Showing posts with label மனநலம். Show all posts
Showing posts with label மனநலம். Show all posts

Tuesday, December 29, 2009

வேறு –ஒரு நாடகம் பற்றி



காஃப்கா எழுதிய எல்லாமும் என்னை உலுக்கும், அவனது நாட்குறிப்புகள் உட்பட.

 அவன் எழுதிய TRIAL எனும் முடியாத நாவல் என்னுள் கிளப்பிய அதிர்வுகள் தான் என் விசாரணை எனும் நாடகம்.

அதேபோல் என்னுள் அதிர்ந்த அவனது சிறுகதை தான் METAMORPHOSIS.
கதை இதுதான். 
அவன் ஒரு நடுத்தட்டு வர்க்கத்து, குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள். ஓய்வு பெற்று வெட்டியாய் வீட்டில் இருக்கும் அப்பா, காசநோயாலோ கவலையினாலோ இருமிக்கொண்டே இருக்கும் அம்மா, கனவுகள் நிகழக்காத்திருக்கும் ஒரு தங்கை.. இதுதான் அவன் குடும்பம், வாழ்க்கை. பணியிடத்தில் அவன் அடிமை, பணம் தருவதற்கென்றே வீட்டின் இயந்திரம். ஓர் இரவு வீட்டிற்கு வெகுநேரம் கழித்து வந்து அவன் தூங்கிப்போகிறான்.மறுநாள் விடிகிறது.

காலையில் வழக்கம்போல் அப்பா தினசரியில் மூழ்கிக்கிடக்க, தங்கை ரேடியோவில் மூழ்கிக்கிடக்க, அம்மா வழக்கம்போல் இருமலுடன் சமையலில் மூழ்கிக்கிடக்க அவன் தூக்கத்திலிருந்து இன்னும் எழவில்லை என்பதையே அந்தக்குடும்பம் அவன் வேலைக்குப்போகும் நேரம் வரும்போதுதான் தெரிந்துகொள்கிறது.


வீட்டுக்கு வருமானம் ஈட்டும் ஒரே ஆள் என்றாலும் அவனை சோம்பேறி என்று அவர்கள் திட்டிக்கொண்டிருக்கும்போது, அவனது அலுவலக மேலாளர் வருகிறார். அவனது தந்தையிடம் ‘ இப்போதெல்லாம் அவன் ஒழுங்காக வேலை செய்வதில்லை, இப்படியே இருந்தால் வேலை போய் விடும் என்று சொல்ல, எல்லாரும் அவனைத் திட்டிக்கொண்டே எழுப்ப முயல்கிறார்கள். கதவை ஒருவழியாகத் திறக்கும்போது, அவன் ஒரு மனிதனாக இல்லாமல் ஒரு பூச்சியாக மாறியிருக்கிறான்.

ஆரம்ப அதிர்ச்சி, அச்சம், அருவெறுப்பு மெதுவாகக் கறைந்தபின், அம்மா வழக்கம்போல் இருமிக்கொண்டிருக்க, அப்பா ஒரு பகுதிநேர வேலைக்குப் போகிறார், தங்கையும் ஒரு வேலை பார்த்துக்கொள்கிறாள்.
பூச்சி அந்த அறையில் கிடக்கிறது, வேளாவேளைக்கு உணவுமட்டும் பெற்றுக்கொண்டு. அன்போ அக்கறையோ இல்லாமல் ஒரு நியமமாகவே அந்தப்பூச்சி அந்த வீட்டில் கிடக்கிறது.

தங்கை ஒருநாள் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவனை வீட்டிற்கு அழைத்துவருகிறாள். அவர்களிடையே ஒரு வருங்காலத்தின் சாத்தியமும் தென்படுகிறது.
பூச்சி வெளியே வருகிறது. வந்தவன் ஓடிவிடுகிறான். எல்லாரும் அந்தப் பூச்சியை அடித்து அந்த அறைக்குள் தள்ளுகிறார்கள். இரவு. வெகு நேரமாக அந்தப்பூச்சியிடமிருந்து வழக்கமாக வரும் சத்தங்கள் கேட்காததால் கதவைதிறந்து பார்க்க, பூச்சி செத்துக்கிடக்கிறது. அதை எடுத்துக்கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, குப்பை லாரி வருவதை எதிர்பார்த்து அவர்கள் ஜன்னலில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

கதை இவ்வளவுதான். நாடகமாக நான் ஆக்கியதில்.
இதை காஃப்கா காச நோய்க்காக எழுதியதாய் ஒரு குறிப்பு எங்கோ படித்திருக்கிறேன். இதை ஒரு மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் கதையாக மாற்றி எங்கள் முத்ரா நாடகக்குழு போட்ட கடைசி நாடகத்தின் தலைப்பு “வேறு”.

யாரை நம்பி வாழ்வு இருப்பதாய் ஒரு குடும்பம் இருக்கிறதோ, அவன் செயலற்றுபோனால், அதே குடும்பம் தன் வாழ்வை வேறு விதமாக ஒட்டிக்கொள்ளப் பழகிவிடும். அவனிடம் அன்பும் இருக்காது, அனுதாபமும் இருக்காது. அக்கறையும் தங்கள் சௌகரியத்தின் எல்லைகளில் அத்துமீறாதவரை மட்டுமே இருக்கும்.

இதில் முக்கியமான படிமம், ஒருவன் நம் வழக்கமான இயல்பிலிருந்து நோயினால் மாறுபட்டு செயல்பட்டால், அவனது அறிவும் மனதும் நமக்கிருக்கும் உணர்ச்சிகளைப்போல் இருக்காது என்னும் ஒரு கணிப்புடனேயே அணுகுகிறோம். அவன் ஆசையுடன், பாசத்துடன், அன்புடன் நம்மை அணுகுவதையெல்லாம் புறம் தள்ளுகிறோம். இந்நிலை மாறினால்தான் அவர்களிடம் நாம் அன்பின் வெளிப்பாடு அக்கறையாக அமையும், இல்லையென்றால் அது சலிப்பு நிறைந்த ஒரு சகிப்புத்தன்மையாகவே இருந்துவிடும்.

மனநோய்க்கு ஒருகாலத்தில் மருத்துவம் சிக்கல்களைக் கட்டுப்படுத்தவே இருந்தது. இன்று, முறையாக உடனடியாக மருத்துவ உதவி கிடைத்தால், தீவிர மனநோயால் பாதிக்கப்படிருந்தாலும், மீண்டும் வேலைக்குப்போய் சமூகத்தில் சிக்கலின்றி செயல்படமுடியும் நிலை உள்ளது.

இப்படி ஒரு சிந்தனையைத் தூண்டவே இந்தக்கதை நாடகமாக அரங்கேற்றப்பட்டது. அதில் என்னிடம் பயிலவந்த மாணவியர் இருவர் நடித்து அந்தக்காலத்தில் பெண் நடிகர்கள் இல்லாத குறையை ஈடுசெய்தனர்.

இன்று இதைத்தட்டச்சு செய்யும்போது, இக்கதைக்குள் இன்னும் பல படிமங்கள் இருப்பது புரிகிறது. இதைப்பற்றி நாம் பகிர்ந்துகொள்ளலாமே!





இது தான் எங்கள் முத்ரா நாடகக்குழு அரங்கேற்றிய கடைசி நாடகம், 1994ல். 

அந்தக்கடைசி நாடகத்தின் கடைசியில் எடுக்கப்பட்ட படம் இது.

ஒரு விழிப்புணர்வு சிறுபடம்.

மனநல விழிப்புணர்வுக்காக நான் மேற்கொண்ட பல்வேறு பணிகளில் ஒன்று இந்த ஒரு நிமிடப்படம். ஒரு நிமிடம் ஓடும் இப்படத்திற்காக நான்குபேர் மட்டுமே உழைத்தோம். நடிக்க பாலாசிங், வைத்யநாதன், ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீதரன், மற்றும் நான். வேறொரு விளம்பரப்படம் எடுக்கும் நேரத்தில் அந்த சாதனங்களை இதற்குப் பயன் படுத்திக்கொண்டு, செலவு எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்டது.

எடுக்கப்பட்ட ஆண்டு 1987.
இரவு ஒருமணிக்குமேல் இருக்கும், பாலாவிடம் நாளைக்கு அந்த .....ஷூட் போகும்போதே ஒரு குட்டி படம் பண்ணலாமா என்று கேட்டு, அப்போது தோன்றியது தான் இது. காலை ஷூட் செய்யவிருந்த படத்திற்கான காமெராவுடன் நாங்கள் நால்வரும் சென்று அருகிருந்த கோவில், வீடு என்று ஒரு மணிநேரத்தில் முடித்துவிட்டு, அன்று செய்யவிருந்த வேலையை முடித்தோம். இதில் அந்த அவசரம் தெரியும். தொழில் நுணுக்கங்கள், திரைப்பட அழகியல் ஆகியவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் எடுத்தது இது.
இதில் சொல்ல விரும்பியது இதுதான்- அன்பும் அனுதாபமும் போதாது, அக்கறை தான் முக்கியம்.
மனநோயாளிகளை அருவெறுப்புடனும் பார்க்காதீர்கள், அன்புடனும் பார்க்காதீர்கள். உதவ அக்கறை தான் முக்கியம். உதவ அறிவியல்தான் உதவும். 

http://www.youtube.com/watch?v=gO4JqCV2EII  இங்கும் இது பதிவிடப்பட்டுள்ளது! 

Thursday, December 17, 2009

யோகம், தியானம், மருத்துவம் பற்றி


மனநல மருத்துவம் மட்டுமல்ல, மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் இன்னும் 'எல்லா' நோய்களுக்கும் தீர்வுகள் காணப்படவில்லை. இது உண்மை. இன்னும் தீர்வுகள் வரவில்லை என்றாலும் அதை நோக்கிய பயணமே அறிவியல்.

என் பதிவில் குறைகண்டு, கோபம் கொண்டு சிலர் பின்னூட்டம் இட்டதன் பின்னணி பற்றி எனக்கு அதிகம் கவலையில்லை. யோகத்யான முறைகளைக் கற்றுக்கொடுக்கும் அரைவேக்காடுகளைப் பற்றியும் அவர்களது வணிகக்குயுக்தியால் பலர் திசைகுழம்புவது குறித்துமே என் அக்கறை, கவலை. வணிகபுத்தி, குயுக்தி என்று சொன்னாலேயே சிலருக்குத் தங்களை நான் தாக்குவதாகத் தோன்றுவது அவர்களது குற்ற உணர்வாகவும் இருக்கலாம். இப்பதிவு அவர்களைப் பற்றியல்ல, யோக, த்யானம் ஆகியவை மனநோய்களுக்கு உதவுமா என்பதே என் கேள்வி, இல்லை என்பதே என் பதில். நோய் என்பதைப் புரிந்துகொண்டால் தான் என் இந்த தீர்மானம் விளங்கும்.


சோர்வு, சோகம்,கவலை, வருத்தம் என்று நாம் எல்லாரும் வாழ்வில் அனுபவித்திருக்கக்கூடிய உணர்ச்சி நிலைகளை DEPRESSION என்னும் நோயோடு ஒன்றாக நினைத்துக்கொண்டு சிலர் குழம்புவதால் தான் இந்தச் சிக்கல் உருவாகிறது. சில அறிகுறிகளோடு ஒரு பாதிப்பு தொடர்ந்து சிலகாலம் நீடித்தால், அதன் விளைவாக வாழ்வின் இயக்கம் சீர்கெட ஆரம்பித்தால், அப்போது அது ஒரு நோய்.
நோய்க்கு சிகிச்சை அவசியம். தானாகச் சரியாகிவிடும் என்றால் அது மிதமான பாதிப்புதான். மழையில் நனைந்தபின் வரக்கூடிய லேசான இருமலைப்போல். ஆனாலும், இருமல் மிதமானதா பின்னால் தாக்கக்கூடிய ஒரு பெருநோயின் அறிகுறியா என்பதை அறிய அறிவியல் சார்ந்த அணுகுமுறை மட்டுமே உதவும். அறிவியல் அடிப்படையில் இயங்குவதே 'நவீன' எனும் அடைமொழியோடு இன்று பரவலாகப் பயனபடும் மருத்துவமுறை.
இது மேல்நாடு சிகிச்சை முறை, எனக்கு நம் நாட்டுப் பாரம்பரியமிக்க மருத்துவ முறைகளில்தான் நம்பிக்கை என்று ஜீன்ஸ் அணிந்து இணையத்தில் கருத்துத் தெரிவிக்கும் நபர்களிடம் விவாதிக்க அல்ல இப்பதிவு. நோய்க்கு ஏன் நிரூபணமான மருந்துகள் அவசியம் என்பதை விளக்கவே இம்முயற்சி.
ஒரு சின்ன உதாரணம்: வலிப்பு நோய்க்கு மிகவும் சரியான முறையில் உதவக்கூடிய ஒரு மருந்து C. இதற்கு சில எதிர்விளைவுகள் உண்டு. கல்லீரலைத்தாக்கி எனும் பாதிப்பை உர்வாக்கலாம், ஒவ்வாமையால் தோலில் தடிமன்களும் அரிப்பும் வரலாம், ரத்த அணுக்கள் அளவு மாறுபடலாம்.இந்த மருந்தைத் தரலாமா? எனும் மருந்திற்குப் பதிலாக V எனும் மருந்து உண்டு. இதன் எதிர்விளைவுகள் C அளவுக்கு மோசமானதாக இல்லை.இப்போது, எல்லாருக்கும் Cயைவிட Vதான் உகந்தது என்று தோன்றும். பள்ளியிலோ கல்லூரியிலோ முக்கியமான பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கும் மாணவருக்கு வலிப்பு நோய் இருப்பதால், மருந்து தர வேண்டும்; V  உட்கொண்டால் நினவுத்திறனில் பாதிப்பு வரலாம், C அப்படிச் செய்யாது. இப்போது இரண்டில் எது தேர்வாகும்?
இங்கே தான் அறிவியல், அனுபவம், விளைவுகளைப்பற்றிய தெளிவு, சிக்கல்களுக்கு மாற்று என்று முழுமையான சிகிச்சை முறையாக மருத்துவத்தை முன்வைக்கிறேன். "யோகா & மெடிடேஷன் டீச் பண்ணும் மாஸ்டர்ஸ்" மீது இதற்குத்தான் விமர்சனங்களை வைக்கிறேன்.
"கோபம்,  அளவுக்குமீறி சட்டென்று வருகிறது, அடக்க முடியவில்லை" என்று ஒருவர் முறையிட்டால், என்ன ஆசனம், என்ன தியான முறை சொல்லித் தரப்படும்? இன்று பிரபலமாகவும் பெரிய தத்துவார்த்த ஞானிகளாகவும் நிழலெழுத்தாளர்கள் உதவியுடன் பாவனை செய்து திரியும் 'குருமார்கள்' கூட இதற்கு ஏதாவது ஒரு "மெடிடேஷன்" வைத்திருப்பார்கள். அவர்களை நேரில் (அருகில்) சென்று பார்த்துப் பேசி கற்றுக்கொள்ள அனுமதியில்லாத நடுத்தரவர்க்கத்தினரிலிருந்து தான் நிறைய "டீச்சர்ஸ், மாஸ்டர்ஸ்" கிளம்புகிறார்கள். "கோபம்.." என்று முறையிடும் நபரிடம் ஏதாவது கேட்கப்படுமேயானால் அது "இந்த வர்க்ஷாப்புக்கு இவ்வளவு ஃபீஸ், இருக்கிறதா?" என்பது தான் பல இடங்களில்!
முறையான தீர்வு வேண்டுமானால், கேட்கப்பட வேண்டிய கேள்விகளில் ஒரு சில: 1.அந்த நபர் பிறந்தது இயல்பானமுறையிலா இல்லை Forceps பயன்படுத்தியா? 2.கண்களில் எப்போதாவது மின்னலடிப்பது போல் தோன்றுகிறதா? 3.உறக்கத்தில் பற்களை நறநற என்று கடிக்கும் பழக்கம் உள்ளதா?..  இது போல் இன்னும் பலகேள்விகளுக்குப்பின் தான் அவருக்கு மூளையில் ஏதாவது சிறிய பாதிப்பு உள்ளதா என்று புரியும். அப்படி இருந்தால், மருந்துகள் மட்டுமே உதவும். இந்த அடிப்படை அணுகுமுறை இல்லாமல் "வா, உடம்பை வளை, மூச்சை இத்தனை முறை இழுத்து விடு" என்றெல்லாம் ஆரம்பித்தால் எப்படி சரியாகும்? இதனால் தான் நோய்களுக்கு யோகத்யான முறைகள் உதவாது என்று கூறுகிறேன்.
யோகப்பயிற்சிகளும் தியான முறைகளும் உதவுமா? நிச்சயமாக உதவும், ஆனால் நோய்களுக்கு மருந்தாக அல்ல, உடலிலும் மனத்திலும் ஒரு நிதானம் வருவதற்காக. ஒரு தேர்சிபெற்ற GYM மாஸ்டர், அரைவேக்காட்டு யோகா மாஸ்டரை விட உதவுவார் என்று இதனால்தன் நான் நம்புகிறேன். மெடிடேஷன் என்று ஸ்டைலாகிவிட்ட த்யானம் ஒரு மிகப்பெரிய சாதனம். அதைப்பயன் படுத்தவே ஒரு பக்குவம் வேண்டும்.'டென்ஷன்' குறைய என்று பலர் 'மெடிடேஷன்' செய்வதாகச் சொல்வது ஏமாற்று. அவர்களின் அந்த டென்ஷன் இல்லாதபோது தான் த்யானப்பயிற்சியின் ஆரம்பமே சாத்தியம்.
மனநல மருத்துவத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு உள்ளதா என்றால் இல்லைதான். மூளைவளர்ச்சியில் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு ஒன்றுமே செய்ய முடிவதில்லை, ஆளுமையின் சில கூறுகளில் கோளாறு உள்ளவர்களைச் சரிசெய்ய எந்த மருந்துமே கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக மனநல மருத்துவம் என்றால் பேசிபேசியே சரிசெய்வார்கள் என்ற தவறான கருத்து நிலவுவதால்தான் மனவியல் நிபுணர்கள் பேசுவதை விட ஒரு சாமியாரோ அவரது சிஷ்யன் என்று சொல்லிக்கொள்பவரோ பேசுவதைக் கேட்கலாமே என்று பலர் உளறிவருகிறார்கள்.

இன்னும் கேள்விகள் வரும், அப்போது விளக்க முடியுமா என்று பார்க்கிறேன். ஒருவர் குற்றம் சாட்டியதைப்போல் என்னிடம் 'ரெடிமேட்' பதில்கள் கிடையாது,ஆனால் என்னிடம் பதில்கள் 'ரெடி'யாக உள்ளன. என்பதில்களில் ஒன்று "தெரியாது" என்பதாகவும் இருக்கும் என்பதால்.

Wednesday, December 9, 2009

சாரதாமேனன் சொற்படி


நேற்று மாலை டாக்டர்.சாரதாமேனனைச் சந்தித்தேன். ஏதாவது எழுது, எங்கேயாவது எழுது என்றார், இங்கே எழுதுகிறேன்.
சென்னை அரசு மனநலக்காப்பகத்தின் நிலைமை பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார்.
கேட்ககேட்க எனக்கு இரு விஷயங்கள் வியப்பையும் வருத்தத்தையும் தந்தன.
வருத்தம் முதலில்:அங்கிருக்கும் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளனவாம். உள் நோ யாளிகள் நிலைமை சரியில்லையாம். செவிலியர்களும், சேவகர்களும் தங்கள் பணிகளைச்சரியாகச் செய்ய முடியவில்லையாம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சமூகப்பணியாளர்கள் பலரது பணியிடங்கள் நிரப்பப்படாமல், ஆள்பற்றாக்குறை உள்ளதாம். இதையெல்லாம் கவனிக்கவேண்டிய இயக்குநருக்கு, காப்பகத்தின்மீது 'சிலர்' தொடுத்துள்ள வழக்குகளைச் சந்திக்க நீதிமன்றத்துக்கு அலைவதில் பெரும் நேரம் செலவாகிறதாம்.நோயுற்றவர்களில் சிலர், குணமடைந்திருந்தாலும் அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடியவில்லையாம். (இன்றும் சிலர் நோயாளியை அனுமதிக்கும் போது பொய்யான முகவரி தந்துவிட்டு காணாமல் போய்விடுவதால் இந்த அவல நிலை). இன்னும் பலப்பல விஷயங்களை அவர் புலம்பிக்கொண்டிருக்கும் போதுதான் இன்னொரு வருத்தம் வந்தது.

80+வயதில் அவருக்கு இருக்கும் ஆதங்கம் எனக்கு ஏன் இல்லை? எனக்குத்தெரிந்த வரையில் இந்நிலை மோசமாக இருந்தாலும், இது ஒன்றும் திடீரென்று ஏற்பட்ட ஒரு சரிவு அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவித மெத்தனமும் அக்கறையின்மையும் அங்கே வெகுவருடங்களாக ஊடுருவி வளர்ந்து வந்திருந்தன..

அப்படியென்ன வழக்கு, நோயாளிகளையும் நிர்வாகத்தையும் முழுமையாக இயக்குநருக்கு கவனிக்கமுடியாமல்? இது ஒரு விநோதமான நிலைமை. வழக்கு தொடுத்தவர்கள் அதே மருத்துவமனையின் பல வசதிகளை பல ஆண்டுகளாகப்பயன்படுத்திவந்தவர்கள் தான். அவர்கள் தங்கள் நோயாளிகளை இதே மருத்துவமனையில் அனுமதித்த காலத்திலும் இந்த நிலைமை தான் இருந்தது.அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், 'அவர்கள்' இந்த மருத்துவமனையின் சேவைகளைப்பயன்படுத்தி, தங்கள் சொந்த நிறுவனத்திற்குப் புகழும் பணமும் சேர்த்துக்கொள்வதை மருத்துவ நிர்வாகம் எதிர்த்தது! அரசின் நிர்வாகம் 'அவர்களுக்கு' ஆரம்பத்தில் துணைநின்றது!
போடப்பட்டது பொதுநலவழக்காம்! பாவம் மனநோயாளிகளை இந்த மருத்துவமனை சரியாகக் கவனிக்கவில்லையே என்ற தார்மீகக்கோபமாம்!! இதே 'அவர்கள்', தங்களுக்கு நாளும் கூடும் அரசியல், வர்த்தக, செல்வந்தர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரே ஒரு கட்டிடத்திற்குக்கூட ஒரே ஒரு குழாய் ரிப்பேர் கூட‌ச் செய்ததில்லை! பிறகு என்ன பொதுநல அக்கறை? 'அவர்களின்' தலையீட்டில் மட்டுமல்ல தம்பட்டத்திலும் மருத்துவமனையின் மனம் சுணங்கியது, அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியேறியவர்கள் தாங்கள் செய்து வருவதாகப் பீற்றிக் கொள்ளும் சேவை செய்ய முடியவில்லை! அதற்கு ஒரு மருத்துவமனை அவசியம். அப்படியொரு மருத்துவமனை கட்டுவது அவர்கள் வைத்துள்ளதிலோ அல்லது வேண்டுகோள் விடுத்து சேர்க்கக்கூடிய பணத்திலோ பெரிய விஷயமுமல்ல! அப்படிச் செய்தால் கடைத்தேங்காய்+வழிப்பிள்ளையார் என்னும் அவர்களின் வர்த்தகக் கணக்குக்கு ஒத்துவராது!! (இதில் ஒரு சொந்தப்புலம்பலும் அவசியமாகிறது: 'அவர்கள்' சேவை செய்து பெயர் வாங்க, நானும் வங்க்கிகடன் கட்டமுடியாமல் நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருந்த மருத்துவமனையில் 'அவர்கள்' கூட்டி வருபவர்களை இலவசமாகப் பார்த்துக்கொண்டிருருந்தேன். இதைவிடக் கொடுமை, அவர்கள் ஆரம்பிக்கும்போது, மிகுந்த நம்பிக்கையோடு அவர்களின் நிறுவனத்திற்கான இலச்சினையையும் நான்தான் வரைந்து கொடுத்தேன்!).
'அவர்கள்' சரியில்லை என்பது ரொம்பகாலத்திற்கு முன்பே எனக்குத்தெரியும், அதற்குக் கொஞ்ச காலத்திற்குமுன் 'இவர்களும்' ச‌ரியாக இல்லை என்பதும் எனக்குத்தெரியும். பிறகென்ன எனக்கு திடிரென்று பொத்தி வைத்த பொறுமல் வெடிக்கவேண்டும்? எல்லாம் என்னெதிரில் பேசிக்கொண்டிருந்த அந்த அம்மையாரினால்தான். அவர், டாக்டர்.சாரதா மேனன்.

அவர், தமிழ்நாட்டின் முதல் பெண் மனநலமருத்துவர் (இந்தியாவில் இரண்டாவது)! இந்த சென்னை மனநல மருத்துவமனையின் இயக்குநராக, தலைவியாக 17 ஆண்டுகள் பதவி வகித்தவர். அவரது காலத்தில் தான் மனநல மருத்துவ முதுகலை படிப்பு உருவானது, அவரது முயற்சியால்! அவரது காலத்தில் அப்போதிருந்த மருந்துகளின் உதவியுடன் பலர் பயனடைந்தார்கள். (இன்றைய மருந்துகள் இன்னும் துல்லியமாகவும் விரைவாகவும் நோய்க்குறியீடுகளைச் சரிசெய்கின்றன). ஓய்வு பெற்றபின், தன் சொந்த முயற்சியால் மனச்சிதைவு ஆய்வு மையத்தை அவர் நிறுவினார். அது ஆரம்பித்த ஒரு வருடத்தில் அங்கே அவர்கீழ் நான் பணிக்குச்சேர்ந்தேன்.
நிறுவன நடவடிக்கைகள் ஒத்துவராதால் மூன்றாண்டுகளில் விலகினாலும் இன்றும் அவர் அழைத்தால், தொலைபேசியில் கூட எழுந்து நின்று பேசுவேன்..நேரில் அவரிடம் வாதமும் சண்டையும் போட்டாலும்!(அவரே தான் நிறுவிய அமைப்பிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவிட்டார்)

" நீ தான் தழிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவாயே, இதைப்பற்றியெல்லாம் எழுது" என்றார். சரியென்று நான் சொன்னபோது, " மனநோய் பற்றி எழுது, மனநோயாளிகளை அவர்களது குடும்பமும் சமூகமும் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எழுது" என்றார். சரி என்றேன்."எழுதும்போது யாரையும் திட்டாதே, கோபமாய் எழுதாதே, தனிப்பட்டவர்களின் குறைகளைவிட சமுதாயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது தான் முக்கியம்" என்றார்.  சரியென்றேன்.  
அவர் சொன்னபடி தான் எழுத முயன்றேன்.