Showing posts with label ஸரஸ்வதி. Show all posts
Showing posts with label ஸரஸ்வதி. Show all posts

Wednesday, March 17, 2010

ஸரஸ்வதீ மீண்டும் நமஸ்துப்யம்.


எனக்கு முதன்முதலாய் சொல்லிக்கொடுக்கப்பட்ட ஸ்லோகம், ஸரஸ்வதி நம்ஸ்துப்யம் என்று ஆரம்பிக்கும். ஸித்திர்பவது மேஸதா, என்று எந்த வேளையில் அன்றைய மழலைக் குரல் வேண்டியதோ, இன்றும் அருகிருக்கிறாள்.

அறியாத வயதில் அறிவு தா என்று வேண்ட வைத்த தெய்வமாகவும், பின் அறிவால் தேட முற்பட்ட தத்துவமாகவும், இன்று அறிவே தெய்வம் எனும் உணர்தலாகவும். ஒரு கட்டத்தில் அவளை அம்மா என்றே பார்த்தேன், பின்னர் அவளே என் காதலி, இன்று அவள் என் சகல பயணத்திற்கும் ஒரு சகி.
தெரியாத விஷயங்களை நான் பேசுவதில்லை, கேட்டுக் கொள்வேன். ஸரஸ்வதி பற்றிப் பேசுகிறேன். நெருக்கமாய்த் தெரியும் என்பதாலும், முழுமையாய் உணர்ந்ததாலும்.
காதலையும் காமமாக மட்டுமே உணர்பவர்களுக்கு நிர்வாணம் ஆபாசம்தான், என்று எனக்குப் புரிய வைத்ததும் சரஸ்வதிதான். என் ஸரஸ்வதி நிர்வாணமாகவும் இருப்பாள், அன்றைய கேரளா நாகரீக அடையாளமாக ஒரு புடவையும் உடுத்தி இருப்பாள், பெரியாரின் புத்தகமாகவும் தெரிவாள். எல்லாவற்றிலும் தெரியும் அவளை எவனோ வரைந்த படத்தின் அச்சிட்டப் பிரதியில் சட்டம் போட்டுக் கண்ணாடியில் நான் அடைக்க முடியாது. மூச்சு முட்டுபவர்களுக்குத்தான் ஆக்ஸிஜன் தனியாகக் கொடுக்க வேண்டும், இயல்பாய் உயிருடன் இருப்பவர்களுக்கு அல்ல.
பேச்சியம்மன் என்று அழைக்கப்படும் கிராம தேவதையும் அவள்தான், வாக் என்று ரிக்வேதம் கூறுவதும் அவளைத் தான். வேதங்களைப் படிக்காமலேயே அதன் மரபைத் தங்களுடையதாகச் சொல்லிக்கொள்பவர்களை விட, பேச்சியம்மனைக் கும்பிடும் பாமரர்களுக்கு பக்தி அதிகம். பேச்சி மட்டுமல்ல, முனியையும் மாரியையும் கும்பிடும் அவர்கள், தங்கள் சாமியை எவனாவது அவமானப்படுத்தினான் என்று நினைக்க மாட்டார்கள்.  அவர்கள் கும்பிடும் சாமி எந்த மனிதனாலும் அவமானப் படுத்தப்பட முடியாத அளவுக்கு வீர்யமானது. நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை, ஒரு முழுமையான சரணடைந்த பக்தி.
பக்தி காதல் மட்டுமல்ல முழுமையான ஓர் அர்ப்பணிப்பு. கணினி தட்டும், அதில் மேலோட்டமாய்ப் படிக்கும் மனிதர்களை விடவும் அவர்களது பக்தி இன்னும் நெருக்கமானது. அவர்களையும் கவரத்தான் கடவுள் இல்லை என்ற கோஷம், ஒருவனே தேவன் என்று மாறியது. இதெல்லாம் சரித்திரம், வலைப்பதிவு எழுத எதற்கு மெனக்கேட்டு இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று என்னால் மேம்போக்காக மேட்டிமைத்தனத்தோடு இருக்க முடியாததால் இதை எழுதுகிறேன். யாராவது இனியாவது தெரிந்து கொள்ளட்டுமே என்று. 
நம்பிக்கையோடு அல்ல, நப்பாசையோடு.
மீண்டும் சரஸ்வதிக்கு வருகிறேன், இப்படி ஒன்றை எழுத ஆரம்பித்து வேறெங்கோ போவதும் அவளால்தான் என்று ‘ஹிண்டு’ மதம் சொல்கிறது! அதனால்தான் அவள் சித்சக்தி!

ஸரஸ்வதி எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். அவளது உருவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் ஞானசரஸ்வதி சிற்பம். . இவளைத்தான் பிரம்மவித்யாம்பிகை என்று திருவெண்காட்டில் காட்டுகிறார்கள். கூத்தனூர் கோவிலில் அவள் முகம் கொஞ்சம் மொக்கையாக இருக்கும்.

இதைவிட அழகு ஹோய்ஸாலா நர்த்தன ஸரஸ்வதி. நீல தாரா என்பதும், க்வாஞின் என்பது அவளது உருவம்தானாம். இவையெல்லாமுமே கதை கேட்டு கலைஞர்கள் வடித்த உருவங்கள். சோழ சாம்ராஜ்யத்தில் யவனர்கள் தெருவில் திரிந்தார்கள் என்றால், அன்றைய மங்கையர் திறந்த மார்போடு இருந்திருக்க முடியாது (இன்றைய கலாச்சாரக் காவலர்களும் இதையாவது ஒப்புக்கொள்ள வேண்டும்). அதனால் கடவுளை நீங்கள் தினம் பார்க்கும் மங்கையரைப்போல் உடுத்திக் காட்ட முடியாது என்று தான் சோழ காலச் சிற்பிகள், தெய்வங்களைத் திறந்த மார்போடு படைத்தார்கள். (கச்சை கட்டியதெல்லாம் பின்னர் கும்பகோணத்து நவீன சிற்பிகள் கைங்கரியம்).
இதனால்தான் என் முந்தைய ஒரு பதிவில் சரஸ்வதிக்கு ஸிலீவ்லெஸ் போட்டு வரையலாமா என்பது தவறாகிறது. (எழுதாமல் இருக்க முடியவில்லை: ஏன் இன்னும் 'கலாச்சாரம்' சரஸ்வதியை புடவையிலிருந்து ஸிலீவ்லெஸ் டாப்ஸ் வர விடாமல் தடுக்கிறது? இன்னும் எல்லாரும் அப்படி மாறவில்லை என்பதால். எல்லாரும் டாப்லெஸ் ஆகும்போது அவள் ஸிலீவ்லெஸ் ஆகலாம் போலிருக்கிறது. (நாம்தான் கலாச்சாரம் என்பதை நெறி என்பதை விட பழமை என்று நினைத்துக் கொள்பவர்களாயிற்றே!)
பிரம்மாவும் ஸரஸ்வதியும்

மேலே உள்ள படத்தை நான் பார்க்கும்போது அது அறிவும் படைப்பும் இணையும் அற்புத நிலையாகத் தோன்றுகிறது. ஒன்றில்லாமல் ஒன்று இருந்தால் இந்தச் சிற்பம் இருக்கும் கால அளவு கூட நிலைக்காது,  படைப்புக்கு அறிவு தேவையில்லை, இருந்தால் இன்னும் பிரகாசமாகும்.
ரஞ்சி-நித்தி போல் தெரிந்தால் அபச்சாரம். ஜாக்ரதை!
ஸரஸ்வதி, என்னை ஏன் வீணர்களுக்கு விளங்க வைக்க முயல்கிறாய்?அறிவின் அற்புதம் பற்றி எழுதத் தவறிவிட்டேன்.

மஹாலக்ஷ்மி செல்வம் தருவாளாம். அவளை யாரும் உதாசீனப் படுத்த முடியாதாம். அவள் எவ்வளவு முக்கியமானாலும், வைணவ ஸம்ப்ரதாயத்தில், அவளுக்கு இரண்டாம் இடம்தான். எனக்குத்தெரிந்து பத்மாவதி தாயாரைத் தவிர அவளுக்கென்று பிரத்யேகக் கோவில் கிடையாது. சென்னை பெசன்ட் நகர் கோவிலைப் பற்றிக் கூவ வேண்டாம் அது இந்தக்காலம், நீங்கள் ஒத்துக்கொள்ளாத காலம்.
 

பராசக்தி பலம் பொருந்தியவளாதலால், அவளுக்கு அவளது நாயகனுடன் சரிபங்கு. வீரமாதா மட்டுமல்ல காருண்யா. என்பதனால் அவளுக்கு அவ்வப்போது தனிக் கோவில். நாயகனோடு இருக்கும் சில கோவில்களிலும் அவளுக்கு முக்கியத்துவம் (மதுரை போல). அவளுக்கென்றே பிரத்யேக வழிபாட்டு முறையும் ஸ்தலங்களும் உண்டு( காஞ்சி போல).
 
 
இந்த மூன்று நாயகர்களில் குறைந்த மதிப்பீடு வாங்குபவன், சரஸ்வதியின் நாயகன் பிரம்மன்! அவனுக்குத் தனியாக ஒரே ஒரு கோவில் தான் இந்த ‘ஹிந்து’ சாம்ராஜ்யத்தில்! ஆனால் அவனை வணங்காதவர்களும் அவளை வணங்குவார்கள். இன்று குழந்தையை வைத்திருப்பவர்களும்,  என் அனுபவத்தில் கண்ட அறிவாளிகளைப் போல், நாளை அவளை வேண்டி நிற்பார்கள்.

இதிலிருந்து எனக்குப் புரிவது, செல்வம் ஒரு நாயகனை செல்வாக்கால் வாங்கலாம், வீரம் ஒரு நாயகனை மிரட்டியாவது சம உரிமை வாங்கலாம், ஆனால் கல்விதான் நாயகியாகத் தனித்தன்மையோடு விளங்க உதவும். கல்வி, ஆழ்ந்து அறிவது, அலட்டல் இல்லாதது, தவறுகளை ஒப்புக் கொள்வது.
மீண்டும் ஸரஸ்வதீ, நமஸ்துப்யம். உன்னிடம் வரம் தா  என்று இன்னுமா கேட்பது? இதைப் படிக்கும் ஹிண்டூஸிடம் கருணை கொண்டு புரிய வை.