Friday, April 23, 2010

கொண்டாட இன்றும் நாளையும்


எல்லா நாட்களும் கொண்டாடப்படும் வாழ்க்கை சாத்தியம் இல்லை. கொண்டாடவே சில நாட்களை நிர்ணயிப்பதும் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் சில நாட்கள் கொண்டாடாவிட்டாலும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை மறுக்க முடியாத நாட்கள்..மே-1 , ஆகஸ்ட்-15, போல.
இன்று இதைக் கொண்டாட வேண்டும் என்று குறித்து வைத்துக்கொண்டு காதலுக்காக, நட்புக்காக, அன்னையர்க்காக, ஆசானுக்காக, என்று அந்தந்த நாட்களில் சம்பிரதாயமான மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. எனக்குப் பிரத்யேகமான தேதிகளை பகிரங்கமாக்கி, அன்பு கொண்டவர்களையும் பலவந்தமாகக் கொண்டாட்டத்தில் நிர்ப்பந்திப்பதிலும் விருப்பமில்லை. குழந்தையின் பிறந்த நாள், அன்புக்குரியவர்களின்  திருமண நாள் இவை தவிர கட்டாயமாகக் கொண்டாட நான் எங்கும் செல்வதில்லை. எந்த விதிக்கும் விலக்கு இருக்கும்போது நானே வைத்துக்கொள்ளும் விதிகளுக்கு மட்டும் எப்படி விலக்கு இல்லாது போகும்?
எனக்கு நெருக்கமான ஒருவரின் 89ஆம் பிறந்த நாளில் கலந்து கொண்டு கேக் சாப்பிடிருக்கிறேன்; மிக நெருக்கமானவரின் பிறந்த நாளில் வழக்கமாய் ஏற்காத காலைச் சிற்றுண்டியும் உண்டிருக்கிறேன். அப்படி ஒரு தேதிதான் இன்றும் நாளையும் எனக்குக் கொண்டாடப்பட வேண்டிய நாட்களாய் இருக்கின்றன.
இன்று உலக புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது, ஷேக்ஸ்பியர் நாளாக, இன்னும் பல எழுத்தாளர்களின் பிறந்த நாளாக.
நீங்களே கூகிலிட்டுத் தெரிந்து கொள்ளக்கூடிய விவரம்தான் என்றாலும் சொல்லவும் தோன்றுகிறது ( இல்லையென்றால் பதிவும் ரொம்பச் சின்னதாகி விடும்). இன்று புனித ஜார்ஜ் நாள்! இந்தப் புனித+தமிழ்ப்படுத்தப்பட்ட பெயர் ஒன்றை ஒரு முறை எழுதி என் நண்பருக்கு வழிதெரியாமல் போயிருக்கிறது- சென்னையில் புனித தோமையார் குன்று அருகே.. என்று விலாசம் எழுதியதால். ஜார்ஜ் என்ன செய்தார் என்றெல்லாம் தெரியாது ஆனால் படங்களில் அவர் ஒரு கோரமிருகத்தைக் கொல்வார்! அவரது படத்தை வைத்துக் கொள்வது ஒரு பாதுகாப்புக் கவசம் போல என்று உலகில் ஒரு நம்பிக்கை உள்ளது. வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு புனிதரின் நாளாகச் சொல்வார்கள், தவிரவும் அனைத்துப்புனிதர்கள் தினம் ஒன்றும் உண்டு. ஜார்ஜ் நாள் புத்தக நாளானது தான் இன்று- 23 ஏப்ரல். இதை 1925 முதல்  இப்படிக் கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
புத்தகங்கள் புனிதமானவைதான் எனக்கு, இந்த நாட்டில் அவை சரஸ்வதியின் ரூபம் என்று நம்பவைத்து வளர்க்கப்பட்டவன் நான். புத்தகங்களும் ஒரு பாதுகாப்புக் கவசம்தான். நிஜத்திலிருந்து தப்பிக்க மட்டுமல்ல, மூடத்தனத்திலிருந்து தப்பிக்கவும். புத்தகங்கள் சூழ தினம் இருப்பவனுக்குத் தனியாக ஒரு புத்தக நாள் தேவைப்படாதுதான் என்றாலும், தினம் நம்முடன் இருப்பதாய்ச் சொல்லிக்கொள்ளும் கடவுளுக்கும் ஜெயந்தி கொண்டாடி மகிழும் கூட்டத்தில், ஜார்ஜுக்காக அன்றி புத்தகத்துக்காக இந்நாள் திருநாளாவதில் மகிழ்ச்சி.
ஷேக்ஸ்பியர் எப்போது படித்தாலும் இன்னும் படித்து முடிக்காத உணர்வு தரும் எழுத்தாளர். 1960களில் E.F.TODD என்பவர் அவரது கதைகளை ஐந்தாம் ஆறாம் வகுப்புச் சிறுவர்களுக்காக நிறைய எழுதியிருக்கிறார். அவரை மாக்மில்லன் அல்லது பிளாக்கி நிறுவனங்கள் பதிப்பித்தன என்று ஞாபகம். ( பழைய புத்தகக் கடைகளில் தேடினால் இன்றும் கிடைக்கும், 10 வயது குழந்தைகள் படிக்க உதவும்). நான் முழுதாய், ஆழமாய் படித்த முதல் ஷேக்ஸ்பியர், a Mdisummer night's dream . அதிலிருக்கும் பல வரிகள் இன்றும் நினைவில் இருக்கின்றன.
இந்த உலக புத்தக நாள் ஷேக்ஸ்பியர் பிறந்த நாள் என்பதால் குறிக்கப்பட்டது என்று ஒரு கதை உண்டு. இது தவிரவும் இதுதான் அவரது இறந்த நாள் என்றும் சொல்வார்கள். அவரது பிறப்பு, வாழ்க்கை இறப்பு எல்லாமே அனுமானங்கள். என்றாலும் அவரது பெயர் போற்றுதலுக்குரியதுதான். அவரது சிறப்பு: அவர் எழுதிய நூல்களை விடவும் அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களே அதிகம்!
இன்று எல்லாரும் கொண்டாடி முடித்தாலும் நான் நிறுத்திக் கொள்ள முடியாது. நாளை என் ஆசான் பிறந்த நாள். புத்தகம், எழுதியவரை மீறி நிறையச் சொல்லும். ஆனால் சில எழுத்தாளர்கள்தான், தம் மௌனத்திலும் சொல்லிக்கொடுப்பார்கள். இதை லாசராவிடம் அமர்ந்திருக்கும்போது உணர்ந்திருக்கிறேன், பிறகு ஜேகேவிடம்தான் அனுபவித்திருக்கிறேன்.
அவருடன் நான் இருந்த எல்லா நிமிடங்களும் எனக்கு புத்தகங்கள். அந்த புத்தகங்களின் விழாவாகவும் நான் 24 ஏப்ரல் கொண்டாடுவேன், நேரில் பார்த்தாலும் மௌனங்களின், புன்னகைகளின் நினைவுகளோடு.

7 comments:

AkashSankar said...

//இந்த நாட்டில் அவை சரஸ்வதியின் ரூபம் என்று நம்பவைத்து வளர்க்கப்பட்டவன் நான்.//

எத்தனை உண்மையான வார்த்தைகள்... அறியாமை இருளை அகற்றுவதாக சொல்லி... பல விடயங்களை திணித்துவிட்டனர்....

தனி காட்டு ராஜா said...

//எனக்கு நெருக்கமான ஒருவரின் 89ஆம் பிறந்த நாளில் கலந்து கொண்டு கேக் சாப்பிடிருக்கிறேன்; மிக நெருக்கமானவரின் பிறந்த நாளில் வழக்கமாய் ஏற்காத காலைச் சிற்றுண்டியும் உண்டிருக்கிறேன்.//

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை ......பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறார்கள்?? வயது ஏற ஏற நாம் சாவை நோக்கி தானே போய்கொண்டு இருக்கிறோம் ..........
நான் என் பிறந்த நாள் முழுவதும் அழுவேன் .......நான் என்ன நினைகிறேன் என்றால் 364 சந்தோசமாக இருக்க முயல வேண்டும் ........பிறந்த நாள் அன்று சாவை பற்றி யோசித்து பார்க்க வேண்டும் ..........

Murali said...

//அவருடன் நான் இருந்த எல்லா நிமிடங்களும் எனக்கு புத்தகங்கள் //
-நல்ல படிப்பினை.

Chitra said...

/////அவருடன் நான் இருந்த எல்லா நிமிடங்களும் எனக்கு புத்தகங்கள்./////


....It is an honor! எவ்வளவு அனுபவித்து சொல்லி இருக்கிறீர்கள். :-)

Nanditha said...

My son is turning 11 on 24th April and I always present books for his birthday and this year I came by your blog and just ordered it in Amazon.

He loves to read and hope he enjoys this one too 'Shakespeare by E.F.DODD'. Thanks for sharing.

Rathna said...

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல யாரையும் கட்டாயப்படுத்தி கொண்டாட வைப்பதில் எனக்கும் எப்போதுமே உடன்பாடு கிடையாது, இன்னும் இரண்டு தினங்களில் எனது பிறந்தநாளும் வருகிறது யாரும் என்னை இது வரையில் வாழ்த்தியதும் இல்லை அதை எதிர்பார்க்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை நான் கொண்டாடியதும் இல்லை, எனக்கு வயது எத்தனையானாலும் அதைப்பற்றி கவலைப்படுவதும் கிடையாது, எனக்கு உடன்பிறப்புகள் இல்லை அதற்கும் நான் எப்போதும் வருந்தியதும் கிடையாது, என் குழந்தைகள் கேக் வெட்டி புத்தாடை உடுத்தி நண்பர்களுடன் குதூகலிப்பதை நான் நிராகரிப்பதும் இல்லை முழுமனதுடன் ஏற்ப்பதும் கிடையாது, அவர்களுக்கு புரிந்து கொள்ளும் வயது வந்த பின்னர் அதற்க்கான எனது நிலையை விளக்கவும் தவறியது இல்லை.

நான் இந்த உலகத்திலேயே அதிகம் விரும்புவது ஒன்றே ஒன்று என்றால் அது புத்தகங்கள் தான், ஆனால் புத்தகங்களை படிக்க உடலில் தெம்பு குறைந்து வருகிறது, நீங்கள் இந்நாளை நினைவுபடுத்தி பகிர்ந்து கொண்டதற்கும் என்னையும் பகிர வைத்தமைக்கும் நன்றி.

Unknown said...

நான் இந்த உலகத்திலேயே அதிகம் விரும்புவது ஒன்றே ஒன்று என்றால் அது புத்தகங்கள் தான், ஆனால் புத்தகங்களை படிக்க உடலில் தெம்பு குறைந்து வருகிறது, நீங்கள் இந்நாளை நினைவுபடுத்தி பகிர்ந்து கொண்டதற்கும் என்னையும் பகிர வைத்தமைக்கும் நன்றி.

Post a Comment