Thursday, December 10, 2009

சுயப‌ரிசீலனையின் ஆரம்பம்



வாழ்வின் மத்தியில் முடிந்தபாதியினைப் பார்த்து புளகாங்கிதம் அடைவதும், புல்லரிப்பதும், பரிதாபம் கொள்வதும், பொய் சொல்லிக்கொள்வதும், உண்மைகளை இந்த நேரத்து சௌகரியத்திற்கேற்ப புரிந்து கொள்வதும்  வாடிக்கையாகிவிட்டபின், இனி இருக்கும் மீதியைப்பற்றிய சிந்தனையே இப்பதிவு. 
எப்போதும் தனிமைதான் நிரந்தரம், நிஜம். கூட்டம், கூட்டு என்பதெல்லாம் அந்தந்த நேரத்து விருப்பத்திற்கும் வசதிக்கும் மனம் ஏற்றுக்கொண்டவை மட்டுமே. எல்லா மனிதர்களையும் போல்தான் நானும்,  தனி! எல்லா மனிதர்களையும்போல்தான் நானும் நான் தனி என்பதைச் சிறப்பு எனும் அர்த்தத்தில் புரிந்துகொள்ளப் பழகிவிட்டேன். உண்மை என்று நம்பிவிட்டேன், பொய் என்பதை நம்ப மறுத்துவிட்டேன்.


உறவுகளைப்பற்றி எல்லாருக்கும் எப்போதும் கவலையோ அக்கறையோ நிச்சயம் உண்டு.  
எது உறவு? நம் சூழலில் தென்படுவதா, நம் மனத்தில் நினைத்துக்கொள்வதா, நாம் ஏமாறியதா ஏமாற்றியதா, நம்மை ஈர்த்ததா நிராகரித்ததா, நாம் தேடியதா அடைந்ததா, அடைந்ததாய் நினைத்ததா, விரும்பியதா வெறுத்ததா, தற்செயலா தலையெழுத்து எனும் தப்பித்தலா, உறவு எதுவானால் என்ன, அது உண்மையா? உண்மையில் நாம் என்று நான் சொல்வது நாம்தானா இல்லை நான் மட்டுமா? நான்தான் என்றால் ஏன் நாம் என்று சொல்கிறேன்? பயமா?
எதுகுறித்து பயம்? நான் என்று திரிந்தால் நாம் என்று எதிர்கொள்ளும் சமூகம் நிராகரித்துவிடும் என்ற பயமா? நான் தனியாய் எது செய்யவும் சமூகம் தேவை என்னும் மனதோரத்தின் சத்தியச்சிணுங்கலா?
சமூகம் எவ்வள‌வு தேவை? எனக்குத் தேவையான உணவு என்னால் உற்பத்திசெய்ய முடியாதபோது அதை விலைக்கேனும் தர ஒரு சமூகம் தேவை. உடையும் அப்படித்தான். விலைதந்து வேண்டியதைப்பெற உத்தியோகம் என்பதற்கும் சமூகம் தேவைதான். ஊதியத்திற்கு அர்த்தம் கூட்டவும் சமூகம் தேவைதான். சமூகம் என்னும் வழக்கில் கணக்கெடுத்த அந்த நான்குபேர் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் தனித்திருப்பேன், என் தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டிருப்பேன் என்றெல்லாம் என் நிர்வாணக்கனவுகளிலும் பொய் சொல்லக் கற்றுக்கொடுத்தது யார்?  
அந்த நான்குபேரா?அவர்கள் உள்ளேயா வெளியேயா? அவர்கள் எவ்வளவு காலம் எனக்கு முன்னாலேயே இருந்தார்கள், எவ்வளவு தூரம் என்னால் உருவாக்கி வளர்க்கப்பட்டார்கள்? இப்போது நான் எழுதுவதும் எனக்காகவா அவர்களுக்காகவா? அவர்களையும் சேர்த்துத்தான் நான் என்றால், நான் என்பதென்ன?
அவ்வப்போது இந்தக்கேள்வி வந்தாலும் மனம் தன் சமூகநாடகத்தின் பாத்திரத்திற்கேற்ற ஒப்பனையில் இது இப்போது தேவையில்லாத வசனம் என்று ஒதுக்கிவிடும். ஒரு நாடகத்திற்கும் மறுநாடகத்திற்கும் உள்ள இடைவேளையில்தான் இந்தப்பரிசீலனை. இது மந்தமான மத்தியானத்தின் ஓய்வுநேரப் பொழுதுபோக்காக, வழக்கம்போல் வாழ்வின் நெருக்கடிகளில் மறைந்துவிடாதிருக்கவே இப்போது எழுத்துகளில் இப்பதிவு. வார்த்தைகள் நிமிடங்களில் மறைந்து மறந்து போகலாம், ஆனால் எழுத்துகள் குப்பைக்கூடைகளிலாவது இருக்கும் என்பதாலேயே இந்தப்பகல் நேரது மன அலைச்சல்.
என் பெயர் என்று குழந்தைப்பருவத்தில் அடையாள‌ம் கண்டு திரும்பிப்பார்த்ததும், என் முகம் என்று அடுத்த கட்டத்தில் கண்ணாடியில் அடையாளம் கண்டு கொண்டதும்,நிழற்படமாக கையெழுத்தாக, பணிபுரியும் பட்டமாக, உறவுகளால் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட பிம்பமாக, பல்விதங்களில் எனக்கே அறிமுகமான நான்.. யார் தான்?
நான் யார் என்று தெரிந்தால் என் வரம்புகள் என்னால் வரையறுத்துக்கொள்ளப்படும், அப்போது சமுதாய வீதியில் போடப்பட்டிருக்கும் கலாச்சாரக் கோடுகளினூடே என் பயணம் கண்டனங்களின்றிச் சுலபமாகும்.நிர்ப்பந்த்தங்கள் கூட நிமித்தங்களாகிவிடும்; மனம் சுணங்காது.
ஒவ்வொரு நாளையும் இரவுநோக்கி இழுத்துச்செல்லும். இரவின் கனவுகளில் மனவீட்டில் இன்றைய வருத்தக்குப்பைகளை மூடிவைத்து, நாளைய விருப்பப்பூக்களால் அலங்கரித்துக்கொண்டு, விடைதெரியாத கேள்விகளையெல்லாம் ஓரத்தில் வீசியெறிந்துவிட்டு, தன்னைத்தானே தற்காலிகமாக ஏமாற்றிக்கொள்ளும்.அல்பெருனியின் அல்ஹிந்த் படித்தாலும் தான் ஹிண்டு என்ற அடையாளத்திற்காக மறந்துகொள்ள முயலும்.
இதையெல்லாம் மீறி ஒருநாள் எனக்கு நான் யார் என்பது புலப்படும். அதுவரை அரிப்பை நானே சொறிந்து கொண்டு 
ஆஹா பார் எவ்வளவு அழகாகச் சொறிந்துவிட்டிருக்கிறேன் என்று முதுகை இன்னும் சிலர் சொறிவார்களா என்று காட்ட,என்னில் அடங்காத என் மனம் முயன்றுகொண்டேயிருக்கும்
இன்னும் புலம்புவதோ புரிந்துகொள்வதோ பின்னாளுக்காக..

Wednesday, December 9, 2009

சாரதாமேனன் சொற்படி


நேற்று மாலை டாக்டர்.சாரதாமேனனைச் சந்தித்தேன். ஏதாவது எழுது, எங்கேயாவது எழுது என்றார், இங்கே எழுதுகிறேன்.
சென்னை அரசு மனநலக்காப்பகத்தின் நிலைமை பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார்.
கேட்ககேட்க எனக்கு இரு விஷயங்கள் வியப்பையும் வருத்தத்தையும் தந்தன.
வருத்தம் முதலில்:அங்கிருக்கும் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளனவாம். உள் நோ யாளிகள் நிலைமை சரியில்லையாம். செவிலியர்களும், சேவகர்களும் தங்கள் பணிகளைச்சரியாகச் செய்ய முடியவில்லையாம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சமூகப்பணியாளர்கள் பலரது பணியிடங்கள் நிரப்பப்படாமல், ஆள்பற்றாக்குறை உள்ளதாம். இதையெல்லாம் கவனிக்கவேண்டிய இயக்குநருக்கு, காப்பகத்தின்மீது 'சிலர்' தொடுத்துள்ள வழக்குகளைச் சந்திக்க நீதிமன்றத்துக்கு அலைவதில் பெரும் நேரம் செலவாகிறதாம்.நோயுற்றவர்களில் சிலர், குணமடைந்திருந்தாலும் அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடியவில்லையாம். (இன்றும் சிலர் நோயாளியை அனுமதிக்கும் போது பொய்யான முகவரி தந்துவிட்டு காணாமல் போய்விடுவதால் இந்த அவல நிலை). இன்னும் பலப்பல விஷயங்களை அவர் புலம்பிக்கொண்டிருக்கும் போதுதான் இன்னொரு வருத்தம் வந்தது.

80+வயதில் அவருக்கு இருக்கும் ஆதங்கம் எனக்கு ஏன் இல்லை? எனக்குத்தெரிந்த வரையில் இந்நிலை மோசமாக இருந்தாலும், இது ஒன்றும் திடீரென்று ஏற்பட்ட ஒரு சரிவு அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவித மெத்தனமும் அக்கறையின்மையும் அங்கே வெகுவருடங்களாக ஊடுருவி வளர்ந்து வந்திருந்தன..

அப்படியென்ன வழக்கு, நோயாளிகளையும் நிர்வாகத்தையும் முழுமையாக இயக்குநருக்கு கவனிக்கமுடியாமல்? இது ஒரு விநோதமான நிலைமை. வழக்கு தொடுத்தவர்கள் அதே மருத்துவமனையின் பல வசதிகளை பல ஆண்டுகளாகப்பயன்படுத்திவந்தவர்கள் தான். அவர்கள் தங்கள் நோயாளிகளை இதே மருத்துவமனையில் அனுமதித்த காலத்திலும் இந்த நிலைமை தான் இருந்தது.அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், 'அவர்கள்' இந்த மருத்துவமனையின் சேவைகளைப்பயன்படுத்தி, தங்கள் சொந்த நிறுவனத்திற்குப் புகழும் பணமும் சேர்த்துக்கொள்வதை மருத்துவ நிர்வாகம் எதிர்த்தது! அரசின் நிர்வாகம் 'அவர்களுக்கு' ஆரம்பத்தில் துணைநின்றது!
போடப்பட்டது பொதுநலவழக்காம்! பாவம் மனநோயாளிகளை இந்த மருத்துவமனை சரியாகக் கவனிக்கவில்லையே என்ற தார்மீகக்கோபமாம்!! இதே 'அவர்கள்', தங்களுக்கு நாளும் கூடும் அரசியல், வர்த்தக, செல்வந்தர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரே ஒரு கட்டிடத்திற்குக்கூட ஒரே ஒரு குழாய் ரிப்பேர் கூட‌ச் செய்ததில்லை! பிறகு என்ன பொதுநல அக்கறை? 'அவர்களின்' தலையீட்டில் மட்டுமல்ல தம்பட்டத்திலும் மருத்துவமனையின் மனம் சுணங்கியது, அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியேறியவர்கள் தாங்கள் செய்து வருவதாகப் பீற்றிக் கொள்ளும் சேவை செய்ய முடியவில்லை! அதற்கு ஒரு மருத்துவமனை அவசியம். அப்படியொரு மருத்துவமனை கட்டுவது அவர்கள் வைத்துள்ளதிலோ அல்லது வேண்டுகோள் விடுத்து சேர்க்கக்கூடிய பணத்திலோ பெரிய விஷயமுமல்ல! அப்படிச் செய்தால் கடைத்தேங்காய்+வழிப்பிள்ளையார் என்னும் அவர்களின் வர்த்தகக் கணக்குக்கு ஒத்துவராது!! (இதில் ஒரு சொந்தப்புலம்பலும் அவசியமாகிறது: 'அவர்கள்' சேவை செய்து பெயர் வாங்க, நானும் வங்க்கிகடன் கட்டமுடியாமல் நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருந்த மருத்துவமனையில் 'அவர்கள்' கூட்டி வருபவர்களை இலவசமாகப் பார்த்துக்கொண்டிருருந்தேன். இதைவிடக் கொடுமை, அவர்கள் ஆரம்பிக்கும்போது, மிகுந்த நம்பிக்கையோடு அவர்களின் நிறுவனத்திற்கான இலச்சினையையும் நான்தான் வரைந்து கொடுத்தேன்!).
'அவர்கள்' சரியில்லை என்பது ரொம்பகாலத்திற்கு முன்பே எனக்குத்தெரியும், அதற்குக் கொஞ்ச காலத்திற்குமுன் 'இவர்களும்' ச‌ரியாக இல்லை என்பதும் எனக்குத்தெரியும். பிறகென்ன எனக்கு திடிரென்று பொத்தி வைத்த பொறுமல் வெடிக்கவேண்டும்? எல்லாம் என்னெதிரில் பேசிக்கொண்டிருந்த அந்த அம்மையாரினால்தான். அவர், டாக்டர்.சாரதா மேனன்.

அவர், தமிழ்நாட்டின் முதல் பெண் மனநலமருத்துவர் (இந்தியாவில் இரண்டாவது)! இந்த சென்னை மனநல மருத்துவமனையின் இயக்குநராக, தலைவியாக 17 ஆண்டுகள் பதவி வகித்தவர். அவரது காலத்தில் தான் மனநல மருத்துவ முதுகலை படிப்பு உருவானது, அவரது முயற்சியால்! அவரது காலத்தில் அப்போதிருந்த மருந்துகளின் உதவியுடன் பலர் பயனடைந்தார்கள். (இன்றைய மருந்துகள் இன்னும் துல்லியமாகவும் விரைவாகவும் நோய்க்குறியீடுகளைச் சரிசெய்கின்றன). ஓய்வு பெற்றபின், தன் சொந்த முயற்சியால் மனச்சிதைவு ஆய்வு மையத்தை அவர் நிறுவினார். அது ஆரம்பித்த ஒரு வருடத்தில் அங்கே அவர்கீழ் நான் பணிக்குச்சேர்ந்தேன்.
நிறுவன நடவடிக்கைகள் ஒத்துவராதால் மூன்றாண்டுகளில் விலகினாலும் இன்றும் அவர் அழைத்தால், தொலைபேசியில் கூட எழுந்து நின்று பேசுவேன்..நேரில் அவரிடம் வாதமும் சண்டையும் போட்டாலும்!(அவரே தான் நிறுவிய அமைப்பிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவிட்டார்)

" நீ தான் தழிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவாயே, இதைப்பற்றியெல்லாம் எழுது" என்றார். சரியென்று நான் சொன்னபோது, " மனநோய் பற்றி எழுது, மனநோயாளிகளை அவர்களது குடும்பமும் சமூகமும் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எழுது" என்றார். சரி என்றேன்."எழுதும்போது யாரையும் திட்டாதே, கோபமாய் எழுதாதே, தனிப்பட்டவர்களின் குறைகளைவிட சமுதாயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது தான் முக்கியம்" என்றார்.  சரியென்றேன்.  
அவர் சொன்னபடி தான் எழுத முயன்றேன்.

Tuesday, December 8, 2009

கடவுளின் நான்கு கைகள்



அல்லாவுக்கு எந்தப்படமும் கிடையாது, கூடாது. யேசுவிற்கும்,மேரிக்கும் இரண்டுதான், ஆனால், ராமன், க்ருஷ்ணன் தவிர ஏனைய இந்துக்கடவுள் பிம்பங்களெல்லாம் நான்கு அல்லது அதற்குமேற்பட்ட கைகள் கொண்டிருக்கின்றன..நான் எழுத முனைவது கடவுளின் கைகளைப்பற்றியல்ல, அந்தக்கைகளைக் கொண்டுவந்த தன் பெயரைப்பொறித்துக்கொள்ள நினைக்காத கலைஞர்களைப்பற்றி..  அது பற்றி மட்டுமல்ல, அப்படியொரு கலாசாத்தியத்தின் நுண்ணறிவு பற்றியும்.



உலகின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவர் Frank Netter. அவரது ஓவியங்கள் இன்றைக்கும் உடற்கூறு கற்கும் மருத்துவ மாணவர்களுக்கு உதவுகின்றன. அவரை Michelangelo of Medicine  என்று சிலர் அழைப்பதுண்டு! அவர் வரைந்த தோளின் ஓவியம் இது. இதில் இனி எதுவும் கூடாது, குறையாது. இந்த சித்திரத்தில் உள்ளது போல் தான் நம் எல்லார் தோள்களும் இருக்கின்றன, ஒவ்வொரு தோளிலும் ஒரு கையுடன்.





 இந்திய கலைஞர்கள் ஒரு தோளில் இரண்டு கைகளைப் புகுத்தியதைப் பாருங்கள். உடற்கூறு மருத்துவ மாண‌வர்களுக்கு மட்டுமல்ல, ஓவிய-சிற்பக்கலைஞர்களுக்கும் அடிப்படை பாடம். இருக்கும் ஒரு துளையில் இரண்டு கைகளைப்பொருத்தியது தான் இந்திய சாகசம்.

கடவுள் உருவத்திற்கு எதற்கு பல கைகள்? முதலாவதாக கடவுள் என்னும் ஓர் அரூபப்பிரக்ஞைக்கு எத‌ற்கு உருவம்? ஒரு கட்டத்தின் அவசியம் என்பது தான் கடவுள் என்னும் மர்மமாயை. புரியாதவற்றின் ஒரு collective noun பெயராக!
பயமுறுத்த, பண்படுத்த, புத்திசொல்ல.. என்று பலவிதங்களில் கடவுள் எனும் விஷயம் மனிதனுக்குப் பயன்பட்டு வந்தது. அந்நாளில் இதுவே நன்கு விற்பனையாகக்கூடிய சரக்காக ஆதிக்கம் செலுத்திய வர்க்கத்தினரால், ப்ரத்யேக உரிமையும் கொண்டாடப்பட்டது. இதுவே வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு பேதங்களையும் மக்களிடையே உருவாக்க, நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டது. இப்போது நான் எழுதிக்கொண்டிருப்பது, கலாபேதம் பற்றி. கலைகளில் பேதம் உயர்வுகூட்டும், சமுதாய அரசியல் பேதங்களைப்போலல்லாமல்.

Multiple exposure எனும் முறையில் இப்படி ஒரே உருவத்திற்கு ஆயிரம் கைகள் உள்ள‌து போல் காட்டமுடியும், நன்கு அமைக்கப்பட்ட நாட்டியத்தில் ஒரே பெண்ணுக்கு ஆயிரம் கைகள் விரிவதைப்போலவும் காட்டவும் முடியும்.
ஆனால் இவை ஒரு கோணத்தில் மட்டுமே நிஜமென்று நம்பவைக்கும், நம் இந்திய சிற்பிகளின் கைவண்ணத்தில் எந்த  கோணத்தில் பார்த்தாலும் நான்கு கைகள் சாத்தியம் என்றே நம்பத்தோன்றும்.

சிலசமயங்களில் ஒரே தோளின் இரண்டுகைகளை சாமர்த்தியமாக ஒரு சின்னத்துணியின் உதவியுடன் இவர்கள் சாத்தியமாக்கியிருப்பார்கள். 
அப்படியொருசாகசம் கூடச்செய்யாமல் சிலர் இதைச் சாத்தியமாக்கி இருப்பார்கள்.
இதைப்பற்றி என்னை நினைக்கத்தூண்டியது நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும் ஒரு புத்தகம். Deepanjana Pal எழுதிய The Painter . இது ரவிவர்மாவைப்பற்றிய நூல். Agony and Ecstasy என்று Michelangelo பற்றி இருப்பது போல், Lust for Life என்று Van Gogh பற்றி இருப்பது போல் நம் கலைஞர்களைப்பற்றிய நூல்கள் இல்லை. அந்த விதத்தில் நான் இதுவரை படித்த நூறு பக்கங்களில் இந்நூல் ஒரு நிறைவையே அளிக்கிறது.  

படித்துக்கொண்டிருக்கும்போதுதான், ரவிவர்மாவின் ஸரஸ்வதி படமும் நினைவுக்கு வந்தது. அதில் அவளுக்கு நான்கு கைகள். நான்கு கைகள் என்பதையே உணராதவண்ணம் அது வரையப்பட்டிருக்கும். அவளுக்கு நான்கு என்ன அறுபத்திநான்கு கைகள் கூட இருக்கலாம், இருக்கட்டும். கடவுள் என்பது ஏன் இப்படி ஒரு அதீத பிம்பமாகவே நமக்குக் காட்டப்படுகிறது?
மனித முகமும் உடலும் கடவுளுக்குக்கொடுத்த கலைஞன் ஏன் சில அதிகூறுகளையும் இணைத்தான்? முதலில் மனிதக்குறுகள் ஒரு பரிச்சயத்தின் விளைவாக வரும் அந்நியோன்யத்தை உருவாக்க‌, இரண்டாவது அப்படி வரும் நெருக்கத்தின் இடையிலும் நீ வேறு அது வேறு என்பதை நிழலாகவாவது நினைவுறுத்த.
ரவிவர்மாவுக்கு மு பலநூறு ஆண்டுகளாக தேவியர் சிற்பங்களாக உருவாக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்திருந்தபோதும் ரவிவர்மா தான் அன்றாடம் சந்திக்கும் முகங்களை தெய்வங்களுக்குப் பொருத்திய முதல் கலைஞன். ஆனால், அவன் கூட அவளை ஒரு தெய்வமாக வரையும்போது, இன்னும் இரண்டு கைகள் கூடுதலாக வரைய வேண்டியிருந்தது. இரண்டு கைகளோடு அதே படம் வரையப்பட்டிருந்தால், ரசிக்கப்பட்டிருக்கும், ஆனால் வணங்கப்பட்டிருக்குமா தெரியவில்லை.
நிஜங்களைவிட மிகைகளை ரசிப்பதும் வியப்பதும் கண்டுகேட்டு அதிசயிப்பதும் தானே மனித குணம். இதுதானே அன்று தெய்வங்களையும் பின்பு தலைவர்களையும் உருவாக்கியது! ஒரு கூர்மையான கலைஞன் மனித மனத்தின் இந்த கோணத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டு உயர்படைப்பைத் த்ருவான், ஒரு கோணல் புத்தியுள்ளவன் அந்தப் படைப்பை வைத்துக்கொண்டு பிறரை அடக்கி மயக்கி மிரட்டி வைப்பான். கடவுள் இருவருக்குமே உதவுவதைப்போல், சாமான்யனுக்கு உதவுகிறதா?
கடவுள் நம்பிக்கை என்பது அச்சத்தின் வெளிப்பாடாக அமையாமல், அன்பின் இன்பத்தின் ஒரு இளைப்பாறலாக அமைந்தால்..  அப்போது ஒவ்வொரு மனமும் தன் அகக்கண்ணாடியில் தன்முகத்தை கடவுள் முகமாகப் பார்த்துக்கொள்ளும்.. கடவுள் என்று பேச ஆரம்பித்தாலேயே கற்பனைகளும் இயல்பாகவே வந்துவிடுகின்றன.

Sunday, December 6, 2009

காமெரா கவலைகள் 6/12




26/11 முடிந்தது, முகப்பூச்சுக்கள் குறைத்துக்கொண்ட பெண்கள், சோகமுகத்துடன் மெழுகுவத்தியேந்தி அஞ்சலி செலுத்தினார்கள், தொலைகாட்சி காமிராக்கள் முன்!
இன்று, 6/12, மெழுகுவத்திகளோ, காமிராவுக்கான கண்ணீரோ இருக்காது.. 

எப்போது எது நடந்தாலும் பதிவெழுத ஒரு வாய்ப்பாகச் சிலர் பயன்படுத்திக்கொள்வார்கள் (என்னையும் சேர்த்துத்தான்).
துக்கத்தில் அடிபட்டவர்கள் அடுத்த வேலை பார்க்கப் போய்விடுவார்கள். செத்தவர்கள் வீடுகளில் சிலரது படங்கள் போன வருடம் போட்டுக் காய்ந்த பூக்களோடு இருக்கும்...

நாசமானது ஒரு வரலாற்றுச் சின்னமானால் என்ன, வசதியானவர்களுக்கான வாசஸ்தலமாக இருந்தால் என்ன? நாசம் வெறும் கட்டிடங்கள் மட்டுமா? எத்தனை மனங்கள் உடைந்தன? ஒவ்வொன்றும் எத்தனை விதமான விளைவுகளை ஏற்படுத்தின?
மெழுகுவத்திகள் கரைந்துவிடும் போதே, கவலைகளும் கரைந்துவிட்டால் எவ்வள‌வு நன்றாய் இருக்கும்? 
இறந்தவர்களுக்கு நினைவு நாள் என்று ஒன்றை நினைவில் வைத்துக்கொண்டு அன்றைக்கு பழைய நினைவுகளில் மூழ்குவது எல்லா ஊர்களிலும் உள்ள ஒரு பழக்கம்.அந்த பழைய நினைவுகள் நாம் அனுபவித்த உணர்வுகளை மீட்டி, நாளை முதல் வாழ்வின் பரிமானங்களைப் புதுப்பார்வையோடு பார்க்கவே உதவ வேண்டும்.
கற்றுக்கொள்வது என்றால் சிந்திப்பதும் ஆகும், அது சில நேரங்களில் கசப்பானதாகவும் அமையும்.
மனிதனின் தன்மையென்று நாம் கொண்டாடும் சகமனிதர்களிடம் இருக்கும் இசைவும் இணக்கமும் ஒரு கலாச்சாரத்தின் உயிர். அது கொல்லப்பட்டால்,அதுவும் வன்முறை தான், அந்த நாள் துக்கமான நாள் தான்.
ஒரே தேசத்து மக்களிடையே நல்லிணக்கம் செத்த நாள், பாடங்களைக் கற்றுக்கொடுக்கத்தான் இருக்கவேண்டும். கற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இது இன்னொரு வாய்ப்பந்தல் போட்டு வெட்டியாய்த் திரிய இன்னொரு சந்தர்ப்பம்.
புரிந்து கொள்வதும்,புரிதலின் விளைவாக விழிப்புடன் இருப்பதும், விழிப்புடன் இருப்பது வெறியுடன் இருப்பதல்ல என்று தெளிவடைவதும் தான் ஒரு துயரமான சம்பவத்தின் தேதியை நினைவில் வைத்துக்கொள்வதற்கான அவசியம்.
இதையும் ஒரு நாடகமாக, சமுதாயக் கேளிக்கையாக, தனக்கு மனத்தில் ஏற்படாத பாதிப்பென்றாலும் காட்டிக்கொள்ள வேண்டிய ஒரு நாகரிக  நிர்ப்பந்தமாக இவ்வகை நாட்கள் அமைந்து கொண்டிருக்கும் வரை, உண்மையிலேயே வருந்தியவர்களது உணர்வுகள் மரியாதை இழந்துகொண்டே போகும்.
இப்படி நடக்கும் ஒவ்வொரு நாள் பற்றிய நினைவும், யார் என்ன செய்தார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்வதை விடவும், ஏன் அப்படி செய்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவும் தூண்ட வேண்டும்.
இது ஒரு விசாரணை தான். ஓய்வு பெற்ற ஒருவருக்கு தரப்படும் வேலை வாய்ப்பு அல்ல,  ஒரு குற்றத்தின் பின்னனியில் இருக்கும் துரோகத்தை, நயவஞ்சகத்தை, குறுகிய நோக்கத்தை ஆராயும் ஒரு விசாரணையாக‌ மட்டும் அல்ல,  தன்னைமீறி- தன் சூழலை, சமுதாயத்தை, சகமனித மனங்களை எவ்வளவு தூரம் நாம் அலட்சியப்படுத்தி வருகிறோம் என்னும் சுயபரிசீலனையாக இருக்கவேண்டும். நம்முள் கனன்றுகொண்டிருக்கும் பேதவெறியை அடையாள‌ம் காணவேண்டும், அப்போதுதான் அது எரிந்து எரித்து எதையும் அழிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்‌.
இன்னும் எவ்வளவோ வருடங்கள் உலகில் இருக்கின்றன, ஏன் நடந்தது யார் காரணம் என்றெல்லாம் கண்டுபிடித்து அறிக்கை சம்ர்ப்பிக்க அவசரம் இல்லை. குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களும் மட்டுமல்ல அவர்களது அடுத்த வாரிசுகளும் வேறு வேலை பார்க்கப் போய்விடுவார்கள்...
எல்லாருக்கும் வயதாகிவிடும்.
கோரத்தின் தன்மை காலத்தில் கொஞ்சம் மழுங்கிவிடும். புத்துப்புது நியாயங்கள் உருவாக்கிக்கொள்ளப்படும்.
மெத்தனமும் வன்முறை தான்.
நமக்கு நேரமும் ஞாபகமும் இருந்தால், இன்னும் பல ஆண்டுகள் கழித்து, காமெராக்கள் தயாராகிவிட்டபின், மெழுகுவத்திகளைக் கொளுத்தலாம்..

Friday, December 4, 2009

மாக்பெத்

மாக்பெத் ஷேக்ஸ்பியர் எழுதிய சிறந்த நாடகங்களில் ஒன்று , அது குறித்து பல மூட நம்பிக்கைகளும் இருந்தன.
அந்த நாடகம் போட்டால் கிட்டத்தட்ட தரித்திரம் பிடிக்கும், விபத்து ஏற்படும், நடிப்பவர்களுக்கும், தயாரிப்பில் ஈடுபடுபவர்களுக்கும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்.. என்றெல்லாம் மூட நம்பிக்கைகள் மேலைநாடுகளில் இன்றும் உண்டு. நம்நாட்டிலும் இதைப்பற்றி நிறைய பேர் பேசியிருக்கிறார்கள்.
சாபம் என்றால் பரிகாரமும் சொல்வதுதானே வழக்கம், அப்படி யாராவது வசனத்தைத்தவிர நாடகமேடையில் 'மாக்பெத்" என்று சொல்லிவிட்டால், அவன் தன் தோளுக்குப் பின்புறம் மூன்று முறை துப்பிக்கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் நின்றவாறே மூன்றுமுறை சுழன்றுவிட்டு, மேடையை விட்டு வெளியே போய்த் திரும்பி வரவேண்டுமாம். முதன்முதலில் இந்த நாடகம் அரங்கேறியபோது லேடி மாக்பெத்தாக நடிக்க இருந்த நடிகருக்கு உடல்நிலை சரியில்லாமல்போய், ஷேக்ஸ்பியரே அந்த வேடத்தை ஏற்க நேர்ந்ததாம். (அவருக்கு எந்த கேடும் வராமல் அதற்கப்புறமும் பல வெற்றிகரமான நாடகங்களை எழுதினார்!)
இந்த மூட நம்பிக்கைகளில் ஒன்று, ஆப்ரகாம் லிங்கன் தன் நண்பர்களுக்கு இந்த நாடகத்தைப் படித்துக்காட்டினாராம், ஒரு வா‌‌ரத்தில் அவர் கொல்லப்பட்டாராம்! எங்கள் பள்ளியில் பத்தாம், பதினோறாம் வகுப்பில் ஷேக்ஸ்பியர் உண்டு..மாக்பெத் தவிர மீதி எல்லாமும் தான் பாடமாகும்! பென்ஹரில் நடித்த ஹெஸ்டன், இந்த நாடகத்தில் நடித்த பிறகு விபத்தில் சிக்கினாராம்!! இது போல் பல கதைகள் கூறப்பட்டு வருகின்றன.
அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் அரசருக்கு சூன்யம், மந்திரம் போன்ற விஷயங்களில் மிகுந்த நம்பிக்கை இருந்ததால், ஷேக்ஸ்பியரும் ராஜாவை மகிழ்விக்க இதில் சூன்யக்காரிகளையும் அவர்களின் சக்தி பற்றியும் சேர்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எல்லாமே 'கூறப்படுகின்றன' நிரூபிக்கப்படவில்லை!

மாக்பெத் கதை: டன்கன் என்ற ராஜாவுக்குக் கீழிருந்த பலமுக்கியமானவர்களில், மக்பெத் முக்கியமானவன். வீரன். தன் வீரத்திற்காகவே பலரது பாரட்டுக்களையும் பல பரிசுகளையும் வென்றவன்.ராஜாவுக்காக நடத்திய போர் ஒன்றில்தான் கதை ஆரம்பம்.
வெற்றியுடன் மாக்பெத் தன் நண்பன் பாங்கோவுடன் திரும்பிவரும் வழியில் மூன்று சூன்யக்காரிகளைச் சந்திக்கிறான்.அவர்கள் "நீ தான் அடுத்த மன்னன்" என்று சொன்னதும் இரு நண்பர்களும் திகைக்கின்றனர்..மாக்பெத்தாவது மன்னனாவதாவது!! என்று பாங்கோ சிரிக்கிறான்.அரசனுக்கு ஏற்கனவே ஒரு வாரிசு உண்டு!
மறுநாள் ராஜாவைப்பார்த்து வெற்றிச்செய்தியை மாக்பெத் கூற, மகிழ்ந்து, இன்னும் ஓரிரு நாட்களில் உன் வீட்டிற்கு விருந்திற்கு வருகிறேன், என்று ராஜாவும் மாக்பெத்தை கௌரவப்படுத்த முடிவெடுத்தான்!
வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் சூன்யக்காரிகளின் கதையை மாக்பெத் கூறியவுடன் அவள் விருந்துக்கு வரும் ராஜாவைக் கொன்று விட்டு, மாக்பெத்  ராஜாவாகலாமே என்று திட்டமிட்டாள். ஆரம்பத்தில் தயங்கிய மாக்பெத், சதிக்கு ஒப்புக்கொள்கிறான். கொலைக்குப்பின், மாக்பெத் மன்னனாகிறான், ஆனால், சூன்யக்காரிகள் அன்று பாங்கோவிடம், நீ ராஜாவாகாவிட்டாலும் உன் வாரிசுகள் அரசாள்வார்கள் என்று சொன்னது நினைவுக்குவர,பங்கோவையும் ஆள் வைத்து, மாக்பெத் கொன்றுவிடுகிறான்..கடைசியில் மாக்பெத் சண்டையில் இறக்கிறான். பாங்கோவின் மகன் அரசனாகவில்லையே என்று யாரும் கேட்டுவிட முடியாது, அன்று நாட்டை ஆண்டுகொண்டிருந்த ராஜா பாங்கோவின் வம்சத்தில் வந்தததாகக் கூறப்பட்டது!!!
ஒரு கதையாகவே நல்ல திருப்பங்களும் விறுவிறுப்பும் உள்ள இந்நாடகத்தில், மனித மனத்தின் பல்வேறு கூறுகளை ஷேக்ஸ்பியர் அழகாகக் காட்டியிருப்பார். மாக்பெத்திற்கு உள்ளூர இருந்த ஆசை, அவன் மனைவிக்கு இருந்த பேராசை, பதவிக்காக கொலையும் செய்யலாம் என்ற மனமாற்றம், கொலைக்குப்பின் தொடர்ந்து கொலைகள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம், மாக்பெத் நாளுக்குநாள் இறுகி வரும் நிலை, அவன் மனைவி குற்ற உணர்வின் மிகுதியில் படும் அவதி, அரசனானபின் அவர்களிடையே ஏற்படும் போராட்டங்கள், மனக்குழப்பத்தில் மாக்பெத் தொடர்ந்து ஈடுபடும் மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடுகள்.. இப்படி பல மனவியல் கோணங்களை உள்ளடக்கியது மாக்பெத். இதைப்பற்றியெலாம் விரிவாக எழுதப்போகிறேன்.

இப்போது, மாக்பெத் நாடகத்தை நாங்கள் போட்ட கதை! இந்த நாடகம் யார் போட்டாலும் ஏதாவது கெடுதல் நடக்கும் என்ற மூட நம்பிக்கைக்காகவே இதைப்போட முடிவெடுத்தோம்.வழக்கமாக எங்கள் நாடகங்களில் ஆறேழு பேர்தான் நடிப்பார்கள். இதில் பாத்திரங்களும் அதிகம் என்பதால், சென்னை மாநிலக்கல்லூரியில் ஆர்வமுடன் இருந்த இளைஞர்களைக் குழுவில் இணைத்துக்கொண்டோம். இன்னும் கொஞ்சம் மூட நம்பிக்கைகளையும் பார்ப்போமே என்று என்னையும் சேர்த்து 13 பேர் குழுவாக அமைத்துக்கொண்டோம்.ரொம்ப மோசமான நாள் என்று கருதப்படும் வெள்ளிக்கிழமை பதின்மூன்றாம் தேதி நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம்.நடிகர்கள் அனைவர்க்கும் க‌ருப்பு உடை என்றும் ஒரு திட்டம்.


சிக்கல்களில் முதலாவது, தமிழ்வடிவம்! அப்போதிருந்த ஒருசில மொழிபெயர்ப்புக்கள் எங்களுக்குப் பிடிக்கவில்லை. உடனே நீ எழுது என்று நண்பர்கள் கூறிவிட்டார்கள்.இப்போது என்னை மிகவும் திமிர் பிடித்தவன் என்று பிடிக்காத சிலர் கூறுகிறார்கள், ஆனால், ஷேக்ஸ்பியரைத் தமிழில் நாடகமாக எழுதிவிடலாம் என்று நான் அப்போது முடிவெடுத்தது தான் திமிர். Fair is foul, and foul is fair: Hover through the fog and filthy air.. When shall we three meet again? In thunder, lightning, or in rain? When the hurlyburly's done,When the battle's lost and won… ஆரம்பக்காட்சிக்காக மொழிமாற்றவேண்டிய வசனம் இது!அப்படியே எல்லாம் எழுதிவிடவேண்டாம் நமக்கு எவ்வளவு முடிகிறதோ, நம் நடிகர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்குமோ அந்த அளவுக்கு எழுதினால் போதும் என்று சமாதானம் கூறிக்கொண்டு எழுதிய முதல் வசனங்கள்:  
சந்திப்போமா? மழையில் இடியில் மின்னலில் 
தோல்வியின் வெற்றியில் 
குழப்ப முடிவில் தெளிவின் அழிவில் 
அஸ்தமனத்தின் ஆரம்பத்தில் அவலங்கள் அழியும் அநித்ய நேரம் 
நீதியும் பொய், பொய்யும் நீதி நாளை என்பதே என்றின் மீதி!
இப்படித்தான் ஷேக்ஸ்பியர் எழுதியதை ஒருமுறை படித்துவிட்டு, என் வசதிக்கு அதில் கொஞ்ச‌ம் மட்டும் வைத்துக்கொண்டு எழுதினேன்."அரபியத் தைலங்களின் அற்புத நறுமணம் கூட இந்தக் கைகளின் குற்றவாடையைப் போக்க முடியவில்லை" என்று அவ்வப்போது நேர்மையான மொழிபெயர்ப்புகளும் அதில் அடக்கம்.


நாடகத்துக்கான எதிர்பாராத முதல் சிக்கல் அனுமதி வாங்குவதில் ஏற்பட்டது!நாடகம் போடுவதென்றால் முழு கதை வசனத்தையும் காவல்துறைக்குச் சமர்ப்பித்து அவர்களது ஒப்புதலுக்குப்பின் தான் மேடையேற்ற வேண்டும்!' அரசுக்குத்தலைமயேற்றிருப்பவனைக் கொன்று விட்டால் நாமே அரசுப் பொறுப்பை அடையலாம்' என்பது போல் ஒரு வசனம் வரும். அனுமதி கொடுக்கவேண்டிய காவலருக்கு அது பிடிக்கவில்லை, மாற்றச்சொன்னார்!!பிறகு அவரது உயர் அதிகாரியைப் பார்த்துப் பேசினோம். நல்லவேளை அவருக்கு ஷேக்ஸ்பியர் பற்றித் தெரிந்திருந்தது!! உடனே எங்கள் குழுவில் ஒருவன் மாக்பெத் வேலைதான் இது என்று சொல்ல ஆரம்பித்தான். நீக்கிவிடுவதாக மிரட்டி அவன் வாயை மூடினோம்.

அடுத்து வழக்கம்போல் நானும் நடிப்பேன் என்று நாசரின் தொல்லை ஆரம்பித்தது, அப்போதுதான் அவன் திரைப்படங்களில் பெயர் வாங்கிக்கொண்டிருந்தான், முடியாது என்று தீர்மானமாக மறுத்ததால் சரி நான் தான் உடைகளை வடிவமைத்துத் தருவேன் என்று அடம் பிடிக்க, நாங்களும் சம்மதிக்க, நாடகம் ஆரம்பிக்க 5மணி நேரம் இருக்கும் போது தான் உடைகள் வந்தது! நாடகத்தின் காலையில் மாக்பெத் தரித்திரத்தால் தான் நமக்கு உடைகள் வந்துசேரவில்லை என்று ஒருமாதிரியாக குழுவில் ஒரு முனகலும் ஆரம்பித்தது.
நாடகம் ஆரம்பிக்க வேண்டிய 6.30 மணிக்கு அதிசயமாக ம்யுசியம் த்யேட்டரில் மின்தடை ஏற்பட்டது. அவசரமாக இருபது மெழுகுவத்திகளை வாங்கி வந்து, ஒவ்வொரு காட்சிக்கும் லைட் ஆன் ஆஃப் என்பதற்கு பதிலாக பாத்திரங்களே ஒளியோடு உள்ளே வருவார்கள், அதை எடுத்துக்கொண்டும் காட்சி முடிவில் போவார்கள் என்று அவசர திட்டம் போட்டு, திரைக்குப்பின்னால் ஒரு குட்டி ஒத்திகை பார்த்து விட்டு, சூன்யக்கிழவிகளாக நடித்த மூன்று பேரையும் திரை தாண்டிப்போய் ஆரம்பிக்கச்சொன்னோம்.. முதல் சூன்யக்காரியாக நடித்தவனிடம் மெழுகுவத்தி இருந்தது, பின்னால் வந்த இருவர்க்கு வெளிச்சம் இல்லை, தடுக்கி விழுந்தார்கள்.

முதல் காட்சி முடிவதற்கும் மின்சாரம் வந்துவிட்டது, ஆனால் மெழுகுவத்திகளை யாரும் அணைக்கவில்லை! முழு இருளிலிருந்து ஒளிவரும் அழகான அமைப்பு வீணானது. மூன்றாவது காட்சிக்குள் எல்லாரும் சரியாகிவிட்டோம். பார்த்தவர்கள் பாராட்டினார்கள், ஆனால் எங்களூக்குத்தான் தெரியும் நாடகம் நினைத்த அளவிற்கும் உழைத்த அளவிற்கும் வரவில்லை என்பது.

இதில் மாக்பெத்தாக வைத்யநாதன், லேடி மாக்பெத்தாக வைதேகி, டன்கனாக ஷங்கர்நாராயணன், பாங்கோவாக மீனாட்சிசுந்தரம் நடித்தார்கள். யாருக்கும் எந்தச் சிக்கலும் வரவில்லை.
நாடகம் போடும் குழு வீணாகப்போய்விடும் என்பார்கள், அடுத்த நாடகம் எங்களின் மிகச்சிறந்த படைப்பான காஃப்காவின் விசாரணை!

பயப்படும் வரைதான் மூடநம்பிக்கைகள் பயமுறுத்தும். ஆனால், பயப்படக்கூடாது என்று மிகையான எச்சரிக்கையோடு இருந்ததால் தான் தடுமாற்றங்கள் வருகின்றன. ஒப்பனைக்கெல்லாம் ஒத்திகைப்பார்த்து புகைப்படம் எடுத்து எப்படியாவது இதை வெற்றிகரமாக ஆக்கவேண்டும் என்ற வெறியில் பாதியளவிற்கு நாடகத்திற்கான அடிப்படையான தீவிர ஒத்திகையில் ஈடுபட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இதில் நான் கற்ற பாடம், மூட நம்பிக்கைகள் இல்லை என்றால் அப்படியே அடுத்த காரியங்களில் ஈடுபடவேண்டியது அவசியம். மூட நம்பிக்கையை முறியடிக்கிறேன் என்பது மட்டுமே மனத்தின் முதல் எண்ணமாக அமைந்துவிட்டால், கவனம் அதில் மட்டுமே இருக்கும், இயல்பாகச் சில பிழைகள் நேரும். அப்படி நேரும் பிழைகள் நம்மைச் சுற்றியுள்ளவர்களை நெருடும்...அந்த நெருடல் நம் நிம்மதியையும் அசைத்துப்பார்க்கும்.
மாக்பெத்தின் மனவியல் கோணங்கள் பற்றி இன்னொரு பதிவில்..



லேடிமாக்பெத்தாக வைதேகி







வைத்யநாதன் மாக்பெத் ஒப்பனை












ஷங்கர், டன்கன் ஒப்பனை










தொடர்ந்து எங்கள் நாடகப்பெருமை பேசுவதாயில்லை, மனவியல் கோணத்தில் ஷேக்ஸ்பியரின் நுணுக்கமான சித்தரிப்புகளைப் பற்றி எழுத்தத்தான் ஆரம்பித்தேன், அது கூடிய விரைவில்.

Thursday, December 3, 2009

ஞாபகமேடை நவில்தரும் நடிப்பு


ஔரங்கசீப் காட்சிகள், முதல் படத்தில் நானும் பாலாசிங்கும், இரண்டாவது படத்தில் கதாநாயகனும் ப்ரீதமும்

என் நாடக அனுபவங்களை எழுதுவது என்ன பதிவு எழுதலாம் என்று யோசிக்க மறுக்கும் சோம்பேறித்தனத்தினால் மட்டுமல்ல. எங்கள் குழு பல சார்புநிலையாளர்களால் புறக்கணிக்கப்பட்டது, அதனாலேயே பல நல்ல நடிகர்கள், நாடகத்தை நிஜமாக நேசித்தவர்களின் பெயர்கள் தமிழ் நாடக வரலாற்றில் பதிவாகாமல் போய்விட்டது.இப்படியாவது, அவர்கள் பெயர்களையும் பங்களிப்புகளையும் பதிவு செய்வதும் தான் என் நோக்கம்.

அபிதாவுக்குப்பின் பவித்ரா, உடனே இன்னொரு நாடகம் போடலாம் என்று என் நண்பர் (ஒரு சம்பிரதாயத்திற்காக சொல்லவில்லை, அவர் எனக்கு இடர் வந்த போதும் தடைவந்தபோதும் துணை நின்ற நண்பர்), வைத்யநாதன்அடுத்ததாய் சரித்திர நாடகம் போடலாமே என்று ஆசைப்பட்டார். அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுநர், மனத்துள் பொன்னியின்செல்வனை நாடகமாக்கவேண்டும் என்ற கனவோடு இருந்தவர்..(அரங்கங்கள் நிர்மாணிக்கும் ஆசையால்).

எதைப்போடலாம் என்று பேச்சு வந்தபோது, இந்திராபார்த்தசாரதியின் ஔரங்கசீப் நாடகம் போடலாமென்று முடிவு செய்தோம். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஸ்க்ரிப்ட் புத்தகமாகவே இருக்கிறது .இரண்டாவது, இலக்கியவாதியாக அறியப்பட்டவரின் பெயரை வைத்துக்கொண்டு நம் குழுவையும் பிரபலமாக ஆக்கிவிடலாமே என்ற கேவலமான எண்ணம். .ஞாநி வேறு அவன் முதல் நாடகமாக இந்திராபார்த்தசாரதியின் போர்வை போர்த்திய உடல்களை நாடகமாகப் போட்டுவிட்டதால், அறிவுஜீவிகள் கோபத்திற்கும் ஆளாகிவிடமாட்டோம் என்றொரு மூட நம்பிக்கை. அந்த காலத்தில் அறிவுஜீவிகள் என்ன என்பதை விடவும் எவர் என்பதில் தான் கவனம் செலுத்தினார்கள்.இதைப்புரிந்துகொள்ள பல வருடங்கள் ஆயின..

ஓல்ட்மாங்க்குகள், சார்மினார்கள், கோல்ட்ஃப்ளேக்குகள் பலவும் செலவானபின்பு திடீரென்று யார் ஔரங்கசீப்? என்ற கேள்வி எழுந்தது. எங்களின் எந்தமூஞ்சியும் ராஜகம்பீரத்துடன் இல்லை என்பது மட்டுமல்ல, எங்கள் நிறத்தை மாற்றவும் ஒப்பனைச்செலவு அதிகமாகும் என்றும் திடீரென்று புரிந்துகொண்டோம்!
நியாயமாக எங்கள் குழுவின் சிறந்த நடிகனான பாலாசிங்கிற்குத்தான் கதாநாயகன் வேடம் தரப்பட்டிருக்கவேண்டும்! ஆனால் எங்களுக்குள் இருந்த போலி சமதர்ம‍'ஜனநாயக மரபு, ஒரு நாடகத்தில் முதன்மைப் பாத்திரம் ஒருவன் ஏற்றுவிட்டால் அடுத்தநாடகத்தில் வேறு யாரவது தான் முதன்மைப்பாத்திரம் ஏற்பார்கள் என்று இருந்து தொலைத்து விட்டது! அபிதாவில் அர்விந்த், பவித்ராவில் பாலாசிங் ஔரங்கசீப்பில் யார்? போலி ஜனநாயகத்திலுள்ளதைப்போல் குழுவின் தலைவனாக நான் இருந்ததால் என்னையே ஏற்கச்சொன்னார்கள்..நான் எழுதிய வசனத்தையே ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்று தெரிந்து அதை மறுத்துவிட்டு, குழுவினர் கேட்டுக்கொண்டதற்காகவென்று  ஒப்புக்கு ஒப்புக்கொண்டதால் ஒத்திகைகளும் ஆரம்பமாகியபோது...

எங்கள் குழுவிற்கு கிடைத்த நன்றாக நடிக்கக்கூடிய ப்ரீதம் (இன்று அவரே தனியாக தமிழ் நாடகங்களைச் சிரமத்துடனும் சிறப்புடனும் நடத்தி, நடித்து வருகிறார்), "எங்க வீட்டுக்கு ஒரு பையன் வரான்..அவனைப்போடலாமா" என்று என்னிடம் கேட்க, சரியென்ற ஒரே பதிலை நானும் சொல்ல, அடுத்த‌ ஒத்திகைக்கு முன், என்னைத்தனியே அந்த நடிகன் சந்தித்தான்.உடனே எனக்குச் சம்மதம் என்றாலும் 'தான் ஃபில்ம் இன்ஸ்டியூட் 'என்று தன் பிரதாபங்களையும் அவன் கூறியதையெல்லாம் கேட்பதுபோல் நடித்து விட்டு சரி ஒத்திகைக்கு வா என்று சொன்னேன்.

அவன்தான் ஔரங்கசீப் ஆனான், நாடகம் தான் வேறானது! அவனிடம் ஒரு குறை, வசனங்களை மறந்துவிடுவான். அதற்காக அவனை விட்டுவிட்டால்? உடனே அன்றிரவே, நாடகத்தின் பல பகுதிகள் வெட்டியெடுக்கப்பட்டன.. முக்கியமாக அவன் பேசவேண்டியிருந்த பக்கங்கள் நீக்கப்பட்டன! இடையில் அவனுக்கு ஒரு தொலைகாட்சிக்கான படவாய்ப்பு கிடைத்து, பல ஒத்திகைகளுக்கு வரமுடியாமல் போனது.

ஏற்கனவே லாசராவிடம் எங்கள் குழு மாட்டிக்கொண்டிருந்த அனுபவத்தால் (அவர் திடீரென்று ஒத்திகை நடக்கும்போது, "ஆமா, அந்த எண்ணைக்குளீயல் எப்படிக்காட்டப்போறே" என்று இம்சைப்படுத்தியிருந்தார். அதை வசதியாக அப்போது நீக்கிவிட்டிருந்தேன்), இம்முறை ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க, இந்திரா பார்த்தசாரதியிடம் அனுமதியே கேட்கவில்லை.அப்படி மாட்டிக்கொண்டால், டைரக்டர் தான் தப்பு என்று வைத்யநாதனும், ப்ரொட்யூசர் தான் தப்பு என்று நானும் மாற்றிச் சொல்வதாகவும் முடிவு!

நாடகம் ஒருவழியாக முடித்தோம்..அன்று கதாநாயகன் ஒரு காட்சியில் இரண்டுபக்க வசனங்களை மறந்துவிட்டான்..எதிரில் நல்லவேளை பாலாசிங் இருந்ததால் அந்தக் காட்சி தப்பியது..உடனே எங்கள் குழு சோர்ந்து விட்டது.. அடுத்த இரண்டு ஆண்டுகள் சும்மா இருந்தோம். ஆனால் என்னசெய்யலாம் என்று எதுவும் செய்யாமல் பேசிக்கழித்தோம்

1987 ஒரு ப்ரச்சார நாடகமாக, 'இனி' என்றொரு நாடகம் எழுதினேன்..பாலாசிங் தான் கதாநாயகன்.ப்ரீதம், சாமி, மீனாட்சிசுந்தரம், ரமேஷ்,வைத்யநாதனுடன் நடித்தார்கள். தேவையிருந்ததால் தொழில்முறை நாடக நடிகையான ஷோபாவையும் சேர்த்துக் கொண்டோம்..இந்த நாடகத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை, அங்கீகாரம் எல்லாம்...திரு.பூர்ணம் விஸ்வநாதன் எனக்காக, (அபிதா பாதிப்பில்) அப்பா வேடத்தில் நடித்தார் என்பதுதான்.  அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம். ஒலிபெருக்கியில்லாமல் கமறிய குரலில் அரங்கு முழுவதும் கேட்குமாறு பேசுவது உட்பட. ..
எங்கள் குழுவினர் தான் ஒத்திகைக்கு தாமதமாக வருவார்கள், அவர் முன்னமேயே வந்து இந்த வசனத்தை இப்படிச்சொல்லலாமா என்றெல்லாம் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். இந்த நாடகத்தில் நானும் நடிப்பேன் என்று எங்கள் குழுவில் ஒருவன் அடம்பிடித்தான்..அவனுக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் அவனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அப்போதும் அவன் இம்சை தாங்காமல் ஒரு டாக்டர் வேடம் தந்தோம்..ஒத்திகையே தேவையில்லை, ஸ்க்ரிப்ட் ஒரு ஃபைலிலிருக்கும் அதைப்பார்த்து அவன் கேட்டால், பிற பாத்திரங்கள் பதில் சொல்வார்கள்.. .அவன் இன்று பிரபலமாகிவிட்ட நடிகர் நாசர்.
இதற்கப்புறம், நானும் பாலாசிங்கும் சில குறும்படங்கள், செய்திப்படங்கள் என்றெல்லாம் செய்துகொண்டிருந்தோம்...

அப்புறம் தான் ஈடிபஸ்! 1988 !!அதற்கு முன்னாலேயே மொகாலயர்களாக நடித்துவிட்ட திமிரில், எங்கள் மூஞ்சி கிரேக்க நாடகத்திற்கும் பொருந்தும் என்று அதில் இறங்கினோம். அந்த வெற்றியின் மமதையில் அடுத்து ஒரு 'சமூகப்ப்ரக்ஞையுள்ள'  நாடகம் என்று முடிவெடுத்தோம். அசோகமித்ரனின் காத்திருத்தல் எனும் சிறுகதையைத் தேர்ந்தெடுத்தோம். அவரிடம் அனுமதி கிடைக்கும் என்ற தைரியத்தில் கேட்டபோது தன் வழக்கமான நக்கலுடன், "அந்தக் கதையைத் தானே போடுவேள்?" என்றார்.ஔரங்கசீப்பிற்கு அவர் கணையாழியில் விமர்சனம் எழுதும்போது, இயக்குநர் பாதி நாடகத்தையும் நடிகர்கள் பாதி வசனங்களையும் முழுங்கிவிட்டது நன்றாக இருந்தது என்று எழுதியவர்!!


நாடகம் முடிந்தவுடன் என்னிடம்" ருத்ரன், இந்த நாடகத்துல central character, hero இல்லையே. அப்புறம் எதுக்கு அவ்வளோ கத்தினான்" என்று கேட்டார். அத்துடன் இனி தமிழ் இலக்கியகர்த்தாக்கள் வேண்டாம் என்று முடிவெடுத்தோம்.அதே வேகத்தில் அதே ஆண்டு 1988, ஷேக்ஸ்பியரின் மாக்பெத், காஃப்காவின் விசாரணை இரண்டையும் தமிழ் நாடகமாக்கினேன்..இவை பற்றி பின்னாள்....





வைத்தியநாதன்,  காத்திருத்தலில்


காத்திருத்தல், ஒளியமைப்பு ஒத்திகை



ஈடிபஸ் காட்சிகள்







மேலே இருப்பது ஈடிபஸ்நாடகத்தின் இறுதிக்காட்சி

அரங்கம் அதிர்ந்த காட்சி,  ரமேஷ் ஈடிபஸாகவே அன்று வாழ்ந்தான்...
அவன் இறந்து விட்டான்..அவனுக்கு இது இன்னொரு அஞ்சலி





நாடக ஓளி ஒலி அமைப்பு



பொதுவாக நாடகம் துவங்குமுன்------




                            







பவித்ராவில் பாலாசிங், தேவி   




காத்திருத்தலில் சாமிக்கு சில வார்த்தைகள்












எங்கள் ரமேஷ்