கர்ணன்!!
கதைகளை வாசிப்பது ஒரு சுகானுபாவம். ஆனால் வெறும் சம்பவங்களின் கட்டமைப்பாகவோ, மொழிநடையின் ஆற்றல் வெளிப்பாடாகவோ மட்டும் அந்த ரசனை நின்றுவிடாமல் இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்க்கும்போது கதையும் அக்கதையின் பாத்திரங்களும் வாழ்வையும் சகமனிதர்களையும் புரிந்துகொள்ளும் ஒரு பாடமாகவே சிலநேரங்களில் அமையும்.
அப்படி ஒரு பாத்திரம் கர்ணன்.
அவனது கதையை மேலோட்டமாகப் பார்த்தால் அவனது குணச்சித்தரிப்பில் அவன் ஒரு நாயகன். எதிரிகூடாரத்தில் இருந்தாலும் வீரன், வள்ளல், நட்பை மதிப்பவன், நன்றியுடையவன். அவன் ஓர் ‘உதாரணபுருஷன்’!
அவனைப்பற்றி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.
கதைப்படி, அவன் அனாதை. சமூகத்தின் சற்றே தாழ்த்தப்பட்ட ‘ஜாதி’ யில் வளர்ந்ததால் உயர் ‘ஜாதி’யினருக்கான அங்கீகாரம் அவனுக்குக் கிடைக்கவில்லை. இயல்பாகவே அவனுக்குள் வீரம் மிகையாகவே இருந்தது. அந்த வீரத்தைப்பயன்படுத்த கதையின் எதிரி அவனைப் பயன்படுத்திக்கொள்கிறான். தானும் உயர்குடியில் பிறந்தவன்தான் என்று தெரிந்து கொண்ட நிம்மதியில் தான் இறந்தபிறக்காவது தன் தாய் தன்பிறப்பின் ‘களங்கத்தை’த் துடைக்கவேண்டும் என்றே வரம் கோருகிறான்.
அவனது மனவோட்டத்தைப் பார்த்தால் அதில் எப்போதுமே தான் தாழ்ந்தவன் என்ற குறுகுறுப்பு தொடர்ந்திருக்கும்.
தாழ்வு மனப்பான்மை உள்ளவன் அதை இரண்டு விதமாக எதிர்கொள்வான். ‘ஆம்’ என்று ஒப்புக்கொண்டு, தன்னையே தாழ்த்திக்கொண்டு, சிந்தையிலும் செயலிலும் குறையோடு வாழ்வான். தான் செய்வது சரியென்ற தீர்மானம் அவனுக்கு எப்போதுமே வராது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தயக்கமும், தோல்வியின் எதிர்பார்ப்புமாகவே அவன் காலம் கழியும்.
மாறாகச் சிலர், தாங்கள் தாழ்வாகக் கருதப்படுகிறார்கள் என்பதை மறுக்கவும், அக்கருத்து தவறு என்று நிரூபிக்கவும் முயன்றுக்கொண்டே இருப்பார்கள். மனவியலில் இதற்கு compensation என்று பெயர். பாடங்களில் முதல்மதிப்பெண் வாங்கவியலாத மாணவன் விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவது போல.
கர்ணன் பாத்திரத்தில் வெளிப்படுவது என்ன?
தாழ்ந்தகுடியில் பிறந்தவன் என்ற சமூக ஏளனத்துடன் வாழ்வை ஆரம்பிக்கிறான். இயற்கையாகவே அவனுள் இருந்த திறமைகளின்மூலம் கொஞ்சம் பெருமைகளையும் அடைகிறான். அது அவனுக்குப் போதவில்லை. மாபெரும் சபைகளிலும் ஒரு மன்னவனாகப் புகழப்படவேண்டும் என்றே ஆசைப்படுகிறான், அதற்கு முயற்சிக்கிறான், சாதிக்கிறான். அரசியலுக்காகத்தான் அவனையும் ஒரு மன்னன் என்று ஆக்கியிருக்கிறார்கள் எனும் நெருடல் அவனுள் தொடர்ந்திருக்கும். அரசுப்பதவி ஒரு சௌகரியமான அலங்காரம் என்றும் அவனுக்குத் தெரிந்திருக்கும். அதனால் தன்னை யாரும் இகழ்ந்துபேசக்கூடாது என்றே மாபெரும் வள்லாலாகிறான்.
கொடைத்தன்மை சமூகம் காலங்காலாமாய்ப் போற்றிவரும் ஒரு பண்பு. அது தவறும் இல்லை. இயல்பாக ஒருவனுக்குத் தன்னிடம் மிகையாக உள்ளதைப் பிறருக்குத்தருவதும் பகிர்வதும் மிகவும் சிறப்பான பண்புதான். ஆனால் கர்ணனின் கொடைத்தன்மை பொதுவுடைமையின் பின்புலத்தில் பிறக்கவில்லை. அது அவனுள் இருந்த பிறப்பு குறித்த சமூகக் கணிப்பு குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையினாலேயே மேலோங்குகிறது.
தாழ்வுமனப்பான்மையுள்ளவன் தான் தாழ்வாக நினைக்கும் தன்மையை மறுக்கவும் மறைக்கவும் செய்யும் காரியங்கள் மிகையாகவே அமையும். இது தான் கர்ணன் தன் உயிரையும் தானமாகக் கொடுப்பான் எனும் மிகையான சித்தரிப்பின் அடிப்படை.
வீரம் தனிப்பட்ட தகுதி. ஆற்றலும் அப்படியே. இவை ஒருவன் மீது பிறருக்கு பயமோ பிரமிப்போ கூட்டும் ஆனால் உண்மையான மதிப்பு கூடவேண்டுமென்றால் அதற்கு சமூகம் பயன்பெறவேண்டும்படி காரியங்கள் செய்ய வேண்டும். அதனால் தான் மாவீரனாக அங்கீகாரம் பெற்றும், மன்னனாக ஒரு பட்டம் பெற்றும் கர்ணன் கொடைவள்ளலாகப் பெயரெடுப்பதில் முனைப்பு காட்டுகிறான்.
இதில் என்ன தவறு? அவன் இயல்பாகவே கருணைமிக்கவன் அதனால் தான் அவனுக்குத் தருவது சுகமாக இருந்தது என்பதும் ஒரு சாத்தியம்தான். அவன் இல்லாமையில் வளர்ந்தவன் அதனால் ஏழ்மை அவனுக்குப் புரியும், அதனால்தான் அவன் இல்லாதவர்களுக்கு வழங்கினான் என்பதும் சாத்தியம்தான். ஆனால், கதைப்படி அவன் எதிரிக்கும் வழங்குகிறான். ‘கடவுளுக்கும்’ கொடை தருகிறான். தன் உயிரையே தானமாகத் தரவும் துணிகிறான்! இங்கேதான் இது மிகையான செயல்பாடு. தானம் தருவது பிறர் துயர் துடைக்கவா தன் பெருமையைக் கூட்டிக்கொள்ளவா என்பதே கேள்வி.
கதையின் அடிநாதமாய் ஓடும் சமூக விவரங்களையும் பார்க்கவேண்டும். தாழ்ந்தகுடியில் வளர்ந்தவனாகத்தான் கர்ணன் சித்தரிக்கப்படுகிறானே தவிர தாழ்ந்தகுடியில் பிறந்தவனாகச் சித்தரிக்கப்படவில்லை! அப்படி உண்மையிலேயே அவன் தாழ்ந்தகுடியில் பிறந்திருந்தால் அவனுக்கு இவ்வளவும் ஆற்றல் இருக்குமா என்பது ஒரு மறைமுகக் கேள்வி!
எவ்வளவு ஆற்றல் மிக்கவனாக இருந்தாலும் அவனது தாழ்ந்த நிலை என்று (பிறப்பு பற்றித்தெரியாமல்) வளர்ப்பு மட்டும் வைத்துக்கொண்டு கருதியதால்தான் அவனை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவில்லை! தனிப்பட்ட ஆற்றலின் அங்கீகாரத்திற்கும்கூட குலப்பின்னணி அவசியமாகும் நிலைதான் இக்கதையில் விவரிக்கப்படுகிறது. இந்த மேலாதிக்க மனப்பான்மையின் இன்னொரு மறைமுக வீச்சாகவே அவனைக் கதையில் உயர்குடியில் பிறந்தவன்தான் என்றும் காட்டப்படுகிறது!
இன்றின் நிலை என்ன?
தாழ்வுமனப்பான்மையுள்ளவர்கள் சாதிக்கிறார்களா?
நிச்சயமாகச் சாதிக்கிறார்கள். ஆனால், சாதித்தபின், தங்கள் பின்னணியில் உள்ள அந்தத் ‘தாழ்வான’ நிலை என்பதை மறுக்கவும் மறைக்கவுமே முயல்கிறார்கள்.
சாதித்தபின், ஆதிக்கச்சக்திகளை எதிர்கொண்டு தங்களைப்போல் தாழ்ந்த இடத்தில் இருப்பவர்களை அரவணைத்து மேலெழுப்பமுயல்வதில்லை.
அடிமையாக இருந்து மன்னனாகிவிட்டால், தாங்கள் மன்னர்களே என்று மயக்கத்தில் இருக்கிறார்கள்.
மன்னர்களும் அடிமைகளுமாக மக்களைப் பிரிக்கக்கூடாது என்று கருதுவதில்லை, செயல்படுவதில்லை.
அப்படிக் கதைகளும் இல்லை. செய்திகளும் இல்லை.
காலங்காலமாய் கதைகள் ஒரே மாதிரித்தான் சொல்லப்படுகின்றன, சொல்லிக்கொடுக்கப்படுகின்றன.புதியகதைகள் உருவாக்க முடியாவிட்டாலும், பழைய கதைகளிலிருந்து புதியசிந்தனையைப் பழக்கிகொள்வோம்.
a recent interview
6 years ago
22 comments:
well written.regards dr.
"காலங்காலமாய் கதைகள் ஒரே மாதிரித்தான் சொல்லப்படுகின்றன, சொல்லிக்கொடுக்கப்படுகின்றன.புதியகதைகள் உருவாக்க முடியாவிட்டாலும், பழைய கதைகளிலிருந்து புதியசிந்தனையைப் பழக்கிகொள்வோம்."//
நிச்சயமாக! புதிய கதைகளை உருவாக்க முடியாவிட்டாலும் ஏற்கெனெவே நம்பப் பட்டு வரும் புராணங்களில் நல்லதைக் கோடிட்டுத் தருவதில் நம் அறிவு ஜீவிகள் எனப்படுவோர் முயற்சித்தால் உத்தமமாக இருக்கும்.
நட்புக்காகவும் கொடைக்காகவும் மட்டுமே அறியப் பட்ட கர்ணனை இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைத்ததற்கு ஸ்பெஷல் நன்றிகள்!
நன்றாக எழுதப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.அந்தந்த கால கட்டங்களில் வாழ்ந்தவர்கள் எழுதியது அந்தந்த காலத்தில் இருந்தே எழுதப்பட்டிருக்கிறது.இதே எழுத்தாற்றல் உள்ள ருத்ரன் கர்ணனின் சகாவாக இருந்திருந்தால் அப்படிதான் எழுதியிருப்பார் .
ருந்திரன் ஐம்பதுகளில் பிறந்திருக்கிறார் .அதை சார்ந்த சிந்தனை.....மனோதத்துவம் என விரிவடையும் போது இந்த சிந்தனைகள் , புதிய கோணங்கள் என எங்களுக்கு படிக்க கிடைக்கிறது.
நன்றி ருத்ரன்.
Class சார்... அருமையா சொல்லியிருக்கீங்க...
நட்சத்திர வாழ்த்துக்கள் சார்!
நல்ல பதிவு!பகிர்வு!
சொல்லத் தேவையன்றி ஒரு புது விதமான பார்வை.
நன்றி.
ஆனால் இந்தப் பார்வை ஒரு கருத்துப் பார்வைதானே.காவியத்தின் சித்தரிப்பு இல்லையே..காவியங்கள் ஆதிக்க சக்திகளால் கட்டமைக்கப்பட்டவை என்ற நோக்கில்,இவ்விதமான் உங்கள் கருத்துப்பார்வை-interpretation-காவியத்திலிருந்து வெளிப்படும் விதமாக இருந்திருந்தால்தான் கர்ணனின் அந்த மிகைத்தன்மை'யை நியாயப் படுத்த முடியும்.
அதற்கான சான்றுகள் காவியத்தில் எங்காவது காணக் கிடைத்ததா?
கொஞ்சம் கொசுவத்தி சுத்துணும். மன்னிச்சிடுங்க. பல ஆண்டுகளுக்கு முன் கர்ணன் பற்றி மனோதத்வரீதியாக தாங்கள் தொலைக்காட்சியில் (ராஜ் டிவி என்று நினைக்கிறேன்) இந்தச் விவரிப்பை ஒரு தொடரில் பகிர்ந்து கொண்டீர்கள். சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படக்காட்சிகளோடு அந்த பாத்திரப்படைப்பை அலசினீர்கள். 1996 அல்லது 1997 ஆக இருக்கலாம்.
கர்ணனின் கதாபாத்திரத்தை அலசியிருக்கும் விதம் வெகு நன்று.
//புதியகதைகள் உருவாக்க முடியாவிட்டாலும், பழைய கதைகளிலிருந்து புதியசிந்தனையைப் பழக்கிகொள்வோம்.//
அருமையான சிந்தனை.
ருத்ரன்
இது கர்ணன் பற்றிய கருத்து என என்னை நம்ப வைத்துக் கொள்கிறேன். இதில் ஜெனோடைப் பற்றி நீங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை என்றும் நம்பிக் கொள்கிறேன். விவாதம் துவங்க உள்ளது என நம்பவில்லை.
நிற்க• எனது சொந்தப் பெயரில் பின்னூட்டம் இடமுடியாமைக்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன்.
கர்ணன் தாழ்ந்த சாதியில் பிறந்தவன்தான். மகாபாரதம் காலத்தால் ராமாயணத்துக்கு முந்தையது என்பதால் கதை கட்டி விடுவது எழுதிய எடுபிடிகளுக்கு வாய்ப்பாக இருந்த்து. அவனது வீரமும், கொடையும் எந்த மேல்சாதி மன்னர்களையும் விட உயர்ந்த ஒன்றாக இருந்த்தால் அவனது பிறப்பை தமது சாதியுடன் இணைத்துப் பேசி மகிழ்ந்தனர் மேல்சாதியாக்கிக் கொண்ட சாதியினர். இன்றும் ஒரு தலித் மாணவனோ அல்லது சேவை சாதி மாணவனோ நன்றாகப் படித்தால் மேல்படுத்திக் கொண்ட சாதிகள் அவனது தந்தை ஸ்தானத்தை தாமே முன்வந்து ஏற்பதன் மூலம் அவனது பிறப்பை கேவலப்படுத்துவதை பல இடங்களில் கிராமங்களில் காண முடியும். ராவணின் சிறப்பை மறைக்க முடியாத பிற்காலத்திய சூழல் அன்றைய முந்தைய பத்து ஆரிய மன்னர்களுக்கிடையிலான பாரத்ப் போரில் தேவைப் படவில்லை.
நல்ல பதிவு மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்...
// தானம் தருவது பிறர் துயர் துடைக்கவா தன் பெருமையைக் கூட்டிக்கொள்ளவா என்பதே கேள்வி.//
கண்டிப்பாக தன் உயிரைகொடுத்துத்தான் பெருமை கூட்டிக்கொள்ளவேண்டும் என்ற நிலை கர்ணனுக்கு இல்லை...
நல்லதொரு பார்வை
நட்சத்திர வாழ்த்துக்கள்
வித்தியாசமான பதிவு சார்...ஆனால் சூரியனுக்கும் குந்திக்கும் கர்ணன் பிறந்ததாக சொல்லப்படும் கதையை நம்ப முடியவில்லை...எந்த நோக்கத்திற்காக அப்படி சொல்லியிருப்பார்கள்...?
நல்லதொரு பகிர்வு.
நட்சத்திர வாழ்த்துக்கள்.
***அது அவனுள் இருந்த பிறப்பு குறித்த சமூகக் கணிப்பு குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையினாலேயே மேலோங்குகிறது.***
சரியான பார்வை!
இதைப் போன்றவற்றையே உங்களிடமிருந்து எதிர்பார்த்தோம்.
அருமையான அலசல். வித்தியாசமான பார்வை.
//பழைய கதைகளிலிருந்து புதியசிந்தனையைப் பழக்கிகொள்வோம்.//
ஒத்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்.
தான் சாதித்த பிறகு தன்னை போல உள்ளவர்கள் சாதிக்க உதவ வேண்டும் என்ற எண்ணம் கர்ண்னிடம் இருக்கவில்லை
கர்னன், தனது ஆசிரியரை மடியிலே கிடத்தி தூங்க உதவும் பொழுது, வண்டு அவனது தொடையயை துளைத்ததாம். அதை அவன் தாங்கிக்கொண்டு ஆசிரியரின் நித்திரையயை கலையாமல் பார்த்துக்கொண்டானாம். அவனது தொடையில் வழிந்த குருதியினால் விழித்த குரு, ஒரு சத்திரியன் இந்த வலியயை தாங்கியிருக்க முடியாது, நீ சத்திரியன் இல்லை என்று ஏதோ சாபம் கொடுத்தாராம். உயர்த்தப்பட்ட குடியில் பிறந்திருந்தால், அதாவது சத்திரியான இருந்திருந்தால், அவன் அதை தாங்கியிருக்க மாட்டானே. ஆனால் தாங்கியிருக்கின்றான். ஆக, சத்திரியன் தாங்க மாட்டான் என்று பிறப்பினால் வரும் குணத்தை மறுத்தும் பாரத்தில் காட்சியிருக்கின்றது போலிருக்கின்றதே. உங்கள் கருத்தென்ன..?
Dear sir,
ungalin intha parvaikku en vazthukkal
//தாழ்வுமனப்பான்மையுள்ளவன் தான் தாழ்வாக நினைக்கும் தன்மையை மறுக்கவும் மறைக்கவும் செய்யும் காரியங்கள் மிகையாகவே அமையும்.//
ரொம்பச் சரியாக அது போன்ற மனநிலையில் அமைந்த மனங்களின் உளவியல் பின்னணியை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள், டாக்.
கடைசி இரண்டு பத்திகளில் தங்களின் ஆதங்கம் தெறித்து விழுகிறது. எதற்கும் மயங்காமல் கடைசி நிலை வரையும் 'தன் இயல்பு' நிலையிலேயே இருப்பது என்பது எல்லாருக்கும் கைவரப் பெறுவதில்லை... the nature places so many tempting baits to lose ones fundamental இயல்பு, and eventually the nature wins the race, I suppose.
வித்தியாசமான பார்வையாக இருந்தது, சார்!
/ஆனால், சாதித்தபின், தங்கள் பின்னணியில் உள்ள அந்தத் ‘தாழ்வான’ நிலை என்பதை மறுக்கவும் மறைக்கவுமே முயல்கிறார்கள்./
இது நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்...சாதித்தபின்னரும், தங்களை 'உயர்வான' நிலையினராக காட்டிக்கொள்ளவும் செய்கிறார்கள்..
தங்கள் கடைசி வரிகள் தான் இப்போதைய தேவை!
Post a Comment