Tuesday, December 3, 2013

சக்தியின் கேடயம்



கேடயம் தற்காப்புக்கு மட்டுமல்ல, தாக்குதலுக்கும்தான்.
ஒவ்வொரு தற்காப்பும் தாக்குதலின் மீது தொடுக்கப்படும் எதிர் தாக்குதல் தான். ஓர் அநாயாசமான சுழற்சியில் கையிருக்கும் கேடயம் எதிரியின் ஆங்காரமான வாளினை வீணாக்கும்.

கேடயம் வேறு கவசம் வேறு. எதிரி எதிர்படும்போதுதான் கேடயம் தேவை, அந்த எதிரி ஒளிந்திருந்து தாக்கினால்தான் கவசம் அவசியம்.பராசக்தியை படம் வரையும்பொழுது அவளது பல கரங்களிலும் பல ஆயுதங்கள்; அதில் ஒரு கையில் கேடயமும் இருப்பதாய் முன்னவர் சிற்பங்களிலும், சித்திரங்களிலும் பார்த்ததாலும் எங்கெங்கோ படித்ததாலும், ஒரு கையில் கேடயம் இருப்பதாகவே நானும் வரைந்தேன். ஆனாலும்சக்திக்கு எதற்கு கேடயம்? சகலத்துக்கும் காப்பாயிருக்கும் நாயகிக்கு எதற்கு தற்காப்புகேடயம் பாதுகாத்துக்கொள்ள அல்ல, அது ஓர் ஆயுதம், தற்காப்பும் ஒருவகை தாக்குதல் என்பதெல்லாம் மானுடர்க்கு அவசியம், ஆனால் சகலுமுமான சக்திக்கு எதற்கு கேடயம்?
எத்திசையும் வியாபித்துள்ள பராசக்திக்குத் தெரியாமல் ஓர் எதிரி தாக்க முடியாது என்பதால் அவளுக்குக் கவசம் கிடையாது. ஆனால் அவள் கையிருக்கும் கேடயம், அவளையும் எதிர்க்க வல்லவன் உண்டு என்பதைக் காட்டவா?

அவளை உருவப்படுத்தும்போது, அவள் போருக்குப் போகிறாள் என்பதால்தான் அவள் கையில் ஆயுதங்களும் தரப்பட்டுள்ளன. அவள் யாரிடம் எதற்காகப் போரிடவேண்டும்? ஓர் விழியசைவில் யாவும் நிகழ்த்தும் அவளுக்கு போர்வாள் ஏன்? கேடயம் ஏன்? போர்க்களமுமாகி, அதில் வெடிக்கும் யுத்தமுமாகி, அதன் முடிவின் குருதியுமாகி, அங்கே வெற்றியுமாகி, தோல்வியுமாகி யாதுமாகி விளங்கும் அவள் மானுட ரூபத்தில் சித்தரிக்கப்படுவதால் தான். இவ்வகையில் மானுட வடிவமைத்து பரசக்தியை ரசிக்கவும், வணங்கவும், வர்ணிக்கவும் சித்தரிக்கவும் மானுடத்துக்கு அவசியம் உள்ளதென்பதால் தான்.

மேலோட்டமாய், என்போல் அவளை ஆக்கிவைப்பது எனக்கு சௌகரியம். ஒத்த பிம்பத்தின் பரிச்சய சுகம் என்றாலும் அதில் இன்னொரு நிஜம் எனக்கு தினம் உள் உரைத்துக்கொண்டேயிருக்கிறது- அது நானும் அவள்தான் என்பது. என் மனோரூபமே சக்தியின் அலங்கார வடிவமாய் என்முன் வழிபடு விக்கிரகமாகிறது.

அவள் நான் என்பது என்னிடம் சித்தி உள்ளது என்றொரு வியாபார நாடகமல்ல. அது இம்மாபெரும் ப்ரபஞ்சத்தின் துகளானாலும் அதன் பிரதிநிதியாய் நான் என்பதன் அடக்கமான துணிவு.
ஆகவே அவளுக்கு கேடயம் அவசியம். எனக்கு கேடயம் அவசியம்.
அவளே நானெனில் எனக்கெதற்கு கேடயம்? நான் அவளின் அனைத்துமல்ல, என் அனைத்தும் அவள் என்பதால்தான்.
உள்ளே மகத்தான மனோரூபமாய் அவள் என் மனத்தின் மைய சக்தியாய் இருப்பதை நான் உணர்ந்தாலும், மானுட இயல்பில் என் ஆணவம், ஆசை, கள்ளத்தனம் யாவும் இவ்வுலகில் வாழ நிர்னயித்துக்கொண்ட என் சுயவிதிகளினால் அவ்வப்போது (அடிக்கடி) அவள்தான் இயக்கம் என்பதை மறந்து இயங்குவதாய் ஓர் இறுமாப்புடன் வாழ்வை நான் போர்க்களமாக்கிக்கொள்கிறேன். போர்க்களத்தின் சுவையூறிய வெறியில் அவளை இன்னும் கொஞ்சம் மறக்கிறேன்.

வாழ்வின் போர்க்களத்தில் எதிரிகளை வாய்கூவி வரவழைத்துக் கொள்கிறேன். அவர்களது வாள் வீச்சை எளிதாய் தடுத்து திசைமாற்ற எனக்கு கேடயம் தேவைப்படுகிறது. அந்த என் கேடயம் என் வாய்மொழி. சுலபமாய் எதிரிகளைத் தடுக்க, திசைதிருப்ப, தோல்வியுறச்செய்ய எனக்கிருக்கும் கேடயம் என் வாய்மொழிதான். அதைப் பயன்படுத்தும் வித்தையை அவள் கற்றுத் தந்திருந்தாலும், நான் எனும் நினைப்பில் என் கேடயம் சில நேரங்களில் சரியாய் தாக்குதல்களை எதிர் கொள்ள முடிவதில்லை.

என் தேவிக்கு ஆயிரக்கணக்கில் அத்தனையும் பார்க்கும் விழியமைப்பு என்பதால் அவளை மறைந்திருந்து யாரும் தாக்கிவிட முடியாது. அவ்வப்போது அவளை மறக்கும் மானுடன் என்பதால் என்னை எத்திசையிருந்தும் எவரும் தாக்கலாம். ஆகவேதான், அவளுக்கு அவசியமில்லாத கவசம், எனக்கு அவசியமாகிறது. என் கவசம் அவள்தான் எனினும் அதை அணிந்திருப்பதை மறந்து என்னுள் அச்சம் வரும்; அதை அணியாத ஆணவத்தில் அடியும் விழும்.
அவளாகிய என் கவசம் என்பது நான் நிர்ணயித்துக் கொண்ட சுயவிதிகள், நான் அமைத்துக்கொண்ட என் தளம், என் களம், என் வாழ்வின் அத்தியாவசியங்கல், என் வட்டம், என் விரிவு, என் பார்வை, என் கல்வி. எப்போது இக்கவசங்கள் இல்லாதிருக்கிறேனோ, எப்போது இவற்றை உதாசீனப்படுத்துகிறேனோ - அப்போதெல்லாம் வலிமை தந்த அவள் வலியும் தருகிறாள். வலிக்கு மருந்தாகவும் வருங்காலத்திற்கு பாடமாகவும் இயங்குகிறாள்.
அவளுக்கு எதற்கு கையில் கேடயம்? எனக்கு வாழ்வின் நுணுக்கத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கத்தான்.