Showing posts with label நாடக வாழ்க்கை. Show all posts
Showing posts with label நாடக வாழ்க்கை. Show all posts

Friday, December 4, 2009

மாக்பெத்

மாக்பெத் ஷேக்ஸ்பியர் எழுதிய சிறந்த நாடகங்களில் ஒன்று , அது குறித்து பல மூட நம்பிக்கைகளும் இருந்தன.
அந்த நாடகம் போட்டால் கிட்டத்தட்ட தரித்திரம் பிடிக்கும், விபத்து ஏற்படும், நடிப்பவர்களுக்கும், தயாரிப்பில் ஈடுபடுபவர்களுக்கும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்.. என்றெல்லாம் மூட நம்பிக்கைகள் மேலைநாடுகளில் இன்றும் உண்டு. நம்நாட்டிலும் இதைப்பற்றி நிறைய பேர் பேசியிருக்கிறார்கள்.
சாபம் என்றால் பரிகாரமும் சொல்வதுதானே வழக்கம், அப்படி யாராவது வசனத்தைத்தவிர நாடகமேடையில் 'மாக்பெத்" என்று சொல்லிவிட்டால், அவன் தன் தோளுக்குப் பின்புறம் மூன்று முறை துப்பிக்கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் நின்றவாறே மூன்றுமுறை சுழன்றுவிட்டு, மேடையை விட்டு வெளியே போய்த் திரும்பி வரவேண்டுமாம். முதன்முதலில் இந்த நாடகம் அரங்கேறியபோது லேடி மாக்பெத்தாக நடிக்க இருந்த நடிகருக்கு உடல்நிலை சரியில்லாமல்போய், ஷேக்ஸ்பியரே அந்த வேடத்தை ஏற்க நேர்ந்ததாம். (அவருக்கு எந்த கேடும் வராமல் அதற்கப்புறமும் பல வெற்றிகரமான நாடகங்களை எழுதினார்!)
இந்த மூட நம்பிக்கைகளில் ஒன்று, ஆப்ரகாம் லிங்கன் தன் நண்பர்களுக்கு இந்த நாடகத்தைப் படித்துக்காட்டினாராம், ஒரு வா‌‌ரத்தில் அவர் கொல்லப்பட்டாராம்! எங்கள் பள்ளியில் பத்தாம், பதினோறாம் வகுப்பில் ஷேக்ஸ்பியர் உண்டு..மாக்பெத் தவிர மீதி எல்லாமும் தான் பாடமாகும்! பென்ஹரில் நடித்த ஹெஸ்டன், இந்த நாடகத்தில் நடித்த பிறகு விபத்தில் சிக்கினாராம்!! இது போல் பல கதைகள் கூறப்பட்டு வருகின்றன.
அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் அரசருக்கு சூன்யம், மந்திரம் போன்ற விஷயங்களில் மிகுந்த நம்பிக்கை இருந்ததால், ஷேக்ஸ்பியரும் ராஜாவை மகிழ்விக்க இதில் சூன்யக்காரிகளையும் அவர்களின் சக்தி பற்றியும் சேர்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எல்லாமே 'கூறப்படுகின்றன' நிரூபிக்கப்படவில்லை!

மாக்பெத் கதை: டன்கன் என்ற ராஜாவுக்குக் கீழிருந்த பலமுக்கியமானவர்களில், மக்பெத் முக்கியமானவன். வீரன். தன் வீரத்திற்காகவே பலரது பாரட்டுக்களையும் பல பரிசுகளையும் வென்றவன்.ராஜாவுக்காக நடத்திய போர் ஒன்றில்தான் கதை ஆரம்பம்.
வெற்றியுடன் மாக்பெத் தன் நண்பன் பாங்கோவுடன் திரும்பிவரும் வழியில் மூன்று சூன்யக்காரிகளைச் சந்திக்கிறான்.அவர்கள் "நீ தான் அடுத்த மன்னன்" என்று சொன்னதும் இரு நண்பர்களும் திகைக்கின்றனர்..மாக்பெத்தாவது மன்னனாவதாவது!! என்று பாங்கோ சிரிக்கிறான்.அரசனுக்கு ஏற்கனவே ஒரு வாரிசு உண்டு!
மறுநாள் ராஜாவைப்பார்த்து வெற்றிச்செய்தியை மாக்பெத் கூற, மகிழ்ந்து, இன்னும் ஓரிரு நாட்களில் உன் வீட்டிற்கு விருந்திற்கு வருகிறேன், என்று ராஜாவும் மாக்பெத்தை கௌரவப்படுத்த முடிவெடுத்தான்!
வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் சூன்யக்காரிகளின் கதையை மாக்பெத் கூறியவுடன் அவள் விருந்துக்கு வரும் ராஜாவைக் கொன்று விட்டு, மாக்பெத்  ராஜாவாகலாமே என்று திட்டமிட்டாள். ஆரம்பத்தில் தயங்கிய மாக்பெத், சதிக்கு ஒப்புக்கொள்கிறான். கொலைக்குப்பின், மாக்பெத் மன்னனாகிறான், ஆனால், சூன்யக்காரிகள் அன்று பாங்கோவிடம், நீ ராஜாவாகாவிட்டாலும் உன் வாரிசுகள் அரசாள்வார்கள் என்று சொன்னது நினைவுக்குவர,பங்கோவையும் ஆள் வைத்து, மாக்பெத் கொன்றுவிடுகிறான்..கடைசியில் மாக்பெத் சண்டையில் இறக்கிறான். பாங்கோவின் மகன் அரசனாகவில்லையே என்று யாரும் கேட்டுவிட முடியாது, அன்று நாட்டை ஆண்டுகொண்டிருந்த ராஜா பாங்கோவின் வம்சத்தில் வந்தததாகக் கூறப்பட்டது!!!
ஒரு கதையாகவே நல்ல திருப்பங்களும் விறுவிறுப்பும் உள்ள இந்நாடகத்தில், மனித மனத்தின் பல்வேறு கூறுகளை ஷேக்ஸ்பியர் அழகாகக் காட்டியிருப்பார். மாக்பெத்திற்கு உள்ளூர இருந்த ஆசை, அவன் மனைவிக்கு இருந்த பேராசை, பதவிக்காக கொலையும் செய்யலாம் என்ற மனமாற்றம், கொலைக்குப்பின் தொடர்ந்து கொலைகள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம், மாக்பெத் நாளுக்குநாள் இறுகி வரும் நிலை, அவன் மனைவி குற்ற உணர்வின் மிகுதியில் படும் அவதி, அரசனானபின் அவர்களிடையே ஏற்படும் போராட்டங்கள், மனக்குழப்பத்தில் மாக்பெத் தொடர்ந்து ஈடுபடும் மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடுகள்.. இப்படி பல மனவியல் கோணங்களை உள்ளடக்கியது மாக்பெத். இதைப்பற்றியெலாம் விரிவாக எழுதப்போகிறேன்.

இப்போது, மாக்பெத் நாடகத்தை நாங்கள் போட்ட கதை! இந்த நாடகம் யார் போட்டாலும் ஏதாவது கெடுதல் நடக்கும் என்ற மூட நம்பிக்கைக்காகவே இதைப்போட முடிவெடுத்தோம்.வழக்கமாக எங்கள் நாடகங்களில் ஆறேழு பேர்தான் நடிப்பார்கள். இதில் பாத்திரங்களும் அதிகம் என்பதால், சென்னை மாநிலக்கல்லூரியில் ஆர்வமுடன் இருந்த இளைஞர்களைக் குழுவில் இணைத்துக்கொண்டோம். இன்னும் கொஞ்சம் மூட நம்பிக்கைகளையும் பார்ப்போமே என்று என்னையும் சேர்த்து 13 பேர் குழுவாக அமைத்துக்கொண்டோம்.ரொம்ப மோசமான நாள் என்று கருதப்படும் வெள்ளிக்கிழமை பதின்மூன்றாம் தேதி நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம்.நடிகர்கள் அனைவர்க்கும் க‌ருப்பு உடை என்றும் ஒரு திட்டம்.


சிக்கல்களில் முதலாவது, தமிழ்வடிவம்! அப்போதிருந்த ஒருசில மொழிபெயர்ப்புக்கள் எங்களுக்குப் பிடிக்கவில்லை. உடனே நீ எழுது என்று நண்பர்கள் கூறிவிட்டார்கள்.இப்போது என்னை மிகவும் திமிர் பிடித்தவன் என்று பிடிக்காத சிலர் கூறுகிறார்கள், ஆனால், ஷேக்ஸ்பியரைத் தமிழில் நாடகமாக எழுதிவிடலாம் என்று நான் அப்போது முடிவெடுத்தது தான் திமிர். Fair is foul, and foul is fair: Hover through the fog and filthy air.. When shall we three meet again? In thunder, lightning, or in rain? When the hurlyburly's done,When the battle's lost and won… ஆரம்பக்காட்சிக்காக மொழிமாற்றவேண்டிய வசனம் இது!அப்படியே எல்லாம் எழுதிவிடவேண்டாம் நமக்கு எவ்வளவு முடிகிறதோ, நம் நடிகர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்குமோ அந்த அளவுக்கு எழுதினால் போதும் என்று சமாதானம் கூறிக்கொண்டு எழுதிய முதல் வசனங்கள்:  
சந்திப்போமா? மழையில் இடியில் மின்னலில் 
தோல்வியின் வெற்றியில் 
குழப்ப முடிவில் தெளிவின் அழிவில் 
அஸ்தமனத்தின் ஆரம்பத்தில் அவலங்கள் அழியும் அநித்ய நேரம் 
நீதியும் பொய், பொய்யும் நீதி நாளை என்பதே என்றின் மீதி!
இப்படித்தான் ஷேக்ஸ்பியர் எழுதியதை ஒருமுறை படித்துவிட்டு, என் வசதிக்கு அதில் கொஞ்ச‌ம் மட்டும் வைத்துக்கொண்டு எழுதினேன்."அரபியத் தைலங்களின் அற்புத நறுமணம் கூட இந்தக் கைகளின் குற்றவாடையைப் போக்க முடியவில்லை" என்று அவ்வப்போது நேர்மையான மொழிபெயர்ப்புகளும் அதில் அடக்கம்.


நாடகத்துக்கான எதிர்பாராத முதல் சிக்கல் அனுமதி வாங்குவதில் ஏற்பட்டது!நாடகம் போடுவதென்றால் முழு கதை வசனத்தையும் காவல்துறைக்குச் சமர்ப்பித்து அவர்களது ஒப்புதலுக்குப்பின் தான் மேடையேற்ற வேண்டும்!' அரசுக்குத்தலைமயேற்றிருப்பவனைக் கொன்று விட்டால் நாமே அரசுப் பொறுப்பை அடையலாம்' என்பது போல் ஒரு வசனம் வரும். அனுமதி கொடுக்கவேண்டிய காவலருக்கு அது பிடிக்கவில்லை, மாற்றச்சொன்னார்!!பிறகு அவரது உயர் அதிகாரியைப் பார்த்துப் பேசினோம். நல்லவேளை அவருக்கு ஷேக்ஸ்பியர் பற்றித் தெரிந்திருந்தது!! உடனே எங்கள் குழுவில் ஒருவன் மாக்பெத் வேலைதான் இது என்று சொல்ல ஆரம்பித்தான். நீக்கிவிடுவதாக மிரட்டி அவன் வாயை மூடினோம்.

அடுத்து வழக்கம்போல் நானும் நடிப்பேன் என்று நாசரின் தொல்லை ஆரம்பித்தது, அப்போதுதான் அவன் திரைப்படங்களில் பெயர் வாங்கிக்கொண்டிருந்தான், முடியாது என்று தீர்மானமாக மறுத்ததால் சரி நான் தான் உடைகளை வடிவமைத்துத் தருவேன் என்று அடம் பிடிக்க, நாங்களும் சம்மதிக்க, நாடகம் ஆரம்பிக்க 5மணி நேரம் இருக்கும் போது தான் உடைகள் வந்தது! நாடகத்தின் காலையில் மாக்பெத் தரித்திரத்தால் தான் நமக்கு உடைகள் வந்துசேரவில்லை என்று ஒருமாதிரியாக குழுவில் ஒரு முனகலும் ஆரம்பித்தது.
நாடகம் ஆரம்பிக்க வேண்டிய 6.30 மணிக்கு அதிசயமாக ம்யுசியம் த்யேட்டரில் மின்தடை ஏற்பட்டது. அவசரமாக இருபது மெழுகுவத்திகளை வாங்கி வந்து, ஒவ்வொரு காட்சிக்கும் லைட் ஆன் ஆஃப் என்பதற்கு பதிலாக பாத்திரங்களே ஒளியோடு உள்ளே வருவார்கள், அதை எடுத்துக்கொண்டும் காட்சி முடிவில் போவார்கள் என்று அவசர திட்டம் போட்டு, திரைக்குப்பின்னால் ஒரு குட்டி ஒத்திகை பார்த்து விட்டு, சூன்யக்கிழவிகளாக நடித்த மூன்று பேரையும் திரை தாண்டிப்போய் ஆரம்பிக்கச்சொன்னோம்.. முதல் சூன்யக்காரியாக நடித்தவனிடம் மெழுகுவத்தி இருந்தது, பின்னால் வந்த இருவர்க்கு வெளிச்சம் இல்லை, தடுக்கி விழுந்தார்கள்.

முதல் காட்சி முடிவதற்கும் மின்சாரம் வந்துவிட்டது, ஆனால் மெழுகுவத்திகளை யாரும் அணைக்கவில்லை! முழு இருளிலிருந்து ஒளிவரும் அழகான அமைப்பு வீணானது. மூன்றாவது காட்சிக்குள் எல்லாரும் சரியாகிவிட்டோம். பார்த்தவர்கள் பாராட்டினார்கள், ஆனால் எங்களூக்குத்தான் தெரியும் நாடகம் நினைத்த அளவிற்கும் உழைத்த அளவிற்கும் வரவில்லை என்பது.

இதில் மாக்பெத்தாக வைத்யநாதன், லேடி மாக்பெத்தாக வைதேகி, டன்கனாக ஷங்கர்நாராயணன், பாங்கோவாக மீனாட்சிசுந்தரம் நடித்தார்கள். யாருக்கும் எந்தச் சிக்கலும் வரவில்லை.
நாடகம் போடும் குழு வீணாகப்போய்விடும் என்பார்கள், அடுத்த நாடகம் எங்களின் மிகச்சிறந்த படைப்பான காஃப்காவின் விசாரணை!

பயப்படும் வரைதான் மூடநம்பிக்கைகள் பயமுறுத்தும். ஆனால், பயப்படக்கூடாது என்று மிகையான எச்சரிக்கையோடு இருந்ததால் தான் தடுமாற்றங்கள் வருகின்றன. ஒப்பனைக்கெல்லாம் ஒத்திகைப்பார்த்து புகைப்படம் எடுத்து எப்படியாவது இதை வெற்றிகரமாக ஆக்கவேண்டும் என்ற வெறியில் பாதியளவிற்கு நாடகத்திற்கான அடிப்படையான தீவிர ஒத்திகையில் ஈடுபட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இதில் நான் கற்ற பாடம், மூட நம்பிக்கைகள் இல்லை என்றால் அப்படியே அடுத்த காரியங்களில் ஈடுபடவேண்டியது அவசியம். மூட நம்பிக்கையை முறியடிக்கிறேன் என்பது மட்டுமே மனத்தின் முதல் எண்ணமாக அமைந்துவிட்டால், கவனம் அதில் மட்டுமே இருக்கும், இயல்பாகச் சில பிழைகள் நேரும். அப்படி நேரும் பிழைகள் நம்மைச் சுற்றியுள்ளவர்களை நெருடும்...அந்த நெருடல் நம் நிம்மதியையும் அசைத்துப்பார்க்கும்.
மாக்பெத்தின் மனவியல் கோணங்கள் பற்றி இன்னொரு பதிவில்..



லேடிமாக்பெத்தாக வைதேகி







வைத்யநாதன் மாக்பெத் ஒப்பனை












ஷங்கர், டன்கன் ஒப்பனை










தொடர்ந்து எங்கள் நாடகப்பெருமை பேசுவதாயில்லை, மனவியல் கோணத்தில் ஷேக்ஸ்பியரின் நுணுக்கமான சித்தரிப்புகளைப் பற்றி எழுத்தத்தான் ஆரம்பித்தேன், அது கூடிய விரைவில்.

Wednesday, December 2, 2009

கூர்மையான மொக்கை- பவித்ரா

தினமும் எழுதவேண்டுமாமே என்ன எழுதுவது என்று என் நண்பரிடம் கேட்டபோது மொக்கைப்பதிவுகள் எழுதலாம் என்று சொன்னார்! மொக்கை எது? என் வாழ்வை, என் கனவை, என் பொய்யை நான் எழுதினால், அதனால் யாருக்கும் எந்தவிதமான பயனும் இல்லாது போகலாம்...(இங்கேயும் 'லாம்' என்னும் ஒரு நப்பாசை!) 
மொக்கை எது என்று எனக்கு இன்னும் சரியாகப் பிடிபடவில்லை. 
ஆனால் மொக்கைகளின்மீது எனக்கு ஒரு ஆச்சரியம் கலந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.. என் மொக்கையாகிப்போன கனவுகள் பல..அவற்றுள் சில பற்றி எழுதினால் என்ன என்று யோசித்தபோது, கனவுகளே மொக்கைகளா என்றும் தோன்றியது.. கனவுகள் வேறு ஆசைகள் வேறு. ஆசைகள் மொக்கையாக இருந்தால், மனம் அவற்றை ஏற்றுக்கொள்ளாது.மனதுக்கு எப்போதும் தான் ஒரு கூர்மையான கத்திபோல்தான் பிரமை..(உபநிஷத் ஒன்றில் கத்தி தன்னையே அறுத்துக்கொள்ள முடியாது என்று வரும்). 

 மொக்கையோ கூர்மையோ, என் சில கனவுகளை நான் நிஜமாக்க முயன்றிருக்கிறேன். அவற்றுள் கனவும் நினைவும் ஒரு சுக‌ஸ்ருதியில் பாடலாகி, இன்றும் ஞாபகத்தில் ஆடலாகி மகிழ்வித்துக்கொண்டிருப்பது என் நாடகக் கால அனுபவங்கள் தான். அவற்றை எழுத முயல்கிறேன். 'என் கூர்மை உமக்கு மொக்கையாகத்தோன்றிடின், அது யாரது பிழை என இனிவருங்காலம் கூறட்டும்' இந்த வசனத்தை எழுதும்பொழுது மனத்தில் எனக்கு ஒரு கதாபாதிரம் தோன்றியது..இது வசனம் தான், ஆனால் வசனங்கள் வானத்திலிருந்து குதிப்பதில்லை, வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கின்றன.. 

மீண்டும் நாடகமேடைக்குச்செல்கிறேன். நான் எழுதி இயக்கி என் மொத்த வருமானத்தை முதலில் தொலைத்த நாடகம் லாசராவின் அபிதா.அந்த அடியிலிருந்து மீள இரண்டு வருடங்கள் ஆனது. 1984, மீண்டும் ஒரு நாடக ஆசை..அபிதாவைப்போல் அல்லாமல் என் மனத்துள் உருவானபடியே நாடகம் அமையவேண்டும் என்று ஒரு வெறி. அப்போதுதான் பவித்ரா என்றொருநாடகம் எழுதினேன். 
இதன் ஆரம்பம் ஒரு டீக்கடையில் அரவிந்த் தான் சமீபத்தில் ஒரு படம் பார்த்தாகச் சொன்னபோதுதான்..1984ல். 
எளிமையான கதை. 
ஒரு ராஜாவுக்கு ஒரு மிகமிக அழகான ராணி. அவளைவிட அந்த ராஜாவுக்கு அழகான குதிரைகளைத்தான் பிடிக்கும்.அந்த ஊருக்கு, ஒரு புதியவன் வருகிறான், அவனிடம் உலகிலேயே (கதைக்காக) அழகான குதிரை இருந்தது. குதிரை உனக்கு வேண்டுமென்றால், அதனுடன் ஒரு மணிநேரம் நீ இருக்கலாம், ஆனால் அந்த ஒருமணிநேரமும் நான் உன் ராணியுடன் தனிமையில் இருக்கவேண்டும் என்று புதியவன் சொல்ல, ராஜா சம்மதிக்கிறான். ராணியுடன் இருக்கும்நேரம் புதியவன் அவளை மயக்கப்பார்க்கிறான். அவள் மெளனமாக இருக்கிறாள்.ஒரு மணி நேரம் முடிந்தவுடன், ராஜா குதிரையைத் திருப்பித்தருகிறான்..புதியவன் குதிரையில்  ஏறிப்போகும் போது அரண்மனையைத் திரும்பிப் பார்க்கிறான்...ராணியின் ஜன்னலில் அவள் இல்லை... இன்னும் பார்த்துக்கொண்டே போகும்போது, ஜன்னலின் திரை விலகுகிறது, ராணி அவனை எட்டிப்பார்க்கிறாள். கதை முடிகிறது.........
.என்ன தோன்றுகிறது? 
அதே நேரத்தில் தான் ஷா எழுதிய கான்டிடா நாடகத்தையும் நான் பார்த்தேன். கான்டிடா பவித்ராவானாள்! 
அப்போதெல்லாம் நாடகத்திற்கு நடிகைகள் கிடைப்பது மிகமிகச்சிரமம். ஏதோ என்னிடம் காய்ச்சல் என்று வந்த ஒரு உபரிநடிகையிடம் பேசி அதில் நடிக்க சம்மதிக்கவைத்தேன்..அவள் கிடைத்தபிறகுதான் நாடகத்தை எழுதினேன்..
என் கதை.. 

ஒரு மிகச்சிறந்த ஓவியசிற்பக்கலைஞனுக்கு ஒரு மிக அழகான மனைவி. அவனுக்கு விருதுவழங்கும் விழாவிற்கு வழக்கமான ஆணவத்தினால் அவன் போகாமல் தன் மனைவியை அனுப்புகிறான்..அவளை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அரவிந்த் பார்த்து மயங்கி..அவர்கள் வீட்டிற்கு வந்து, அந்த ஓவியசிற்பிக்கு ஒரு மிகப்பெரிய சிற்பவேலை ஏற்பாடு செய்கிறான்..
வழக்கம்போல் ஓவியன் வேலையில் மூழ்க, பழக்கத்தைப் பயன்படுத்தி, அர்விந்த் ஓவியனின் மனைவியுடன் நெருக்கமாகிறான்.புன்னகை சீண்டலாகி, தொடுதலாகி, நேரத்தையும் நினைவுகளையும் மட்டுமல்லாமல், உள்ளத்தையும் உடலையும் அவர்கள் பரிமாறிக்கொள்கிறார்கள்...
தன் மிகச்சிறந்த சிற்பம் முடிந்தவுடன், முதலில் தன் மனைவிக்குக் காட்டவேண்டும் என்று வேகமாக உள்ளே வரும்போது அந்தக்கலைஞன் அவர்களின் நெருக்கத்தைப் பார்க்கிறான்..உடனே தன் மிகச்சிறந்த சிற்பத்தை அவனே உடைத்தும் விடுகிறான்..
அப்போது அவள் .. 
"நான் உங்களுக்கு ஒரு குழந்தை, ஒரு வேலைக்காரி, ஒரு ரசிகை..இன்னும் நிறைய..ஆனால்..நான் உங்களுக்கு மனைவியா? மனைவி என்றால் என்ன..மிதியடியா இல்லை ஒரு பூஜைக்கான விக்ரகமா..பவித்ரா என்ற என் பெயருக்கேற்ப நான் தூய்மையானவளாக இருந்தால்..உங்களை விட்டுப்போக வேண்டிய நேரம் வந்து விட்டது"...என்று சொல்லிவிட்டுப்போகிறாள்... lights off..end music! 

முதல் நாடகத்திலிருந்தே ஒரு வழக்கத்தை எங்கள் குழு வைத்திருந்தது..நாடகம் முடிந்தவுடன் கைதட்டிவிட்டுப்போகக் கூடாது..என்ன நினைக்கிறீர்கள் என்று மேடையில் வந்து சொல்லவேண்டும்..பவித்ரா நாடகம் 52 நிமிடங்கள், பிறகு எல்லாரும் பேசியது 140 நிமிடங்கள்.."போதும் சார், தியேட்டர் க்லோசிங் டைம்" என்று எங்களை விரட்டுமளவு  நிறைய பேர், நிறைய பேசினார்கள்.. அப்போது என்னவெல்லாம் பேசப்பட்டது என்று நினைவிலில்லை..முத்துசாமி நாடகத்திற்கும் சினிமாவிற்கும் வித்தியாசம் தெரியாமல் போடுவதாய் குற்றம் சாட்டியது மட்டும் நினைவிருக்கிறது.. இன்று பேசுவதாயிருந்தால்..என்ன பேசப்படும்? பேச உதவியாய் சில கேள்விகள்.. 

1.மிதியடியாகவோ மகாதேவியாகவோ அவன் அவளை நடத்தியிருந்தால் அதற்கு அவள் எவ்வள‌வு தூரம் காரணம்? 
2.தன் நிலை சரியில்லையென்று தெரிந்தபின் அதைச்சரிசெய்ய அவள் என்னவெல்லாம் செய்திருக்கலாம்? 
3.உடல் கிடக்கட்டும், மனம் இன்னொருவனிடம் சென்றுசேர்ந்த பின், எதற்காக அவனுடன் அவள் தொடர்ந்தாள்? 
4.தாயாகவும் குழந்தையாகவும், தெய்வமாகவும் தொண்டுசெய்யும் அடிமையாகவும் நடத்திய அவன் அப்படி இருப்பத்றகான நிலைமை எப்படி ஏற்பட்டது? 
5.இறுக்கத்திலிருந்து தப்பிக்க அவள் இன்னொருவனைத் தேர்ந்தெடுத்தபின்..அது நிரந்தரம் என்று நம்பியா விலகுகிறாள்? அது சரியா? 

இப்படி நிறைய வினவக்கூடிய சாத்தியங்களை உள்ளடக்கியது இந்நாடகம்.இதில் கலைஞனாக மிகவும் சிறப்பாக நடித்தவன் என் நண்பன் பாலாசிங். அர்விந்தாக நடித்தவன் அதே பெயரில் பிரபலமாகிவிட்ட தியாகராஜன் எனும் நடிகன்..பிறகு பவித்ராவாக நடித்தவள் பெயர் தேவி.. அபிதாவைப்போலல்லாமல் இதில் நான் என்ன visualize செய்திருந்தேனோ அன்று அது அப்படியே வந்தது..அதன் பின், அடுத்த நாடகம்.. 

இதைவிட மொக்கையாக இன்னும் முயன்று பார்க்கிறேன்..no! this is not a fishing expedition to bait for compliments. சில நாடகங்களுக்கு மட்டுமே என்னிடம் புகைப்படங்களும் வீடியோக்களும் உள்ளன, யாராவது உதவி செய்தால் அவை இங்கே எல்லாருக்கும் காட்டப்படலாம்..

Wednesday, November 25, 2009

அபிதா என்றொரு அனுபவம்..


லா.ச.ராவே அவளைப்பற்றி என்னிடம் பலமணிநேரம் விவரித்து சிலாகித்திருந்தபின், அவர் பேசும்போதும், பேசியபின் அதைநினைத்தும், சிலிர்ப்புகளை அனுபவித்தபின், திருவண்ணாமலையில் அபிதாவைப்பார்ப்பதை நிறையவே தவிர்த்திருந்தேன். நேரில் பார்த்துவிட்டால் கடவுள் ரொம்பவும் சாதாரணமாகவும் தோன்றலாம் என்பதாலேயே தவமியற்றிக்கொண்டே இருப்பதைப்போல. ஒரு நண்பருடன் அங்கே தவிர்க்க இயலாமல் சென்ற போது, நல்லவேளை ஏமாற்றம் இல்லை. அவள் என்னை வசீகரிக்கவில்லை.
அபிதா என்னை மிகவும் வசீகரித்த ஒரு பிம்பம். நினைவில் அவள் ஒரு நித்யசங்கீதம். அவள் எனக்கு பரிச்சயம் ஆனபோது எனக்கு 19 வயது. சென்னை மாவட்ட மத்திய (இப்போது அது தேவநேய பாவாணர்) நூலகத்தில், புத்தகம் பார்க்க நன்றாக இருக்கிறதே என்றுதான் அதை வீட்டுக்கு எடுத்துச்சென்றேன்..படித்தேன், திரும்பவும் படித்தேன்..மறுநாள் என் நண்பர்களை படிக்கச்சொன்னேன், படித்தவர்களிடம் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். ஒருசில மாதங்களில், ஆத்மாநாம், பிர்மீள் என்று தாவ ஆரம்பித்த என் இலக்கிய தேடல்களினால் அபிதா கொஞ்சம் மறதியின் மூலைக்குத்தள்ளப்பட்டிருந்தாள்.
நான்காண்டுகளுக்குப்பின், ஞாநியுடன் பரீக்ஷாவின் ஆரம்பநாட்களுக்குப்பின், எனக்கும் நாடகம் அரங்கேற்றும் ஆசை வந்தது.என்னதான் பொதுவுடைமை, புரட்சி என்பன சிநேகமுள்ள வார்த்தைகளானாலும், பார்ப்பனீய கூறுகள் நிறைந்த லா.ச.ராவின் அபிதாவையே நாடகமாக்கவேண்டும் என்று தீவிரமாயிருந்தேன்..  அதற்காகவே பரீக்ஷாவிலிருந்து விலகி முத்ரா நாடகக்குழு ஆரம்பித்தேன்..(அபிதா படித்தவர்களுக்கு நொண்டிகுருக்கள் பற்றி தெரியும், என் நாடகத்தில் அந்தப்பாத்திரத்தை ஏற்று சிறப்பாக என் நண்பன் நடித்தான்..அவன் அறியப்படும் பெயர்: ஞாநி!) பரீக்ஷா, முத்ரா வெவ்வேறு குழுக்கள்போலத்தோன்றினாலும், இரண்டிலும் ஒரே நண்பர்கள், ஒரே நடிகர்கள்!அவர்களைப்பற்றி பின்னால்...

முதலில் மேடைக்கான கதையமைப்பையும் காட்சியமைப்பையும் வசனங்களையும் எழுதியபொழுது..அபிதாவை எழுதியவரிடம் அனுமதி வாங்கவேண்டுமென்று தோன்ற, லாசராவிற்கு அனுமதி கேட்டு ஒரு கடிதம் எழுதினேன்..அதன் கடைசி வரிகள்:
இந்த தவத்திற்கு
வரம் கிடைக்காவிட்டாலும்
தரிசனம் மட்டுமாவது தேறுமா...

 பத்து நாட்களுக்குள் தன் வீட்டிற்கு வருமாறு அழைப்புவிடுத்து லாசராவிடமிருந்து ஒரு அஞ்சலட்டை வந்தது.... திருவண்ணாமலையில் அபிதாவைப் பார்க்க அழைப்பு வந்ததுபோல் ஒரு பரவசம்..அந்த கல்பனாராகத்தின் கடைசி சங்கதியாக அவரது தரிசனம் கிடைத்தது.
"இதுக்கெல்லாம் காசு ஏதாவது தருவியா?"
"இல்லே"
"நினச்சேன்..சரி, படி"
"ம்?"
"ஸ்க்ரிப்ட் எப்படி பண்ணியிருக்கே படி"

படித்தேன். கண்களைமூடிக் கேட்டுக்கொண்டிருந்தார்.நானே எனக்கு சபாஷ் போட்டுக்கொண்ட கட்டங்களைப்படிக்கும்போது, படிப்பதை நிறுத்தி அவரைப்பார்ப்பேன் (சபாஷ் எதிர்பார்த்து)...  "ம்ம்ம், படி.." என்பார். ஒரு கட்டத்தில், என் கதைவசனத்தில், கதாநாயகன், 'அதோ பார் அது கரடி மலை' என்பான், அவன் மனவி, 'அட ஆமா, கரடி மாதிரியே இருக்கு' என்பாள். இதை நான் படித்ததும், " என்னது? " என்றார். அப்படியே படித்தேன்..அப்போது கண் திறந்தார், என்னைப்பார்த்து..
"என்ன சொன்னா?"
"ம்?"
"அவ என்ன சொன்னான்னு எழுதியிருக்கே?"
மறுபடி படித்தேன்.
"புரியலியா?"
"என்ன சார்?"
"அவ ஒரு ஃப்ரென்ச் லேடி மாதிரி.. ,  பேச்சுல ஒரு நளினம் இருக்கும்...'அட'ன்னு எழுதியிருக்கியே...அது  ஜெர்மன் (sound) ஸௌண்ட்  , ..ஃப்ரென்ச் ஸௌண்ட்ன்னா  அது  'ஓ' ன்னு வரும்" என்றார். ஓ ..கரடி மாதிரியே.. பிரமிப்பை விட பயம் அதிகமாகியது. அது ஓர் அட்சரசுத்தமான மந்திரம் போல் தோன்றியது.  எதில் விளையாடத் துணிந்திருக்கிறேன் என்று அப்போதுதான் உறைத்தது. 
சாப்பிட்டுவிட்டுப்போகச் சொன்னார், சாப்பிடும் போது "என்ன சாப்பிடறே" என்றார், நான் முழிப்பதைப்பார்த்து, சப்தமாக சிரித்து, "வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும்" என்றார். (அது நாவலிலும் வரும்).

  பிறகு மிகுந்த தைரியத்துடன், நாடகவேலைகள் ஆரம்பமாயின..திடீரென்று, இந்த நாடகத்திற்கு இசை வேண்டுமென்று முடிவெடுத்து,   MBS அவர்களிடம் சென்றேன்..
"நாடகமா?"
"யெஸ் சார்"
"நான் சினிமா கம்போஸர்"
"யெஸ் சார்"
கொஞ்சம் முறைப்புக்குப்பின், "என்ன நாடகம்?"
"லாசராவின் அபிதா"
"வாட்?"
மெதுவாக அவரிடம் விவரிக்க ஆரம்பித்தேன்..ஸ்க்ரிப்ட் இருந்தால் கொடுத்து விட்டுப்போகச்சொன்னார்..கொடுத்துவிட்டு வந்தேன்..மறுநாள், "வா பேசலாம்" என்று அழைத்தார், போனால், ஹார்மோனியத்துடன் இருந்தார்.." இந்த கதையில் ஒரு மழை போல எல்லாம் கொட்டிக்கொட்டிப்போகும்  அதனால், அமிர்தவர்ஷினி ராகத்தில் போடலாம்" என்றார். அவரே சில ஸ்வரக்கோலங்களை வாசித்துக்காட்டுவார், "இன்னும் கொஞ்சம்" என்பேன், மாற்றி வாசிப்பார்.. 
 “நிசகமப  பமகமகா மகா மகா சநீ, மபநீ மபநீ, சா க சா”-  இது தான் தீம் ம்யூசிக்!
இசையும் பதிவு செய்து கொண்டு, அந்த நாடகத்திற்காக முன்கதை வரும் இடங்களை ஸ்லைட்களாக எடுத்துக்கொண்டு அரங்கேற்றினோம்.
வருபவர்களிடம் தந்த வரவேற்பு/ விவரங்கள் பிரதிகளில் எழுதியிருந்தேன்...
"லாசராவின் எழுத்துக்களில் அதிரும்
மந்திரத்வனியில் ஒரு மாத்திரையேனும் மீட்க முடிந்திருந்தால்..
இந்த தவத்திற்கு
வரம் கிடைக்காவிட்டாலும் தரிசனம் மட்டுமாவது தேறும்".

நாடகம் எல்லா விதத்திலும் தோல்வி!
ஆனால், எங்கள் நாடக‌க்குழு புது உத்வேகத்துடன் பிறந்தது..  இது நடந்தது 1982!