Friday, January 1, 2010

மெரினாவில் முன்னம் ஒரு மாலை


கொஞ்ச நாட்களுக்கு முன் மெரீனா கடற்கரையைத் திறந்து வைத்தார்களாம்! திறப்பதற்கு முந்தைய மணித்துளி வரை நண்டுகளும் நாய்களும் அங்கு சுதந்திரமாகத் திரிந்ததைப் போல் இனி நாமும் திரியலாம். நிம்மதியாய் இருக்கிறது!


மெரீனா எனக்கு மிகவும் நெருக்கம், அதிலும் அங்கே இருந்த ஒரு மரம் புத்தி தந்ததோ இல்லையோ நிழல் தந்து என்னை நிறைய கனவு காண வைத்தது. அழகு படுத்தப்பட்டபின் அது இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. அங்கே சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. அதனால் தான் திறக்கப்போகிறார்கள் என்றதும் இவ்வளவு நாள் மூடியா வைத்திருந்தார்கள் என்று ஒரு பயம் வந்தது. திறந்தவர்கள் நாளை மீண்டும் மூடிவிட்டால்?


இந்த மெரீனா என் பதின்வயதுகளில் இலக்கியத்தையும், பின்னர் வாழ்க்கையையும் என் நண்பர்களோடு பகிர்ந்து கற்றுக்கொண்ட ஓர் அழகான இடம். அழகுக்கு அழகு கூட்டினார்களாமே, பார்க்கவேண்டும் என்று ஆவல் நிறைய வருகிறது. மெரீனா எனக்கு இன்னொரு இனிய அனுபவத்தையும் தந்துள்ளது.


1993 அக்டோபர் முதல் வாரம் உலகம் முழுவதும் மனநல விழிப்புணர்வு வாரமாகக் கொண்டாடப்படுவதால் சென்னையிலும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய விரும்பினோம். வழக்கமாக நாடகம் போடுவதைப் போலல்லாமல் வித்தியாசமாகச் செய்ய நினைத்து ஓர் ஓவியக்கண்காட்சி நடத்தத் திட்டமிட்டோம்.அதை எங்கோ ஒரு கலைக்கூடத்தில் நடத்தி, அங்கே வழக்கமாக வரும் ஆர்வலர்களை மட்டும் சென்றடையாமல் மக்கள் மத்தியில் நடத்தவும் விரும்பினோம். மெரினாவில் நடத்தலாமே என்று முடிவானபின், அனுமதி கேட்டுச் சென்றால், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து காவல்துறை ஆணையர் அலுவலகம் வரைக் கேட்டுப்பார்த்தோம். அவர்கள் அனுமதி தர மறுக்கவில்லை ஆனால் அனுமதிப்பது அவர்களது அதிகாரத்தில் இல்லை என்றுதான் சொன்னார்கள். சென்னை மாநகராட்சியும் இதைத்தான் சொன்னது. மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கேட்டோம், அவர் அனுமதி தந்தார், “இது என் எல்லையில் உள்ளதா என்று தெரியாது, ஆனால் நல்ல விஷயம், செய்யுங்கள்” என்றார்.


பிறகு ஓவியர்களை அணுகினோம்.எனக்கு நன்கு பழக்கமான மருதுவும், பரிச்சயமான ஆர்.பி.பாஸ்கரனும் படம் தந்தது ஆச்சரியமில்லை. திடீரென்று பெரிய ஓவியர்களிடம் சென்று உங்கள் ஓவியம் கொடுங்கள் கண்காட்சி முடிந்ததும் திருப்பித்தருக்கிறேன் என்று அறிமுகமில்லாத நான் கேட்டவுடன் லட்சக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் விலை மதிப்புள்ள ஓவியங்களை அவர்கள் உடனே என்னிடம் தந்தார்கள். ஆதிமூலம், சன்ரு, சேனாதிபதி, கே.எம்.கோபால், தனபால், தட்சிணாமூர்த்தி, அருளரசன், பகவான் சவான் ஆகியோரின்  ஓவியங்களை மெரீனா மணலில் கண்காட்சியாக நடத்தினோம். ஓவியங்களுக்கிடையே நான் வரைந்த மனநல விளக்கப் படங்களும் வைக்கப்பட்டன. வந்து பார்ப்போரிடம் விளக்கங்கள் கூற சமூகப்பணி மாணவர்கள் உடனிருந்தார்கள். ஒரு ஞாயிறு மாலை என்று ஆரம்பித்த கண்காட்சி ஒவ்வொரு ஞாயிறு மாலையும் என்று அக்டோபர் முழுக்க நடந்தது. இதன் அடுத்த கட்டமாக வானொலியில் வாரமொருமுறை திரைப்பாடல்களின் வரிகளோடு மனநலம் குறித்த விழிப்புணர்வு தொடர் ஒளிபரப்பானது.







விழிப்புணர்வு எதைக் குறித்து ஏற்படுத்த விரும்பினாலும், வீதிக்கு வரவேண்டும், மக்களிடையே பேசுவதென்றால் அவர்கள் இருக்குமிடம் சென்று பேச வேண்டும்; நான் பேசுகிறேன் வந்து கேளுங்கள் என்று கூறிக்கொண்டு காத்திருக்கக்கூடாது என்பதே இதிலிருந்து நான் கற்ற பாடம். இப்போது இன்னும் அழகும் வசதியும் நிறைந்த இடமாக மாறியுள்ள மெரீனா, இப்படிக் கலைக்கண்காட்சிகள் நடத்த ஒரு நல்ல தளம். 

10 comments:

குப்பன்.யாஹூ said...

nice post, thanks for sharing

அன்புடன் அருணா said...

நல்ல விஷயம்.

sakthi said...

அன்புள்ள ஐயா .,
புத்தாண்டு வாழ்த்துக்கள் .இன்றைய அவசர வாழ்கையில் மன அழுத்தம் மக்களிடையே அதிகமாக உள்ளது .மன நலம் குறித்த அதிக விழிப்புணர்வு அவசியமான ஒன்றாகிவிட்டது .மனநல விழிப்புணர்வு இயக்கங்கள் அதிகம் தேவை .

geethappriyan said...

ரொம்ப சந்தோஷம் சார், நான் அப்போ 9ஆம் வகுப்பு படித்தேன், வீட்டாரோடு அங்கு வந்து ஓவியங்களை வேடிக்கை பார்த்தது நினைவிருக்கு

அரங்கப்பெருமாள் said...

//வீதிக்கு வரவேண்டும், மக்களிடையே பேசுவதென்றால் அவர்கள் இருக்குமிடம் சென்று பேச வேண்டும்;//

சரியாகச் சொன்னீர்கள்.

eniasang said...

ஜலதோஷம் போல எத்தனை முறை வந்தாலும் மன அழுத்தமதை புரிந்துக் கொள்ள முடியவில்லை.நம் இயல்பு ஒரு காரணமெனில் அந்த இயல்பை மாற்றியமைக்க முடியுமா? எப்படி?

குருத்து said...

நல்ல பதிவு.

இன்றைக்கு புத்தக கண்காட்சியில் நீங்கள் பேசுவதாக தினமணியில் செய்தி பார்த்தேன். எத்தனை மணிக்கு என சொன்னால், அலுவலக வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வந்து சேர உதவியாக இருக்கும்.

செங்கதிர் said...

//வீதிக்கு வரவேண்டும், மக்களிடையே பேசுவதென்றால் அவர்கள் இருக்குமிடம் சென்று பேச வேண்டும்;//

மிகச் சரியாகச் சொன்னீர்கள். சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் அவர்களும், கேட்க வேண்டியதைக் கேளாமல் இவர்களும் எனோ பாதை மாறி செல்வதை இனியும் பொறுக்கலாகாது.

கடைக்குட்டி said...

மெரினாவை என்ன மூடியா வைத்திருந்தார்கள் இவ்ளோ நாளா???.. நல்ல கேள்விங்க...

இனியன் பாலாஜி said...

//வீதிக்கு வரவேண்டும், மக்களிடையே பேசுவதென்றால் அவர்கள் இருக்குமிடம் சென்று பேச வேண்டும்;//
இதில் சிறிய திருத்தம் ஐயா
ஆரம்பத்தில் எந்த ஒரு விழிப்புணர்வும் வீதியில் தான் ஆரம்பிக்கவேண்டும்
அப்படித்தான் ஆரம்பித்திருக்கிறது.
ஆனால் நீஙகள் மக்களிடம் சென்று பேசுவது என்பதும் கூட் ஆரம்பத்தில் தான்.
மக்கள் கூட்ட்ம் அதிகமாகி விட்டால் நாஙகள் தான் உங்களிடம் வரவேண்டும். அதுதான் முறை
உஙகளுக்கு முதலில் அனுமதி தர மறுப்பார்கள்.சிறிய அளவு வரை தான் அனுமதி கிடைக்கும்,
பெரிய அளவில் போகும்போது உஙகளை தடுக்க கூடிய சக்தி கூடவே வளர்ந்து விடும். எப்போதுமே
தர்மத்திற்கு ஆரம்பத்தில் அப்படித்தான்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.

இதுதான் உலகம்
அடுத்தமுறை கண்காட்சி நடத்தும்போது தெரிவித்தால் நானும் சிலரை அழைத்து வருவேன்.
வாழ்த்துக்கள்
நன்றி

இனியன் பாலாஜி

Post a Comment