Friday, October 22, 2010

காஃப்காவின் பிம்பம்.காலையில் எழுந்திருக்கும் போது ஒரு மனிதன் பூச்சியாக மாறிவிடுகிறான். இன்னொரு கதையில் நாயகன் எழுந்தவுடன் அவனை கைது செய்வதாக மூவர் சொல்கிறார்கள், ஆனால் வழக்கும் கைதும் இயல்பு வாழ்க்கையில் அவனைத் தொடரவைக்கிறது. இந்த இரண்டுமே காஃப்கா எழுதியவை. படித்தவுடன் பிரமித்து, ஒரு வெறியில் இரண்டையுமே நாடகமாகத் தமிழில் எழுதி அரங்கேற்றியிருக்கிறேன். அது 1989,1993. இந்த ஆண்டு அது நினைவுக்கு வரவும் இப்போது எழுதவும் காரணம் சமீபத்தில் நான் வாசித்த நூல்.


“Why you should read kafka before you waste your life” எனும் இந்நூலை எழுதியவர் James Hawes. 2008ல் வெளிவந்த நூலை 2010எல் தான் படிக்க நேர்ந்தது. மலிவு விலையிலும் தள்ளுபடியிலும் நடந்த ஒரு விற்பனையில் இதைப் பார்த்ததும் வாங்கினேன். இதைப் பற்றி அப்போது தெரியாது. விலை மலிவாகவும் இருக்கிறது, காஃப்காவைப் பற்றியும் இருக்கிறதே என்று தான் வாங்கினேன்.

விபரீதமான வித்தியாசத்தை Kafkaesque என்று சொல்வதுண்டு. இப்படி ஓர் எழுத்தாளனின் பெயரில் ஒரு விஷயம் வர்ணிக்கப்படுவது அபூர்வம். இத்தகைய வெற்றிதான் காஃப்காவினுடையது. அவனைப் பற்றிப் பல கதைகளை அங்குமிங்கும் படித்திருக்கிறேன். அவனது எல்லா எழுத்துகளையும் படித்திருக்கிறேன். அவனைப் பற்றி என் மனத்துள் ஒரு பிம்பமும் உருவாக்கி வைத்திருந்திருக்கிறேன்.

 Orson Welles எடுத்த The Trial படத்தில் Anthony Perkins பார்த்தவுடன் இது காஃப்காவேதான் என்றும் மயங்கியிருக்கிறேன். அந்த அளவுக்கு என்னுள் காஃப்கா பற்றிய ஒரு பிம்பம் இருந்திருக்கிறது. அவனை கூகுளில் தேடினால் கிடைக்கும் படமும் அந்த பிம்பத்திற்கு நன்றாகப் பொருந்தி வருகிறது.
காஃப்காவை நாடகமாக்கியபின் வேறெவரது எழுத்துக்கும் நான் காட்சியமைப்பும் வசனமும் எழுதியதில்லை என்று இப்போதுதான் உரைக்கிறது. நான் கடைசியாக எழுதிய ஆங்கில நாடகமும் காஃப்காவின் ப்ரொமேதியஸ் படித்துத் தான்! இது என் எழுத்து பற்றியல்ல, என்னை அவ்வளவு தூரம் பாதித்த ஓர் இலக்கிய ஆளுமை குறித்துதான்.

அவனது எழுத்துக்களில் ஒரு தீவிரம் இருக்கும், ஒரு தீர்க்கமான பார்வை இருக்கும்,விபரீதங்கள் இயல்பு போல் சித்தரிக்கப்படும். அவனைப் படித்ததெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்புகளில்தான் என்பதால் அவனது மொழியாளுமை குறித்து நான் பேச முடியாது.இப்போது எழுத நினைப்பது அவனது பிம்பத்தைப் பற்றித்தான்.

எல்லாவற்றுக்கும் பிம்பங்கள் இருக்கின்றன. வார்த்தைகளைச் சுருக்கி, உணர்ச்சிகளைச் சுருக்கி, செய்திகளைச் சுருக்கி மனத்துள் பதித்துக்கொள்ள பிம்பங்கள் தேவைப்படுகின்றன. பிம்பங்கள் உருவாக்கப்பட்டவை- பல நேரங்களில் சமூகத்தின் அவசியத்தால், சில நேரங்களில் நம்முடைய அவசரத்தால்.

முண்டாசும் மீசையுமாய் பாரதியின் பிம்பம் அவன் பயத்தை மறைத்து வீரத்தை மட்டுமே காட்டுவது போல, பிம்பங்கள் தட்டையானவை. அவற்றின் பின்னே இருக்கும் பரிமாணம் தெரிய வருவதில்லை, தெரியப்பட விடுவதில்லை. ஜெயகாந்தனை ஒரு முசுடு முரடு என்று நான் உருவாக்கிக்கொண்ட பிம்பத்தால் தான் அவரை பல ஆண்டுகள் தவிர்த்திருக்கிறேன். நெருங்கிக் கூர்ந்து பார்த்தால் பிம்பங்கள் நிஜம் போல் இருப்பதில்லை. ஜெயகாந்தனைப் போல் அன்புடனும் வாஞ்சையுடனும் லாசரா கூட என்னிடம் பழகியதில்லை. இத்தனைக்கும் எனக்கும் அவருக்கும் ஒரு பிரத்யேகப் பிணைப்பு இருந்தது.


காஃப்காவின் பிம்பமாக என் மனத்துள்ளும் பலரது மனங்களிலும் இருந்த பிம்பம்- ஒரு மகிழ்ச்சியில்லாத இளைஞனின் பிம்பம்தான். மகிழ்ச்சி இல்லாமை மட்டுமல்ல அவனது படத்தில் அழக்கூடாத ஒரு வெறுமையின் வருத்தம் தெரியும். ஏதோ ஒரு மான்ஷனில் இருந்த பிர்மீள் போல வசதியில்லாத வாழ்முறையுடையவன் போலத் தோன்றும். அவனது ஒல்லிய தோற்றமும் அதற்கு கூடுதல் ஒப்பனை கலந்தது. 
தன் சாவுக்குப் பின் தன் எல்லா எழுத்துகளையும் அழித்துவிட வேண்டும் என்று தன் நண்பனிடம் சொல்லிய கதையும் (அது கதை தான் இல்லாவிட்டால் அந்த அற்புதமான இலக்கியம் நமக்குக் கிடைத்திருக்காது என்று இந்தப் புத்தகம் சொல்கிறது), அவன் தனிமையில் இருந்தது பற்றிய கதையும், காதலில் நிம்மதியும் வெற்றியும் பெற முடியாமல் எழுதிய கடிதங்களும், இன்னும் எவ்வளவோ செய்திருப்பானே என்று ஏங்க வைக்கும் அவனது நாட்குறிப்புகளும்...அவனை ஒரு சோகமான அறிவுஜீவியாகவே என்னுள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

அவன் அப்படியல்ல, வசதியாகத்தான் இருந்தான், காதலிக்காமல் ஒரு பெண்ணை ஏமாற்றிக்கொண்டிருந்தான், எழுதிய கதைக்கு வாழ்நாளிலேயே பரிசு வாங்கினான்... அப்புறம் அவனது அரசியல் சந்தர்ப்பவாதம், பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் இருந்த ஒட்டுண்ணி உறவு இவை பற்றியெல்லாம் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. சே, காஃப்கா ஒரு ஃப்ராட் என்று நினைக்குமளவு சரளமாகவும் விரிவாகவும் எழுதப்பட்ட நூல் இது.

அவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தால் என்ன, அவனது எழுத்துதானே முக்கியம் என்பது அறிவு வைக்கும் வாதம். மனம் அந்த எழுத்துகளைப் படித்து உருவாக்கிக் கொண்ட பிம்பம் தகரும் போது வலிக்கும்- வெட்கமாக, கோபமாக, வேதனையாக.

அதனால் அவனை மீண்டும் படித்தேன். இந்தப் புத்தகத்தினால் அவன் இன்னும் உயர்ந்தவனாகினான்.தான் அனுபவிக்காத துயரை எழுதுவது இலக்கியத்தில் ஓர் அற்புத சாதனை. பிறகு ஏன் இந்தப் புத்தகம் பாதித்தது? நான் ஏமாறியதை எனக்கு உணர்த்தியதால்.
பிம்பங்கள் தேவைப்படுகின்றன. சிலவற்றைச் சொல்வதற்கு, சிலவற்றை ஏமாற்றி விற்பதற்கு.

9 comments:

Anisha Yunus said...

நான் இதுவரை காஃப்காவை படித்ததில்லை. பேரையே இப்பொழுதுதான் கேட்கிறேன். ஆனால் ஒரு மனிதனை இந்தளவு பாதித்திருக்கும் ஒரு ஆசிரியர் என்றால் கண்டிப்பாக அதை படித்துப் பார்க்க வேண்டும். காஃப்கா தன் வாழ்வில் பெறாத தோல்விகளையும், தருணங்களையும் எழுத்தில் வடித்தார் என்று சொல்கிறீர்களே...ஒரு வேளை அவருக்கு சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்களோ அல்லது சராசரியான தன் வாழ்வின் மீது கோபம் கொண்டு இப்படி நடந்தாலென்ன என்று சிந்தித்திருப்பாரோ?

Dr.Rudhran said...

அன்னு முதலில் படிக்கக் கூடியது-metamorphosis குறுநாவல்.

Chittoor Murugesan said...

//பிம்பங்கள் தட்டையானவை. அவற்றின் பின்னே இருக்கும் பரிமாணம் தெரிய வருவதில்லை//

பிம்பங்கள் உருவாக்கப்படுபவை. எதிராளியின் தன் முனைப்பால் அ நம் உண்மையான அக்கறையற்ற தன்மையால் அதனால் தான் அதன் பின்னே இருக்கும் பரிமாணம் தெரியவருவதில்லை.

ஓஷோ சொல்லுவார் " மனிதன் தான் பார்க்க நினைத்ததை தான் பார்க்கிறான் (உள்ளதை அல்ல)"

நல்ல பதிவு.

Unknown said...

நானும் இப்போதுதான் கேள்விபடுகிறேன்.வித்தியாசமான எழுத்தாளராக இருப்பார் போல,விரைவில் படிக்க முயற்சிக்கிறேன்

மதுரை சரவணன் said...

nalla pakirvu. kaapaa parri aumaiyaana thakaval. puththaka vimarsanam pol allaamal athu kaapaavai paari neengkale kuruvathaaka irunthathu. thanks for sharing. good post.

ரவி said...

அற்புதமான அறிமுகம். !

Prasanna Rajan said...

உங்களின் கருத்தை அட்சரம் பிசகாமல் வழிமொழிகிறேன். காஃப்காவின் 'Metamorphosis' படித்தது ஒரு பேருந்து பயணத்தின் போது தான். ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி புரிந்ததும் அந்த குறுநாவலை படித்த போது தான். காரணம்: திண்டுக்கலுக்கும், தேனிக்கும் இடையேயான இரண்டு மணி நேர பயணம் இரண்டு நிமிடங்களைப் போல் கடந்து போனது.

அதே போல் தான் 'In the Penal Colony' குறுநாவலும். பார்க்க போனால் இன்றைய எனது வாசிப்புகளுக்கு காஃப்கா தான் அடிப்படையாக இருந்திருக்கிறார்.

பி.கு: என் தந்தை உங்களின் டாக் ஷோ மற்றும் புத்தகங்களுக்கு ரசிகர். உங்களை நான் 2007ஆம் ஆண்டு ஹிக்கின்பாதம்ஸில் ஒரு முறை சந்தித்தேன். இரண்டு நிமிட பேச்சு. உங்களுக்கு இது நினைவிருந்தால் நீங்கள் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்.

andygarcia said...

"பிம்பங்கள் தேவைப்படுகின்றன. சிலவற்றைச் சொல்வதற்கு, சிலவற்றை ஏமாற்றி விற்பதற்கு."
நீங்க எந்திரன் பத்தி சொல்றீங்களா ? ஹி.. ஹி..

Feroz said...

Dear Dr. Is this book availabe in tamil version??? plz let me know.

Post a Comment