Showing posts with label சுயவிமர்சனம். Show all posts
Showing posts with label சுயவிமர்சனம். Show all posts

Friday, November 5, 2010

சௌகரியமான பொய்கள்.

1998 நான் எழுதிய நூலின் முதல் வரி-"உறவுகள் சௌகரியமான பொய்கள்".
        
உறவுகளைப்பற்றிய சந்தேகங்கள் எல்லாருக்கும் இருந்தாலும் யாரும் அவற்றை ஆய முற்படுவதில்லை- அச்சத்தினால். “உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது- கண்ணதாசன்”. 
நாம் இருப்பதைத் தக்க வைத்துக்கொண்டே அடுத்ததைத் தேடுவதற்கு முயல்வோம். இது மூதாதைக்கு முன்னவரான குரங்கிலிருந்து கற்று வந்த பாடம். ஒரு கிளையை கெட்டியாகப் பற்றிய பின்னரே அடுத்த கிளையை பிடிக்க முயல வேண்டும், அந்தரத்தில் ஆடுவது ஆபத்து- இவை குரங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் உள்ளிருக்கும் சிந்தனை. இது ஒரு பாதுகாப்பான சிந்தனை தான். 

உற்றுப்பார்த்தால் பாதுகாப்பு என நினைப்பதை, உரித்துப்பார்த்தால் எல்லாமே சுயநலன் பேணி மட்டுமே என்று தெரியவரும். சுயநலம்தான் சுகம். சுயநலம் பேணுவதே பாதுகாப்பு. ஆனாலும் ஏன் சுயநலனை சுயநலத்துடன் செயல்படுபவர்கள் கூட அங்கீகரிப்பதில்லை? சுயநலம் என்பதே ஒரு கெட்ட வார்த்தை என்று நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டு விட்டதால். சுயநலமில்லாத உறவுகள் உண்டா?

பொதுநலனுக்காகப் பாடுபடும்போதும், உள்ளே அந்தச் சுயத்திற்கு ஒரு நிறைவும் நிம்மதியும் சிலநேரங்களில் திமிரும் வருகிறதே, அது இல்லாமல் எந்தச் செயலும் சாத்தியமில்லை. மூச்சு விடுவது கூட ஒரு சுயநலம் தான். முரண்பட்டு நிற்பதும் சுயநலம்தான். சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும்போது, உறவுகளில் சுயநலம் சரியா?

சில உறவுகள் அமைகின்றன, பல உறவுகளை நாம் அமைத்துக்கொள்கிறோம். அன்புக்காக, அலுவலுக்காக, ஆசைக்காக என்று நாம் உருவாக்கிக்கொள்ளும் அத்தனையும் நம் அவசியத்திற்காக. அன்பும் அலுவலும் ஆசைகளின் நிறைவேறுதலும் வாழ்வின் அவசியங்கள்.

என் வாழ்வில் வந்து போன உறவுகள் ஏராளம். வந்ததை நான் வரவேற்றதும் விரட்டியதும் என் சௌகரியத்திற்காகவே. பிடித்தவை அந்த நேரத்து சௌகரியம், பிடிக்காதவையும் அந்த நேரத்து அசௌகரியம்தான். சௌகரியத்திற்கான உறவுகள் பொய்யாக அமையும் போது தான் ஆத்திரம், அழுகை, அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பு. அனுமதித்ததை விரட்டலாம், அமைத்துக்கொண்டதிலிருந்து விலகிவிடலாம், ஆனால் அமைந்தவற்றை என்ன செய்வது? பிறப்புடன் பிணைந்தவற்றை என்ன செய்யலாம்?

அவசியமற்ற அனைத்துமே அகற்றப்பட வேண்டியவைதான். சில நேரங்களில் காலில் இருக்கும் கட்டியை அகற்றுவது அவசியம், சில நேரங்களில் காலையே வெட்டி எடுப்பதும் அவசியம். உயிர் அவசியம் என்றால் உறுப்புகள் அவ்வளவு முக்கியமாகாது. முழுதின் சிலதை அழித்துவிட்டால் முழுது முழுதாகவே இருக்காது என்ற பயத்தினால்தான் நாம் சகிப்புத்தன்மையை ஒரு பெரிய உயரிய பின்பாகப் போற்றுகிறோம். சகிப்புத்தன்மை என்பது ஒரு வித பயம்தான். சகித்துக்கொள்ளாவிட்டால் இழப்பு நமக்கும்தானே எனும் பயம். எதை எவ்வளவு சகித்துக்கொள்வது என்பதே உறவுகளின் சௌகரியமான பொய்மை.

சகித்துக்கொள்வது சம்மதமாகாது, அனுமதித்தல் அங்கீகாரம் ஆகாது. ஆனாலும் இவற்றையே நாம் அனிச்சையாகச் செய்கிறோம்- நமக்குச் சௌகரியமான விதங்களில் காரணம் சொல்லிக்கொண்டு.

காதலிலும் இது உண்டு. அவளது நலனுக்காக அவளை நான் காதலிக்கிறேன் என்று எவனும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் பின் அலைகிறேன் என்பதே அவனவன் சொல்லக்கூடிய நிஜம். மும்தாஜ் செத்தவுடன் சாகாமல் ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டியதும் இப்படித்தான். சௌகரியமானவையே உறவுகளின் பிம்பங்கள்.

தியாகம் என்பது ஒரு வித ஏமாற்றுதான். தியாகம் செய்வதே அந்த காரியத்திற்கான பெருமைக்குத்தான். பெருமை வெளியே கிடைக்கும் கைதட்டலும் கழுத்துமாலையும் மட்டுமல்ல- அது உள்ளே ஏற்படுத்தும் சுகத்திமிர்.

உறவுகளைப் பற்றி இப்போது சுயநலத்தோடுதான் சிந்திக்கிறேன். வெட்ட வேண்டியவை இன்னும் ஏன் விடுபட்டிருக்கின்றன என்று சிந்திப்பதால் எழுதுகிறேன். விட்டுவைத்ததும் என் சௌகரியத்திற்காகவோ என்று வருத்தப்படுகிறேன். 
அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடியாது என்று தெரிகிறது. சில உறவுகளில் குறைந்தபட்சமாய் நன்றியை மனம் எதிர்பார்க்கின்றது. நன்றியும் ஒரு மரியாதையின் வெளிப்பாடுதானே.

என்னுடனாவது என் உறவு முழுமையான உண்மையோடு இருக்கிறதா என்பதே வாழ்வு நேர்மையாக இருக்கிறதா என்பதற்கான பதில். பயனுள்ளதா என்பதை விடவும் சுயநெறிக்கு ஏற்றதா என்பதே உறவின் சீர்மை, உள்ளத்தின் நேர்மை.  
எனக்கு நான் நன்றியுடையவனாயிருப்பதே சாத்தியம். இது சுயநெறியா சௌகரியமா என்பது வழக்கம் போல பார்க்கப்படக்கூடாத நிஜம்.

சுயநெறி என்பதே சௌகரிய அலைச்சல் என்பதற்கு வேறு பெயர் உண்டு.

பிற பின்.
இன்னும் சொல்ல வேண்டியவை ஏராளம்.