நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என் கழுத்தைச் சுளுக்க,
திரும்பிப்பார்க்கிறேன், இன்னும் நேராகவும் திமிராகவும் மீதி பாதை பயணிக்க.
என் முன் வருபவர்க்கும் நிற்பவர்க்கும் என் விழியின் மேல்நோக்கிய கூர்மை வியப்பையும் ரசிப்பையும் உருவாக்கக்கூடும் என்றாலும், அது பின்னாலிருக்கும் வாசனையிலிருந்து வேகமாய் வெளியேறி வான்புகும் ஆசைதான்.
Small Memories by Jose Saramago படித்ததால் வந்த பதிவு இது!
கோடம்பாகம் நெடுஞ்சாலை..இப்போது அதுதான் எம்.ஜி.ஆர் சாலை என்று நினக்கிறேன். நாற்பத்தைந்து காலம் அதே சாலையில் அடையாளம் காணப்பட்டவன் நான். பிறந்தது முதல், வேறு விலாசம் மாறும் வரை.
நான் பிறந்ததென்னவோ எழும்பூரில் என்றாலும் வாழ்ந்த்தும் வளர்ந்ததும் இதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில்தான்! எழும்பூர் ஒன்றும் மூதாதையர் வாழிடம் இல்லை- அங்கேதான் அரசு மகப்பேறு மருத்துவமனை- என் மயக்கநிலையில் நான் சொல்லத்துணியும் என் அவதாரஸ்தலம்.
தொட்டிலிடப்பட்ட்தும், கொஞ்சி வளர்க்கப்பட்டதும், கல்விச்சாலை சென்றதும், படித்ததும், திரிந்ததும், திமிருடன் இருந்ததும், உழைத்ததும்.. உயர்ந்ததும் இதே சாலையில்தான்.
நான் பிறந்ததென்னவோ எழும்பூரில் என்றாலும் வாழ்ந்த்தும் வளர்ந்ததும் இதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில்தான்! எழும்பூர் ஒன்றும் மூதாதையர் வாழிடம் இல்லை- அங்கேதான் அரசு மகப்பேறு மருத்துவமனை- என் மயக்கநிலையில் நான் சொல்லத்துணியும் என் அவதாரஸ்தலம்.
தொட்டிலிடப்பட்ட்தும், கொஞ்சி வளர்க்கப்பட்டதும், கல்விச்சாலை சென்றதும், படித்ததும், திரிந்ததும், திமிருடன் இருந்ததும், உழைத்ததும்.. உயர்ந்ததும் இதே சாலையில்தான்.
அதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில் வெவ்வேறு இலக்கங்கள் என் விலாசமாயின. 1/10, 2/6, 163...பிறகு 43, கடைசியில் 73!
இன்று நின்று யோசித்தால் அந்த நெடுஞ்சாலை அன்று மிகமிக வேறாய் இருந்தது தெரிகிறது. இன்றைய வார்த்தைகள் அன்றைய ஞாபகங்களை மீட்க முயலும் போது..சில மிகையாகும், சில பிறழ்வாகும், சில பிழையாகவும் மாறும். வயதுகள் மட்டுமல்ல, வார்த்தைகள் வளர்ந்ததும் அந்த இடத்தில்தான்.
முதல் ஐந்து வருடங்கள் ரொம்பவும் மங்கலாகவே இருக்கின்றன. என் அப்பாவின் நண்பரின் மோட்டார்பைக்கில் வரும் பெட்ரோல் நெடி, வீட்டைக் கடந்து செக்யுலராகப் போகும் குட்டித்தேர் மாதா ஊர்வலம், ஹஸெந்ஹுஸென் என்று ஏதோ சொல்லிக்கொண்டு கை போல ஒரு விஷயத்தை ஊர்வலம் கொண்டு போகும் (எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட) அல்லாசாமியின் ஊர்வலம், அப்புறம் அந்த இடத்தில் இருந்த தெருவீதி (திருவீதியாகவும் இருக்கலாம்) அம்மன் விழாவின் கரகம், அலங்கார ஊர்வலம், அப்புறம் தாத்தா எனும் மறையும் பழுப்பாய் ஓர் உருவம், மூன்று சாவுகள், ஒருமுறை எதற்கென்று தெரியாமல் எங்கள் வீட்டில் நடந்த குருபூஜை (இந்த குரு பற்றி யாரும் எதுவும் அதன் பிறகு என்னிடம் சொன்னதில்லை, பதினெட்டு வயதில் பழைய காகிதங்களை மேயும்போதுதான் தெரியும் அவர் பெயர் சாங்குசித்தசிவலிங்க நாயனார்- இவரைப்பற்றி, கல்கி/ஜக்கி/ரவிஷங்கர் மாதிரி இல்லையென்றால் அன்புடன் எனக்குத் தகவல் சொல்லுங்கள்), வீட்டின் பின்னிருந்த கொய்யா, வேப்பமரங்கள், ஞாயிற்றுக்கிழமைகளுக்கே உரித்தான ஒரு அசைவ-நறுமணம்....
இன்னும் நிறைய, சின்னச்சின்ன ஞாபக மினுமினுப்புகள்...
இதையெல்லாம் இப்போது மீள்பரீசீலித்தாலும் பதிவிட முயன்றாலும் முன்னம் அப்படியே வந்து விடாது. இது ப்ளுமேட்/ பேக்ப்ரொஜெக்ஷன் சமாச்சாராம் இல்லை...... திரும்பவும் ரசிக்கவோ, ஐயையோ விட்டுட்டோமா என்று பதைத்தும், உண்மையில் என்னதான் நடந்த்து எனும் ஆர்வமோ முயலும் rewind தான்.
நான் போகிறேன் மேலே மேலே, பூலோகமே காலின்கீழே எனும் கனவில் மூழ்காதவரை இப்படியான பழங்கதை பேசுதல் உத்வேகமும் தரலாம்.


