Tuesday, April 6, 2010

பிரொமேத்யஸ்


நம் புராணக் கதைகளுக்குச் சற்றும் சளைக்காத கற்பனையோடு எழுதப்பட்டவை கிரேக்கப் புராணக்கதைகள். அதில் ஒன்றுதான் பிரொமேத்யஸ் கதை. அவன் புரட்சியாளனா, தீர்க்கதரிசியா, விளம்பர விளையாட்டுக்காரனா, சக-உயிர்-நேயனா, கதைக்கு அவசியமான கெட்டவனா, நாயகனா.. இப்படி நிறைய கேள்விகளை உள்ளடக்கியது அவன் கதை.
அவன் தெய்வங்களில் ஒருவன், ஆனால் தெய்வங்கள் மனிதர்களுக்குத் தெரியாமல் ரகசியங்களை வைத்துக் கொண்டு ஒரு வித மிரட்டல் வியாபாரம் செய்வது பிடிக்காமல், அந்த ரகசியங்களில் ஒன்றை மனிதர்களுக்கு எடுத்து வந்து கொடுத்து விட்டான். தெய்வங்களின் தலைவனுக்குக் கோபம் வந்தது, சாபத்த்தீர்ப்பு ஒன்றை அளித்தான். அது- பிரொமேத்யஸ் ஒரு பாறையில் பிணைக்கப்பட வேண்டும். தினமும் கழுகுகள் அவன் கல்லீரலைக் கொத்திச் சாப்பிட வேண்டும். இரவில் அந்த ஈரல் மறுநாள் விருந்துக்குத் தயாராகிவிட வேண்டும்; காலங்காலமாய், இந்த தண்டனை தொடர வேண்டும்! இது ஆதி கதை.
இதை காஃப்கா யோசித்து, இதில் நான்கு கதைகள் இருப்பதாய் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறான்.
முதல் கதை: தெய்வங்களை விட மனிதர்களுக்கு சில முக்கியமான விஷயங்கள் தெரிய வேண்டுமென்று, முதல் ரகசியமாக ஒன்றை தேவலோகத்திலிருந்து திருடி மானுட உலகத்துக்குத் தந்தான். தெய்வத்தின் கோபம் சாபமாக, தினமும் அவனது கல்லீரல் கழுகுகளால் தின்னப்படும், பின் மீண்டும் வளர்ந்து மறுநாளும், பின்னாளும் எந்நாளும் தின்னப்படும்  என்று தெய்வீகத்தீர்ப்பானது. ( இதில் ஒரு மருத்துவ ரகசியம்! கல்லீரல் வளரும்!!). தினம் அவன் கொத்தப்பட்டான், கழுகுகளால் தின்னப்பட்டான்!! காலங்காலமாக.
இரண்டாவது விதமான கதை: வலிதாங்க முடியாமல் பிணைக்கப்பட்ட பாறையில் அழுந்தி அழுத்தித்தன்னைத்தானே பாறையோடு புதைத்துக்கொண்டான். அவனுக்கும் அவன் பிணைக்கப்பட்ட பாறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போனது. அப்புறம் கதையும் இல்லாமல் போனது.
மூன்றாம் கதை விதம்: என்ன குற்றம், என்ன துரோகம், என்ன பாவம் என்ன தண்டனை..எல்லாவற்றையும் எல்லாரும் மறக்க ஆரம்பித்தார்கள், பின் மறந்தும் விட்டார்கள். கோபம் கொண்ட தெய்வம், குற்றம் புரிந்த தெய்வம், தண்டனை தரும் கழுகுகள்..எல்லாருமே இதை மறந்து விட ஆரம்பித்தார்கள். அவனுக்கும் ஏன் எதற்கு எப்படி எல்லாமும் மறந்து போனது. வலியே வாழ்க்கையானபின், கேள்விகள் போல காரணங்களெல்லாம் அவசியமில்லாது  போய் விட்டன.  தன்னையே மறந்தான். தன் நோக்கத்தை மறந்தான். தானும் தன் தண்டனையுமே தொடர்நிஜம் என்று கிடந்தான்.
நான்காவது கோணத்தில், அவன் இல்லை. அவனை மட்டுமல்ல, அவனது வலியின் காரணத்தைக்கூட எல்லாரும் மறந்து விட்டனர். சபித்த தெய்வம், சாபத்தை நிறைவேற்றும் கழுகு, சபிக்கப்பட்ட அவன், சாபம் வரக் காரணமான மானுடம், சபித்த தெய்வம்.. எல்லாரும் சலித்து, சோர்ந்து, மெத்தனத்தில் மூழ்க, அவனும் கல்லும் ஒன்றாக,  பூமியில் கற்கள் நிறைந்தன.
இந்த ஒரு மலையில் அந்த ஒரு தரையில் என்றில்லாமல், எல்லா இடத்திலும், எல்லா நியாய அநியாயங்களும் கதைககளாயின. கதைகள் எல்லாமும் கற்கள் ஆயின. காலால் உதைக்க, கடவுளாய் மதிக்க!
கற்கள் தம்முள் கதைகளை மட்டுமல்லால் கற்பனையையும் புதைத்துக் கொண்டு காத்திருக்கின்றன. சும்மா தான்.  வால்மீகி வியாசன் போலில்லாமல்- வளவள என்றில்லாமல்- சுருக்கமாக எவனாவது நிஜத்தைச் சொல்வானா என்று.
கற்களைப் பார்த்து அசிரத்தை நிறைந்த ஒப்பனைக் கரிசனத்தில் கணினிகளில் விரல்கள் வேகமாய் ஆடுகின்றன.
ஆடும் வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்! என்பது எவ்வளவு நிச்சயமோ அப்படித்தான் கூடி வரும் கூட்டமும் கொள்ளிவரை வராது.
கொள்ளியும் முடிவல்ல ஆரம்பம்தான், எப்போதும். 
பிரொமேத்யஸ் தேவலோகத்திலிருந்து திருடி மனிதர்க்குக் கொடுத்த முதல் ரகசியமும் ஒரு கொள்ளிதானாம்!.

11 comments:

Dr.Rudhran said...

இதில் ஆங்காங்கு சில சுட்டிகள் கொடுத்திருக்கிறேன்! விடலைகள் விவரம் தெரியாதவர்கள், என்னை என்னவோ பிரொமேத்யஸ்க்கு மாமானாய் மச்சானாய் நினைத்து அவன் புகழ் பரப்பவோ என் புகழ் (?) பரப்பவோ (???) எழுதுவதாய் நினைக்கக்கூடாது என்பதற்காக.

அப்புறம், இதில் யோசிக்க முடிந்தால் நிறைய இருக்கிறது. வெறுப்பு யோsiக்க விடாது! அன்பும்!!

ஸ்ரீ said...

டாக்டர் காஃப்கா லிங்க வேலை செய்யவில்லை
http://draft.blogger.com/
பகுதியை நீக்கவும்

Prasanna said...

அறிமுகத்திற்கு நன்றி..!

kavinsandron said...

இந்த கதை நளினிக்காக எழுதப் பட்டதாக எனக்கு தோணுகிறது.

பனித்துளி சங்கர் said...

சிந்திக்க தூண்டிய பதிவு . பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் !

ராஜ நடராஜன் said...

இடுகையும் புரியல.கிரேக்க கதையும் புரியல.தத்வார்த்தமா என்னமோ சொல்ல வர்றீங்க போல இருக்குது.நேர் உரைநடைக்கு வந்திட்டீங்கன்னா புரிதலுக்கான நேரம் மிஞ்சும்.

காஃப்கா தொடுப்பில் பிரச்சினை ஒன்றுமில்லை , ஸ்ரீ.

Murali said...

ஒவ்வொரு முடிவிலும் ஒரு புதிய தொடக்கம், பதிவின் பினோட்டங்களை போல், ஆனால் முடிவுஎன்பது முடியாமல் போனால்...
kafka தொட்ட கதை ஒரு தொடர்கதை. இது கதை அல்ல நிஜம்.
கல்லில் சிற்பம் மட்டுமல்ல கதைகளும், கற்பனைகளும் கூட தூங்கலாம் என்பது அருமை.

Rathna said...

இந்த கதையை படித்தே ஆகவேண்டும் என்று தோன்ற செய்திருக்கிறது.

Thenammai Lakshmanan said...

வலியே வாழ்க்கையானபின், கேள்விகள் போல காரணங்களெல்லாம் அவசியமில்லாது போய் விட்டன. தன்னையே மறந்தான். தன் நோக்கத்தை மறந்தான். தானும் தன் தண்டனையுமே தொடர்நிஜம் .//

அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் விரும்பி ஏற்றுக் கொள்வது இது..ருத்ரன்

pichaikaaran said...

வித்தியாசமான பதிவு... நன்றி

pichaikaaran said...

" வாழ நினைத்தால் வாழலாம் :" என்ற தங்கள் புத்தகத்தை இன்றுதான் வாங்கினேன்.... முன் சாய்வு என ஆரம்பமே அமர்களம்.... படிச்சுட்டு , இன்னும்சொல்லுவேன்

Post a Comment