Sunday, March 7, 2010

என் தெய்வம் அவமானப் படுத்தப்படுகிறது.

தெய்வம் என்பதன் பொதுத் தன்மை புரியாதவர்கள் தான் அதன் மீது பிரத்யேக உரிமை கொண்டாடுவார்கள்.
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்து அசிங்கப்படுத்திவிட்டதாக ஹூஸைன் மீது இந்துத்வ வெறி எதிர்ப்பலை வீச அதை அடக்க தைரியமில்லாத அரசு மௌனம் சாதிக்கும் கேவலத்தைத் தான் எழுதினேன். அது பொறுக்கவில்லை. பதில் எழுதிய ஜன்மங்கள் என்னிடம் “உன் தாயை அப்படி வரைவாயா?” என்று கேட்டன. ஆம் என்றேன். உடனே, “எங்கே வரைந்து காட்டு” என்கிறார்கள். என் மனைவி இது குறித்து எழுதிய பதில் பதிவிலும், எங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். இந்த மானங்கெட்ட ஜன்மங்களுக்குப் பதில் சொல்வதற்காக அப்படியொரு படம் வரைந்து வெளியிட பதிவெழுதும் நேரம் கூட ஆகாது. இன்னமும் அப்படி வேண்டுவோர் சரியான முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்புங்கள் தரவேண்டியதைத் தருகிறேன்.

கடவுளுக்கு மனித முகம் எப்போது வந்தது? ரவிவர்மா வரைந்த சரஸ்வதி மாதிரிதான் அவள் இருப்பாளா? ரவிவர்மா காலத்தில் பார்டர் வைத்த ரவிக்கையை அவளுக்குப் போட்டு அழகு பார்த்தால், இப்போது ஸிலீவ்லெஸ் டாப்ஸுடன் அவளை அழகுப் படுத்தலாமா? ரவிவர்மா என்ன பிரம்மலோகத்தில் எடுத்த பாஸ்போர்ட் படத்தை மாடலாக வைத்துத்தான் அவளைப் படம் வரைந்தாரா? ஹொய்ஸாலா சிற்பங்களில் பலவற்றில் அவளுக்கு ஆடை அணிவிக்கப்படவில்லை! அவற்றைப் பார்க்கும் போது பாலுணர்வு தூண்டப்படுகிறதா? அவை ஆபாசமாகத் தெரிகின்றனவா?

இதுதான் கடவுளின் உருவம். இதை இப்படித்தான் காட்ட வேண்டும் என்று ஏதாவது வேதவிதிகள் உள்ளனவா? சிற்ப சாஸ்திரம் அளவுகளையும் ஆபரணங்களையும்தான் குறிப்பிடுகிறது, ஆடை அமைப்புகளை அல்ல. நிஜமாகவே பக்தியுடம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பக்தர்களுக்குத் தெரியும், எவ்வித அலங்காரமும் இல்லாது கிடைக்கும் விக்கிரக தரிசனம் எவ்வளவு உயர்வானது என்று. அபிஷேகம் செய்யப்படும்போதுகூட கிடைக்காத நிர்வாண தரிசனம் ஒரு கலைஞனின் மனத்தில் காட்சி பெற்றால் அவன் உங்கள் எல்லாரையும்விட அந்த தெய்வத்திற்கு நெருக்கமானவன் என்று தான் அர்த்தம்.

சிவனை, விஷ்ணுவை, முருகனை நிர்வாணமாக வரைவதில் யாருக்கும் பெரிய ஆத்திரம் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் தெய்வங்களின் கற்பு பற்றித்தான் இவர்களுக்கு அதிகம் கவலை வருகிறது. வர்த்தகத் திரைப்படக் கதாநாயகன் போல உடனே சட்டையைக் கழற்றி அவள் மீது போர்த்திவிடத் துடிக்கிறார்கள்.
யார் யாரைக் காப்பாற்றுவது? யார் யாருக்காக வக்காலத்து வாங்குவது? சர்வசக்திக்கு நீங்கள் பாதுகாப்பு தரத் துடிக்கிறீர்களா?
“அவன் தாயை அவன் நிர்வாணமாக வரைந்து கொள்ளட்டும், என் தாயை அப்படி வரையக்கூடாது” என்று சொல்பவர்கள் எந்தத்தாயை தங்கள் தாயென்று கூறுகிறார்கள்? பராசக்தியையா? அவள் என்ன உன் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் தாயா நீ பிரத்யேக உரிமை கொண்டாட? லோகமாதா என்று ஏன் அழைக்கப்படுகிறாள்? எல்லார்க்கும் அவள் தாய் என்றால் எல்லாருக்கும் அவள் மீது உரிமை இல்லையா? உனக்கு மட்டுமே தாய் என்றால் அவள் எப்படி உலகத்துக்கே தெய்வமாகிறாள்? உலகில் இத்தனை சத விகிதத்திற்கு மட்டும் அவள் தாயென்றால் மீதிக்கு யார்? உன் தெய்வத்தின் சக்தியை நீயே இவ்வளவு குறுக்குவதை உணர்கிறாயா?

அவள் ஸ்ரீமாதா என்று அழைக்கப்படுவது, அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பதால். உனக்கு மட்டும் அவள் ஆதரவாக இருந்தால் அவள் தெய்வம் அல்ல உன் கேவலமான அரசியலுக்கு இன்னொரு பிம்பம்.

அவள் அபர்ணா என்றும் அழைக்கப்படுகிறாள். யாருக்கும் கடன்படாதவளை உன் அர்த்தமில்லாத ஆர்ப்பாட்டத்தினால் உனக்குக் கடன்பட்டவளாக ஆக்க நினைப்பது மடமை.

அவள் குஹ்யா என்று அழைக்கப்படுவது ஏன்? உன் அறிவு இன்னும் ஞானமாகாதபோது உனக்குப் புலப்படாத ரகசியமாக இருப்பதால்தான்.

ஹூஸைன் படத்தில் ஆபாசம் தெரிந்தால் உனக்குப் பாலுணர்வு துடைப்பக்கட்டையைப் பார்த்துக்கூடத் தூண்டப்படும் பரிதாப நிலையில் நீ இருக்கிறாய் என்றுதான் அர்த்தம். இதற்கு மேலும் உன் போன்றவர்களுக்கு விளக்க முற்பட்டால் எனக்கு உருப்படியாய் எதுவும் செய்யப் பிடிக்கவில்லை என்று அர்த்தம்.

இதை நான் எழுதக் காரணம்: ///நிர்வாணமாக வரைந்தால் அழகாக இருக்கும் என்றால் என் தாயையும் தாரத்தையும் கூட அப்படி நான் வரைவேன். நிர்வாணமா விஷயம்? அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் தானே? /// சபாஸ் தயிரியமாக சொன்னீர். உங்களுக்கு உங்கள் உரிமையாளர்களைப் பற்றி வரைய உரிமையிருக்கலாம் ஆனால் அடுத்தவர் தாயை வரையமுடியுமா? {இந்துக்கள் தாயாக வணங்கும் தெய்வங்களை} என்று ஏதாவது ஒரு இந்து வெறியர் கேட்கும் முன்பே, இந்தவிஷயத்தை ஆதரித்துப் பின்னுட்டிய நபர்களையும் அவர்கள் சார்ந்த குடும்பத்தையும் அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் கொண்ட நிர்வாண ஓவியத்தை வெளியிட்டு உங்களை செக்குலரிஷ்ட் என்று காட்டிவிடுங்கள் நண்பா!-Smart என்ற பெயரில், எனக்கும் என் மனைவிக்கும் அனுப்பப்பட்ட முகவரியில்லாத ஒரு பின்னூட்டம் இது.

இனி முகவரியில்லாமல் எழுதாதீர்கள், பதில் வராது. அடையாளப்படுத்திக்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் எழுதாதீர்கள், கோழைகளுக்காக நேரம் செலவிட முடியாது.

42 comments:

Chitra said...

. தூற்றுவோர் தூற்றட்டும்; போற்றுவோர் போற்றட்டும். உங்கள் கருத்துக்களை ஏற்று கொண்டவர்களுக்கு விளக்கம் தேவை இல்லை. ஏற்று கொள்ள இயலாதவர்க்கு, விளக்கினாலும் சரி ஆகாது. சரிதானே?

Arvind said...

Unmaidhan. Ivargalin dharisanam manidhanidamdhan, kadavulidam illai.

குட்டிபிசாசு said...

//இனி முகவரியில்லாமல் எழுதாதீர்கள், பதில் வராது. அடையாளப்படுத்திக்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் எழுதாதீர்கள், கோழைகளுக்காக நேரம் செலவிட முடியாது//

இது போன்ற நபர்களுக்கு இவ்வளவு விரிவான விளக்கம் தேவையே இல்லை.

Ashok D said...

செக்ஸ் வறுமையுடன் தன்னைபற்றிய(இறை) தேடலுமில்லா வாழும் மனிதர்கள் கொண்ட தேசமிது

இது மாதிரி கோஷம் போடுபவர்கள் பின்னூட்டமிடுபவர்கள் ஏதாவது ஒரு கட்சியை சேர்ந்தவர்களாகவே இருப்பர். கோஷமிடுவது அவர்களுக்கு Business.

நாம் நமது வேலையை பார்ப்பதே சால சிறந்தது. கடைசியில் உங்கள் முடிவும் சரியே.

Thenammai Lakshmanan said...

எண்ணங்களால் முடமானவர்களுக்கு எந்த உயரத்தையும் எட்ட முடியாது..

அடுத்தவர்களையும் விட மாட்டார்கள் ..

குருடர்களுக்காக உங்கள் எழுத்தை விரயமாக்க வேண்டாம் ருத்ரன்

தருமி said...

இனி முகவரியில்லாமல் எழுதாதீர்கள், பதில் வராது. அடையாளப்படுத்திக்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் எழுதாதீர்கள், கோழைகளுக்காக நேரம் செலவிட முடியாது. //

அப்பாடா ... !

ராஜ நடராஜன் said...

எம்.எஃப்.ஹூசைன் என்ற உன்னதமான ஓவியனை ஓவியக்கண் தெரியாத அவமதம் போற்றும் மாந்தர்கள் முடக்கி பத்தாண்டுகளுக்கும் மேலாகியிருக்குமே?ஓவியத்தையும் தனிமனித தாக்குதலையும் தொடர்பு படுத்தும் மூளைச்சலவை முகமிலிகளை தவிர்ப்பது நலன் பயக்கும்.

WORDBONDS said...

இதற்கு முந்தைய பதிவுகளையும் படித்தேன். ஏனோ பின்னூட்டம் இட வேண்டுமெனத் தோன்றியும் பல‌ கருத்துகள் பெரும்பாலும் என் எண்ணங்களுடன் ஒத்துப் போவதாக அமைந்ததால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இதைப் படித்ததும் அமைதியாய் இருக்க முடியவில்லை.

முதலில், உங்கள் கோபமும் ஆற்றாமையும் நியாயமானதே. உங்கள் எழுத்துகளையும் பேட்டிகளையும் சிறிதேனும் கவனித்துப் பார்த்திருப்பவர்களுக்கு நீங்கள் கடவுளை மறுப்பவரல்ல என்பது தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் வேறு ஒரு பதிவு குறித்த ஒரு பின்னூட்டத்திற்கு அளித்த பதிலில் நீங்கள் இறைவியைத் தொழுபவர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது மேலோட்டமான, நானும் கோயிலுக்குப் போகிறேன் என்றிருக்கும் புற‌பக்தியல்ல, அபர்ணாயை குஹாயை போன்ற லலிதாவின், மஹாசரஸ்வதியின் சஹஸ்ரனாமங்களில் சிலவற்றைப் பொருத்தமாகக் குறிப்பிட்டுப் பதிவிடும் அளவுக்கு இறைவி மேல் ஈடுபாடுள்ளவர் என்பது எனக்குப் புரிகிறது.

அப்படியிருக்கும்போது கடவுளை இழிவுபடுத்தியவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக நினைப்பதோ, உங்கள் வீட்டுப் பெண்களின் படங்களைக் கேட்பதின் மூலம் உங்கள் வாயடைத்து விட்டதாக நினைப்பதோ தெளிவின்மையையே காட்டுகிறது.

நிற்க. நான் பின்னூட்டம் இட வேண்டுமென்று நினைத்தது ஒரு குறிப்பிட்ட வரியைப் படித்துதான். உங்கள் வீட்டுப் பெண்களின் ஓவியங்களைக் கேட்பவர்களுக்குக் கூறிய பதில். நிஜமாகவே கேட்கிறேன், இப்பதிவைப் படித்துவிட்டு, அடடா தப்பு பண்ணிட்டோமே இப்படி கேட்டிருக்கக் கூடாதே என்று யாராவது உணரப் போகிறார்களா என்ன? நிச்சயம் மாட்டார்கள். சொல்லப் போனால் இன்னுமே நக்கலுடன்,வீம்புடன் இது குறித்து கமெண்ட் அடிப்பார்கள். உடனுக்குடன் மின்னஞ்சல் முகவரிகள் வரும், எங்கே படத்தை அனுப்பு பார்ப்போம் என்று. பிறகு? நீங்கள் அனுப்புங்கள் இல்லை அவற்றை உதாசீனப்படுத்துங்கள், அதுவல்ல விஷயம். அதற்குப் பிறகும் இது எப்படித் தொடரும் என்பது உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா? இது தேவையா?

"உன் தெய்வத்தின் சக்தியை நீயே இவ்வளவு குறுக்குவதை உணர்கிறாயா?" என்ற உங்களின் இந்தக் கேள்வி பொட்டிலடித்தாற்போல் இருக்கிறதுதான். ஆனால் என்ன செய்ய? அதற்கு நேர்மையான, நியாயமான விடை கிடைக்கப் போவதில்லை. அப்படியிருக்கும்போது நீங்களும் அவசரப்படவேண்டாமே? எதற்கு உணர்ச்சியின் வசப்பட்டு இப்படியொரு பதிவு, அதில் தேவையற்ற வாக்கியங்கள்?


அடையாளப்படுத்திக் கொள்ள தைரியம் இருக்கிறது, ஆனால் தேவையில்லை என்று தோன்றுகிறது, விருப்பமும் இல்லை. நீங்கள் இப்பின்னூட்டத்தை வெளியிட வேண்டுமென்ற அவசியம் கூட இல்லை, உங்களிடம் இதைச் சொல்ல வேண்டுமென்று தோன்றியது, அவ்வளவே.

Maximum India said...

அன்புள்ள ஐயா!

உங்கள் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை.

வாக்கு வங்கி நோக்குடன் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளில் இறங்க இந்திய அரசு தயங்குகிறது என்பதை சாக்காக வைத்துக் கொண்டு பலரும் மதிக்கும் அல்லது வழிபடும் கடவுளர் உருவத்தினை ஆபாசமாக வரையலாமா? ஹுசைன் இப்போது அடைக்கலம் புகுந்துள்ள நாட்டில், அந்த நாட்டின் மதம் சார்ந்த கடவுளர்களின் அல்லது கடவுள் தூதர் படம் ஆபாசமாக தேவையில்லை, சாதாரணமாக கூட வரைய அனுமதிப்பார்களா? அல்லது இவர்தான் கலை என்ற பெயரில் அங்கு ஏதேனும் வரைவாரா?

கலைக்கு எல்லை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்திய நாட்டின் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை கலை என்ற பெயரில் கேவலப் படுத்துவது என்பது இந்திய இறையாண்மையின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செயலேயாகும். இந்திய மக்களுக்கு ஏராளமான சுதந்திரத்தை அள்ளித்தந்திருக்கும் இந்திய அரசியல் சட்டம், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற செயல்களுக்கு (கலை உட்பட) ஒருபோதும் சுதந்திரம் வழங்க வில்லை என்பது நினைவு கூறத்தக்கது. எந்த ஒரு தனிமனித சுதந்திரமும் மற்றவரின் மூக்கு வரை மட்டுமே என்று இருக்கும் போது, தனிமனித சுதந்திரம் ஒரு சமூகத்தின் உணர்வுகளை விட பெரியது என்று வாதிடுவது சரியென படவில்லை.

என்னைப் பொறுத்த வரை ஒட்டுமொத்த இந்தியாவை விட தனிப் பட்ட எவரும் பெரியவர் அல்ல. எனவே இந்தியா வேண்டாமென்று ஒருவர் முடிவெடுத்தால் அதைப் பற்றி கவலைப் பட வேண்டிய அவசியம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். அதே சமயத்தில் குடியுரிமை மாற்றத்தால் மட்டுமே, நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. அவர் எங்கே இருந்தாலும் அவரை இந்திய சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது இந்திய அரசின் கடமையாகும்.

நன்றி!

பிரபு

அன்புடன் அருணா said...

/இனி முகவரியில்லாமல் எழுதாதீர்கள், பதில் வராது. அடையாளப்படுத்திக்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் எழுதாதீர்கள், கோழைகளுக்காக நேரம் செலவிட முடியாது. /
இவ்வ்ளோ நேரத்தைக் கூடச் செலவழித்தது வீண்.

ராம்ஜி_யாஹூ said...

எனக்கு தெரிந்த வரையில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களுக்கு கடவுள் காட்சி தந்து உள்ளனராம் நேரில் .

உதாரணங்கள்- சீர்காழி யில் ஞான சம்பந்தருக்கு, பாபநாசத்தில் அகத்தியருக்கு, மதுராந்தகத்தில் கல்லக்டருக்கு ராமர், ஆழ்வார்களுக்கு ஆழ்வார் திருநகரி, திரு அனந்த புரம், ஆண்டாளுக்கு ஸ்ரீவில்லி யில், ஆதி சங்கரருக்கு ராஜ ராஜேஸ்வரி, பந்தள மகாராஜா குடுமபத்திற்கு சபரி மலையில் .

எனவே அவர்கள் நேரில் கண்டதை சொல்லக் கேட்டு ஓவியர்கள், ஸ்தபதிகள் வரைந்து இருப்பார்கள் என நினைக்கிறேன்.


கடவுள் இருக்கிறார், இல்லை என்பதை விடுங்கள். மனித நேயம் அடிப்படியில் நான் ஹுசேன் குறித்து இந்த கேள்விகளை எழுப்புகிறேன்.

சக மனிதர்களின் நமிக்கைக்கு எதிராகவும், சக மனிதர்கள் மனம் புண் படும் படி ஓவியம் வரைவது ஒரு நல்ல பண்பா. ஓவியம், சிற்பம் நாடகம், சினிமா போன்ற கலைகள் சக மனிதர்களை மகிழ்ச்சி படுத்தவே அன்றி, சக மனிதர்களை எரிச்சல் படுத்த அல்ல.
எனவே அன்பு, நல்ல பண்பு என்ற அடிப்படியில் ஹுசேன் அவ்வாறு ஓவியம் வரைய்த்தன் வேண்டுமா.

இன்றளவும் கலைஞரோ, கமல் ஹாசனோ, வைகோவோ, சத்யராஜோ, மணி வண்ணனோ சக மனிதர்களின் (கடவுளை நம்பும், மூட நம்பிக்கைகளை நம்பும்) மனிதர்களை எரிச்சல் படுத்துவது இல்லை,

Anonymous said...

இனி முகவரியில்லாமல் எழுதாதீர்கள், பதில் வராது. அடையாளப்படுத்திக்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் எழுதாதீர்கள், கோழைகளுக்காக நேரம் செலவிட முடியாது. //

First of all, I may not be mistaken for the anonymous e-mailer. I am not a Hindutva fan.

If the anonymous e-mailer had endorsed your opinion on Hussain, would you have written the above quoted para? I doubt.

Your problem lies in the views of the e-mailer; and, to make matters worse, the crude and uncivilized way he has put it in.

I am now putting his view in a different way.

You are referring to the statues erected in temples or put up on the walls of the temple, by ancient Hindu kings. Your e.g. is Hosyalya, that is, in Belur and Halebid near Mysore. Been there. The statues are not so 'unlookable' as those in Khajuraho. There, the statues stand stark naked and highly voluptuous. It is not a place for a family picnic: so vulgar in today standards.

As you said, Hindu religion has allowed such naked display of their goddesses. But it was a long, long time ago.

Today, what is the position a Hindu takes? In temples, all their gods and goddesses are well dressed. The changing of dresses and ornaments is done in a ceremony or rituals, following strict customs, after drawing up curtains or closing the door of the sanctum-sanctorum.

Today Hindu does not allow naked idols, although the idols are naked in statue form, they are not shown to bhaktas in that form.

You are therefore incorrect to adjudge the sensitivities of today Hindus applying the scale of ancient Hindu liberal nature.

Your argument that the goddess is a mother to all, not to Hindu fanatics only, is inapt in the sense once a man becomes a Hindu, he falls into the sensitivity trap and wants his goddess dressed up. Not Hindutva fans alone, but every Hindu wants to see his goddesses dressed up.

Therefore, their aversion and anger against an artist who draws their goddess naked and claim he has artistic freedom to do so, is understandable. We must sympathies with their feelings or sensitivities.

Whether artistic freedom should be bridled or unbridled is a question for the people of a country to decide in a majority opinion. In a liberal democracy, it is possible to heckle at the religious sensitivities and criticize any matter or icon, severely - as people there take it as a basic element in a vibrant democracy.

In India, and in so many other countries, people treat religion something possessive, which should be safeguarded, from attack or criticism by others. Therefore, Indians want artistic freedom bridled. Not only Hindus, Indian Christians, Muslims, Sikhs, Jains et al think similarly. Remember Dan Bran’s book was banned in India at the request of Indian Christians, whereas the book is freely available in European Christian countries.

We are, in other words, in a democracy, which is not a carbon copy of American or European model.

The point is - it is not the e-mailer who thinks so, but the general Indian population also. If you are a Hindu who is so liberal as to be able to worship a mother goddess in all her naked glory, do so. But you cant force your way upon other Hindus, nor call them unHindus and you alone are a Hindu! Majority opinion should prevails.

In Room, do as Romans do. Hussain has disregarded this English proverb!

Jo Amalan Rayen Fernando

ராஜ நடராஜன் said...

//கலைக்கு எல்லை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்திய நாட்டின் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை கலை என்ற பெயரில் கேவலப் படுத்துவது என்பது இந்திய இறையாண்மையின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செயலேயாகும்.//

மேக்ஸிம் இந்தியாவின் பார்வைக்கு.

இந்திய நாட்டின் பொறுமையைத்தான் பல குண்டுவெடிப்புகளுக்குப் பின்னும் முக்கியமாக மும்பாய் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னும் இன்னும் பாகிஸ்தானிடம் பிரணாப்,சிதம்பரம் மல்லுக்கட்டி நிற்பதைப் பார்க்கிறோமே.பாகிஸ்தான் அப்பவும் இப்பவும் அமெரிக்க தாதா கூட்டோட இருப்பதால் இந்திய மக்களுக்கு மீசையையும் பாகிஸ்தானுக்கு வாலையும் காட்டிகிட்டு மட்டுமே வெளிநாட்டுக் கொள்கை வகுக்க முடியும்.இந்த விளையாட்டெல்லாம் சிதறி அரசியல் கும்மியடிக்கும் தமிழர்களிடம் வேண்டுமானால் செல்லுபடியாகலாம்.

இந்தியக் கோயில்களில் எதனை கலை என்று வரைவு படுத்துகிறீர்கள்?பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை கலை என்ற பெயரில் கேவலபடுத்துவதென்றால் இருக்கும் கோயில்களையெல்லாம் இனி புதுநிர்மாணம் செய்தால் மட்டுமே வரும் தலைமுறைகள் இந்தியப் பாரம்பரியம் இப்படித்தான் என்று புது ராகம் பாடும் சாத்தியமுண்டு.

ஹுசைன் ஓவியம் ஒரு ஓவியன் முஸ்லீம் என்ற மத உணர்வால் வந்த பாகுபாடு.ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இந்திய வரைபடத்தையே பெண்ணாக நிர்வாணப் படுத்தி படம் வெளியிட்டது.ஏதோ ஒரு இந்தியப் பத்திரிகை ஒரு விசில் அடிச்சி டாய்ன்னு சத்தம் போட்டு நிறுத்திக் கொண்டதாக நினைவு.இதையே டானிஷ்காரப் பத்திரிகை இஸ்லாமியக் கார்ட்டூன் வரைந்ததற்காக வளைகுடா நாடுகளில் பால் உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் நிறுத்தம்.டானிஷ் பத்திரிகையை மன்னிப்பு கேட்க வைத்தது வளைகுடாப் பொருளாதாரம்.

Ramesh said...

தங்களின் பலகட்டுரைகளை அமைதியாக வாசித்துவருகிறேன்.

ஆழ்ந்த கருத்துடையவை அதற்கு பின்னூட்டம் எழுதவே தகுதியுடையவனா என்ற தயக்கத்தில் எதுவும் கருத்து கூறுவதில்லை..

ஜனநாயகம் என்பதே - மெஜாரிட்டி ஆதரவு என்பதே..

லாலு பிரசாத் / கருனாநிதி /மாயவதி/ ஜோதிபாசு என்று அவர் அவர் இடத்தில் ஆட்சிக்கு வருகிறார்கள் என்றால் மெஜாரிட்டி மக்களின் ஆதரவு கிடைப்பதால்.

ஆனால் ஆட்சிக்கு வர மெஜாரிட்டி ஆதரவை நாடுபவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் காவடி தூக்குவது என்னவோ மைனாரிட்டி மதத்தினற்கே என்பது நிதர்சனம்.

அன்மையில் விஜய் டீவி நீயா நானா நிகழ்ச்சியில் பர்தா விசயத்தை விவாதத்திற்கு உள்ளாக்கியது, அந்த மதப் பெண்கள்தான் அதில் பேசினார்கள் ஆனால் அதை ஓளிபரப்ப இயலவில்லை ஏன்? அரசின் உத்தரவால் தானே?

இன்று சவுதி அரேபியாவில் தஸ்லிமாவுக்கு குடியுரிமை வழங்க சொல்லுங்கள் பார்க்கலாம்.

முடியாது என்பது நிதர்சனம்...

சில சென்சிட்டிவான விசயங்களில் மற்ற மதத்தினர் என்னதான் திறமை சாலி வெங்காயம் என்றாலும் தனக்கென ஒரு எல்லை வகுத்துகொள்வது தான் சரி.

எனக்கு அவரின் ஆபாச படங்கள் மீது எந்த வருத்தமோ / ஆட்சபனையே இல்லை.

அவர் தான் திறமையான ஓவியா வெங்காயமாச்சே...

ஹிந்து கடவுள் மட்டும் அல்ல நான் எல்லா மதத்தினரையும் அப்படித்தான் வரைவேன் அது தான் கலை என்று பிற மதங்களையும் வரைய சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவ்வாறு செய்தால் அடுத்த நிமிடம் அவர் மதத்தினரே “பத்வா” அறிவிப்பார்கள்.

எல்லா விசயத்திலும் எதிர் கருத்து சொல்கிறேன் என்று பேர்வழி என்று எதையாவது வாந்தி எடுக்கத்தீர்கள்!

Maximum India said...

அன்புள்ள ருத்ரன் & நடராஜன்!

கோயில் சிலைகளை ஹுசைனின் ஓவியங்களோடு ஒப்பிடுவது வேடிக்கையாக இருக்கின்றது. பழங்காலத்தில் சிலைகளை வடித்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து சிலைகளை அவ்வாறு அமைப்பதற்கான காரணம் கண்டறிவதும் ஒருவேளை அந்த காரணங்கள் தவறாக இருந்தால் தண்டிப்பதும் இயலாத காரியம் என்பதை நன்கு அறிந்தும் ஏன் இவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்? ஒருவேளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்தில் பெண்கள் மார்பை மறைத்ததில்லை என்பது உண்மையான சரித்திரமாக இருக்கின்ற பட்சத்தில், அந்த நாகரிகத்தை பிரதிபலிக்கின்ற அருங்கலை திரைப்படம் என்று கூறிக்கொண்டு இன்றைக்கு யாராவது அப்படிப்பட்ட காட்சிகளை நம் தமிழ் திரையில் அமைக்க முடியுமா? அதை சட்டம்தான் (சென்சார்) அனுமதிக்குமா?

அதுப் போலத்தான் ஒவ்வொரு கலையும் அந்தந்த காலகட்டத்தின் சமூக நெறிமுறை வரைமுறைகளுடன் ஒத்து செல்ல வேண்டும். அவ்வாறு ஒத்து போகிறதா இல்லையா என்பதை நிர்ணயிக்க சட்டக் காவலர்கள் இருக்கின்றனர். அவர்கள் கூறட்டும், ஹுசைன் வரைபடங்களில் வன்நோக்கங்கள் இல்லை என்று. தன்னிடம் வன்நோக்கங்கள் இல்லை என்று ஹுசைனும் நிருபிக்கட்டும். அது வரை பொறுத்திருப்போம்.

அன்புள்ள ராஜநடராஜன்!

//இந்திய நாட்டின் பொறுமையைத்தான் பல குண்டுவெடிப்புகளுக்குப் பின்னும் முக்கியமாக மும்பாய் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னும் இன்னும் பாகிஸ்தானிடம் பிரணாப்,சிதம்பரம் மல்லுக்கட்டி நிற்பதைப் பார்க்கிறோமே.பாகிஸ்தான் அப்பவும் இப்பவும் அமெரிக்க தாதா கூட்டோட இருப்பதால் இந்திய மக்களுக்கு மீசையையும் பாகிஸ்தானுக்கு வாலையும் காட்டிகிட்டு மட்டுமே வெளிநாட்டுக் கொள்கை வகுக்க முடியும்.இந்த விளையாட்டெல்லாம் சிதறி அரசியல் கும்மியடிக்கும் தமிழர்களிடம் வேண்டுமானால் செல்லுபடியாகலாம்.//

ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப் படுத்த முடியாது. நேற்று ஒரு பயங்கரவாதத்தை தடுக்க தவறி விட்டோம் என்று கூறிக் கொண்டு இன்று இன்னொரு புதிய தீவிரவாதத்தை வளர விட முடியாது. இலங்கை தமிழர்கள் விஷயத்தில் இந்தியா தவறு செய்து விட்டது என்று கூறிக் கொண்டு இந்தியாவை இன்னொரு நாட்டிடம் காட்டிக் கொடுத்து விட முடியாது. ஹிந்து மதக் காவலர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர் செய்யும் தவறுகளுக்காக மற்ற மதத்தவரின் தவற்றையும் நியாயப் படுத்த முடியாது.

//ஹுசைன் ஓவியம் ஒரு ஓவியன் முஸ்லீம் என்ற மத உணர்வால் வந்த பாகுபாடு.ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இந்திய வரைபடத்தையே பெண்ணாக நிர்வாணப் படுத்தி படம் வெளியிட்டது.ஏதோ ஒரு இந்தியப் பத்திரிகை ஒரு விசில் அடிச்சி டாய்ன்னு சத்தம் போட்டு நிறுத்திக் கொண்டதாக நினைவு.இதையே டானிஷ்காரப் பத்திரிகை இஸ்லாமியக் கார்ட்டூன் வரைந்ததற்காக வளைகுடா நாடுகளில் பால் உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் நிறுத்தம்.டானிஷ் பத்திரிகையை மன்னிப்பு கேட்க வைத்தது வளைகுடாப் பொருளாதாரம். //

தேவையில்லாமல் மதத்தையும் மதசார்பின்மையும் இங்கு இழுக்க வேண்டாம். நித்யானந்தா ஒரு ஹிந்து சாமியார் என்பதனால் அவரது தவறுகளை யாரும் இங்கே நியாயப் படுத்த வில்லை. தஸ்லிமா நஷ்ரீன் ஒரு முஸ்லிம் என்பதால் அவர் கருத்துக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்றுக் கொள்வதில்லை.

இந்தியா இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே சொன்னபடி ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப் படுத்தாது. ஹுசைனிடம் முறைப்படி விசாரணை நடத்தி அவரை சட்டத்திடம் ஒப்படைக்க வேண்டும். மாற்று மதத்தினை அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை ஹுசைன் நிரூபிக்க வேண்டும்.

நன்றி!

ஈசு தமிழ் said...

டாக்டர் , எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்
http://www.jeyamohan.in/?p=4864 .

இந்த மதவெறி பதிவையும் படித்து ஜெயமோகனை மேலும் அம்பலப்படுத்துங்கள்

இளந்தென்றல் said...

தெய்வம் என்பதன் பொதுத் தன்மை புரியாதவர்கள் தான் அதன் மீது பிரத்யேக உரிமை கொண்டாடுவார்கள்.

மிகச்சரியான கருத்து அய்யா..

இந்த உண்மை எல்லாருக்கும் புரிந்து விட்டால் பிறகு மதம் அடிப்படையிலான பாகுபாடே இல்லாமல் போய்விடுமே. அவரவர் அவரவர் சிந்தனா சக்திக்கு ஏற்ப கடவுளை உருவகப்படுத்திக் கொள்கின்றனர். அனைவருமே முற்போக்கு சிந்தனையுடன் கடவுளை அணுகுவதில்லை. பலர் கடவுளை கேட்டதெல்லாம் அருளும் ஒரு சக்தியாகத் தான் பார்க்கிறார்கள். அவர்களால் இயலாத காரியங்களை நடத்திக் கொடுக்கும் ஒருவர். அவ்வளவுதான்... கடவுள் குறித்த ஒவ்வொரு தனி மனிதனின் கருத்தும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்போது கலை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதை புண்படுத்தும் தேவைதான் என்ன?...இவ்வுலகில் அவர் வரைய பலவிஷயங்கள் இருக்கும் போது..

இதுதான் கடவுளின் உருவம் இதை இப்படி தான் காட்ட வேண்டும் என்று வேதவிதிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது பலரின் நம்பிக்கை சார்ந்த விஷயம் அல்லவா?

கடவுளின் உருவத்தை எப்படி காட்ட வேண்டும் என்ற சிந்தனைக்கு முன், கடவுளின் உருவம் எப்படி இருக்கும் என்ற சிந்தனைக்கு வருவோம். இந்த பிரபஞ்சத்தை உண்டாக்கிய கடவுள் மனித உருவில் தான் இருப்பார் என்பதற்கு என்ன ஆதாரம். அது நம்பிக்கை என்றால், அது இப்படி தான் காட்டப்பட வேண்டும் என்பதும் பலரது நம்பிக்கை அவ்வளவு தான்.

அக்கினிச் சித்தன் said...

வள்ளி, தெய்வானை, இதர தெய்வ மகளிரின் ஆடையில்லாத சிலைகளை வடிக்குமளவுக்கும், அவற்றைத் தொழுமளவுக்கும் இருந்த சமூகம்; இறைவியின் அங்க நலன்களை வியந்து பாடி வணங்கிய சமூகம்; அரசனின் மனைவியாயிருந்தாலும் அவளையும் ஆடையின்றியே சிலைவடித்த நேர்மையான சமூகம்...இவைதாம் நம் பழைய மதங்களும், மனிதர்களும் கலையையோ ஆன்மீகத்தையோ புரிந்துகொண்ட விதம். ஒன்று நமது பழமையைப் புரிந்துகொள்ள வேண்டும், அல்லது புத்தம்புதிய நாகரீகத்தின் கட்டற்ற சுதந்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் (இங்கு நான் பழைமையில் கட்டற்ற சுதந்திரம் இல்லையென்பதாக அர்த்தப்படுத்தவில்லை). இவை இரண்டுக்குமான பக்குவமில்லாத இடைநிலை மனிதர்கள்தான் இந்தமாதிரியான தொந்தரவுகளைத் தமக்கும் பிறருக்கும் ஏற்படுத்துகிறார்கள். என்ன செய்ய, இவர்களையெல்லாம் தாண்டித்தான் நீங்கள் எதையாவது செய்துகொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. தொடருங்கள், உடன்வர நாங்களிருக்கிறோம்!

அக்கினிச் சித்தன் said...

//அது நம்பிக்கை என்றால், அது இப்படி தான் காட்டப்பட வேண்டும் என்பதும் பலரது நம்பிக்கை அவ்வளவுதான்// இளந்தென்றல், அது ஒரு நம்பிக்கை அவ்வளவே. அந்நம்பிக்கைக்கு எல்லோரும் உடன்படவேண்டும் என்பதோ அல்லது அதற்கு மாற்றாகச் சிந்திப்பவர்கள் நம்பிக்கை துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட வேண்டும் என்பதோ இல்லைதானே? நம்பிக்கை என்று சொல்லும்போதே, அது "உண்மை" என்று அர்த்தம் ஆவதில்லை. நீங்கள் நம்புவது வேறு, உண்மை என்பது வேறாக இருக்கலாம் என்பது என் கருத்து.

ராஜ நடராஜன் said...

இனிமேல் எம்.எஃ.ஹுசைனுக்கு இந்திய பட்வா தர விரும்புவர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போடும்படி முதல் கணையாக ஹுசைன் விண்ணப்பிக்காமலேயே கத்தார் அரசு தனது குடிமகனாக ஸ்வீகரித்துக் கொண்டது. இரட்டை கடவுச்சீட்டு வைத்திருப்பது செல்லாது என்ற இந்திய சட்டத்தின் படி இன்று கத்தாரின் இந்திய தூதரகத்தில் தனது இந்திய கடவுச்சீட்டை திருப்பி தந்து விட்டார்.இந்திய பிகாசாவுக்கு அவனது வாழ்நாளில் முதிர் வயதில் தந்த பரிசுக்கு இந்தியர்கள் இனிமேல் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஒரு விஷயத்தைப் பற்றிய விவாதத்தில் அனைவருக்கும் ஒத்த கருத்து இல்லாமலிருப்பது இயல்பானதே.. விளக்கம் நன்றாக இருந்தால் மற்றவரும் ஏற்றுக்கொள்ளலாம்.. அல்லது தன் கருத்தில் நிலைகொண்டு ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம்.. பின்னொரு காலத்தில் சில அனுபவங்களுக்குப் பிறகு வேறு மாதிரியும் தோன்றலாம்..

ஆனால் அந்தப் பின்னூட்டத்தில் நடந்திருப்பது தனிமனித தாக்குதல்.. வன்மம் தெரிக்கிறது.. அதை அப்படியே அழித்து குப்பையில் போட்டிருக்க வேண்டும்..

Sabarinathan Arthanari said...

திரு ருத்ரன்,

மற்றவர்களுடனான தங்களது விவாதங்களை படித்து வருகிறேன். தங்களது கருத்துக்களுடன் முற்றிலும் மாறுபடுகிறேன்.

விரைவில் எனக்கு புரிந்த வகையில் எதிர் வினை ஆற்றுவேன்.

Rajan said...

//அந்த நாகரிகத்தை பிரதிபலிக்கின்ற அருங்கலை திரைப்படம் என்று கூறிக்கொண்டு இன்றைக்கு யாராவது அப்படிப்பட்ட காட்சிகளை நம் தமிழ் திரையில் அமைக்க முடியுமா? அதை சட்டம்தான் (சென்சார்) அனுமதிக்குமா//


எந்த நாட்ல இருக்கறீங்க ! இங்க காட்சிக்கு முக்கியம்னு சொல்லி சில வேலைகள் செய்தால் நிகழ்காலக் கதைக்கே அம்மணமாக பெண்ணை காட்டும் காட்சிகளை வைக்க முடியும் .... வைத்தும் உள்ளனர் சமீபத்தில் தமிழில் காதல் கதை என்றொரு படம் , இந்தியில் ஷ க் இன்னும்பல

Rajan said...

//எனக்கு தெரிந்த வரையில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களுக்கு கடவுள் காட்சி தந்து உள்ளனராம் நேரில் .//

ஏன் இப்போது கொடுப்பதில்லை காட்சி ! பழைய காட்சியை இப்போது தந்தால் இன்றைய பக்தனுக்கு பாலுணர்வு பீரிட்டு விடும் என்பதாலா

Rajan said...

//மதுராந்தகத்தில் கல்லக்டருக்கு ராமர்,//

மதுராந்தகம் தனி மாவட்டம் இல்லையே ! சப் கலெக்டரா பில் கலெக்டரா ?

Rajan said...

//இன்றளவும் கலைஞரோ, கமல் ஹாசனோ, வைகோவோ, சத்யராஜோ, மணி வண்ணனோ சக மனிதர்களின் (கடவுளை நம்பும், மூட நம்பிக்கைகளை நம்பும்) மனிதர்களை எரிச்சல் படுத்துவது இல்லை,//

நீங்கள் சொல்லும் நபர்களுக்கு கலை அரசியலும் ஒரு வியாபாரம். இங்கு ஹுசேனை நான் கலைத் தாயின் முதல் மகனென்று வாதாட வரவில்லை. செய்ததில் என்ன தவறு என கேட்கிறேன் ! உங்களக்கேல்லாம் நோகாதபடிக்குதான் கலைஞன் படைக்க வேண்டுமென்றால் வடை பாயாசத்துடன் வாழை இலை போட்டு விருந்து தான் படைக்க வேண்டும்

Murali said...

நிர்வாணம் என்பது எதுவும் அற்ற தன்மை அல்ல, அஹங்காரம் (EGO) அற்ற தன்மை. அது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமையும் கூட. குழந்தையின் நிர்வாணம் கூட அசிங்கமாக தெரியும் மக்களுக்கு கடவுளின் நிர்வாணம் ஏற்று கொள்ளமுடியாதது புரிகிறது. யாரோ மஜோரிட்டி பற்றி பேசினார்கள்."Sometimes majority simply means all the fools are in same side - Claude McDonald". இது உண்மைதான், தன்னுடைய சுயத்தை மறைக்க பல முகமூடி அணியும் மனிதன், தான் உருவாக்கிய கடவுளுக்கும் அதைத்தான் செய்வான். தன்னை உருவாக்கிய கடவுளை பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. டாக்டர், புரிபவருக்கு புரியட்டும். நீங்கள் இதுவரை அளித்த விளக்கங்களே போதும் என்பது என் கருத்து.

ச.சங்கர் said...

///ராஜ நடராஜன் said...
இனிமேல் எம்.எஃ.ஹுசைனுக்கு இந்திய பட்வா தர விரும்புவர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போடும்படி முதல் கணையாக ஹுசைன் விண்ணப்பிக்காமலேயே கத்தார் அரசு தனது குடிமகனாக ஸ்வீகரித்துக் கொண்டது. இரட்டை கடவுச்சீட்டு வைத்திருப்பது செல்லாது என்ற இந்திய சட்டத்தின் படி இன்று கத்தாரின் இந்திய தூதரகத்தில் தனது இந்திய கடவுச்சீட்டை திருப்பி தந்து விட்டார்.இந்திய பிகாசாவுக்கு அவனது வாழ்நாளில் முதிர் வயதில் தந்த பரிசுக்கு இந்தியர்கள் இனிமேல் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.///

இதற்க்கு முற்றிலும் மாறாக ஹுசேன் பேட்டி கொடுத்துள்ளதைக் கவனிக்கவும்.அவரே என்னை யாரும் மிரட்டவில்லை அதனால் நான் குடியுரிமத்தை சரண்டர் பண்ணவில்லை, என் தொழில் நிமித்தமாக எடுத்த முடிவு என்று சொல்லும் போது நீங்களெல்லாம் வம்படியாக வரிந்து கட்டுவது தான் சகிக்கவில்லை

Dr.Rudhran said...

பதில் சொல்வதில்லை என்று முடிவெடுத்ததை மீறி இதற்கு மட்டுமாவது சொல்கிறேன். பதிவு ஹூசை பற்றியல்ல, இந்தியா பற்றி. இந்து எனும் மதம் பற்றி.

Sabarinathan Arthanari said...

MF Hussain பற்றிய ஒரு சிறு பதிவுறையாடல் கீழ் உள்ள முகவரியில் http://sabaritamil.blogspot.com/2010/03/x-x.html

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஆடையற்ற நிலை என்பதுதானே இயற்கை நிலை.. மனிதர்கள் பிறக்கும் போது அவ்வாறே பிறக்கின்றனர்.. உடையென்பது பின்னாளில் மனிதன் (மட்டும்) கற்றுக் கொண்ட விஷயம்.. மருத்துவன் முதல் கல்வி கற்க ஆரம்பிப்பதும் ஆடையற்ற உடலைக் கொண்டு தானே? மிருகங்கள் இன்றும் அவ்வாறு தான் உலா வருகின்றன.. அவற்றை அவ்வாறே வரையும் போது வித்தியாசம் தெரிவதில்லை.. பிற மனிதர்களை மற்றும் தங்கள் தெய்வங்களை உடையுடனே (சமகால மனிதர்கள் எல்லோரும் ரவிவர்மா காலத்துக்குப் பிந்தையவர்களே..) பார்த்துப் பழகிய பெரும்பாலான மக்களின் கண்களுக்கு (என்னுடையவை அல்ல.. நானும் உங்களைப் போன்று தான்.. ஏக கடவுள்..) இப்படிப் பார்ப்பது கோபத்தை/வருத்தத்தை வரவழைக்கக்கூடும்.. அதுவும் இரு சமூகங்கள் பிளவு பட்ட நிலையில் இவ்வாறு ஒரு சர்ச்சை தேவை தானா என்று தோன்றியதால் வந்த கேள்வியது.. மற்றும்படிக்கு உங்களுடன் ஒத்துப் போகின்றேன்..

SurveySan said...

அப்படி என்னதான் வரஞ்சுருக்காரு ஹுசைனுன்னு தேடிப் பாத்தேன்.
ஸ்லேட்டு பல்பம்ல வரஞ்ச மாதிரி, ஏதோ ஒரு குட்டிக் கிறுக்கல் படம். அதுக்கா இம்மம் ஆர்பாட்டம் அதிகம்.

வால்பையன் said...

// எங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். //

தலையில்லாமல் வரைந்து தருகிறேன்! உன் வீட்டு பெண்கள் போலும் தெரியலாம், நான் பொறுப்பல்ல என்று சொல்லியிருக்கலாமே!

நா.க.மலர்ச்செல்வன் said...

திரு. ருத்ரன் அவர்களே,
சுதந்திரம் என்ற பெயரில் நாம் நினைத்ததை எல்லாம் செய்வது ஆணவம். தான் வரைந்தது / செய்தது தவறே அல்ல என மற்றவர் கருத்துக்கு செவி கொடாமல் வாதிடுவது அகம்பாவம். தங்கள் கூற்றுப்படி ரவிவர்மர் தாம் வாழ்ந்த காலத்தின் சம கால கலாசாரத்தை அடிப்படையில் ஓவியம் வரைந்தார். பண்டைய காலத்தில் மக்கள் நூல் ஆடை அதிகம் அணியும் பழக்கம் இல்லை என்றே அறிந்திருக்கிறோம், ஆடை இல்லா கடவுள் அன்று ஏற்புடையதாக இருந்திருக்கலாம். இன்று ஆடை இல்லா வழக்கம் இருப்பின் ஏற்கப்படலாம். உங்கள் கருத்து, நான் ஓவியன் என்ற கூட்டுக்குள் இருந்தே இதை பார்ப்பேன் என்று வாதிடுவதாக தெரிகிறது. சனநாயகம் பேசும் நாம் பெரும்பாண்மை மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதேன்.
மேலும் ஹிட்லர் பிடிக்காது என்று கூறியவர் காந்தியை ஆடை அணிந்தும், ஹிட்லர்-ஐ நிர்வாணமாக ஒரே ஓவியத்தில் வரைத்தது ஏன்? இணையத்தில் உள்ள அவரது படைப்புகள் சர்ச்சைக்கு இடம் அளிப்பதாகவே உள்ளது.
நன்றி,
நா.க.மலர்ச்செல்வன்.

Velmurugan said...

எனது நண்பர் ஒருவர் இதே பொருள் தொடர்பாக எனக்கு மின்னஞல் அனுப்ப எனக்கு தெரிந்த பதிலை அவருக்கு அனுப்ப அவர் நேரடியாக பதில் சொல்லாமல் அவருடைய அமெரிக்க நண்பர்கள் மூலமாக எனக்கு பதில் அனுப்பினார். அதிலும் இதே போன்று எனது தாயை நிர்வாணமாக வரைய முடியுமா என்று தற்போது தங்கள் பதிலையே அவர்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளேன் நன்றி

மைதீன் said...

கடவுளை துகில் களைந்து வரைந்ததினால் கூச்சலிடும் மானிடர்கள், எம் பெண்கள் துகிலோடு வழி கடந்தால் துகிலுரிந்து பார்த்திட விழைவார்கள். பெண்ணை கடவுளாக பாவிக்கும் மனிதர்கள். பெண்களிடம் கடவுளை பார்ப்பதில்லை

மோனி said...

மனநல மருத்துவம் படித்த தாங்கள் கூட
இவ்வாறு சில சமயம் மனநலம் தவறியவர்களிடம்
எதிர் வினையாடுவது வருத்தத்தையே அளிக்கிறது..

பெரும்பாலானவர்களின் கருத்துக்கு ஒத்துப் போகிறேன்.
இந்த பதிவே
தேவையில்லாமல் நேரம் செலவளித்ததாய் கருதுகிறேன்.

// எங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். //
@ வால் பையன்
...// தலையில்லாமல் வரைந்து தருகிறேன்!
உன் வீட்டு பெண்கள் போலும் தெரியலாம்,
நான் பொறுப்பல்ல என்று சொல்லியிருக்கலாமே! //...

சர்வ நிச்சயமாய் சொல்லியிருக்கலாம்.
பயணத்தை தொடருங்கள் ...

Anonymous said...

அருமையான கருத்துக்கள்...இந்த மத வெறியர்களும்,சாதி வெறியர்களும் இருக்கும் வரை அர்சியல் வாதிகளுக்கு கொண்ட்டாட்டம் தான்...

Madhavan said...

Dear Dr.Rudhran,

Mr.Hussain is a great painter of modern times. No doubt on this. However, if nudity as an art has found expression from him only selectively, that too, only when he draws Hindu god and goddesses, then his motive is questionable.

It is also unfair to compare nudity as portrayed in ancient sculptures and todays art just because of the huge timing difference. Things have changed drastically. Today's world is not the same as it was just 50 years before and we are comparing with sculptures which are many centuries old. Not fair.

Is it possible for me to walk nude in the streets quoting my individual freedom ? Certainly not. We all live in a society and whether we like it or not, our actions/inactions have to reflect to some extent what is acceptable to the society.

Artistic freedom is good but if it infringes on the majority beliefs then it should curtailed.

I am Hindu but not a fanatic.

In the garb of freedom, if I say I will draw anything without respecting the sentiments of the majority, then this borders on arrogance.

selvan said...

Problem or issues related to Hussien's work is explained in this link. http://hayyram.blogspot.com/2010/03/blog-post_12.html

Its not about nudity only ...its about his attitude and crude double standards. Understand the facts and get angry. I found u keep on telling others as half backed but in reality?

Anonymous said...

டாக்டர் ருத்ரன்,

இன்று மீண்டும் உங்கள் சரஸ்வதி ஓவியத்தை பதிப்பித்து மீண்டும் ஹுசெனைப் பற்றி எழுதினேன். உங்களை firing line-இல் இழுப்பதை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். - http://koottanchoru.wordpress.com/2010/03/26/எம்-எஃப்-ஹுசேன்-சில-எதிர்/

Hai said...

மதம் என்னும் பேய் இவர்களைப் பிடித்து ஆட்டுகிறது மருத்துவரே. இவர்களுக்கு இல்லாத கடவுளே வந்தாலும் புரியவைக்க முடியாது நீர் எம்மாத்திரம்.

Post a Comment