நல்லோர் பிறர் குற்றம் நாடார், நலந்தெரிந்து கல்லோர் பிறர்
குற்றம் காண்பரோ- அல்லாது என்போல்வார் என்னை இகழ்வாரோ? என்
கவிக்குப் பின்பரோ காண்பார்
பிழை?
அவ்வை எழுதியதாக இது சொல்லப் படுகிறது.
யார் எப்போது எழுதினால்
என்ன?
மூடர்களோடு முட்டிக் கொள்ளும் யாரும் எப்போதும் இப்படி எழுதிக்கொண்டே
இருக்க வேண்டியது தான்!
இது எந்த அவ்வை என்பது முக்கியமல்ல..
எதிர்ப்பாளர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்று காட்டவே இது.
வெவ்வேறு அர்த்தங்கள் இதில் தெரிய வேவேறு சமூக நிலைகளும் தெரிய வேண்டும்.
என்னைப் பண்புடன் இரு, பொறுமையுடன் இரு என்று சொல்லும் அன்பர்களுக்காக இந்த அநாகரீகம் பதிவிடப்படுகிறது. இது என் மனைவிக்கு வந்த கடிதம்! அவளுக்கு சென்னைத்தமிழ் அவ்வளவு தெரியாது, ஆனால் நான் பிறந்து இன்னும் வளர்ந்த சென்னையின் மட்ராஸ் பாஷையை இதுகள் தாங்குமா?
நீங்களே படித்து முடிவு செய்யுங்கள்.. இதோ அந்தக் கடிதம்:
Feed: " ALL IN ALL " ???????? ???"
Posted on: Friday, March 26, 2010 11:37 AM
Author: chinnappenn2000
Subject: //expect pleasantries from me. Save your "Et, Tu B...
//expect pleasantries from me. Save your "Et, Tu Brute" game for someone more naive.//
Madam,
I did not expect pleasantries from you.I did not expect obscenities from you either and was therefore rudely surprised.I know, you have many fine qualities but being civil,dignified and humble are not among those.
Your superfine qualities are in full display of course, during your part time occupation as a cheer leader for the gang of thugs,twits, half wits and vagabonds who infest the cycle shop.
Allah, in one of his nastiest moods must have created specimens like Rajan,Gummi,pattapatti etc and let them loose to ravage and subtract value from society.That you should choose to exhort these riffraffs to indulge in such activities is strange.
//சிந்தாதிரிபேட்டை கருவாடு மாதிரிதான் இருக்கும்.//
Are your super-fine qualities responsible for driving comrade Rudhran to sneak out in the evenings and seek a part time occupation as a dried fish seller in Chintadripet? I cant blame him though,for this rather odd choice of occupation.
//how more memory related symptoms are surfacing other than chaetophobia, erotomania, lack of insight and attention deficit that already existed. I can only sympathise with this living thing and so I give up//
What is the point of this statement? It may impress the motley crowd of thugs and lunatics in the cycle shop.This merely is symptomatic of your pedantic affectation.
Will it difficult for me to ask:
"Tell me madam,apart from mumps,dyspepsia,dementia,bi polar disorder,OCD,IBS and hansens that you are afflicted with,what are the physical and mental menopausal disorders you suffer from?
துஷ்டனைக் கண்டால் எல்லாரும் தூரப்போய் விட்டால் யார் தான் துரத்துவது, அல்லது சம்ஹாரம் செய்வது?
காதலித்த வில்லியம் ஷார்லெப் என்பவனை மணந்து அவனுடன் இந்தியாவிற்கு
மேரி வந்த ஆண்டு 1865. கணவனைப்போலவே சட்டத்தில் நாட்டமிருந்தபோதும், இந்தியாவில்
மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. மருத்துவம் படிக்க
முடிவெடுத்தாள். இதில் முக்கியமான விஷயம், அப்போது ஆங்கிலம் பேசும்
உலகில் பெண் மருத்துவர்கள் யாருமே இல்லை என்பதுதான்!
அவளது முடிவிற்கு பலத்த எதிர்ப்பு இருந்தாலும், இங்கிலாந்தில்
கூட பெண்களை அனுமதிக்காத காலத்தில், பெண்களையும் அனுமதிக்கலாம்
என்று முடிவெடுத்தது, சென்னை மருத்துவக் கல்லூரி! மேரியுடன் சேர்த்து
மூன்று பெண்கள் 1878 ஆண்டில் மருத்துவர்களாக சென்னை மருத்துவக்கல்லூரியிலிருந்து வெளிவந்தார்கள்.
இந்தக் கல்வித் தகுதியுடன் மேரி லண்டனிலும் மருத்துவம் படித்துப்
பட்டம் பெற்றார். இந்தியப் பெண்களுக்கு மருத்துவ வசதி வேண்டும் என்று அரசாங்கத்திடம்
வாதாடி, மீண்டும்
சென்னை வந்து 1883 ஆண்டில் சென்னையில் கோஷா மருத்துவமனை நிறுவினார். இப்போது அது கஸ்தூரிபாய்
மருத்துவமனை என்று பெயர் மாற்றப்பட்டாலும் மக்களால் இன்றளவும் கோஷா ஆஸ்பத்ரி என்றே
அழைக்கப்படுகிறது.
அவளை ஆங்கில உலகின் முதல் மருத்துவராக்கிய அந்தச் சென்னை மருத்துவக்கல்லூரிக்கு
இது 175வது ஆண்டு!
அதே கல்லூரியில்தான் 1912 ஆண்டு முத்துலக்ஷ்மி ரெட்டி மருத்துவப்
பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்றானார்.
இந்தக் கல்லூரியின் மாணவன் என்பதே எனக்குப் பெருமை.
இந்துவான முத்துலக்ஷ்மி பற்றி முக்கியமாகக் குறிப்பிடாமல் கிருத்துவரான
மேரியை, (சரித்திரப்படி
சத்தியம் என்றாலும்) எதற்காக முதல் விஷயமாகவும் பெருமையாகவும் பார்க்கிறாய்
என்று அரிப்புடன் கேட்கப்படப் போகும் கேள்விகளை எல்லாரும் ரசிக்கலாம்! வெறி ஏறிவிட்டால்
வரலாறாவது வெங்காயமாவது?
இன்று மாபெரும் பெண் நிபுணர்கள் மருத்துவத்துறையில் சாதிக்க
அன்று முதல் அடி எடுத்த அந்த மகத்தான பெண் டாக்டர் மேரி ஷார்லெப் அவர்களுக்கு,
மரியாதையுடன் நமஸ்காரம்! வணக்கம் என்று சொல்வதைவிடவும் நம்ஸ்காரம் என்று சொன்னால்தான் முழுதாய் கீழே விழுந்து வணங்குகிறமாதிரி இருக்கும்.
உண்மையிலேயே உங்களில் யாருடைய
மனமாவது புண்படும்வகையில் நான் தவறாகவோ தெரியாமலோ ஏதாவது எழுதியிருந்தால் மன்னிப்புக்
கேட்கத்தயார்; ஆனால் நான் தவறாக எழுதியதாகவும்
நினைக்கவில்லை,தெரியாத விஷயத்தையும் எழுதவில்லை.
எவ்வளவு எழுதினாலும், எப்படி எழுதினாலும் சிலருக்குச் சில விஷயங்கள்
புரிபடவில்லை போலிருக்கிறது. ஏதாவது காரணத்துக்காக எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசையில்
உளறுபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இவர்களின் இரைச்சலினால் நான் சொல்ல வந்த
மையக் கருத்திலிருந்து விவாதங்கள் திசைமாறுகின்றன.
உண்மையைத் தெரிந்து கொள்ள
விரும்புவோருக்காக-
1.அந்த (இப்போதைய) கத்தார்
நாட்டுக்காரன், இந்தியக் குடிமகனாக இருந்த
போது, இந்த மொக்கை அரசாங்கம் ரவுடி மதவெறியர்களின் கூச்சலுக்கு
கைபிசைந்து நின்றதுதான் முதல் தவறாக எனக்குப் பட்டது.
2.இந்த ரவுடி கும்பலும் பக்தி
புண்ணாக்கு என்றெல்லாம் துள்ளிக் குதிக்கவில்லை. நடந்தது மத அரசியல்.
3.நட்கர்ணி என்பவர் ஹூஸைன்
பற்றி எழுதிய 1996 புத்தகத்தில் இந்த சரஸ்வதி படம் வந்தது. இது வரையப் பட்ட ஆண்டு 1970.
இந்தப் படம் எல்லார் பார்வைக்குமான கண்காட்சியாகவோ, தெருவெல்லாம் ஒட்ட ஒரு போஸ்டராகவோ உருவாக்கப்படவில்லை. இது ஒரு பணக்கார ஓவிய
சேகரிப்பவரின் விருப்பத்திற்காக வரையப்பட்டது. இது ஒரு தனிமனிதனின் பிரத்யேக சேகரிப்பு. 1996 என்பது ரதயாத்திரை, மசூதி இடிப்பு எல்லாம் முடிந்து ஆட்சியும் பிடித்த
காலம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் தேர்தலில் ஜெயிப்பது சிரமம் என்பதால், இந்துக்களை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றும் பொய்பிரச்சாரத்திற்கு ஒரு முஸ்லிம்
எதிரி தேவைப்படவே இவன் மீது பாய்ந்தார்கள். ஹூஸைன் அப்போதே மன்னிப்பு
கேட்டதை இன்று இணையத்தில் இதைப்பற்றிப் பேசுபவர்கள் மறந்துவிட்டார்கள் அல்லது மறைத்து
விட்டார்கள்.
4. 1996 அவன் மீது வழக்குகள்
போடப்பட்டன. 1998 சிவசேனாவும் பஜ்ரங்க்தள்
கூட்டமும் அவன் வீட்டைத்தாக்கின. அவன் படம் இருந்த ஒரு கண்காட்சியை நாசமாக்கின. அவர்கள்
அட்டகாசம் செய்த அந்த ஓவியக் கண்காட்சியில் எந்த சாமி படமும் வைக்கப்படவில்லை. 2004 டில்லி உயர்நீதிமன்றம் அவன் மீது போடப்பட்ட
வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. அவனும் நாட்டை விட்டே ஓடி விட்டான்.
அரசியல் காரணங்களுக்காக ஒரு
முஸ்லிம் இந்துக் கடவுளை அவமானப் படுத்தலாமா என்று அந்தக்கூட்டம் அன்று எழுப்பிய கேள்வி
இன்று தமிழ்ப் பதிவுலகில் மீண்டும் ஒலிக்கிறது. இப்போது சர்ச்சைக்குரிய அந்தப் படத்தைப்
பார்ப்போம்.
படத்தை நன்றாகப்பாருங்கள்
இதில் எது ஆபாசம்? மேலாடை இல்லாதது
ஆபாசம் என்று சொல்ல முடியாது. அவளை அப்படித்தான் சாஸ்திரப்படி சிற்பிகள் வடித்து வைத்திருக்கிறார்கள்.
அப்புறம் வேறு என்ன ஆபாசம்?
அவளது பெண்ணுறுப்பைக் கூட அவன் நாசூக்காக
வீணையை வைத்து மறைத்திருக்கும் போது, அதை நீக்கி எட்டிப்பார்க்கும்
கயமை நிறைந்த மனங்களில்தானே ஆபாசம்?
இப்போது இந்தப் படம் எப்படி
சரஸ்வதி எனும் தெய்வபிம்பத்துடன் ஒத்துப்போகிறது என்பதைப் பாருங்கள். அவளை நதியாகவும்
சொல்வார்கள். பூமிக்கு அடியில் ஓடி, கங்கை யமுனையுடன் திரிவேணி சங்கமத்தில் கலப்பதாகவும் சொல்வார்கள். இவன் படத்தில்
பிம்பம் நீர்மட்டத்திற்குக் கீழே உள்ளதாய் வரைந்திருக்கிறான். கீழே ஆழ்ந்திருந்தாலும் அவள் மேலே மலராய் வெளித்தெரிகிறாள்.
தாமரை ஞானத்தின் குறியீடு, அவளருகே அழகின் சின்னமாகவும் மமதையின் குறியீடாகவும் மயில். இதைவிட
என்ன சரஸ்வதி? இதில் எங்கே ஆபாசம்?
அவனது ஓவியங்கள் மீது எனக்குப்
பெரிய மரியாதை கிடையாது.அவன் செத்தால் ஒப்புக்குக்கூட அஞ்சலி என்றெல்லாம் எழுதமாட்டேன்.
அவன் வீம்புக்கு விளம்பரத்துக்கு நிறைய பண்ணியிருக்கிறான். ஆனால் இந்த விஷயத்தில் என்
நிலைப்பாடு இதுதான்-
(அ) இந்தப் படம் ஆபாசம் அல்ல.
(ஆ) இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்
ஒரு முஸ்லிம் எங்க சாமி கிட்ட விளையாடறான் எனும் விடலைத்தனமான வாதம். இது அறியாமையில் வருகிறது
இல்லை அரசியல் குயுக்தியாய் வெளிப்படுகிறது. எப்படியிருந்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியது.
(இ) இந்திய அரசு உள்ளூர் ரவுடிகளிடம்
இவ்வளவு பயப்பட்டால்,அமெரிக்காவின்
காலை என்ன நிழலைக் கூட நக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இது அவமானமாக இருக்கிறது, இதுதான் ஆபாசமாகவும் தெரிகிறது.
உண்மையிலேயே யாரையும் புண்படுத்துவது
என் நோக்கமல்ல.
எனக்கு முதன்முதலாய்
சொல்லிக்கொடுக்கப்பட்ட ஸ்லோகம்,
ஸரஸ்வதி நம்ஸ்துப்யம் என்று ஆரம்பிக்கும். ஸித்திர்பவது மேஸதா, என்று எந்த வேளையில் அன்றைய மழலைக் குரல் வேண்டியதோ, இன்றும் அருகிருக்கிறாள்.
அறியாத வயதில் அறிவு தா
என்று வேண்ட வைத்த தெய்வமாகவும்,
பின் அறிவால் தேட முற்பட்ட தத்துவமாகவும், இன்று அறிவே
தெய்வம் எனும் உணர்தலாகவும். ஒரு கட்டத்தில் அவளை அம்மா என்றே பார்த்தேன், பின்னர் அவளே என் காதலி, இன்று அவள் என் சகல
பயணத்திற்கும் ஒரு சகி.
தெரியாத விஷயங்களை நான்
பேசுவதில்லை, கேட்டுக் கொள்வேன்.
ஸரஸ்வதி பற்றிப் பேசுகிறேன். நெருக்கமாய்த் தெரியும் என்பதாலும், முழுமையாய் உணர்ந்ததாலும்.
காதலையும் காமமாக மட்டுமே
உணர்பவர்களுக்கு நிர்வாணம் ஆபாசம்தான், என்று எனக்குப் புரிய வைத்ததும் சரஸ்வதிதான். என் ஸரஸ்வதி நிர்வாணமாகவும்
இருப்பாள், அன்றைய கேரளா நாகரீக அடையாளமாக ஒரு புடவையும்
உடுத்தி இருப்பாள்,பெரியாரின் புத்தகமாகவும் தெரிவாள். எல்லாவற்றிலும்
தெரியும் அவளை எவனோ வரைந்த படத்தின் அச்சிட்டப் பிரதியில் சட்டம் போட்டுக்
கண்ணாடியில் நான் அடைக்க முடியாது. மூச்சு முட்டுபவர்களுக்குத்தான் ஆக்ஸிஜன்
தனியாகக் கொடுக்க வேண்டும், இயல்பாய் உயிருடன்
இருப்பவர்களுக்கு அல்ல.
பேச்சியம்மன் என்று
அழைக்கப்படும் கிராம தேவதையும் அவள்தான், வாக் என்று ரிக்வேதம் கூறுவதும் அவளைத் தான். வேதங்களைப் படிக்காமலேயே
அதன் மரபைத் தங்களுடையதாகச் சொல்லிக்கொள்பவர்களை விட, பேச்சியம்மனைக்
கும்பிடும் பாமரர்களுக்கு பக்தி அதிகம். பேச்சி மட்டுமல்ல, முனியையும்
மாரியையும் கும்பிடும் அவர்கள், தங்கள் சாமியை எவனாவது
அவமானப்படுத்தினான் என்று நினைக்க மாட்டார்கள்.
அவர்கள் கும்பிடும் சாமி எந்த மனிதனாலும் அவமானப் படுத்தப்பட முடியாத
அளவுக்கு வீர்யமானது. நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப்
பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை, ஒரு
முழுமையான சரணடைந்த பக்தி.
பக்தி காதல் மட்டுமல்ல
முழுமையான ஓர் அர்ப்பணிப்பு. கணினி தட்டும், அதில் மேலோட்டமாய்ப் படிக்கும் மனிதர்களை விடவும் அவர்களது பக்தி இன்னும்
நெருக்கமானது. அவர்களையும் கவரத்தான் கடவுள் இல்லை என்ற கோஷம், ஒருவனே தேவன் என்று மாறியது. இதெல்லாம் சரித்திரம்,
வலைப்பதிவு எழுத எதற்கு மெனக்கேட்டு இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று என்னால்
மேம்போக்காக மேட்டிமைத்தனத்தோடு இருக்க முடியாததால் இதை எழுதுகிறேன். யாராவது
இனியாவது தெரிந்து கொள்ளட்டுமே என்று. நம்பிக்கையோடு அல்ல,
நப்பாசையோடு.
மீண்டும் சரஸ்வதிக்கு
வருகிறேன், இப்படி ஒன்றை எழுத ஆரம்பித்து வேறெங்கோ
போவதும் அவளால்தான் என்று ‘ஹிண்டு’
மதம் சொல்கிறது! அதனால்தான் அவள் சித்சக்தி!
ஸரஸ்வதி எப்படி இருந்தாலும்
எனக்குப் பிடிக்கும். அவளது உருவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும்
ஞானசரஸ்வதி சிற்பம். . இவளைத்தான் பிரம்மவித்யாம்பிகை என்று திருவெண்காட்டில்
காட்டுகிறார்கள். கூத்தனூர் கோவிலில் அவள் முகம் கொஞ்சம் மொக்கையாக இருக்கும்.
இதைவிட அழகு ஹோய்ஸாலா
நர்த்தன ஸரஸ்வதி. நீல தாரா என்பதும், க்வாஞின் என்பது அவளது உருவம்தானாம். இவையெல்லாமுமே கதை கேட்டு கலைஞர்கள்
வடித்த உருவங்கள். சோழ சாம்ராஜ்யத்தில் யவனர்கள் தெருவில் திரிந்தார்கள் என்றால், அன்றைய மங்கையர் திறந்த மார்போடு இருந்திருக்க முடியாது (இன்றைய
கலாச்சாரக் காவலர்களும் இதையாவது ஒப்புக்கொள்ள வேண்டும்). அதனால் கடவுளை நீங்கள்
தினம் பார்க்கும் மங்கையரைப்போல் உடுத்திக் காட்ட முடியாது என்று தான் சோழ காலச்
சிற்பிகள், தெய்வங்களைத் திறந்த மார்போடு படைத்தார்கள்.
(கச்சை கட்டியதெல்லாம் பின்னர் கும்பகோணத்து நவீன சிற்பிகள் கைங்கரியம்).
இதனால்தான் என் முந்தைய
ஒரு பதிவில் சரஸ்வதிக்கு ஸிலீவ்லெஸ் போட்டு வரையலாமா என்பது தவறாகிறது. (எழுதாமல்
இருக்க முடியவில்லை: ஏன் இன்னும் 'கலாச்சாரம்' சரஸ்வதியை புடவையிலிருந்து ஸிலீவ்லெஸ் டாப்ஸ் வர
விடாமல் தடுக்கிறது? இன்னும்
எல்லாரும் அப்படி மாறவில்லை என்பதால். எல்லாரும் டாப்லெஸ் ஆகும்போது அவள்
ஸிலீவ்லெஸ் ஆகலாம் போலிருக்கிறது. (நாம்தான் கலாச்சாரம் என்பதை நெறி என்பதை விட
பழமை என்று நினைத்துக் கொள்பவர்களாயிற்றே!)
பிரம்மாவும் ஸரஸ்வதியும்
மேலே உள்ள படத்தை நான்
பார்க்கும்போது அது அறிவும் படைப்பும் இணையும் அற்புத நிலையாகத் தோன்றுகிறது.
ஒன்றில்லாமல் ஒன்று இருந்தால் இந்தச் சிற்பம் இருக்கும் கால அளவு கூட நிலைக்காது,
படைப்புக்கு அறிவு தேவையில்லை, இருந்தால் இன்னும்
பிரகாசமாகும்.
ரஞ்சி-நித்தி போல்
தெரிந்தால் அபச்சாரம். ஜாக்ரதை!
ஸரஸ்வதி, என்னை ஏன் வீணர்களுக்கு விளங்க வைக்க
முயல்கிறாய்?அறிவின் அற்புதம் பற்றி எழுதத்
தவறிவிட்டேன்.
மஹாலக்ஷ்மி செல்வம் தருவாளாம்.
அவளை யாரும் உதாசீனப் படுத்த முடியாதாம். அவள் எவ்வளவு முக்கியமானாலும், வைணவ ஸம்ப்ரதாயத்தில், அவளுக்கு இரண்டாம் இடம்தான். எனக்குத்தெரிந்து பத்மாவதி தாயாரைத் தவிர அவளுக்கென்று
பிரத்யேகக் கோவில் கிடையாது. சென்னை பெசன்ட் நகர் கோவிலைப் பற்றிக் கூவ வேண்டாம் அது
இந்தக்காலம், நீங்கள் ஒத்துக்கொள்ளாத காலம்.
பராசக்தி பலம் பொருந்தியவளாதலால், அவளுக்கு அவளது நாயகனுடன் சரிபங்கு. வீரமாதா
மட்டுமல்ல காருண்யா. என்பதனால் அவளுக்கு அவ்வப்போது தனிக் கோவில். நாயகனோடு இருக்கும்
சில கோவில்களிலும் அவளுக்கு முக்கியத்துவம் (மதுரை போல). அவளுக்கென்றே பிரத்யேக வழிபாட்டு
முறையும் ஸ்தலங்களும் உண்டு( காஞ்சி போல).
இந்த மூன்று நாயகர்களில் குறைந்த
மதிப்பீடு வாங்குபவன், சரஸ்வதியின்
நாயகன் பிரம்மன்! அவனுக்குத் தனியாக ஒரே ஒரு கோவில் தான் இந்த ‘ஹிந்து’ சாம்ராஜ்யத்தில்! ஆனால் அவனை வணங்காதவர்களும்
அவளை வணங்குவார்கள். இன்று குழந்தையை வைத்திருப்பவர்களும், என் அனுபவத்தில் கண்ட அறிவாளிகளைப் போல், நாளை அவளை வேண்டி நிற்பார்கள்.
இதிலிருந்து எனக்குப் புரிவது, செல்வம் ஒரு நாயகனை செல்வாக்கால் வாங்கலாம், வீரம் ஒரு நாயகனை மிரட்டியாவது சம உரிமை வாங்கலாம்,
ஆனால் கல்விதான் நாயகியாகத் தனித்தன்மையோடு விளங்க உதவும். கல்வி, ஆழ்ந்து அறிவது, அலட்டல் இல்லாதது, தவறுகளை ஒப்புக் கொள்வது.
மீண்டும் ஸரஸ்வதீ, நமஸ்துப்யம். உன்னிடம் வரம் தா என்று இன்னுமா கேட்பது?இதைப்
படிக்கும் ஹிண்டூஸிடம் கருணை கொண்டு புரிய வை.
வழக்கமான இரவுக்குப்பின், விழித்தான். அவனிடம் கைது
செய்யப்பட்டிருப்பதாய் சொல்லப் பட்டது.
“நீ எப்போதும்
கைதிதான், இப்போது நீ கைதானது உனக்குத் தெரிய
வந்திருக்கிறது”, என்றார்கள்.
இப்படித்தான் ஆரம்பமாகும்
காஃப்காவின் அற்புதமான நாவல். இந்த நாவலை அடிப்படையாய் வைத்து 1989ல் எழுதியதுதான்
விசாரணை நாடகம். அதன் சில வசனங்கள், இன்னும் கொஞ்சம்
யோசிக்க.
“கைதானது எப்படி?எதற்கு?” என்கிறான்,
அதற்கு அவர்கள் பதில்,”கேள்விகளை உன்னிடமே
கேட்டுக்கொள். கேள்விகளைப் பழகிக் கொண்டால், கேட்க வேண்டியவை
தோன்றும்”.
அவனது தொடரும் கேள்விகளுக்கு,”எங்களைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ சிந்தித்து
நேரத்தை வீணாக்குவதை விட, உன்னைப் பற்றி யோசி. யோசனையில்தான்
எல்லாம். வாழ்க்கை, பிறப்பிலிருந்து ஆரம்பமாவதில்லை, யோசிப்பதிலிருந்துதான் ஆரம்பமாகிறது” என்கிறார்கள்.
இது என்ன வழக்கு? இது என்ன விசாரணை என்பதற்கு, அவன் மனத்தின் பதில், “உனக்கு எப்போது வசதியோ
அப்போதுதான் விசாரணை ஆரம்பம். இந்த வழக்கு உன்னுள். வாடிக்கையாகிவிட்ட விலங்குகள் இறுக்குவதால்
இப்போது விசாரணை. விலங்குகள் இயல்பாகி விட்டால், அதன் பெயர்
வாழ்க்கை”.
அவன் வேறுவிதமாய்
சுதந்திரமாய் இருப்பதுபோல் தெரியும் ஒருவனிடம் போகிறான். அங்கே அவனுக்குக்
கிடைக்கும் பதில்,“விலங்குகள் இல்லாமல் யாரும் இல்லை. சிலருக்குக் கைதட்டல்கள் விலங்குகள்.
சிலருக்கு கடமைகள் விலங்குகள். வசதிப்படி விலங்குகளை ஆபரணமாய் ஆக்கிக் கொள்வதுதான்
சுதந்திரம்”.
அவன் எல்லாம் துறந்த, தெரிந்த, ஒருவனிடம்
செல்ல, அவனுக்குக் கிடைக்கும் பதில் இதுதான்.
“எல்லாரும்
கைதாகி உள்ள அமைப்பில் நீ அழுவதே உன் விலங்குகளின் சப்தம். கதவருகே வருவதே சாதனை
எனும் நடுத்தரம் அங்கேயே கல்லறையைக் காணும். ஏனென்றால்,
பதில்கள் நிறைந்த கதவின் உட்புறம் சென்றபின், கேள்விகள்
நிறைந்த வெளிப்புறம் வர முடியாது. தேவையுமில்லை என்பதால்”.
“எண்ணத்தில், செயலில் நீ நடுத்தரம்”. நடுத்தரம் என்பது
பொருளாதாரம் மட்டும் அல்ல என்பதற்காக இது எழுதப்பட்டது. இந்த நாடகம் தான் நான்
எழுதியதிலேயே பிடித்த ஒன்று. அதன் சில வசனங்களையே இங்கேயும் எழுதியிருக்கிறேன்.
1989 விசாரணை நாடகத்தின் ஒரு காட்சி
இதை இப்போது ஏன்
பதிவிடுகிறேன்? நானும் யோசிக்கத்தான்.
இன்னும் இதைப்பற்றி எழுதிக்கொண்டிருக்காதே
என்று அன்புடன் எனக்கு நெருக்கமானவர்கள் சொல்லியும் கேளாமல் சில விஷயங்களைத் தெரிவிக்க
வேண்டி இதை எழுதுகிறேன்.
ஹூஸைன் சரஸ்வதியை வரைந்தது
1970. இந்துத்வ எதிர்ப்பு வந்தது 1996. இடையில் அரசியல் கலந்த ஒரு மதத் தேர் தேசத்தில்
வலம் வந்தது. அவனை எதிர்க்க அவனது மதமும் ஒரு காரணம், மதத்தை அரசியலாக்கியதும் காரணம்.
அவன் அதன்பின் அது மாதிரி
வரையவில்லை. ஆனால் இன்றும் அரைவேக்காட்டுத்தனமாய் அவன் தொடர்ந்து அப்படி வரைந்து வருவதாகப்
பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஐயோ அற்புதமான ஓவியனை இழந்து
விட்டோமே என்று நான் புலம்பவில்லை. அவனைவிடச் சிறந்த இந்திய ஓவியர்களை எனக்குத் தெரியும்.
தான் பத்ம விருது கொடுத்து கௌரவித்த ஒருவனையே ஒரு வெறி பிடித்த கூட்டம் மிரட்டும் போது
கையாலாகாமல் கிடந்த வருங்கால வல்லரசின் மீதுதான் என் ஆத்திரம்.
வரலாறு தெரியாமல் விவரம் புரியாமல்
எழுதுபவர்கள் ஒரு பக்கம் என்றால், பெரியவாளின்
அருள் கிடைக்கவும், சின்னவாளின் அரவணைப்பு வேண்டியும் சிலர் எழுதுகிறார்கள்.
அறிவாளிகளின் அங்கீகாரமே எழுத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும்.
சிலர் எழுத்தை மனதாரப் பாராட்டுகிறேன், அவர்களின் மொழித்திறனுக்காக மட்டுமல்ல கருத்துச்
செறிவுக்காகவும். புதிதாய் எழுத வரும் இளைய தலைமுறையை எப்போதுமே இன்னும் எழுத வாழ்த்துகிறேன்.
எழுதுவதைப் பாராட்டுவது ஊக்குவித்தல்; எழுத்தைப் பாராட்டினால்தான் அது ஆமோதித்தல்.
புரிந்து கொள்பவர்கள் வளர்வார்கள்; புரியாததாய் நடிப்பவர்கள்
கொஞ்ச காலம் ஏமாற்றிவிட்டு காணாதொழிவார்கள்.
இத்துடன் ஹூஸைன் விவகாரம்
என்னைப் பொறுத்தவரை முடிந்தது. இதில் பின்னூட்ட விவாதம் தேவையில்லை.
இவரது ஓவியங்களில் ஒரு வேகம்
இருக்கும், வண்ணங்களில் நேர்த்தியும்
கம்பீரமும் இருக்கும். மிகச் சிறந்த ஓவியரான இவரை ஒரு திரைப்படக் கலை இயக்குனராகவே
பலரும் இப்போது அறிந்திருக்கிறார்கள். ஒரு கலை இயக்குனராகவும் காட்சி ஜோடனைகளில் இவர்
பல அற்புதங்களை உருவாக்கியிருப்பது நிஜம்.
இந்தச் சிறந்த கலைஞனின் உழைப்பு இப்போது
தமிழ்நாடு அரசுக்கும் பயன்படுகிறது. புதிதாய் கட்டப்படும் சட்டசபைக்குள் ஓவியங்கள்
இவரை வரையச் சொல்வார்களா என்று தெரியவில்லை, ஆனால் இப்போது அந்தக்
கட்டிடத்திற்காகப் பணியாற்றிவருகிறார்.
நாளை சென்னைக்கு சோனியாவும்
பிரதமரும் வருகிறார்களாம். புதிய சட்டசபை வளாகத்தைத் திறந்துவைக்கப் போகிறார்களாம். கட்டி முடிக்காத கட்டிடத்தை அவர்கள் திறந்து வைக்கும் போது உள்ளே எப்படி இருக்கும்
என்று தெரியவில்லை, ஆனால் வெளியே
அழகு குறையாமல் காட்சி தர வேண்டுமாம். அதனால் கட்டப்படாத கோபுரத்தை ஒப்புக்காக தற்காலிகமாக
அமைக்கப் போகிறார்களாம்! இப்படி ஒரு பொய் கோபுரம் உருவாக்க இரண்டு கோடி ரூபாய் செலவு.
தரணியின் கைவண்ணத்தில் அது
எப்படியும் அழகாகத்தான் காட்சி தரும். எப்படியும் தரணியின் கீழே தொழிலாளர்கள் கொஞ்சம்பேர்
பிழைக்கப் போகிறார்கள் எனும் ஆறுதலுக்காக இந்த ஆடம்பரத்தை சகித்துக்கொள்வதா?
யாருக்காக இந்த நாடக அரங்க
நிர்மாணம்? எவனாவது ஜோஸ்யம் சொல்லியிருக்கிறானா
இந்தத் தேதியில்தான் இது திறக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்த
அரண்மனையில் ராஜகுடும்பத்தின் ஆட்சி தொடரும் என்று?
கட்ட ஆரம்பிக்கும்போதே தெரியாதா
இத்தனை மாதங்கள் ஆகும் என்று? கட்டி
முடித்துக் கூப்பிடும்வரை டில்லியில் செல்வாக்கு நிலைக்காதா?
அவசரமாகக் கட்டுவது கிடக்கட்டும், முழுமையாகக் கட்டாமல் நல்ல
நாள் என்றுகூட திறப்பு விழா நடக்கட்டும். இன்னும் கட்டவில்லை என்று சொன்னால் சோனியாவின்
முன் அசிங்கம் என்றுதான் இந்த ஜோடனையா? அந்த அம்மையார் பத்திரிகை
படித்து இதைத் தெரிந்து கொள்ள மாட்டார்கள் என்று இவர்களுக்குத் தெரியுமா?
இரண்டு கோடி! சென்னையில் உள்ள
மிகப்பெரிய அரசு மனநலக் காப்பகத்தில் பல கட்டிடங்கள் மிகவும் பழுதுற்றுக் கிடக்கின்றன, அவற்றைச் சரி செய்ய இந்த பொய் கோபுரம் கட்டும் செலவு கூட ஆகாது.
நாம் வெட்கப்பட்டால் என்ன
வருத்தப்பட்டால் என்ன? மன்னர் மனம் குளிர்ந்தால் போதாதா? சாபங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது-
நாசமாய்ப் போகட்டும்.
தெய்வம் என்பதன் பொதுத் தன்மை புரியாதவர்கள் தான் அதன் மீது பிரத்யேக உரிமை கொண்டாடுவார்கள்.
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்து அசிங்கப்படுத்திவிட்டதாக ஹூஸைன் மீது இந்துத்வ வெறி எதிர்ப்பலை வீச அதை அடக்க தைரியமில்லாத அரசு மௌனம் சாதிக்கும் கேவலத்தைத் தான் எழுதினேன். அது பொறுக்கவில்லை. பதில் எழுதிய ஜன்மங்கள் என்னிடம் “உன் தாயை அப்படி வரைவாயா?” என்று கேட்டன. ஆம் என்றேன். உடனே, “எங்கே வரைந்து காட்டு” என்கிறார்கள். என் மனைவி இது குறித்து எழுதிய பதில் பதிவிலும், எங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். இந்த மானங்கெட்ட ஜன்மங்களுக்குப் பதில் சொல்வதற்காக அப்படியொரு படம் வரைந்து வெளியிட பதிவெழுதும் நேரம் கூட ஆகாது. இன்னமும் அப்படி வேண்டுவோர் சரியான முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்புங்கள் தரவேண்டியதைத் தருகிறேன்.
கடவுளுக்கு மனித முகம் எப்போது வந்தது? ரவிவர்மா வரைந்த சரஸ்வதி மாதிரிதான் அவள் இருப்பாளா? ரவிவர்மா காலத்தில் பார்டர் வைத்த ரவிக்கையை அவளுக்குப் போட்டு அழகு பார்த்தால், இப்போது ஸிலீவ்லெஸ் டாப்ஸுடன் அவளை அழகுப் படுத்தலாமா? ரவிவர்மா என்ன பிரம்மலோகத்தில் எடுத்த பாஸ்போர்ட் படத்தை மாடலாக வைத்துத்தான் அவளைப் படம் வரைந்தாரா? ஹொய்ஸாலா சிற்பங்களில் பலவற்றில் அவளுக்கு ஆடை அணிவிக்கப்படவில்லை! அவற்றைப் பார்க்கும் போது பாலுணர்வு தூண்டப்படுகிறதா? அவை ஆபாசமாகத் தெரிகின்றனவா?
இதுதான் கடவுளின் உருவம். இதை இப்படித்தான் காட்ட வேண்டும் என்று ஏதாவது வேதவிதிகள் உள்ளனவா? சிற்ப சாஸ்திரம் அளவுகளையும் ஆபரணங்களையும்தான் குறிப்பிடுகிறது, ஆடை அமைப்புகளை அல்ல. நிஜமாகவே பக்தியுடம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பக்தர்களுக்குத் தெரியும், எவ்வித அலங்காரமும் இல்லாது கிடைக்கும் விக்கிரக தரிசனம் எவ்வளவு உயர்வானது என்று. அபிஷேகம் செய்யப்படும்போதுகூட கிடைக்காத நிர்வாண தரிசனம் ஒரு கலைஞனின் மனத்தில் காட்சி பெற்றால் அவன் உங்கள் எல்லாரையும்விட அந்த தெய்வத்திற்கு நெருக்கமானவன் என்று தான் அர்த்தம்.
சிவனை, விஷ்ணுவை, முருகனை நிர்வாணமாக வரைவதில் யாருக்கும் பெரிய ஆத்திரம் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் தெய்வங்களின் கற்பு பற்றித்தான் இவர்களுக்கு அதிகம் கவலை வருகிறது. வர்த்தகத் திரைப்படக் கதாநாயகன் போல உடனே சட்டையைக் கழற்றி அவள் மீது போர்த்திவிடத் துடிக்கிறார்கள்.
யார் யாரைக் காப்பாற்றுவது? யார் யாருக்காக வக்காலத்து வாங்குவது? சர்வசக்திக்கு நீங்கள் பாதுகாப்பு தரத் துடிக்கிறீர்களா?
“அவன் தாயை அவன் நிர்வாணமாக வரைந்து கொள்ளட்டும், என் தாயை அப்படி வரையக்கூடாது” என்று சொல்பவர்கள் எந்தத்தாயை தங்கள் தாயென்று கூறுகிறார்கள்? பராசக்தியையா? அவள் என்ன உன் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் தாயா நீ பிரத்யேக உரிமை கொண்டாட? லோகமாதா என்று ஏன் அழைக்கப்படுகிறாள்? எல்லார்க்கும் அவள் தாய் என்றால் எல்லாருக்கும் அவள் மீது உரிமை இல்லையா? உனக்கு மட்டுமே தாய் என்றால் அவள் எப்படி உலகத்துக்கே தெய்வமாகிறாள்? உலகில் இத்தனை சத விகிதத்திற்கு மட்டும் அவள் தாயென்றால் மீதிக்கு யார்? உன் தெய்வத்தின் சக்தியை நீயே இவ்வளவு குறுக்குவதை உணர்கிறாயா?
அவள் ஸ்ரீமாதாஎன்று அழைக்கப்படுவது, அனைத்துக்கும் ஆதாரமாய்இருப்பதால். உனக்கு மட்டும் அவள் ஆதரவாக இருந்தால் அவள் தெய்வம் அல்ல உன் கேவலமான அரசியலுக்கு இன்னொரு பிம்பம்.
அவள் அபர்ணா என்றும் அழைக்கப்படுகிறாள். யாருக்கும் கடன்படாதவளை உன் அர்த்தமில்லாத ஆர்ப்பாட்டத்தினால் உனக்குக் கடன்பட்டவளாக ஆக்க நினைப்பது மடமை.
அவள் குஹ்யா என்று அழைக்கப்படுவது ஏன்? உன் அறிவு இன்னும் ஞானமாகாதபோது உனக்குப் புலப்படாத ரகசியமாக இருப்பதால்தான்.
ஹூஸைன் படத்தில் ஆபாசம் தெரிந்தால் உனக்குப் பாலுணர்வு துடைப்பக்கட்டையைப் பார்த்துக்கூடத் தூண்டப்படும் பரிதாப நிலையில் நீ இருக்கிறாய் என்றுதான் அர்த்தம். இதற்கு மேலும் உன் போன்றவர்களுக்கு விளக்க முற்பட்டால் எனக்கு உருப்படியாய் எதுவும் செய்யப் பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
இதை நான் எழுதக் காரணம்: ///நிர்வாணமாக வரைந்தால் அழகாக இருக்கும் என்றால் என் தாயையும் தாரத்தையும் கூட அப்படி நான் வரைவேன். நிர்வாணமா விஷயம்? அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் தானே? /// சபாஸ் தயிரியமாக சொன்னீர்.
உங்களுக்கு உங்கள் உரிமையாளர்களைப் பற்றி வரைய உரிமையிருக்கலாம் ஆனால் அடுத்தவர் தாயை வரையமுடியுமா? {இந்துக்கள் தாயாக வணங்கும் தெய்வங்களை} என்று ஏதாவது ஒரு இந்து வெறியர் கேட்கும் முன்பே, இந்தவிஷயத்தை ஆதரித்துப் பின்னுட்டிய நபர்களையும் அவர்கள் சார்ந்த குடும்பத்தையும் அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் கொண்ட நிர்வாண ஓவியத்தை வெளியிட்டு உங்களை செக்குலரிஷ்ட் என்று காட்டிவிடுங்கள் நண்பா!-Smart என்ற பெயரில், எனக்கும் என் மனைவிக்கும் அனுப்பப்பட்ட முகவரியில்லாத ஒரு பின்னூட்டம் இது.
இனி முகவரியில்லாமல் எழுதாதீர்கள், பதில் வராது. அடையாளப்படுத்திக்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் எழுதாதீர்கள், கோழைகளுக்காக நேரம் செலவிட முடியாது.
மனமொப்பி, சட்டப்படி
செல்லுபடியாகும் வயதிலுள்ள ஆணும் பெண்ணும், சுயநினைவோடும் ஒப்புதலோடும்
சுகமான தருணங்களை அனுபவிப்பதை எப்படி இவ்வளவு பேர் கோபத்தொடு பார்க்கிறார்கள்? அவர்கள் இருவரும் மற்றவர் எல்லாரும் பார்ப்பதற்காக வியாபார நோக்கில் ஆபாசப்
படம் எடுக்க நினைத்ததாகவும் தெரியவில்லை. அவர்களது அந்தரங்கத்தின் அத்துமீறல்தானே
இது?
அவன்
மீது கோபப்பட இப்படி ஒரு படம் தேவைப்பட்டது என்பதே கேவலமில்லையா?ஆதிசேஷன்
மீது அமர்ந்து ஆண்டவனாக அவன் படம் எடுத்து வெளியிடும்போது புண்படாத இந்து மனங்கள் இப்போதுதான்
புண்படுகின்றனவா? இது என்ன கோபம்? அறச்சினமா ஆவேச நடிப்பா?
திரும்பத்திரும்ப
இந்த நிகழ்வு மனத்தில் நெருடும்போது அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவளுக்கு
விருப்பமானவனோடு இருக்க அவளுக்கு உரிமை உண்டு. அது வன்புணர்ச்சியாகவோ வியாபாரக் கொஞ்சலாகவோ
தெரியவில்லை. அவளை அவமானப் படுத்த நமக்கெல்லாம் யார் உரிமை தந்தது?
அவனது
போலி ஆன்மீகநாடகத்தை விமர்சிக்கும்போது அவளையும் அவமானப்படுத்துதல் என்ன நியாயம்?
யாராவது
உற்றுப்பார்த்தாலேயே உடையைச் சரிபார்க்கும் வழக்கம் எல்லா பெண்களுக்கும் உண்டு. நீச்சல்
உடையில் நடிக்கும் நடிகையர்க்கும். இது அனிச்சையான மான உணர்வு. இவளை இப்படித் தொடர்ந்து
காட்டும்போது அவள் மனம் எவ்வளவு வருந்தும்? சம்பளம் கொடுத்தால் நெருக்கமாகக்
கட்டிலில் புரண்டு நடித்துப் பாட்டுப் பாடத் தயாராக இருப்பதால் அவளுக்கு மானம் கிடையாதா? இயல்பான மென்னுணர்வுகள் இருக்கக்கூடாதா?
மானம்
ரோஷம் இல்லாதவன்தான் ஞானி என்று கபட வேடம்போட்டு குற்ற உணர்வு இல்லாமல் சிரித்துக்கொண்டு
திரிய முடியும்; அவனுடன் இருப்பதாலேயே அவளுக்கும் இதெல்லாம் கிடையாது என்று முடிவெடுக்கலாமா?
அவனைத்
திட்டுகிறேன் என்று அவளை அவமானப்படுத்துவது, இத்துடனாவது நிற்கட்டும். மனத்தில் ஈரம்
உள்ளவர்கள், இனி நிதானமாக அவளைப் புரிந்து கொள்ளப் பாருங்கள்.
ஜெயமோகனுக்கு ஒரு பதில்பதிவு எல்லாம் எழுதுவேன் என்று நான் நினைத்ததே இல்லை. முழுவதும் படிக்க முடிந்தால்தானே பதில்/ விமர்சனம் எழுதுவது! ஆனால் நித்யானந்தாவின் இன்றைய நிலைமை குறித்து வந்த பதிவைப் படிக்கச்சொல்லி சில நண்பர்கள் வற்புறுத்தியதால் மெதுவாகக் கஷ்டப்பட்டுப் படித்தேன்.
அதில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து என் எண்ணங்கள்-
நித்யானந்தர் ஊடகங்கள் முன்அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப்பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. அம்பலப்பட்டது ஒரு தனிமனிதன் என்றால் ‘இந்து மனங்கள்’ எந்தச் சிக்கலுக்காக முண்டியடித்து அவன் படத்தைப் போட்டுக் கொளுத்துகின்றன? அவன் முன்வைத்த தத்துவம் என்னவென்று தெரியாது, என்னையே துன்புறுத்திக்கொண்டு இம்மாதிரி எழுத்துக்களை நான் படிப்பதில்லை. இந்தக் கட்டுரையே போதும் இதற்கு மேல் நித்யா பெயரில் எவனோ எழுதியதெல்லாம் தத்துவம் என்று படிக்கும் பொறுமை எனக்கு இல்லை.
அறச்சிக்கல் என்றால் என்ன? இதே கட்டுரையில் பின்னர் வரும் தர்மம் சம்பந்தப்பட்ட விஷயமா? நீதிக்கும் நியதிக்கும் இடைபுகுந்து தப்பிக்கத்தெரியாத நிலைதான் அறச்சிக்கலா? அறம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவா? இல்லை இந்து அறம் முஸ்லிம் அறம் என்றெல்லாம் இருக்கிறதா?
இவனது கேவலம் என்று எல்லாரும் கொதிப்படைவது அவனது காம இச்சையை அவன் பூர்த்தி செய்துகொண்டதற்கா இல்லை அந்த பிம்பம் தகர்க்கப்படுகிறதே என்றா? எல்லா சாமியார்களையும் சகித்துக்கொள்ளாதவர்களுக்கும் இன்று இந்துமுகத்தில் இன்னுமொருமுறை கரிபூசப்பட்டதே என்று கலங்குபவர்களுக்கும் ஒரே அறப்பார்வைதானா?
நான் இந்து, நான் இப்படித்தான் எனும் ஆணவத்தின் அடக்கி வாசிக்கும் மொழியா?
இல்லை இந்து சாமியார் இப்படித்தானே செய்வான் இதற்கென்ன இவ்வளவு கொதிப்பு என்ற அசட்டையான மனநிலையா? திமிரா? இதற்கெல்லாம் அறம் வெங்காயம் என்று சொல்பவர்கள் முட்டாள்கள் எனும் ஏளனமா?
ஊடகத்தால் உருவாக்கப்பட்டஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை. இவ்வளவுதானா? சில அற்பர்கள் வெளிப்படையாகக் காசுக்குக் குரைத்தார்கள், வேறு சில அற்பர்கள் இன்னும் மிகுந்த தொலைநோக்கோடு பரந்த இந்து சாம்ராஜ்யக் குறிப்புணர்ந்து சால்ஜாப்பு சொல்கிறார்கள். இருவருக்குமே இதே ஊடக உதவிதானே. ஊடகங்கள் இல்லாவிட்டால் ராமபாலம் கதையை நாஸாவின் ஆதாரம் என்றெல்லாம் பொய் சொல்லி விற்க முடியுமா?
இவன் அவமானப்பட்டான் என்றால் இவன் இந்துப் பிரதிநிதி இல்லை, ஊடக மாயை! அவனுக்கும் இந்துமத முகமூடி இருந்ததால்தானே இப்போது எல்லா சேனைகளும் துள்ளி வருகின்றன?எங்கள் வீட்டுத் திருடனை ஊரெல்லாம் சேர்ந்து அடிக்க வேண்டாம் நாங்களே கண்டிக்கிறோம் எனும் மனப்பான்மைதானே!
இந்துஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை, சிறுமைப்படுத்துவதாகஅது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது.திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில்கண்டிப்பாக இது ஓர் அடிதான் என்று. திட்டமிட்டு யாரும் துறவிகளைச் சீண்டுவதில்லை. துறவி என்ற பெயரில் இவர்கள் செய்யும் திருட்டுத்தனத்திற்குத் தான் எதிர்ப்பு. அவ்வளவு அற்புதமான ‘மரபு’ இவ்வளவு எளிதாகச் சிறுமைப்படுத்தப்பட்டால், அதன் வீச்சும் வீரியமும் எவ்வளவு?
இந்து மரபில் மூன்று கூறுகள் உள்ளன என்று சொல்லலாம். ஒன்று, தத்துவார்த்தமான தளம். இரண்டு , வழிபாடு,பக்தி சார்ந்த தளம். மூன்று, பழங்குடி நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த தளம்.……நம் சூழலில் பிந்தைய இரண்டும்தான் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவந்தன. அவை அறிவார்ந்த தேடல் கொண்ட ஒருவருக்கு முழுநிறைவை அளிப்பதில்லை. அறிவார்ந்த தேடலுக்கு எவை உதவுகின்றன? வேதங்களா உபநிஷத்துக்களா? இடைச்செருகல்கள் நிறைந்த கீதையா? அறிவார்ந்த தேடலுக்காக நித்யா போன்றவனெல்லாம் கிட்டத்தட்ட கடவுளாக மாறும் கூட்டம் எப்போதாவது அறிவுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறதா?
அறிவுள்ளவன் எவனாவது இந்துமதத்தின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதீயக் கேவலத்தைச் சகித்துக்கொண்டிருப்பானா? அப்படிப்பட்ட அநாகரிகத்துடன் ஒத்துப்போகும் போது அறிவு என்பது எது? சந்தர்ப்பவாதமா? சட்டத்திற்குப் பயந்து உள்ளேயே புகைந்து கொண்டிருக்கும் ஆதிக்க ஆணவமா?
இந்து தத்துவ மரபை நவீன சிந்தனைகளுடன் உரையாடச்செய்து முன்வைக்கவேண்டியதேவை ஏற்பட்டது. அதைச் செய்தவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இங்கே தான் குயுக்தி வெளிப்படுகிறது. விவேகானந்தர் இந்து கோட்பாடுகளை முன்வைத்து, உபநிஷத் சாரத்துடன் அத்வைத மார்க்கத்தைப் பரப்பியதைப் போல், ஜெ.கிருஷ்ணமூர்த்தி செய்யவில்லை. ஜேகே, ஓஷோ இருவருமே மத அடையாளங்களைத் தவிர்த்தவர்கள். அவர்களின் அறிவுத்திறன் இவர்களுக்குத் தேவைப்படுவதால்தான் ஜேகே கூட இந்துதத்துவ மரபின் உரையாடல்களை முன்வைத்ததாக இப்படி ஒரு பொய். அடுத்து புத்தர்கூட இந்துமதத்தைத்தான் முன்வைத்தார் என்று சொல்வார்கள்.
அதாவது ஒரு தேவை சமூகத்தில் உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றி தங்களைநிறுவிக்கொள்கிறார்கள் இவர்கள். பெரும் அமைப்புகளை உருவாக்குகையில்அமைப்புகளுக்குரிய அத்தனை சிக்கல்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. மதம் என்பது ஒரு மார்க்கமாக வாழ்முறையாகத்தான் சொல்லிக்கொண்டார்கள், இப்போது அது நிறுவனம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு பெரிய மதமே இருக்கும் போது அங்கே எதற்கு துணை நிறுவனங்கள்? இவ்வளவு தத்துவ பாரம்பரியமிக்க மதவழி வருபவர்களுக்கு ஒரு நிறுவனத்தை நேர்மையுடன் செயல் படுத்தத் தெரியாதா? பூஜ்யம் கண்டுபிடித்த மதம் என்று சொல்லிக்கொள்வது எல்லாம் கணக்கைத் தப்பாக எழுதி ஏமாற்றத்தானா?
நித்யானந்தர் மாட்டிக்கொண்டது சமீப காலமாக நடந்துவரும் ஊடகப்படையெடுப்பின் ஒரு விளைவு….. இன்று இழிவுபட்டு நிற்பது நித்யானந்தர் என்ற மனிதரே ஒழிய எந்த மரபின்தோற்றத்தை அவர் தன் வேஷமாகக் கொண்டாரோ அந்த தோற்றம் அல்ல… ஒரு கம்யூனிஸ்டின் கதை எழுதுவதாக ஆரம்பித்து மொத்த கம்யூனிச சித்தாந்தத்தையே இழிவு படுத்தும் போது பானையின் ஒரு பருக்கையே உதாரணம், மாட்டிக்கொண்டால் ஒரு பருக்கை பானையாகாது எனும் மொழிவிளையாட்டு!
ஆனால் காலம்தோறும் எந்தமோசடியாளனும் எளிதில் அணியக்கூடியதாகவே காவி இருந்துள்ளது. ஆனாலும்காவியுடை அதன் தனித்துவத்துடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எந்த மோசடியாளனும் எந்த உடையை வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் அந்த உடை அணிந்தவன் நம்ம ஆளு என்று குலாவுவதும், அவன் மாட்டிக்கொண்டால் ஜாதியைப் பொறுத்து அது குற்றமா இல்லை சறுக்கலா என்றெல்லாம் பேசும் அயோக்கியத்தனத்திற்கும் இந்த வர்ணத்திற்கும் ஏன் இவ்வளவு நெருங்கிய தொடர்பு?
அப்படி என்ன தனித்துவம் இதில்? இந்த ஆடையின் ஆரம்பம் என்ன? அன்றைய சூழலில் அவசியம் கருதி உருவான நிறத்துக்கு இன்று பட்டில் அதே நிறத்தில் நடிக்கப் புறப்படும் போலிகளுக்கும் என்ன தொடர்பு? காவிக்கு அன்றிருந்த அர்த்தம்தான் இன்னும் இருக்கிறதா?
காவி என்பது ஒரு குறியீடு என்றால் இன்று அது எதைக் குறிக்கிறது?
வழித்துணையாக ஆவது தங்கள் பாதையில்தாங்களே சென்றவர்களின் சொற்கள் மட்டுமே.ஆகவே ஒருகணமும் சிதையாத கவனம்அதற்கு தேவையாகிறது.அதைத்தான் உபநிடதம் சொல்கிறது ‘ஜாக்ரதை!’……… ஜாக்ரதா என்பது விழிப்புணர்வு!
எவனுக்கெல்லாம் கூச்சமில்லையோ, குற்ற உணர்வு இல்லையோ அவனெல்லாம் தன் பாதையில் தானே நடந்து சென்றதாகத்தான் சொல்கிறான். அவன் மாட்டிக்கொள்ளாதவரை ஞானி, மாட்டிக் கொண்டால் ஏமாற்றுப் பேர்வழி!
ஜாக்ரதா என்று குறிப்பிடப்படும் விழிப்புணர்வு எச்சரிக்கை உணர்வு அல்ல; அது அறிவின் கூர்மை நிதானத்துடன் வெளிப்படும் மனநிலை.
விழிப்புடன் இருப்பது மாட்டிக் கொள்ளாமல் இருக்கத்தான் என்று நினைத்தேன், இவர்கள்தான் இனி மாட்டிக்கொள்ளாமல் இருப்பது என்று காட்டுகிறார்கள்.
நம்மை நாமேதான் பெரும்பாலும் ஏமாற்றிக்கொள்கிறோம்...இத்தகைய தருணங்களில் நாம் உணரவேண்டிய ஒன்றுண்டு. எது இந்து ஞான மரபின்சாரமோ அதை முன்வைப்பதே சரியான வழியாக இருக்க முடியும். எது உண்மையோ அதுமுன்வைக்கப்படவேண்டும். அது உண்மை என்றால் அதற்கு தன்னை நிறுவிக்கொள்ளும்வல்லமை இருக்கும். போலிகளை, மோசடிகளைச் சார்ந்து உண்மை நிலைகொள்ளமுடியாது. அது அவர்களை பிளந்துகொண்டுதான் தன் வழியைக் கண்டுபிடிக்கும். இல்லாத ஒன்றை எவ்வளவு வாய் கிழியக் கத்தினாலும் அது நிலைக்காது.
இந்து மத ஞானம் என்பது எந்தக்காலத்திலிருந்து? இந்து என்று இஸ்லாமியர்கள் பெயர் வைத்தார்களே அன்றிலிருந்தா? இந்திய ஞானி வேறு இந்து ஞானி வேறு. தொன்மையான இந்நாட்டு ஞான மார்க்கம் கேள்விகளை உள்ளடக்கியது. கேள்விகள் நெருடலானபோதுதான் பதில் தர முடியாத வர்க்கம் பாமரர்களிடமிருந்து பலவற்றை மறைத்து வைத்தது. தெளிவை நோக்கியது இந்திய ஞானம், திருட்டுத்தனத்தை உருவாக்கியது இந்து ஞானம். இந்தத் திருட்டுத்தனம், தானே பிளந்து கொண்டு அழியும்.
நித்யானந்த சாமியாரின் மீது எனக்கு எப்போதும் மரியாதையோ நம்பிக்கையோ இருந்தததில்லை. எல்லா அயோக்கியர்களிடமும் இருந்த கோபம்தான் அவன் மீதும். அந்தப் பெண்ணுடன் சுகமாகக் கிடந்த படம்கூட எனக்குக் கோபம் வரவழைக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான துறைகள் மனநல மருத்துவம் மற்றும் ஓவியம்.
எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன
பகிர்ந்துகொள்ள முகவரி-
dr.rudhran@gmail.com