Friday, November 5, 2010

சௌகரியமான பொய்கள்.

1998 நான் எழுதிய நூலின் முதல் வரி-"உறவுகள் சௌகரியமான பொய்கள்".
        
உறவுகளைப்பற்றிய சந்தேகங்கள் எல்லாருக்கும் இருந்தாலும் யாரும் அவற்றை ஆய முற்படுவதில்லை- அச்சத்தினால். “உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது- கண்ணதாசன்”. 
நாம் இருப்பதைத் தக்க வைத்துக்கொண்டே அடுத்ததைத் தேடுவதற்கு முயல்வோம். இது மூதாதைக்கு முன்னவரான குரங்கிலிருந்து கற்று வந்த பாடம். ஒரு கிளையை கெட்டியாகப் பற்றிய பின்னரே அடுத்த கிளையை பிடிக்க முயல வேண்டும், அந்தரத்தில் ஆடுவது ஆபத்து- இவை குரங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் உள்ளிருக்கும் சிந்தனை. இது ஒரு பாதுகாப்பான சிந்தனை தான். 

உற்றுப்பார்த்தால் பாதுகாப்பு என நினைப்பதை, உரித்துப்பார்த்தால் எல்லாமே சுயநலன் பேணி மட்டுமே என்று தெரியவரும். சுயநலம்தான் சுகம். சுயநலம் பேணுவதே பாதுகாப்பு. ஆனாலும் ஏன் சுயநலனை சுயநலத்துடன் செயல்படுபவர்கள் கூட அங்கீகரிப்பதில்லை? சுயநலம் என்பதே ஒரு கெட்ட வார்த்தை என்று நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டு விட்டதால். சுயநலமில்லாத உறவுகள் உண்டா?

பொதுநலனுக்காகப் பாடுபடும்போதும், உள்ளே அந்தச் சுயத்திற்கு ஒரு நிறைவும் நிம்மதியும் சிலநேரங்களில் திமிரும் வருகிறதே, அது இல்லாமல் எந்தச் செயலும் சாத்தியமில்லை. மூச்சு விடுவது கூட ஒரு சுயநலம் தான். முரண்பட்டு நிற்பதும் சுயநலம்தான். சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும்போது, உறவுகளில் சுயநலம் சரியா?

சில உறவுகள் அமைகின்றன, பல உறவுகளை நாம் அமைத்துக்கொள்கிறோம். அன்புக்காக, அலுவலுக்காக, ஆசைக்காக என்று நாம் உருவாக்கிக்கொள்ளும் அத்தனையும் நம் அவசியத்திற்காக. அன்பும் அலுவலும் ஆசைகளின் நிறைவேறுதலும் வாழ்வின் அவசியங்கள்.

என் வாழ்வில் வந்து போன உறவுகள் ஏராளம். வந்ததை நான் வரவேற்றதும் விரட்டியதும் என் சௌகரியத்திற்காகவே. பிடித்தவை அந்த நேரத்து சௌகரியம், பிடிக்காதவையும் அந்த நேரத்து அசௌகரியம்தான். சௌகரியத்திற்கான உறவுகள் பொய்யாக அமையும் போது தான் ஆத்திரம், அழுகை, அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பு. அனுமதித்ததை விரட்டலாம், அமைத்துக்கொண்டதிலிருந்து விலகிவிடலாம், ஆனால் அமைந்தவற்றை என்ன செய்வது? பிறப்புடன் பிணைந்தவற்றை என்ன செய்யலாம்?

அவசியமற்ற அனைத்துமே அகற்றப்பட வேண்டியவைதான். சில நேரங்களில் காலில் இருக்கும் கட்டியை அகற்றுவது அவசியம், சில நேரங்களில் காலையே வெட்டி எடுப்பதும் அவசியம். உயிர் அவசியம் என்றால் உறுப்புகள் அவ்வளவு முக்கியமாகாது. முழுதின் சிலதை அழித்துவிட்டால் முழுது முழுதாகவே இருக்காது என்ற பயத்தினால்தான் நாம் சகிப்புத்தன்மையை ஒரு பெரிய உயரிய பின்பாகப் போற்றுகிறோம். சகிப்புத்தன்மை என்பது ஒரு வித பயம்தான். சகித்துக்கொள்ளாவிட்டால் இழப்பு நமக்கும்தானே எனும் பயம். எதை எவ்வளவு சகித்துக்கொள்வது என்பதே உறவுகளின் சௌகரியமான பொய்மை.

சகித்துக்கொள்வது சம்மதமாகாது, அனுமதித்தல் அங்கீகாரம் ஆகாது. ஆனாலும் இவற்றையே நாம் அனிச்சையாகச் செய்கிறோம்- நமக்குச் சௌகரியமான விதங்களில் காரணம் சொல்லிக்கொண்டு.

காதலிலும் இது உண்டு. அவளது நலனுக்காக அவளை நான் காதலிக்கிறேன் என்று எவனும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் பின் அலைகிறேன் என்பதே அவனவன் சொல்லக்கூடிய நிஜம். மும்தாஜ் செத்தவுடன் சாகாமல் ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டியதும் இப்படித்தான். சௌகரியமானவையே உறவுகளின் பிம்பங்கள்.

தியாகம் என்பது ஒரு வித ஏமாற்றுதான். தியாகம் செய்வதே அந்த காரியத்திற்கான பெருமைக்குத்தான். பெருமை வெளியே கிடைக்கும் கைதட்டலும் கழுத்துமாலையும் மட்டுமல்ல- அது உள்ளே ஏற்படுத்தும் சுகத்திமிர்.

உறவுகளைப் பற்றி இப்போது சுயநலத்தோடுதான் சிந்திக்கிறேன். வெட்ட வேண்டியவை இன்னும் ஏன் விடுபட்டிருக்கின்றன என்று சிந்திப்பதால் எழுதுகிறேன். விட்டுவைத்ததும் என் சௌகரியத்திற்காகவோ என்று வருத்தப்படுகிறேன். 
அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடியாது என்று தெரிகிறது. சில உறவுகளில் குறைந்தபட்சமாய் நன்றியை மனம் எதிர்பார்க்கின்றது. நன்றியும் ஒரு மரியாதையின் வெளிப்பாடுதானே.

என்னுடனாவது என் உறவு முழுமையான உண்மையோடு இருக்கிறதா என்பதே வாழ்வு நேர்மையாக இருக்கிறதா என்பதற்கான பதில். பயனுள்ளதா என்பதை விடவும் சுயநெறிக்கு ஏற்றதா என்பதே உறவின் சீர்மை, உள்ளத்தின் நேர்மை.  
எனக்கு நான் நன்றியுடையவனாயிருப்பதே சாத்தியம். இது சுயநெறியா சௌகரியமா என்பது வழக்கம் போல பார்க்கப்படக்கூடாத நிஜம்.

சுயநெறி என்பதே சௌகரிய அலைச்சல் என்பதற்கு வேறு பெயர் உண்டு.

பிற பின்.
இன்னும் சொல்ல வேண்டியவை ஏராளம்.

20 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

Unknown said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Unknown said...

இனய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Unknown said...

Happy Deepavali Sir.

Thekkikattan|தெகா said...

சிக்கலான ஒரு விசயத்திற்கு தெளிவான தீர்ப்பாய்வு!

சுயநலமாக இருக்கிறேன் ‘செளகர்யத்திற்காக’ என்று கூறினாலே அது ஒரு அட்மிட் பண்ணக் கூடாத விசயம் என்பதனைப் போல புரிந்து பயந்து வாழும் கூட்டத்திற்கிடையே ‘நடித்தே’ பொய்மையாக வாழ கற்றுக் கொடுக்கும் மனித சமூகம் தானே எங்கெங்கும்.

//என்னுடனாவது என் உறவு முழுமையான உண்மையோடு இருக்கிறதா என்பதே வாழ்வு நேர்மையாக இருக்கிறதா என்பதற்கான பதில்.//

அந்த உறவில் கூட எத்தனைப் பேருக்கு உண்மையாக, முழுமையாக தன்னை வெளிப்படுத்தி வாழும் சாத்தியம் கிடைத்து விடுகிறது? சமரசங்களைக் கொண்டு, தான் செய்யும் தவறுகள், அநீதிகள், சற்று முன் நான் பேசிய உண்மையை மறைத்து ஆளுக்குத் தகுந்த மாதிரி கூறும் பொய்மைகள் என வாழ்க்கை நகர்கிறதே... இதெல்லாம் எப்படி உட்முகமாக கவணம் செலுத்தி வாழும் ஒருவனுக்கு சாத்தியம் இதற்கும் இந்தக் கட்டுரையில் பதில் இருக்கிறது - ஆனால், அட்மிட் செய்திட்டு வாழ்வது ஹீரோத்தனம் :).

டாக், கட்டுரைக்கு நன்றி!

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

நல்ல பதிவு சார் .. மிக்கநன்றி ! தொடர்க உங்கள் பணி

Anonymous said...

nalla karuthukkal.... deepavali samayathula veetla santhosama irukura nerathula padikura blog-a ithu?...

anyway, nice thoughts - thanks :)

சுதர்ஷன் said...

ஒரு நல்ல குழப்பமான சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் . இன்னொருவனை சில இடங்களில் சுயநலவாதி என சொல்லும் போது எமது சுயனாலும் சில நேரங்களில் எட்டிப்பார்க்கும் .. சியா விடயங்கள் சுயநலத்திற்காக பாராட்டை எதிர்பார்த்து செய்யப்படுகிறது என்றாலும் நல்லது நடக்கிறது என்ற வகையில் சந்தோசப்படலாம் .. மனதில் ஆழத்திற்க்கே சென்று விட்டீர்கள் .. வாழ்த்துக்கள் ... தொடர்ந்து படித்து வருகிறேன் ... :)

மங்கை said...

//அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடியாது என்று தெரிகிறது.///

உண்மை டாக்டர்...

சில உறவுகள் புனிதமானவை... எங்கோ உலகத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு உணர்வால் உறவாகி முழுமையாக அற்பணித்து இருப்பது ஒரு சுகம்...

சௌகரியத்திற்காக எத்தனை காலம் நம்மையும் உலகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்.. ஒரு கட்டத்தில் சலிப்பும் வெறுமையும் மட்டுமே மிஞ்சும்... வாழ்வின் நெடுகில் மனதிற்கு நெறுக்கமான உறவுகள் தரும் கதகதப்பை அனுபவித்துக்கொண்டு அந்த உறவில் உண்மையாக முழுமையாக இருப்பதே வாழ்க்கை..

Unknown said...

சுயநலம் என்றாலே என்னவென்று புரியாமல் வாழும் சமூகம் இந்த மனித சமூகம்.சுயத்தின் நலனில் இருந்தே இந்த வாழ்க்கை தொடங்குகிறது.அதுதான் சொளகரியம் கூட.....

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ரொம்ப உரிச்சிருக்கிறீங்க! உண்மை!

உறவு தரும் சுகம் சுயத்துக்கு பிடிக்கிறதென்றால், அது தொடர வேண்டும் என்று சுயம் விரும்பினால், ரொம்பவும் உரித்துப் பார்க்காமல் இருப்பதே நலம்.. அந்த அச்சம் இருப்பதால் எதையும் மிகவும் உள்ளே சென்று பார்க்க விரும்புவதில்லை..

ஒருவர் தனது சுய சௌகரியத்துகாகச் செய்வது தான் என்றாலும், பிறருக்கும் நன்மை பயக்கும் என்றால் அந்தச் செயல்களைச் செய்பவர்களைப் பிடிக்கிறது..

கதிர்கா said...

/*அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடியாது*/

உண்மை..

கதிர்கா said...

/*அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடியாது*/

உண்மை

? said...

பெருமைக்காக செய்யப்படுபவைக்கு தியாகம் என்ற பெயரை செயல்பாடு பற்றிய புரிதல் இல்லாதவர்தான் வழங்க முடியும். தியாகம் நடைமுறைக்கானது. பின்னர் வரும் புகழ்மாலைக்காக தனது உயிரை இழக்கும் பகத் சிங்கின் ஏமாற்று வேலை பற்றி என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. ஒருவேளை அத்தகைய மனநிலையை அறிவுசான்ற பெரியோர்கள் மாத்திரம்தான் அறிய முடியுமோ என்னவோ

RMD said...

//சௌகரியத்திற்கான உறவுகள் பொய்யாக அமையும் போது தான் ஆத்திரம், அழுகை, அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பு. அனுமதித்ததை விரட்டலாம், அமைத்துக்கொண்டதிலிருந்து விலகிவிடலாம், ஆனால் அமைந்தவற்றை என்ன செய்வது? பிறப்புடன் பிணைந்தவற்றை என்ன செய்யலாம்?//
வணக்கம் அய்யா,
உண்மையான வார்த்தைகள்.உறவு ,நட்பு எல்லாமே ஒரு எல்லைக்குட்டு இருக்கும்போது மட்டுமே அன்பு,பாசம், தியாகம் ,அனுசரித்தல் எல்லாம் சாத்தியமாகும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொருவருக்கும் அந்த எல்லை அளவு வேறுபடலாம்அந்த எல்லை தாண்டும்போது சுயநலம் மட்டுமே மிஞ்சும.அய்யா சரிதானே?

"கருவெளி" said...

"மறுக்க முடியா உண்மை"

Unknown said...

//தியாகம் என்பது ஒரு வித ஏமாற்றுதான். தியாகம் செய்வதே அந்த காரியத்திற்கான பெருமைக்குத்தான். பெருமை வெளியே கிடைக்கும் கைதட்டலும் கழுத்துமாலையும் மட்டுமல்ல- அது உள்ளே ஏற்படுத்தும் சுகத்திமிர்.//

Nice! :)

வலையுகம் said...

அது என்ன பொய்யில
சவுகரியமான பொய்யி
சவுகரியம் இல்லாத பொய்யி
பொய்யிலையும் இவ்வளவு இருக்க

Unknown said...

//எனக்கு நான் நன்றியுடையவனாயிருப்பதே சாத்தியம்// உண்மைகள் சுடுகின்றன சார்.. ஆனால் ஒரு சந்தேகம் சார்.. நான் சுய நலவாதி இல்லையென்று நம்பிகொண்டிருக்கிறேன் உண்மைகளை உணர்ந்து நான் என்னை சுயநல வாதிதான் என நம்ப ஆரம்பித்து விளைவுகள் மோசமானதாக இருக்குமா? நல்லதாக இருக்குமா? பொது நல வாதியின் சுய நலத்தையும் சுயநல வாதியின் சுயநலத்தையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?

காமராஜ் said...

டாக்டர் வணக்கம். உங்களுக்கு
எனது வலைப்பக்கத்தின் மூலம் ஒரு அழைப்பு இருக்கிறது.

Post a Comment