Thursday, November 19, 2009

எழுதும் த‌ருணம்பிரபாகரன் செத்தால் எழுதலாம், புவனேஸ்வரி கைதானால் எழுதலாம், சச்சின் 20வருடம் ஆடிவிட்டால், புதிதாய் ஒரு தமிழ்ப்படம் வந்தால்,பங்குச்சந்தை பற்றியோ பிரபுதேவா பற்றியோ கிசுகிசு இருந்தால் எழுதலாம்... எழுத எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பது பதிவுகளைப்பார்த்தால்தான் தெரிகிறது..
ஆனாலும் சில மாதங்கள் நான் எதுவும் எழுதவில்லை. 70வயது கிழவியை வன்முறையைத் தூண்டுபவளாகக் கைது செய்தபோதும் எழுதவில்லை, லட்ச‌க்கணக்கில் விலைவைக்கப்பட்ட காந்தி பேனா குறித்து வயிறெரிந்த பொழுதும் எழுதவில்லை.
இடையில் எழுதலாம் என்று தோன்றாமல் இல்லை. உடனடியாக எழுத்தில் மனதைக்கொட்டவேண்டும் என்ற வேகம் தான் வரவில்லை. மௌனமாக வலிக்கிறது என்று ஒரு நாடகமாடப்படும்போதுகூட மௌனமாக இருந்திருக்கிறேன்..
வலி பற்றியும், வலித்தபோதும், கோபம் பற்றியும், கோபமூட்டியவை பற்றியும்..எதைப்பற்றியும் எழுதவில்லை.
ஆனால், திடீரென்று ஒரு நாளில் மூன்று பதிவுகள்!
சமூக அக்க‌றை, தார்மீகக்கோபம்,இலக்கிய உந்துதல்..எதுவும் புதிதாய் வந்துவிடவில்லை. உள்ளிருக்கும் அற்ப ஆசை தான் காரணம்.
வினவு தளத்தில் தொடர் எழுது என்று அன்புடன் தோழர்கள் கேட்டபோதெல்லாம் எழுத இயலாமல் தவித்த நான், இப்போது நிறைய எழுதிப் பழகுகிறேன்! எல்லாம் ஒரு தமிழ்ப்பதிவுகளின் திரட்டி கேட்டுக்கொண்டதால்!!


என் எழுத்துகள் மக்களிடம் கவனம் பெறவேண்டும் என்னும் ஆவல் மிகுந்த ஆர்வம் பல ஆண்டுகளுக்குமுன்னரே அடங்கிவிட்டது. பதிவுலகம் என்னும் புதிய தளத்தில் பரபரப்பாக என்னையும் காட்டவேண்டும் என்றும் கிடையாது. ஆனாலும், ஒரு தமிழ்ப்பதிவுகளின் திரட்டி கேட்டுக்கொண்டதால் தொடர்ந்து எழுதப்பழகுகிறேன்.
ஏன்?
அங்கீகாரம் என்பதன் மீதுள்ள இயல்பான ஈர்ப்புதான்.
நண்பர்கள், தோழர்கள், தெரிந்தவர்கள், அன்புடன் நெருங்கியவர்கள்..இவர்களெல்லாம் அங்கீகரிப்பது எதிர்பார்க்கப்படும் ஒன்று. அது கிடைக்காவிட்டால்தான் அதிர்ச்சி,ஆத்திரம் எல்லாம்.
அறிமுகம் இல்லாதவர்கள் அங்கீகரித்து, புன்முறுவல் போலொரு வரவேற்பு காட்டும்போது..மனம் உடனே சிலிர்த்துக்கொள்கிறது. இது புதிதாய் ஒரு கலைபயின்று அதில் முதலாய் ஒரு படைப்பு உருவாகும்போது ஏற்படும் கண்விரிப்பு, குதூகலம்.
இதற்கெல்லாமா சந்தோஷப்படுவது? இந்த வயதிலா இப்படி சந்தோஷப்படுவது?
தங்கத்திலான அன்பளிப்புகள் தரும் மகிழ்ச்சியைவிட, அந்நேரம் அவற்றைத் தரும் கைகளில் உள்ள அன்பும், அதன் கண்களில் உள்ள புது உறவுக்கான மௌன அழைப்பும், மனத்துள் விரியும் இதமும் தான் சுகம்.
அப்படியொரு சுகானுபவத்தின் கனவுகளோடுதான் இப்போது எழுதப் பழகுகிறேன்.
என் எதிர்பார்ப்பு ஏமாற்றம் தர நேர்ந்தாலும், இந்த நேரத்தின் இனிமை நினவுகளில் இதமாக வருடிகொடுக்கும்.
என்னை  இன்னமும் ஊக்குவிக்கும் எல்லா அன்பு உள்ளங்களுக்கும் இத்தருணம் சமர்ப்பணம்.9 comments:

eniasang said...

எப்படியாகிலும்........உங்கள் சமூக அக்கறையும் எழுத்தின் மேல் கொண்டுள்ள ஈர்ப்பும் உங்களை மறுபடி எழுத வைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.ஆம் அங்கீகாரம் எத்தனை அவசியம்.ஒரு சின்ன குழந்தை கூட பார்க்கப்டுவதை விரும்புகிறது.(நீங்கள் என்றோ ராஜ் டீவி யில் சொன்னதுதான்)

Anonymous said...

பதிவு பற்றி என்ற தங்கள் பதிவுதான் நினைவுக்கு வருகிறது... தேடல் இன்னும் தொடர்கிறதா? :-)

வால்பையன் said...

நீங்க நிறையா எழுதனும் சார்!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இதோ நானும் வந்துட்டேன். ருத்ரன் என்பது எனக்கு மிகவும் பிடித்த சிவனது பெயர்.

Anonymous said...

:D

superlinks said...

மருத்துவருக்கு,
ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி நீங்கள் மிகச் சிறப்பாக மொழியை கையாளுகிறீர்கள். சிறிய பதிவுகளில் கூட நிறைய சொல்லிவிடுகிறீர்கள். நீங்கள் எழுதாமல் இருப்பது தான் இதுவரை ஏமாற்றமளித்து வந்தது, தற்போது நிறைய‌ எழுத வேண்டும் என்று ஆசையோடு மீண்டும் எழுத முன் வந்திருப்பது என்னைப்போன்ற உங்களுடைய எழுத்தை ரசிப்பவனுக்கு மகிழ்ச்சியளிக்கிற‌து.

உங்களைப் போன்றவர்களின் எழுத்து மக்களுக்கு சரியான வழியை காட்டும் திசை காட்டி என்பதை நீங்களே முழுமையாக ஏற்கும் பொழுது உங்களால் எழுதாமல் இருக்க இயலாது. அதை உணர்ந்து தான் இருக்கிறீர்களா ?

Mukhilvannan said...

அன்புள்ள ருத்ரன்,
யார் எழுதினாலும் எழுதாவிட்டாலும் பூகம்பம் ஒன்றும் நிகழப்போவதில்லை.
எந்த அரசியல்வாதி இருந்தாலும் இறந்தாலும் பூமி வெடித்து விடப்போவதில்லை.
நடப்பது நடந்துகொண்டேதான் இருக்கும்-
தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுதான் மாறுதல் இல்லாதது.
ஒன்று மாற்றம்; இன்னொன்று லஞ்சம்.
வருந்தற்க!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

அன்புடன் அருணா said...

உங்க எழுத்துக்களை பின்னொரு நாள் நீங்களே படித்துக் கிடைக்கும் ஆனந்தம் கூட அலாதிதான்!

malarvizhi said...

"அறிமுகம் இல்லாதவர்கள் அங்கீகரித்து, புன்முறுவல் போலொரு வரவேற்பு காட்டும்போது..மனம் உடனே சிலிர்த்துக்கொள்கிறது." நீங்கள் கூறிய இந்த வார்த்தைகள்
எத்தனை உண்மை . ஒவ்வொரு முறை வலைக்குள் நுழையும் பொழுதும் இன்று யார் யார் நம்மிடம் தம் கருத்தை பகிர்கிறார்கள் என பார்க்க மிகவும் ஆவலாய் இருக்கும். அது மேலும் மேலும் எழுத தூண்டுகிறது. ஆரம்ப நிலையில் இருக்கும் என் தளத்திற்கு வரவேற்கிறேன். நன்றி.

Post a Comment