Saturday, July 14, 2018

ஜூலை 14, 2018உளமார நேசிக்கும் என் மருத்துவப்பணி இன்றுடன் நாற்பதாவது ஆண்டில் அடியெடுக்கிறது.
ஆரம்பத்தில், பொது மருத்துவம் பார்த்திருந்த அந்த காலகட்டத்தில் நிறைய நிறைவான மகிழ்ச்சி மிகுந்த தருணங்கள்.  சின்ன க்ளினிக்கில்  என்னைப் பார்க்க மழையில் குடை பிடித்து வெளியே காத்திருந்த மக்களைப் பார்த்த போது, காசு இல்லை என்று கவலைப்படாமல் நான் பார்த்துக்கொள்வேன் என்று தைரியமாக ஏழைகள் என்னை அணுகியபோது, , என் சின்ன க்ளினிக்கில் பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை கையிலெடுத்து அதன் முதல் குரல் கேட்ட போது, சிக்கலான மருத்துவ சிகிச்சைக்குப் பின் நோயுற்றவர் நலம் பெற்று புன்னகைத்த போது, ஏழை எளிய மக்கள் வாழும் அப்பகுதியில் கல்யாணம், காது குத்தல், குழந்தைகளின் பிறந்த நாள் என்று அவர்கள் கொண்டாட்டங்களில் என்னை அழைத்து மகிழ்ந்த போது, தினமும் நாடி வருவோர் எண்ணிக்கை கூடி வந்த போது,  என்று பல மகிழ் தருணங்கள். காசு நிறைய சம்பாதிக்காத போதும் சந்தோஷம் நிறைய இருந்தது.
மனநலம் படித்து, இனி மனநல மருத்துவப் பணி மட்டுமே என்று நான் முடிவெடுத்த பின்னும் அவ்வப்போது தங்கள் மருத்துவப் பிரச்சினைகளுக்காக மக்கள் என்னை இன்னமும் ஆலோசனை கேட்டு வந்தாலும், மனநல மருத்துவப் பணியே என் வாழ்வின் ஆதார சுருதியாக மட்டுமல்ல, வாழ்வில் தினமும் விளக்கமுடியாத சுகநிலையாக அமைந்து விட்டது.
ஒரு மருத்துவமனை உருவாக்கி, அதிலும் ஏழைகள் அதிகமாக வந்ததால், சம்பாதிக்க இயலாமல் அந்த மருத்துவமனையை மூட வேண்டி வந்தபோதும், பெருமளவில் வருத்தம் கொள்ளவில்லை. காசு சம்பாதிப்பதென்றால் மருத்துவப் பணியில் சுலபம், அதுவும் நிறைய பேர் நம்பிக்கையோடு நாடி வந்தால் இன்னும் சீக்கிரமாகவே சம்பாதிக்கலாம். எக்காரணம் கொண்டும் ஏழைகளிடம் இரக்கமில்லாமல் பணம் கறக்கப்போவதில்லை எனும் தீர்மானமும், சுயநெறி பிறழ்ந்து தேவையில்லாமல் சலுகைகளுக்காக மருத்துகள் எழுதுவதும், அவசியமின்றி பரிசோதனைகளுக்காக ( அதில் வரும் தரகுத்தொகைக்காக) மக்களை அலைக்கழித்து செலவு செய்ய வைப்பதில்லை எனும் என் மாற்றம் காணாத உறுதியும்,  பொருளாதார தோல்வியை புறம்தள்ளி தினமும் மகிழ்ச்சியோடு காணவரும் மக்களை அன்புடனும் ஆர்வத்துடனும் சந்திக்க வைக்கிறது.
என் மனநல மருத்துவப் பணியிலும் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரிடமும் “ எல்லாம் சரியாயிடுச்சு, இனி வர வேண்டாம்” என்று சொல்லும் போது வரும் நிறைவுக்கு நிகர் எதுவுமே இல்லை., ஐம்பது பேர் தினம் வந்தாலும் சோர்வும் தளர்வும் இல்லாமல் பார்க்க முடிவது என் பணியின் மேல் எனக்கிருக்கும் காதலினால்தான், அது எனக்குள் ஏற்படுத்தும் பெருமிதத்தினால்தான்.
சென்ற மாதம் தொடர் இருமலுக்குப் பின் குரல் கம்மி பேசுவதே முடியாமல் போனது. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்த விஷயம் ஒரு வாரம் ஆனபின்னும் தொடர்ந்தது. என் உதவியாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டு வந்தவர்களை பார்த்து மருந்து எழுதித் தந்தேன். ஆனால் அது எனக்கு திருப்தியாக இல்லை. அப்போது ஒரு மைக்+ஸ்பீக்கர் வாங்கி அதன் மூலம் கிசுகிசுத்த குரலில் வந்தவர்களுடன் பேச ஆரம்பித்தேன். நான் கஷ்டப்படுவதைப் பார்த்து கஷ்டத்துடன் வந்தவர்கள் எல்லாரும், ரொம்ப பேசாதீங்க சார், நாங்களே சொல்லிடறோம் என்று என்னை கேள்வி கேட்கவிடாமல்  காட்டிய அன்பு என் மனநல மருத்துவப் பணி எனக்குத் தந்த விலையில்லா வெகுமதி.
இப்பணி எனக்கொரு தியானம். க்ளினிக்கில் இருக்கும் நேரம் கவனம் சிதறுவதில்லை, தனிப்பட்ட வருத்தங்கள் நினவுக்கு வருவதில்லை, எந்த சிக்கலின் தாக்கமும் அந்நேரம் ஏற்படுவதில்லை. முழுமையாய் கவனக்குவிப்புடன், சொல்லப்படும் விஷயங்களினாலும் பாதிப்பு வரவிடுவதில்லை. எந்தவித பிரச்சினையை எதிர் இருப்பவர் சொன்னாலும் அது அவிழ்க்க வேண்டிய புதிர் மட்டுமே வருந்தவோ கோபப்படவோ அதில் எனக்கு ஏதுமில்லை எனும் மனநிலையே மனநல மருத்துவப் பணியின் வெற்றி.

இதிலும் எல்லாமே வெற்றிகரமாகவே செய்து வருகிறேன் என்று இல்லை. நோய் நாடி, நோய்முதல் நாடி அது தணிக்கு செயல்பாட்டில் பிசிறோ பிழையோ ஏற்பட்டதில்லை, என் தோல்விகள் எல்லாமே என் நப்பாசைகளாலும் பேராசைகளாலும் தான்.
யாரிடமும் ஒரு பைசா கூட வாங்காமல் மருத்துவம் பார்க்கவேண்டும் எனும் தீராத தாகத்தின் தாக்கத்தில், என்னை நாடி வரும் வசதி படைத்தவர்களைப் பார்க்க தனியாய் ஓரிடத்தில் என் இன்னொரு க்ளினிக் ஆரம்பித்தேன். அதில் வரும் காசினை வைத்துக்கொண்டு இங்கே என் க்ளிக்கில் காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து பெயர் பதிவு செய்து எனக்காகக் காத்திருக்கும் எளிய மக்களுக்கு பணம் வாங்காமல் பணி செய்யலாம் என்பதே திட்டம்.  எல்லா திட்டங்களும் வெற்றி பெற சரியான வியூகங்கள் தேவை. புதிதாய் ஆரம்பித்த இடத்தை விளம்பரப்படுத்தாமல் நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு அல்லது திமிரோடு இருந்தேன். அது நடக்கவில்லை.

நடக்கவில்லை என்று தெரிகிறது, நடக்காது என்று இன்னமும் தோன்றவில்லை. இது ஒரு தோல்வி என்று சொல்லும் மனம், தனக்கே சமாதானப் படுத்த ‘இப்போதைக்கு’ எனும் வார்த்தையையும் சேர்த்துக்கொள்கிறது.
எந்தவித பணபலமோ பின்புலமோ இல்லாமல், ஏழ்மையின் அதிதீவிரத்தையும்  பார்த்து கடந்து வந்த என்னை, இன்று இந்நிலையில் வைத்திருப்பது என் தேவிதான்.

நாளை நாற்பதாவது ஆண்டு. 
இன்னும் இருக்கும் ஆண்டுகளும் இப்பணியிலேயே இன்புற்றிருக்க  மயர்வற மதிநலம் அருளி, அவள் உடன் இருக்கிறாள்.

0 comments:

Post a Comment