Thursday, May 19, 2011

மாறும் ரசனை....மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும். 

அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம். 
சிவாஜியின் மிகையையும் சகித்துக் கொண்ட காலம், டிஎம்எஸ் குறைந்து கொண்டிருந்த காலம், சார்மினார் தினமும் மூன்று பாக்கெட் ஆன காலம். 

ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார்  ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,பிடிக்கும்என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).

இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும்  அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!

அறிவாளிக்கு எம்ஜியார் பிடிக்காது எனும் அடிப்படையில்லா ஒன்றினாலேயே முகவின் முரசொலியை தினமும் படித்தவன் நான். இன்று, கருணாநிதியைச் சகிக்க முடியாமல் (அதற்காக ஜெவைப் பாராட்டவும் முடியாமல்) எம்ஜியாரை ரசிக்கிறேனா என்றும் யோசித்து விட்டேன். 
ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.

ரசனைக்கெல்லாம் காரணம் தேடி, அதைச் சொல்லித்திரிய வேண்டிய நிலை கஷ்டம்தான் ஆனால் இன்னும் முப்பதாண்டுகள் கழித்து, இன்று ரஜினி என்ன வெங்காயம், நடிப்பும் இல்லை ஒன்றும் இல்லை, வெறும் ஃப்லூக் என்று சொல்லிக்கொண்டிருப்போருக்கு, ஒரு சின்ன ரெஃபெரென்ஸ் போலத்தான் இதை எழுதுகிறேன்.

ரசனை மாறும் ஆனால் அதை நியாயப்படுத்துவதில் நியாயம் இருக்காது. 
நாம் செய்வன/ சொல்வன எல்லாமுமா, எல்லாம் மட்டுமா நியாயம்!


18 comments:

Deepa said...

//நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்! // Good one!

அழகான ரசனையான பதிவு. எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்கும், கறுப்பு வெள்ளைப் படங்களில்.

Dr.Rudhran said...

Rk Rudhran எம்ஜியாரை இப்போது பிடிக்கும், அவர் எதிரியை ரொம்ப காலமாய் பிடிக்காது என்பதால் அவரது alleged வாரிசு பிடிக்க வேண்டும் என்றில்லை!

eniasang said...

ஒப்பனை சற்றுமின்றி இவ்வளவு வெள்ளந்தியாக இருக்கும் உங்கள் உள்ளத்தை அப்படியே பிரதிப்பலிக்கிறது இப்பதிவு.

eniasang said...

உள்ளத்தில் பட்டதை வெளிப்படையாக சொல்லும் உங்கள் வெள்ளந்தியான மனதை அப்படியே வெளிப்படுத்தியுள்ளது இப்பதிவு.

சின்னப்பயல் said...

ஏன் சார் இவ்வலவு குழப்பத்தோட எழுதி எங்களையும் சரிக்குழப்பத்தில தள்ளீட்டீங்க..?!

Boss said...

உங்கள் பார்வையிலும் சிவாஜி என்றால் மிகை (மட்டும்)தானா?

Dr.Rudhran said...

மிகையாய் தூண்டப்பட்ட தீபம் சிவாஜி!

machan ne kelen said...

yes dr even i waqs like tat, ajith vijay pidikumnu sonna athu arivali elanu nenachutu erun tha kalam+ ajith vijayum unmayagava pidikamal eruntha kalam after cmpltng my college now i like both ajith and vijay ethu avanga vetrien mel vantha mathippa ela nan nenitha mathrfi avalavu easy a vetri kidikathu unmai therincha pothu vantha ninipanu therila

Ashok D said...

:)

ஜோ/Joe said...

ருத்ரன் சார்,
மீண்டும் எம்.ஜி.ஆர் ரசிகனாவதற்கு காலம் கனியாமல் இன்னும் சிவாஜி ரசிகனாயிருப்பவன் நான் ..ஆனாலும் எம்.ஜி.ஆரும் எனக்கு பிடிக்கும் , அதிலும் அவரின் பாடல்கள் , பார்க்கவும் தான் .

உங்கள் கருத்தில் ஒன்றில் மட்டும் மாறுபடுகிறேன் ..இப்போதெல்லாம் அறிவுஜீவித்தனமே சிவாஜி மிகை என்று ஒற்றை வரியில் ஒரு மகா கலைஞனை ஒதுக்கி விடுதல் தான் ..வெகு மக்கள் ரசனையிலிருந்து விலகி நிற்பது தானே அறிவு ஜீவித்தனம் ..ஆம் தமிழ்நாட்டில் வெகு ஜன மக்களிடையே எம்.ஜி.ஆர் எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உட்பட சாமான்ய மக்கள் சிவாஜியை மிஞ்சிய நடிகன் கிடையாது என்று தான் சொல்லுவார்கள் ..அதிலிருந்து விலகி நிற்பது தானே அறிவு ஜீவித்தனம்.

seethag said...

unpretentious MGR is far more easy to watch than pretentious mani ratnam, balachander ,bala and whole heap of others who think getting an award is important rather than doing/making something proper .

mohan said...

ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்)

அருமை
என் ரசனையும் எளிமையான நேர்மையான ஒன்றாய் மாற வேண்டும் என்று முயற்சி செய்கிறேன்

மோகன் , சவுதி அரேபியா

mugzhilvannan said...

எங்கே பிறந்தோமோ சூழலும் ரசைனையுடன் வளர்த்துயெடுக்கிறது .ந‌டிப்பும் ரசிகனும். ருசித்தது உண்டதின் அளவை பொருத்து சலிப்பும் விருப்பமும் சிறந்த நடிகன் என்பவன் யார்? மக்களின் ரசனைக்கு நடிப்பவனா.அவன் ரசனைக்கு மக்களை மாற்றுபவனா . இங்கே சிறந்த வியாபாரிகளே அதிகம்.அங்கே சிரிக்கவைத்த சிவபெருமான் சாரலி சாப்பிளினே சிறந்த நடிகன்.

karthi said...

ethu marum rasanai alla, velipaduthiya rasanai.ok better late than never. -G.Karthik

ஸ்ரீநாராயணன் said...

Osho criticized JK for reading comics and cheap detective novels.

But some how i like the JK way and i dont know the reason. I also like to hear simple things which make me happy :-)

கிருபாநந்தினி said...

மிகை என்று எந்த அளவுகோலை வெச்சுக்கிட்டு அளக்கிறீங்க ருத்ரன் சார்? அப்படின்னா கட்டபொம்மன்கூட மிகைதான்! காமெடின்னாலும் சரி, அழுகைன்னாலும் சரி, ஆக்‌ஷன்னாலும் சரி, மிகைதானே? பாடல் காட்சியில எம்.ஜி.ஆர். காட்டுற முக பாவனைகளைப் பார்த்திருக்கீங்களா? மிகையோ மிகை! சரி சரி, இதையெல்லாம் நான் சொல்லப்போக மிகையா கோவம் வந்துறப்போகுது உங்களுக்கு!

ADMIN said...

நீங்க ஓப்பன் டைப். அப்படித்தானே..!

பகிர்வுக்கு மிக்க நன்றி..!

ராஜ நடராஜன் said...

நானெல்லாம் இன்னும் வளரும்ன்னு நினைக்கிறேன்.இப்பவும் சிவாஜியே பிடிக்கிறது!எம்.ஜி.ஆர்க்கு பாட்டு எழுதியவர்கள் மட்டும் இக்காலத்துக்கான தீர்க்கதரிசிகள்.சண்டைப்பிரியர்களுக்கும்,தாய்க்குலத்துக்கும் எம்.ஜி.ஆர் குழு!புத்திசாலிகளுக்கு சிவாஜி என்ற இரண்டே குருப்தான்.நீங்கள் கட்சி மாறியதில் வருத்தமே:)

Post a Comment