இதே போல் ஒரு அக்டோபர், 2007 லாசரா எனும் எழுத்துக்கலைஞர் மறைந்தார். அதே தேதியில் அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன், அவரது பிறந்த நாள்..
கடைசியாக அவருடன் நான் அதிக நேரம் செலவிட்டது 2004ல் தான்.
அவருடன் எனக்குஇருபத்தைந்தாண்டு பழக்கமும் நெருக்கமும். அந்த 25 ஆண்டுகளில் பத்து நாட்கள் என்னுடனே தங்கியிருந்திருக்கிறார். அதைத் தவிர 25 முறை தான் நாங்கள் சந்த்தித்திருப்போம். ஒவ்வொரு சந்திப்பின் இடைவெளியிலும் மௌனம் இருந்தது தொடர்ந்தது, இன்றும் போல. அவருடனான பிணைப்பு அவரது அலாதியான எழுத்துகளின் மீது வந்த மோகத்தினால் தான்.அது மௌனமாயும் மௌனத்திலும் தொடர்ந்து வந்தது.
அவரது எழுத்துகள் ஒரு மௌன ஸ்வரத்தை உள்ளடக்கியவை.
ராகத்தின் பெயர் தெரியாவிட்டாலும் மயக்கக்கூடிய ஆலாபனை போல் அனிச்சையாக உள்நுழைந்து அதிர்வுகளை இசையாக்கிக் கொள்ளக்கூடியவை. வார்த்தைகளின் இடைவெளிகளில் அர்த்தங்கள் மேகங்களின் அசைவாக அமைந்திருப்பவை. கதைக்களம் என்று வெவ்வேறு தளங்களுக்கு அவர் சென்றதில்லை. சில கதைகளே..ஆனால் கல்பனாஸ்வர ஜாலத்தில் ஒவ்வொன்றுமே பலவாகியவை, ஒவ்வொரு வாசிப்பிலும் புதிதானவை.
லாசரா, “1948ல் நான் ஒரு கனவு கண்டேன்,” என்று ஆரம்பித்து, “.. கடைசி தருணத்தில் ‘சடார்’நூ அந்தச் சப்தமானது என்னுடைய தொண்டையிலேர்ந்து பிடுங்கிண்டு வர்ரதை நான் உணர்ந்தேன். உடனே விழிச்சுண்டேன்... இந்தக்குரல் இன்னும் அடுத்த நாள் விழித்துக் கொண்டதிலேர்ந்து என்னுடன் ஒரு புத்துணர்வு என்று கண்டு கொண்டேன்..
புதுவலிமை..எழுத்துக்கு ஒரு சக்தி வருவதை உணர்ந்தேன். அங்கேயிருந்துதான் ‘ஜனனி’, ‘புற்று’, பூர்வா..இடத் தொடர்புகள் எல்லாம் அந்தக் கதியினுடையது..எல்லாம் அந்தச் சங்கிலியிலிருந்து உருவானதுதான்....இப்பக்கூட அந்தக்குரலானது எனக்குக் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கு..ஏதோ ஒரு சமயத்திலே திடீர்னு ஜலஜலண்ணு சொல்லிட்டு ஒரு சங்கிலியினுடைய சப்தம், ஒரு பாத சலங்கையுடைய சப்தம்..ஒரு சாரங்கியுடைய சப்தம்...இது ஒரு சித்து வித்தை இல்லே..என்னுடைய பிரக்ஞையுடைய முதிர்ந்த நிலைன்னு நினைச்சுருக்கேன்...” என்று தன் எழுத்தின் இசைத்தன்மையை ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
இதையே வேறு விதமாய் என்னிடம் இரவு ஒரு மணிக்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்..
கடைசியாக அவருடன் பேசிக்கொண்டிருந்த போது உத்தராயணம் பற்றி நிறைய பேசினார். அம்பாள் பற்றி சிலிர்த்தார். லலிதா ஸஹஸ்ரநாமம் படிக்கிறாயா என்று கண்ணில் மின்னலிடத் தூண்டிவிட்டார்...
சொல்லாமலேயே நிறைய என்னிடம் சொன்னவர் அவர்.
சொல்லாமலேயே நிறைய என்னிடம் சொன்னவர் அவர்.
பேசாத போது தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தவர்கள் நாங்கள். அவரது நினைவு நாள் அக்டோபர் முப்பது அவரது உடலை அக்னி அணைத்துக்கொள்வதைப் பார்த்து நான் விதிர்விதித்து நின்ற நாள்..அவரது பிறந்த நாளும் அது தான்..
அந்த மௌனத்தின் மோனத்தின் நீட்சியாய், மீட்சியாய் அந்தத் தருணங்களின் படங்கள்-