மெட்ராஸ் அற்புதமான சினிமா இல்லை தான், மதுபான(க்?)கடை கூட குறைகளே இல்லாத சினிமா இல்லைதான். ஆனாலும் இவை இரண்டும் நெஞ்சில் நெருடி என்னை யாரிடமாவது பேசேன் என்று கெஞ்ச வைத்தவை. சமீபத்தில் நான் பார்த்த படங்களில்..in reverse viewing not order..சரபம், சதுரங்க ஆட்டம். ஜீவா, பண்ணையாரும் பத்மினியும், இதற்கு தானே ஆசைப்பட்டாய்.., சூதுகவ்வும், ..என்று நிறைய படங்களைப் பற்றி நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். வேலையில்லா பட்ட்தாரி, சிகரம் தொடு என்பவை கூட பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன, அவை நெருங்கக்கூடிய சிலருக்கு.. ஆனாலும் மெட்ராஸ்…. மெட்ராஸ் தெரியாத
சென்னைக்கார்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன். மனிதர்களைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல
ஒரு மொழியின் இன்னொரு பரிமாணத்தை அறிந்து கொள்ள.
மெட்ராஸ் என் சொந்த ஊர்! ஒருமுறை ஒரு பத்திரிக்கையில் உங்க ஊர், உங்க சாமி பத்தி சொல்லுங்க என்றதும் சிந்தாதிரிப்பேட்டை அங்காளம்மன் பற்றிச் சொன்னதும் முதலில் அவர்கள் நம்பவில்லை. நான் மெட்ராஸ்காரன். மெட்ராஸிலும் மேல்தட்டிலிருந்து குதிக்கவில்லை, கீழ்-நடு-மையத்திலிருந்து சில ஆண்டுகளுக்குமுன் தான் மேல் வருமானத்திற்கு நிகராக செலவு செய்யும் திமிர் வந்தவன். ( செலவு செய்யத்தான், சேமிக்க அல்ல). இது என்னைப்பற்றிய பதிவு அல்ல.. சினிமா பற்றி, சென்னை பற்றி…)
சென்னை:சினிமா என்றெல்லாம் வேறுபடுத்திப்பார்க்காத தலைமுறையிலிருந்து வந்தவன், அதைத் தவிர்க்கமுடியாது.
மீண்டும் சொல்கிறேன். மெட்ராஸ் சர்வதேச சாகசம் அல்ல.ஆனால் ஒரு கண்ணுக்குப்
படாதவாறு வைக்கப்பட்டிருக்கும் சமூகத்தின் யதார்த்தமான சித்தரிப்பு. வியாபார நிர்ப்பந்தம்
எனும் தவிர்க்க இயலாத தமிழ்சினிமாத்தனமான கதையில் இதை இழைத்ததே ஒரு சாகசம் தான். அதற்குத்
தான் பாராட்டு.
‘ஆமா என்னாங்கடா’ என்று ஒளிந்து கொண்டிருப்பவரும் கூட முணுமுணுப்பாய்
கூட தலை சிலுப்ப வைக்கிறது என்பதே இதன் வெற்றி. இது ஒரு சமூக மாற்றம்/புரட்சி என்று
எந்த வெங்காயமும் உரிக்கப்போவதில்லை. ஆனால், தம் அடையாளம் மறைப்பவர் கூட புன்னகையுடன்
அங்கீகரிக்க வைத்தது இன்னொரு வெற்றி.
எனக்கு இதில் சில பாத்திரங்கள் பேசும் பாஷை புரிந்து கொள்ள
உற்று கவனிக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் இவர்கள் என் மக்கள். எப்படி சேட்டுகளின்
தமிழ் என்றொரு பிம்பம் தமிழ் சினிமாவில் ஆழ விழுந்துவிட்ட்தோ அப்படித்தான் சேரிவாழ்
மெட்ராஸ் பாஷையும் சினிமா பிம்பத்தில் அடைபட்டு பலருக்கு அதன் பரிணாமம் புரியாது போய்விட்டது.
இதை உடைக்க வந்ததற்காகவே இப்படத்துக்கு பாராட்டு.
என் அடையாளதை நான் மறுத்ததில்லை, மறந்ததுமில்லை, ஆனால் நினைவிலேயே
நிலைநிறுத்திக் கொண்டதுமில்லை. நான் இங்கேயே இருந்திருக்க வேண்டிய ஒருவன், உழைப்பும்
முனைப்பும் தன்னம்பிக்கையும் தெய்வநம்பிக்கையும் என்னை இவர்களின் ‘விளிம்பு’ என்று
வர்ணிக்கப்படும் நிலை தாண்டி வரவைத்திருக்கிறது.. இப்படத்தில் தெரியும் பாத்திரங்கள்,
மனிதர்கள், குறிப்பாக இளைஞர்கள் இப்படி மீறி வரக்கூடிய சாத்தியத்தையும் இப்படம் முன்வைக்கிறது..ஆகவே,
மனப்பூர்வமாய், best wishes for more Ranjith.