Friday, October 26, 2012

வித்யாரம்பம் கரிஷ்யாமி

தேவி
`வித்யாரம்பம் கரிஷ்யாமி`…..
ஆம் மா, ஆரம்பிக்கத்தான் போகிறேன் கற்றுக் கொள்ள.
கையளவு, கடுகளவு, மலையளவு என்றெல்லாம் என்னையே சுயதராசில் நிர்ணயிக்க விரும்பாமல், இன்னும் கற்பதே வாழ்வுக்குதவும் என்று கற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்போகிறேன்......


 
 
சித்திர்ப்பவது மேஸதா

 
என்ன கற்பது எனக்கு உதவும்? சும்மா யோசித்தால் ஒரு பட்டியல் வருகிறது.-
 
 
 
1. எல்லார்க்கும் நல்லவனாய், எல்லார்க்கும் ஏற்புடையவனாய், எல்லாரில் எவரும் என்னைக் கண்டு முகம் சுளிக்காதவனாய்..இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
 
 2. பொய்மை பேசாதிருக்க வேண்டும்- என்பதை விடவும் உண்மை அனைத்தும் பேசாதிருக்க வேண்டும்.
3. கண்ணெதிரே அக்ரமம் நடந்தாலும் அதைத் தாண்டி நடை பயில கற்க வேண்டும்... வேறு வழியின்றி ஏதாவது செய்துதான் ஆக வேண்டுமெனில் மௌனமாய் மையமாய் தலையசைத்துச்செல்லவேண்டும் .. அதை நடுநிலை என்று நாட்டவும் வேண்டும்.
4. முகம் சுளிக்கும் விஷயத்திலும் மனம் மீறி பல்லிளிக்கவேண்டும்..பொய்யாய் அல்ல ஒரு புனைவான படத்தால்.:)
5. “என்னை கூப்டேம்பா..கருத்து சொல்றேனே..” என்று என்னையறியாத அடுத்த தலைமுறை ஊடகக்காரரிடம் கெஞ்ச வேண்டும்..என்பது இழுக்கு என்பதை மறக்க வேண்டும்.
6. கருத்து கேட்டு வருபவரிடம், “உங்களுக்கு என்ன சொன்னா பிடிக்கும்” என்று கேட்டு அதை ஒப்புவிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பத்து வரமாவது கேட்கவேண்டும் என்று நினைத்து பட்டியல் தயாரித்தால் பாதியிலேயே கூனிக்குறுகி நிறுத்திவிடும்நாணயம் போக வேண்டும்...என்று கேட்டால் பாவம், அவள் எதைத்தருவாள்?

அவளைக் காதலிக்கிறேன்... தந்ததே போதும் எனும் திமிர் தானே தரவேண்டும் என்று கேட்கத் தயங்குகிறது? கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன் எழுதியது...
“திருவளரும் தினம் வளரும் ... ...
 தவம் அமர வரம் கிடைக்கும், தரணி புகழ் விரல் இருக்கும், 
தானாக முயலாமலே”

தேர்வாவான், தேற்றுவான்- எனும் அவள் நம்பிக்கையே நான்.

அசிங்கம் பற்றியொரு கவலையில்லாமல், 
அசிங்கப்படவும் அசிங்கப்படுத்தவும்,
 தான் என்றான அவளைத் தான் என நினைக்காமல் 
நான் என்று தனதுக்கானதாய் அற்பத்தனத்தில் 
நவீன நாகரீக அவசியம் எனும் மாயையில் என்னென்னவோ கேட்கத்தோன்றுகிறதே... 
கேள்வியும் அவள், கேட்கத்தூண்டுவதும் அவள் என்பதால்- பாவமன்னிப்பு அவசியமாகவில்லை,
ஆனாலும் சுற்றி நடக்கிறதே சற்றேனும் சகிக்கவொன்னா சாக்கடை சாகசம்.. என்ன செய்வது அம்மா?

இவ்வுலகின் அழுக்குடன் ஒட்டியோ, ஒட்டுண்ணியாகவோ வாழ கற்றுக் கொடு, அல்லது உலகைச் சுத்தப்படுத்து..
சும்மா சிரிக்காதே..உன் சிரிப்பில் என் மதி காணாதொழிகிறது.
உன் அழகில் நிசப்தத்திலும் ஒரு மௌனம் ஒலிக்கிறது.
இன்னும் என்ன கேட்பது...எது அவசியமோ அதைக் கொடு...எனக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்காகவும்.