ஏதோ ஒரு ஜால்ரா சத்தத்துக்காகவே நான் சிலரை ஆதரிப்பதாய் ஒரு கருத்து பின்னூட்டமாய் இப்பதிவில் சொல்லப்பட்டது. அப்படித்தானா என்று ஒரு சுயபரிசீலனையில் என்னுள் பார்க்கும்போதும் இல்லை என்றே எனக்கு பதில் வருகிறது.
எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சொல்வதெல்லாம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்றே நான் இயங்குகிறேன்.
இணையம் ஒரு பொதுவெளி. அங்கே எழுத்தைக்காட்டுவது என்று வந்து விட்டால் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது தெரியாமல் இங்கே நான் எழுத வரவில்லை. இணையம் ஒரு சௌகரியம். வழக்கமாக காகிதங்களில் எழுதி சலிப்பு தோன்றியவுடன் நிறுத்தி விட்ட ஏராளமான பக்கங்களைப் போலல்லாமல் இணையத்தில் எழுதியவுடன் பதிப்பிட்டு விடுகிறேன். அதனால் எழுத்துப்பிழை இருக்குமே தவிர கருத்துப்பிழை எதுவும் என்னிடம் இருக்காது. என் கருத்தைப் பிழை என்று சிலர் கருதலாம், ஆனால் என்னைப்பொருத்தவரை பிழையான ஒன்றை சரியென்று நான் எப்போதுமே முன்வைத்ததில்லை.
இணையத்தின் பதிவுலகம் ஒரு சுற்றம். அன்பும் எதிர்ப்பும் சுற்றத்தாரிடையே இயல்பு. வானொலி தொலைக்காட்சி உரைகளிலோ புத்தகங்களிலோ என் பேச்சுக்கும் எழுத்துக்கும் பாராட்டுக்களை மட்டுமே கண்ட எனக்கு, இங்கே தான் எதிர்ப்பும் குற்றச்சாட்டும் நிறைந்த விமர்சனங்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்னியமாகவும் அநாமதேயமாகவும் எழுதினாலும், தங்களுக்கு என்மேலுள்ள கோபத்தை, கசப்பை, வெறுப்பை எளிதாகப் பலர் கருத்தாகவும் பின்னூட்டமாகவும் இடுவதே இதன் சிறப்பு. இதை நான் மதிக்கிறேன்.
நான் அமைதி காப்பது ஆமோதிப்பதாகிவிடாது. ஆனால் நான் ஆமோதிப்பது ரகசியமாகவும் இருக்காது. எனக்குப் பிடித்தால் பாராட்டுவது என் பழக்கம்; கண்டிப்பதும் அவ்வாறே.
என் வீட்டிற்கு வரும் நண்பர்களோடு நான் நேரத்தைச் செலவிடுவது எங்களது மனநிலையைப்பொறுத்தே இருக்கும். சண்டை வரும், சிரிப்பு வரும், அர்த்தமில்லாத அரட்டையும் இருக்கும் அக்கறையுள்ள பகிர்தலும் இருக்கும். இணையத்திலும் அப்படித்தான் செயல்படுகிறேன். நான் தீர்மானித்து ஏற்றுள்ள வாழ்முறையில் நான் எனக்குப் பிடித்த மாதிரிதான் வாழ்கிறேன். மற்றவருக்குப் பிடிக்குமே என்பதற்காக எதுவும் செய்ததில்லை, செய்வதாகவும் இல்லை. இதன் நீட்சியே பதிவுலகில் என் பங்கேற்பு.
ஜெயகாந்தன் முன்போல் இல்லையே நீ என் அவரை இன்னும் சிலாகிக்கிறாய் என்று சிலர் கேட்கிறார்கள். வினவு தளத்துடன் ஏன் அப்படியொரு ஒட்டுறவு என்று சிலர் வினவுகிறார்கள். பொதுவில் வந்து இப்படி நான் பேசும்போது, “என் இஷ்டம்” என்ற உண்மையான சுருக்கமான (நண்பர்களிடம் வழக்கமான) பதில் இங்கே போதாது என்றே நினைக்கிறேன்.ஜேகே என் ஆசான் என்றாலும் என்னை ஒரு நண்பனாக நடத்துபவர், வினவு எழுத்தாளர்களில் பலர் என் நண்பர்கள். என் நண்பர்களை நான் சந்திக்க இயலும் என்பதால் அவர்களை பொதுவில் நான் விமர்சிப்பதில்லை. அதற்காக அவர்கள் என் விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை என்பதல்ல, விமர்சித்து விட்டு விடாமல் அவர்களின் பக்கம் இருக்கும் நியாயத்தையும் நேரடி உரையாடலில் தெரிந்து கொள்வது சாத்தியமாகிறது. நட்பினால்தான் இது சாத்தியம். அதேபோல் நான் குறிப்பிட்ட இருவருக்கும் என்னையும் நன்றாகத்தெரியும், என்னை விமர்சிக்கவும், என் கருத்துக்களைத் திருத்துவதற்கும் அவர்களுக்கு
நெருக்கமும் தகுதியும் உண்டு.அதனால்தான் அவர்களைப்பற்றி ஒரு பின்னூட்டத்திலோ ஒரு கட்டுரையிலோ நான் கருத்து தெரிவிப்பதில்லை.
இதை எழுதத்தூண்டியதே ஒரு முந்தைய பதிவின் பின் வந்த சில கருத்துகள்தான். தற்கொலை பற்றி எழுதியதை முத்துக்குமார் பற்றியே எழுதியதாக நினைத்து ஒரு விவாதமும் விமர்சனமும் தொடங்கியது. அதிலும் தற்கொலை என்பது எது என்று நான் விளக்கப்பார்த்தால், திடீரென்று நீ என் வினவுக்கு ஜால்ராவாக இருக்கிறாய் என்று ஒரு கேள்வி வருகிறது. எங்கே ஆரம்பித்த விஷயம் எங்கே போய் முடிகிறது?ஏன் இது நிகழ்கிறது? என்னைப்பற்றி ஒரு கணிப்பு இருப்பதால்! அதை நானேகூட ஒருவேளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அந்தக்கணிப்பின் அடைப்பிற்குள் என்னால் இருக்க முடியாது.
இது எவ்வளவு தூரம் பொதுவான மேடையோ அதே அளவு ஓர் அந்தரங்கமான உரத்த சிந்தனையும் கூட. பாராட்டுக்கள் எவ்வளவு சுகமானவை என்றாலும் அவை இன்னும் போதையாகிவிடவில்லை, அதே மாதிரி விமர்சனங்கள் எவ்வளவு துணுக்குற வைத்தாலும் அவை இன்னும் தவிர்க்கப்படும் அளவு வெறுப்பை உண்டாக்கவில்லை. இரண்டுமே என் எழுத்து மெருகேற உதவும் என்பதாலேயே பின்னூட்டங்களை நான் மட்டறுப்பதில்லை.
என் பதிவின் தலைப்பிலேயே உணர்த்தியிருப்பதைப்போல இது என் பார்வை. என் பார்வையில் பதிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. நான் எப்படிப் பார்க்க வேண்டும் என்று யார் சொல்லிக்கொடுக்க முயன்றாலும் என் பார்வை தானாய்த்தான் திசைதிரும்பும்.
ஓர் இசைக்கோர்ப்பில் ஜால்ரா அவசியமாகாது, ஆனால் சில நேரங்களில் அழகு சேர்க்கும். ஜால்ரா அடிப்பவன் தன்னால்தான் கச்சேரியே நடக்கிறது என்று நினைப்பதும், பிரதான வாத்தியக்காரன் ஜால்ரா இல்லாமல் தான் இசைக்கமுடியாது என்று முடங்குவதும் முட்டாள்தனம். நானும் என் நண்பர்களும் அந்த மயக்கத்திலோ மாயையிலோ இல்லை.
எத்தனையோ பேர்களின் பதிவுகளில் எனக்குப்பிடித்திருந்தால் பாராட்டு தெரிவிக்கிறேன், ஆனால் வினவு தளத்தில் ஆதரவாக ஒன்று சொல்லிவிட்டால் சிலருக்கு முகம் சுணங்குகிறது. அவர்களை நான் ஆதரிக்கக் காரணம் அங்கே நேர்மையும் உழைப்பும் பொதுநலனும் இருப்பதால் மட்டுமே. முன்னம் பல கட்சிகளையும் குழுமங்களையும் ஆதரித்து அவர்களது சாயம் வெளுத்ததால்தான் இவர்களது நிறத்தில் இப்போது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
என்னால் முடியாததை வேறொருவர் செய்யும்போது கைதட்டுவேன்.
கைதட்டல் ஜால்ராவாகிவிடாது!
இன்னும் எழுதி சலிப்பில் அழித்துவிடாமல், இப்போதைக்கு இங்கே நிறுத்துகிறேன்.