Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts

Sunday, December 19, 2010

சுளுக்கெடுத்தல் சுகம்!


நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என்  கழுத்தைச் சுளுக்க,
திரும்பிப்பார்க்கிறேன், இன்னும் நேராகவும் திமிராகவும் மீதி பாதை பயணிக்க.
என் முன் வருபவர்க்கும் நிற்பவர்க்கும் என் விழியின் மேல்நோக்கிய கூர்மை வியப்பையும் ரசிப்பையும் உருவாக்கக்கூடும் என்றாலும், அது பின்னாலிருக்கும் வாசனையிலிருந்து வேகமாய் வெளியேறி வான்புகும் ஆசைதான்.
Small Memories by Jose Saramago படித்ததால் வந்த பதிவு இது!

கோடம்பாகம் நெடுஞ்சாலை..இப்போது அதுதான் எம்.ஜி.ஆர் சாலை என்று நினக்கிறேன். நாற்பத்தைந்து காலம் அதே சாலையில் அடையாளம் காணப்பட்டவன் நான். பிறந்தது முதல், வேறு விலாசம் மாறும் வரை. 

நான் பிறந்ததென்னவோ எழும்பூரில் என்றாலும் வாழ்ந்த்தும் வளர்ந்ததும் இதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில்தான்! எழும்பூர் ஒன்றும் மூதாதையர் வாழிடம் இல்லை- அங்கேதான் அரசு மகப்பேறு மருத்துவமனை- என் மயக்கநிலையில் நான் சொல்லத்துணியும் என் அவதாரஸ்தலம். 
தொட்டிலிடப்பட்ட்தும், கொஞ்சி வளர்க்கப்பட்டதும், கல்விச்சாலை சென்றதும், படித்ததும், திரிந்ததும், திமிருடன் இருந்ததும், உழைத்ததும்.. உயர்ந்ததும் இதே சாலையில்தான்.

அதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில் வெவ்வேறு இலக்கங்கள் என் விலாசமாயின. 1/10, 2/6, 163...பிறகு 43, கடைசியில் 73!

இன்று நின்று யோசித்தால் அந்த நெடுஞ்சாலை அன்று மிகமிக வேறாய் இருந்தது தெரிகிறது. இன்றைய வார்த்தைகள் அன்றைய ஞாபகங்களை மீட்க முயலும் போது..சில மிகையாகும், சில பிறழ்வாகும், சில பிழையாகவும் மாறும். வயதுகள் மட்டுமல்ல, வார்த்தைகள் வளர்ந்ததும் அந்த இடத்தில்தான்.

முதல் ஐந்து வருடங்கள் ரொம்பவும் மங்கலாகவே இருக்கின்றன. என் அப்பாவின் நண்பரின் மோட்டார்பைக்கில் வரும் பெட்ரோல் நெடி, வீட்டைக் கடந்து செக்யுலராகப் போகும் குட்டித்தேர் மாதா ஊர்வலம், ஹஸெந்ஹுஸென் என்று ஏதோ சொல்லிக்கொண்டு கை போல ஒரு விஷயத்தை ஊர்வலம் கொண்டு போகும் (எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட) அல்லாசாமியின் ஊர்வலம், அப்புறம் அந்த இடத்தில் இருந்த தெருவீதி (திருவீதியாகவும் இருக்கலாம்) அம்மன் விழாவின் கரகம், அலங்கார ஊர்வலம், அப்புறம் தாத்தா எனும் மறையும் பழுப்பாய் ஓர் உருவம், மூன்று சாவுகள், ஒருமுறை எதற்கென்று தெரியாமல் எங்கள் வீட்டில் நடந்த குருபூஜை 
(இந்த குரு பற்றி யாரும் எதுவும் அதன் பிறகு என்னிடம் சொன்னதில்லை, பதினெட்டு வயதில் பழைய காகிதங்களை மேயும்போதுதான் தெரியும் அவர் பெயர் சாங்குசித்தசிவலிங்க நாயனார்இவரைப்பற்றி, கல்கி/ஜக்கி/ரவிஷங்கர் மாதிரி இல்லையென்றால் அன்புடன் எனக்குத் தகவல் சொல்லுங்கள்), வீட்டின் பின்னிருந்த கொய்யா, வேப்பமரங்கள், ஞாயிற்றுக்கிழமைகளுக்கே உரித்தான ஒரு அசைவ-நறுமணம்....
இன்னும் நிறைய, சின்னச்சின்ன ஞாபக மினுமினுப்புகள்...

இதையெல்லாம் இப்போது மீள்பரீசீலித்தாலும் பதிவிட முயன்றாலும் முன்னம் அப்படியே வந்து விடாது. இது ப்ளுமேட்/ பேக்ப்ரொஜெக்‌ஷன் சமாச்சாராம் இல்லை...... திரும்பவும் ரசிக்கவோ, ஐயையோ விட்டுட்டோமா என்று பதைத்தும், உண்மையில் என்னதான் நடந்த்து எனும் ஆர்வமோ முயலும் rewind தான்.

நான் போகிறேன் மேலே மேலே, பூலோகமே காலின்கீழே எனும் கனவில் மூழ்காதவரை இப்படியான பழங்கதை பேசுதல் உத்வேகமும் தரலாம்.

Friday, November 5, 2010

சௌகரியமான பொய்கள்.

1998 நான் எழுதிய நூலின் முதல் வரி-"உறவுகள் சௌகரியமான பொய்கள்".
        
உறவுகளைப்பற்றிய சந்தேகங்கள் எல்லாருக்கும் இருந்தாலும் யாரும் அவற்றை ஆய முற்படுவதில்லை- அச்சத்தினால். “உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது- கண்ணதாசன்”. 
நாம் இருப்பதைத் தக்க வைத்துக்கொண்டே அடுத்ததைத் தேடுவதற்கு முயல்வோம். இது மூதாதைக்கு முன்னவரான குரங்கிலிருந்து கற்று வந்த பாடம். ஒரு கிளையை கெட்டியாகப் பற்றிய பின்னரே அடுத்த கிளையை பிடிக்க முயல வேண்டும், அந்தரத்தில் ஆடுவது ஆபத்து- இவை குரங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் உள்ளிருக்கும் சிந்தனை. இது ஒரு பாதுகாப்பான சிந்தனை தான். 

உற்றுப்பார்த்தால் பாதுகாப்பு என நினைப்பதை, உரித்துப்பார்த்தால் எல்லாமே சுயநலன் பேணி மட்டுமே என்று தெரியவரும். சுயநலம்தான் சுகம். சுயநலம் பேணுவதே பாதுகாப்பு. ஆனாலும் ஏன் சுயநலனை சுயநலத்துடன் செயல்படுபவர்கள் கூட அங்கீகரிப்பதில்லை? சுயநலம் என்பதே ஒரு கெட்ட வார்த்தை என்று நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டு விட்டதால். சுயநலமில்லாத உறவுகள் உண்டா?

பொதுநலனுக்காகப் பாடுபடும்போதும், உள்ளே அந்தச் சுயத்திற்கு ஒரு நிறைவும் நிம்மதியும் சிலநேரங்களில் திமிரும் வருகிறதே, அது இல்லாமல் எந்தச் செயலும் சாத்தியமில்லை. மூச்சு விடுவது கூட ஒரு சுயநலம் தான். முரண்பட்டு நிற்பதும் சுயநலம்தான். சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும்போது, உறவுகளில் சுயநலம் சரியா?

சில உறவுகள் அமைகின்றன, பல உறவுகளை நாம் அமைத்துக்கொள்கிறோம். அன்புக்காக, அலுவலுக்காக, ஆசைக்காக என்று நாம் உருவாக்கிக்கொள்ளும் அத்தனையும் நம் அவசியத்திற்காக. அன்பும் அலுவலும் ஆசைகளின் நிறைவேறுதலும் வாழ்வின் அவசியங்கள்.

என் வாழ்வில் வந்து போன உறவுகள் ஏராளம். வந்ததை நான் வரவேற்றதும் விரட்டியதும் என் சௌகரியத்திற்காகவே. பிடித்தவை அந்த நேரத்து சௌகரியம், பிடிக்காதவையும் அந்த நேரத்து அசௌகரியம்தான். சௌகரியத்திற்கான உறவுகள் பொய்யாக அமையும் போது தான் ஆத்திரம், அழுகை, அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பு. அனுமதித்ததை விரட்டலாம், அமைத்துக்கொண்டதிலிருந்து விலகிவிடலாம், ஆனால் அமைந்தவற்றை என்ன செய்வது? பிறப்புடன் பிணைந்தவற்றை என்ன செய்யலாம்?

அவசியமற்ற அனைத்துமே அகற்றப்பட வேண்டியவைதான். சில நேரங்களில் காலில் இருக்கும் கட்டியை அகற்றுவது அவசியம், சில நேரங்களில் காலையே வெட்டி எடுப்பதும் அவசியம். உயிர் அவசியம் என்றால் உறுப்புகள் அவ்வளவு முக்கியமாகாது. முழுதின் சிலதை அழித்துவிட்டால் முழுது முழுதாகவே இருக்காது என்ற பயத்தினால்தான் நாம் சகிப்புத்தன்மையை ஒரு பெரிய உயரிய பின்பாகப் போற்றுகிறோம். சகிப்புத்தன்மை என்பது ஒரு வித பயம்தான். சகித்துக்கொள்ளாவிட்டால் இழப்பு நமக்கும்தானே எனும் பயம். எதை எவ்வளவு சகித்துக்கொள்வது என்பதே உறவுகளின் சௌகரியமான பொய்மை.

சகித்துக்கொள்வது சம்மதமாகாது, அனுமதித்தல் அங்கீகாரம் ஆகாது. ஆனாலும் இவற்றையே நாம் அனிச்சையாகச் செய்கிறோம்- நமக்குச் சௌகரியமான விதங்களில் காரணம் சொல்லிக்கொண்டு.

காதலிலும் இது உண்டு. அவளது நலனுக்காக அவளை நான் காதலிக்கிறேன் என்று எவனும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் பின் அலைகிறேன் என்பதே அவனவன் சொல்லக்கூடிய நிஜம். மும்தாஜ் செத்தவுடன் சாகாமல் ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டியதும் இப்படித்தான். சௌகரியமானவையே உறவுகளின் பிம்பங்கள்.

தியாகம் என்பது ஒரு வித ஏமாற்றுதான். தியாகம் செய்வதே அந்த காரியத்திற்கான பெருமைக்குத்தான். பெருமை வெளியே கிடைக்கும் கைதட்டலும் கழுத்துமாலையும் மட்டுமல்ல- அது உள்ளே ஏற்படுத்தும் சுகத்திமிர்.

உறவுகளைப் பற்றி இப்போது சுயநலத்தோடுதான் சிந்திக்கிறேன். வெட்ட வேண்டியவை இன்னும் ஏன் விடுபட்டிருக்கின்றன என்று சிந்திப்பதால் எழுதுகிறேன். விட்டுவைத்ததும் என் சௌகரியத்திற்காகவோ என்று வருத்தப்படுகிறேன். 
அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடியாது என்று தெரிகிறது. சில உறவுகளில் குறைந்தபட்சமாய் நன்றியை மனம் எதிர்பார்க்கின்றது. நன்றியும் ஒரு மரியாதையின் வெளிப்பாடுதானே.

என்னுடனாவது என் உறவு முழுமையான உண்மையோடு இருக்கிறதா என்பதே வாழ்வு நேர்மையாக இருக்கிறதா என்பதற்கான பதில். பயனுள்ளதா என்பதை விடவும் சுயநெறிக்கு ஏற்றதா என்பதே உறவின் சீர்மை, உள்ளத்தின் நேர்மை.  
எனக்கு நான் நன்றியுடையவனாயிருப்பதே சாத்தியம். இது சுயநெறியா சௌகரியமா என்பது வழக்கம் போல பார்க்கப்படக்கூடாத நிஜம்.

சுயநெறி என்பதே சௌகரிய அலைச்சல் என்பதற்கு வேறு பெயர் உண்டு.

பிற பின்.
இன்னும் சொல்ல வேண்டியவை ஏராளம்.