Thursday, August 22, 2019

சகுந்தலை

சகுந்தலை என்று தமிழிலும் நன்கு அறியப்பட்ட அழகிக்கு ஒரே கதை என்பதே நம்மிடம் பரவியுள்ள கதை. 
அவளுக்கு குறைந்தபட்சம் இரண்டு கதைகள் உண்டு. ஒன்று மகாபாரதத்தில் வியாசர் எழுதியது, 
இரண்டாவது பிரபலமாகி உண்மை என்றே அங்கீகாரம் பெற்ற காளிதாசன் எழுதியது.

அடிப்படை கதை ஒன்றுதான். அவள் காதலிக்கப்பட்டாள், கர்ப்பமுற்றாள், அவன் ஓடிவிட்டான், குழந்தையுடன் அவள் அவனை எதிர்கொள்ள அவன் மறுக்கிறான், இவளது நியாயம் வெல்கிறது. இவ்வளவுதான் சகுந்தலையின் கதை. 

இது மகாபாரத காலமான பொ.யு.மு 400லிருந்து காளிதாசன் காலமான பொ.யு 400ல் வேறு வடிவாய், வேறு விதமாய் மாறியது, காலநீட்சியில் ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களால் என்பது Romila Thappar எழுதிய நூலின் சாரம்.

மகாபாரத சகுந்தலை, துஷ்யந்தனிடம் ஏமாறவில்லை. தெளிவாகவே தன்னைப் பற்றி விவரித்து, தன் காதலை நிச்சயம் தன் வளர்ப்பு தந்தை ஏற்பார் என்று சொல்லி, மணமுறைகளில் ஒன்றான கந்தர்வ விவாகத்துக்கு மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்கிறாள்- ஒரு நிபந்தனையுடன். தனக்கு மகன் பிறந்தால் அவன் அரசனாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவளது ஒரே நிபந்தனை. துஷ்யந்தன் வருகிறேன் என்று சொல்லி காணாது போனபின், குழந்தை பெற்று வளர்த்து, மக்கள் முன் காட்டலாம் எனும் காலகட்டம் வந்தபின் தான் அரசவை செல்கிறாள். அவன் அவளைத் தெரியாது என்று ஏய்த்ததும் நிதானமாய் தன் சினத்தை வெளிப்படுத்தி விவாதிக்கிறாள். அசரீரி அவளுக்கு சாட்சி சொல்லி துஷ்யந்தன் தன் மகனை ஏற்றபின் வெளியேறுகிறாள். கண்ணீரை விடவும் தெளிவான தார்மிகச் சினம், வஞ்சிக்கப்பட்ட வருத்தத்தைவிட தனக்களிக்கப்பட்ட வாக்கு நிறைவேற்றப்பட வேண்டும் எனும் தீர்மான தைரியம்- இதுவே மகாபாரத சகுந்தலை.

காளிதாசன் சகுந்தலை அழகிய பேதை, வஞ்சிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய பெண், கண்ணீரும் கவலையுமாய் கணவனை நாடும் அபலை. மகாகவியின் துஷ்யந்தனும் நாடகக்காவியத்தில் கெட்டவன் அல்ல, அவளை ஏமாற்ற நினைக்கவும் இல்லை. விதியின் சாபத்தால் மறதி பீடிக்க அவளுடன் இருந்ததை மறந்திருக்கிறான். மோதிரம், மீன் வயிறு எல்லாம் காளிதாசனின் கவிதா அத்துமீறல் நியாயம். கவியின் காலத்தில் பெண் அவ்வளவு வீரமாய் தன் நியாயத்தைப் பேச முடியாது. ராஜாவையும் வில்லனாகக் காட்ட முடியாது எனும் நிலை.

ஆரம்பகாலத்தில் இருந்த பெண்ணின் வீர்யம், சுயமதிப்பீடு கலப்போக்கில் ஆணாதிக்கப் பாதிப்பினால் கற்பு, அச்சம், மடம், நாணம், அவையடக்கம், பெண்மைக்க்கேயுரிய பொறுமை, சகிப்புத்தன்மை என்றெல்லாம் மாறியது/ மாற்றிக் காட்டப்பட்டது. டாகூர் கூட இதை முன்னிறுத்தி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ரொமிலா தாப்பர் இன்னும் ஆழ ஆய்ந்து இதை எழுதிய நூல்-  Sakuntala:Texts,Readings,Histories

இரண்டாம் சகுந்தலை கதை காலத்திற்கேற்ப பெண் நிலையை வடிவமைத்ததால் மட்டுமே பிரபலமாகிவிடவில்லை. காளிதாசனின் கவிநேர்த்தி, கதைக்கோப்பு, நாடகமாக்கலின் நுட்பம் தான் அவனது நாடகத்தை உலகெங்கும் கொண்டாட வைத்தது.

0 comments:

Post a Comment