Thursday, February 25, 2010

ஜெய்ஹிந்த்.

ஹூஸைன் ஒரு கலைஞன். வர்த்தக நிர்ப்பந்தங்களுக்காகவும் வரைந்தாலும், தனித்திறமை உள்ள ஓவியன். இந்தியன். உலகில் இந்தியக் கலையின் நவீனத்துவம் பற்றிப் பேசப்படும்போதெல்லாம் தவிர்க்கமுடியாதவன். வயது மூத்தவன். விளம்பரப்பிரியன் என்று சொல்லப்பட்டாலும் தனித்தன்மையுள்ள கலைஞன்.

அவனுக்கு அவனது சொந்த நாட்டில் இடமில்லை. எந்த மண்ணில் பிறந்து வண்ணம் குழைக்கக் கற்றுக்கொண்டானோ, எந்த மண்ணிலிருந்து தன் ஓவியங்களால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தானோ அவனுக்கு, அந்த மண்ணை மிதிக்கக்கூட இப்போது சாத்தியமில்லை.

அரசு அவனை வெளியேற்றவில்லை. அவன் இந்திய ‘இறையாண்மை’க்கு எதிராக எதுவும் செய்து விடவில்லை. லால்கர் தொடர்பாகக் கைது செய்யப்பட்டாளே எழுதப்படிக்கத்தெரியாத, சொந்த ஊருக்குத் திரும்பிப்போக வழிதெரியாத கிழவி, அவளைப் போல் அவன் மீது எந்த குற்றமும் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதில்லை. அவன் செய்தது எல்லாம் சில ஓவியங்கள் வரைந்ததுதான்; அது குற்றமாகப் பார்க்கப்படுவது அவன் ஒரு முஸ்லிம் என்பதால்தான்!

இன்று காலை ஹிண்டுவில் ராம் எழுதியிருந்ததைப் படித்தேன். ராம் எழுதுவதெல்லாமும் சரியல்ல என்றாலும், எப்போதாவது சரியாகவும் எழுதக்கூடும் என்பதற்கு இது ஓர் உதாரணம்! அப்போதும்கூட இதைப்பற்றி என்ன எழுதுவது என்று விட்டு விட்டுவிட்டேன், ஆனால், பதிவுகளைப்படிக்கும் போது இது கண்ணில் பட்டது. செய்திதான். ஆனால் அது எப்படிச் சொல்லப்படுகிறது என்று பார்க்கவும் வேண்டும்.

  இந்த மானங்கெட்ட அரசு, தன் நாட்டின் கலைஞனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வெறி பிடித்த முட்டாள்களுக்குப் பயந்து அவன் உள்ளே வந்தால் பாதுகாப்போம் என்று சொல்லப் பயப்படுகிறது. அவனோ ஓவிய நுணுக்கத்தில் மட்டுமே புரட்சி செய்யத்துணிந்தவன், சமூகப்புரட்சியாளனோ வீரனோ அல்ல, மேலும் கிழவன்.

அவனுக்கு என்ன எதிர்ப்பு? அவன் ஒரு மதத்தினரின் மனத்தைப் புண்படுத்திவிட்டானாம்! அதனால் அவன் இந்தியாவிற்குள்ளே வரக்கூடாதாம்! ஒரு மசூதியை இடித்து, அதன் மூலம் பல முஸ்லிம் மனங்களை நொறுக்கியவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள், ஒரு முழு மலையை விற்பதற்காக வீரவசனமும் வியாபாரத் தந்திரமும் நிறைத்துப் பேசுபவர்கள் துணை நிற்கிறார்கள்! தூ என்று துப்பினால் இந்தியனான என்மீது தான் விழும்!

அவனை இன்று ஒரு நாடு பிரஜையாக ஏற்றுக் கௌரவித்துள்ளது. அதையும் செய்தியாக வெளியிடுபவர்கள், ஒரு மதத்தின் கடவுள்களை “கேவலமாக” வரைந்த ஓவியன் பற்றிய செய்திக்குறிப்பாக நமக்குத் தெரிவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை ஆதிமூலம், ஸூர்யப்ரகாஷ் போன்றோரின் ஓவியநுட்பம் ஹூஸைனுக்குக் கிடையாது. ஆனால் இது அவனது ஓவியம் குறித்து அல்ல, அந்த ஓவியத்தின் கரு குறித்து! அவன் என்ன அப்படிக் கேவலமாக வரைந்தான்? சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தான் என்பதே குற்றச்சாட்டு! சீதையும் அனுமனும் நெருக்கமாக இருப்பதாய் வரைந்தான் என்று ஒரு குற்றச்சாட்டு!! நெருக்கமாய் இருந்ததால்தானே தூதுவனிடம் தன் மோதிரம் தந்தாள்? நிர்வாணமான சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்ட படம் எந்தக் காலத்தில்?

நாட்டின் கணிம வளங்களை விற்பதற்காகக்  காடுகளிலிருந்து ஆதிவாசிகளை வெளியேற்றத் துடிக்கும் அரசு, ஒரு கலைஞனை நாட்டிற்குள், அதுவும் எதிர்க்கட்சி வேண்டாம் என்று சொல்வதற்காக விடாமல்  சும்மா இருக்கும் நிலையில்,, நாம் எல்லாரும் பதிவு எழுதி, பார்ப்பவர் எண்ணிக்கைப் பார்த்து, கடமையாற்றிக் கொண்டேயிருப்போம். ஜெய்ஹிந்த்.

49 comments:

சங்கே முழங்கு said...

ஜெய்ஹிந்த்...........

Anonymous said...

கலைஞனுக்கு முட்டாள்த்தனமாக, கலையுணர்ச்சி இன்றி வரையும் உரிமை உண்டு.அதை ஏற்கிறேன்.ஆனால் ஹுசைன் இந்தியாவிற்குள் வர வேண்டாம் என்று அவராகத்தானே முடிவெடுத்தார். தஸ்லிமாவும்,ருஷ்டியும் இங்கு வரக்கூடாது என்று ஒரு கும்பல் கூறியதற்கு பயந்து அவர்கள் ஒடி ஒளியவில்லையே. ஏன் இந்தியாவில் மதவாததிற்கு எதிராக போராடுபவர்கள் எல்லோரும் அயல் நாடுகளிலா தஞ்சம்,குடியுரிமையும் கோருகிறார்கள். ஹூசைன் இந்தியாவிற்கு வந்தால் இங்கு கலவரமெல்லாம் வெடிக்காது, சிறு எதிர்ப்பு இருக்கும்.அதற்காக நான் இங்கே வர மாட்டேன் என்றால் அது அவர் முடிவு.அதை வைத்து பிறர் குளிர்காயலாம்.இந்த தேசம் அதன் மக்கள் குறித்த ஹுசைனின் புரிதல் அவ்வளவுதான் என்று விட்டு விடலாம்.

போராட்டம் said...

கடைசி வரிகளைப் படித்த பின்னால், பதிவைப் பாராட்டுவதும் அபத்தமெனப் படுகிறது. குறைந்தபட்சம் ஓவியர்கள் அனைவரும் இணைந்து ஏன் ஒரு அறிக்கையோ, ஒரு கண்டனப் போராட்டமோ நடத்தக் கூடாது? அதே மெரினாவில் கூட?

Dr.Rudhran said...

அநாமதேயங்களைப் பொதுவாக நான் உதாசீனப்படுத்தினாலும், இத்ர்கு பதில் சொல்லத் தோன்றுகிறது. தஸ்லிமாவும் ருஷ்டியும் எதிர்ப்பு வரும்போது இந்தியக்குடிமக்களா?

Deepa said...

//தூ என்று துப்பினால் இந்தியனான என்மீது தான் விழும்!//
:)))
//நிர்வாணமான சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்ட படம் எந்தக் காலத்தில்?//
:)))

Last para..
:((

மணிகண்டன் said...

//தஸ்லிமாவும் ருஷ்டியும் எதிர்ப்பு வரும்போது இந்தியக்குடிமக்களா?
//

No. they are not. So ?

KANTHANAAR said...

அய்யா ருத்ரன் அவர்களே... என்ன தான் இந்து மதம் என்று நா(மு)னும் துாற்றினாலும், இந்து மதம் என்பது ஜெயமோகன் சொல்வது போல பின் நவீனத்துவ மதம்தான்.. இங்கே ஆத்திகரும் இந்துதான் நாத்திகரும் இந்துதான்.. பெரியாரைவிடவா இந்து கடவுளர்களை ஏசியிருக்க முடியும்... அவரையும் சராசரி இந்துத் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்டதுதான் நமது வரலாறு.. சில வட நாட்டவர்கள் (பெரியார் அங்கு பிறக்காத காரணத்தால்) எதிர்ப்புகள் கிளப்பினாலும், நமது அன்பிற்குரிய (அல்லது அன்புக்கில்லாத) சராசரி இந்து இந்தியர்கள் அனைத்தையும் ஏற்கும் ஜனநாயகத் தன்மை கொண்டவர்கள்தான்.. ஒரு கார்ட்டூன் போட்டதற்கு தலையை வெட்டு என்று ஒரு அரசே கூறக் கூடிய உலகத்தில், நம்மவர்கள் அப்படி இல்லை என்பதே என்பதே எனது துணிபு..
கந்தசாமி

Anonymous said...

I don't agree doctor, because Central government (BJP, United Front, Congress etc.) is keep supporting Dalai Lama even China is threatening us. - Prabhu singapore

Ashok D said...

:)

virutcham said...

another padivu today trying to show that we are secular.
one Q to you as you are also an artist.
Will any artist draw his family women as nude and place it publicly?
You won't. So pls don't justify.

I am also against Hussain being targetted. He can be criticised but cannot be attacked.

But muslims are not targeted for their indivual act. What would be the reaction of muslims if a Hindu try to do some act which they don't like, kind of reaction.

Babri Masjid demolition cannot be justified. Yes. But what about all those temples demolished and a muslim architecture constructed there. The rubbles in Qutub minar and other places over North India are living proofs.

People who have demolished Babri havenot gone every other place and demolish it. Try to understand.

Please everyone, don't write as a separatist. Try to see common factors that will unite both.http://www.virutcham.com

வால்பையன் said...

இந்துத்துவாக்கள் மட்டுமல்ல பொதுவாகவே மதவாதிகளுக்கு தாங்கள் செய்வது எப்போதும் சரிதான்!

ஹீசேனுக்கு இடம் கொடுக்காதது மூலம் இந்தியா மதசார்பற்ற நாடு என்ற போர்வையை விலக்கி பல்ளிளிக்கிறது!

கிருபாநந்தினி said...

ருத்ரன் சார்! நான் உங்க பதிவுகளைத் தொடர்ந்து படிச்சிட்டு வரேன். ரொம்ப சுருக்கமா, கச்சிதமா, சொல்ல வேண்டியதை மட்டும் நச்சுனு சொல்றீங்க. நிற்க. சமீபத்துல, என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்லிப் பின்னூட்டம் இட்டு ஊக்குவிச்சிருந்ததுக்கு நன்றி சொல்லிக்கிறேன். நன்றிங்க ஐயா!

virutcham said...

Hussain's paintings - http://sundaramm.sulekha.com/blog/post/2007/07/does-m-f-hussain-deserve-award-or-punishment.htm

Ask your viewers if they still justify him

-Virutcham

அன்புடன் அருணா said...

/நாம் எல்லாரும் பதிவு எழுதி, பார்ப்பவர் எண்ணிக்கைப் பார்த்து, கடமையாற்றிக் கொண்டேயிருப்போம்./
வரிகள் மனதை அறுக்கிறது.

Dr.Rudhran said...

நிர்வாணமாக வரைந்தால் அழகாக இருக்கும் என்றால் என் தாயையும் தாரத்தையும் கூட அப்படி நான் வரைவேன். நிர்வாணமா விஷயம்? அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் தானே?
மணிகண்டன், நான் இந்திய அரசு இந்தியனைப் பாதுகாப்பது குறித்தும் பேசினேன், இந்திய ஆதிவாசிகளை விரட்டுவது குறித்தும் பேசினேன். உமக்கு ருஷ்டி கதை தான் முக்கியம், எனக்கு இந்தியாவின் வரலாறு முக்கியம். விருட்சம், ஆஹா, மதச்சார்பின்மை எப்படி அழகாக மீனார் கதை பேசுகிறது!! படிப்பவர்கள் புத்திசாலிகள் என்றே நான் மேலும் விளக்காமல் விடுகிறேன்.

virutcham said...

//நிர்வாணமாக வரைந்தால் அழகாக இருக்கும் என்றால் என் தாயையும் தாரத்தையும் கூட அப்படி நான் வரைவேன். நிர்வாணமா விஷயம்?//


Looks like you haven't drawn yet. May be they are not beautiful to you to be drawn nude and put in public.

He hasn't drawn nude his people. Means they are not beautiful enough? He don't have freedom to do that?

You know his pantings about Mother India raped for his response on mumbai attack.
His feelings can be justified if he had said Mother India attacked or anything like that, but what he did?

Secular India should be Indians as a whole. Now it is like Secular India - Hindus.

Now, Freedom means freedom to do anything about others and keep me and my
loved ones safe.

Being a Dr who treats people more towards their mental health, has more responsibilty than any other here.

I have questioned a nearby Hindu school who refused to admit a christian child, talking about secularism. So, I don't need to justify my 'mathasarbinmai' to anyone.


Yes, people are intelligent. Pls don't try to put them in a frame and make them think the way you think.

mohamedali jinnah said...

You are realistic
You are bold enough to write without any prejudice and you are a philosopher and guide.


Knowledge does not die out save when it is concealed.
--- Holy Prophet
A man who holds a piece of knowledge without transmitting it others should take care of his life so that the knowledge may not perish with him.
--Holy Prophet.

Thekkikattan|தெகா said...

ருத்ரன், நம்மிடம் கேள்விகள் மட்டுமே எஞ்சி விஞ்சிக்கிடக்கிறது. அதற்கான பதில்களும் எப்பொழுதாவது காலமே எழுதிக் கொள்ளும் என்றுதான் தோன்றுகிறது. மற்றுமொரு, நியாயமான கேள்விகளை உள்ளடக்கிய பதிவு இது.

//ஒரு மசூதியை இடித்து, அதன் மூலம் பல முஸ்லிம் மனங்களை நொறுக்கியவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள், //

அதனையும் நமது so called secular india உள்ளடக்கிக் கொண்டு நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் பொருட்டு அன்று விதைக்கப்பட்ட விதைதான் இன்றும், என்றுமாக அறுவடைக்கு எது போன்ற தானியம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று விளங்கிக் கொள்ளாமலேயே ஆங்கிலத்தில் வந்து எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது மேலே... என்ன செய்ய முடியும் சொல்லுங்க, இன்றைய இந்தியா எடுத்திருக்கும் பாதை சற்றே கோணலானது. நாடு கடத்தல் - ஒரு புதிய அநீதிய கலாச்சாரத்தின் தொடக்கம்.

Dr.Rudhran said...

http://www.vinavu.com/2010/02/25/green-hunt-video/

Uma Rudhran said...

Rudhran, I am approving this comment myself. I would like to respond to you and Virutcham - but I am on travel and will be delayed in my response. Will do at the earliest opportunity.

முகுந்த்; Amma said...

ருத்ரன் அய்யா அவர்களே! தங்கள் பதிவை நெறைய படித்திருந்தாலும் இதுவே என் முதல் பின்னூட்டம்.

ஒரு சாரார் புனிதமாக கருதும் விசயங்களை கலையுணர்ச்சி அல்லது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சித்தரிப்பதும், அதற்கு அந்தந்த மதங்களை சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், எல்லா நாடுகளிலும் நடப்பது தான்.

"The Da vinci code" புத்தகத்தில் இயேசு கிறிஸ்து, மக்டலின் ஐ திருமணம் செய்து குழந்தை உள்ளது என்று எழுதியதற்கு Dan Brown அவர்களுக்கு கத்தோலிக்க சமுதாயத்தில் எழுந்த எதிர்ப்பு தங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே இது இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது என்ன "secularism" ? என்று கூறாதீர்கள். சொல்ல போனால் மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் அதிகம் சகிப்பு தன்மை கொண்டவர்கள் என்பது என் கருத்து. (கிறிஸ்துவையும் மக்டலினையும் பற்றி ஒரு வெளி நாட்டு கதோல்லிக்க நண்பரிடம் நான் கேட்டதும் அதற்கு பின் அவர் என் நண்பர் அல்லாது போனதும் என் சொந்த அனுபவம்).

Chitra said...

அவர் அவர் மனப் பக்குவப்படி கலை ஆக்கங்களும் ரசனைகளும் கண்டனங்களும் ..... .... இதில் யாரை எதில் பழி சொல்ல முடியும்? சகிப்பு தன்மை மட்டுமே தேவை.

Thenammai Lakshmanan said...

ஒரு முறை செருப்புகளில் கூட இந்துக்கள் வணங்கும் தெய்வத்திருவுருவங்கள் அச்சிடப்பட்டதாக (எந்த நாடு என நினைவிலில்லை) கேள்வியுற்று இருக்கிறேன் ..

எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடைய(செகுலாரிஸ்ட்) நம் நாட்டில் அவர் செய்ததும் தவறு.. சர்ச்சை உண்டாக்குவதையோ. அடுத்தவர் மனம் புண்படும்படியோ வரைய வேண்டிய காரணம் என்ன...?

இதைபெரிய இஷ்யுவாக்கி அவரை வர விடாமல் செய்வதும் தவறு.

மணிகண்டன் said...

***
மணிகண்டன், நான் இந்திய அரசு இந்தியனைப் பாதுகாப்பது குறித்தும் பேசினேன், இந்திய ஆதிவாசிகளை விரட்டுவது குறித்தும் பேசினேன். உமக்கு ருஷ்டி கதை தான் முக்கியம், எனக்கு இந்தியாவின் வரலாறு முக்கியம்
***

Rudhran, i have been reading your columns for a while and i understand your stand clearly on hussain's issue and i completely agree with it. If you think that anonymous comment is unnecessarily dragging this into a different argument, you could have left it unanswered.

I just questioned the relevance of your answer.

Sundar சுந்தர் said...

காட்டம் குறையாமல் உங்கள் எண்ணத்தை வெளிப்படித்து விட்டீர்கள்.
சில வெறிப்பிடித்த தடியெடுத்தவர்ககளை, கண்டு கொள்ளாத நம் சமூகம், நம் வரலாற்றில் இன்னுமொரு கறையை கண்டுக்கொள்ளாமல் போவதில் என்ன அதிசயம். இழப்பு நம் பெருமைக்கும், இறையாண்மைக்கும் தான்.

Thekkikattan|தெகா said...

//சொல்ல போனால் மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் அதிகம் சகிப்பு தன்மை கொண்டவர்கள் என்பது என் கருத்து.//

முகுந்த் அம்மா, இன்றைய அரசியல் நிலைப்பாட்டினைக் கொண்டு பார்க்கும் பொழுது நீங்க கூறிய அந்த 'அதிக சகிப்பு' தன்மைக்கு பங்கம் விளைவிப்பது போலல்லவா அரசியல் கட்சிகள் தங்களின் அணுகுமுறையை தவறாக கைகளில் எடுத்திருக்கிறது. அதுவே மக்களின் மனதினை வேறு திசையில் திருப்பி ஊறு விளைவித்து விடுகிறது காலப் போக்கில்.

உ.தா: அண்மைய காலங்களில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் விநாயக சதுர்த்தி விழாக்களும் அதனையொட்டிய மதக் கலவரங்களும்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அந்த லின்கைப் பார்த்தேன்.. அவருடைய அந்த சர்ச்சைக்குரிய ஓவியங்களை நியாயப்படுத்த முடியவில்லை :))

சர்ச்சையுண்டாக்கும் எனத் தெரிந்தே, குறிப்பிட்ட மக்களின் கடவுளுருவ வடிவங்களை நம்பிக்கைகளை ஏன் வரைந்து காயப்படுத்த வேண்டும்?
Religious beliefs are to be respected, unless they are harmful.

தன் தாயை வரையும் உரிமை வேண்டுமானால் ஒருவருக்கு இருக்கலாம்.. அடுத்தவர் தாயை இப்படி வரைவது சரியோ?

Murali said...

என்ன வரைந்தார் என்பதை விட, யார் வரைந்தார் என்பதே இங்கு பார்க்கப்படுகிறது. குருவாயூர் கோவிலில் கடவுளின் நிர்வான ஓவியத்தை யாரும் இதுவரை பார்த்ததில்லையா?

Mugundan | முகுந்தன் said...

ருத்ரன் அய்யா,

பிரபல ஓவியர் ஹுசைன் கத்தார் நாட்டின்
குடியுரிமையை கேட்டு பெற‌வில்லை.மேலும்
இது பெரிய மரியாதையும் இல்லை.

கத்தார் போன்ற அரபு நாடுகள், வெளிநாட்டினருக்கு குடியுரிமை
வழங்குவது அசாதாரனமானது.

ஊடகங்கள் வியாபாரத்திற்காக அலைவதினால்,தாறுமாறாக‌
எழுதுகின்றன.

அன்புடன்,
எண்ணத்துப்பூச்சி

வினவு said...

ஹூசைன் இந்து மத தெய்வங்களை அதன் ஒரிஜினிலாட்டி குன்றாமல் வரைய முயன்றிருக்கிறார். எல்லா கோவில்களிலும் இந்து மத தெய்வங்கள் நிர்வாணமாகத்தான் இருக்கின்றன. இதை யாரும் பிரச்சினையாக நினைக்காத போது ஹூசைனது ஒவியங்களை மட்டும் பிரச்சினை கருதுவது மதக் காழ்ப்புணர்ச்சி மட்டுமே.

இந்து மத தெய்வங்களுக்கு பட்டாடையும், நகைகளையும் போட்டு இப்போது இருப்பது போல சிவகாசி ஆப்செட் மல்டிகலர் படங்கள் எல்லாம் பிற்காலத்தில் உருவானவை. இதை ரவிவர்மா போன்ற ஓவியர்கள் உருவாக்கினர்.

அடுத்து பாரதமாத நிர்வாணமென்று துள்ளுபவர்கள் அந்த பாரத மாதாவின் ஒரிஜினல் புத்திரர்களான மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களை இந்திய அரசு வேட்டையாடுவது குறித்து மகிழ்கிறார்கள். ஆகவே பாரதமாதா என்பது உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை வில்லிதான்.

நிர்வாணம் என்பது அதன் நோக்கத்தோடு தொடர்புடையது. மணிப்பூரில் இந்திய இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகளை எதிர்ப்பதற்கு மணிப்பூர் தாய்மார்கள் சிலர் நிர்வாணமாகப் போராடி தமது மக்களின் அவலத்தை உலகுக்கு உணர்த்தினார்கள். இங்கே நிர்வாணம் நமக்கு போராட்ட ஆயுதமாக எழுகிறது. இந்த தாய்மார்களின் நிர்வாணத்தைப் பார்த்து எனக்கு காமம் வருகிறது என்று இந்துத்வாதிகள் மட்டும் சொல்லக்கூடும். இவர்கள்தான் ஹூசைனையும் எதிர்க்கிறார்கள்.

Dr.Rudhran said...

jaihind!!!!!!!!!!!!!!!!!
http://vimeo.com/9681300

Unknown said...

ஹுசைனுடைய ஓவியங்களைப் பார்த்தால், அவர் ஹிந்து மத வேதபுராணங்களை மிகவும் நேசிப்பவர் என்றே தோன்றுகிறது. அதிலிருந்து அவருக்கு நிறைய விடயங்கள் கிடைகிறது போலும்.

ஓவியங்கள் ஆபாசமானவை என்று சொல்பவர்களுக்கு... வேதபுராணங்களில் இருக்கும் கண்டராவியான incest ஆபாசங்களா வரைந்துவிட்டார். நம் கோவில்களில் இல்லாத ஆபாசத்தையா வரைந்துவிட்டார். அவர் புராணத்திலிருந்து எடுத்துக்கொண்ட விடயம் வெறும் 0.000001% கூட இருக்காது.

Rathna said...

ஓவியர் ஹுசேனைப் பற்றிய உங்கள் இடுகை மிகவும் அருமை,
http://rathnapeters.blogspot.com/2010/02/blog-post_5054.html
எனது பதிவில் எனக்குத்தெரிந்த என் அபிப்பிராயத்தை எழுதியுள்ளேன்.

தமிழ் உதயம் said...

ஒவ்வொருவரும் தங்கள் செய்கைக்கு, நியாயம் கற்பிக்க காரணம் தேடுகிறார்கள்... இன்னும், இதுவரை - இந்த விஷயம் குறித்து, நடுநிலைமையுடன் யாரும் பேசவில்லை, எழுதவில்லை என்பதே என் கருத்து. என் தளத்திற்கு வரும்படி அன்புடன் கேட்டு, வரவேற்கிறேன்.

Anonymous said...

இந்துக்களையும் இந்து மதத்தையும் விமர்சிப்பது இப்பொழுதைய நாகரீகமாக ஆகி விட்டது. கலை உணர்ச்சியோடு பாக்க சொல்லும் உங்களை கேக்கிறேன், ஒரு ஆங்கில பத்திரிகையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கார்டூன் வந்தது அதற்கு எத்தகைய எதிர்ப்பு எழுந்தது என்று அனைவர்க்கும் தெரியும். அப்ப அவங்க மதத்தை பத்தி மட்டும் எதுவும் பண்ண கூடாது அப்படி பண்ணா அது சமய சார்புக்கு எதிர்ப்பா ? என்னடா ஞாயம் இது. உண்மையில பார்த்தா இந்த கருத்து சுதந்திரத்தை ஒரு கேடயமாக பயன்படுத்தி கேவலமான கருத்துகளை வெளியிடும் அனைவரயும் கொலைபண்ணனும்

Krishnan said...

We cannot pride ourselves as full fledged democratic nation when we fail to ensure the safety of our artists. writers, et al.
I agree with you Doctor. If M F Hussain is going to give up his Indian citizenship, it is going to be a blot on our democratic credentials.

Dr.Rudhran said...

இது இந்துமுஸ்லிம் பிரச்சினையா இல்லை இந்திய அரசின் கையாலாகாத்தனமா?
அறைவேக்காட்டு வெறியர்களுக்கு எப்படியும் புரியப்போவதில்லை.

Uma said...

பின்னூட்டம் பதிவு அளவு போனதால்...
http://umarudhran.blogspot.com/2010/02/blog-post_27.html

அமர்ஹிதூர் said...

இது மட்டு மல்ல. பாபர் மசூதியை இடித்தது, பாபர் மசூதி இடிப்பதை வேடிக்கை பார்த்தது, இந்துத்துவாவை பிடித்து தொங்கி கொண்டிருப்பது, அப்சலை தூக்கிலிடாமல் வைத்திருப்பது, கசாப் பாதுகாப்புக்கு கோடிகளை வாரி இரைப்பது, குவத்ரோச்சி மனம் புண்படாமல் நடந்து கொள்வது, நக்சல் போர் நடத்துவது என எல்லாமே இந்திய அரசியல் தலைவர்களின் ராஜ தந்திரம்.

mohamedali jinnah said...

ஓவியர் M.F.உசேனுக்கு கத்தார் நாட்டுக் குடியுரிமை இந்தியாவுக்கு அவமானம்!?

http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18475&Itemid=185

Murali said...

//Yes, people are intelligent. Pls don't try to put them in a frame and make them think the way you think// Hello virutcham, Presenting ones thoughts or views doesnot entitle imposition by itself. It depends on the receiver. If your thoughts are just borrowed and not backed with some self experience, then there is always a fear that it may lose ground and become false before a strong thought.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

I was thinking abt palangudiyinar while watching the actual movie. Thanks for the video! Very touching, though I donot know what to say abt Maoists.

Murali said...

சோமநாதர் கோவில் இடிக்க பட்டது மொகலாயர் படையெடுப்பில் என்பது வரலாறு. மராட்டிய படையெடுப்பில் தஞ்சை கோவிலில் சோழர்களின் ஓவியங்கள் மறைக்கப்பட்டது என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. மராட்டியன் இன்று இந்தியன், அன்று அந்நியன். படையெடுப்பில் கலாச்சார சின்னங்கள் அழிபடுவது அதன் தலைவிதி. அது அரசியல் சதுரங்கம்,தோற்றவன் நிலை அதோகதி. இன்று பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், கணிம வளங்களை விற்பதற்காகக் காடுகளிலிருந்து ஆதிவாசிகளை வெளியேற்றத் துடிப்பதும் உள்நாட்டு படையெடுப்பு, இது அரசியல் சதி. வேறு உடம்பிலிருந்து எடுத்து பொறுத்த பட்ட உறுப்பு,என் குருதியும்,தசையும் கலந்தபின் என்னுடையது இல்லையா?

ஹுசைன் ஓவியங்களில் ஆபாசம் தெரியவில்லை. இது அழகின் வெளிப்பாடு என்பதை விட அன்பின் வெளிப்பாடு என்று கூற தோன்றுகிறது. நாய்க்கும், பூனைக்கும் சட்டை போடும் உலகத்திற்கு இந்தியாவின் பிகாசோ என்று வர்ணிக்க படும் மனிதர் இந்திய குடிஉரிமையை இழப்பது பெருமையாக இருக்கலாம், உலகத்தையே தன் தாய்மண்ணாக கருதும் மனிதன் வருத்தப்படலாம், ஆனால் இழப்பு அவனுக்கு இல்லை.

டாக்டர், உங்கள் எழுத்து உயர்ந்த தரத்தில் இருப்பதே நன்மை. நீங்கள் நீங்களாகவே இருங்கள். மொக்கைபோட பலர் இருக்கிறார்கள்.சில விஷயங்கள் சிலருக்கு புரியாமல் போகலாம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் "ல ச ரா" எழுத்துக்கள் எனக்கு அப்படிதான் இருந்தது, ஆனால் அவர் வார்த்தைகளில் தொக்கி நிற்கும் மௌனம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. சிந்தா நதியில் அவர் கூறுவதை போல் "இன்று புரியாமல் இருப்பது நாளை புரியலாம்". சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன் வைக்கின்றனர். நானும் அவர்களை போல் என் ஆசிரியரிடம் குதர்க்கம் செய்தவன் தான் என்று எண்ணி பார்க்கும் போது, நகைப்புதான் வருகிறது. நம் அரைகுறை அறிவு, பரிசோதிக்க சொல்லும், அவரை நம் அறிவால் மடக்கி விட்டோம் என்று இறுமாப்பு கொள்ள செய்யும். கண்டிப்பாக ஊக்குவிக்க நண்பர்கள் இருப்பார்கள்.ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தான். பழமொழியை யாரும் ஆராயவேண்டாம், அனுபவியுங்கள்.

ஆராய்வு said...

மிக நல்ல பதிவு. பலரும் கவனிக்காத ஒரு விடயத்தை அணுகி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். சகிப்புத்தன்மையற்ற மதவெறி பிடித்த ஒரு சூழலில் தொடரும் அக்கிரமங்களில் இதுவும் ஒன்றாகிப்போகிறது.
நட்புடன்- ஜீவேந்திரன்.

Subha said...

I think we have enough artists in india and just don't support his acts on hurting someone's sentiments.

I hope you still remember the danish import ban on middle east..i am sure you wouldn't have supported that guy....because he is not belong to the vote bank....

smart said...

///நிர்வாணமாக வரைந்தால் அழகாக இருக்கும் என்றால் என் தாயையும் தாரத்தையும் கூட அப்படி நான் வரைவேன். நிர்வாணமா விஷயம்? அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் தானே? /// சபாஸ் தயிரியமாக சொன்னீர்.
உங்களுக்கு உங்கள் உரிமையாளர்களைப் பற்றி வரைய உரிமையிருக்கலாம் ஆனால் அடுத்தவர் தாயை வரையமுடியுமா? {இந்துக்கள் தாயாக வணங்கும் தெய்வங்களை} என்று ஏதாவது ஒரு இந்து வெறியர் கேட்கும் முன்பே, இந்தவிஷயத்தை ஆதரித்துப் பின்னுட்டிய நபர்களையும் அவர்கள் சார்ந்த குடும்பத்தையும் அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் கொண்ட நிர்வாண ஓவியத்தை வெளியிட்டு உங்களை செக்குலரிஷ்ட் என்று காட்டிவிடுங்கள் நண்பா!

Anonymous said...

இதை பற்றி என் பதிவு இங்கே: http://koottanchoru.wordpress.com/2010/03/08/எம்-எஃப்-ஹுசேன்-மறுபடியு/

டாக்டர் ருத்றனைப் பற்றிய சில வரிகள் அங்கிருந்து - டாக்டர் ருத்ரனும் நானும் ஹுசேன் விஷயத்தில் ஏறக்குறைய இசைந்த கருத்துடையவர்கள்... அவர் பொங்கி எழுந்திருக்கிறார். அது ஒரு கலைஞனின் நியாயமான ஆக்ரோஷமே. ஆனால் கட்டார் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லமாட்டார் என்று நினைக்கிறேன்.

மதி.இண்டியா said...

டாக்டர் , இந்து மதவெறி ஜெயமோகனின் ஹிசைன் குறித்த பதிவுக்கு உங்கள் எதிர்வினை கோருகிறேன்.

http://www.jeyamohan.in/?p=4864

//நீங்கள் வழிபடும் சரஸ்வதியின் சிலையும் நமீதாவின் படமும் எனக்கு ஒன்றுதான் என்று ஒர் அத்வைதி சொல்ல முடியும். பரந்தாமனின் சிவந்த கண்ணும் நாயின் சிவந்த குதமும் ஒன்றே என்று சொன்ன யமுனாச்சாரியார் போன்ற வேதாந்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரத்தைநூறு வருடங்களாக அந்த ஞானமரபு இந்நிலத்தின் சிந்தனையின் சாராம்சமாக விளங்கி வந்துள்ளது. அவர்களை பாமர பக்த வெறியர்கள் கல்லால் அடிக்கவோ கழுவில் ஏற்றவோதான் துடிப்பார்கள்.//

//பசுவைக் கும்பிடுவது மட்டும் இந்து மரபல்ல என்று உணருங்கள். பசுவைப்பலிகொடுக்கும் இந்து மரபுகளும் உண்டு. அதர்வ வேதம் முதல் இன்றுவரை நீடிக்கும் மரபு அது. இந்து மரபு இதுவே என சிலர் மேலே அமர்ந்து தீர்மானித்துவிட முடியாது . அது மிகப்பிரம்மாண்டமான ஒரு பண்பாட்டு வெளி.இத்தனைநாள் இந்த மூர்க்கம் மூலம் நீங்கள் உருவாக்கிய பேரழிவுகள் போதும், இனியாவது இந்த மரபின் பன்மையை புரிந்துகொள்ள முயலுங்கள். உலகில் எஞ்சியிருக்கும் ஒரே பன்மை மதமான இந்து மதத்தை வாழவிடுங்கள். இதையும் ஒற்றைப்படையான வழிபாட்டமைபபக ஆக்கி அழித்துவிடாதீர்கள்//

//இஸ்லாமிய தாலிபானியத்தை விட இந்து தாலிபானியம் அருவருக்கத்தக்கது. ஏனென்றால் பலநூறு ஞானமார்க்கங்கள் வன்முறையின்றி ஒருங்கிணைந்து ஞானத்தேடலை நிகழ்த்திய ஒரு மாபெரும் வரலாற்றின் மீது தொடுக்கப்படும் வன்முறை இது.//

கமண்ட் வெளியிடப்படாவிட்டால் பரவாயில்லை , நீங்கள் படியுங்கள் போதும் .

கிரி said...

சார் எனக்கு உங்கள் பதிவில் உடன்பாடு இல்லை.. அல்லது எனக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லையோ!

Post a Comment