Friday, November 27, 2009

இனவெறி, பார்ப்பனீயம்


இதை எழுத நேர்ந்ததே என்ற வருத்தமும், அவசரமாக இதை எழுதுகிறேனே என்ற கவலையும் இருந்தாலும், எழுதித்தான் ஆகவேண்டும் என்று ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால் எழுதுகிறேன்..இதை இன்னும் தொடர்ந்து எழுத அவசியம் இருக்கக்கூடாது என்றே விரும்புகிறேன்.
பார்ப்பனீயம் வேறு பார்ப்பனர்கள் வேறு என்பதை கழகத்தலைவர்கள் கூறி வந்ததை அவர்கள் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையின்மையின் காரணமாக நிராகரிப்பது ஒரு நேர்மையற்ற செயல்..இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதத்தை, இரட்டைநிலைகளையெடுக்கும் மனவிகாரத்தைத்தான் பார்ப்பனீயம் என்று கருதுகிறேன்..அப்படி ஒரு கூறு என்னிடம் இருக்குமேயானால் நான் மாற வேண்டும்; மிருகங்களை எனக்குப் பிடிக்கும் என்பதற்காக நானும் ஓர் விலங்காக மாறுவது சரியில்லை என்பதால்.
பிறப்பு ஒருவனிடம் என்னவெல்லாம் தீர்மானிக்கிறது? இரட்டையர்களாகப் பிறந்தவர்கள், ஒரே மரபணுக்கூறுகளை உடையவர்கள், ஒரே மாதிரி தான் தேர்தலில் வாக்களிப்பார்களா? என்ற மிகச்சாதாரண மேலோட்டமாகப்பார்த்தால் அற்பத்தனமாக‌த் தோன்றும் கேள்வியோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவில், தான் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பதும் மரபணுக்களால்  தீர்மானிக்கப்படுகிறது என்று சில ஆய்வாளர்கள் கூறினார்கள்.  http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC386712/ இப்படிப்பட்ட ஆய்வுகளில் நிறைய ஆய்வுமுறைப்பிழைகள் ( methodological problems)  இருக்கும். ஆனால் இங்கே குறிப்பிட்டது அவ்வளவு முக்கியமான ஆய்வு அல்ல. இன்னும் சில ஆய்வுகள் மத‍-கலாச்சார‌ நிலைப்பாடுகள் மரபணுக்களின் வழியாகத்தான் ஆரம்பத்தில் வருகின்றன என்றும் சுட்டிக்காட்டுகின்றன. http://www.allacademic.com/meta/p_mla_apa_research_citation/0/5/9/3/5/p59350_index.html
Cohen wrote, in 1999,  "The truth of the matter is that, if sufficiently strong, inborn potentials can trump parental influence, no matter how positive or negative. Some traits manifest themselves in such unexpected and uncontrollable ways that, for better or for worse, one's child may indeed seem like a perfect stranger.
The question of interest is no longer whether human social behavior is genetically determined; it is to what extent.—Edward O. Wilson, 1978 மனிதனிடம் அவன் என்னவாக இருக்கிறான் என்பதைக் காட்டினால், அவன் அப்போது இன்னும் சிறந்தவனாவான்..என்று செகொவ் எழுதிய வரிகளுடன் இன்னொருவரின் ஆய்வு முடிகிறது.


சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போகாமல் எதற்கு இம்மாதிரி ஆய்வுக்குறிப்புகளின் சுட்டிகள்? இப்போதெல்லாம் இணையத்தில் வாதிடும் பல‌ர் அறிவாளிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்வதற்காக இப்படித்தான் செய்கிறார்கள். நானும் இப்போது பதிவரினம் என்பதால் இப்படிச்செய்கிறேனோ என்னவோ!!
என் நண்பர்களும் என்மீது அன்பு கொண்டவர்களும் என் கருத்துக்களை வழி மொழியலாம்.என் தவறுகளைக் கண்டிப்பதை விடவும் புரிந்துகொள்ளப் பார்க்கலாம். இதையும் ஏன் என்று சிந்திப்போம்..இனம் இனத்தோடு  birds of a feather சேரும் என்பதாலாஅப்படியோர் இனப்பற்று உள்ளதா? அப்படி இருக்கக்கூடாது என்பது நியாயம்,  இருக்கிறது என்பது நிதர்சனம்!
சில நண்பர்களுக்கு இதை ஏன் நான் எழுதுகிறேன் என்ற கேள்வி வரலாம்..அவர்களுக்காக , (இன்றும் 26/nov/2009 தொடரும் கதையின்) ஒரு சிறு முன்கதை..


2008! அப்போதெல்லாம் இந்த அளவுக்கு மொழிமாற்றி தமிழில் எனக்கு தட்டச்சு செய்ய வராது. ஆங்கிலத்தில் எனக்கு நல்ல வேகமுண்டு..இரு மொழிகளும் எனக்கு நெருக்கமாகப்பரிச்சயம் என்பதால் ஆங்கிலத்தில் முதலில் பதிவெழுத ஆரம்பித்தேன். அந்த ஆரம்ப மாதங்களில் ஒருமுறை, சட்டக்கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டபோது, வன்முறையை ஒழிக்க, வன்முறையின் காரணங்களை ஆராயவேண்டும் என்பதாக, இவ்வளவும் காலம் அடிபட்டதால் இவர்கள் இப்போது திருப்பி அடிக்கும்பொது இன்னும் வேகமும் வன்முறையும் வருகிறது என்னும் பொருள்பட எழுதியிருந்தேன். பலருக்கும் அது புரிந்தது. சிலருக்கு மட்டும் மூக்கு வியர்த்தது.
"யார் அடிக்கிறார்கள் என்பதைவிட ஏன் அடிக்கிறார்கள் என்பதா முக்கியம்" என்பதே என்னிடம் கேட்கப்பட்ட ஆரம்பக்கேள்வி.இதைத்தொடர்ந்து விதண்டாவாதமாய் வந்த பின்னூட்டத்திற்கு, இப்படிச்சொல்வது, உங்கள் பிறவி குணமா என்று கேட்டேன்..இன்னும் வெட்டித்தனமாக விவாதம் செய்ய முய‌ன்றபோது, "மன்னிக்கவும் உன்களுக்கு மூளையிருப்பதாய் நினைத்துவிட்டேன்" என்றும் பதில் சொன்னேன்..அப்போது,
ஆஹாவென்றெழுந்தது’’ ஓர் இனப்புரட்சி!!!! நெஞ்சில்..நேர்மைத்திறமின்றி, வஞ்ச‌னை எண்ணம் மட்டுமே மிகுந்து என் மீது ஒரு தாக்குதல் தொடங்கியது..இன்றும் அது முடியவில்லை.. இது பிறவிக்குணம், பண்பாடுகளை ஒரு சௌகரியத்திற்காகவே பின்பற்றும் 'பார்ப்பனீயம்' என்று தான் கருதுகிறேன். பிறக்கும்போது மொழியற்ற உணர்வுகளோடு பிறக்கும் குழந்தை, மொழியை, மனிதர்களை மட்டுமல்ல, இரண்டையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறது..பின்னால் இவற்றை தன் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல சில நேரங்களில் பேராசைக்காகவும் பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறது.. காலப்போக்கில் இப்படி உள்ளிருக்கும் நீசத்தனத்தை நாசூக்காக மாற்றிக்கொள்வது இயல்பு, இதையே ஒரு கலையாகப்பயில்வது திறமை என்று அங்கீகரிக்கப்படுவது ஒரு சமுதாய அவலம். சிலர், இதிலிருந்து மீள்வர். புத்தரிலிருந்து மார்க்ஸ் வரை, பலரும் இந்தச்சிலரை முறைப்படுத்தவே பேசி எழுதினார்கள்.
இதுவரை ஓரளவிற்கு பொதுவாகவே எழுதிய பின், என்னைப்பற்றியும், இந்த பதிவுலகில் இப்போது நான் சந்திக்கும் விஷயங்களைப்பற்றியும் எழுதவேண்டியிருக்கிறது.
குரைக்கிற நாய்களுக்கெல்லாம் பதில் பேசுவதா, வேலையைப்பார்த்துக்கொண்டு போகலாமே என்று சில நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். சில நாய்கள் சொறிவேதனையில் குரைத்துக்கொண்டிருந்தால் கூட பல வீடுகளில் திருடன் வந்துவிட்டானோ என்ற பயத்தில் நிம்மதி போகுமே அதற்காக அவற்றை அடக்கவேண்டும் என்று நினைத்தேன்.
மேலே நான் எழுதியதைப்படித்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? உங்களை நான் நாய் என்று சொன்னதாக நீங்கள் நினைத்துக்கொள்வீர்களா? இது தான் நடந்தது.  நாய் என்று சொன்னால் கூடப் பரவாயில்லை, எனக்கென்ன சொறியா என்று வாதிட்டால்அதிலும், சொறி இருக்கிறது என்று ஏன் சொன்னாய் என்பதை விட்டுவிட்டு..நான் நாயா என்றால்இத‌ன் பெயர் விவாதமா
இதில் இன்னொரு வேடிக்கை.  என்  ஆங்கிலப்பதிவில் நடந்த மோதலை வினவு தளத்திற்கு வந்து வியாக்கியானம் விவாதம் எல்லாம் செய்யப்பட்டது.. ஒவ்வொரு வார்த்தையையும் மெதுவாகப்பயன் படுத்தவேண்டிய கட்டம் இது. "பார்த்தாயா..மோதல் என்று சொல்கிறாய்.."..என்றெல்லாம் விவாதங்கள் நடக்கலாம்! அப்படித்தான் ந‌டக்கிறது..! இதில் குழுவாக அமைந்து சிலர் வேறு!..
பிறவி குணம் என்று நான் சொன்னதைப்பிடித்துத் தொங்கும் அவர், அதற்கு அடுத்தபடியாக நான் "மூளை இருக்கிறது என்று தவறாக நினைத்துவிட்டேன்" என்று சொன்னதை, ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. நியாயமாக, உனக்கு அறிவிருக்கிறதா, மனிதன் என்றால் மண்டை இருக்கும், மண்டை இருந்தால் அதில் மூளை இருக்கும்..எப்படி எனக்கு மூளை இருக்கிறது என்பதை சந்தேகிக்கலாம் என்றெல்லாம் என்னைக்கேட்கவேயில்லை.. இதை வெட்டித்தனமாய் ஒரு விளக்கம் என்றால், அதே நபர், விவாதத்தில் வேறொருவர், ரத்தத்தில் ஊறியது  என்ற‌தை வழக்கில் இருக்கும் பதப்பிரயோகமாக மிகப்பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டு மேலே விவாதிக்கவில்லை. Running in your blood   இயல்பான மொழி! genotype  என்பது சரியாகச் சொல்லப்படவேண்டியது! அது எல்லார்க்கும் புரியும் பழக்கத்தில் இருக்கும் பதமாம், அதைத்தவறாக நான் பயன் படுத்திவிட்டேனாம்..இவ்வளவூ எழுதிய நான் இந்த ஒரே ஒரு சொல்லைத்தான் தவறாகப்பயன்படுத்தினேன் என்று சொன்னால்..எவ்வளவு பெரிய பாராட்டு!!
இங்கே இன்னொரு ஆள், என்னை முட்டாள் என்று ஒரு பின்னூட்டம்! இருவரும் நண்பர்கள் என்று வேறு பிரகடன‌ம்.அமெரிக்காவில் ரொம்ப அதிகமாய் வேலை செய்து விட்டு, ஏதோ நம் "தாழ்வுற்று நிற்கும் சமுதாயத்தை" சரிசெய்ய, பகத்சிங் என்ன வெங்காயம் பீம்சிங் பற்றித்தான் எழுதுவது முக்கியம் என்று சேவை செய்யும்  அவருக்கு நங்கநல்லூரில் ஒரு நண்பர்!..அவர்கள் (நானும் சில தோழர்களும் அடிக்கடி சந்தித்து அளவுவ‌வாவது போல்) பல விஷயங்களைப் பேசி கருத்துரீதியாகவும் நெருக்கமாக இருக்கட்டும். நரிகளுக்குக்கூட நண்பர்கள் தேவைப்படலாம்.
இவர்கள் நண்பர்கள், நானும் வினவு தளத்தின் தோழர்களும் இருப்பதைப்போல் நண்பர்கள்! இவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக நின்று என்னைப்போன்ற எதிரிகளை எதிர்கொள்வார்கள்..இதை நாம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும்! வினவு தளத்தினர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டில் ஒன்று- ஏன் ருத்ரனை கண்டிக்கவில்லை!!நீயேன் உன் நண்பனைக்கண்டிக்கவில்லையென்று கேட்டால் அவருடையது வேறு தளம், என்னுடையது அல்ல என்பது போல் ஒரு மழுப்பல்!!ஆனால் என் சார்பில் நண்பர்கள் யாராவது விவாதத்தி ல்பின்னூட்டமிட்டால்..ருத்ரனை முதலில் கண்டித்துவிட்டு வா என்று அதட்டல்...இவர்கள் என் கையெட்டும் தூரத்தில் நின்று அதட்டுவது கிடக்கட்டும், எதிர்முனகல் கூடச்செய்வதில்லை...வெவ்வேறு பெயர்களில் என் ஆங்கிலப்பதிவில் வந்து பின்னூட்டமிட்டுச் சீண்டுவதைதவிர!
வாய்ச்சொல்லில் வீரர் என்று எழுதிய பாரதியின் பல வரிகள் எனக்குப்பிடிக்கும், தமிழுக்காக, ஜாதிக்காக அல்ல. இங்கே தான் வேற்றுமை!
மீண்டும் சொல்லத்தான் வேண்டும். பார்ப்பனர்களை அல்ல, பார்ப்பனீயத்தைத்தான் நான் வெறுக்கிறேன். ஏன் பார்ப்பனீயம் என்று சொல்ல வேண்டும் ஜாதீயம் என்று சொல்லலாமே என்றால், a rose by any  other name would smell as sweet, so let us call it jasmine என்று சொல்லலாமா? குழப்பம் வராதா? ஏன் கூவம் என்று சொல்லி முகம் சுளிக்கவேண்டும்,கங்கை என்று சொல்லி அழுக்குநீரில் முங்கியெழக்கூடாதா என்பது போல் இருக்கிறது.!!
சரி என்ன வெங்காயத்திற்கு பார்ப்பனன் என்று எழுத வேண்டும் ப்ராமனன் என்று (அவர்களே சொல்லிக்கொள்வதைப்போல்) சொல்லக்கூடாதா என்றால்..எனக்கு இது கஷ்டம். ப்ராமனன் என்றவுடன் அதன் ஆழத்தில் இவர்கள் பீற்றிக்கொள்ளும் ப்ரம்மன் தலையிலிருந்து வந்த கதையை மீறி, ப்ர்மம் என்ற உயர்கருவிலிருந்து உற்பத்தியானதாய் ஒரு தவறான தோற்றம் எற்படும் என்பது தான் நான் அந்த வார்த்தையைத் தவிர்ப்பதற்கான காரணம்.
எனக்கு  ப்ராமன வகுப்பில் பிறந்தவர்கள் பலர் மிகவும் நெருக்கம், நட்பின் நெருக்கம் மட்டுமல்ல, உறவின் நெருக்கமும் கூட‌ ஆனால், ஒரு பார்ப்பனன் கூட என் வாழ்வில் அனுமதிக்கப்பட்டதில்லை.   ஒரு பரிதாப நிகழ்வாக,ன் சுயலாபத்திற்காக ஒரு பார்ப்பனனை ஆராதிக்கும் நிலை ஏற்பட்டால் அன்று நானும் பார்ப்பனனாவேன்!

Thursday, November 26, 2009

ஈடிபஸ்

நாடக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, மனவியல் ஆர்வலர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர் ஈடிபஸ். ஸோஃபக்ள்ஸ் எழுதிய கிரேக்க துன்பியல் நாடகங்களில் சிறந்த இந்நாடகம், மனவியலை அறிவியலாக நிறுவ முதல் முயற்சியெடுத்த ஸிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களையும் மிகவும் பாதித்த ஒரு நாடகம்.

ஒரு மாலை நேரம் இந்நாடகத்தைப் பார்க்கநேர்ந்த ஃப்ராய்ட் நாடகக்கருவைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் எனும் மனவியல் கோட்பாடு ஒன்றினை முன் வைத்தார். பலத்த சர்ச்சையைக் கிளப்பிய அவரது அந்த சித்தாந்தம், அறிவியல் முறைப்படி தொடர் பரிசோதனைகளால் இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அதில் ஓர் அடிப்படை இழை நிஜம் என்று பலரின் அனுபவங்களும் கூறிவந்துள்ளன.

ஃப்ராய்ட் சொன்னது: எல்லா ஆண் குழந்தைகளும் தங்கள் தாயிடம் காதலைப்போல் ஓர் ஈர்ப்பு கொள்கின்றன, அதன் காரணமாகவே தந்தையிடம் கிட்டத்தட்ட வெறுப்பும் கொள்கின்றன. அந்த ஆண் குழந்தை தன் தந்தையால் காயடிக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே வாழ்க்கையை ஆரம்பிக்கிறது.

இதை அப்படியே எடுத்துக்கொள்வது கூடாது. எதிர்பாலினத்தின் மீதான கவர்ச்சி மட்டுமல்லாமல், தாயின் தொப்புள்கொடியிலிருந்து தொடரும் பிணைப்பின் நீட்சியாகவும்,அவள் பாலூட்டுவதால் இயல்பாய் ஏற்படும் ஒட்டுதல் என்றும் பார்க்கவேண்டும். மேலும் எல்லா ஆண் குழந்தைகளும் தந்தையை வெறுப்பதில்லை. பின் ஏன் ஃப்ராய்ட் அப்படிச் சொன்னார்?

ஃப்ராய்ட் மிகப்பெரிய மேதை, ஆனாலும் பரபரப்பிற்கும் புக‌ழுக்கும் ஆசைப்படும் அவசரக்காரரும் கூட! இன்னும் கொஞ்சம் யோசித்து இந்த ஈர்ப்பு பாலுணர்வின் அடிப்படையில் வருவதல்ல பாசம் எனும் அன்பின் அடிப்படையில் வரும் இயல்பான ஒட்டுதல் என்று முடிவெடுக்கும் முன்பேயே இந்தக்கருத்தை வெளியிட்டு விட்டார். சில அறிவாளிகள் தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்துகொள்ள மறுப்பது போல்தான் ஃப்ராய்டும் தன் கருத்தில் அடம் பிடித்தார். மானுட வளர்ச்சி, மனத்தின் வளர்ச்சி எல்லாமே பாலுணர்வின் அடிப்படையில்தான் என்று வாதிடும் அளவும் முரண்பிடித்தார்.

ஃப்ராய்ட் பற்றி பிறகு பார்ப்போம், இப்போது ஈடிபஸ் கதை....
கிரேக்க நாட்டில் மிகவும் பழைய காலத்தில்..ஓர் அரசனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது நாட்டின் சோதிடர்களூம் பூஜாரிகளும்,' இந்தக் குழந்தை தந்தையைக் கொன்றுவிட்டு, தாயை மணந்து கொள்ளும்' என்று ஆரூடம் சொன்னார்கள். அரசனும் அதை நம்பி அந்தக்குழந்தையைக் கொன்றுவிடச் சொன்னான். குழந்தையை கொல்ல மனமில்லாத சேவகன் அதை ஒரு மலையடிவாரத்தில் விட்டுச்சென்றான்..பல ஆண்டுகளுக்குப்பின், அரசன் வேட்டைக்குப் போகும்போது வழியில் ஓர் இளைஞனிடம் சண்டைபோட அரசனை இளைஞன் கொன்று விடுகிறான்..பிறகு நாட்டிற்குள் நுழைந்து காவல் தெய்வத்தின் கேள்விகளுக்குப்பதில் சொல்லியதால், அந்த நாட்டின் வழக்கப்படி ராணியை மணக்கிறான்..அவன் தான் ஈடிபஸ், இறந்த அரசன் அவன் தந்தை, அவன் மணந்தது தன் தாயை..பிறகு பல ஆண்டுகளுக்குப்பின் நாட்டில் பஞ்சம். அது தீர்க்க ஆரூடம் கேட்கும்போது தான் உண்மை அவனுக்குத்தெரிகிறது..ராணி தற்கொலை செய்துகொள்கிறாள், ஈடிபஸ் தன்னைக் குருடாக்கிக்கொள்கிறான். 
இதை முத்ரா நாடகக்குழு தமிழில் 1988ல் அரங்கேற்றியது. அந்த நாடகத்திற்கு அரங்கு நிறைந்தது மட்டுமல்லாமல் ஆனந்தவிகடனில் வண்ணப்படத்துடன் ஒரு முழுப்பக்கப் பாராட்டும் கிடைத்தது. (அந்த நாடக அனுபவங்கள் நீளம் கருதி இன்னொரு பதிவில்).
இப்போது ஈடிபஸ் பற்றி..
கதை தான் ஆனாலும் அதிலும் சேதிகள் இருக்கின்றன.விதி வலியது அதை வெல்ல முடியாது என்பதே கதையின் மைய இழை. இது அன்றுமட்டுமல்ல, இன்றும் மக்களிடையே நிலவும் ஒரு பயன் தராத நம்பிக்கை. பயனேதும் இல்லாததால் மூட நம்பிக்கை.

தன்னை ஒருவன் கொல்வான் என்ற அச்சம் வந்தால் மனித குணம் அதற்குமுன் அவனை அழித்துவிடவேண்டுமென்றே இருக்கும். அச்சம் வந்துவிட்டால் சுயபாதுகாப்பு முக்கியமாகிவிட்டால் பாசம் மனத்தில் முதலிடம் வகிக்காது..
அம்மாவைப்போல் ஒரு மனைவி வேண்டும் என்ற ஆழ்மனத்தின் எதிர்பார்ப்பும் நிறைய ஆண்களிடம் உண்டு. தன்னைப்போல் என்றும் தனக்குப்பதிலாக என்றும் பல மாமியார்கள் பொறாமையால் வம்பு செய்வதும் இதனால் தான் என்ற நோக்கில் பார்க்கலாம்.
ஃப்ராய்ட் சொன்னது போல் தந்தை தாயிடமிருந்து பிரித்துவிடுவான் என்ற நேரடி எண்ணம் இல்லாவிட்டாலும், புரியாத வயதில் பல குழந்தைகள் தந்தையும் தாயும் இணைந்திருப்பது தங்களைத் தள்ளிவைக்கவே என்று  கருதலாம்..

இங்கே நம் புராணக்கதை ஒன்றையும் இணைத்துப்பார்ப்போம்..
தேவி குளிக்கப்போகும் போது தன் உடலிலிருந்து ஒரு குழந்தையை உருவாக்கி யாரும் வராமல் காவல் இரு என்கிறாள். அவள் கணவன் ஈசன் வருகிறான், யாராயிருந்தாலும் அனுமதி இல்லை என்று அந்தக்குழந்தை சண்டக்குப்போக, தன் மனைவியின் குழந்தை என்று தெரியாத ஈசன் அதன் தலையை வெட்டிவீசுகிறான். பிறகு உண்மை தெரிய அதற்கு வேறொரு தலையைப்பொருத்திவிடுகிறான்.

இந்தக்கதையில் ஃப்ராய்ட் சொன்ன கூறுகள் உள்ளன. தாய்க்காக தந்தையை எதிர்க்கும் குழந்தை, காயடிக்கப்படுவது போல் தலை வெட்டப்படுகிறது..!! இந்தக்கதையில் இன்னொரு விஷயம்: அந்தக்குழந்தை மிகமுக்கியமான தெய்வமாக ஆனபோதும் தன் தாயைப்போல் ஒருத்தி கிடைக்காததால் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருக்கிறது!!

இதுபோல் கதைகளையெல்லாம் இன்னும் கொஞ்ச‌ம் உற்றுப்பார்த்தால் வாழ்வில் பல அர்த்தங்கள் விரிவாகும்..

Wednesday, November 25, 2009

அபிதா என்றொரு அனுபவம்..


லா.ச.ராவே அவளைப்பற்றி என்னிடம் பலமணிநேரம் விவரித்து சிலாகித்திருந்தபின், அவர் பேசும்போதும், பேசியபின் அதைநினைத்தும், சிலிர்ப்புகளை அனுபவித்தபின், திருவண்ணாமலையில் அபிதாவைப்பார்ப்பதை நிறையவே தவிர்த்திருந்தேன். நேரில் பார்த்துவிட்டால் கடவுள் ரொம்பவும் சாதாரணமாகவும் தோன்றலாம் என்பதாலேயே தவமியற்றிக்கொண்டே இருப்பதைப்போல. ஒரு நண்பருடன் அங்கே தவிர்க்க இயலாமல் சென்ற போது, நல்லவேளை ஏமாற்றம் இல்லை. அவள் என்னை வசீகரிக்கவில்லை.
அபிதா என்னை மிகவும் வசீகரித்த ஒரு பிம்பம். நினைவில் அவள் ஒரு நித்யசங்கீதம். அவள் எனக்கு பரிச்சயம் ஆனபோது எனக்கு 19 வயது. சென்னை மாவட்ட மத்திய (இப்போது அது தேவநேய பாவாணர்) நூலகத்தில், புத்தகம் பார்க்க நன்றாக இருக்கிறதே என்றுதான் அதை வீட்டுக்கு எடுத்துச்சென்றேன்..படித்தேன், திரும்பவும் படித்தேன்..மறுநாள் என் நண்பர்களை படிக்கச்சொன்னேன், படித்தவர்களிடம் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். ஒருசில மாதங்களில், ஆத்மாநாம், பிர்மீள் என்று தாவ ஆரம்பித்த என் இலக்கிய தேடல்களினால் அபிதா கொஞ்சம் மறதியின் மூலைக்குத்தள்ளப்பட்டிருந்தாள்.
நான்காண்டுகளுக்குப்பின், ஞாநியுடன் பரீக்ஷாவின் ஆரம்பநாட்களுக்குப்பின், எனக்கும் நாடகம் அரங்கேற்றும் ஆசை வந்தது.என்னதான் பொதுவுடைமை, புரட்சி என்பன சிநேகமுள்ள வார்த்தைகளானாலும், பார்ப்பனீய கூறுகள் நிறைந்த லா.ச.ராவின் அபிதாவையே நாடகமாக்கவேண்டும் என்று தீவிரமாயிருந்தேன்..  அதற்காகவே பரீக்ஷாவிலிருந்து விலகி முத்ரா நாடகக்குழு ஆரம்பித்தேன்..(அபிதா படித்தவர்களுக்கு நொண்டிகுருக்கள் பற்றி தெரியும், என் நாடகத்தில் அந்தப்பாத்திரத்தை ஏற்று சிறப்பாக என் நண்பன் நடித்தான்..அவன் அறியப்படும் பெயர்: ஞாநி!) பரீக்ஷா, முத்ரா வெவ்வேறு குழுக்கள்போலத்தோன்றினாலும், இரண்டிலும் ஒரே நண்பர்கள், ஒரே நடிகர்கள்!அவர்களைப்பற்றி பின்னால்...

முதலில் மேடைக்கான கதையமைப்பையும் காட்சியமைப்பையும் வசனங்களையும் எழுதியபொழுது..அபிதாவை எழுதியவரிடம் அனுமதி வாங்கவேண்டுமென்று தோன்ற, லாசராவிற்கு அனுமதி கேட்டு ஒரு கடிதம் எழுதினேன்..அதன் கடைசி வரிகள்:
இந்த தவத்திற்கு
வரம் கிடைக்காவிட்டாலும்
தரிசனம் மட்டுமாவது தேறுமா...

 பத்து நாட்களுக்குள் தன் வீட்டிற்கு வருமாறு அழைப்புவிடுத்து லாசராவிடமிருந்து ஒரு அஞ்சலட்டை வந்தது.... திருவண்ணாமலையில் அபிதாவைப் பார்க்க அழைப்பு வந்ததுபோல் ஒரு பரவசம்..அந்த கல்பனாராகத்தின் கடைசி சங்கதியாக அவரது தரிசனம் கிடைத்தது.
"இதுக்கெல்லாம் காசு ஏதாவது தருவியா?"
"இல்லே"
"நினச்சேன்..சரி, படி"
"ம்?"
"ஸ்க்ரிப்ட் எப்படி பண்ணியிருக்கே படி"

படித்தேன். கண்களைமூடிக் கேட்டுக்கொண்டிருந்தார்.நானே எனக்கு சபாஷ் போட்டுக்கொண்ட கட்டங்களைப்படிக்கும்போது, படிப்பதை நிறுத்தி அவரைப்பார்ப்பேன் (சபாஷ் எதிர்பார்த்து)...  "ம்ம்ம், படி.." என்பார். ஒரு கட்டத்தில், என் கதைவசனத்தில், கதாநாயகன், 'அதோ பார் அது கரடி மலை' என்பான், அவன் மனவி, 'அட ஆமா, கரடி மாதிரியே இருக்கு' என்பாள். இதை நான் படித்ததும், " என்னது? " என்றார். அப்படியே படித்தேன்..அப்போது கண் திறந்தார், என்னைப்பார்த்து..
"என்ன சொன்னா?"
"ம்?"
"அவ என்ன சொன்னான்னு எழுதியிருக்கே?"
மறுபடி படித்தேன்.
"புரியலியா?"
"என்ன சார்?"
"அவ ஒரு ஃப்ரென்ச் லேடி மாதிரி.. பேச்சுல ஒரு நளினம் இருக்கும்...'அட'ன்னு எழுதியிருக்கியே...அது  ஜெர்மன் (sound) ஸௌண்ட்  , ..ஃப்ரென்ச் ஸௌண்ட்ன்னா  அது  '' ன்னு வரும்" என்றார். ஓ ..கரடி மாதிரியே.. பிரமிப்பை விட பயம் அதிகமாகியது. அது ஓர் அட்சரசுத்தமான மந்திரம் போல் தோன்றியது.  எதில் விளையாடத் துணிந்திருக்கிறேன் என்று அப்போதுதான் உறைத்தது. 
சாப்பிட்டுவிட்டுப்போகச் சொன்னார், சாப்பிடும் போது "என்ன சாப்பிடறே" என்றார், நான் முழிப்பதைப்பார்த்து, சப்தமாக சிரித்து, "வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும்" என்றார். (அது நாவலிலும் வரும்).

  பிறகு மிகுந்த தைரியத்துடன், நாடகவேலைகள் ஆரம்பமாயின..திடீரென்று, இந்த நாடகத்திற்கு இசை வேண்டுமென்று முடிவெடுத்து,   MBS அவர்களிடம் சென்றேன்..
"நாடகமா?"
"யெஸ் சார்"
"நான் சினிமா கம்போஸர்"
"யெஸ் சார்"
கொஞ்சம் முறைப்புக்குப்பின், "என்ன நாடகம்?"
"லாசராவின் அபிதா"
"வாட்?"
மெதுவாக அவரிடம் விவரிக்க ஆரம்பித்தேன்..ஸ்க்ரிப்ட் இருந்தால் கொடுத்து விட்டுப்போகச்சொன்னார்..கொடுத்துவிட்டு வந்தேன்..மறுநாள், "வா பேசலாம்" என்று அழைத்தார், போனால், ஹார்மோனியத்துடன் இருந்தார்.." இந்த கதையில் ஒரு மழை போல எல்லாம் கொட்டிக்கொட்டிப்போகும்  அதனால், அமிர்தவர்ஷினி ராகத்தில் போடலாம்" என்றார். அவரே சில ஸ்வரக்கோலங்களை வாசித்துக்காட்டுவார், "இன்னும் கொஞ்சம்" என்பேன், மாற்றி வாசிப்பார்.. 
 நிசகமப  பமகமகா மகா மகா சநீ, மபநீ மபநீ, சா க சா”-  இது தான் தீம் ம்யூசிக்!
இசையும் பதிவு செய்து கொண்டு, அந்த நாடகத்திற்காக முன்கதை வரும் இடங்களை ஸ்லைட்களாக எடுத்துக்கொண்டு அரங்கேற்றினோம்.
வருபவர்களிடம் தந்த வரவேற்பு/ விவரங்கள் பிரதிகளில் எழுதியிருந்தேன்...
"லாசராவின் எழுத்துக்களில் அதிரும்
மந்திரத்வனியில் ஒரு மாத்திரையேனும் மீட்க முடிந்திருந்தால்..
இந்த தவத்திற்கு
வரம் கிடைக்காவிட்டாலும் தரிசனம் மட்டுமாவது தேறும்".

நாடகம் எல்லா விதத்திலும் தோல்வி!
ஆனால், எங்கள் நாடக‌க்குழு புது உத்வேகத்துடன் பிறந்தது..  இது நடந்தது 1982!

Sunday, November 22, 2009

க்ருஷ்ணனும் அழுக்கும்

கலஸோ எழுதிய கா என்ற புத்தகம், இந்திய புராணக்கதைகளை அடிப்படையாகக்கொண்டு எழுதியது. அதில் க்ருஷ்ணன் கதாபாத்திரம் சுவையானது. 
ஒரு சம்பவம்.

ராதை மற்றும் பல பெண்களுடன் மோகத்தை காதலாகக்காட்டும் வித்தையைக்கொண்டு விளையாடி இளமையைக் கழித்த க்ருஷ்ணன், அரசியலில் புகுந்து, ஒரு சின்ன அரசனாகவே வாழ்கிறான். அப்போது அழகான அந்த்ப்புரத்து அரசிகளிடம் ஒரு சலிப்பு வருகிறது. தன் நண்பன் அர்ஜூனனுடன் ஒரு மாலை ஆற்றோரம் சாய்ந்து படுத்து அங்கே நதியில் நீராடிக்கொண்டிருக்கும் பெண்களின் அழகுகளை ரசித்துக்கொண்டிருக்கிறான்..
"இத்தனை அழகும் என்னுள் சுகநெருப்பூட்டவில்லையே! மோகநிலை மோனநிலையாகும் மெய்சிலிர்ப்பு தோன்றவில்லையே.." என்று நண்பனிடம் புலம்புகிறான். அப்போது அவனுக்கு ஒரு தேவசேதி வருகிறது...`காதல் மிகுந்த பெண்ணின் கால் தூசியைக் கொண்டு உன் விரகவிரக்தியை நிவர்த்திசெய்யலாம்'.....
தேடுகிறான். அந்தப்புரத்தில் ஆசை மனைவியர், அவர்களைதவிரவும் அழகுமங்கையர் பலரிடமும் தேடுகிறான்.
அன்பும் அழகும் கொஞ்சமும் குறைவில்லாத அந்தப்பெண்களின் கால்களில் தூசியில்லை. எப்படி இருக்கும்? கூந்தல் முதல் கால்பாதம் வரை அவ்வளவு சிரத்தையாக சிங்காரம் செய்துகொண்டு வரும் அவர்களிடம் காலில் தூசியில்லை...சுரண்டிச்சுரண்டிப் பார்த்தாலும் அழுக்கு உருளவில்லை!
க்ருஷ்ணன் மனம் நினைவுகளை எல்லாம் குவித்துச்சல்லடை செய்கிறது..அப்போது கோபிகைகளின் கால்கள் அவன் மனத்திரையில் தோன்ற இன்னும் கூர்ந்து உள்பார்க்கிறான்..காதலில் காமத்தைக்காவியமாக்கிய ராதையின் உடல் மன‌த்திரையில் தெரிகிறது..
மோகத்தில் அவளது அங்கங்களின் அத்தனை  அங்குல‌ங்களையும் அறிந்துவைத்திருந்த அவனுக்கு, காதல் சாகசத்தால் அவளது ஒவ்வொரு மூச்சுக்கும் முனகலுக்கும் அர்த்தங்கள் புரிந்துவைத்திருந்த அவனுக்கு..அவள் காலில் தூசி இருந்ததா என்று நினைவில்லை..
தனக்கு நம்பகமான ஒருவனை அனுப்பிப் பார்க்கிறான். ராதை நடந்து போகும்பொது, அவள் கால் பாதங்கள் சற்றே தெரிகின்றன.அவை தூசி மிகுந்து, அழுக்காய் இருக்கின்றன, அழகாய் இருக்கின்றன...  ..அழகின் அழுக்கில் புனிதம் புலப்படுகிறது... அழுக்கு மட்டுமே அழகாகியும் இருக்காது!
……………………………………….
ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி:
வங்காளத்தில் துர்கா பூஜைக்கு களிமண் கொண்டு விக்கிரகங்கள் செய்வது வழக்கம். அந்த பொம்மைகளைச்செய்ய பிசையும் மண்ணின் முதல் மண் ஒரு வேசியின் காலடியிலிருந்து தான் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது அவர்களது கலாச்சார நம்பிக்கை, ஐதீகம்.
(இப்போது அப்படி மண்ணெடுப்பது, மீதிநாட்களெல்லாம் அவமானப்படுத்துவதற்கு மாற்றாக  மன்னிப்பாக ஈடாக அமையாது என்று அந்தப்பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் திருட்டுத்தனமாக எந்த பூஜாரியும் வந்து மண் எடுத்துப்போககூடாது என்று போராட அரம்பித்துள்ளனர்)
-------------------------------------------
தேவைப்படும்பொது இனம் குலம் பார்ப்பதில்லை, சுத்தம் சுகாதாரம் பார்ப்பதில்லை, மீதி நேரமெல்லாம் துஷ்டன் யார், தீட்டு எது, எந்த சாஸ்திரம் இன்றைய தேவைகளப்பூர்த்தி  செய்யப்பயன்படும்...எப்போதெல்லாம் தனக்கு வசதியாக பரந்த மனத்தையும் பெருந்தன்மையையும் வேண்டிய அளவு காட்டலாம் என்று பார்ப்பான்!!! மனிதன்?
ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி:
குளக்கரையில் அவதாரம்  காமயாகம் நடத்தினால் , கருவறையில் ராஸலீலை அர்ச்சகர் நடத்துகிறான்..
............... ........................


கதைகளைக்கூட சுயசௌகரியத்திற்கென புனைந்து கொண்ட கூட்டம் சொல்லும் கதைகளை நாம் எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்?

Friday, November 20, 2009

வலிகளை அழகாக்கிய கவிஞர்


வலிகள் எப்போதும் கண்களில் கலங்கும்..வலிகளின் நினைவுகள் அப்படியல்ல.
இங்கே கணிணிமுன் உட்கார்ந்து மெதுவாக எழுத்துக்களைத் தட்டித்தட்டி உருவாகிக்கொண்டிருக்கும்போது, வழக்கத்தை விடவும் வேகம் குறைவாக இருக்கிறது. பிற்பகல் தபாலில் இரண்டு புத்தகங்கள் வந்தன. பிரித்துப்பார்த்து, அங்கங்கே மேய்ந்து விட்டு, இதோ என் மேஜையின்மீது தான் வைத்திருக்கிறேன். கணிணியின் திரையிலிருந்து அடிக்கடி கண்கள் அந்த புத்தகங்களை ஆசையோடு பார்க்கின்றன.
Anne Sexton ன் இரண்டு புத்தகங்கள். ஒன்று அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு, மற்றது அவர் பலருக்கு எழுதிய கடிதங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட சுயசரிதை. அவரது கவிதைகள் 36 ஆண்டுகளாகப்பரிச்சயம்.
அவை கல்லூரி நாட்கள். பகலிலேயே கல்லூரியை விட்டு கிளம்பி விடுவேன்..அமெரிக்க நூலகம், குளிரூட்டப்பட்டு இதமாக இருக்கும். அங்கே தான் Langston Hughes, Joyce Carol Oates, Sylvia Plath..ஆகியோரை முதலில் படித்தேன்.. ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் woodlands drive-in. மூலையாகப்பார்த்து ஒரு மேஜையில் அமர்ந்துவிட்டால் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். சாப்பிட எதையும் வாங்கவேண்டியதுமில்லை..மாலையில் யாராவது நண்பர்கள் வந்து காபி வாங்கிக்கொடுக்கும் வரை கவிதைகளைப்படித்துக்கொண்டிருக்கலாம். வரும் நண்பர்களிடம் பேசவும் அது உதவும்.. அந்த எழுத்துக்கள் பசியைப்போக்கின..
எவ்வளவு வீம்புடன் எழுதுவதுதான் முக்கியம் என்று முயன்றாலும் Anne Sexton மீதுதான் மனம் தாவுகிறது.
 Anne Sexton  வலிகளை அழகாக்கிய கவிஞர். இன்று பலவருடத்தேடலுக்குப்பின் அவரது புத்தகங்கள் அவரது அழகான எழுத்துகளை மட்டுமல்ல..என் இளமையை அதன் தேடலை, சந்தித்த வலிகளை சிந்தித்த விஷயங்களை..செய்துகொண்ட சபதங்களை, சகித்துகொண்ட பொய்களை, சுமந்துகொண்ட கனவுகளை..ஓர் இனிதான இதமான நினவுமீட்டலின் சுகராகமாக உருவாக்கும்போது...வலிகள் யாவும் வெறும் வார்த்தைகளாகிப்போகின்றன..
எதிரே கவிதை இருக்கும்போது, கட்டுரை எப்படி வரும்? கவித்துவ விதைகள் உள்ளே திமிறியெழக்காத்திருக்கும்போது.. கண்கள் கொஞ்சம் நீரூற்றிக் காத்திருக்கவேண்டும்