அவசர திட்டம் போட்டு, திரைக்குப்பின்னால் ஒரு குட்டி ஒத்திகை பார்த்து விட்டு, சூன்யக்கிழவிகளாக நடித்த மூன்று பேரையும் திரை தாண்டிப்போய் ஆரம்பிக்கச்சொன்னோம்.. முதல் சூன்யக்காரியாக நடித்தவனிடம் மெழுகுவத்தி இருந்தது, பின்னால் வந்த இருவர்க்கு வெளிச்சம் இல்லை, தடுக்கி விழுந்தார்கள்.

முதல் காட்சி முடிவதற்கும் மின்சாரம் வந்துவிட்டது, ஆனால் மெழுகுவத்திகளை யாரும் அணைக்கவில்லை! முழு இருளிலிருந்து ஒளிவரும் அழகான அமைப்பு வீணானது. மூன்றாவது காட்சிக்குள் எல்லாரும் சரியாகிவிட்டோம். பார்த்தவர்கள் பாராட்டினார்கள், ஆனால் எங்களூக்குத்தான் தெரியும் நாடகம் நினைத்த அளவிற்கும் உழைத்த அளவிற்கும் வரவில்லை என்பது.

இதில் மாக்பெத்தாக வைத்யநாதன், லேடி மாக்பெத்தாக வைதேகி, டன்கனாக ஷங்கர்நாராயணன், பாங்கோவாக மீனாட்சிசுந்தரம் நடித்தார்கள். யாருக்கும் எந்தச் சிக்கலும் வரவில்லை.
நாடகம் போடும் குழு வீணாகப்போய்விடும் என்பார்கள், அடுத்த நாடகம் எங்களின் மிகச்சிறந்த படைப்பான காஃப்காவின் விசாரணை!

பயப்படும் வரைதான் மூடநம்பிக்கைகள் பயமுறுத்தும். ஆனால், பயப்படக்கூடாது என்று மிகையான எச்சரிக்கையோடு இருந்ததால் தான் தடுமாற்றங்கள் வருகின்றன. ஒப்பனைக்கெல்லாம் ஒத்திகைப்பார்த்து புகைப்படம் எடுத்து எப்படியாவது இதை வெற்றிகரமாக ஆக்கவேண்டும் என்ற வெறியில் பாதியளவிற்கு நாடகத்திற்கான அடிப்படையான தீவிர ஒத்திகையில் ஈடுபட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இதில் நான் கற்ற பாடம், மூட நம்பிக்கைகள் இல்லை என்றால் அப்படியே அடுத்த காரியங்களில் ஈடுபடவேண்டியது அவசியம். மூட நம்பிக்கையை முறியடிக்கிறேன் என்பது மட்டுமே மனத்தின் முதல் எண்ணமாக அமைந்துவிட்டால், கவனம் அதில் மட்டுமே இருக்கும், இயல்பாகச் சில பிழைகள் நேரும். அப்படி நேரும் பிழைகள் நம்மைச் சுற்றியுள்ளவர்களை நெருடும்...அந்த நெருடல் நம் நிம்மதியையும் அசைத்துப்பார்க்கும்.
மாக்பெத்தின் மனவியல் கோணங்கள் பற்றி இன்னொரு பதிவில்..லேடிமாக்பெத்தாக வைதேகிவைத்யநாதன் மாக்பெத் ஒப்பனை
ஷங்கர், டன்கன் ஒப்பனை


தொடர்ந்து எங்கள் நாடகப்பெருமை பேசுவதாயில்லை, மனவியல் கோணத்தில் ஷேக்ஸ்பியரின் நுணுக்கமான சித்தரிப்புகளைப் பற்றி எழுத்தத்தான் ஆரம்பித்தேன், அது கூடிய விரைவில்.

3 comments:

Thekkikattan|தெகா said...

//தொடர்ந்து எங்கள் நாடகப்பெருமை பேசுவதாயில்லை//

ஏன் டாக்டர், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இங்கு தொகுத்து வழங்குங்கள்... படிக்கும் பொழுது, அப்படியே அந்த காலத்தில் இருந்து மேடையில் பார்க்காததையும், மேடைக்குப் பின்னால் உங்கள் மனதில் எழுந்த விசயங்களையும் ஒருமித்து தெரிந்து கொள்வது மாதிரி இருக்கிறது.

*நீயா? நானா? விஜய் ட்டி.வியில் நீங்க கடந்த வாரம் கலந்து கொண்டதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது, நீங்கள் பேசுவதற்கு போதுமான நேரம் வழங்கப்படவில்லையோ என்று தோணியது... ஆனால், கதை சொல்லிகளுக்கு ... ??

V J said...

எல்லா மூட நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளாகவே இருக்க முடியுமா டாக்டர்? காரண காரியம் இல்லாமல் சில நம்பிக்கைகள் எவ்வாறு தோன்றியிருக்க முடியும்? அபத்தமான சில நம்பிக்கைகள் காலம் காலமாக நம் சமூகத்துள் எப்படித் தொடர்கின்றன?( உதா - பூனை நம்மைப் போல் பிளாட்ஃபாரத்தில் நடந்து போகுமா..குறுக்கும் நெடுக்குமாகத்தானே அலையும்!). மூட நம்பிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதன் ஆதார காரணங்களைப் பற்றியும் எழுதுவீர்களானால் சுவாரஸ்யமாய் இருக்குமென நம்புகிறேன்! btw, you should have had memorable time of staging macbeth.

Deepa said...

மாக்பெத் எனக்கு மிகவும் பிடித்த நாடகம். எப்போது படித்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

//தொடர்ந்து எங்கள் நாடகப்பெருமை பேசுவதாயில்லை, மனவியல் கோணத்தில் ஷேக்ஸ்பியரின் நுணுக்கமான சித்தரிப்புகளைப் பற்றி எழுத்தத்தான் ஆரம்பித்தேன், அது கூடிய விரைவில்.//

இரண்டையுமே எழுதுங்கள். ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.

Post a Comment