Wednesday, November 25, 2009

அபிதா என்றொரு அனுபவம்..


லா.ச.ராவே அவளைப்பற்றி என்னிடம் பலமணிநேரம் விவரித்து சிலாகித்திருந்தபின், அவர் பேசும்போதும், பேசியபின் அதைநினைத்தும், சிலிர்ப்புகளை அனுபவித்தபின், திருவண்ணாமலையில் அபிதாவைப்பார்ப்பதை நிறையவே தவிர்த்திருந்தேன். நேரில் பார்த்துவிட்டால் கடவுள் ரொம்பவும் சாதாரணமாகவும் தோன்றலாம் என்பதாலேயே தவமியற்றிக்கொண்டே இருப்பதைப்போல. ஒரு நண்பருடன் அங்கே தவிர்க்க இயலாமல் சென்ற போது, நல்லவேளை ஏமாற்றம் இல்லை. அவள் என்னை வசீகரிக்கவில்லை.
அபிதா என்னை மிகவும் வசீகரித்த ஒரு பிம்பம். நினைவில் அவள் ஒரு நித்யசங்கீதம். அவள் எனக்கு பரிச்சயம் ஆனபோது எனக்கு 19 வயது. சென்னை மாவட்ட மத்திய (இப்போது அது தேவநேய பாவாணர்) நூலகத்தில், புத்தகம் பார்க்க நன்றாக இருக்கிறதே என்றுதான் அதை வீட்டுக்கு எடுத்துச்சென்றேன்..படித்தேன், திரும்பவும் படித்தேன்..மறுநாள் என் நண்பர்களை படிக்கச்சொன்னேன், படித்தவர்களிடம் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். ஒருசில மாதங்களில், ஆத்மாநாம், பிர்மீள் என்று தாவ ஆரம்பித்த என் இலக்கிய தேடல்களினால் அபிதா கொஞ்சம் மறதியின் மூலைக்குத்தள்ளப்பட்டிருந்தாள்.
நான்காண்டுகளுக்குப்பின், ஞாநியுடன் பரீக்ஷாவின் ஆரம்பநாட்களுக்குப்பின், எனக்கும் நாடகம் அரங்கேற்றும் ஆசை வந்தது.என்னதான் பொதுவுடைமை, புரட்சி என்பன சிநேகமுள்ள வார்த்தைகளானாலும், பார்ப்பனீய கூறுகள் நிறைந்த லா.ச.ராவின் அபிதாவையே நாடகமாக்கவேண்டும் என்று தீவிரமாயிருந்தேன்..  அதற்காகவே பரீக்ஷாவிலிருந்து விலகி முத்ரா நாடகக்குழு ஆரம்பித்தேன்..(அபிதா படித்தவர்களுக்கு நொண்டிகுருக்கள் பற்றி தெரியும், என் நாடகத்தில் அந்தப்பாத்திரத்தை ஏற்று சிறப்பாக என் நண்பன் நடித்தான்..அவன் அறியப்படும் பெயர்: ஞாநி!) பரீக்ஷா, முத்ரா வெவ்வேறு குழுக்கள்போலத்தோன்றினாலும், இரண்டிலும் ஒரே நண்பர்கள், ஒரே நடிகர்கள்!அவர்களைப்பற்றி பின்னால்...

முதலில் மேடைக்கான கதையமைப்பையும் காட்சியமைப்பையும் வசனங்களையும் எழுதியபொழுது..அபிதாவை எழுதியவரிடம் அனுமதி வாங்கவேண்டுமென்று தோன்ற, லாசராவிற்கு அனுமதி கேட்டு ஒரு கடிதம் எழுதினேன்..அதன் கடைசி வரிகள்:
இந்த தவத்திற்கு
வரம் கிடைக்காவிட்டாலும்
தரிசனம் மட்டுமாவது தேறுமா...

 பத்து நாட்களுக்குள் தன் வீட்டிற்கு வருமாறு அழைப்புவிடுத்து லாசராவிடமிருந்து ஒரு அஞ்சலட்டை வந்தது.... திருவண்ணாமலையில் அபிதாவைப் பார்க்க அழைப்பு வந்ததுபோல் ஒரு பரவசம்..அந்த கல்பனாராகத்தின் கடைசி சங்கதியாக அவரது தரிசனம் கிடைத்தது.
"இதுக்கெல்லாம் காசு ஏதாவது தருவியா?"
"இல்லே"
"நினச்சேன்..சரி, படி"
"ம்?"
"ஸ்க்ரிப்ட் எப்படி பண்ணியிருக்கே படி"

படித்தேன். கண்களைமூடிக் கேட்டுக்கொண்டிருந்தார்.நானே எனக்கு சபாஷ் போட்டுக்கொண்ட கட்டங்களைப்படிக்கும்போது, படிப்பதை நிறுத்தி அவரைப்பார்ப்பேன் (சபாஷ் எதிர்பார்த்து)...  "ம்ம்ம், படி.." என்பார். ஒரு கட்டத்தில், என் கதைவசனத்தில், கதாநாயகன், 'அதோ பார் அது கரடி மலை' என்பான், அவன் மனவி, 'அட ஆமா, கரடி மாதிரியே இருக்கு' என்பாள். இதை நான் படித்ததும், " என்னது? " என்றார். அப்படியே படித்தேன்..அப்போது கண் திறந்தார், என்னைப்பார்த்து..
"என்ன சொன்னா?"
"ம்?"
"அவ என்ன சொன்னான்னு எழுதியிருக்கே?"
மறுபடி படித்தேன்.
"புரியலியா?"
"என்ன சார்?"
"அவ ஒரு ஃப்ரென்ச் லேடி மாதிரி.. பேச்சுல ஒரு நளினம் இருக்கும்...'அட'ன்னு எழுதியிருக்கியே...அது  ஜெர்மன் (sound) ஸௌண்ட்  , ..ஃப்ரென்ச் ஸௌண்ட்ன்னா  அது  '' ன்னு வரும்" என்றார். ஓ ..கரடி மாதிரியே.. பிரமிப்பை விட பயம் அதிகமாகியது. அது ஓர் அட்சரசுத்தமான மந்திரம் போல் தோன்றியது.  எதில் விளையாடத் துணிந்திருக்கிறேன் என்று அப்போதுதான் உறைத்தது. 
சாப்பிட்டுவிட்டுப்போகச் சொன்னார், சாப்பிடும் போது "என்ன சாப்பிடறே" என்றார், நான் முழிப்பதைப்பார்த்து, சப்தமாக சிரித்து, "வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும்" என்றார். (அது நாவலிலும் வரும்).

  பிறகு மிகுந்த தைரியத்துடன், நாடகவேலைகள் ஆரம்பமாயின..திடீரென்று, இந்த நாடகத்திற்கு இசை வேண்டுமென்று முடிவெடுத்து,   MBS அவர்களிடம் சென்றேன்..
"நாடகமா?"
"யெஸ் சார்"
"நான் சினிமா கம்போஸர்"
"யெஸ் சார்"
கொஞ்சம் முறைப்புக்குப்பின், "என்ன நாடகம்?"
"லாசராவின் அபிதா"
"வாட்?"
மெதுவாக அவரிடம் விவரிக்க ஆரம்பித்தேன்..ஸ்க்ரிப்ட் இருந்தால் கொடுத்து விட்டுப்போகச்சொன்னார்..கொடுத்துவிட்டு வந்தேன்..மறுநாள், "வா பேசலாம்" என்று அழைத்தார், போனால், ஹார்மோனியத்துடன் இருந்தார்.." இந்த கதையில் ஒரு மழை போல எல்லாம் கொட்டிக்கொட்டிப்போகும்  அதனால், அமிர்தவர்ஷினி ராகத்தில் போடலாம்" என்றார். அவரே சில ஸ்வரக்கோலங்களை வாசித்துக்காட்டுவார், "இன்னும் கொஞ்சம்" என்பேன், மாற்றி வாசிப்பார்.. 
 நிசகமப  பமகமகா மகா மகா சநீ, மபநீ மபநீ, சா க சா”-  இது தான் தீம் ம்யூசிக்!
இசையும் பதிவு செய்து கொண்டு, அந்த நாடகத்திற்காக முன்கதை வரும் இடங்களை ஸ்லைட்களாக எடுத்துக்கொண்டு அரங்கேற்றினோம்.
வருபவர்களிடம் தந்த வரவேற்பு/ விவரங்கள் பிரதிகளில் எழுதியிருந்தேன்...
"லாசராவின் எழுத்துக்களில் அதிரும்
மந்திரத்வனியில் ஒரு மாத்திரையேனும் மீட்க முடிந்திருந்தால்..
இந்த தவத்திற்கு
வரம் கிடைக்காவிட்டாலும் தரிசனம் மட்டுமாவது தேறும்".

நாடகம் எல்லா விதத்திலும் தோல்வி!
ஆனால், எங்கள் நாடக‌க்குழு புது உத்வேகத்துடன் பிறந்தது..  இது நடந்தது 1982!

15 comments:

போராட்டம் said...

பதிவும் கூட புது உத்வேகத்துடன்தான் பிறந்திருக்கிறது... :-)

குப்பன்.யாஹூ said...

rare and interesting infomation, Thanks for sharing

அன்புடன் அருணா said...

அபிதா.....படித்திருக்கிறேன்.....மீண்டும் படிக்கத் தூண்டுகிறது இதைப் படித்தபின்.....

Anandi said...

thank you dr.

Thekkikattan|தெகா said...

வணக்கம் டாக்டர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்கள் பக்கம் வர முடிந்திருக்கிறது.

//நேரில் பார்த்துவிட்டால் கடவுள் ரொம்பவும் சாதாரணமாகவும் தோன்றலாம் என்பதாலேயே தவமியற்றிக்கொண்டே இருப்பதைப்போல.//

:-)) அப்படியாக எண்ணி எண்ணி நகைத்துக் கொள்வதுண்டு, வரிகளாக உங்களிடமிருந்து பார்த்ததும் பிரமிப்பாய் இருக்கிறது.

நீங்க எழுதின இந்த நினைவோடை படிக்கும் பொழுது இன்னும் எனக்கு நிறையவே மிச்ச மிருக்கு வாசிக்க வேண்டின்னு தெரிகிறது... நன்றி!

blogpaandi said...

அபிதா புத்தகம் தற்பொழுது கடைகளில் விற்பனைக்கு இருக்கிறதா? அல்லது அபிதா புத்தகத்தின் மென்பதிப்பிற்குரிய சுட்டி இருந்தால் தாருங்கள். நாங்களும் படித்து ரசிக்கிறோம். நன்றி.

Dr.Rudhran said...

blogpaandi.....apithaa is now available (was in the last book fair) in kizakku.
vaanathi pathippakam also have publsihed the novel..the best edition which is now not available was the first edition published by bookventure.

thanks to all for your kind comments

Balaji-Paari said...

அன்பின் ருத்ரன்,
அபிதாவை படித்துவிட்டு நான் சற்று என் நிலைக்கு திரும்பும்போது, என்னுள் ஏதோ ஒன்று மௌனமாக முறிந்தது. அந்த கதை இன்று முழுவதும் (அட்டை முதல் அட்டை வரை) நினைவு இல்லை. ஆனாலும் முறிந்த வடு மட்டுமே, அபிதா-வை என்னுள் வைத்துள்ளது.

நேசமித்ரன் said...

மிக நல்ல பகிர்தல் சார்

மந்திரத்வனிதான்தான்
அதை உங்களுக்கு சொல்ல வாய்த்திருக்கிறது
மிகச் சரியாக ....

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

மீண்டும் அபிதாவை படிக்கத்தூண்டிய பதிவு.
நன்றி

SurveySan said...

interesting read.

//"நினச்சேன்..சரி, படி"//

//அட// //ஓ//

ரசித்தேன்

eniasang said...

உங்களுக்கு எத்தனை முகங்கள் அத்தனையிலும் என்ன ஒரு கலை/ளை .அனைத்தும் தெரிந்துக்கொள்ள ஆர்வமாயிருக்கிறது.
scizophrenia பாதிப்பு உள்ளானவர்களுக்கு நீங்கள் நாடகம் மூலம் சிகிச்சை அளித்தாக கேள்வி அது குறித்து பேச ஆசை,உங்களுக்கு விருப்பமிருப்பின்.
தீராநதியில் திரு.நாசர் உங்கள் முத்ரா குறித்து தன் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

blogpaandi said...

//blogpaandi.....apithaa is now available (was in the last book fair) in kizakku. vaanathi pathippakam also have publsihed the novel..the best edition which is now not available was the first edition published by bookventure.

ஐயா, தங்களின் பதிலுக்கு நன்றி.

KarthigaVasudevan said...

லா.சா.ரா வின் அபிதா வை நான் இன்னும் படிக்க வாய்க்கவில்லை ,தேடிக் கொண்டிருக்கிறேன்,இந்த வருடம் புத்தக் கண்காட்சியில் ஒரு வேளை கிடைப்பாளோ என்னவோ? இரண்டு வருடங்களுக்கு முன் வண்ண தாசன் விகடனில் அகம்...புறம் எனும் தொடரில் அபிதா பற்றிச் சொல்லி இருப்பார் ,அப்போது தான் அவள் எனக்கு அறிமுகம் ஆனால்.தொடர்ந்து பல இடங்களிலும் வாசிப்பில் பெயரளவில் கடந்து போய்க் கொண்டே இருக்கிறாள். எப்போது வாசிக்க வசப்படுவாளோ பார்க்கலாம். பகிர்வுக்கு நன்றி டாக்டர்.ருத்ரன்

ரவி said...

ரொம்ப நல்லாருக்கு..........

Post a Comment