Thursday, October 16, 2014

பிரபாகர், லூஸி, ராக்கி மற்றும் நான்..


நாய்களை எனக்குப் பிடிக்கும். பொதுவாக நாய்கள், பங்களாத்திமிருடன் இருந்தாலும், பொறைபிஸ்கட் காத்திருப்புடன் தெருக்களில் திரிந்தாலும், என்னிடம் எப்போதும் அன்பாகவே இருந்திருக்கின்றன… (மிருகவசியம் வெங்காயம் எல்லாம் கிடையாது, பூனைகள் அப்படி என்னிடம் ஈஷிக்கொண்டதில்லை).  இங்கே ராஜராஜன் காலத்து நாய் பார்த்ததால் இப்பதிவு.


நாய் வளர்க்க வீடும் வேண்டும், வீட்டில் அதற்கு ஒத்துழைக்கும் குடும்பமும் வேண்டும். எப்படியோ எனக்கு இவை இரண்டும் எப்போதுமே வாய்த்தன. என் முதல் நாய்….பிரபாகர்.


பொதுவாக நெருக்கமானவர்களுடன் அரட்டையில் ஈடுபடும்போது, “ அந்த நாய் என்ன எழுதியிருக்கு தெரியுமா?... அந்த நாயையெல்லாம் ஒரு விஷயமா எதுக்குப் பேசுறே?... எனக்கு அந்த நாயை நல்லா தெரியும்” என்றெல்லாம் சகமனிதர்களைக் குறிப்பிடும் பழக்கம்/வழக்கம் எனக்குண்டு. ஆனால் பிரபாகர் வேறு. பிரபாகர் நிஜ நாய், நல்லது.
அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும்…வீட்டுக்கும் ஒரு குட்டி நாய் என் அப்பாவின் நண்பர் கொண்டுவந்து கொடுத்தார்..அதையொட்டிய சில நாட்களில் நான் படித்த பள்ளியில் ஒருவன், என்னை நாய் என்ரு திட்டினான். ஏன் என்று நினைவில்லை, அப்போதெல்லாம் சண்டை போட எனக்குத்தெரியாது. வீட்டுக்கு வந்தபின் திடீரென்று “ப்ப்பிக்கு என்ன பேர் வைக்கலாம்?” என்று என் அத்தை  கேட்டவுடன்..பிரபாகர்ன்னு பேர் வை, என்றேன்.. (அந்த வயதின் வன்மம் இன்று ஆச்சரியமாய் இருக்கிறது).
பிரபாகர் கறுப்பும் ப்ரௌனும் கலந்த நாய். வேகமாக என்னை விட உயரமாக வளர்ந்து விட்டதில் அதன்மீது எனக்கு கொஞ்சம் பொறாமை இருந்ததாக நினைவு. அது அல்சேஷன் என்றார்கள்..நாய்களைப் பற்றி பின்னாளில் படித்து யோசித்தால் அப்படித் தெரியவில்லை. ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பி வந்தால் நாய் இல்லை. எங்கே என்றால் ஓடிப்போச்சு என்றார்கள். யாரும் தேடவில்லை, நானும் கவலைப் படவில்லை. பிரபாகர் மீது அப்படியொன்றும் எனக்கு அன்பு இல்லை..

அப்புறம் வீடு மாறியது, பள்ளி மாறியது, வயது கூடியது…ஐந்தாம் வகுப்பின்  வயதிருக்கும்… Enid Blyton  படித்து முடித்த காலம். வீட்டுக்குள் ஒரு நாய் அடைக்கலம் புகுந்தது.. வெள்ளை நாய், பெண்நாய் என்றார்கள், பேர் வைக்கச் சொன்னார்கள், ‘லூஸி’ என்றேன்,, ப்லைடன் தாக்கத்தில்.
சில ஆண்டுகளில் அது செத்துப்போனது. ஆனால் லூசியிடம் எனக்கு ஒரு ஒட்டுதல் இருந்தது. அதற்கு அவ்வளவு அழகான கண்கள், அந்த கண்களால் என்னைக் கொஞ்சும், கெஞ்சும்.. அதை வீட்டிலேயே புதைத்தார்கள். இன்றும் லூஸி முகம் மனத்துள் தெரிகிறது.
அப்புறம், படிப்பு, சுயவருமானம் என்று பலப்பல முக்கியங்கள் நாய் பற்றி யோசிக்க விடவில்லை. முப்பத்தைந்து வயதில் சுயமாய் ஒரு மருத்துவமனை உருவாக்கும் போது, ஒரு நாய் உள்ளே தஞ்சம் புகுந்த்து. அதற்கும் லூசி என்றே பெயர் வைத்தேன். என்னிடம் கொஞ்சியதை விட என் உடன் இருந்த பணியாளர்கள் தான் அதை வளர்த்தனர்.
வாங்கிய கடன் கட்ட முடியாத சிரமம், உளைச்சல், உள்நோயாளிகளுக்கு அவசியமில்லாத புது மருந்துகள்..ஆகவே வருமானச்சரிவு..….நாடகமேடை விட்டகன்ற வெறுமை வெறுப்பு..எல்லாமும் லூசியை நான் ஏய் என்று கூடச் சொல்ல விடாத வாழ்வுச்சிக்கலில் இருந்தாலும், லூஸி பழைய லூஸி போலவே என்னை எப்போதும் பார்க்கும். என் கண்கள் அவள் கண்களை சந்திக்கும் போது வாலாடும், வாலும் விழியும் புன்னகை பொழியும்.

எங்கள் கடன் தீர்க்க என் உமா அமெரிக்காவுக்கு வேலை செய்யப் போனபின்.. கடன் தீர்ந்தபின்…சொந்தமாய் வீடு வாங்க முடிவு செய்து, புது கடனோடு, புது வீட்டிற்கு ஆயத்தமாகும் போது, எவ்வித நோய் அறிகுறியுமின்றி..இரண்டாம் லூசி செத்துப்போனாள். புது வீட்டுக்குப் போகும் ஒருவாரத்திற்கு முன்.
புதுவீடு+க்ளினிக் என்று வந்து பத்தாண்டுகளுக்குப்பின்..இன்னொரு நாய் வந்த்து. அன்று டிவியில் ஸ்டேலோனின் ராக்கி ஓடிக்கொண்டிருந்ததால் அதன் பெயர் ராக்கி என்றானது.
ராக்கி ரொம்ப அன்பான நாய். தினமும் என்னைப் பார்க்க வரும் ஐம்பது பேர்களுடன் கொஞ்சி விளையாடும்..எல்லார்க்கும் செல்லமாய் இருந்த ராக்கி தன் இரண்டாவது வயதில் (இதுவும் பெண்)..குட்டி போட்ட்து. கூடவே சொறி சிரங்கு எல்லாம் வந்த்து…என்னால் பராமரிக்க முடியாது என்று அதை ஒரு நாய்கள் பராமரிக்கும் இட்த்தில் சேர்த்து விடச் சொன்னேன். ஆட்டோவில் ஏறும் போது ராக்கி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த்து..
அது தமிழில் பேசுவதாயிருந்தால் என்னைப் பார்த்து, நாயே” என்று சொல்லியிருக்கும்.
2 comments:

Rathna said...

நாய்களை பற்றி யார் எழுதினாலும் அதை படித்துவிட்டு எனது கருத்தை பதிவு செய்யாமல் விடமாட்டேன்; ஏனெனில் நாங்களும் மிருகங்களின் சிநேகிதர்கள்; எல்லா மிருகங்களையும் வீட்டில் வைத்து அழகு பார்க்க இயலாது என்பதால் எப்போதும் நாய் அல்லது பூனை வீட்டில் வளர்ப்பதுண்டு; தெருவில் காணும் மிருகங்களையும் கூட தவறாமல் கவனிப்பது உண்டு; எனக்கு ஒரு கோடி அல்லது சில லட்சங்கள் கிடைத்தால் மிருகங்களை (தெருவில் நடமாடும்) எடுத்து வந்து அதன் இறுதிநாள் வரையில் அன்பாக கவனமாக பாதுகாக்க வேண்டும் என்பது தீராத ஆவல்.

அருமையான இடுகை; அன்பின் உண்மை.

dafodil's valley said...

எனக்கு செல்ல ப்ராணிகள் வளரத்த அனுபவம் உண்டு ஏனோ எல்லாம் செத்து போயிற்றேயொழிய மனதளவில் இன்றும் வாழ்கின்றது. இருப்பினும் மிகவும் பற்றுடன் நினைவு கூறுவதேல்லாம் ஒன்றும் இல்லை. உங்களின் இந்த பதிவை படிக்கும் போது என் எண்ணங்கள் போல இருந்தது. உங்களின் எழுத்து நடை படிக்க மிகவுமாகவும் நியாயமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது டாக்டர். மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு

Post a Comment