Monday, August 8, 2011

இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்?


இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்? என்பதில் தொக்கியிருப்பது என்னவெல்லாம் செய்ய முயன்றாய் என்பதே.

சும்மா ஒரு பட்டியலிட்டுப் பார்க்கிறேன், சிலவற்றை விட்டிருக்கலாமே தவிர எவற்றையும் சும்மா சேர்த்துக் கொள்ளாத ஒரு பட்டியல், 1986ல் ஆரம்பம். 25 வருடங்கள். அதில் கடந்த பத்தாண்டுகள் எதுவும் செய்யாமல்! 

ஆனாலும் மீண்டும் ஏதாவது செய்யத்தான் வேண்டும் என்று ஓர் உந்துதல் இரண்டு நாட்களுக்கு முன் வந்த்து – காரணம் ஆகஸ்ட் ஆறு என்பது எனக்கு ஒரு சாதாரண நாளாகாது. 2000த்தாண்டில், ஏர்வாடி தர்காவில் உயிரோடு தீக்குச் சிலர் இரையாகிய நாள். அரசியல் நாடகமாகவோ, அடுத்தவர் கவனம் ஈர்க்கவோ அவர்கள் தீக்கு இரையாகவில்லை. சட்ட்த்தின் நோக்கில் அது கொலையாகாதிருக்கலாம் என்றாலும் அலட்சியம், அறியாமை, அக்கறையின்மை உயிர்களைக்கொல்லும் என்று எனக்கு (பிறர்க்கும்?) உணர்த்திய நாள். அன்று இறந்தவர்கள் மனநோயாளிகள். தங்கள் சுயநினைவின்றி, சுயவிருப்பின்றி, ‘சொந்தக்காரர்களால்அந்த தர்காவில் அடைக்கப்பட்டு, ஓட முடியாமல் கால்களில் சங்கிலிகள் பிணைக்கப்பட்டு பரிதாபமாக ஒரு தீ விபத்தில் செத்தவர்கள். அவர்களில் ஒருவரையாவது நான் பார்த்திருக்கக்கூடும் 1986ல்.



1986, மனநல மருத்துவனாக வாழ்க்கை ஆரம்பித்த ஆண்டில், மனநோய்களில் மிகவும் தீவிரமான ஸ்கிஸோஃப்ரீனியா (மனச்சிதைவு), குறித்து நண்பர்கள், பாலாசிங்குடனும், ரவூஃபுடனும் ஒரு சுருள் ஃபில்ம் வாங்கி, 35 ஸ்லைட்கள் எடுத்து, அவற்றை ஒருங்கிணைத்து, திரையில் காட்டும்போது ஒலிக்க உரை ஒலிப்பதிவு செய்ததுதான் முதல் முயற்சி. அடுத்த ஆண்டு ‘இனிஎன்று ஒரு நாடகம். அப்புறம் தொடர்ந்து ஆவணப்படங்கள்,ஓவிய கண்காட்சிகள், ஒலி/ஒளி உரைகள் என்று முத்தாய்ப்பாக 1988 ஈடிபஸ் தமிழில் நாடகம்! அந்நேரம் என்னுடன் வைத்தியநாதன், மீனாட்சிசுந்தரம், சாமி-செல்வராஜ் என்று நாடக்க்குழுவிலும் நிஜவாழ்விலும் பங்கேற்ற நண்பர்கள்...இடையில் வேலூர்-வட ஆற்காடு மாவட்ட கிராமங்களில் மாதந்தோறும் விழிப்புணர்வு முகாமகள்...பின்னர் 1990 ஆண்டு GUSH –ப்ரவாகம் என்று பெயரிட்ட அமைப்பின் மூலம் நாடகங்கள், சிகிச்சைப்பட்டறைகள், உரைகள்...பிறகு சொந்தமாய் ஒரு மருத்துவமனை! (இலவசமாய்ப் பலருக்கு அங்கே சிகிச்சை அளித்ததால் கடன், அதை மறக்க ஓவியங்கள் மூல பணம் சம்பாதித்தல்,  அதற்காகவே பழைய நினைவுகளால் பழைய படம் -1993). 1995- 1997 வாரந்தோறும் மனநல விழிப்புணர்வுக்கான தொலைகாட்சி நிகழ்ச்சி, இரண்டு ஆவணப்படங்கள்...பிறகு ஓய்வெனும் பெயரில் ஒரு தொய்வு.

2000ம் ஆண்டு ஏர்வாடி கொடுமை. சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனநோயாளிகள் தப்பிக்க முடியாமல் தீக்கிரையானார்கள் – அதே ஏர்வாடிக்கு 1986 போயிருந்தேன், சங்கிலியால் பிணைக்கப்படும் மூட நம்பிக்கை குறித்து ஆவணப்படம் எடுத்து பதிவு செய்ய. அந்நேரம் உலக அளவில் உன்னதமான புகைப்படக்கலைஞர் ரகுராய் என்னுடன் வந்தார். இருவரும் படம் எடுக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் சிலர் தடுத்தார்கள், எதிர்த்தார்கள், வெளியேற்றினார்கள். அதுவரை மூடநம்பிக்கை குறித்த எதிர்ப்பாக மட்டுமே சென்ற எனக்கு அதிலுள்ள வியாபாரக் கேவலமும் புரிந்தது. எடுத்த படங்களை எனக்குத் தெரிந்த மட்டுமல்ல, அறிமுகமாகாத ஊடகவியலாளர்களிடமும் கொடுத்தேன் ஒருவரும் சீண்டவில்லை.

பதினான்காண்டுகளுக்குப் பின், தீவிபத்து நடந்தவுடன் முன்னம் நான் அண்டிய ஊடகக்காரர்களில் இருவர் அதே படங்களைக் கேட்டபோது நான் தரவில்லை. எந்த வியாபாரத்துக்கும் நான் உடந்தையாக்க்கூடாது என்ற தீர்மானத்தால்.
ஆனால் இந்த ஆண்டு (2011), ஒரு சமூகத்தொண்டுநிறுவனத்தின் சார்பாக தோழி பொற்கொடி கேட்டுக்கொண்டவுடன் ஏர்வாடி 11ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்  ஓவியம் தீட்ட. கலந்து கொண்டதன் முக்கிய காரணம் நண்பர் மருது வரைவதைப் பார்க்கத்தான் என்றாலும் ஏர்வாடி தாக்கமும் முக்கியம். பல ஆண்டுகள் கழித்து பலர் முன்னிலையில் படம் வரைந்தேன். இது படம் வரைந்த பெருமை பற்றிய பதிவு அல்ல.

இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் என்று உரைத்தது; அது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை செய்யட்டுமே எனும் சாய்வு நாற்காலி மனப்பான்மையும் தவறென்று புரிந்தது. அடுத்தவர்களால் முடியாதென்பதால் அல்ல, என்னால் இன்னும் முடியும் என்பதால்.

என்னால் என்ன முடியும்? பேச, எழுத, படம் வரைய, நாடகம் நடத்த, ஆவணப்படம் உருவாக்க இன்னும் முடியும். ஆனால் ஒரு மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்த முடியாது.

ஒழுகும் மெழுகு விரல் தொடுமுன்பே அடுத்து எங்கே போகலாம் எனும் நினைப்புள்ளோருடன் இணைய முடியாது. இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம், பொய்யில்லாமல் பொய் எதிர்த்து.


Monday, August 1, 2011

சும்மா யோசித்த கதை!

கதைசொல்லி சொன்ன முதல் கதையின் மூலம் எது? ஆதிக்கும் மூலம் என்று பரம்பொருளைப் புரியா பொருளாக்கிய கலாச்சாரத்தில், கேள்விகளுக்கு விடை தேடிய காலத்துக்குப் பின் கேட்பது அநாகரிகமாகவும் அபச்சாரமாகவும் ஆக்கிக் கொண்டவர்கள் சொன்னதும் கேட்டுக்கொண்டதும் வெறும் கதைகள்தானா?

கதாகலாச்சாரத்தின் காலப்பின்னோட்டத்தில், யேசுவும், பின்னாளில் ராமக்ருஷ்ணரும் கதை சொல்லி அதன்வழி கருத்தும் சொன்னதன் முன்னமேயே பஞ்சதந்திர கதைகளும் இருந்தன..யீஸாப் கதைகளும் இருந்தன…ஆனால் இவை எப்படி வந்தன?  யேசு ஒரு தச்சுவேலை செய்தவர், ராமக்ருஷ்ணர் படிப்பறிவில்லாதவர், இருவரும் கதை சொல்லி அதன் மூலம் கருத்தும் சொல்லிக்கொடுக்க முயன்றவர்கள். இவர்களிருவருக்கும் முன்னமேயே இந்த யுத்தியைப் பயன்படுத்தி கதை சொல்லி தன் கருத்தைப் பரப்பியவர் புத்தர். அவர் கல்வியறிவும் இருந்தவர், அதைவிடவும், ‘ராஜா வீட்டுப் பிள்ளை’, அவருக்கு கதைகள் சொல்லவே சிலர் நியமிக்கப்பட்டிருக்கக்கூடும். குழந்தை தூங்கும்வரை கதை சொல்லிக்கிடந்தவர் கதைகளை எங்கிருந்து கற்றார்? அந்த காலத்தில் பஞ்சதந்திரக்கதைகள் கேட்டுச் சொன்னதாக வைத்துக்கொண்டாலும், அவற்றை உருவாக்கியவர் எங்கிருந்து எடுத்தாண்டார்? இதிகாசத்தின் இடைச்செருகல்களாக உருவாக்கப்பட்டவற்றுக்கெல்லாம் ஆதி எது? அதற்கான அவசியம் ஏன்? அதன் இன்றைய பரிணாமம் என்ன?

கதை என்பதற்கு கற்பனையோடு நிஜத்தின் களமும் வேண்டும், அதனாலேயே ஆதிகாலத்துக் கதைகள் காடுகளில், மிருகங்களிடையே நிகழ்ந்தன. இயற்கை பார்த்து வியப்பும் அச்சமும் கொண்டவரின் சுயசமாதானமாகவே உருவகிக்கப்பட்ட கடவுள்களைப் போலவே, ஆசைகளின் வெளிப்பாடுகளாக விலங்குகள் மனிதர்களைப் போல நடந்து கொண்டதாகவும், அவை ஒரு நெறிக்குட்பட்டு இயங்கியதாகவும் கதைகள் சொல்லப்பட்டிருக்கலாம். இது அன்றைய அனுமானம் குறித்த இன்றைய அனுமானம்தான்! அனுமான்ங்கள் அனைத்துமே ஆசையின் விஸ்தீரணங்கள்தான். இப்படி இருக்குமோ என்பதைவிடவும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று ஆரம்பித்து, பின்னர் தன் தவறினைத் தானே திருத்திக்கொண்ட காலத்தில், தேவையும்பட்டிருக்காது; ஆனால் இன்று திறந்தமனத்துடன் அணுகுவதாகச் சொல்லிக் கொண்டாலும், மனம் முழுக்கத் திறக்காமல் சில வசதியான ஜன்னல்கள் மட்டுமே திறந்து வைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

Dr.Rudhran, dramatherapy 1992
மீண்டும் கதை பற்றி கதை பேசுவோம்! கதையின் பயன் என்னவாக இருக்கிறது என்பது இப்போது எல்லார்க்கும் தெரியும் என்பதால்தான் செய்திகள் கூட நம்பகத்தன்மை இழந்து கொண்டிருக்கின்றன. கதையும் செய்தியும் இழைத்து ஒரு சுவையான நுகர்பொருளாகியது எனும் கதை சொல்வதும் இன்று ராமன் பாலமும் அணிலுமாக நீதிமன்றத்திலெல்லாம் ஆதாரமாக வைக்கப்படுகிறது.
கதைக்கு முதல் பயன் கவனம் ஈர்த்து, அந்நேரம் கவலை, குறுகுறுப்பு ஆகியவற்றைக் குறைத்தல். ஆனால் ஆதிகாலத்தில் கதைகள் நெறி புகட்டுவதாய் உருவான அரசியல் அவசியமாகவும் ஆரம்பமாகியிருக்கலாம்.

இன்று உருவான, உருவாக்க சிலர் முயலும் கதைகள் குறித்துப் பின்னர் பரிசீலிப்போம். இப்போதைக்கு, கதை என்பதைப் பற்றி எனக்கு சொல்லிக்கொடுங்கள், கதை சொல்லிப்பாருங்கள் அதன் சுவாரஸ்யம், சிரம்ம் இரண்டுமே புரிபடும்போது, கதைசொல்லிகள் அந்தக் கதைகளின் ஆதிகர்த்தாக்கள் பற்றியும் யோசித்துப் பாருங்கள்.

Tuesday, June 7, 2011

சேது நினைவாக..



என் நண்பன் செத்துவிட்டான் எனும் செய்தி வந்தவுடன் நான் இடிந்து ஒடிந்து  விடவில்லை, அழவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை. அவன் வீட்டு முகவரி மட்டுமே இன்னொரு நன்பனிடம் விசாரித்தேன். சாவுக்குப் போய் வந்தேன். இது நேற்று காலை.


பின்னர் நடந்தது, தினசரி யதார்த்த யந்திரத்தனம். இரவு அவன் ஞாபகம் வந்தது. அவனைப் பற்றி என் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன்....

அவன் பெயர் சேதுராமன். நாங்கள் இருவரும் சென்னை ஸெய்ண்ட்மேரீஸ் ஆங்கிலோயிந்தியப் பள்ளியில் ஒரே வகுப்பு மாவர்கள் -1965 முதல்! பள்ளிப் படிப்புக்குப் பின், இருவரும் வெவ்வேறு கல்லூரி, வெவ்வேறு துறை. எப்போதாவது ஒரு பஸ் ஸ்டாண்டில், ட்ரைவின்னில்... என்று சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் எங்களுக்குள் தூரம் வராத ‘என்னடாதான்.
இருவருக்கும் வேறு தொழில், வேறு வாழ்க்கை. நாங்கள் ஒருவரை ஒருவர் தத்தம் திருமணத்திற்குக்கூட அழைக்கவில்லை. ஆனாலும் இருவருக்கும் தெரிந்தவர்களைப் பார்த்தால் ‘அவன் எப்படி இருக்கான்?என்று கேட்காமல் இருந்ததில்லை.


நான் டாக்டராகவும், அவன் ஒரு மருந்துக் கம்பெனியின் மேலாளராகவும் இருக்கும் போதுதான் பல நாள் கழித்துச் சந்தித்தோம். அவன் விற்க வேண்டிய மருந்தை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் மருத்துவர்கள் பரிந்துரைத்துக் கொண்டிருந்த காலம்.. “இதை ஏன் என் கிட்ட ப்ரமோட் பண்றே?”  என்று நான் கேட்டதற்கு அவன் சொன்ன பதில், “ச்சே..ப்ரமோட் பண்ண வரலேடா, சும்மா உன்னைப் பார்க்க வந்தேன்..
அதன் பிறகு அவ்வப்போது சந்தித்தோம், சிரித்தோம், பழங்கதை பேசினோம், சொந்தக்கதைகள் புலம்பினோம். தொடர்பு திடீரென்று ஆரம்பித்தமாதிரியே திடீரென்று காணாமல் போனது.
 
மனநல நிபுணத்துவ மேற்படிப்பு மாணவனாய் நான், திமிருடனோ தன்மானத்துடனோ ஒரு வாத்தியாரை அடிக்கப் போனதால், இரண்டு முறை ஃபெய்ல்! அப்போது அவன் ஒரு மருந்து கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருந்தான், தற்செயலாகச் சந்தித்தோம். “இந்த மாதிரி எக்ஸாம் எல்லாம் வெட்டிடா..என்றேன். அப்போதுதான் தேர்வு முடித்து நான் வீட்டுக்கு வந்திருந்தேன். அவன் பதில் சொல்லாமல் போனான். ஒரு மணி நேரத்தில் அவனிடமிருந்து ஒரு தொலைபேச்சு- “டேய் நீ பாஸாய்ட்டே”...”உனக்கு எப்படிடா தெரியும்?”…  “உன் எக்ஸாமினர் சொன்னாங்கடா”.   “ம்” என்று கூடச் சொல்லாமல் பேச்சை நான் வெட்டிய அரை மணி நேரத்தில் நேரில் வந்தான்.
அவன் மருந்துக் கம்பெனியின் முக்கிய பொறுப்பாளன் என்பதால் சென்னைக்கு வரும் வெளியூர் மருத்துவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டியது தொழில் நிர்ப்பந்தம். நான் தேர்வுக்கு முன்னமேயே அவனிடம் சொல்லியிருந்தால் அந்தப் பேராசிரியையிடம் சிபாரிசு செய்திருக்கலாம். அவனுக்குத் தெரிந்ததே நான் தேர்வை முடித்தபின்!  தன் உத்தியோக நிலை உதவியுடன் அந்தம்மாவை “என் ஃப்ரெண்ட் இன்னைக்கு எக்ஸாம் வந்திருக்கான்...ரிஸல்ட் என்ன மேடம்”  என்று கேட்டதாகவும், அதற்கு அவர் “அவனை ஏம்ப்பா யாருக்கும் பிடிக்கலே, ஃபெய்ல் ஆக்கச் சொல்றாங்க? “ என்று கேட்டதாகவும் சொன்னான்.
அன்று ஏப்ரல் பதினெட்டு! மனநல மருத்துவனாய் ஆன நாள் என்று இப்போது சொல்லிக்கொண்டாலும், அன்று தான் மியாண்டாட் ஷர்மாவின் கடைசிப் பந்தில் ஸிக்ஸர் அடித்தது! ஓராண்டு கழித்து அதே பேராசிரியை தலைமையில் தான் தேசிய மனநல மருத்துவக் கருத்தரங்கில் நாடக உத்திகளைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் ஆய்வைச் சமர்ப்பித்தேன், அது வேறு கதை.
அதன் பின்... அவ்வப்போது பார்ப்போம், பேசுவோம் சிரிப்போம்... விடை பெறுவோம். அவன் என்னென்னவோ வியாபாரங்கள் முயன்றான், என்னிடம் எதையும் விற்க முயலவில்லை. என் நண்பனிடம் அவன் தம்பி வேலைக்குச் சேர்ந்தான் என்பதைத் தவிர அவனுக்கு நான் எதுவும் செய்ததில்லை... சாவுக்கு ஒரு மாலை கூட எடுத்துப் போகவில்லை.
என் நண்பன் செத்துவிட்டான் எனும் செய்தி வந்தவுடன் நான் இடிந்து ஒடிந்து  விடவில்லை, அழவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை. சாவுக்குப் போய் வந்தேன். பல மாதங்களுக்குப்பின் குளிர்பெட்டியில் பிணமாய்த்தான் அவனைப் பார்த்தேன். தூங்குவது போலத் தெரிந்தது,  அவன் தூங்கும் போது நான் அருகிருந்ததில்லை...ஆனாலும் அந்த்த் தூக்கம், துக்கம் குறைக்க என்று புரிந்தது, நெருக்கத்திற்கு அருகிருக்க வேண்டிய அவசியமில்லை என்று மீண்டும் எனக்குப் புரிந்தது.

Thursday, May 19, 2011

மாறும் ரசனை....



மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும். 

அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம். 
சிவாஜியின் மிகையையும் சகித்துக் கொண்ட காலம், டிஎம்எஸ் குறைந்து கொண்டிருந்த காலம், சார்மினார் தினமும் மூன்று பாக்கெட் ஆன காலம். 

ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார்  ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,பிடிக்கும்என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).

இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும்  அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!

அறிவாளிக்கு எம்ஜியார் பிடிக்காது எனும் அடிப்படையில்லா ஒன்றினாலேயே முகவின் முரசொலியை தினமும் படித்தவன் நான். இன்று, கருணாநிதியைச் சகிக்க முடியாமல் (அதற்காக ஜெவைப் பாராட்டவும் முடியாமல்) எம்ஜியாரை ரசிக்கிறேனா என்றும் யோசித்து விட்டேன். 
ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.

ரசனைக்கெல்லாம் காரணம் தேடி, அதைச் சொல்லித்திரிய வேண்டிய நிலை கஷ்டம்தான் ஆனால் இன்னும் முப்பதாண்டுகள் கழித்து, இன்று ரஜினி என்ன வெங்காயம், நடிப்பும் இல்லை ஒன்றும் இல்லை, வெறும் ஃப்லூக் என்று சொல்லிக்கொண்டிருப்போருக்கு, ஒரு சின்ன ரெஃபெரென்ஸ் போலத்தான் இதை எழுதுகிறேன்.

ரசனை மாறும் ஆனால் அதை நியாயப்படுத்துவதில் நியாயம் இருக்காது. 
நாம் செய்வன/ சொல்வன எல்லாமுமா, எல்லாம் மட்டுமா நியாயம்!






Tuesday, May 17, 2011

காதலிக்கக் கற்றுக்கொண்டேயிருக்க..


அவள் அப்படியொன்றும் அழகில்லை  என்று சொல்வதல்ல,  
அவளுக்கு யாரும் நிகரில்லை என்பதே காதல். 
வீம்புக்கும் வறட்டுப் பிடிவாதத்திற்குமாய் வெளியே அறிவிக்கப்படுவதில்லை காதல், 
அது, 
உள்ளே நிழல்கூட இல்லாமல் நிரப்ப, ஒருகணத்தில் பிறக்கும் பேரொளி.

காதலின் ஒரு கோணம் தான் பக்தி. கோணம் ஒரு கோணலான பார்வைதான், அழகாகத் தெரிந்தாலும். 
முழுதாய் பார்க்க, ‘அதுகையிலிருக்க வேண்டும், சுழற்றிப்பார்க்க, அல்லது எனக்குக் கால்களில் வலு வேண்டும் சுற்றி வந்து பார்க்க.. பக்தியில் இந்தச் சலுகை கிடையாது. பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடக்க வேண்டும். உண்மையான காதலில் ‘அதுகையிருக்கும், அனைத்துக் கோணத்திலும் அழகாக இருக்கும், அந்த அழகு நிரந்தரமாகவும் இருக்கும். இது utopian அல்ல.

அழகு மாறுமா? அழகின் இலக்கணம் நிச்சயமாய் மாறும். அப்படி காலத்திற்கேற்ப தன்னையமைத்துக் கொண்டால்தான் அது அழகு. அது நிர்ப்பந்தமல்ல, இயல்பான பரிணாமம். கனவுகளின் வரைபடங்களுக்கும் நிஜத்தின் கட்டிடங்களுக்கும் இருக்கும் ஆழமான பிடித்தமே காதல், அதனால் தான் அது கவிதைகளையும் கனவுகளின் பொய்களையும் உள்ளடக்கி வைத்துக் கொள்கிறது.
படிப்படியாய் இறங்கிவரும் படிமமாய்க் காதலைப் பார்த்தால், பக்திக்கு அடுத்த படியில் ரசனை! ரசனையின் நாயகம் தெய்வநிகர்தான், பகுத்த்றிவாளனுக்கும். உயர்வானதை, உண்மையானதை ரசிப்பவன்,  சாதாரணமானதை, மலிவானதை, காலப்போக்கில் காணாமல் போவதை ரசிப்பவன் பொதுபுத்தி மீறி புரட்சிகரமாகத் தென்படும் பிம்பங்களை ரசிப்பவனை விடக் கீழானவனா? எனக்கு சின்ன வயதில் ஜெயிக்கும் கட்சி பிடிக்கும், இப்போது தோற்பவர் கோணத்தைப் புரிந்து கொள்வது பிடிக்கும், நான் யாரை/ எதை ரசிக்கிறேன்? எல்லாரையும் போல நான் வெற்றியைத் தான் ரசிக்கிறேன், அதே நேரம் எதிரியின் தோல்வியை ருசிக்கிறேன் –மிருகத்தன்மையுடன் அல்ல, மானுட இயல்புடன்.

ரசனை காதலாகுமா? ரசிக்க முடியாததன் மீது காதல் வருமா? ஒரு கணம் வருவதா  காலந்தோறும் வளர்வதா காதல்? ரசனை வளருமா? சமூக அங்கீகாரம் கூட இல்லாமல் முழுமையாய் ஒரு ரசனை காதல் போலாகுமா? ஆகுமாம்! Romantic புதைகுழியில் மூழ்கடித்தவர்களின் முன்னோடி முழக்கம் இது!!_இங்கேயும் இது 60களின் அநாவசிய அடுக்குமொழிக் கலப்புடன்தான் வெளிப்படுகிறது.

நம்பிக்கையின்  projection தான் காதல், பக்தி, ரசனை!  தன்விருப்பை ஒரு பொதுவிதியாக்கும் மனோதற்காப்புதான் காதல், பக்தி, ரசனை.
சாய் செத்தாலும், ஜெ ஜெயித்தாலும் நாளை இன்னொரு தேவரூபம் வானின்று வந்து வாழ வைக்கும் எனும் நம்பிக்கையும், நப்பாசையுமே பக்தி, ரசனை, காதல்.

நான் வாழ்வை ரசிக்கிறேன், நாளையை நம்புகிறேன், என்னிடமே எனக்கென்று பக்தியுடன் பணிகிறேன்... இதை வெளியேயும் சொல்கிறேன்,நான் சரியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இல்லாததால்!



Thursday, May 12, 2011

மௌனத்தின் பேரிரைச்சல்


மௌனத்தின் பேரிரைச்சல்.. தோன்றிய போதே சங்கிலியாய் எண்ணங்களை இழுத்துச் சென்ற சொற்றொடர்.

கவிதையல்ல இது, கவலை; 
முரண்வாதம், முரட்டுவாதமல்ல. 
இது யோசித்த நேரம் வந்தது, 
யோசிக்க வைக்கும் என்றே எழுதப்படுகிறது. இது பொய்யுமல்லாத உண்மையுமல்லாத புதிர்நிலை. 
புரிதலுக்கான குழப்பம், புரியும் அந்த ஒரு கணத்தின் முன்னிருக்கும் இறுக்கமான தயக்கம்.  முதலில் எது மௌனம், எது இரைச்சல்? 

எது எதுவரை மௌனம் அல்லது இரைச்சல்?

அரசியல், ஆன்மிகம், கலை, இலக்கியம் என்றெல்லாம் பேசிக்க்கொண்டிருப்பது பேரிரைச்சலோ என்று ஒரு நெருடல் வந்து விட்ட்து. வெட்டிப்பேச்செல்லாம் கூச்சலே என்று மனம் முடிவு செய்கிறது. பலனின்றிப் பேசுவதும் பேரிரைச்சல் போடுவதும் ஒன்று என்பதை ஏற்கும் மனம், மௌனத்தின் பேரிரைச்சலை மட்டும் சந்தேகிக்கிறது. வார்த்தை ஜாலமாக வரவில்லை இந்த எண்ணக்கோலம். 

மௌனமும் மனமும் ஒன்றியிருத்தல் சாத்தியமா? 
சப்தமே இல்லாததா அல்லது சிந்தனையே இல்லாததா மௌனம்? சொல்லில்லாமல் சிந்தனை இருக்க முடியுமா? வெளிவராத வார்த்தைகள் மனத்துள்ளேயே கரைந்து விடுமா? அந்த வார்த்தைகளுக்கெல்லாமும் அர்த்தங்கள் உண்டா?
எது மௌனம்? அப்படி ஒன்று நிஜமாகவே உண்டா? மௌனம் என்பதே கற்பனை உருவாக்கிய வார்த்தை மட்டுமா? நிசப்தமல்ல மௌனம் எனும்போது மௌனத்திற்கும் ஒரு சப்தம், ஒரு ஸ்ருதி, ஒரு ஜதி உண்டா? அப்படி ஒன்றிருந்தால் அந்த மந்திர அதிர்வுக்குப் பெயர் வைப்பதே அதைக் களங்கப்படுத்தி விடாதா?

மௌனம் தன்னுடன் தான் தொடர்பு கொள்வதை நிறுத்திக்கொள்ளும் போது மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது. பிறருடன் தொடர்பு கொள்ளும்போது பயன்படுத்தப்படும் மௌனம் ஒரு சாகசமாகவே தோன்றுகிறது. என்னிடமே நான் பிரயோகிக்கும் மௌனம் வெட்கத்திலிருந்து தப்பிக்க ஒரு தந்திரமாகவே தெரிகிறது.
மௌனத்தை உணராமல், வரையறுக்கவும் விவரிக்கவும் தேவைப்படும் வார்த்தைகளே பேரிரைச்சலாய்த் தெரிகிறது.





Monday, May 2, 2011

மெழுகுவத்தி இல்லாத நான்..


செத்து விட்டான் அசுரன், 
இனி பட்டாசு கொளுத்துவோம். 
கெட்டவன் சாவைக்கொண்டாடுவது நம் பாரம்பரியம், கலாச்சாரம். 

செத்தவன் பற்றி எதுவும் தவறாகப் பேசக்கூடாது
என்பது அந்நிய கலாச்சாரத் தொற்று. ஹிரண்யன், ராவணன்..என்று எத்தனை கெட்டவர்களின் கெட்ட எண்ணங்களையும் செயல்களைம் நம் புராணங்களில் பட்டியலிட்டிருக்கிறோம்! ஒரு கெட்டவன் செத்ததை வைத்து உலகமுழுதும் எவ்வளவு பட்டாசு கொளுத்துகிறோம். 
அப்புறம் இன்னொரு விஷயம்... செத்தவன் என்ன மாமனா மச்சானா, எனக்கு வேண்டியவனா, நான் கும்பிடும் சாமியா நம்பிடும் சாமியாரா..கொளுத்துவோம் பட்டாஸ்...பறையடிப்போர்க்கு மட்டுமா சாவைக் கொண்டாடத் தெரியும்? ‘நம்ம எதிரி செத்தானே’  என்று கொண்டாடுவோம். ‘நம்மஎன்பது எது என்று நமக்கா தெரியாது? ‘நம்மாளுக்கு எதிரி நம்ம எதிரி’.  ‘நம்மாளு யாரு?’...”நம்பள மாதிரி இருக்குறவன் இல்ல நாம ஆகணும்ன்ற மாதிரி இருக்குறவன் தான் நம்மாளு”.  நவீனோபதேசத்தின்படி, பின்லேடன் பிணமானதைக் கொண்டாடுவோம்.


நேற்று என் நன்பனின் இல்லத்திருமண கலைநிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளி ‘தமிங்கிலிஷில் இந்தியா சுதந்திரம் அடைந்த தேதி எது என்று கேட்டாள். ச்சீஎன்று தோன்றிய அதே நேரம் ஐயோ என்றும் தோன்றியது...அவள் கேட்டது குட்டீஸ்களிடம் என்றாலும் அதுவரை சில ‘க்வஸ்டீன்ஸ்க்கு ‘ஆன்ஸர்சொல்லிக்கொடுத்த எந்த ‘ஆண்ட்டியும் அங்கே வாய் திறக்கவில்லை...எனக்கு திக்திக் அதிகமாயிற்று..நல்ல வேளை ஜூலை நாலுன்னு எதுவும் சொல்லலியேஎன்று கொஞ்சம் சப்தமாய் முணுமுணுத்தால் ‘ஓஎன்று ஒரு குரல் கேட்டது...வெறுப்புடன் அல்ல, ‘சே..மிஸ் பண்ணிட்டோமேஎனும் தொனியில். ரொம்ப ரொம்ப நெருக்கமான நண்பனின் வீட்டு விசேஷம்..வள் என்று நான் விழுந்தால் சம்பந்திகள் என்ன நினைப்பார்களோ..என்றே நான் சும்மா இருந்தேன். நம்ம வீட்டு விசேஷம்..சிலதெல்லாம் கண்டுக்காம இருக்கணும்”  எனும் இன்றைய இருத்தலியலின் இயல்பிலக்கணத்திற்கொப்ப சும்மாயிருந்து விட்டு அடுத்த ஆட்ட்த்திற்குக் கைதட்டினேன்.

வெட்கத்தைத் துடைத்தெறிந்து அடுத்த வேலை பார்க்கும் நடுத்தர (அன்றைக்குச் சொல்லப்பட்ட நாலாந்தர) மனப்பான்மையுடன் நான் இன்று காலை எழுந்து காணாமல் போன முதலமைச்சர் பற்றியும், கடைசியில் வெற்றிவாகை சூடிய தோனி பற்றியும் படித்து விட்டு, என் அற்பவாதத்தால் எனக்கு அவசியமானவற்றைச் சேகரிக்க உழைத்து விட்டு வந்தால்..ஆஹா..இணையம் ஆர்ப்பரிக்கிறது.பின்லேடன் செத்தானாம், அப்பாடாவாம், ஸபாஷாம்!!! செத்தவனைப் பற்றி பேசலாமோ? பேசலாமே...ஏன்னா அவன் நம்மவன் இல்லையே!!!! என்று எத்தனை ஆர்ப்பரிப்புகள்!

அடடா !!!!! நம்மவன் நடத்தை பற்றிப்பேசக் கூடாது, அது அநாகரிகம், அடுத்தவன் வீட்டுப் பாடையை விமர்சிக்கலாம் அது நம் விவேகம்!!! இது தெரியாமல் நான்.. வழக்கமாக சாவு என்றாலும் சமூகவிழிப்புணர்வு என்றாலும் கொளுத்தப்படும் மெழுகுவத்தி தேடினால்...

யேசு செத்தாலும் பிறந்தாலும், உயிர்ப்பலி நிகழ்ந்தாலும் ஊழல் எதிர்த்தாலும் ஏற்றப்பட வேண்டியதாகி விட்ட மெழுகுவத்தி என்னிடம் இல்லை. ஒரு சாவுக்கு அனுதாபம் தெரிவிக்காத கல்மனம் எனக்கு வந்து விட்ட்தாய்ச் சொல்லப்பட்ட போதிலும், சரித்திரப் புகழ் லஞ்சவொழிப்புப் புரட்சியில் பங்கேற்காத பாவி என்று தூற்றப்பட்டபோதிலும், ஸாஸ்த்ர-ஸம்ப்ரதாயத்திற்காகக்கூட ஒரு மெழுகுவத்தி வாங்குவதாயில்லை நான். என்னைப் பொருத்தவரை என் மெழுகுவத்தி ஓளி மட்டுமே தரும், இருள் கூட்டாது.
அப்படியொரு மெழுகுவத்தி இன்னும் கிடைக்கவில்லை.